Monthly Archives: மார்ச் 2012

இசைவானதொரு இந்தியப் பயணம்: 4

பிப்ரவரி -4.

அதிகாலை நான்கு மணி எங்கள் வாகனம் புதுச்சேரியை நெருங்கிக்கொண்டிருந்தது.  பிரெஞ்சு நண்பர்கள் மூவரும், உலக அளவில் பணியாற்றி வருகிற தொண்டு நிறுவனமொன்றின் சென்னைக் கிளையின் நிர்வாகி ‘ஆரோக்கி’ என்ற பெயரில் நண்பர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜான் ஆரோக்கிய ராஜும், என்னோடு வாகனத்தில் பயணித்தவர்கள். நண்பர் நந்திவர்மனை தொலைபேசியில் பிடித்தாகவேண்டும். அவர் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் விழித்திருப்பேனென உத்தரவாதமளித்தும் எனக்குள் அச்சமிருந்தது.

நண்பர் நந்தி வர்மன் குறித்து இரண்டொரு வார்த்தைகள் சொல்லவேண்டும். உங்களில் பலரையும் போன்று ‘அரசியல்’ செய்யும் எவரும் எனக்கு பூச்சாண்டிகள். அரசியலை தொழிற்படுத்துபவர்களை இருவகையாகப்பிரிக்கலாம் முதலாவது தரப்பினர் முழு நேர அரசியல்வாதிகள், இரண்டாவது தரப்பினர்  தொழில்முறை அரசியல்வாதிகளல்ல அப்படி கூறிகொள்ளவும் மாட்டார்கள் ஆனால் ஓர் தேர்ந்த அரசியல்வாதிக்குரிய அத்தனை இலக்கணங்களுக்கும் பொருந்தக்கூடியவர்கள். நண்பர் நந்திவர்மன் இந்த இலக்கணங்களுக்கு அப்பாற்பட்டவர். இன்றைய தேதியில் எனது அனுபவத்தில் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் செயல்பாட்டினையும் வைத்து ஒரு சிலரைக் கொண்டாடவேண்டுமெனில் திருவாளர்கள் தமிழருவி மணியன், நல்லக்கண்ணும் நமது கவனத்திற்குரியவர்கள். அவ்வரிசையிலே நண்பர் நந்திவர்மனையும்  வைக்கலாம்.

லால்பகதூர் சாஸ்திரி சாலையில் அவர் காத்திருந்தார். ஏனாம் வெங்கிடாசலபதி சாலையில் எண் 22ல் எங்களுக்கு அறைகள் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தன. அறைக்கு 600ரூபாய் வாடகைக் கொடுத்தோம். நண்பர்கள் எதிர்காலத்தில் தவிர்க்கவேண்டிய இடம். பிரெஞ்சுக்காரர்கள் அங்கே அதிகமாக வந்து தங்குவதையும் பார்த்தேன். அவர்கள் தேர்வுக்கு வேறுகாரணங்கள் இருக்கலாம். எனக்கு நிறைவாக இல்லை.

காலையில் ஐந்து மணிக்கு படுக்கச்சென்றபோது பள்ளிவாசல் அழைப்பு. நண்பர் ஆபிதின் கதையிலா அல்லது நகைச்சுவையாக சொல்லப்பட்ட அவரது எழுத்துகளிலா அல்லது வேறு எங்கேயுமா என்று தெரியவில்லை. அக்கதையில் சொல்லப்படிருப்பதைபோன்றுதான் அந்தப் பாங்கு இருந்தது. அதன்பிறகு உறக்கம் வரவில்லை. குளித்துவிட்டு நண்பர்களுடன் காலை உணவிற்காக நேருவீதிக்கருகிலிருந்த ‘ஹாட் பிரெட்’டிற்குச் சென்றோம். ஐரோப்பிய காலை உணவிற்குப் பழக்கப்பட்டவர்களுக்கு உகந்த இடம். அது Brunch ஆக முடிந்தது. மதியம் அறைக்குச்சென்று ஓய்வு. இரண்டு அல்லது இரண்டரைக்கு நாயகர் எங்களை சந்திக்க வந்தார். மாலை நந்திவர்மனுடன் நாளைய நிகழ்ச்சி குறித்து விவாதிக்க இருந்து தவறி விட்டது. அவர் அவசரமாக சென்னைக்குச் செல்ல வேண்டியிருந்ததென்றார். மாலை நாயகர், பிரெஞ்சுநண்பர்கள் என நால்வருமாக கன்பத் ராம் சென்றோம். பிரெஞ்சு நண்பர்களுக்கு அந்தச்சூழல் பிடித்திருந்தது. காபி வடையெனச் சாப்பிட்டுவிட்டு திரு தாவீது அன்னுசாமியைப் பார்க்கச்சென்றோம். முன்னதாக அவருக்கு தொலைபேசியில் எங்கள் வருகையை நினைவூட்டியிருந்தோம்.

நண்பர் சவியே அவரிடம் சில எதிர்பார்ப்புகளை வைத்திருந்தார். சிலர் எதுபற்றியும் எவர் பற்றியும் சட்டென ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். அதே வேகத்தில் அம்முடிவை எளிதாக மாற்றிக்கொள்ளவும் செய்வார்கள். நண்பர் சவியே என்றழைக்கப்படும் தெபெல் அந்த ரகம். அவரை இருபது ஆண்டுகளுக்கு முன் சந்திக்க நேர்ந்தது. அதாவது பிரான்சுக்கு வந்த புதிதில். புதுச்சேரியில் வருவாய்த் துறையில் அரசாங்க ஆவணங்களுடனும், கோப்புகளுடனும் சேவகம் செய்து மாமியார்வீட்டு நிழலில் சுகமாய் வண்டி ஓட்டிக்கொண்டிருந்த காலத்தில் மனைவிமூலம் கிடைத்த பிரெஞ்சு குடியுரிமை எனது தூக்கத்தைக்கெடுத்தது. அது துருபிடித்து இற்றுப்போகாமலிருக்க பிரான்சுக்குப்போயே ஆகவேண்டுமென்ற விண்ணப்பத்தை அவ்வப்போது போட்டுவந்தேன்.  ஜூலை ஆகஸ்டுமாதங்களில் உதட்டிலும் உடையிலும் ஜிகினா மினுப்புடன் புதுச்சேரி வெள்ளித் திரைக்குவரும் சொல்தா குடும்பங்களின் துர் நாற்றம் பிடித்த ·பர்ப்யூம் வாசனையை வளப்பமாக நினைத்து எனக்கும் பிரான்சு கனவுகள் வந்தன. இந்த சொல்தாக்களும் இன்னபிற புதுச்சேரி பிரான்சுவாசிகளில் பலரும் துபாய் வடிவேலுக்கள் என்பதை புரிந்துகொண்டபோது காலம் கடந்திருந்தது. எனது படிப்புக்கு உகந்த மாடுகளைப் மேய்க்க பிரெஞ்சுமண்ணில் ஆகாதென்பதை புரிந்துகொண்டு தொழில் தொடங்க எத்தனித்தபோது நம்ம ஊர்போல பிரெஞ்சு மண்ணிலும் சிலகாரியங்களை தெரிந்தவர்கள் உதவியால் சாதிக்க முடிந்தது, முடிகிறது. நண்பர் சவியே உதவி இன்று வரை தொடங்குகிறது.  வாடகைக்கு இடம்பிடித்து கடை வைப்பதைவிட சொந்தமாக இடத்தைவாங்கி அங்கே கடையைத் திறப்பதென்ற யோசனையையும் கூறி இடத்துக்குச்சொந்தக்காரரிடம் பேரம்பேசி அதை பதிவு செய்யும்வரை வரை உடனிருந்தான். கடந்த நவம்பரில் என்மகளுக்கு சுவிஸ் அருகில் பன்னாட்டு நிறுவனமொன்றில் வேலைகிடைத்தபொழுது அவள் தங்க ஒரு பெட் ரூம் கொண்ட இடத்தை வாடகைக்கு அவசரமாக பிடிக்கவேண்டியிருந்தது. அவனுடைய உதவியில்லையேல் கூடுதலாக ஒருவாரம் அலைந்திருப்போம். எனவே இந்த நன்றிக்கடனுக்காக அல்லது சுய நலத்திற்காக அவனோடு நட்பு பாராட்டவேண்டியிருக்கிறது.

திரு தாவீது அன்னுசாமிக்கு தம்மைப்பற்றிய சில விவரங்களை அளித்து அவரிடம் நட்பினை எதிர்பார்த்திருந்தான். அவ்விவரங்கள் அடங்கிய மடல் என்னிடம் வந்தபோது எனக்கென்னவோ அவை அதிகமாகத் தெரிந்தன. ஒருவரைப்பற்றிய அக்கறைகளை கசப்புகளை புரிந்துகொள்ளாமல் நம்மைப் பற்றிய தகவல்களை நானென்றால் அத்தனை எளிதாக பகிர்ந்துகொள்ளமாட்டேன். திரு தாவீது அன்னுசாமி அவர்களுடனான சந்திப்பு என் வரையில் ஒரு நீதிபதி, கல்விமான் என்ற தகுமைகளுக்கு பொருந்துபவர் எவ்வாறு நடந்துகொள்வாரோ அவ்வாறுதான் அவர் எங்களைவரவேற்றார். அளவளாவினார். செலவிட்ட மணித்துளிகளில் அவரது நுண்மான் நுழைபுலத்தை அறியமுடிந்தது. பிரான்சு நாட்டைப்பற்றிய பூகோள அறிவும், பிரான்சில் வாழும் புதுச்சேரி மனிதர்களைப்பற்றிய கேள்வி ஞானமும் தமிழிலக்கியத்தின் மீதும் குறிப்பாக மொழிபெயர்ப்புகள் விடயத்தில் அவருக்கிருந்த அக்கறையும் வியக்கவைத்தன.

இதற்கிடையில் நந்திவர்மனிடமிருந்து தொலைபேசி. எங்கள் அறை தண்ணீர் குழாயைத் திறந்துவைத்துவிட்டு போய்விட்டோம் என்ற குற்றச்சாட்டுடனான தொலைபேசி அழைப்பு. எனக்கென்னவோ அது நாங்கள் வாடகைக்குத் தங்கியிருந்த இடத்திற்கு உரிமையானவரின் அநாவசிய பதற்றமாகத் தெரிந்தது. நாங்கள் சாவாதானமாக திரும்புவதென தீர்மானித்தாலும், நெஞ்சத்தில் ஓர் ஓரத்தில் அந்த அழைப்பு பதற்றத்தை உட்காரவைத்திருந்தது. அதற்குப் பிறகு திரு தாவிது அன்னுசாமியுடனான உரையாடலில் ஒட்டுதலில்ல. விடை பெற்றுகொண்டு அறைக்குத் திரும்பியபொழுது நான் நினைத்ததுப்பொல அதொரு பொருளற்ற அழைப்பாக இருந்தது. மறுநாள் வீட்டுக்கு உடையவரை சந்தித்தபோது எப்போதோ ஒரு முறை அப்படி நடந்ததாம். வெளியில் தண்ணீர் ஒழுகவே எங்கள் அறையிலிருந்து வந்திருக்குமோவென சந்தேகித்தாராம். ‘நல்ல ஆசாமியென நினைத்துக்கொண்டேன்.’

இரவு சைவ விடுதியொன்றில் சப்பாதி பூரி யென்று சாப்பிட்டுவிட்டு, புதுச்சேரி கடற்கரையில் காலார நடந்தோம். எந்த மாற்றமுமின்றி புதுச்சேரி கடற்கரை இருந்தது. ஆதாவது ஆங்காங்கே தோண்டிவைத்திருந்தார்கள். கடற்கரைக்கு வந்தவர்கள் தின்று தீர்த்த பொட்டலங்கள் பொதிகள் காற்றில் பறந்தன. வழக்கம்போல நொறுக்குத் தீனிகளுக்கான கடைகள். அந்நியர்கள் மீது படையெடுக்கத்தெரிந்த தொண்டைமண்டல பிச்சைக்காரர்கள். மெர்க்குரி லைட்டுகள், விட்டில் பூச்சிகள், வாலை உயர்த்தி விசுக்கென ஓடும் நாய்கள். தொப்பைபோட்ட மனிதர்கள், கணவருடன் தலைவிதியே என்று நடக்கும் பெண்மணி, குழந்தையை முன்னால் நடக்கவிட்டு பூரிக்கும் பெற்றோர் etc.. etc..

தொடரும்…

கதையல்ல வரலாறு 3-2:ஸ்டாலின் மரணத்தின் பின்னே..

எதிர்பார்த்தைதைப்  போலவே சாலைமுழுவதும் பனிமூடியும் பனிஉறைந்தும் வாகனஓட்டத்தை கடுமையாக்கியிருந்தது. வாகன ஓட்டியின் சாமர்த்தியத்தாலேதான் விபத்தின்றி கடைசியில் ஸ்டாலின் இருப்பிடத்தை அடைய முடிந்தது. அங்கே போனபோதுதான் தெரிந்தது, கட்சியின் முக்கிய தலைவர்களின் வாகனங்கள் அனைத்தும் வரிசை கட்டி நின்றன. நிகிடா குருஷ்சேவ்க்கு புரிந்துகொண்டார். ஏதோ முக்கிய ஆலோசனைக்காகவே தலைவர்கள் அனைவரையும் கட்சியின் முதன்மைச் செயலர் அங்கே வரவழைத்திருக்கவேண்டுமென்பது அவரது ஊகம். அது நியாயமானதுங்கூட. தலைவர்கள் வரிசையில் குருஷ்சேவுக்கான அப்போதைய இடம் அநேகமாக ஏழோ எட்டோ, அப்படிப்பார்த்தால் இவருக்கு முன்பாக அழைக்கவேண்டியவர்களை அழைத்த பின்புதான் இவரைத் தேடியிருப்பார்கள். எனினும் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்கிற அடையாளம் இருக்கிறது, எனவே ஸ்டாலின் அழைத்திருக்கிறார். அவர் வா என்றால் வந்து அடிமைபோல நிற்கவேண்டிய தலைவர். அவ்வகையில் ஸ்டாலினிடத்தில் எல்லோருக்கும் ஒரே மரியாதைதான் என்பதும் குருஷ் சேவுக்குத்தெரியும். தனியே வந்திருந்தால் திரும்புவதற்கு வாய்ப்பு இருக்குமா என்ற சஞ்சலமிருக்கும், இப்போது இவருக்கு முன்னால் ஐந்தாறுதலைகள் இருக்கின்றன. நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது. ஓர்லோ·ப் மன்னர் (Orloff) பரம்பரைக்குச் சொந்தமான சிறியதொரு அரன்மணை அது. சுற்றிலும் உயர்ந்த மதிற்சுவர். மின்சாரம்பாய்ச்சிய இரட்டிப்பு முட்கம்பிகளின் பாதுகாப்பில் அச்சுவர்கள் இருந்தன. மிகப்பிரகாசமான ஒளிவெள்ளம் அவ்வப்போது சுவர்களைக் கண்காணித்தன. பல்லி ஊர்ந்தாலும் தெரிந்துவிடும். தப்ப முடியாது. காரிலிருந்து இறங்கியவுடனே யார் யாரெல்லாம் அழைக்கப்ட்டிருந்தார்கள் என்பதை குருஷ்சேவ் விளங்கிக்கொண்டார். பேரியா, மொல்ட்டோவ், வொர்ஷிலோவ், பூல்கானின், மாலென்க்கோவ், ககனோவிச் என்று சகாக்கள் வந்திருந்தனர். எந்திரதுப்பாக்கிகளுடன் கொக்காசிய (Caucasiens) வீரர்களின் சிறப்பு காவற்படை ஆங்காங்கே நடமாடிக்கொண்டிருந்தனர். உள்ளே நுழையும் தலைவர்கள்கூட அவர்கள் தலைவனின் சோதனைக்கு உட்பட்டே கோட்டைக்குள் நுழைய முடியும். ஸ்டாலின் தமது காவலுக்கு அவர்களைத்தவிர வேறு படையினரை நம்புவதில்லை.

” ஸ்டாலின் நண்பர்களைக்கூட சந்தேகப்படுவார். எங்களில் யாராவது ஒருவர் ஆயுதத்துடன் உள்ளே நுழைந்து அவரைக்கொல்லக்கூடும் என்ற சந்தேகம் அவரிடம்இருந்தது, எங்கே அவரால் என்ன ஆபத்தை சந்திக்கப்போகிறோமோ என நாங்கள் அச்சத்தில் வாழ்ந்ததுபோக வாழ்வின் கடைசிநாட்களில் அவரே அவரது வாழ்க்கைமுறைக்கு பலியானதுதான் விந்தையிலும் விந்தை…எங்கள் தோழர் ஸ்டாலின் பயமென்றால் என்னவென்று அறியாதவராகத்தான் இருந்தார், அதை அவருக்குக் கிடைத்த கொடை. எதையும் கூர்மையாகவும் துல்லியமாகவும் கணிக்கும் அவர் திறன் கண்டு மெச்சியுள்ளோம். ஐந்தாண்டு திட்டங்களைக்கொண்டு சோவியத் யூனியனை காப்பாற்றியதும், யுத்தங்களும் மக்களை அவர்மீது அளவுகடந்த நம்பிக்கை வைக்க காரணமாயின. ஆனால் மெல்ல மெல்ல மற்றவர்களை நம்ப மறுத்தார். இறுதியில் ஒருவருமே நம்பக்கூடியவர்களல்ல என்பது அவரது முடிவு. அவரது அரசியல் குருவாகக் கருதப்பட்ட கிரோவ் (Sergueஞ் Mironovitch Kostrikov) கொலையுண்டது ஸ்டாலின் மனநிலையை வெகுவாக பாதித்ததென்று அவர் மகள் ஸ்வெட்லானா எனக்கு எழுதினாள். எனக்கென்ன தெரியும், நானென்ன உளவியல் மருத்துவரா என்ன. ஆனால் மெல்ல மெல்ல தனித்து வாழப் பழகிக்கொண்டதும், அச்சமென்ற சிறையில் தம்மை அடைத்துக்கொண்டதும் உண்மை” என்கிறார் குருஷ்சேவ்.

ஸ்டாலின் இருந்த குடியிருப்பை பார்த்தவர்கள் வியக்கிறார்கள் அலங்காரங்கள் அற்றவை. ஒவ்வொன்றிலும்  ஒரே மாதிரியான மேசை நாற்காலியையும் கட்டிலையும் உபயோகித்திருக்கிறார். பிறகு பெரிய அறை, அந்த அறையில் சீருடைகள் சீருடைகள்.. நிறம், அளவு, பதக்கங்கள் என டஜன் கணக்கிலிருந்த அவற்றைத் தவிர வேறு உடைகளை அவர் வாழ் நாளில் அணிந்ததில்லை போன்றதொரு தோற்றம். ஓர்லோ·ப் அரன்மணையில் ஸ்டாலினுக்காக சில மாற்றங்களும் செய்யப்பட்டன. புதிதாக ஓர் அறை கட்டப்பட்டது. அக்கதவும் சன்னல்களும் மிகுந்த பாதுகாப்புகொண்டவையாக இருந்தன. அங்குதான் ஸ்டாலில் இரவுவேளைகளில் உறங்குவது வழக்கம். குட்டித்தூக்கம் போடுவதென்றாலும் அந்த அறைதான் வேண்டும். அந்த அறைக்குச் செல்ல இருப்பது நான்குமணிநேரமும் காவலில் இருக்கும் கொக்காசிய படைவீரர்களைக் கொண்ட மற்றொரு அறையைக் கடந்து செல்லவேண்டும். அவர் அங்கு தங்கும் நாட்களில் நான்கு முறை ஸ்டாலினிடமிருந்து காவற்படைதலைவனுக்கு அழைப்பு வரும். காலை ஒன்பது மணிக்கு தேநீர் அருந்தும் நேரம். பிற்பகல் ஒருமணிக்கு மதிய உணவு, இரவு ஏழுமணிக்கு இரவு உணவு, இரவு பத்துமணிக்கு மீண்டும் தேநீர்.

வந்திருந்த தலைவர்களை, காவற்படைதலைவன் முதற் தளத்திருந்த அலுவலக அறைக்குச் சென்றான். முதலிற் சொல்ல தயங்கினான். பிறகு கடகடவென்று வார்ந்த்தைகள் வெளிப்பட்டன.

– ஐயா சொல்லவில்லை. தொலைபேசியில் உங்களை அழைபதென்ற முடிவை எடுத்தது நான் தான். தோழர் ஸ்டாலின் அறைக்குள் இருக்கிறார். இரவு ஏழுமணிக்குப்பிறகு எவ்வித அழைப்பும் அவரிடமிருந்து வரவில்லை.

வழக்கம்போல ஏழுமணிக்கு இரவு உணவைக் கொண்டு வரும்படி பணித்தார். ஆனால் பத்து மணிக்கு தேநீருக்கான அழைப்பு வரவில்லை.. இரண்டு மணிநேரம் பொறுமையாக அந்தக் கொக்காசிய வீரர் காத்திருந்திருக்கிறார். எந்த அறிகுறிகளுமில்லை. இதற்கு முன்பு அவருக்கு இதுபோன்ற அனுவங்கள் ஏற்பட்டதில்லை. நள்ளிரவு நெருங்கியது. ஏதாவது செய்தாகவேண்டும் இப்படியே எவ்வளவு நிமிடங்கள் காத்திருப்பது? முதல் அழைப்பு பொதுச்சபை அலுவலகத்திற்குச் சென்றது. ஒருவரும் மறுமுனையிலில்லை. வேறு வழியில்லை என்ற கட்டத்தில் ஏழு தலைவர்களையும் அழைப்பதென்று முடிவு செய்து வரவழைத்திருக்கிறார்.

தலைவர்கள் முகத்தில் குழப்பம். அவர்களுக்கும் இது முதல் அனுபவம் தவறான நடவடிக்கைகள் அவர்கள் தலைக்கே ஆபத்தாக முடியலாம். வரிசைப்படி மொலொத்தெவ்  முடிவினை எடுக்கவேண்டியவராக இருந்தார். கதவை உடைக்கலாமென்றார். துப்பாக்கிக்குண்டுகளும் துளைக்கக்கூடியடல்ல. வாகனங்கள் சக்கரங்களை கழற்ற உதவும் ஆயுதங்களும் பிற்வும் கொண்டுவரப்பட்டன. கொக்காசிய வீர்கள் தங்கள் பலம் முழுவதையும் உபயோகித்தார்கள். பல நிமிடப் போராட்டத்திற்குப் பிறகுஸ்டாலின் அறைக்கதவு நெக்குவிட்டது, திறக்க முடிந்தது. கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே ஒருவர்பபின் ஒருவராக நுழைந்தார்கள்.

அமைதி. பெரும் அமைதி. மீண்டுமொரு கதவை உடைக்கவேண்டியிருந்தது. மெல்ல அதையும் உடைத்துக்கொண்டு நுழைந்தார்கள். முதலில் பார்த்தவர் குருஷ்சேவ். சீருடையை அவிழ்க்காமல் தரையில் கிடந்த ஸ்டாலினை தலைவர்கூட்டம் நெருங்கியது. பேரியாவின் குரல்தான் முதலிற் கேட்டது.

– கொடுங்கோலன் இறந்தான்

அங்கிருந்த மற்றவர்கள் அமைதியாக அபிப்ராயங்களை சொல்லவிரும்பாதவர்கள்போல அமைதிகாக்க பேரியா மகிழ்ச்சியில் திளைப்பது வெளிப்படையாக தெரிந்தது; குருஷ்சேவ் குனிந்து தரையிற் கிடந்த உடலைப் பார்த்தார்.

பிற்காலத்தில் அச்சம்பவத்தை நினைவுகூர்ந்த குருஷ்சேவ் மறக்கமுடியாத அனுபவமென்றார். “எனது முதுகுத்தண்டில் அதன் சிலிர்ப்பை உணர்ந்தேன். பிறகு விலகிக்கொண்டேன். என் பின்னாலிருந்த மற்றவர்கள் அதை புருந்துகொண்டார்கள், பிறகு அவ்விடத்தைவிட்டு துரிதமாக நடந்து நடைகூடத்திற்கு வந்தோம்” என பின்னர் குருஷ் சேவ் எழுதினாராம். அவரது இந்த விவரிப்பில் முரண் இருக்கிறதென்று அவரது அனுபவத்தை வாசிக்க நேர்ந்தவ்ர்களின் கணிப்பு. ஸ்டாலின் உடல்நிலைகுறித்து அக்கறைக்கொள்ளாமல் தலைவர்கள் வெளியேறினர் என்றபொருளில் குருஷ் சேவின் முதல் விவரிப்பு இருக்க, மற்றொன்று மருத்துவரை அழைக்க நேர்ந்த சந்தர்ப்பத்தையும் மூளையில் ஏற்பட்டிருக்கும் இரத்த கசிவினை அறிந்துகொள்ள முடிந்ததையும் கூறுவதாக உள்ளது. இவ்விரண்டையும் தவிர்த்து புகழஞ்சலி போன்றதொரு வேறொரு தகவலும் உள்ளது. அது மூளையில் ஏற்பட்ட பாதிப்பு கை, கால், பேச்சு இவற்றை மட்டுமே பாதித்திருந்ததாக முதலில் அறிவிக்கப்பட்டதற்கும்,  குருஷ் சேவ் பின்னர் அளித்த விளக்கமும் வேறுபட்டிருந்தன: ” நினைவு திரும்பாமல் மூன்றுநாட்கள் இருந்தார், நாங்களும் அருகிலேயே இருந்தோம். ஒரு கட்டத்தில் அவருக்கு பிரக்ஞைவர அறைக்குள் சென்றோம். தாதியொருத்தி, தேநீரை ஒரு சிறுசிறுகரண்டிகளாகக் கொடுத்துக்கொண்டிருந்தார். அவர் எங்கள் கைகளைத் தொட்டு அங்கிருந்த ஆட்டுக்குட்டிக்கு கரண்டிகொண்டு பாலூட்டிக்கொண்டிருந்த சிறுமியின் படத்தைக்காட்டி புன்னகைக்க முயன்றார். அப்படத்தைச் சுட்டிக்காட்டியதன்மூலம் தான் ஆட்டுக்குட்டியைக் காட்டிலும் மோசமான நிலையில் இருப்பதைக் குறிப்பால் உணர்த்துவதாக இருந்தது. அடுத்த சில கணங்களில் அவர் இறந்தார்.. நான் அழுதேன்.  நாங்கள் அனைவரும் அவர் மாணவர்கள், அவருக்கு கடமைப்பட்டவர்கள். அவரும் மகா பீட்டருக்கு வேறுபாடுகளில்லை, அராஜகத்தை அராஜகத்தாலேயே வீழ்த்தினார் வேறென்ன சொல்வது.- ஆனால் மா மனிதர்”(1)

இதுபோன்ற பல முரண்பட்ட தகவல்கள் ஒருபுறமிருக்க, இறுதிக் காட்சியை குருஷ்சேவ் கீழ்க்கண்ட வகையில் விவரிக்கிறார்:

“மருத்துவர்கள் அதிகாலை 2மணி அளவில் ‘தாட்ச்சாவுக்கு’ வந்தார்கள். ஸ்டாலின் அறையைவிட்டு வெளியேறியதும் அவர்களில் மூத்தவர், “இரவும் இத்தனை கடுமையாக இல்லாமலிருந்து, தக்க தருணத்தில் தகவலும் கிடைத்து, நாங்களும் உரிய நேரத்தில் வந்திருப்போமெனில் ஒருவேளை தலைவர் ஸ்டாலினை காப்பாற்றியிருக்கலாம். செய்வதற்கு ஒன்றுமில்லை. அவர் கண்களிரண்டையும் சற்று முன்புதான் மூடினேன் என ஸ்டாலின் மரணத்தை உறுதிபடுத்தியதும், தானும், மொமொட்டோவ், மலென்க்கோவ் மற்றும் அங்கிருந்த பிற தலைவர்களும் தங்கள் மூத்த தலைவருக்காக அழுததாகவும் மாறாக பேரியா அழாததோடு, மூத்த  மருத்துவரிடம்:

– இறப்புக்கு என்ன காரணம்? என்று கேட்டதாகவும்

– மூளையில் இரத்தகசிவு, பக்கவாதம், மாரடைப்பு. என மருத்துவர் அதற்கு பதிலிறுத்ததாகவும் குருஷ் சேவ் குறிப்பிடுகிறார்.

1953ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதி இரவு சோவியத் பூமியில் நிகழ்ந்த பூகம்பத்தைப்பற்றி குருஷ் சேவ் மூலமாக நாம் அறிய வரும் தகவல்.

இதுதான் உண்மை. அன்றைய சோவியத் நாடு அதிகாரபூர்வமாக தெரிவித்தவை. ஆனால் இதுதான் உண்மையா? இந்த உண்மையில் உண்மையின் விழுக்காடுகள் எவ்வளவு என்கிற கேள்விகள் இருக்கின்றன.

(தொடரும்)

 

———————————————-

 

1. பிரான்சுநாட்டைச்சேர்ந்த பத்திரிகையாளரு இடசுசாரி சிந்தனையாளருமான இம்மானுவெல் அஸ்த்தியே என்பவருக்கு (Emmanuel d’Astier, op.citt – Dossier secrets page 364.) அளித்திருந்த பேட்டி.

இசைவானதொரு இந்தியப் பயணம் – 3 (தொடர்ச்சி)

பிரவரி 3ந்தேதி: தட்சண சித்ர காட்சியும் பிற அனுபவமும்.

இன்றைய உலகில் எல்லாம் பணம்- பணம் மட்டுமே அலகுகள். எதையும் அளக்கும் வல்லமை சார்ந்தவை. பண்பாடுகளும் அதற்கு விதிவிலக்கல்ல. தட்சணசித்ர ஓர் எடுத்துக்காட்டு. பண்பாடு இங்கே விலைக்குக்கிடைக்கிறதென்கிறபோதும், நியாயமான வணிகம். கொடுத்தவிலைக்கும், நுகர்வோர் பெறும் பயன்பாட்டிற்கும் அதிக ஏற்ற தாழ்வுகளில்லை. சென்னையின் கிழக்குப்பகுதி உலகத்திலேயே இரண்டாவது பெரிய கடற்கரை எனபெருமக்குரிய தென்கிறார்கள். உண்மையில் முதலாவது பெரிய கடற்கரை என்று ஒன்றிருக்கிறதா என்று  தேடிபார்த்தேன். அவரவர்க்கு பிடித்ததை சிலாகித்திருக்கிறார்களேயன்றி உருப்படியான ஆதாரங்களில்லை. தமிழர்களைத் தவிர்த்து வேறுயாரும் இரண்டாவது பெரிய கடற்கரையென்று சென்னையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்களாவென்று தெரியவில்லை.

கிராமவாசி ஒருவர் புதிதாக நகரத்திற்கு வந்திருக்கிறார். கணிகையொருத்திவீட்டுக்கு நண்பரும் அவருமாக சென்றிருக்கிறார்கள். அவருடைய தலையிருந்தக் கோலத்தைப் பார்த்து ஒழுங்காய் முடிவெட்டிக்கொண்டுவந்தால்தான் உள்ளேவரலாம் என்றார்களாம். மறு நாள் நண்பரும் அவருமாக நகரெங்கும் அலைந்து ஒரு முடி திருத்தும் நிலையத்தைக் கண்டிபிடித்திருக்கிறார்கள். கடையின் பெயர்பலகையில் ‘உலகின் நெம்பர் 1’ முடிதிருத்தும் நிலையம் என்றிருந்ததாம். பரவாயில்லை இதுதான் முடிவெட்டிக்கொள்ள உகந்த இடமென தீர்மானித்தும் விட்டாராம். எதற்கும் இன்னும் கொஞ்சதூரம் நடந்து பார்த்து உறுதி செய்துகொள்வதென நண்பருடன் நடந்திருக்கிறார். சிறிது தூரம் சென்றதும் அங்கே வேறொரு முடிதிருத்தும் நிலையம். கடையின் முகப்பில் ஊரிலேயே நெம்பர் 1 முடிதிருத்தும் நிலையம் என்று எழுதிப்போட்டிருந்ததாம். கிராமவாசிக்கு சந்தேகம் வர கடைகாரரைக்கேட்டிருக்கிறார். உலகிலேயே நெம்பர் ஒன் கடை இந்த ஊரில்தானிருக்கிறது ஆனால் ஊரிலுள்ள கடைகளில் எங்கள் கடைதான் நெம்பர் 1எனில் நீங்களே புரிந்துகொள்ளுங்கள் என்றாராம். தெருவில் நின்று,  இந்த இரண்டுக் கடைகளில் எந்தக்கடையில் முடிவெட்டிக்கொள்ளலாமென குழம்பிக்கொண்டிருந்த கிராமவாசியிடம் அவரது நண்பர் எதிலிருந்த முடிவெட்டும் கடையைக் காண்பித்திருக்கிறார். அக்கடையில் இந்தத் ‘தெருவிலேயே நெம்பர் 1’ முடிதிருத்தும் நிலையமென பெயர் வைத்திருக்க, அந்தக் கடைதான் பெரியகடையென்று கிராமவாசியும் அவர் நண்பரும் நுழைந்திருக்கிறார்கள். உள்ளே நுழைந்தால், கிராமத்தில் ஒழுங்காக தொழில் செய்யப் போதாதென்று தகப்பனால் விரட்டிவிடப்பட்ட அவர்கள் கிராமத்து நாவிதன் மகன் திறந்திருக்கும் புது கடையாம் அது.  சென்னை கடற்கரையை ஒப்பிட இரண்டொரு இந்திய கடற்கரை நகரங்களையேனும் சென்று பார்த்தால் உண்மை தெரியவரும்.

சென்னையின் கிழக்கு கடற்கரை மெரீனா, சாந்தோம்; மெரீனா கசந்த காதலர்களுக்கு குறிப்பாக கனமான பர்சும், ஜாவா -லாம்ரெட்டா வாகன வசதிகளையும் கொண்ட எழுபதுகளின் காதல் ஜோடிகளுக்கு மகாபலிபுரமும் துணைபுரிந்தது அந்தக்காலம். காலத்திற்கேற்ப கிழக்குக் கடற்கரை நீளத்தில் வளர்ந்தது. வி.ஜி.பி கோல்டன்பீச், எம்.ஜி.எம் தீம் பார்கென முளை விட்டன. கொஞ்சம் ரசனை கூடியவர்களுக்கு சோழமண்டல ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்கள் கிராமமும், தென்னிந்திய பாரம்பரியத்தைக் பார்வைக்கு வடித்திருக்கும் தட்சன சித்ரவும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்தியர் ஒருவரை மணந்த அமெரிக்கப் பெண்ணின் யோசனையில் ‘தட்சன சித்ர’ உதித்ததென்று நண்பர் இந்திரன் கூறினார்.

நாங்கள் அகவெளியிலிருந்து புறப்பட்ட பத்து அல்லது பதினைந்து நிமிடங்களில் தட்சிண சித்ரவை அடைந்திருந்தோம். நுழைவு வாயிலில் தனியார் பள்ளிகளுக்குச் சொந்தமான வாகனங்கள் வரிசையில் நின்றிருந்தன. பிறகு தமிழன்பர்களின் உபயோகத்திலுள்ள மகிழ்வூர்திகள் – இறந்தவர்களையும், விபத்தில் சிக்கியவர்களையும் ஏற்றிசெல்கிறபோது கூட இவை மகிழ்வூர்திதானா? என்பதை யாரேனும் விளக்கினால் தேவலாம். தட்சிண சித்ர பார்வையாளர்கள் பெரும்பாலும் நடுத்தரவர்க்கத்தின், மேல் தட்டு வகுப்பினரென்பதை பார்க்கும்போதே புரிந்தது. அது தவிர கண்களுக்குக் கவசமிட்டு அழைத்து வரப்பட்டிருந்த வெளிநாட்டினர், இரண்டொரு காதல் ஜோடிகள், வீட்டிற்கு வந்த விருந்தாளிகளை தங்கள் சொந்த வாகனத்தில் தலை விதியேயென அழைத்துவந்தவர்களையும் கான நேர்ந்தது.

இதமான வெயில், குளிர் தரும் நிழல், சோம்பல் முறிக்கும் பணியாளர்கள். சார் இங்கே பெருசா வரும்படியில்லை ஐந்தோ பத்தோ கையிலிருப்பதை கொடுங்கள் என மறவாமல் கேட்கிற செய்முறை விளக்கக் கலைஞர்கள், அவர்களின் சோர்ந்த வேர்வை உறைந்த முகங்கள் போன்ற கொசுறு காட்சிகளும் தட்சிண சித்ரவில் உண்டு. இலத்தீன் அமெரிக்கப் பாணியில் கட்டப்படிருந்த நுழைவாயிலிலேயே முதல் அதிர்ச்சியைச் சந்திக்க நேர்ந்தது. இந்தியர்களுக்கு ஒரு கட்டணம் வெளிநாட்டினருக்கு ஒரு கட்டணமென நுழைவுச் சீட்டு சேவை வழங்கியவர்களிடமிருந்து எந்திரக் குரல். கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை இந்த அறத்தை இந்தியர்கள் கடைப்டிக்கிறார்களென்பது சில அனுபவங்களூடாக விளங்கிக்கொண்டிருக்கிறேன். வெளிநாடுகளில் எந்த நாட்டிலும் இந்தியர்களுக்குக் கூடுதலாகக் கட்டணம் வாங்குவதாகத் தெரியவில்லை. என்ன இருந்தாலும் நீங்கள் எங்கள் எஜமானர்களாக இருந்தவர்களில்லையா அதனால்தான் இந்த உயர்ந்த கட்டணமென்று கூறி என்னைக்காட்டிலும் பதினைந்து மடங்கு பணம்கொடுத்து நுழைவுச் சீட்டுவாங்கிய பிரெஞ்சு நண்பரின் சினம் காத்தேன்.

நுழைவுச்சீட்டினைப் பரிசோதிக்க ஆட்களில்லை. பிரபுதேவாவோட நயன தாராவுக்குச் சண்டையாமே என்று கேட்டபடி திரும்பிய பெண் ஊழியையிடம் எங்களுக்குச் செய்தி எட்டவில்லை, என்றேன். நுழைவாயிலை அடுத்து வலப்புறம் ஒரு செமினார் ஹால். அடுத்துத் திரைப்பட அரங்கம். எட்டிபார்த்தோம் தென்னிந்திய மொழியில் எடியூரப்பா குரலில் (?) இரண்டு பொம்மைகளைக் காட்டி ஓரு கலைஞர் என்னவோ¡ கூறிக்கொண்டிருந்தார். வெளியில் வந்து குச்சி ஐஸ¤டன் எதிர்பட்டப் பையன்களை அரைபார்வையுடன் கடந்தோம். இரு புறமும் கடைவிரித்திருக்க கால்வாய்போல ஓடிய நடைபாதையில் மீண்டும் சீருடையில் பள்ளி மாணவ மாணவிகள். கடைகளில் வடகிழக்கிந்திய கலைஞர்கள், அவர்கள் கைவண்ணத்தில் உருவான, விசிறிகள், கைக்குட்டைகள், தலையணை விரிப்புகள், ஓலை நறுக்குகளில் கஜுராஹொ பாணியிலான சித்திரக் கீறல்கள். மார்பிள் யானைகள், சிறு சிறு பெட்டிகள். எதையும் வாங்கவில்லை. இவற்றையெல்லாம் விளக்கமாகவே எழுதமுடியும், பிரான்சிலிருக்கும் எனது கடையிலும் இவற்றை விற்கிறேன் அவற்றின் நதிமூலம் ரிஷிமூலமெல்லாம் தெரியும். திருவண்ணாமலை, போளூர் பக்கமிருந்து வந்திறங்கியிருந்த நறிக்குறவர்களின் பாசிமணிகளையும் பார்க்க முடிந்தது.

அவற்றைப் பொறுமையுடன் கடந்து பள்ளி மாணவியரின் சலப்புகளையும், கூச்சல்களையும் அவர்களை இடைக்கிடை ஆங்கிலத்திலும் தமிழிலும் அடக்கிவிட்டு சோர்ந்து பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருந்த டீச்சர்களையும் சகித்துக்கொண்டால்:

கேரளப்பிரிவில் மாட்டுக்கொட்டகை, இந்துக்களின் வீடு,  சிரியன் கிறிஸ்டியன்களின் வீடென சாட்சிக்கு ஒன்றென பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். அவசியம் பார்க்கவேண்டியவை. கேரளவீடுகள் முழுக்க முழுக்க மரத்தாலானவை. தேக்கு மற்றும் கருங்காலி மரத்தில் கதவுகள், ஜன்னல்கள் உத்தரங்கள் என்று வழக்கமான உபயோகங்களிருக்கட்டும் வீட்டின் சுவர், தடுப்பு, தரை அறைகள், திண்ணைகள், கதவுகளின் இயக்கத்தை வழிநடத்திய முளைகள்,  தாழ்ப்பாள்கள்  ஆகிய அனைத்தும் மரம் மரம் மரம்… பழைய வீட்டை விலைக்கு வாங்கி அப்படியே பிரித்து எடுத்துவந்து தத்ரூபமாக உருவாக்கியிருந்தார்கள். எல்லாமே வசதிபடைத்த மேல்தட்டு கிராம மக்களின் குடியிருப்புகள். அவர்கள் வீட்டு பண்ணை ஆட்களின் குடிசைகளை காட்சிபடுத்தவில்லை. ஒரு கிராமத்தில் ஒருவரோ அல்லது இரண்டுபேரோ வாழ்ந்த வாழ்க்கை இந்தியப் பாரம்பரியத்தைப் பேசுகின்றன. சிறிய தாழ்வான வாயில், உள்ளே வெக்கையைத் தணிக்கும் ஒளிமங்கிய அறை இருள் பார்வையாளர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொள்கின்றன. தேக்குமரக்கட்டிலைப் பார்க்கிறபோது சுந்தரன் ஞானும் சுந்தரி நீயும் பாடல் தொண்டைக்குள் அடங்கிப்போனது. மழைநீரை தேக்கி குடிநீராய் உபயோகிக்கும் ஞானம், வீட்டு சுவற்றோடு இணைத்த கிணறு. அழகோ அழகு. இன்றைக்கும் இப்படியான வீடுகள் கேரளாவில் இருக்கின்றனவா?

தமிழ் நாட்டுப்பிரிவில் பெரிய தூண்களும், கிளிகள், பூக்களென செதுக்குவேலைகொண்ட நிலைவாயில்களும் நடை, வாசல், தாழ்வாரம், முன்கட்டு பின்கட்டென வாழ்ந்த மரபான செட்டிநாடு வீடொன்றும்,  தஞ்சாவூர் வளப்பமான விவசாயி ஒருவரின் வீடும், செங்கல்பட்டுப் பகுதியைசேர்ந்த வீடொன்றும் இருந்தன. இளைஞரான செங்கல்பட்டு குயவரொருவர் உழக்குகள் செய்கிறார்.  பத்து ரூபாய் கொடுத்தால் நம்மையும் ஒன்றிரண்டு உழக்குகளை உடைக்க அனுமதிக்கிறார். நான் உருப்படியாக ஒன்றை செய்தேன். பிரெஞ்சு நண்பர் உடைத்தார். அய்யனார் கோவிலில் இரண்டொரு நிழற்படங்களை எடுத்துக்கொண்டோம். ஆந்திராவையும் கர்நாடகாவையும் அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாமென தீர்மானித்து புறப்பட்டுவிட்டோம். பசி வந்திட இரண்டும் பறந்துபோயின.

அடுத்த ஒரு மணி நேரம் ஓட்டலில் கழிந்தது. கிரிக்கெட் பார்த்த நேரம்போக வாடிக்கையாளர் ஞாபகம்வந்தால் அங்கே பரிமாறுகிறார்கள். வரும் வழியில் எங்கள் வாகனம் வேக அளவை மதிக்கவில்லையாம். தமிழ் நாட்டு காவல்துறையினரும் மிகப் பொறுப்பாக அபராதம் விதித்தார்கள். உருப்படியான பணி. போட்கிளப்பில் சந்தியா நடராஜன் இரவு டின்னர் கொடுத்தார். இந்திரன், பிரெஞ்சு நண்பர், கி.அ. சச்சிதானந்தம் பிறகு நடராஜன் எல்லோருமாக பசியாறினோம்.  இரவு பத்துமணி ஆகிவிட்டது. இந்திரன் வீட்டிற்குத் நாங்கள் திரும்பவந்தபோது அன்றையதினம் பிரான்சிலிருந்து வரவிருந்த நண்பர்களை வரவேற்பதற்கு ஏற்பாடு செய்திருந்த கார் வந்திருந்தது. அங்கிருந்து மீனம்பாக்கம் ஏற்போர்ட்டிற்குச்சென்று அதிகாலை ஒருமணிக்கு விமானத்தில் வந்திறங்கிய நண்பர் மனேவையும் அவருடைய துணவியாரையும் அழைத்துக்கொண்டு புதுச்சேரிக்குப் புறப்பட்டபோது அதிகாலை இரண்டரைமணி.
————————————

கதையல்ல வரலாறு 3-1:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…

1953ம் வருடம் பிப்ரவரி மாதம். மாஸ்க்கோ நகரில் இதற்கு முன்பு அப்படி பனிபொழிந்ததில்லையென்று பேச்சு. உண்மைதான் அந்த மாந்த்தில் தொடக்கத்திலிருந்தே பனி பொழிய ஆரம்பித்து சாலைகளில் குவிந்திருந்தது. சாலைகள், குடியிருப்புகள் மரங்களென அவ்வளவும் பனியால் மூடியிருந்தன. போதாதற்கு பூர்கா (Pourga) என மாஸ்கோவாசிகளால் அச்சத்துடன் உச்சரிக்கப்படுகிற உறைந்தபனியையொத்த சைபீரிய கடுங்குளிர் காற்றால் நீர்நிலைகள்கூட உறைந்திருந்தன. சாலைகளை மூடிய பனியும் உறைந்து பனிப்பாளங்களாக உருமாறியதின் விளைவாக போக்குவரத்து முற்றாக பாதித்திருந்தது.

மார்ச் மாதம்(1953) நான்காம்தேதி வழக்கம்போல காலையில் எழுந்த மாஸ்க்கோவாசி ஒருவர் வானொலியைத் திருப்ப, முதன்முறையாக அச்செய்தியைக் காதில்வாங்க நேரிடுகிறது. அவரை மட்டுமல்ல பொதுவுடமை கனவில் திளைத்திருந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய மாஸ்க்கோவானொலி அறிவிப்பாளர் தெரிவித்த செய்தி: “ஸ்டாலின் உடல்நிலை கவலைதரும்வகையில் உள்ளது”

காலை 6மணி 21: நாட்டின் பிரதம தளபதிக்கு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறதென்று மீண்டும் மாஸ்கோ வானொலி உறுதி செய்தது.

காலை 6மணி 25: “ஸ்டாலின் இதயத் துடிப்பில் சீரடையவில்லை. சுவாசிக்க மிகவும் சங்கடப்படுகிறார்”, என்ற செய்தியை சோவியத் நாட்டின் செய்தி ஸ்தாபனம் ‘தாஸ்’ (Tass) தெரிவிக்கிறது.

காலை 6மணி 36: தளபதியின் உடல் நிலையில் முன்னேற்றமில்லை என்று செய்தி.

காலை 6மணி38: தளபதியின் நாடித்துடிப்பு நிமிடத்திற்கு 120 ஆகவும், இதயத்துடிப்பு நிமிடத்திற்கு  38 ஆகவும் இருப்பதாக அறிவிக்கிறார்கள்.

காலை 6மணி 55: ‘நமது இயக்கத்திற்கும் மக்களுக்கும் பெருஞ்சோதனை ஏற்பட்டுள்ளது, தோழர் ஸ்டாலின் நிலமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது’ என்ற செய்தியை சோவியத் அரசாங்கத்தின் அமைச்சகமும் கட்சியின் செயற்குழுவும் சேர்ந்தே வெளியிட்டிருந்தன. தொடர்ந்து விரிவான விளக்கங்களுடன் மருத்துவ அறிக்கைகள்.

மார்ச் மாதம் இரவு 2ந்தேதி சம்பந்தப்பட்ட முதல் அறிக்கை தோழர் ஸ்டாலின் அன்றிரவு அவரது சொந்த குடியிருப்பில் இருந்ததாகவும் திடீரென மூளை இரத்த நாளங்கள் சிதைந்து இரத்த கசிவு ஏற்பட சுயநினைவை இழந்ததாகவும் வலது காலும், வலது கையும் செயலிழந்ததோடு பேசும் சக்தியையும் அவர் இழக்க நேர்ந்ததாகவும் அறிக்கை தெரிவித்தது. விபத்தைத் தொடர்ந்து வழக்கமான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்த விபரமும் அதில் கண்டிருந்தது. அதாவது உயர்மட்ட மருத்துவர் குழுவின் தீவிர கண்காணிப்பின் கீழ் ஸ்டாலினை வைத்திருந்திருக்கிறார்கள்.

1953ம் ஆண்டு மார்ச் மாதம் 6ந்தேதி அதிகாலை செய்தியில், கிரெம்ளின் குடியிருப்பில் முந்தைய இரவு 9 மணி50நிமிடத்திற்கு ஸ்டாலின் இறந்தாரென அறிவித்தார்கள். “தோழர் லெனின் கனவுகளில் ஈர்க்கப்பட்டு அவற்றை நனவாக்க தொடர்ந்து உழைத்த பொதுவுடமைக்கட்சியின் தலைவர் தோழர் ஸ்டாலின் இதயம் நின்றுபோனது” என அந்த அறிக்கை தெரிவித்தது.

“தோழல் ஸ்டாலின் இறப்பு சோவியத் நாட்டின் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல உலகமனைத்திற்கும் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. அவரது மரணச்செய்தி சோவியத் தொழிலாளர்கள்; தரைப்படை, கடற்படை வீரர்களுக்கு மட்டுமின்றி உலகமெங்கும் இலட்சகணக்கான தோழர்களின் இதயதிலும் தாங்கொணாத வலிதரகூடியது”, என்றும் அறிக்கை இருந்தது.

இச்செய்தியை உலகமெங்கும் கேள்விகளேதுமின்றி ஊடகங்கள் ஏற்றுக்கொண்டன. இரும்புத்திரை நாடு என்ற பெயர்பெற்றிருந்த சோவியத் யூனியனிடமிருந்து இதுபோன்ற செய்தி கசிந்ததே அப்போதைக்குப் பெரிய விடயம். ஆனால் ஆண்டுகள் ஆக ஆக உண்மைகள் வேறாக இருந்தன.

1952ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மாலை 7மணி. கிரெம்ளினில் பொதுவுடமைகட்சி தொழிலாளர்அமைப்பின் 19வது மாநாடு கூட்டப்பட்டிருந்தது. மாநாட்டு மண்டபத்திற்குள் ஸ்டாலின் நுழைந்தபோது பங்குபெற்ற 1500 உறுப்பினர்களும் எழுந்து நின்று வானளாவப் புகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த மாநாட்டின் முடிவில் எதிர்பார்ப்புகள் நிறைய இருந்தன. மாநாட்டில் பலரும் மாலென்கோவ் மற்றும் குருஷ்சேவ் இருவருக்கும் உரிய மரியாதை வழங்கப்படுமென பலரும் நினைத்தார்கள். வந்திருந்த பலருக்கும் மாநாடு தொடங்கிய சிற்சில நிமிடங்களிலேயே,  மாநாட்டிற்கு ஒரே ஒரு மனிதர்தான் பிரதான கதாநாயகராக இருக்கமுடியுமென்றும் அந்த ஒரு மனிதரும் ஸ்டாலினைத் தவிர வேறு எவருமில்லையென்பதும் தெளிவாயிற்று. அதை மனதிற்கொண்டே மாநாட்டு செயல்பாடுகள் வரையரைச் செய்யப்பட்டிருந்தன, அதை ஸ்டாலினே முன்னின்று செய்துமிருந்தார். மூலதன நூலின் அடியொற்றி ஸ்டாலின் ஒரு புதிய பொருளாதார கொள்கையை உருவாக்கியிருந்தார். இம்மாநாடு அவரது புதிய பொருளாதாரகொள்கையின் அடிப்படையில் எடுக்கவிருந்த நடவடிக்கைகளுக்கு முன் மாதிரி எனலாம். குருஷ்சேவும் மலென்கோவும் கவனிப்பாரற்றவர்களாக நடத்தப்பட்டார்கள். குருஷ்சேவ் பொதுவுடமைக் கட்சியின் செயல்பாடுகள்பற்றிய ஆண்டறிக்கையை வாசிக்க அனுமதித்து மனதை சமாதானம் செய்துகொள்ளவேண்டியிருந்தது. மாநாடு கட்சியின் நிர்வாக அமைப்பில் பல மாற்றங்களை கொண்டுவந்தது. பொலிட்பீரோவு(Politburo of the Central Committee of the Communist Party of the Soviet Union)க்குப் பதில் மத்திய குழுவின் புரவலரமைப்பு (The Presidium of the Central Committee of the Communist Party) என்றவொன்று உருவானது. இப்புதிய அமைப்பில் பொலிட் பீரோவிலிருந்த 12 நிரந்தர உறுப்பினர்களுக்குப் பதிலாக 25 நிரந்தர உறுப்பினர் 11தற்கால உறுப்பினர் பதவிகள் உருவாயின. முன்பிருந்த பொலிட்பிரோ உறுப்பினர்களுக்கிருந்த அதிகாரத்தை குறைப்பதற்கென ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பு ஒரு பல் பிடுங்கப்பட்ட பாம்பு. கட்சியிலோ அரசு செயல்பாட்டிலோ உருப்படியாக பங்காற்ற உறுப்பினர்களுக்கு எவ்வித உரிமையுமில்லை. கட்சியின் தலைமைச் செயலகம் ஒருவகையில் பழைய பொலிட்பீரோவினை ஒத்திருந்தது. அதுகூட முக்கியத்துவமிழந்து ஒரு துணை அமைப்பு என்கிற தகுதியைப் பெற்றிருந்தது. பத்துபேர்கொண்ட கட்சியின் தலமைச்செயலக உறுப்பினர்களில் மாலென்கோவ், குருஷ்சேவ் ஆகியோரும் அடக்கம். எனினும் எல்லோருமே உண்மையில் அதிகாரத்தில் சமநிலையிலிருந்தனர், அதாவது முதல் செயலரைத் தவிர்த்து. முதல் செயலர் ஸ்டாலின். மீண்டும் சர்வாதிகாரி ஸ்டாலினின் அதிகாரவரம்பினை உயர்த்தும் வகையிலேயே இம்மாற்றங்கள் நிகழ்ந்தன.

1952ம் ஆண்டு அக்டோபர் 14ந்தேதி சோவியத் யூனியனின் பொது உடமைக்கட்சியின் மாநாட்டில் மேடையேறிய ஸ்டாலின் ஸ்டாலினாகவே இருந்தார். கம்பீரமான உடல் எப்போதும்போல ராணுவ சீருடையில் அதிகம்பொருந்தாமல் முகத்தில் எவ்வித பாவமுமின்றி விறைத்துக்கொண்டு நின்றது. ஜியார்ஜியா பகுதியைச்சேர்ந்த விவசாயிக்கேயுரிய பிரத்தியேகத்தோற்றம், கைகொள்ளும் அளவிற்கு தடித்த மீசை. அவர் மேடையேறுகிறபோது 74வயதென்று கணிப்பது மிகவும் கடினம் என்பதுபோலவே உடல் ஆரோக்கியத்துடனிருந்தது. மாநாட்டில் பங்குபெற்ற ‘மக்கள்வழிகாட்டிகள்’ என்று நம்பப்பட்ட இத்தாலி, ஜெர்மன், சீனா, கொரியா, அங்கேரியென வந்திருந்த தோழர்களுக்கு முகமன் கூறினார். அளித்த உரையிலும் தடுமாற்றங்களில்லை.

மாநாடு வெற்றிகரமாக நடந்தேறி ஒரு சில வாரங்கள் கடந்திருந்தன. அந்நிலையில் மூன்று முக்கிய சம்பவங்கள் அரங்கேறின. இச்சம்பவங்களின் காரணகாரியங்கள் வியப்புக்குறியவை, வரலாற்றாசிரியர்களுக்கு விளங்காதவை. அவற்றின் பின்னே இருந்த புதிர்களும் அவைகளுக்கான விடைகளும் எதிர்கால சம்பவங்களுக்கு கட்டியம் கூறும் வகையில் அமைந்திருந்தன.

முதலாவது சம்பவம்: கட்சியின் ஆண்டுவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் தலைவர்களின் உருவப்படங்கள் மாஸ்கோ நகரை அலங்கரிப்பதுண்டு. அவற்றின் வரிசையில் தலைவர்களுக்குக் கொடுக்கும் இடத்தை வைத்து தலைவர்களின் இருப்பை சோவியத் பொதுவுடமைக் கட்சியில் தீர்மானித்துவிடலாம். பொதுவாக ஸ்டாலின், மொல்டோவ் (Moltov), மலென்க்கோவ்(Malenkov) எனத் தொடரும் அவ்வரிசையில் பேரியா (Beria) என பெயர்கொண்ட காவல்துறை தலைவருக்கு எப்போதுமே நான்காவது இடமுண்டு. மாறாக 1952ம் ஆண்டு குளிர்காலத்தில் அலங்கரித்த உருவப்படங்கள் வரிசையில் 6வது இடத்தில் பேரியா இருந்தார். மாஸ்கோவாசிகள் புருவத்தை உயர்த்தினார்கள். ஏன்? எதற்காக? என்ற கேள்விகள் பிறந்தன.

இரண்டாவது சம்பவம்: இதிலும் சுவாரஸ்யத்தின் விழுக்காடு கிஞ்சித்தும் குறையாமலிருந்தது. சோவியத் யூனியன்கீழிருந்த அன்றைய உக்ரைன் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்றுபேருக்கு மரன தண்டனையும், அக்கூட்டத்தைச் சேர்ந்த வேறு நபர்களுக்கு வருடக்கணக்கில் சிறைதண்டைனையும் அளித்தனர். அவர்கள்  புரட்சிக்கு எதிராக செயல்படுகிறவர்கள் எனத் தீர்மானிக்கப்பட்டு தண்டனையை வழங்கியிருந்தனர்.   தண்டனையை வழங்கியது, இது போன்ற குற்றங்களை கையாளக்கூடிய ராணுவ நீதிமன்றம். அவர்கள் மேலிருந்த குற்றமென்று பின்னர் தெரியவந்தது, உணவுப்பங்கீட்டுத் துறை பொருட்களை கள்ளச்சந்தையில் விற்றார்கள் என்பதாகும். செய்திருக்கும் குற்றத்தின் அடிப்படையில் பார்க்கிறபோது ராணுவ நீதிமன்றங்களில் தண்டிக்கபடவேண்டியவர்களே அல்ல. இதனை விசாரணை செய்தவர் ஆரம்பத்தில் காவல்துறை தலைவராக இருந்த பேரியா. ஆனால் அவரிடமிருந்த வழக்கினை ராணுவத்தின் கீழ் கொண்டுவந்திருந்தனர். இக்குற்றவாளிகள் அனைவரும் அனஸ்த்தாஸ் மிக்கோயான் என்ற பொலிட்பீரோ உறுப்பினர் கீழிருந்த அமைப்பைச் சேர்ந்தவர்களென்றும், உயர்மட்டத்திலிருந்த ஒரு சிலரின் ஆதரவு அவர்களுக்கு இருந்ததென்ற வதந்தியும் உலாவிற்று.. பின்னர் உணவுப்பங்கீட்டுதுறை அமைப்புகள் குருஷ்சேவ் வசம் ஒப்படைக்கபட்டன. இச்சம்பவத்தில் தண்டிக்கப்பட்டவர்கள் அனைவரும் யூதர்கள்.

மூன்றாவது சம்பவம்: இரண்டாவது சம்பவத்தை ஒத்ததென்றே இச்சம்பவத்தை வர்ணிக்கவேண்டும். 1953ம் ஆண்டு ஜனவரி 13ந்தேதி ஒன்பது பேர்கள் அடங்கிய மருத்துவ குழுவினரை கைது செய்தனர்; அவர்களில் 6பேர் யூதர்கள். அவர்கள் இழைத்த குற்றம் “மருத்துவர்களின் சதி” -Doctors’ plot என பெயர்பெற்றது. . இவர்களில் முதல் குற்றவாளி ஒரு பெண் மருத்துவர் – திமாஷ¤க் (Timashuk) என்று பெயர். குளிர்காலத்தின் ஆரம்பத்தில் ஸ்டாலின் நெஞ்சுவலி கண்டார். வெகுநாட்களாகவே இதயத்  தமணிகளில் அடைப்பிருந்ததாகச் சொல்கிறார்கள். உடனடியாக மாஸ்கோவின் முன்னனி மருத்துவர்கள் அழைக்க பட்டார்கள் அவர்களில் இதய மருத்துவத்தில் வல்லுனரான வினோக்ராதோவ் (Vinogradov) என்பவரும் ஒருவர். சோவியத் யூனியன் மருத்துவ அகாதமியின் முக்கிய உறுப்பினர் என்பதோடு, மருத்துவ சேவையில் சோவியத் யூனியனின் மிகப்பெரிய லெனின் விருதையும் வென்றவர். ஸ்டாலினை பரிசோதித்த மருத்துவர்கள், ” அவருக்குத் தேவை ஓய்வே தவிர சிகிச்சை அல்ல, அதுபோன்ற கட்டத்தையெல்லாம் அவர் தாண்டிவிட்டார்” என்றார்கள்.  மருத்துவர்களின் முடிவைக் காதில் வாங்கிய ஸ்டாலின் மெதுவான குரலில்,  உலக மருத்துவத்தோடு ஒப்பிடுகிறபொழுது ரஷ்யர்கள் மருத்துவதுறையில் முன்னேறி இருக்கிறார்களா இல்லையா? என கேட்கவும், இதிலென்ன சந்தேகம், நமது நாடு மருத்துவத்தில் முன்னேறியது என்பதை மறுக்கவா முடியும் என்றார்கள் மருத்துவர்கள். அப்படியெனில் என்னை குணப்படுத்த வழியென்னவென்று பாருங்கள். சோவியத் யூனியனுக்கும் இந்த நாட்டுமக்களுக்கும் நான் தேவைப்படுகிறேன், என்பது ஸ்டாலின் தரும் பதில். மருத்துவர்கள் தங்கள் முடிவில் மாற்றமில்லை என்பதுபோல, “உங்களுக்குத் தேவை ஓய்வே தவிர சிகிச்சை அல்ல”, என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்திவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்றார்கள். அவர்கள் சென்றதும் அருகிலிருந்த ‘பேரியா’விடம் ஸ்டாலின், ” பார்த்தாயா பேரியா,  அதிகாரத்திலிருந்து என்னை அகற்ற முடிவு செய்திருக்கிறார்களென நினைக்கிறேன்”, என்றார்.

இங்கே பேரியா பற்றி தெரிந்துகொள்ளாமல் தொடர்வதில் பயனில்லை. சோவியத் யூனியனின் மிக மர்மமான மனிதர்களுள் ஒருவரென அறியப்பட்ட பேரியா ஸ்டாலினைபோலவே ஜியார்ஜியா பிரதேசத்தைச் சேர்ந்தவர். இந்தப் பின்புலம் அவர் மளமளவென்று உயர்பதவிகளை எட்ட உதவியது என்பதும் உண்மை.  ஸ்டாலினைப்போலவே மனித உயிர்களை துச்சமாக மதிக்கக்கூடியவர். உள்துறை அமைச்சராகவும், இரகசிய காவற்படையின் தலைவராகவும், அணு உலைக் கழகத்தின் இயக்குனராகவும் முக்கிய பதவிகளில் இருந்தவர். சோவியத் சிறை முழுக்க இவரது கண்காணிப்பின் கீழிருந்தது. தோற்றத்தில் சாதுவான மனிதராகவும், சராசரி அரசு அதிகாரிபோலிருந்த அவருக்குள் அடக்குமுறையில் தேர்ச்சிபெற்ற இரத்தவெறி பிடித்த கொடிய மிருகம் ஒளிந்துகொண்டிருந்ததாக மாஸ்கோவாசிகள் நம்பினார்கள். தமது கட்டளையை எவ்வித தயக்கமின்றி நிறைவேற்றும் பேரியாவை ஸ்டாலினுக்கு பிடித்திருந்தது. ஆனல் எங்கே விட்டால் நமது தோளில் சவாரி செய்ய ஆரம்பித்துவிடுவாரோ என்ற எச்சரிக்கையும் அவரிடத்தில் இருந்தது. ஸ்டாலின் கட்டளை இடத்தேவையில்லை. அவர் உள்மனதை வாசித்ததுபோல பேரியாவின் நடவடிக்கைகள் இருக்கும். Night of the Long Knives சம்பவத்தை அறிந்தவர்கள் அடால்·ப் ஹிட்லர், எர்னெஸ்ட் ரோம் (Ernst Rohm) பிரச்சினையை ஒத்தது ஸ்டாலின் பேரியா உறவு என்கிறார்கள்.

ஜனவரி மாதம் 13ந்தேதி டாஸ் செய்தி ஸ்தாபனம், ” தவறான மருந்தை வழங்கி மருத்துவர்களில் சிலர் தோழர் ஸ்டாலினைக் கொல்ல முயற்சி” என்று செய்தியை வெளியிட்டிருந்தது. அரசு தரப்பில் வெளிவந்த இச்செய்தியும் அது தொடர்பான நடவடிக்கையும் கீழ்மைத்தனமானவை என்பதை 1958ம் ஆண்டு குருஷ்சேவ் 20 வது காங்கிரஸின்போது வாசித்த அறிக்கை தெரிவிக்கிறது. விசாரனையின் போது வெளிநபர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அப்படி நடந்துகொள்ளவேண்டியிருந்ததென மருத்துவ பெண்மணி திமாஷ¤க் கூறியிருந்ததைத் தவிர வேறு ஆதாரங்களில்லை. அப்பெண்மணி எழுதியிருந்த “மருத்துவர்களில் சிலர் கூடாத வைத்தியபராமரிப்பைத் தோழர் ஸ்டாலினுக்கு அளிக்கிறார்கள்”, கடிதம் ஸ்டாலின் தனது மூர்க்க குணத்தை கட்டவிழ்க்க போதுமானதாக இருந்தது. சோவியத் யூனியனின் முக்கிய மருத்துவர்களை கைது செய்யுமாறு கட்டளை வருகிறது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து உண்மையைக் கறக்க எப்படியெல்லாம் விசாரனைக்குழுவினர் நடந்துக்கொள்ள வேண்டுமென்பதையும் ஸ்டாலின் அறிவுறுத்துகிறார். வினோகிராடோவ் கடைசிவரை கைவிலங்கிடப்பட்டிருக்கவேண்டும், மற்றொரு மருத்துவரை சித்திரவதை செய்யவும் தயங்கவேண்டாமென்று கட்டளை. சித்திரவதைகள் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் இக்னாசியேவ் முன்னிலையில் நடந்தன. அவரிடம் “உண்மையை வரவழைக்காதுபோனால், உங்கள் தலை இருக்காதென” ஸ்டாலின் எச்சரித்திருந்தார். விசாரணையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கும் யோசனைகள் வழங்கப்பட்டன. மிகவும் எளிதான யோசனை. உண்மையை வரவழைக்க கைதிகளை நன்கு புடைக்குமாறு சொல்லப்பட்டது. ஸ்டாலின் மரணத்திற்கு பிறகு கிடைத்த  வழக்கு சம்பந்தப்பட ஆவணங்கள் அவ்வளவும் ஜோடிக்கபட்டவையென தெரியவந்ததென குருஷ்சேவ் அறிக்கைமூலமாக பின்னர் தெரிந்து கொள்கிறோம்.

சோவியத் யூனியன் பொதுவுடமைக் கட்சியின் அதிகாரபூர்வ ஏடான ப்ராவ்டாவும், பிற தினசரிகளும் “இஸ்ரேலியர்களான இம்மருத்துவர்கள் அனைவரும் யூதமதத்தின் தீவிரநம்பிக்கைகொண்ட சியோனி(Sionis)ஸ்ட்டுகளென்றும் ஏகாதிபத்திய அமெரிக்காவின் கைக்கூலிகளென்றும்”, எழுதின. அனைவருக்கும் தெளிவாயிற்று. ஸ்டாலின் மீண்டுமொரு கொலைகளத்தினை உருவாக்கும் பணியிலிருந்தார். இம்முறை இனவாதம் அவருக்கு உதவிற்று. சோவியத் யூனியனின் உயர்மட்டத்திலிருந்த பல தலைவர்களும், அதிகாரிகளும் தங்கள் தலை என்றைக்கு உருளுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்தனர். மத்திய குழுவின் புரவலரமைப்பில் இருந்த மூத்த தலைவர்களுள் ககனோவிச்(Kaganovitch) ஒரு யூதர், ஸ்டாலினுடைய முன்னாள் மனைவியின் சகோதரர், ஒரு காலத்தில் நெருங்கிய நண்பருங்கூட; மற்றொரு மூத்த தலைவர் மொல்ட்டோவ் யூதப்பெண்ணொருத்தியை மணந்திருந்தார்; பிறகு குருஷ்சேவ்க்குங்கூட ஆபத்திருந்தது, அவரது முதல் மனைவிக்குப் பிறந்திருந்த மகள் யூதர் ஒருவரை மனந்திருந்தாள்; பேரியாவுக்கும் ஆபத்திருந்தது. அவரது தந்தை ஜியார்ஜியர் என்றாலும் தாய் யூதப்பெண்மணி.

ஸ்டாலினின் அவ்வளவு கோரதாண்டவத்திற்கும் ஆரம்பத்தில் லாவ்ரெண்ட்டி துணைநின்றார். ஒவ்வொரு நாளும் தினரசிகளில் புதுப்புது ஊழல்கள், துரோகங்கள். குற்றவாளிகள் கைதும், அவர்கள் உண்மைகளை ஏற்பதும் தொடர்ந்தன. அவர்களில் பெரும்பாலோர் யூதர்களாக இருந்தனர். அவர்கள் வணிக அமைப்புகளை சார்ந்தவர்களாக இருப்பார்கள், மருத்துவர்களாக இருப்பார்கள், எழுத்தாளர்களாக இருப்பார்கள், நடிகர்களாக இருப்பார்கள், வழக்கறிஞர்களாக இருப்பார்கள். குறிப்பாக குருஷ்சேவ் மாநிலமான உக்ரைன் பகுதியிலேதான் இக்கைது நடவடிக்கைகள் அதிக அளவில் இருந்தன. ஸ்டாலினை சுற்றியிருந்த தலைவர்களை ஆபத்து அதுவரை நெருங்கவில்லை என்றபோதும் அவர்கள் அதிகாரத்தின் கீழ் இருந்தவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர். குருஷ்சேவ் கீழ் பலர் கைது செய்யப்பட்டனர். பேரியாவின் காவல் துறை பல இடங்களில் தவறிழைத்திருக்கிறதென சொல்லப்பட்டது. மிக்கோயனும் பாதித்திருந்தார் அவரின் கீழ் இருந்த பலர் ஏற்கனவே தண்டிக்கபட்டிருந்தனர். மோல்ட்டோவ்க்கும் அச்சமிருந்தது, அவருக்கு நெருக்கமானவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதுவரை மாஸ்கோவில் பயமில்லை என்றிருந்ததுபோக டாஸ் செய்தி ஸ்தாபனத்தின் இயக்குனர் திடீரென்று மாயமானார். மொல்ட்டோவ் நண்பர் கைது என்று செய்திவந்தது. திருமதி மொல்ட்டோவ் கைதுக்குப்பிறகு என்னவானார் என்று தகவலில்லை. மாஸ்கோ பல்கலைகழக கைதுகள், அறிவியல் அகாதெமியைச்சேர்ந்தவர்களின் கைதுகள் ஏன் மத்திய குழுவின் புரவலர் அமைப்பைச்சேர்ந்தவர்களேகூட கைதுசெய்யப்பட்டனர். ஆக யூதர்கள்..யூதர்களை குறிவைத்து நடவடிக்கைகள் இருந்தன.

மார்ச் மாதம் முதல் தேதி. ஞாயிற்றுக்கிழமை. குளிர்காலம் அதன் குணத்தை சிறிதும் குறைத்துக் கொள்ளாமலிருந்தது. நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது. மாஸ்கோவில் இருந்த தமது குடியிருப்பில் உறங்காமல் குருஷ்சேவ் விழித்திருந்தார். முதல் நாள் இரவு தலைமைக் காரியாலயத்தில் தோழர் ஸ்டாலினோடு அனைவரும் வழக்கம்போல இரவு உணவை சேர்ந்து உண்டணர். கட்சியின் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் அனவரும் கலந்துகொண்ட அந்த நிகழ்வின்போது ஸ்டாலின் சந்தோஷமாகவே இருந்தார், நாங்களும் அவருடன் மகிழ்ச்சியாக சந்திப்பைக் கழித்தபின் வீடு திரும்பினோம் என்றார் பின்னொருநாளில் குருஷ்சேவ். ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுவாக ஸ்டாலின் கட்சி பொறுப்பில் இருக்கிற சகாக்களுடன் தொலைபேசியில் நிர்வாகம் சம்பந்தமாக உரையாடுவது வழக்கம். ஆனால் இன்றென்னவோ அந்த நிமிடம்வரை அழைப்பில்லை. திங்கட்கிழமைகளில் அவசியம் இருந்தாலொழிய மாஸ்க்கோவில் ஸ்டாலினை சந்திப்பதில்லை. தொலைபேசி உரையாடலுக்கும் வாய்ப்புகளில்லை. ஆனால் இன்று அதுவும் ஞாயிற்றுக்கிழமை ஸ்டாலினிடமிருந்து வரவேண்டிய தொலைபேசி அழைப்பு வராதது ஏன் என்றகேள்வி அவர் மனைதைப்போட்டு குடைந்தது.

எத்தனை நேரம் குருஷ்சேவ் யோசனையில் ஆழ்ந்திருப்பாரோ திடீரென தொலைபேசியின் அலறல் கேட்டு திடுக்கிட்டவராய் வேகமாய்ச்சென்று எடுத்த குருஷ்சேவ் மறுமுனையில் யாரென்று தெரிந்துவிட்டது. தோழர் ஜோசெப் ஸ்டாலினுடைய தலைமைப் பாதுகாவலர்.

– நீங்க உடனே புறப்பட்டு தோழர் ஸ்டாலினுடைய தாட்சா (Datcha-பண்ணை வீடு)வுக்கு வரவேண்டுமென்று கட்டளை – என்கிறது  மறுமுனையின் குரல்.

இவர் பதில் தேவையில்லை என்பதுபோல மறுமுனையில் உரையாடல் துண்டிக்கப்பட்டது. நள்ளிரவில் கடுங்குளிரில் மாஸ்க்கோவிற்கு வெளியே தொண்ணூறு கி.மீ தூரம் பயணம் செய்வது அவ்வளவு எளிதல்லவென்று குருஷ்சேவுக்குத் தெரியும் தொலைபேசி மணியின் அழைப்பொலிகேட்டு விழித்திருந்த திருமதி குருஷ்சேவ் அவரை பார்த்தாள். நீனாபெட் ரோவ்னா ஓரளவு நிலமையைப் புரிந்துகொண்டிருக்கவேண்டும். அவளுக்கு இது முதல் அனுபவமல்ல. இதற்குமுன்பும் ஸ்டாலினிடமிருந்து நேரங்கெட்ட நேரத்தில் தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. அவரும் புறப்பட்டு போயிருக்கிறார். குருஷ்சேவ் மறுமுறையும் தொலைபேசியை எடுத்து வாகனத்திற்கும் ஓட்டுனருக்கும் ஏற்பாடு செய்துவிட்டு உடையை அணிந்தார். உறைபனிகுளிருக்கு வேண்டிய ஆடைகளையும் கையுறைகளையும் மறக்காமல் கணவர் அணிகிறாரா என்று பார்த்தார். ஆடையை அணிந்து முடித்ததும் குளிரைச்சமாளிக்க அப்பெண்மணியே சென்று வோட்கா பாட்டிலை எடுத்துவந்து கோப்பையை நிரப்பினார். இன்னொரு கோப்பை குடிக்கவும்  வற்புறுத்தினார். குருஷ்சேவ் மறுத்தார்.

– நாயைக்கூட வெளியில்விட பலமுறை யோசிக்க வேண்டும் என்பது போல குளிர் இருப்பதால் ஒருகோப்பை கூடுதலாக வோட்கா எடுப்பது நல்லதென்றாள்.

அவர் மறுத்தார். புறப்படுவதற்கு முன் மனைவியை பலமுறை தழுவி முத்தமிட்டார். ஸ்டாலின் நள்ளிரவில் அழைக்கிறபோதெல்லாம் இதை நடமுறை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது சகாக்களில் பலர் ஸ்டாலின் அழைத்தார் என்று புறப்பட்டுபோனவர்கள் திரும்பவந்து மனைவியைப் பார்த்தவர்களில்லை. குருஷ்சேவும் தான் திரும்புவதற்கு வாய்ப்பில்லாமலே போகலாமென்று நம்பினார்.

” அவளிடம் பதில் ஏதுமின்றி முத்தமிட்டேன். ஸ்டாலின் அழைக்கிறபோதெல்லாம் உயிரோடு திரும்பமுடியாமற்போகலாம் என நானும் என் மனைவியும் நம்பினோம், அதற்கு வலுவூட்டும் சாட்சியங்கள் ஏற்கனவே உண்டென்பதை இருவரும் அறிவோம்”, என்கிறார் குருஷ்சேவ்.

(தொடரும்)

 

 

 

இசைவானதொரு இந்தியப் பயணம்- 3

பிப்ரவரி 3

விழித்தபோதுதான் இந்திரலோகத்தில் இருக்கிறேன் என்பதை புரிந்துகொண்டேன். “என்ன சார் நன்கு தூங்கினீர்களா? ” என நண்பர் இந்திரனின் விசாரிப்புடன் காலை தொடங்கியது. நன்கு உறங்க முடிந்தால், எல்லாம் கைவரப்பெற்றிருக்கிறோமென்று பொருள். படுத்தால் கணத்தில் உறங்கவும், முடிந்தபோது எழுந்திருக்கவும் வரம் வாங்கியிருக்கவேண்டும். சிலருக்கு இவ்வரம் கூடுதலாகவே அமைந்துவிடும். அவர்களுக்குத் தேவை பட்டுக்கோட்டை கல்யானசுந்தரத்தின் பாடல்..

இன்றைய காலையும் தென்னிந்திய காலையாக திருமதி இந்திரன் தயவில் வயிற்றுக்கு அறிமுகமானது. காலையிலேயே சூரிய பகவான் வேண்டுமான வெப்ப புன்னகையை பாரபட்சமற்று விநியோகித்துக்கொண்டிருந்தார். நீர், காற்று , ஆகாயம், தீ, பூமி என அனைத்துமே பொதுவில்தான இருந்தன. பூமியும் நீரும் இன்று தனியுடமையாகியிருக்கின்றன எதிர்காலத்தில் எஞ்சியிருப்பவைகளும் தனியுடமை ஆக்கப்படலாம், ஆமென்.

இந்திய பெருநகரங்களுக்கேயுரிய மக்கள் வெள்ளம், வாகனப்பெருக்கம், வெப்பம், அனற்காற்று, இரைச்சல், மூர்க்கம், தன்னை தன்னை மட்டுமே தற்காத்துக்கொள்ளத் துடிக்கும் மனித உயிர்களென்ற இடிபாடுதல்கள், நெருக்குதல்கள், ஊமுள், நெருஞ்சிமுற்களென்ற வதைகளில் தினசரியைக் கடக்கும் (குறிப்பாக வாழ்க்கையில் ஜெயிக்கும்) இந்தியர்களை வணங்கவேண்டும். இந்தியாவில் நியாயமாக வெற்றி பெறமுடிந்தவன் அண்டார்ட்டிக்கில் வாழ நேர்ந்தாலும் சுலபமாகப் பிழைத்து கொள்வான். இந்தியச்சாலைகளில் வாகனமோட்ட தனிப்பயிற்சி வேண்டும் எவ்விதிகளுக்கும் அடங்காதவர்கள். தங்கள் கால்கள், தங்கள் கைகள், தங்கள் வாகனம், தங்கள் சாலை, தங்கள் உயிர் ஆகியவற்றில் அக்கறைகொண்டு சாலையை உபயோகிப்பவர்கள். நண்பர் இந்திரனின் வாகன ஓட்டி கொஞ்சம் விதிவிலக்கு: நல்ல சுறுசுறுப்பு. வாகனத்திற்கென ஒதுக்கப்பட்ட சாலைகளைப் பெரும்பாலும் பாதசாரிகள் ஆக்ரமித்துக்கொள்ளும் இந்தியாவில் அவர்கள் சாலையை தயவு பண்ணுகிறார்களாவென கவனித்து வாகனத்தைச் செலுத்தவேண்டும்.  இளைஞரான நண்பர் இந்திரனின் வாகனஒட்டி மன்மோகன் சிங்கைக்காட்டிலும் திறமைசாலி. எனக்கெதுவும் தெரியாதென்று கூறி இடித்து வாகனத்தை நிறுத்திய அனுபவம் நிகழவில்லை.

கிழக்குக் கடற்கரை சாலையின் திசைக்காக பயணித்தபோது இரண்டு கருத்துகள் குறித்து விவாதித்தோம். முதலாவது ஒரு கலைஞரின் படைப்புரிமை தொடர்பானது.  சிற்பமொன்றை சுட்டிக்காட்டி நண்பர் இந்திரன் இன்னாருடையதென தெரிவித்தார். எனக்கு வியப்பாக இருந்தது. அக்கலைஞரை ஓவியர் என்ற வகையிலேயே அறிவேன். அதனை நண்பரும் உறுதிசெய்தார். எனக்குள்ள வியப்பு அவரால் எப்படி ஒரு சிற்பத்தை வடிவமைக்க முடிந்ததென்பது. உரையாடலின் தொடர்ச்சி எனது ஐயத்தைப்போக்கியது. அக்கலைஞர் தீட்டிய ஓவியத்தின் அடிப்படையில் வேறொரு சிற்பி சிற்பத்தை உருவாக்கியிருந்தார் என்பது செய்தி. ஆனால் அச்சிற்பத்தை உருவாக்கினதாக ஓவியர் பெயர் இடம்பெற்றிருந்ததே தவிர அதன் வடிவமைப்பில், ஆக்கத்தில் ஓவியனின் உணர்வுகளை உள்வாங்கிக்கொண்டு, அதற்கொரு relief கொடுத்த கலைஞனின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது. தஞ்சாவூர்க்கோவிலை ராஜராஜ சோழன் கட்டினான் என்பதுபோல, மாமல்லசிற்பங்களை பல்லவர்களின் பெயர்களால் கொண்டாடுவதுபோலவென்று வைத்துக்கொள்ளுங்கள். நல்லவேளை நவீனயுகத்தில் ஓவியர்களும் சிற்பிகளையும் அடையாளப்படுத்தத்தொடங்கியுள்ளனர். கலைஞர் வடித்தது, ஜெயலலிதா தீட்டியதென்று சொல்ல முனையவில்லை. அவர்களுடைய அபிமானிகள் கூறத் தயாரென்றாலும் பிறர் ஏற்கமாட்டார்கள்.  பத்துபேர் சேர்ந்து உருவாக்கும் திரைப்படத்தில் இவர் கேமராமேன், இவர் எடிட்டர், இவர், பாடகர், அவர் இசைக்கலைஞர் என்று பெயர்களைப்போட தயாராக இருக்கும்போது ஓவியரின் மூளையில் உதித்திருந்தாலும் அந்த ஓவியத்தை வடித்த சிற்பியின் பெயரையும் அங்கே பொறித்திருக்கவேண்டாமா? இவருடைய திறமைமட்டுமே போதுமானதாக இருந்தால்; அம்மி பொளிபவனோ ஆட்டுக்கல் பொளிபவனோ சிற்பம் வடிக்கபோதுமென்று அவ்ர்களிடத்தில் தமது ஓவியத்தை சிலைவடிக்க ஒப்ப்டைத்திருப்பாரா?  சம்பந்தப்பட்டச் சிற்பி அவனே எனக்குப் பெயர் வேண்டாம் எனது பசியைப்போக்க உதவினாற்போதும் எனக்கூறியிருந்தாலும், ஒரு கலைஞன் மற்ற கலைஞனின் ஞானத்திற்கு உரிமை கோரமுடியுமா? அப்படிகோருகிரபோது கூச்ச உணர்வு இருக்காதா?

அடுத்த விவாதப் பொருள் பிரெஞ்சு நண்பரால் உருவானது. உண்மை சத்தியம் குறித்து கீழைநாட்டவர்களின் பார்வை என்னவென்று அவர் கேட்கப்போய் பதில் சொல்லவேண்டியிருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுநீதிச்சோழனின் சிலைகுறித்து விளக்கப்போக ஒரு பெரிய விவாதத்தை நடத்தினோம். அதே பார்வையில் இப்போதும் கேள்வி பிறந்தது. உண்மை, அறம், நீதி போன்றவற்றை வெவ்வேறு அலகுகொண்டு கிழக்கும் மேற்கும் அளக்கின்றன என்பதை எனது மேற்குலக வாழ்க்கைத் தெள்ளத் தெளிவாக உணர்த்தியுள்ளது. தவிரவும் பல நேரங்களில் நம்மை ஜப்பான், சீனா போல முற்றுமுதலாக கீழைதேசத்தவர்கள் எனச்சொல்லிக்கொள்வதில் தயக்கமுண்டு. இந்திய வரலாற்றை அறிந்த நண்பர்கள் இந்த எனது தயக்கத்தை ஏற்பார்களென நினைக்கிறேன். இந்தியப்பண்பாடு படையெடுப்புகளாலும், பிற மக்களின் ஆதிக்கத்தாலும் காலங்கள்தோறும் சிதைந்துவந்திருக்கிறது அல்லது மாற்றத்திற்குள்லாகிவந்திருக்கிறது. இதுபற்றி தனியாக விவாதிக்க வேண்டும்.  அதுபற்றி எழுத ஆரம்பித்தால் கிளைக்கதையாகிவிடும். இப்போதைக்கு அதை மறந்தவனாக எடுத்துக்கொண்ட பிரச்சினைக்கு வருகிறேன். பிரெஞ்சு நண்பர் ‘உண்மை’ குறித்து நாம் என்ன நினைக்கிறோமென்று கேட்ட கேள்விக்கு வருகிறேன். நண்பர் இந்திரன் தயங்கவில்லை: பாவமன்னிப்பு தொடர்பான ஓர் உணமைச்சம்பவத்தில் பங்குத் தந்தையொருவருக்கு நேர்ந்த சோதனையையும் அவர் நடந்துகொண்ட விதத்தையும் விளக்கிக்கூறி, அவரது நடத்தை விதி திருவள்ளுவரால் எழுதப்பட்டதென்கிற விவரத்தையும் கூறினார்.  “பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த/ நன்மை பயக்கும் எனின்” என்கிற குறளையும் சுட்டிக்காட்ட நண்பர் தவறவில்லை. பிரெஞ்சு நண்பருக்கு வாய்மையிடத்தில் பொய்யை நிரப்பலாம் என்பதில் உடன்பாடில்லை.  மனிதர் வாழ்க்கையை உலகமயமாக்கல் என்ற கோளுக்குள் குடி அமர்த்திய பிறகு இதுபோன்ற விடயங்களில் மேற்குக் கிழக்கு பார்வைகள் தேவையில்லை. தனிமனிதன் அவன் சுதந்திரம் என்கிற பார்வையை முன் வைத்து இயங்கும் மேற்கத்தியர் ஒரு புறம்; பண்பாட்டை சமூகம் சார்ந்து சிந்தித்து அச்சமூகத்தின் தமக்கு மட்டும் சில சலுகைகள் இருப்பதாக நினைத்துக்கொண்டு ஒழுகும் இந்தியர்கள் ஒரு புறம். நமது பார்வைக்கும் மேற்கத்தியர் பார்வைக்கும் நிறைய முரண்கள் இருக்கின்றன. நம்மிடம் போலிகள் அதிகம். பகவத் கீதையையும் பைபிளையும், குர்ரானையும் ஏற்று நடக்கவேண்டியவன் எதிர்வீட்டுக்காரனேயன்றி நாமல்ல என்ற நினைப்பு என்னையும் சேர்த்து நம்மில் பலருக்கும் இருக்கிறது. கீழைநாடுகள்Xமேற்கு நாடுகள் என்ற விவாதத்தில் இந்தியாவை பெருக்கல் குறிக்குள் நிறுத்தவேண்டும். இது பற்றியும் ஆரோக்கியமானதொரு விவாதம் தேவை.

சுமார் பதினோரு மணிக்கு தென் அமெரிக்கப்பாணியில் கட்டப்பட்டிருந்த  ஒரு தேவாலயத்தின்முன் எங்கள் வாகனம் வந்து நின்றது. பிரெஞ்சு நண்பரை அத்தேவாலயம் ஈர்த்ததெனலாம். அவர் தமக்கு அதீத மத நம்பிக்கையில்லையெனக் கூறிக்கொண்டாலும் உள்ளுக்குள் கூடுதலாக தமது மதத்தின்மீது நம்பிக்கை வைத்திருப்பவரென்பதை நன்கறிவேன். எனவே அவரது நடவடிக்கைகளில் எனக்கு வியப்புகளில்லை. இது போன்ற தேவாலயங்கள் அண்மைக்காலங்களில் ஆங்காங்கே இந்தியாவில் காளான்கள் போல ஏராளமாக முளைத்திருக்கின்றன. இந்து மதவியாபாரிகள் கோவில்கட்டி வர்த்தகம் செய்வதுபோல கிறித்துவ வியாபாரிகளின் வர்த்தக பிரிவில் இவை அடங்கும்.

காலை பதினோருமணிக்கு சோழமண்டலமென்கிற கலைஞர்களின் கூட்டுமுயற்சியில் இயங்குகிற கலைகிராமத்திற்கு வந்தோம். தமிழ்நாட்டின் தென்முனையிலிருந்து கிராமமக்கள் சென்னையைப்பார்த்து வாய்பிளக்க அக்காலத்தில் அண்ணா சமாதி, மெரீனா, எல்.ஐ.சி. உயிர்காலேஜ் செத்தகாலேஜ் போன்றவைகள் உபயோகத்திலிருந்தன. இப்போதும் அவைகள் அதே தகுதியுடன் இருக்கின்றனவாவென தெரியாது. ஆனால் வெளிநாட்டினருக்கு மகாபலிபுரம், காஞ்சிபுரம் பட்டியலில்  சோழமண்டலம் கிராமம், தட்சிணசித்ரா ஆகியவைகளும் உள்ளன. கே.சி பணிக்கரென்கிற கலைஞனின் அரிய முயற்சியால் உருவான இக் கிராமம் ஓவியம் சிற்பமென இரு துறைசார்ந்த பெருமக்களையும் இணைத்து ஒரு மிகப்பெரிய கூட்டு குடும்பமாக இயங்குகிறது. ஏற்கனவே சென்றதுண்டு என்றாலும் முதல் முறையாக இப்போதுதான் சோழமண்டலத்தை புரிந்து பார்த்தேன்.  நண்பர் இந்திரனுக்கு நன்றிகூறவேண்டும். காட்சிக்கு வைத்திருந்த ஓவியங்கள் சிற்பங்கள் ஆகியவற்றை தீட்டியவர்கள், செதுக்கியவர்கள்;  அவர்களுடைய பாணி; வாழ்க்கைவரலாறு; அவர்களது குரு யார்? மானாக்கர்கள் யார்யார்? என்றெல்லாம் எங்களுக்கு அவர் பாடம் நடத்தினாரென்று சொல்லவேண்டும்.  அங்கிருந்த ஒவ்வொரு கலைஞனின் திறனும் பிறருக்குப்போய்ச்சேரவேண்டும் என்கிற உண்மையான ஆர்வம் அவருக்கிருந்ததை அன்று கண்டேன். தனபால், ராய் சௌத்ரி, பெருமாள், முனுசாமி, ராமானுஜம் அல்போன்ஸாஅருள்தாமஸ்; ஏ.வி. இளங்கோ, வீர சந்தானமென்று சிறுபத்திரிகை உலகில் நான் வாசித்திராத கலை அகாதமி உலகில் மட்டுமே கோலோச்சுகின்ற பலரை இந்திரன்மூலமே அறியநேர்ந்தது.

அங்கிருந்து வளசரவாக்கத்தில் கார்த்திகேயனும் அவருடை நண்பர்களும் சேர்ந்து உருவாக்கிக்கொண்டிருக்கும் அகவெளியென்ற கலையுலக கனவின் பரிச்சயம் வாய்த்தது. கலைஞர்களும் படைப்பாளிகளும்  எவ்வித இடையூறுமின்றி உண்டு உறங்கி படைப்பு வினையாற்றிட சோழமண்டலம்போன்ற சூழலை ஏற்படுத்திதருதல் நண்பர்களின் திட்டம். பின்புலத்தில் இந்திரனின் வழிகாட்டுதலும் உள்ளதென்பது புரிந்தது. எங்கள் அமைப்பும் இவர்களோடு இணைந்து செயல்பட, நானும் கனவுகண்டு கொண்டிருக்கிறேன்.

பிற்பகல் தட்சிணசித்ரா சென்ற அனுபவத்தைத் தனியாக எழுதுகிறேன்
———————————————————–