இனி அச்சு வடிவ புத்தகங்களுக்கும் செய்திதாட்களுக்கும் வேலையில்லை என்கிறார்கள். ஜெனிவாவில் ஐக்கிய நாட்டு சபையின் ஒரு பிரிவான உலக அறிவு சார் சொத்துரிமை அமைப்பின் கருத்தின்படி 2040ல் மேற்கண்ட சங்கதிகள் இலக்கமயப்படுத்தப்பட்டு கணினிக்குள் கரைந்து போகும். எச்சரிப்பவர் இவ்வமைப்பின் பிரதிநிதி திருவாளர் கர்ரி (M. Gurry). La Tribune de Geneve’ என்ற சுவிஸ் நாட்டு தினசரி ஒன்றிர்க்கு அளித்துள்ள பேட்டியில் இதனைத் தெரிவித்திருக்கிறார். அவரது கருத்தின்படி இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இன்று நாம் வாசித்துக்கொண்டிருக்கும் தினசரிகள் அவ்வளவும் இல்லாதொழியும்.- இப்போதே நம்மில் பலர் குறிப்பாக வலைத்தள இணைப்புள்ள கணினி உபயோகிப்பாளர்கள் தினசரிகளை இணையதளங்களில்தான் வாசித்துக்கொண்டிருக்கிறோம். அதுபோலவே அச்சசு வடிவிலான புத்தகங்கள் 2040ல் முடிவுக்குவந்துவிடுமாம். அமெரிக்கா முந்திக்கொள்ளும் என்கிறார்கள்.அதாவது 2017லேயே அங்கு அச்சிட்ட புத்தகங்கள் சந்தைக்கு வராது. வளர்ச்சியென ஒன்றிருந்தால் இழப்புகளுக்கும் தயாராகத்தான் இருக்கவேண்டும். ஆனால் அவர் எழுப்பும் வேறொரு பிரச்சினை கவனத்திற்குரியது. பத்திரிகையாளரும் எழுத்தாளர்களும் திருவோடு ஏந்தவேண்டியிருக்குமென அஞ்சுகிறார். பதிப்பிக்க சாத்தியமில்லை என்கிறபோது பதிப்பாளர்களும் பத்திரிகை அதிபர்களும் ஊதியத்தை எங்கிருந்து வழங்குவார்கள் என்று கேட்கிறார்? “குறைந்த பட்சம் அறிவுசார் சொத்துரிமைக்கேனும் உத்தரவாதம் வழங்கப்படவேண்டும் இல்லையேல் ஆபத்து”, என்கிறார் ஆசாமி. மேற்கத்திய நாடுகளிலும் அமெரிக்காவிலும் ஒருவேளை இக்குரலில் தொனிக்கும் குரலுக்குப் பொருளிருக்கலாம், தமிழ் எழுத்தாளர்கள் இதில் கவலைப்பட என்ன இருக்கிறது, சொல்லுங்கள்?
—————————————————————.