இங்கிதமும் மரியாதையும்
பிரான்சு நாட்டைப்பற்றி சொல்கிறபோது அவர்கள் தலைக்கணம் பிடித்தவர்கள் என்ற விமர்சனங்கள் எழுவதுண்டு. அதில் உண்மை இல்லாமலில்லை. எனது சொந்த அனுபவங்கள் அதை உறுதி செய்திருக்கின்றன. காலனி ஆதிக்கத்தில் முன்னூறு நானூறு ஆண்டுகள் ஊறி வெள்ளையர்கள் அல்லாதவர்களின் மூளையைக் குறைத்தே மதிப்பிட்டு வந்தவர்கள் அவர்கள். எனவே இதுபோன்ற கருதுகோள்களிலிருந்து விடுபடமுடியாமல் இருப்பதில் அவர்களுக்குள்ள சங்கடங்கள் புரிகின்றன.
நாம் தமிழரின் பெருமையை பேசுவதில்லையா? தமிழன் அடையாளத்திற்கு சங்க கால அடையாளத்தை மட்டுமே நம்பி இருப்பதிலிருந்து என்ன தெரிகிறது? காதலும் வீரமும் தமிழனுக்கே சொந்தமென்று நாம் சொல்வதில்லையா? ஏதோ உலகில் வேரெவரும் ஆயுதத்தை எடுக்காததுபோலவும், இனவிருத்தியை பெருக்கிக்கொள்ளாததுபோலவும்…
என் பிள்ளை கால் பரிட்சையில் பாஸ் செய்தான், அரை பரிட்சையில் நூற்றுக்கு 95 மார்க் வாங்கினான் எல்லாம் சரி.. ஆனால் முழுபரிட்சையில் நாம் தேறவில்லை என்கிறபோது யோசிக்க வேண்டியிருக்கிறது.
வரலாறென்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுவது. இறுதி வெற்றியை தங்கள் இனத்திற்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் சாதுர்யத்தில் தேர்ந்தவர்கள் மேற்கத்தியர்கள். அவர்கள் பேசுவது குறைவு. செயல்திறன் அதிகம். எனவே முடிவு அவர்களுக்குச் சாதகமாக இருந்தது இருக்கிறது. எனவே மேற்கத்தியர்களிடமுள்ள கர்வத்தை புரிந்துகொள்கிறேன்.
ரோமில் இருக்கிறபொழுது ரோமானியர்கள்போல நடந்துகொள் என்ற பழமொழியுண்டு, தமிழிலும் ஊருடன் ஒத்து வாழ் எனச் சொல்வதுபோல. எனவே நீங்கள் பிரான்சுக்குள் வந்தால் பிரெஞ்சு கலாசாரத்தை ஓரளவு புரிந்துகொண்டு நடக்கவேண்டுமென பிரெஞ்சுக் காரர்கள் எதிர்பார்க்கிறார்கள். பொது இடத்தில் காறி உமிழ்வது, சாப்பிடும்போது தொண்டையைச் செருமுவது, பல் துலக்கும்போது ஆ-ஊ வென்று ஊளையிடுவது பிரெஞ்சுக்காரர்களுக்கு பிடிக்காதவிஷயம். கண்டிப்பாக பிரான்சுக்குள் வருகிறபோது bonjour, merci போன்ற சொற்களையும் சில அடிப்படை சொற்களையும் பிரெஞ்சில் தெரிந்துகொண்டு வருவது நல்லது. பிரான்சில் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள், தெரிந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளமாட்டார்கள். வெளிநாடுகளில் தேவையெனில் உபயோகிக்கிறவர்கள் தங்கள் நாட்டில் (பிரான்சில்) கூடுமானவரை தவிர்ப்பார்கள். ஆங்கிலம் உலகமொழியாக இருக்கலாம் ஆனால் ஆங்கிலம் மட்டுமே உலகமொழி அல்ல என்பதும் உங்களுக்குத் தெரியும், ஆக பிரெஞ்சுக்காரர்கள் இந்த உண்மையை வெளிநாட்டவரிடம் உணர்த்த விரும்புபவர்கள். ஆங்கிலத்தைவிட்டால் வேறு நாதியில்லை என்றால் Bonjour Monsieur, parlez-vous anglais? என முதல் வாக்கியத்தையாவது குறைந்த பட்சம் பிரெஞ்சில் உபயோகித்தால்தான் ஆங்கிலம் தெரிந்த பிரெஞ்சுக்காரர் உங்களிடம் வாய் திறப்பார்.
பிரெஞ்சுக்காரர்களை பொறுத்தவரை தங்கள் மொழி மட்டுமல்ல, தங்கள் கலை, தங்கள் படைப்பு, தங்கள் உணவுமுறை உயர்ந்தவையென்ற கர்வம் அதிகம். உலகில் எல்லா நாட்டு உணவகங்களும் பிரான்சில் இருக்கின்றன. எனினும் பிரெஞ்சுக் காரர்கள் தங்கள் பாரம்பரிய உணவுமுறை, அவற்றின் செய்முறை குறித்த ஞானம், அவற்றை பறிமாறும் கலை, சுவை அறியும் திறனென்று பல நுட்பங்களையும் இன்றளவும் போற்றி பாதுகாத்துவருபவர்கள். ஒரு பிரெஞ்சுக்காரனுக்கு உணவும் ஒரு கலை, பண்பாட்டின் விழுமியம். அவர்களுக்குச் சமையற்கலை வெறும் வார்த்தை அல்ல சுவைத்துண்ணும் அழகியல் அனுபவம்.
——-