பாரீஸில் காந்தி சிலை:
கடந்த மாதம்(அக்டோபர்2) நான் குடியிருக்கும் Strasbourg நகரில் காந்தி சிலையை முதன்முதலாகத் திறந்தார்கள். நாளை அதாவது 11-11-2011 அன்று பாரீஸ் நகர புறநகரொன்றில் மற்றொன்றை திறக்கவிருக்கிறார்கள். வொரெயால் தமிழ்சங்க தலைவர் இலங்கைவேந்தன் என்பவரை கடந்த சில வருடங்களாக அறிவேன் அயராத உழைப்பாளி. வருடந்தோறும் விழாக்களை நடத்தி அப்பகுதிவாழ் தமிழ்மக்களை ஒருங்கிணைக்கிறார். தமிழ்ப்பள்ளியொன்றை நிறுவி பிள்ளைகள் தமிழின் விரல் பிடித்து நடப்பதைப் பார்த்து பெருமிதம் கொள்கிறார். இந்திய அரசியல்வாதிகளுக்கும் காந்திக்குமுள்ள பந்தமென்பது இந்திய ரூபாய் நோட்டுக்களில் அவர் இடம்பெற்றிருக்கிறார் என்பதாக இருக்கலாம், ஆக அவர்களும் காந்தியைப் போற்றுகிறவர்களாகிறார்கள். ஆனால் இன்றைய உலகிற்கு காந்தியின் தேவை தவிர்க்கமுடியாதது. அவரது சாத்வீகமான அரசியல் மட்டுமல்ல, அடிதட்டு மக்களின் வளர்ச்சியில் அக்கறைகொண்ட வாழ்வாதார பொருளரசியலும் முன்னெப்போதும் கண்டிராத அளவிற்கு தேவையாகிறது. பாரீஸில் முதன் முதலாகக் காந்தி சிலை திறக்க எடுத்துக்கொண்ட நண்பர் இலங்கைவேந்தனின் முயற்சி போற்றுதலுக்குரியது.
நாள்: 11-11-2011, பகல் 2மணி அளவில்; இடம்: Avenue Gandhi, 95490- Vaureal தொடர்புகட்கு: Ilangaivendhan- 06 10 43 22 16
பத்தாவது ஆண்டு கம்பன் விழா:
பிரான்சு கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி.பாரதிதாசனை பல ஆண்டுகளாக அறிவேன். அவருக்கு தமிழ்தான் குடும்பம், தமிழர்கள் தான் உறவினர்கள். சந்தத்துடன் மரபுக்கவிதை எழுதுவதில் சமர்த்தர். தமிழ்மொழி மீது தீராத காதல் கொண்டு இயங்குபவர். தமிழர்களென்றாலே பல சங்கங்கள் இருக்கவேண்டுமில்லையா? இங்கேயும் நூறு சங்கங்களாகவது அப்படி இயங்கும். அவற்றுள் உருப்படியாக தமிழுக்கு உழைக்கும் அமைப்புகளில் நானறிந்தவகையில் ஐந்து அல்லது ஆறு அமைப்புகள் இருக்கலாம். அவற்றுள் சட்டென்று அனைவரும் நினைவு கூரும் அமைப்பு பாரீஸ் கம்பன் கழகம். வருடந்தோறும் செப்டம்பர்மாதங்களில் பாரீஸில் கம்பன் விழா களைகட்டும். இவ்வருடம் பத்தாவது ஆண்டுவிழா என்பதால் சிறப்பாக கொண்டாட நினைத்திருக்கவேண்டும். நவம்பரில் வந்திருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து கம்பன் விழா மேடைகளறிந்த பேச்சாளர்கள் கலந்துகொள்கிறார்கள். வழக்கம்போல பட்டிமன்றம், வழக்காடுமன்றம் என அமர்க்களபடுத்துகிறார்கள். ஆக இரண்டு நாட்களுக்கு பாரீஸ் வாழ் தமிழர்கள் தமிழ் அமுதைப் பருக நல் வாய்ப்பினை பாரீஸ் கம்பன் கழகம் அருளியிருக்கிறது. சிறப்பு பேச்சாளராக தமிழருவி மணியன் கலந்துகொள்கிறார்.
நாட்கள்: 12 மற்றும் 13-11-2011 (சனி மற்றும் ஞாயிறு) இடம்: La Salle Champ De Foire, Route des Refzniks, 92500- Sarcelles; தொடர்புகட்கு: K. Barathidassan- 01 39 93 17 06
நல்ல தொகுப்புரைகள்!
மிக்க நன்றி
நா.கிருஷ்ணா