கதையல்ல வரலாறு1-3

ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)

கனடாவைப் கைப்பற்றிய கையோடு பிரிட்டனையும் அபகரிக்கவிருக்கிற பேராசை பிடித்த அமெரிக்கர்களின் திட்டத்தை  தெரியுமென்று கூறி ஹெஸ் தம்மை வியப்பில் ஆழ்த்தியதாக அரசாங்கத்திற்கு சமர்ப்பித்திருந்த அறிக்கையில் இவோன் கிர்க்பட்ரிக் வேடிக்கையாகக் குறிப்பிட்டிருந்தார்.

– நம்மிரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பயன்தரக்கூடிய யோசனை என்னிடமுள்ளது. ஆனால் அதன் வெற்றி நீங்கள் தரும் ஒத்துழைப்பைப் பொறுத்தது. இங்கிலாந்து ஜெர்மனுக்குச் சொந்தமான காலனி நாடுகளை அதனிடம் ஒப்படைக்கவேண்டும், அப்படி ஒப்படைப்பீர்களெனில் ஐரோப்பிய அரசியலில் பிரிட்டிஷ் அரசாங்கம் எதையும் செய்யலாம், நாங்கள் தடுக்கப்போவதில்லை, அவ்வாறே எங்கள் ஐரோப்பிய நாட்டாமையில் நீங்களும் குறுக்கிடமாட்டீர்களில்லையா?

கிர்க் பட்ரிக் மிகவும் அமைதியாகத் திருப்பிக்கேட்டார்.

– எனக்கொரு சந்தேகம்?

– என்னது?

– ரஷ்யா இருப்பது ஐரோப்பாவிலா, ஆசியாவிலா?

– இதென்ன கேள்வி, இரண்டிலும் என்றுசொல்வதைக்காட்டிலும் ஆசியா என்பதுதான் பொருத்தமான பதிலாக இருக்கும்

– அப்படியெனில் ஐரோப்பிய விவகாரங்களில் வேண்டப்படுகிற முழுச்சுதந்திரம், ரஷ்யா விவகாரத்தில் தங்களுக்கு வேண்டாம், அப்படித்தானே?

ஹெஸ் முகம் மாறியது. பட்ரிக் மனதிலுள்ள ஐயத்தை உடனடியாக தீர்க்க நினைத்தவர்போல அவருடைய பதிலிருந்தது.

– எங்களுக்கு ரஷ்யாவிடம் சில எதிர்பார்ப்புகள் உள்ளன. பேச்சு வார்த்தை அல்லது யுத்தம் இரண்டில் ஏதாவதொரு வழிமுறையில் அவை பூர்த்திசெய்யப்படவேண்டும். அதுவன்றி வேறு திட்டங்கள் தற்போதைக்கு இல்லை ரஷ்யா மீது உடனடியாக நாங்கள் தாக்குதல் நடத்த இருக்கிறோமென்பதெல்லாம் வதந்தி.

உலக அமைதிக்குப் பங்கம் விளைவித்த வகையிலும் மனிதகுலத்திற்கு எதிராக நடத்திய யுத்தமூலமாக இழைத்த குற்றங்களுக்காகவும் ஜெர்மானிய நாஜித் தலமைக்கு எதிராக நடந்த புகழ்பெற்ற நூராம்பெர்க்(Nuremberg) வழக்கின் ஆவணங்களை பரிசீலித்திருந்த பிரெஞ்சு பத்திரிகையாளர் ரெமொன் கர்த்தியே ஒன்றை அவதானித்திருந்தார். அவரது கணிப்பின்படி ஹெஸ்ஸ¤க்கும் பட்ரிக்கிற்கும் இடையிலான உரையாடல் நடந்தது 1941ம் ஆண்டு மேமாதம் 13ந்தேதி அடுத்த இரு தினங்களில் (மேமாதம் 15ந்தேதி) ரஷ்யாவின் மீது படையெடுக்க  ஜெர்மானியர்கள் முடிவெடுத்துவிட்டார்கள், எனவே ரஷ்யா மீதான ஜெர்மானிய படையெடுப்புக்கு உடனடி சாத்தியமில்லை என்று ஹெஸ் கூறியதும் அவற்றை வதந்தியென நிராகரித்திருந்தமையும் உண்மையில்லை என்பது அவரது கணிப்பு

– இத்தாலியைப்பற்றிய தங்கள் அபிப்ராயமென்ன, அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? – பட்ரிக்

– எனக்குத் தெரியாது.-ஹெஸ்

– இது மிக முக்கியமானது.

– இத்தாலியர்களின் எதிர்பார்ப்புகள் அத்தனை கடுமையானவைகளாக இருக்குமென்று நான் நம்பவில்லை.

– அவற்றுக்கான தகுதிகள் அவர்களுக்கில்லை?

– தாராளமாக இருக்கிறது இல்லையென்று சொல்ல முடியுமா என்ன. அவர்களுக்கு நாங்கள் நிறைய கடமைபட்டுள்ளோம். தவிர 1919ல் ருமேனியர்களுக்கு என்ன நடந்தது? அவர்களுக்கு உதவ நீங்கள் ஆர்வம் காட்டியது மறந்துபோனதா? அவர்கள் மட்டும் உத்தமர்களா என்ன?

ஹெஸ்ஸ¤ம் இவோன் பட் ரிக்கும் இரண்டே கால் மணிநேரம் உரையாடினார்கள். பட்ரிக் அலுத்துபோனார். இத்தனை நேரம் உட்கார்ந்து இந்த மனிதனிடம் பேசிக்கொண்டிருந்தது அதிகமென்று நினைத்திருக்கவேண்டும், எழுந்தார்.

– ஒன்றை முக்கியமாக  உங்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும்? – மீண்டும் ஹெஸ்.

– எதைப்பற்றி?

-இவ்வளவு நேரம் நான் முன்வைத்த பரிந்துரைகள் நியாயமான முடிவுகளை அடைய வேண்டுமெனில், அது பற்றி விவாதிக்க ஒரு புதிய அரசாங்கமும் தலைவர்களும் வேண்டும். உங்கள் இப்போதையை அரசாங்கம் கூடாது. சர்ச்சிலும் சரி அவரது நண்பர்களும் சரி 1936 லிருந்தே ஜெர்மனுக்கும் இங்கிலாந்துக்குமிடையேயுள்ள அவ்வளவு சிக்கல்களுக்கும் காரணமாக இருப்பவர்கள். யுத்த தீர்வை முன்வைத்து காய் நகர்த்தியவர்கள். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நண்பர் இட்லர் ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்.

மறுநாள் அதற்கும் மறுநாளென்று கிர்க் பட்ரிக் ஹெஸ் சந்திப்புகள் நிகழ்ந்தன. முதல்நாள் மனநிலையில் ஹெஸ் இல்லை. இப்போது தமது தகுதியின் அடிப்படையில் சில மரியாதைகளை எதிர்பார்க்கத்தொடங்கினார். அதுவும் தவிர கிர்க் பட்ரிக் ஓர் அதிகாரி என்பதைத்தவிர வேறு தகுதிகளில்லாதாவர். மாறாக ருடோல்ப் ஹெஸ்ஸென்ற தான் ஜெர்மன் அதிபருக்கு நண்பர் மட்டுமல்ல ரை(Reich) அரசாங்கத்தில் மூன்றாவது இடம். அதற்குரிய மரியாதையை ஆங்கிலேயர்கள் கொடுக்கவில்லை, அவரது தகுதிக்கு பிரிட்டன் மன்னரை சந்திக்க ஏற்பாடு செய்திருக்கவேண்டும், சாத்தியமில்லையெனில் குறைந்த பட்சம் ஓர் அமைச்சரையாவது கண்ணில் காட்டியிருக்கலாம். மாறாக கண்டவர்களையும் இவரிடத்தில் அனுப்பிவைத்து முட்டாள்தனமான கேள்விகளுக்குப் பதில்சொல்லவேண்டுமென்று நினைக்கிறார்கள். யோசித்துப்பார்க்கவும்  எரிச்சலுற்றார். அந்த எரிச்சலில் தமக்கு மொழிபெயர்ப்பாளர்கள் வேண்டுமென்றார்; சட்ட ஆலோசர்கள் உதவியும், காரியதரிசிகளின் சேவையும் தமக்குத் தேவைப்படுகிறது ஏற்பாடு செய்யுங்களென்று அதிகாரமாகக் கேட்டார். இதற்கிடையில் லிவர்பூல் அருகில் சிறைவைக்கபட்டிருந்த இரண்டு ஜெர்மன் பிரமுகர்களின் பெயரைக்கூறியவர் மறக்காமல் அவர்களுடைய தண்டனைக் கைதி எண்ணையும் கூறி ஆச்சரியப்படுத்தினார். இவ்வளவு களேபரங்களுக்கிடையிலும் அவரது மே 13ந்தேதியிட்ட பிரேரணையில் ஒருசிலவற்றையும் மறக்காமல் குறிப்பிட்டிருந்தார். அதிலொன்று இங்கிலாந்து ஈராக்கைவிட்டு வெளியேற வேண்டுமென்பது.

– ஆனால் ஒன்றுமட்டும் எனக்குத் தெளிவாகவில்லை. ஈராக் ஒன்றும் ஐரோப்பாவில் இல்லையே? – மீண்டும் கிர்க் பட்ரிக்

– ஈராக் நாட்டினர் எங்களுக்காக ஆயுதம் தூக்கியவர்கள். எங்கள் ·ப்யூரெர் நமது நாடுகளுக்கிடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடுகிறபோது இவ்விஷயங்களை தவறாமல் கணக்கிற் கொள்ளவேண்டுமென நினைக்கிறார்.

ஹெஸ் அமெரிக்காவை மறக்கவில்லையென்பதை அவரது உரையாடலின் தொடர்ச்சி தெரிவித்தது. ஜெர்மானியர்களுக்கு அமெரிக்கர்களிடம் கிஞ்சித்தும் பயமில்லை என்றார். மறுபடியும் ஜெர்மானிய நீர்மூழ்கி கப்பல்களால் இங்கிலாந்துக்கு ஏற்படவிருக்கும் பேரழிவினைக்குறித்து பேச ஆரம்பித்தார்.

– நான் சொல்வதை கவனமாகக் கேளுங்கள், உங்களுக்குள்ள எல்லா தொடர்புகளையும் துண்டிப்பதன்மூலம் போரில் வெற்றிபெறபோவது ஜெர்மன். எங்களிடம் தயார் நிலையிலுள்ள நீர்மூழ்கிக்கப்பல்களின் எண்ணிக்கை எவ்வளவு, கட்டிக்கொண்டிருக்கிற நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கை எவ்வளவு என்ற கணக்கெல்லாம் உங்களிடத்திலில்லை. இட்லருக்கும் எதையும் பெரிய அளவில் செய்யவேண்டும், இதுவரை உலகம் கண்டிராத அளவில் எங்கள் அதிநவீன நீர்மூழ்கிக்கப்பல்கள் புதுரக போர்விமானங்களின் துணையுடன் தாக்குதலில் இறங்கப்போகின்றன. அதன் விளைவாக கூடிய சீக்கிரம் இங்கிலாந்தின் எல்லா வழிகளும் அடைபடும். அதன் விளைவாக நீங்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டு சரண் அடைந்தாலும் எங்கள் ·ப்யூரெர் அதை அனுமதிக்கும் திட்டமில்லை. உங்கள் மக்கள் பட்டினிகிடந்து மரணத்தை தழுவும்வரை முற்றுகை தொடரும்.

– பிரிட்டானிய மக்களின் உயிர்வாழ்க்கைக்கு வேண்டிய பொருளை முடக்குவதுதான் யுத்தமெனில், உங்களால் அதை சாதிக்க இயலாது. நீங்கள் நினைப்பதுபோல டன் கணக்கில் எங்களுக்கு பொருட்கள் வேண்டியதில்லை. நாங்கள் கையிறுப்பைவைத்தே கூட உங்களுடன் மோதமுடியும்.

– எங்கள் யுத்த தந்திரம் உங்கள் கற்பனைக்குக்கூட பிடிபடாதது. மிக மோசமான முற்றுகையை வெகு சீக்கிரம் சந்திக்கவிருக்கிறீர்கள். நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டுகப்பல்கள் உதவிக்கு வரகூடுமென்று வைத்துக்கொண்டாலுங்கூட உங்கள் தேவைக்கு காணாது, குறித்துக்கொள்ளுங்கள்

உரையாடலின் தொனிமட்டுமல்ல, ஹெஸ்ஸின் உடல் மொழியும் புதிய பாவங்களை வெளிபடுத்தியது, மேசையை ஓங்கிக் தட்டினார்.

– எனது பயணம் அருமையான சந்தர்பத்தை உங்களுக்கு வழங்கியிருக்கிறது. இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனம், தவறினால் ஜெர்மன் நாட்டுடன் சமாதானம் காண மறுக்கிறீர்கள் என்று பொருள். உங்களை அழிப்பது ·ப்யூரெர் கடமை, அதன் பிறகு காலத்திற்கும் நீங்கள் அவருக்கு அடங்கிய குடிகள்.

தமது உரையை நிறுத்தி சிறிது மூச்சுவாங்கினார்.

– சொல்ல வேண்டிய அவ்வளவையும் கூறியிருக்கிறேன்.

ஹெஸ்ஸை தற்காலிகமாக தங்க வைத்திருந்த சிறிய அறையின் கதவு மூடப்பட்டது. ஹெஸ் வந்த நோக்கம் வேறு. . இங்கே நடப்பதெதுவும் அவருக்கு உகந்ததாக இல்லை. தனது நாட்டைவிட்டு இவர்களையெல்லாம் நம்பி இவ்வளவுதூரம்   வந்ததே தவறோ என அவர் யோசித்திருக்கக்கூடும்.

வெகுகாலந்தொட்டு அரசியல் மனதிற்கு பிடித்ததுறையாக ஹெஸ்ஸ¤க்கு இருந்துவந்திருக்கிறது. ம்யூனிச் பல்கலைகழகத்தில் மாணவராக இருந்த காலந்தொட்டே ஹௌஸ்ஷோபர் போன்றவர்களின் அரசியல் சிந்தனைகளில் தீவிர பிடிப்புடன் இருந்தவர். பொருளியல் மாணவர். யுத்தத்தின்போது கவசப்படையில் பணியாற்றி இருக்கிறார். இரண்டுமுறை போரில் படுகாயமுற்று உயிர்பிழைத்தது ஓர் அதிசயமாக நிகழ்ந்தது. அதன் பிறகு பின்பு விமானப்படையில் சேந்து மளமளவென்று உயர் பதவியை எட்டினார். முதல் போரில் ஜெர்மனுக்கு நேர்ந்த தோல்வியை அவரால் சகித்துகொள்ள முடியவில்லை. ஜெர்மன் நாட்டின் இழந்த புகழை மீட்கக்கூடிய ஓர் அதிபரை எங்கனம் உருவாக்கப்போகிறோம்? என்ற ஹெஸ்ஸின் வாக்கியங்கள் இடலர் காதுவரை சென்றவை சோஷலிஸ்டு கட்சியின் நிகழ்வொன்றில் கட்சியில் புதிதாகச் சேர்ந்திருந்த ஹெஸ்ஸை ஹிட்லர் முதன்முதலாக சந்திக்கிறார். ஹெஸ் அவரிடம் ஹௌஸ்ஷோபர் சிந்தனைகள் குறித்து உரையாடுகிறார். ‘உயிர்வாழ்க்கையின் வெளி'(Vital space) யென்ற அக்கோட்பாடு பிற்காலத்தில் தன்னை பெரிதும் கொண்டாடிய நபரை அன்றைக்குத்தான் முதன் முதலாகச் சந்தித்தது.

அன்று தொடக்கம் ஹெஸ் இட்லரின் நெருங்கிய சகாவானார். 1933ம் ஆண்டுவரை அவருடைய துணை நிர்வாகியாகவும் அவருடைய அந்தரங்க காரியதரிசியாகவும் பணியாற்றிருக்கிறார். அவரிடம் இட்லர் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். இட்லரின் எதிரிகளை அழிக்க எடுத்த நடவடிக்கைகளிலும் சரி, 1935ம் ஆண்டு யூதர்களுக்கு எதிரான சட்டவரைவுக்கும் சரி ஹெஸ் காரணமாக இருந்திருக்கிறார், அவற்றில் கையொப்பமும் இட்டிருக்கிறார்.  நாளுக்குநாள் ஹெஸ்ஸின் செல்வாக்கு ஆட்சியில் மட்டுமல்ல சோஷலிஸ்டு கட்சியின் நிர்வாகத்திலும் அதிகரித்தது. ஹெஸ்ஸின் மேற்பார்வையிலேயே அநேக சட்டவரைவுகள் கொண்டுவரப்பட்டன. 1938முதல் நாட்டின் ரகசிய அமைச்சகத்தின் உறுப்பினர்களில் ஒருவராக இணைந்து யுத்தத்திற்கான திட்டங்களை வகுத்தார். ஜெர்மன் நாட்டிற்கும் பிற நாடுகளுக்குமிடையே பகமை வெளிப்படையாக தெரிவந்தபோது  ரை(Reich) பாதுகாப்பு சபையின் ஆறு உறுப்பினர்களுள் அவரும் ஒருவர். தமது அரசியல் வேதகுருவான ஹௌஸ்ஷோபர் மனைவி ஒரு யூதர் என்று அறியவந்தபோது அவரை வதை முகாமிருந்து காப்பாற்றியவர். அதுபோலவே வதை முகாம்கள் என்று சொல்கிறபோழுது நினைவுக்கு வருகிற புக்கென்வால்ட், ஔஸ்விட்ஷ் விவகாரத்தில் இவருக்குப் பங்கில்லை என்கிறார்கள். குறிப்பாக இட்லர் கோரிங்கிற்கு அடுத்த இடத்தை வழங்கியதன்மூலம் தமது நம்பிக்கைக்குரியவர் ஹெஸ் என்பதை உலகுக்கு அறிவித்திருந்தார்.

‘ஹெஸ்’ஸை அறிந்தவர்கள் அவருடைய இங்கிலாந்து விஜயத்திற்கு வேறொரு காரணத்தை முன் வைக்கிறார்கள்; அது அவரது சொந்த முயற்சியாக இருக்காதென்பது அவர்கள் வாதம். குறிப்பாக ஹெஸ்ஸ¤டன் பழகிய நண்பர்கள், உறவினர்களின் கூற்றுப்படி, சரித்திர வல்லுனர்களை திகைப்பில் ஆழ்த்திய இச்சம்பவத்திற்கு ஹெஸ்ஸின் அபிமானத்திற்குரிய நண்பரும் பேராசிரியருமான கார்ல் ஹௌஸ்ஷோபரிடம் வைத்திருந்த அளவுகடந்த பக்தியை குற்றம் சொல்கிறார்கள்.பின்னவர் ஹெஸ்ஸிடம் ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். நமது கதை நாயகரின் பைத்தியக்காரத்தனமான விமான பயணம் மாத்திரமல்ல அவருடைய உயிர்வாழ்க்கையும் கார்ல் ஹௌஸ்ஸ்ஹோபரின்  சிந்தனையை ஒட்டியதாக கடைசிவரை இருந்தது.

கார்ல் ஹௌஸ்ஷோபரை ஓர் அசாதாரண மனிதரென்றே சொல்லவேண்டும். தம்மை சுற்றியிருந்த மனிதர்களிடத்தில், எதையும் தீர்க்கதரிசனத்துடன் கணிக்க தம்மால் முடியும் என்று நம்பவைத்தார். முதல் உலகப்போரின்போது ஒரு நாள் ஹௌஸ் ஷோபர் ஒரு ராணுவ உயர்மட்ட அதிகாரியோடு இரயில் பயணம் செய்யவேண்டியிருந்தது. இரயில் புறப்படவிருந்த சமயம், கடைசி நிமிடத்தில் தமது பயணத்தை இரத்து செய்வதாக அறிவித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் பயணத்தின்போது இரயில் குண்டு வீச்சிற்கு ஆளாகுமென்பதாகும். அவர் கூறியதுபோலவே இரயில் குண்டுவீச்சில் சேதமுற்று நூற்றுக்கணக்கான உயிர்களை பலிவாங்கியது. இதை ஹெஸ் நேரிடையாகக் கண்டு ஹௌஸ் ஷோபெர் திறனைக் கண்டு பிரம்மித்ததாக, கூறியிருக்கிறார். ஹெஸ் தமது அபிமான பேராசிரியரின் மகனிடமும் நட்பு பாராட்டினார்.  ம்யூனிச் நகரிலிருந்த அந்த வீட்டிற்குச் செல்வதை வழக்கப் படுத்திக் கொண்டிருந்தார். அப்போதெல்லால் கார்ல் ஹௌஸ்ஷோபர் பிரிட்டனையும் அந்நாட்டின் மக்களையும் சிலாகித்து சொல்வது வழக்கம். ஜெர்மானியரும் ஆங்கிலேயரும் கார்ல் ஹௌஸ்ஷோபருடைய கூற்றின்படி ஒரு தாய்வயிற்றுப் பிள்ளைகள். அதன் பின்னர் சந்தர்ப்பம் வாய்த்தபோதெல்லாம் இட்லரிடம் ஜெர்மனும் இங்கிலாந்தும் சேர்ந்து வாழ்வதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு,  ஒருமுறை அரசுமுறைப்பயணமாக இட்லர்  பிரிட்டன் சென்று வரவேண்டுமென்கிற யோசனையையும் முன்வைத்தார். 1940ம் ஆண்டு ஹௌஸ்ஷோபர் இங்கிலாந்திடம் ஜெர்மன் சுமுகமான உறவை பேணவேண்டுமென வற்புறுத்தினார். இட்லர் ரஷ்யாவைத் தாக்க  முடிவெடுத்தபோது, ஹௌஸ் ஷோபர், கோரிங், ஹெஸ் ஆகிய மூவரும் ஜெர்மன் அரசு நடத்தவிருக்கும் இருமுனைத் தாக்குதல் என்பது ஆபத்தை விலைக்கு வாங்குவதற்குச் சமமென்று தெரிவித்திருந்தார்கள்.

– இருமுனைதாக்குதலென்பதே இல்லை, சுவர்போல அட்லாண்டிக் பெருங்கடல் துணையிருப்பதால் ரஷ்யாவை தரைமட்டமாக்குவதென்பது எளிதில் முடியுமென்ற பதில் இட்லரிடமிருந்து தீர்க்கமாக வந்தது.

பதிலைக்கூறிய இட்லர் கார்ல் ஹௌஸ்ஷோபர் மூவர் அணியின் கோரிக்கையைக்கேட்டு சிரித்திருக்கிறார். இங்கிலாந்துடன் சமாதானமாக போகச் சொல்லும் யோசனையை வரவேற்க கூடிய நேரம் அது அல்லவென்பது இட்லரின் கருத்து, அதுவும் ஜெர்மனியர்களில் கப்பற்படையும், வான்படையும் நவீனப்படுத்தியிருக்கின்ற நேரத்தில். 1940லேயே தாம் போனால் போகிறதென்று சொல்லி இங்கிலாந்துடன் சமாதானத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்பியதாகவும் அதற்கு பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து எவ்வித பதிலுமில்லை என்பதை தமது நண்பர்களுக்கு இட்லர் நினைவூட்டினார்.

1940 ம் ஆண்டு ஆகஸ்டுமாதத்தின் இறுதியில் ஒருநாள் ஹெஸ்ஸ¤ம் பேராசிரியரும் மாலை ஐந்து மணிக்கு ஆரம்பித்து விடிய விடிய பேசினார்கள். கூரூன்வால்ட் காட்டில்மட்டும் சுமார் மூன்று மணிநேரத்திற்கு உரையாடல் நீண்டிருக்கிறது. உரையாடலின் கருப்பொருள் பிரிட்டன் மீது ஜெர்மன் திட்டமிட்டுக்கொண்டிருந்த தாக்குதல் பற்றியது. உரையாடலின் சாரம் பொதுவான ஓர் இடத்தில் வைத்து ஜெர்மன் மற்றும் ஆங்கிலேயருக்கிடையேயான யுத்த பதட்டத்தை தணிக்கும் வகையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வது. அதற்கு இரு தரப்பிலும் ஆதவுதரகூடியவர்களின் உதவியை நாடுவது. இங்கிலாந்து தரப்பில் அதற்கு உகந்த நபர் சர் ஐயன் ஹாமில்டன் அதாவது ஏற்கனவே இக்கட்டுரையில் நமக்கு பரிச்சயமான ஹாமில்டன் பிரபு. அவருக்கு கடிதம் எழுத லிஸ்பன் நகரில் வசித்த இவர்களுக்கு நன்கு அறிமுகமான பிரிட்டிஷ் பெண்மணியொருத்தியின் உதவியை நாடுவதென தீர்மானித்தார்கள்.  இது சம்பந்தமாக ஹெஸ், கார்ல் ஹௌஸ்ஸ் ஷோபெர், அவருடையமகன் ஆகிய மூவருக்கிடையே தொடர்ந்து கடிதப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. அக்கடிதங்களில் அப்பெண்மணியின் இடத்திலோ அல்லது ஹாமில்டன் யோசனையின்படி பொருத்தமான ஓர் இடத்திலோ இருதரப்பிலும் தலா ஒருவர் சந்திக்க ஏற்பாடு செய்வது குறித்து சற்று விஸ்தாரமாகவோ யோசித்திருக்கிறார்கள். ஆகஸ்டு மாதத்தின் இறுதியில் நடந்துமுடிந்த உரையாடலைத் தொடர்ந்து ஹெஸ் செப்டம்பர்மாதம் 10ந்தேதி கார்ல் ஹௌஸ் ஷோபருக்கு எழுதியிருந்த கடிதம் நமக்கு மிகத்தெளிவாக அவர்களுடையை யோசனையை விளக்குகிறது. அதே மாதத்தில் மேற்கண்ட கடிதத்தின் அடிப்படையில் ‘மிகவும் ரகசியம்’ என்று குறிப்பிட்டு  கார்ல் ஹௌஸ்ஷோபரின் மகன் ஆல்பிரெஷ்ட் ஹௌஸ்ஷோபெர் ஹெஸ்ஸ¤டனான தமது சந்திப்புபற்றி எழுதியிருக்கிறார். ஹெஸ்ஸ¤டைய பயணத்தையும், அவரது ஆழ்மனத்தையும் புரிந்துகொள்ள இக்குறிப்பு உதவுகிறது. அந்த ஆவணத்தில் ஆல்ப்ரெஷ்ட் எழுப்பும் கேள்வி: இங்கிலாந்திற்கும், ஜெர்மனுக்குமிடையே அமைதியை ஏற்படுத்திதருவதற்கான வாய்ப்பு இன்னமும் உள்ளதா?

(தொடரும்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s