Tag Archives: விவரணை நுட்பம்

எழுத்தாளன் முகவரி -5: ‘அங்கே இருப்பது’

கிராம் மாஸ்ட்டன்(Graham Masterton) திகில் கதை மன்னன். நாஞ்சில் பி.டி சாமி, மேதாவி ஆகியோர் தமிழில் பேய்க்கதை எழுதிக் குவித்த காலமொன்றுண்டு. இப்போதும் அப்படியொரு பரம்பரை தமிழில் தொடர்கிறதாவென்று தெரியவில்லை. ஆனால் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் பிற ஐரோப்பிய மொழிகளிலும் அவை நடக்கின்றன. இத்துறையில் ஆங்கிலமே இன்றளவும் முன்னணியில் இருக்கிறது.

இளமைக்காலத்தில் குற்ற புனைவுகளையும், திகில் புனைவுகளையும் விரும்பி படித்திருக்கிறேன். அவ்வகையான திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். இவ்வகை எழுத்துகள், திரைப்படங்களைப் பேசுகிறபோது வெகுசன ரசனைக்குரியவை என்பதுபோன்ற கருத்தியங்கள் நிரந்தரமாக உள்ளன அதில் உண்மை இல்லாமலில்லை.

மனிதன் ஒரு பழகிய விலங்கு. மூர்க்கமும், மெலியாரைத் தாக்கும் குணமும் நம்மிடம் நிரந்தரமாக இருக்கின்றன. அவற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பவை கல்வி அறிவும், சமூகச் சூழலும்.  மூர்க்கத்தோடு இணைந்த செய்திகளிலும், வன்முறையைத் தர்கிக்கும் வாழ்வியல் சம்பவங்களிலும் நமக்குள்ள ஆர்வத்திற்கு, நம்முடைய இயற்கை குணத்துடன் அவற்றுக்குள்ள ஒட்டும் உறவுமே காரணங்கள்.

இணையதளங்கள் கிராம் மாஸ்ட்டனை சிறுகதைகள், வரலாற்று புனைவுகள், பாலியல்கட்டுரைகள், கதைகளென எழுதிக்குவித்து படைப்பின் எல்லா கூறுகளையும் தெரிந்துவைத்திருப்பவர் என்கின்றன. அவர் இலக்கியவாதியா இல்லையா என்ற விவாதத்தை ஒதுக்கிவிட்டு, வெற்றிகரமான ஊரறிந்த உலகறிந்த எழுத்தாளரென்பதை மறுக்காமல் ஏற்கவேண்டும். அவரது நாவலை அடிப்படையாகக்கொண்டதொரு திரைப்படத்தைப் பார்த்திருக்கிறேன், மற்றபடி அவரது நாவலெதையும் வாசித்ததில்லை. ஆயினும் வெற்றிகரமான எழுத்தாளனாவதற்கு அவர் முன்வைத்த  ‘Being there’ முத்திரை சொல் மிகவும் அந்தரங்கமாக என்னுடன் பழகிவந்திருக்கிறது.

“விவரணை நுட்பம் குறித்த ஞானமென்று ஏதேனும் என்னிடம் இருக்குமெனில் அது ‘Being there’ ஆகத்தான் இருக்க முடியும்”, என்கிறார் கிராம் மாஸ்ட்டன். தொடர்ந்து, “நாவலெழுதுவதற்கு தட்டச்சுமுன் எப்பொழுது உட்கார்ந்தாலும் மனக்கண்ணில் தட்டச்சு, மறைந்து கானல் நீர் நிரம்பும், அதில் நிலமும், நீரும், ஓசையும், வாசனையும் மக்களும் தோற்றம் பெறுவார்கள். கற்பனை உலகில் உலாவரத் தொடங்குவேன்,  கற்பனைத் தெருக்களில் எச்சரிக்கையுடன் காலெடுத்து வைப்பேன், எதிர்ப்படும் அசலான மனிதர்களுடன் உரையாடுவதைப்போலவே எனது கற்பனை பாத்திரங்களுடனும் உரையாடச் செய்வேன்.

‘எழுதுவது’ என்பதை வாக்கியம், இலக்கணம்  சொற்கள் ஆகியவற்றில் கவனமாக இருப்பதென்ற முறையில் பார்க்காது சாதாரணமாக எதைப்பார்க்கிறேனோ, காதில் எது விழுகிறதோ, காற்றில் என்ன மணக்கிறதோ, என்னை எதுத் தொடுகிறதோ அதை எழுதுகிறேன். அதனால்தான் எனது புதினங்களில் அதிகமாக உரையாடல்களைப் பார்க்கிறீர்கள்” -என்கிறார். தொடர்ந்து, ஓவியம் அல்லது புகைப்படம் ஒரு நாவலை எழுதி முடிப்பதற்கான உத்வேகத்தை எனக்குத் தருகிறது எனும் கிராம் மாஸ்ட்டன், H.A.W Tabor என்ற அமெரிக்கரின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு Silver என்ற சரித்திர நாவலை எழுதிமுடிக்க, அந்த அமெரிக்கர் மனைவியின் புகைப்படத்தை காணநேர்ந்ததே மூல காரணமென்கிறார். புகைப்படத்தில் பெண்மணி உடுத்தியிருந்த ஆடையும், அம்முகத்திலிருந்த சோகமும், கருமையான கண்களும் நாவலை எழுத அவருக்கு உதவிற்றாம்.

“விருத்தா ஒரு அற்புதமான கலைஞன் என்று எனக்குத் தோன்றச் செய்தது. அந்தப் புகைப்படம் ஒன்றைப் பார்த்ததும்தான், வில் வண்டிக்குள் ஒரு பெண் உட்கார்ந்திருக்கிறது போன்ற அற்புதமான படம். பாதையோ, முன்புறம் பூட்டியிருக்கிற காளைகளோ, வண்டிக்காரனோ, விழுந்து தொலைவுக்கு இட்டுச் செல்கிற தெருவோ எதுவும் தெரியவில்லை. வில்வண்டி உட்பகுதியின் வளைந்த பிரம்பு வரிசைகள் கொஞ்சம் தெரிகிறது. அந்தப் பெண் வண்டிக்குள் இருக்கிறாள். இவ்வளவுதான். இதை அவன் எடுத்திருந்த விதத்தில் ஏதோ ஓர் மாயமிருந்தது. அந்த வண்டி நகர்வது தெரிந்தது. பாதையில் இருக்கிற சிறிய நொடியொன்றில் கடக் என்று சக்கரம் இறங்கி ஏறுகையில் வண்டியின் விட்டத்திலிருந்து தொங்குகிற கைபிடிக் குஞ்சலம் ஆடி மோதுவது தெரிகிறது. அந்தப் பெண், பார்க்கிற ஒவ்வொருவரிடமிருந்து விடைபெற்றுத் தவித்துக் கொண்டு செல்வது தெரிந்தது. தனிமையின் அடர்வுக்குள் இருந்தும், அவள் நம்பிக்கையுடன் இந்த வாழ்க்கையை நேசிக்கிறதே உகந்தது எனத் தீர்மானித்துக் கொண்டுவிட்ட பாவனை தெரிந்தது. இளகிப் பரவிக் கொண்டிருக்கிற பார்வையில் வண்டியிலிருந்து அப்படியே அவளைக் காப்பாற்றி அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டுவிடச் சொல்லும் ஒரு அபூர்வமிருந்தது. எப்படியெல்லாமோ கிளர்ச்சியூட்டிக் கடைசியில் அணைத்துக்கொள்ள வேண்டும் எனக்குப் பட்டதை வெளிக்காட்ட முடியாத ஒரு தனித்த பரவசத்தில் நான் அமைதியாக இருந்தேன்.”

வண்ணதாசனுடைய  ‘போய்க்கொண்டிருப்பவள்’ என்ற சிறுகதையையில் வரும் விவரணை இது. கிராம் மாஸ்ட்டனுடைய முத்திரை சொல்லான ‘அங்கே இருப்பது'(Being there) என்ற அனுபவமின்றி வண்ணதாசனுக்கு இவ்விவரணைச் சாத்தியமில்லை. விருத்தாவின் புகைப்படத்தை வர்ணிக்கும் கதை சொல்லியின் மனநிலையை அவதானியுங்கள்.

கிராம் மாஸ்ட்டன் நாவலொன்றை தொடங்குகிறபோது, எழுதும் காட்சியில் தமதிருப்பை நிறுத்திக்கொள்ளும் போக்கும், ஒரு நாவலுக்கு புகைப்படமோ அல்லது  ஓவியமோ தூண்டுகோலாக அமையுமுடியுமென்ற அவரது வாக்கியங்களையும் படிக்கிறபோது வண்ணதாசன், வண்ண நிலவன் போன்றவர்களின் எழுத்துக்கள் பிரத்தியேகமாக நம்மை வசீகரிப்பதற்கான காரணங்களை விளங்கிக் கொள்கிறோம்.

ஒரு காட்சியைத் விவரிக்கும் முன்பாக, அக்காட்சிக்கு முன்னால் நம்மையும் நிறுத்திக்கொள்வது அவசியமாகிறது. இடம்பெறும் பொருளும், தளவாடங்களும், மனிதர்களும், விலங்குகளும், அசைவும் வாசமும், உரையாடலும், உபயோகிப்படும் ஒவ்வொரு சொல்லும், பார்வையும் தீண்டலும் நம்மோடு நிகழ்த்தப்படுகிறது என்ற உணர்வு அவசியம்.  கதைநிகழ்வில் உங்கள் இருப்பு உறுதிசெய்யப்படாதவரை உருப்படியான கதை சொல்லலுக்கு சாத்தியமில்லை.

நமதிருப்பை கதைசொல்லலில் உறுதிசெய்வதில்  வேறுபல நன்மைகளும் இருக்கின்றன: கதைசொல்லல் எளிமையாக நிகழ்கிறது. முடிச்சுகள் சிக்கல்கள் விழுவதில்லை. ஒரு காட்சியை நேரில் கண்டவர் விவரிப்பதற்கும், பிறர் சொல்ல கேட்டேன் எனச்சொல்பவருக்குமுள்ள பேதங்களை கவனித்திருக்கிறீர்களா? முன்னவர் தங்குதடையின்றி சரளமாக விவரிக்கத் தொடங்குவார். பின்னவர் எதை எங்கே தொடங்குவதென்று குழம்பலாம், கோர்வையாகச் சொல்லவராமல் தடுமாறலாம். இதை நாம் வாசிக்கிற நாவல்களிலும் சிறுகதைகளிலும் அறியவரலாம். எழுத்தில் எளிமையும், பாசாங்கற்ற வெளிப்படையும் வேண்டுமெனில் நாவல் சொல்லப்படும் தளங்களுக்குள் எழுத்தாளன்இருப்பு கட்டாயமாகிறது: மனிதனாக விலங்காக; பெண்ணாக, ஆணாக; தாவரமாக, எந்திரமாக, காற்றாக, தூசாக மொத்தத்தில் எல்லாமுமாக கூடுவிட்டு கூடுபாய்தல் அவசியம், தேவை, கட்டாயம்.

———————————–