Tag Archives: மொழிபெயர்ப்பு

கடல் கொண்ட மனிதர்கள் : சூறாவளி(குறுநாவல்) [ஆசிரியர் லெ கிளேஸியோ, பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு சு. ஆ வெங்கட சுப்புராய நாயகர்]

1காலச்சுவடு வெளியீட்டில்,  தமிழ் வாசகர்வெளியில் பரவலாக அறியப்பட்ட  பேராசிரியர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகரின் மொழிபெயர்ப்பில் வந்துள இரு குறுநாவல்களின் தொகுப்பு சூறாவளி.  மொழிபெயர்ப்பாளர் மட்டுமல்ல நூலின் மூல ஆசிரியர் லெ கிளேஸியோவும் தமிழுக்குப் புதியவரல்ல. பிரெஞ்சுமொழியின் முதன்மை எழுத்தாளர், நோபெல் பரிசினை அண்மைக்காலத்தில் வென்றவர் என்பதால் உலகின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரென்ற அடையாளத்தையும் பெற்றிருக்கிறார்.  இச்சூழலில், இலக்கிய உலகின் எதிர்பார்ப்பென்ன ? தம்முடைய வாசகர்கள் யார் ? போன்ற கேள்விகளுக்கும் முன்னுரிமைக் கொடுக்கவேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு. லெ கிளேஸியோ போன்ற எழுத்தாளர்களின் நோக்கம் கதை சொல்வதல்ல, இலக்கியத்தை படைப்பது. எனவேதான் லெ கிளேஸியோவின் இக்குறுநாவல்கள் இரண்டுமே சொல்லப்படும் கதையின் சுவைக்காக அன்றி, இலக்கியசுவை கருதி வாசிக்கப்படவேண்டியவை.  நூலாசிரியர் வார்த்தைகளைக்கொண்டு நடத்திக்காட்டும் அணிவகுப்பு(பசுமை நிறத்தில் பிளாஸ்டிக் திரைசீலையுடன் ஒரு மஞ்சள் நிற வீடு ; ஒரு வேலி ; வெள்ளை நிறத்தில் கதவு ; அங்கே ஒரு நிழற்சாலை. வேலியில் ஒரு ஓட்டை, தெருப்பூனைகள் திரியும் இடமாகத்தான் இருக்கவேண்டும்.  அந்த வழியாகத்தான் நான் நுழைவேன்.(பக்கம் 178) ») நம்மைப் பிரம்மிக்க வைக்கிறது. மனித மனங்களின் சலசலப்புகள் அவ்வளவையும் சொற்களில் வடிப்பதற்கு, அசாத்திய மொழித்திறன் வேண்டும். மனிதர்களைக் கடலின் துணையுடன் இயக்குவதும், குறுநாவல் வடிவங்களில் நூலாசிரிரியருக்குள்ள ஈடுபாடும், ஹெமிங்வேயிடம் இவருக்குள்ள இலக்கிய பந்தத்தை உறுதிப்படுத்துகின்றன.

ksp517லெ கிளேஸியோ பிரான்சுநாட்டைச்  சேர்ந்த குடிமகன் மட்டுமல்ல, மொரீஷியஸ் குடிமகனுங்கூட, இதற்கும்மேலாக ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற தமிழ்க் கூற்றின் வழிநிற்கும் தேசாந்திரி, கடலோடி, கடல் மனிதன். சூறாவளி என்ற சொல்லை உச்சரிக்கிறபோது,  கடல் என்ற சொல்லும் இணைந்து ஒலிப்பது இயற்கை. கடலின் பரிமாணம், ஆர்ப்பரிப்பு, அமைதி, ஆழ்கடல், நீரின் மேற்பரப்பு, கடற்காற்று, மீன் பிடிக்கும் பெண்கள், அவர்கள் மூழ்கும் விதம், மூழ்கியவர்கள் நீரின் மேற்பரப்பிற்கு வருகிறபோது எழுப்பும் ஓசை,  கடற்பாசிகள், கிளிஞ்சல்கள், நத்தைகள், பவழங்கள் ஆகிய வார்த்தைகள் கதைமாந்தர்களாக நீந்துவதையும் கரையொதுங்குவதையும் நூலெங்கும் காணமுடிகிறது. « கடல், உலகத்திலுள்ள எல்லாவற்றையும் விட நான் அதிகம் விரும்புவது இதைத்தான். இளம் வயதிலிருந்தே பெரும்பானமையான நேரத்தை கடலோடுதான் கழித்திருக்கிறேன்(பக்கம் -26) » « கடல் என்பது முழுக்க முழுக்க புதிர்களால் நிறைந்தது. ஆனால் அதெனக்கு அச்சத்தை உண்டாக்கவில்லை. அவ்வப்பொழுது யாராவது ஒருவரைக் கடல் விழுங்கிவிடும். ஒரு மீனவப்பெண்ணையோ, மீன் பிடிப்பவரையோ, அல்லது தட்டைப்பாறையில் கவனக் குறைவாக நின்றிருக்கும் சுற்றுலா பயணியையோ பேரலை இழுத்துக்கொள்ளும். பெரும்பாலான நேரத்தில் உடலைக் கடல் திருப்பிக்கொடுப்பதில்லை(பக்கம் 32)  »,  தொடர்ந்து « அவர்கள் பேசுவது கடவுள் மொழி அது நம் மொழிபோல இருக்காது. அதில் கடலுக்கு அடியில் கேட்கும் சப்தங்கள் நீர்க்குமிழிகளின் முணுமுணுப்புகள்(பக்கம்32) »  என ஜூன் கூறும் வார்த்தைகள், கடல் மீது ஆசிரியருக்குள்ள தீராக் காதலை வெளிப்படுத்தும் சொற்கள்.

இரண்டு குறுநாவல்கள் : ஒன்று நூலின் பெயராகவுள்ள « சூறாவளி », மற்றது « அடையாளத்தைத் தேடி அலையும்பெண் ».  இரண்டு குறுநாவல்களும் கடல்தான் அடித்தளம். இருவேறு கண்டங்களை, இருவேறு தேசங்களைக் கதைக்களனாகப் பயன்படுத்திக்கொண்டு நூலாசிரியரை பிரபஞ்ச படைப்பாளரென்று முன்நிறுத்துபவை.  முறையாகப் பிறந்திராத பெண்களின் கதைகள்.  ‘சூறாவளி’க் கதை தென் கொரியாவைச்சேர்ந்த தீவிலும், ‘அடையாளத்தைத் தேடி அலையும் பெண்’ ஆப்ரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த கானா நாட்டில் ஆரம்பித்து ஐரோப்பிய கண்டத்திலிருக்கும் பிரான்சு நாட்டிற்குத் தாவும் கதை. இரண்டிலுமே கடந்த கால நினைவுகளைக் கிளறி அத்தணலில் வேகின்ற மனிதர்கள், வாழ்க்கைத் தந்த மன உளைச்சலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறவர்கள்.

அ. சூறாவளி

ஏற்கனவே கூறியதுபோல நூலின் முதல் குறு நாவல். கதையில் இரண்டு கதை சொல்லிகள். முதல் கதைசொல்லி போர்முனைகளில் பணியாற்றிய பத்திரிகையாளர், பின்னர் எழுத்தாளர் ஆனபின் கடந்த காலத்தில் பணியாற்றிய தீவுக்கு 30 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிவருகிறார், பெயர் பிலிப் கியோ. ஏன் திரும்பிவருகிறார் ? « எதற்காக நான் திரும்பிவந்தேன் ? எழுத வேண்டும் எனும் வேட்கையிலுள்ள எழுத்தாளர் ஒருவர்க்கு வேறு இடங்கள் இல்லையா ? மனிதச் சந்தடிக்கப்பால், அதிகச் சப்தமில்லாமல் , ஆரவாரம் குறைந்த இடமாக, சுவருக்கு அருகில், அலுவல் மேசையின் முன் உட்கார்ந்து, தன் எழுத்துக்களைத் தட்டச்சு செய்ய வேறு புகலிடம் இல்லையா ? (பக்கம் 13)» எனத் தனக்குத்தானே சிலகேள்விகளையும் கேட்டு அவற்றிர்க்குப் பதிலிறுப்பதுபோல « இத்தகைய தீவை, உலகின் ஒரு பகுதியை, எவ்வித வரலாறும், நினைவுமில்லாத இந்த இடத்தை, கடலால் தாக்கப்பட்டு, சுற்றுலாபயணிகளின் அலைகழிப்புக்குள்ளான இப்பாறையை மீண்டும் கானவேண்டுமென்று விரும்பினேன்.(பக்கம்13) »   என நமக்கெழும் சந்தேகத்தை ஆசிரியர் நீக்கியபோதிலும் அவர் திரும்பவருவதற்கென்றிருந்த உண்மையான காரணம் வேறென்பதை அடுத்துவரும் பக்கங்களில் அவர் மனத்துடன் பயணிக்கும் நமக்குத் தெரிய வருகிறது அவற்றிலொன்று  கடலில்  திடுமென்று விரும்பியே இறங்கி உயிர்விட்ட அவருடைய முன்னாள் காதலிபற்றிய வாட்டும் நினைவுகள்.

ஒவ்வொரு மனிதர் வாழ்க்கையிலும்ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு இடங்களும் மனிதர்களும் குறுக்கிடுகிறார்கள். எல்லா இடங்களையும், மனிதர் அனைவரையும் நாம் நினைவிற்கொள்வதில்லை. ஆனாலும்  சில இடங்களைப்போலவே சில மனிதர்களும் நம்மில் பதிந்துவிடுகிறார்கள், நம்மோடு கலந்து விடுகிறார்கள், அதுபோலத்தான் அவர்களோடு இணைந்த சம்பவங்களும் : நமது நிலை மாறும்போதும் வடிய மறுத்து, நம்மோடு தேங்கிவிடுபவை, கொசுமொய்ப்பவை;  அவற்றின் ஆழ்பரப்புக் கசடுகள்,  நமது வாழ்க்கை இழை அறுபடும்போதெல்லாம், கலைக்கப்பட்டு, மேற்பரப்பிற்கு வருகின்றன. ஆனால் இக்கடந்த தருணங்களின் மறுபிறப்பிற்குக் காரணம் வேண்டும். குப்பையை எறிந்த இடத்தைத் நாம் தேடிவருவதில்லை, ஆனால் குன்றிமணி அளவுடயதென்கிறபோதும், தொலைத்தது தங்கமெனில் திரும்பவருவோம், தேடிப்பார்ப்போம். குற்ற உணர்வும் தொலைத்த தங்கத்திற்குச் சமம். உயிர் வாழ்க்கைக் கோட்பாடு நியாயத்தின் பேரால் கட்டமைக்கபட்டதல்ல. ‘என்னுடைய வயிறு’ , ‘என்னுடைய  உடமை’, ‘எனது மகிழ்ச்சி’யென்று அனைத்தும் ‘எனது’ மீது கட்டமைக்கபட்டவை. இந்த ‘எனதை’ மறக்கிறபோது,(அந்த ‘எனது’வின் நலனுக்காகவேகூட அதிருக்கலாம்) தவறைத் திருத்திக்கொள்ளும் முயற்சியில் ஆரம்பக் கட்டமாக குற்ற உணர்வு, உறுத்துகிறது. அது ஊழ்வினையாகாது.  நமது முதல் கதைசொல்லியான எழுத்தாளரும் அப்படியொரு குற்ற உணர்வில் தவிப்பவர் : « கதவருகே அசையாமல் எதுவும் நேராமல் அதைப் பார்த்துக்கொண்டிருந்த நான் ; என் கொலைகார கண்கள் ;  இந்த பிம்பங்களின் காரணமாகத்தான் நான் இருக்கிறேன்…….இவற்றை எது வைத்துள்ளது என்பதைத் தேட ; அதாவது நிரந்தரமாக உள்ளே போட்டுப் பூட்டி வைத்துள்ள கறுப்புப் பெட்டியை கண்டுபிடிப்பதற்காகத்தான் நான் இங்குவந்திருக்கிறேன். பிம்பங்களை அழிப்பதற்காக  அல்ல..(பக்கம் 52)

சூறாவளி குறுநாவலின் இரண்டாவது கதை சொல்லி ஒரு பதின்வயதுப்பெண். தனக்காக மீனவர் வாழ்க்கையை எற்றுக்கொண்ட  தாயுடன் தீவில் வசிப்பவள். அவள் கடந்தகால வாழ்க்கையின் அவலங்களை மறந்து, அவ்வாழ்க்கையை அறிந்த மனிதர்களிடமிருந்து விலகி, வெகுதூரத்தில் இருக்கவேண்டி,  மகளுடன் வயிற்றுப்பாட்டுக்கு நத்தைகளையும் கிளிஞ்சல்களையும் கடலில் மூழ்கி சேகரிக்கும் ஆபத்தான தொழில் செய்பவள். பெண்ணின் வயது 13 என்றாலும்,  கேட்பவர்களிடத்தில் தனது வயதைக் கூட்டிச்சொல்லி  தன்னைச் சிறுமியாக ஒருவரும் கருதிவிடக்கூடாதென்பதில் கவனாமக இருப்பவள், பெயர் ஜூன்.   இந்த இருவருக்குமிடையே விளையாட்டைப்போல உருவான நட்பு அதன் போக்கு, அதனூடாக எழும் சிக்கல்கள், இப்புதிய உறவில் இருவேறு வயதுகளில் எழும் குழப்பங்கள், தடுமாற்றங்கள் ஆகியவற்றை கதைமாந்தரின் வயது, அறிவு, அனுபவம் கொண்டு உளவியல் பார்வையில் கதையை நகர்த்துகிறார். பிலிப் கியோ தனது பத்திரிகையாளர் தொழிலின்போது ராணுவ வீரர்களின் வன்புணர்ச்சிக்குச் சாட்சியாக இருந்தவர். « அவன் சாட்சி மட்டுமல்ல, அதில் பங்குவகித்தவர்களில் ஒருவன் (பக்கம் 65) » என்ற எழுத்தாளரின் குற்ற உனர்வுதான்  இக்கதைக்கான அடித்தளம்.

. அடையாளத்தை த் தேடி அலையும் பெண்.

இங்கே கதை சொல்லியாக நாம் சந்திப்பது ரஷேல் என்ற இளம் பெண். தக்கோரதி கடற்கரையில்வைத்து தன் கதையைச் சொல்லத் தொடங்குகிறாள்.  « எட்டுவயதாகியபோது எனக்கு அம்மா இல்லையென தெரிந்துகொண்டேன். » என்கிறாள். ‘சூறாவளியில்’ஜூன் அப்பா இல்லாத பெண். இக்கதையில் ரஷேல் தாயில்லாப் பெண். சிறுமியிலிருந்து அவள் வளர்ந்து பெரியவளாவதுவரை கதை நீள்கிறது. அவள் வயதுடன்  சக பயணியாகக் கதையுடன் பயணிக்கிறோம்.  அவள் ஆப்ரிக்காவில் பது குடும்பத்தில் பிறக்கிறாள். தந்தை பதுவுடனும் சிற்றன்னை மதாம் பதுவுடனும்  வசிக்கிறாள், மூன்றாவதாக அந்த வீட்டில் அவளுடைய  மிகப்பெரிய பந்தமாக இருப்பது, அவளுடைய சிற்றன்னை மகளும் தங்கையுமான பிபி.  இக்கதையிலும் வன்புணர்ச்சி இடம்பெறுகிறது.  பொதுவாக கிளேஸியோ கதைகளில்  தாயையோ, தந்தையையோ அல்லது இருவரையுமே அறியாத அநாதை சிறுவர் சிறுமியர் கதைமாந்தர்களாக இடம்பெறுவதைக் காணலாம். இக்கதைகளும் அவற்றிர்க்கு விதிவிலக்கல்ல. அவளைப் பெற்றவுடனேயே தாய், தான் விருப்பிப் பெற்றவளல்ல என்பதால் குழந்தையை அநாதையாக்கிவிட்டு,  சொந்த நாட்டிற்குத் திரும்பி, புதிதாய் ஒரு குடும்பம் பிள்ளைகள் எனவாழ்கின்றவள். திருவாளர் பதுவின் குடும்பம் சண்டைச்  சச்சரவுகளில் காலம் தள்ளும் குடும்பம். சிற்றன்னைகள் அனைவருமே மூத்த தாரத்தின் அல்லது கணவனின் வேற்றுப்பெண்ணுடனான உறவில் பிறந்த பிள்ளைகளை வெறுப்பவர்கள் என்ற இலக்கணத்திற்குரிய மதாம் பது, ஒரு நாள் கணவனுடன் போடும் சண்டையில்போது, தன்னைப்பற்றிய உண்மையைக் கதைநாயகி ரஷேல் அறியவருகிறாள்.  ரஷேலுக்கு உண்மையில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள பெயரோ, உரிய அத்தாட்சி பத்திரங்களோ இல்லை. ஆனால் பிரச்சினை, பது குடும்பம் பணக்கார அந்தஸ்தில் இருக்கும் வரை எழுவதில்லை. ஆனால் எல்லாவற்றையும் இழந்து தெருவில் நிற்கும் போது, நாட்டில் யுத்த மேகமும் சூழ்கிறபோது எழுகிறது. பெரும்பாலான ஆப்ரிக்கர்களைப்போலவே அவர்கள் மேற்குலக நாடுகளை நோக்கி பயணிக்கிறார்கள்.

குறுநாவலின் இரண்டாவது பகுதி பாரீஸில் தொடருகிறது. பெரு நகரங்களின் வாழ்க்கைக் கவனத்தை வேண்டுவது, தவறினால் படுபாதாளத்தில் விழவேண்டியிருக்கும். மது, போதை மருந்துகள் ஆகியவை எளிதில் கிடைக்க அதற்குரிய வாழ்க்கையில் சகோதரிகள் தள்ளப்படுகிறார்கள். கணவர் ‘பது’வை விட்டுப்பிரிந்து வேறொருவடன் வாழ்ந்தாலும் தனது மகளை அரவணைக்க மதாம் பது இருக்கிறாள்.  ஆனால் அநாதையான ரஷேலுக்கு அத்தகைய அரவணைப்புக் கிடைப்பதில்லை. சகோதரி பிபியின் தயவினால் அந்த அரவணைப்பு திரும்ப அவளைத் தேடிவருகிற போது, விலகிப்போகிறாள். உண்மையில், அவளுடைய அடையாளத் தேடலில் கைவசமிருந்த அடையாளங்களையும் இழக்கிறாள்.  அவளுடைய இழப்புப் பட்டியல் சகோதரி பிபி, தந்தை, சிற்றன்னை எனத் தொடருகிறது.  புகலிட அரசாங்கமும் ஏற்றுக்கொள்ள மறுக்கவே, திரும்ப பிறந்த மண்ணிற்கு நூலசிரியர் அவளை அனுப்பி வைக்கிறார்.

இந்நெடிய பயணத்தில்,கதைசொல்லியான பெண்ணின் ஊடாக பலமனிதர்களைச் சந்திக்கிறோம். அடையாளம் தேடும் பெண் என்பதால்  காவல்துறை மனிதர்களும் அவள் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார்கள். புகலிடம் தேடும்அந்நிய மக்கள்,  அண்மைக்காலங்களில் மேற்குநாடுகளில் எவ்வாறெல்லாம் நடத்தப்படுகிறார்கள்   என்பதற்குச் சின்ன உதாரணம் :  « அப்புறம் நான் எங்கு சென்றாலும் எடுத்துச் செல்லும் ஒரே புத்தகம் ‘ப்ராபெட்’  எனும் கலீல் ஜிப்ரான் எழுதிய புத்தகம். …..ஒரு முறை போலீஸ் என்னைச் சோதனையிட்து ; என்னிடம் அந்தப் புத்தகத்தைப் பார்த்துவிட்டு காவல்துறை பெண்மணி , ‘நீ என்ன முஸ்லீமா’ எனக்கேட்டாள்(பக்கம் 182) »  எனும் வரிகள்.

« நான் பிறந்த போது இங்கும் சரி , கடற்கரையிலும் சரி எதையும் பார்த்த தில்லை. கைவிடப்படப்பட்ட ஒரு சிறிய மிருகம்போல வாழ்ந்திருக்கிறேன். »என்ற ரஷேலுடையது வரிகள், பிறந்த மண்ணுக்குத் திரும்பியபின்னரும் அவளைத் துரத்துகின்றன, அவளை மட்டுமல்ல  புலம்பெயர்ந்த மனிதர் அனைவரையும் துரத்தும் வரிகள்.

நன்றி : திண்ணை

 


சூறாவளி  மொழிபெயர்ப்பு குறு நாவல்கள்

பிரெஞ்சுமொழியிலிருந்து தமிழ்

சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்

காலச்சுவடு பதிப்பகம்  வெளியீடு

நாகர்கோவில், தமிழ்நாடு

 

—————————————————————————————-

 

ஒரு மொழி பெயர்ப்பு சிக்கல்

_l-ecrivain-chinois-feng-tang-

புது தில்லியில் அண்மையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக அண்டை வீட்டுக்காரரான சீனாவை இந்தியா அழைத்திருந்தது. சீனாவுக்கும் இந்தியாவுக்குமுள்ள ஏழாம் பொருத்தம் தெரிந்ததுதான். வீட்டிற்கு அழைத்து விருந்தே போட்டாலும் கை கழுவிகிறபோது விருந்து விஷமாகிப் போவது இன்று நேற்றல்ல நேரு காலத்திலிருந்து தொடரும் உண்மை. சீன அதிபர் Xin Jinping இந்தியா வந்திருந்தபோது , இந்திய அரசு இந்த அழைப்பை விடுத்திருக்கிறது. ஏற்றுக்கொண்ட சீனாவும் 8 எழுத்தாளர்கள் 81 பதிப்பகங்கள் என கலந்துகொள்ள விழாவும் களைகட்டியிருக்கிறது. யார் கண் பட் டதோ   இருதரப்பும் கசப்புடன் பிரியும்படி ஒரு சம்பவம்.

தாகூரின் Stray Birds (திசையற்ற   பறவைகள்) கவிதை சீனமொழியில் வந்திருக்கிறது. மொழி பெயர்ப்பாளர் சீனமொழியில் பிரபல வெகுசன எழுத்தாளரும்,   மொழிபெயர்ப்பாளருமாக சமீபக் கால த்தில் புகழடைந்துள்ள Feng Tang என்ற இளைஞர்.

அக்கவிதையில்

“காதலனுக்காக உலகு, தனது பெருவெளி முகமூடியைக் களைகிறது” –

(The World puts off its mask of vastness to its lover) என்று ஒரு வரி வருகிறது

இதனை சீனமொழியில்  மொழிபெயர்த்தவர் அதாவது Feng Tang:

“உலகம் ,   காதலனுக்காக,  தனது பெருவெளியை மறைத்திருந்த உள்ளாடையைக்   களைகிறது”

என்று தந்திருக்கிறார். அதாவது

Le monde, pour son amant, retire son masque d’immensité ”

என்றிருக்க வேண்டியதை

“ Le monde, pour son amant, retire les sous-vêtements recouvrant son immensité. ”

என பிரான்சு நாட்டின் தினசரி ‘ Le Monde’ சொல்கிறது.

 

இத்தவறை சீன வாசகர் ஒருவர் கண்டறிந்த ஏதோ ஒரு தினசரிக்கு எழுத ( கடந்த டிசம்பர் மாதம் ) ஒரு சில சீன இதழ்களும் இதனைப்பண்பாட்டு பயங்கரவாதம்என வர்ணித்ததோடு , மொழிபெயர்ப்பாளரை வக்கிரமான ஆசாமியென கண்டிக்கவும் செய்தன.

அதேவேளை மொழிபெயர்ப்பாளர்  தான் மொழிபெயர்த்த து சரியே என வாதிப்பதாகவும்,  அபருக்கு ஆதரவாக சில சீன  இதழ்களும் எழுத்தாளர்களும் இது மொழிபெயர்ப்பாளர் உரிமை எனவும் வாதிக்கின்றன..  இருந்த போதும் எதற்குப் பிரச்சினையென சீன பதிப்பகம் பதிப்பித்த கவிதைத் தொகுப்பைத் திரும்பப்பெற்றிருக்கிறது.  பதிப்புரிமையைச் சீனர்களுக்குத் தந்த இந்திய  பதிப்பாளரும் ‘Nyogi Books’ – உரிமையாளருமான Bikash Nyogi  « வங்க்காள மொழியிலிருந்து ஆங்க்கிலத்திலும், ஆங்க்கிலத்திலிருந்து சீன மொழிக்கும் சென்றதால் இது மொழிபெயர்ப்பில் தவறு நிகழ்ந்து விட்ட து « – என சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கிறாராம்.

 

நன்றி Le Monde 21 -1-2016

 

 

 

மொழிவது சுகம் நவம்பர் 1 2013

1. பிரான்சில் என்ன நடக்கிறது

 பிரெஞ்சு அரசாங்கத்திற்குக் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடி. வருவாயை அதிகரிக்கவும், வீண் செலவுகளைக் குறைக்கவும் கணக்கியல் துறையும், ஐரோப்பிய நிதி நிர்வாகத் துறையும், கண்டிப்பான சில வழிமுறைகளைப் பிரெஞ்சு அரசாங்கம் பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கமும் நிதி வருவாயைப் பெருக்கிக்கொள்ள சிக்கன நடவடிக்கைகள் மட்டுமே போதாதென்ற நிலையில் நாள்தோறும் புதிய புதிய வரிகளை விதித்துவருகிறார்கள். ஏற்கனவே அன்றாட உபயோகத்துகான மின் சக்தியும், எரிவாயுவும் கடுமையான உயர்வை சந்தித்து உள்ளன. காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை கடந்த சில வருடங்களைக் காட்டிலும் பன் மடங்கு அதிகரித்துள்ளன. தற்போதையை கருத்துகணிப்புகள்  அதிபர் பிரான்சுவா ஒலாந்துக்கு எதிராக இருக்கின்றன. நாட்டில் அறுபது சதவீத்தினருக்குமேல் அதிபர் மீது அவநம்பிக்கை கொண்டிருக்கின்றனர். இனவாதக் கட்சி,  நிலவும் அவநம்பிக்கையைக்கொண்டு தன்னை ஊட்டப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது. இரண்டு இடைத்தேர்தலில் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் வென்றிருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஆப்ரிக்க நாடுகளில் பணயக் கைதிகளாக இருப்பவர்களில் நால்வரை இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து நைஜீரிய நாட்டின் தலையீட்டினால் மீட்டிருப்பினும் தீவிரவாதிகள் கேட்டப் பணயத் தொகையைக் கொடுத்தே மீட்டிருப்பதாக ஒரு குற்றசாட்டு. ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க இயலாமல் பிரெஞ்சு அரசாங்கம் தவித்துக்கொண்டிருக்கிற நிலையில், தங்கள் கூட்டணி அரசாங்கத்தில் பங்கேற்று இருக்கிற பசுமைவாதிகளை சமாதானப்படுத்தவென சுற்றுப்புற சூழலை மேம்படுத்த அறிமுகமான வரிக்கு எதிராக கடும் எதிர்ப்புகிளம்ப, அதனையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டியதாயிற்று. இப்போது வேறொரு பூதம் கிளம்புஇருக்கிறது. இனி நட்சத்திர விளையாட்டுவீரர்கள் தங்கள் வருவாயில் 75 சதவீதத்தை வரியாகச் செலுத்தவேண்டும். நாட்டின் பெரும் நகரங்களில் உள்ள காற்பந்தாட்டக் குழுமங்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. நட்சத்திர விளையாட்டுவீரர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிடுவேன் என அச்சுறுத்துகிறார்கள்.

 2. மொழிபெயர்ப்பு குறித்து:

அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் தனது முக நூலில் இப்படியொரு அறிவிப்பை செய்துள்ளது இந்திய மற்றும் உலகமொழிகளிலிருந்து தமிழ்ப்படுத்துவதற்கான மொழிபெயர்ப்பாளர்களைத் தேடும் முகமாக வந்துள்ள அறிவிப்பு அது.

 « Kalachuvadu Publications wishes to establish contact with translators from Indian and world languages to Tamil. We are keen to translate literature directly from Marathi and Punjabi to Tamil. We are also looking to work with translators from world languages. Friends with command of foreign languages can either translate a work or be a ‘mentor’ i.e. oversea and edit a translated text. We are particularly looking for Tamils with a working knowledge of Korean, Swedish, German, Arabic, Spanish, Norwegian and Danish.”

தமிழ் நாட்டில் சில விதிமுறைகள் வைத்திருக்கிறார்கள்; எழுத்தில் ஏது சீனியர் ஜூனியர் என்பவர்கள் கூட என்னிடத்திலா இலக்கிய சர்ச்சை என்ற முகத்தோடு நம்மை எதிர்கொள்கிறார்கள். இவர்கள் அரசியல்வாதிகளுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. எதைப்பற்றியும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கருத்துக்கள் வைக்கலாம், வெறும் கையை முழம்போடலாம், மணலை கயிறாகத்திரிக்கலாம். அவர்கள் கருத்துக்களை மேற்கோள்காட்டி சொல்பவர்கள் கூட சொன்னவர் யாரோ எவரோ அல்லதமிழில் பன்னிரண்டு கதைகளை தழுவல் செய்தவர், பரமார்த்த குருவின் சீடர்களில் ஒருவர் அவரே சொல்லியிருக்கிறார் எனவே நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது எனக் கட்டுரை எழுதுவார். இந்த மனைநிலைதான் நம்மை பிள்ளையார் சதுர்த்தி, களிமண் பிள்ளையார்களை  ஆயிரக்கணக்கில் நகலெடுத்து கடலிலும் கரைக்க முடியாமல், கரையொதுங்கினாலும் தப்பில்லையென்று பெருமூச்சு விடுகிறோம்.

மொழிபெயர்ப்புக்கு இதுதான் இலக்கணம் என சொல்ல ஒன்றுமில்லை. ஒரு வாசகனாக படைப்போ மொழிபெயர்ப்போ என்னை எப்படி உள்வாங்கிகொள்கிறதோ அதைப்பொறுத்தே உகந்ததா இல்லையா எனத் தீர்மானிக்கிறேன். எனக்கு உகந்ததாக இருப்பது உங்களுக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை, அதுபோலவேதான் இல்லாததுகுறித்து முரண்படவும் என்னைப்போலவே உங்களுக்கும் உரிமையுண்டு. மொழிபெயர்ப்பு படைப்பைப்போலவே அனுபவம் சார்ந்தது, எழுத எழுத மேம்படுவது. ஒருகட்டத்தில் ஓரளவு புரிந்துகொண்டு நல்லதொரு மொழிபெயர்ப்பை எந்த மொழிபெயர்ப்பாளனாலும் தர முடியும். 

காலச்சுவடு பதிப்பக அறிவிப்பினை வைத்து இங்கே சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள்வேண்டும். இதொரு நல்ல முயற்சி. நவீன இலக்கியங்களின் தீவிர வாசகன் என்ற அடிப்படையில் காலச்சுவடு இதழின் முயற்சி பெரிதும் வரவேற்க தக்கது. தமிழில் எத்தனை பதிப்பகங்கள் காப்புரிமை பெற்று பதிப்பிகின்றனவென்று தெரியாது. காலச்சுவடு அவ்விஷயத்தில் தெளிவாக இருக்கிறது. தற்போது மூல மொழியிலிருந்து தமிழுக்குக் கொண்டுவரவேண்டுமென்கிற இப்புதிய முயற்சியும் வரவேற்கதக்கது.

இந்த ஆண்டு ‘Livres Hebdo’ என்ற பிரெஞ்சு சஞ்சிகையின்படி 554 நாவல்கள் பிரெஞ்சில் வந்துள்ளன. அவ்வளவா என வியக்க வேண்டாம், பிரெஞ்சு பதிப்புலகம் இந்த எண்ணிக்கைக்கே மூக்கைச் சிந்திக்கொண்டிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே படிப்படியாக எண்ணிக்கை குறைந்துவருகிறதாம்.  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு (2007ல்) மொழிர்ப்புகளையும் சேர்த்து 727 படைப்புகள் வந்திருக்கின்றன, சென்றவருடம் 646. இவ்வருட 554படைப்புகளில் 356 நாவல்கள் நேரடியாக பிரெஞ்சில் எழுதப்பட்டவை, 198 மொழிபெயர்ப்புகள். 

முக்கிய பிரெஞ்சு பதிப்பகங்கள் அனைத்துமே இரண்டு விஷயங்களில் கறாராக இருக்கிறார்கள். பிறமொழிக்கு பிரெஞ்சு படைப்பை கொண்டு செல்வதென்றாலும், பிறமொழியிலிருந்து பிரெஞ்சுக்குக் கொண்டுவருவதென்றாலும்:  1. மூலத்திலிருந்து மொழிபெயர்க்கப்படவேண்டும், 2. கொண்டு செல்லப்படும் மொழியைத் தாய்மொழியாக மொழி பெயர்ப்பாளர் கொண்டிருக்கவேண்டும். பொதுவில் எந்த மொழிபெயர்ப்பும் முழுமையானதல்ல. மூலத்தை நூறு சதவீதம் மொழிபெயர்த்திருக்கிறேன் என்பதெல்லாம் ஓர் ஏமாற்று வேலை, மொழிபெயர்ப்பாளன் மூல ஆசிரியனல்ல, ஓர் உரை ஆசிரியன் அவ்வளவுதான், அவன் விளங்கிக்கொண்டதை அவனுடைய மொழியில் சொல்கிறான். பிரெஞ்சில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கிறபோதெல்லாம், நான் கையாளும் உபாயம், முழுவதுமாக பிரெஞ்சிலிருந்து தமிழுக்குக்கொண்டுவந்ததும்  அதன் ஆங்கில மொழிபெயர்ப்போடு ஒத்திட்டு பார்ப்பது. ஒவ்வொரு முறையும் எங்கேனும் ஒன்றிரண்டு வார்த்தைகள் தவறுதலாக மொழி பெயர்க்கப்பட்டிருக்கும், வாக்கியங்கள் விடுபட்டிருக்கும். இக்குறை நேரடியாக மொழிபெயர்க்கிற எனக்கும் நேர்கிறது. பிரெஞ்சு நண்பர்களுடன் விவாதித்தே முடிவுக்கு வருகிறேன். ஒரு உதாரணம் Le Procès verbal என்ற Le Clèzio எழுதிய நாவலை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். அதில் ஓரிடத்தில் sous-verre என்றொரு சொல் வரும் அது வேறொன்றுமில்லை கண்ணாடி டம்ளரின் கீழ்வைக்கிற சிறு தட்டு அல்லது குறுவட்டு என்று கொள்ளலாம். மேற்குலகில் வீட்டிலும் சரி, உணவு விடுதிகளிலும் சரி, தண்ணீர், குளிர்பானங்கள், மது என எதைவழங்கினாலும் மேசையில் அந்தக் சிறுதட்டைவைத்து அதன்மீதே பானமுள்ள கண்ணாடிக்குவளையை வைப்பார்கள். இந்த sous-verre ஐ ஆங்கில மொழிபெயர்ப்பாளர் (அமெரிக்கர்)  (cup and) Saucer என்று மொழிபெயர்த்திருக்கிறார். இந்த saucerக்கு பிரெஞ்சில் sous coupe என்று பெயர். இந்த ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து பிரெஞ்சு தெரியாத இந்திய நண்பர் மொழிபெயர்க்கிறார் எனில், (அமெரிக்கரெடுத்த நகலை xerox எடுப்பவர்) நிச்சயமாக கிளேஸியோ சொல்கிற சிறுதட்டு அல்லது குறுவட்டு அந்த ஆங்கில வழி தமிழ்படுத்தும் நண்பருக்கு கண்ணிற்படாமலேயே போகும் ஆபத்திருக்கிறது. தவிர இந்திய நண்பர் அந்த ‘Saucer’ ‘Soccer’ என்று பொருள்கொண்டு காற்பந்து என மொழிபெயர்க்க அதற்காகவே காத்திருக்கும் புண்ணியவான்கள் தீவிரமாக கட்டுரை ஒன்று எழுதி இலங்கைத் தோழர்கள் உதைப்பந்துஎனச்சொல்வதைஎப்படிக் காற்பந்து என மொழி பெயர்க்கலாம் இதில் ஏதோ சதி இருக்கிறது, மேகத்திய நாடுகளுக்கு பங்கிருக்கிறது எனக் கட்டுரை எழுதும் ஆசாமிகளும் இருக்கிறார்கள். இதை உதாரணத்திற்குத்தான் சொன்னேன். மொழி பெயர்ப்பு என்பது இரு மொழிகளிலுள்ள ஆளுமை சார்ந்த தொழில் நுணுக்கமல்ல, கலாசாரம் பண்பாடு சம்பந்தப்பட்ட விஷயங்களெல்லாம் அதில் அடங்கிக்கிடக்கின்றன. இணைய தளங்களில் இன்று பல குழுமங்கள் இருக்கின்றன. மேற்கத்திய மொழி பெயர்ப்பாளர்களே பலரும் விவாதித்துப் பொருள்கொள்வதை இன்று பார்க்கிறோம், அப்படியான ஆரோக்கியமான சூழல் பிற இந்திய மொழிகளில் நிலவுகிறதா எனத் தெரியவில்லை, ஆனால் நமது தமிழில் இல்லை. தமிழில் ஆயிரத்தெட்டுவகை மொழியாடல்கள் இருக்கின்றன.முறையான அகராதிகள் இல்லை, அப்படியொரு மரம், ஒருவகைப் பிரபந்தம் எனச்சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் “கால்வினோதப்பு “கல்வினோதான்” சரி என விவாதிப்பவர்கள், செஞ்சிக்குப்பக்கத்திலிருக்கிற தீவனூர் பள்ளி மாணவர்கள் செஞ்சியை Gingee எனப்படிக்கவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். இப்போதெல்லாம் பிரெஞ்சு பெயர்களை மிகச்சரியாக எழுதவேண்டுமென கிரிவலம் வருகிறவர்களையெல்லாம் தமிழில் பார்க்கிறேன். ஆங்கிலத்தில் பீட்டர் என்ற பெயரைத்தான் பிரெஞ்சில் பியெர் என்கிறார்கள், ஸ்பானிஷ் மொழியில் பெட்ரோஎன்கிறார்கள். மொழிபெயர்ப்பாளன் அக்கறைகாட்ட வேண்டிய வெளிகள் வேறு. அம்பையின் சிறுகதைகளைப் பிரெஞ்சு பதிப்பகத்திற்காக பிரெஞ்சு பெண்மணி ஒருவருடன் மொழி பெயர்த்துகொண்டிருக்கிறேன். இந்தியாவிலிருந்து வந்தவன் என்றாலும் ‘Tiffin’ என்ற சொல் என்னைப்பாடாய் படுத்துகிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தவர் Tiffin என்ற சொல்லைப்போட்டு வெகு சுலபமாக இக்கட்டிலிருந்து தப்பித்திருக்கிறார் ( ஆனால் ஆங்கிலேயேரிடம் கொஞ்சம் விசாரித்துப்பாருங்கள் அப்படியொரு சொல் எங்களிடத்திலில்லையென்று சத்தியம் செய்வார்கள். ஆனால் இந்திய வழக்கில் காலையில் tiffin சாப்பிடுகிறோம், ஆபீஸ¤க்குப் போகிறபோது tiffin கட்டியாச்சா என்று கேட்கிறோம், மனைவியும் tiffin boxல் போட்டுத் தருகிறாள். மாலை ஆபிஸிலிருந்து வீட்டிற்கு வந்ததும் மீண்டும் இன்றைக்கு என்ன tiffin என்று கேள்வி. பிரெஞ்சில் அப்படி Tiffin என்ற ஒற்றை சொல்லை கூறித் தப்பிக்க எனக்கு விருப்பமில்லை. இப்படி நிறையச்சொல்லிக்கொண்டு போகலாம், வாசகனுக்கு வேண்டுமானால் ரொலான் பார்த் சொல்வதுபோல எழுதியவனை மறந்து வாசிப்பது உகந்தது, ஆனால் மொழிபெயர்ப்பாளன் மொழிபெயர்க்கிறபோது ஆசிரியனையும் வாசிக்க இருப்பவனையும் மனதில் நிறுத்தி மொழிபெயர்த்தாலே ஐம்பது சதவீதம் மொழிபெயர்ப்பு தேறிவிடும்.

 

——————————

 

 

மூன்று மொழிபெயர்ப்புகள்

வணக்கம் நண்பர்களே

அண்மையில் எனது மூன்று மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. உங்கள் பார்வைக்கு:

1. உலகங்கள் விற்பனைக்கு – அதிர்வுக்கதைகள்

மேற்கத்திய உலகில் Sudden Fiction என்றொரு வகைமையுண்டு. பின்னர் கவிதைகளிலும் எதிரொலித்தது. முடிவு எதிர்பாராததாக இருப்பது அதன் பிரத்தியேகச் சிறப்பு. அவற்றை வாசிக்கையில் சில அதிர்வுகளை வித்தியாசமாக உணர்ந்தேன். இக்கதையில் இழையோடும் அதிர்வு அசப்பில் சீரான ஓட்டத்தையும் ஆழ்ந்துணர்கிறபோது இதயத் துடிப்பில் ஒரு சுனாமியையும் ஏற்படுத்தும் வல்லமை கண்டு அதிர்ந்தது உண்மை.

உலகங்கள் விற்பனைக்கு
அதிர்வுக்கதைகள்
விலை-90ரூபாய்
சந்தியா பதிப்பகம் 57, 53rd street
சென்னை -600083, இந்தியா

2. உயிர்க்கொல்லி
ஐந்து பிரெஞ்சுக் கதைகளின் தொகுப்பு.
விலை -100ரூபாய்

இதற்கு முன்பு செவ்வியல் கதைகளை மட்டுமே வாசித்து பழக்கப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய வாசகர்கர்களுக்கு இந்தக்கதைகள் வாசிப்பில் புதிய அறைகூவலை முன்வைக்கின்றன. மனித மனத்தின் நவீன சிடுக்குகுகளை இரக்கமின்றி வெளிப்படுத்துகின்றன. எல்லாக்கதைகளும் இலக்கிய வாசிப்பு சுகம் மட்டுமல்ல; அமைதியைக் குலைக்கும் ‘புனிதச் சடங்கு’ என்பதை நிறுவும் தொகுப்பு இது.

3. மார்க்ஸின் கொடுங்கனவு
டெனிஸ்கோலன் தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா
விலை 200ரூபாய்
மார்க்ஸிய சித்தாந்தத்தை பழுதறக் கற்றுத் தேர்ந்தவரும் தத்துவ பேராசிரிஅய்ருமான டெனிஸ்கோலன் பிரெஞ்சிலளித்த நூலின் தமிழாக்கம் இந்நூல். கார்ல்மார்க்ஸ் கட்டமைத்திருக்கும் மார்க்ஸிய சித்தாந்தத்தை பழமைவாதிகளிடமிருந்து விடுவித்து நவீனக் காலத்திற்கு ஏற்ற விதத்தில் அதில் மாற்ரங்களைக்கொண்டுவருவதில் பெரும்பிடிப்புள்ள இவரது கட்டுரைகள் மார்க்ஸியம் பற்றிய மஏஏஒரு பரில்மாணத்தை துலக்கமாக்குகிறது.

மானுட வாழ்க்கையில் உற்பத்தி, நுகர்வு என்னும் இரண்டைத் தவிர்த்துப் பிறவற்றைப் புறந்தள்ளிவிடுவதும் முழுமுயற்சியில் முதலாளித்துவம் இறங்கியுள்ள இன்றையச் சமுதாயச் சூழல் குறித்தும் மார்க்ஸிய சிந்தனைகள் மறுவாய்வு செய்யப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாகவும் அறிவுச் செழுமையுடனும் பொதியப்பட்டுள்ள இக்கட்டுரைகள்  பயனுள்ளவகையிலான செறிவுமிக்க விவாதங்களை உருவாக்ககூடியவை.

மேற்கண்ட இருநூல்களும்
காலச்சுவடு பதிப்பகம்
பழைய எண்130, புதிய எண்257
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை
சென்னை-600005