Tag Archives: மு. இளங்கோவன்

மொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015

அ. இலக்கிய சொல்லாடல் -5 : ‘சுய சரித்திரம்'(Autobiographie)
தமிழில் முதல் சுய சரித்திரம் உ.வே.சா. அவர்களுடையது, மேற்கத்தியர்களோடு ஒப்பிடுகிறபோது காலத்தால் பிந்தங்கியது, தவிர சில அறிஞர் பெருமக்களின் வற்புறுத்தலால் நிகழ்ந்தது என்கிறார்கள். பிரெஞ்சு இலக்கிய உலகில் ஒரு சுய சரித்திரத்தை வெறுமனே, எழுதிய மனிதரின் சொந்த வரலாறாகப் பார்ப்பதில்லை, அவர்களுக்கு அது ஓர் இலக்கிய வகைமை.பிரெஞ்சுத் திறனாய்வு அகராதியில் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தவிர்க்கமுடியாததொரு சொல்லாக உள்ளே நுழைந்துவிட்ட இலக்கிய வினை, ‘சுய சரித்திரம்’. Autobiographie என்ற பிரெஞ்சு சொல்லை நேரடியாக மொழிபெயர்ப்பின் அது எழுதிய நபரின் வாழ்க்கைச் சரித்திரம். ஆனால் உண்மையில் ஒருவகையான நினைவு கூரல். எழுதிய நபரின் கடந்தகால நினைவுகளை அசைபோடுதல். இக்காரியத்தில் குவிமையமாக இருப்பது: எழுதியவர் மூன்றாவது நபராக இருந்து பார்த்தக் கேட்ட சம்பவங்களல்ல; அவரே பங்காற்றிய நிகழ்வுகள். ‘இருத்தல்’ சம்பாதித்து, மறக்க இயலாமல், அவருடைய மனக்குளத்தில் தெப்பமாக மிதக்கிற சொந்த அனுபவங்கள். அவர் துணைமாந்தரல்ல, நாயகன்; சாட்சி என்று கூற முடியாது சம்பவத்தின் கர்த்தா. தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால் “கடந்தகால வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளித்து தன்னுடைய இயற்கைப் பண்பை உரைநடையில் ஒருவர் பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் செயல்.

 
“என்னுடைய நாவலின் மையப்பாத்திரமே நான்தான் என்கிறார் ” “Les aventures burelesques de Monsieur d’Assoucy” எழுதிய Charles Coypeau d’Assoucy (1605 – 1677). வெகுகாலம் தொட்டே தங்கள் வாழ்க்கை அனுபவத்தை பதிவுசெய்வது இலக்கிய உலகில் நடந்துவருகிறது. ஆனால் அப்படி யொன்றை பதிவுசெய்கிறோம் என்பதை படைப்பாளிகள் உணர்ந்தது பதினேழாம் நூற்றாண்டு என பிரெஞ்சு இலக்கிய வரலாறு தெரிவிக்கிறது. சாட்சியங்கள் என்ற பெயரில் தங்கள் சுய சரித்திரத்தில் தன்னைத் தானே வியந்தோதிக்கொண்ட கதைகள் பிரெஞ்சு இலக்கியங்களிலும் தொடக்ககாலங்களில் நிறைய நடந்திருக்கின்றன. சுயசரித்திரம் எழுத மதமும் தூண்டுகோலாக அமைந்தது. குறிப்பாக கிருத்துவத்தில் சமயச் சடங்குகளில் ஒன்றாக இருக்கிற பாவ சங்கீர்த்தனம் சுய சரித்திரத்திரத்திற்குக் காரணமாக இருந்தது. பாவச் சங்கீர்த்தன சடங்கு அளித்த தைரியதில் தங்கள்ள் சமய குருக்களிடம் பகிர்ந்துகொண்ட சொந்த வாழ்க்கையில் இழைத்தத் தவறுகளை, அல்லது அப்படிக் கருதிய தவறுகளை, முன்பின் அறிந்திராத வெகு சனத்திடம் பகிர்ந்துகொள்வதன் மூலமாக தங்கள் நெஞ்சின் பாரத்தைக் குறைக்கமுடியுயுமென பலர் நம்பினார்கள். உதாரணத்திற்கு மோந்தேஞ்னுடைய ( Montaigne) ” Essais, ரூஸ்ஸோவுடைய (Rousseau) ‘Les confessions’ ஆகியவற்றைக் கூறலாம். அதன் பின்னர் ஷத்தோ•ப்ரியான்(Chateaubriand ) என்பவர் எழுதிய Mémoires d’outre-tombe, சுயவரலாற்றின் புதியதொரு பயன்பாட்டைத் தெரிவிப்பதாக இருந்தது. ஒரு புனைவிற்குறிய குணத்தை எழுத்தில் கொண்டுவந்ததோடு, ஒரு தனிமனிதன் சமூகத்திற்குக் கையளித்த விண்ணப்பமாகவும் அது இருந்தது. “மானுடத்தின் அந்தரங்க வரலாறு ஒவ்வொரு தனிமனிதனிடமும் இருக்கிறது” என்ற நம்பிக்கையுடன் எழுதப்பட்ட George Sandன் (1804-1876) ‘Histoire de ma vie”யும் அவ்வகையில் முக்கியமானதொன்று  Autobiographie என்ற வார்த்தையில் அதன் முன்னொட்டு சொல்ல்லின் வரையறுக்கப்பட்ட பொருள் , அடுத்து பின்னொட்டு சொல் அடிப்படையில் எழுத்தும் வாசிப்பும் எடுத்துக்கொள்கிற சுதந்திரம், இவ்விரண்டு கருத்தியங்களிலும் திறனாய்வாளர்கள் – இலக்கிய வரலாற்றாசிரியர்கள் ஆகிய இரு தரப்பினருக்கிடையிலும் முரண்கள் இருக்கின்றன. விளைவாக இன்றளவும் கோட்பாட்டளவில் குழப்பமான சொல்லாடலாகவே இருந்துவருகிறது. ஒரு சுய சரித்திரத்திற்கான வரவேற்பு என்பது ஒரு மனிதன் தனது சமூகத்தில் ஏற்கனவே சம்பாதித்திருந்த செல்வாக்கு மற்றும் இடம் சார்ந்தது. அதே வேளை அதன் வெற்றி என்பது சொல்லப்படும் செய்தியிலுள்ள நம்பகத் தன்மை, எடுத்துரைப்பிலுள்ள தனித்தன்மை மற்றும் அழகியலால் தீர்மானிக்கபடுபவை.

 

ஆ. பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம்

 

புதுச்சேரியைசேர்ந்த முனைவர் மு. இளங்கோவன் எழுதி இயக்கிய ஆவணப்படம். சுந்தரேசனாரின் அருமை பெருமைகளை அவரோடு நெருங்கிப்பழக வாய்ப்பமைந்த நண்பர்களும், அறிஞர் பெருமக்களும் பகிர்ந்துகொள்கிறார்கள். காவிரி ஆற்றோடு கலந்து பாய்கிற சிலப்பதிகார கானல்வரிகள் சுந்தரேசனாரின் கணீரென்ற குரலில் அந் நதி நீர்போலவே ஓசையிலும் சுவையிலும் உயர்ந்து நிற்கிறது.

“ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழிசையை நுட்பமாக அடையாளம் கண்டவரென்றும் தமிழ் நாட்டில் மிகப்பெரும் இசை விழிப்புணர்வு ஊட்டி, தமிழர்களிடத்து இசையார்வம் தழைக்க உழைத்தவர். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், தேவாரம், நாலாயிரத் திவ்விய பிரபந்தம், சிற்றிலக்கியங்களை அதற்குரிய இசையில் பண்முறையில் பாடிக்காட்டிய பெருமைக்குரியவர்” என்கிற குறிப்புகள் இந்த ஒளிவட்டில் இடம்பெற்றுள்ளன, அதற்குப் பொருந்துகிறவகையிலேயே ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது
ண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் (ஆவணப்படம்)

எழுத்து இயக்கம்: முனைவர் மு.இளங்கோவன்
வெளியீடு: வயல்வெளித் திரைக்களம்
தொடர்புகட்கு: http://www.muelangoven.com

 

இ. அதிபர் அப்துல் கலாமும் – மாத்தாஹரி நாவலும்

 

அவரது மரணத்தால் நாடே உறைந்துபோய்விட்டது. இந்திய அதிபர்களில் ஒருவருக்கு நானறிந்து நாடுதழுவிய அஞ்சலி என்பது இதுதான். அதற்கான தகுதிகள் அவருக்கு கூடுதலாகவே இருந்தன. அதிபராக அல்ல ஒரு மா மனிதராக அதிபர் நாற்காலியை அலங்கரித்திருந்தார். வெளிநாட்டுத் தலைவர்கள் சம்பிரதாயமாக அல்லாது, அண்மைக்காலங்களில் ஒர் அசாதாரண ஆசாமி என்ற நினைப்போடு கைகுலுக்கிய இந்தியத் தலைவர் இவராகத்தான இருக்கவேண்டும். தமிழர்களுக்கென்றமைந்த தனித்த குணத்தின்படி ஆராவரத்துடன் துக்கத்தை அனுசரித்தார்கள். அவர் இரண்டாம் முதறை அதிபரானால் எனது பெருமை என்ன ஆவது நினைத்த தமிழினத் தலைவர்களெல்லாங்கூட தராசில் நிறுத்தி அஞ்சலி செலுத்தினார்கள். தமிழக முதல்வர் கலாம் பெயரால் பரிசு என்று அறிவித்து எல்லோரினும் பார்க்க எனது அஞ்சலி எடைகூடியதென்று தெரிவித்து எதிரிகளை வாயடைக்கசெய்துவிட்டார். மறைந்த கலாமே இத்தைகைய கூத்துகளுக்குச் சம்மதிக்கக்கூடியவரா? என யோசிக்க வேண்டியிருக்கிறது.  ஐரோப்பிய யூனியனின் பொன்விழா (50 ஆண்டுகள்) நிகழ்வில் திரு கலாம் கலந்துகொண்டார். ஐரோப்பிய பாராளுமன்றம் இருப்பது நான் இருக்கிற Strasbourg நமரில். அழைக்கப்ட்ட இந்தியர்களில் நானும் ஒருவன். நாள் ஏப்ரல் 25, 2007. அவர் ஆற்றிய உரையை மறக்க முடியாது. ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், எங்களைபோல அழைக்கப்பட்டிருந்த நண்பர்களுக்கு முன்னால் கனியன் பூங்குன்றனாரைபற்றி இரண்டொரு வரிகள், புறநானூற்றிலிருந்து “யாதும் ஊரே; யாவரும் கேளீர்” எனத் தமிழில் கூறி ” I am a world citizen, every citizen is my own kith and kin” என ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துவிட்டு உரையைத் தொடர்ந் த போது, நாங்கள் சிலிர்த்ததும், பரவசத்தில் கண்கள் சுரந்ததும் மறக்க முடியாத அனுபவம்.  அச்சம்பவத்தை ‘மாதாஹரி ‘நாவலில் அத்தியாயம் 24ல் பயன்படுத்திக்கொண்டேன், கதையில்வரும் இளம்பெண் (ஹரிணி) இந்திய அதிபர் அப்துல் கலாம் பாராளுமன்ற உரையை நேரில் கேட்பதுபோன்று அமைத்து அவர் உரையின் சில பகுதிகளை நாவலில் கலாம் பேச்சாக பதிவு செய்தேன். ஏதோ என்னால் முடிந்தது.
———————————————————-

மொழிவது சுகம் – 10 மார்ச் 2013

1.  முனைவர் மு. இளங்கோவன் அவர்களுக்கு நன்றி:

கடந்த பிப்ரவரி மாதம் புதுச்சேரி பாரதிதாசன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் இல்லத்திற்கு சென்றிருந்தேன்,  எனது இனிய நண்பரும் பேராசிரியருமான நாயக்கருடைய நெருங்கிய நண்பர் என்பதால், அவரும் உடன் வந்திருந்தார்.  பேச்சு இலக்கிய திசையிற் பயணித்தது. அவரது வலைத்தளம் பற்றியும் உரையாடினோம். பின்னர் என்னைப்பற்றிய செவ்வியாக நீண்டது. அச்செவ்வியை நண்பர் தமது வலைத்தளத்தில் இடப்போவதாகவே ஆரம்பத்தில் நினைத்தேன். பின்னர் அவருடனான தொலைபேசி உரையாடல் மூலம் கட்டுரை வடிவில் அச்செவ்வி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னையில் வாசிக்கப்பட்டதாக அறிந்தேன். அக்கட்டுரையைத் தமது வலைத்தளத்திலும்  நண்பர் இட்டிருக்கிறார். அன்னாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

http://muelangovan.blogspot.fr/2013/03/blog-post_8.html
http://tamil.oneindia.in/art-culture/essays/2013/writer-nagarathinam-krishna-171242.html
———————————————————–

2. மீண்டும் இந்தியா?

எனது சகோதரர் இல்ல சுப நிகழ்ச்சிகாரணமாக மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் 10ந்தேதி இந்தியா வருகிறேன். நண்பர்கள் துணையுடன் செஞ்சியில் கிருஷ்ணப்ப நாயக்கர் நாவலைக்குறித்த ஓர் கலந்துரையாடலை  ஏற்பாடு செய்ய உள்ளோம். புதுவை ‘இலக்கியம்’ நண்பர் சீனு தமிழ்மணியின் ஆதரவுடன் நடபெற உள்ளது. வெகுவிரைவில் அது பற்றிய முழுத் தகவல்களைத் தெரிவிக்கிறேன். ஏப்ரல் இறுதிவரை இந்தியாவில் இருக்கிறேன். நண்பர்கள் விருப்பப்படின் சந்திக்கலாம்.

——————————————————

3.  உன்னைப் போல் ஒருவன்

poster_294774Fernando Cortes அல்லது Hernando Cortez பதினாறாம் நூற்றாண்டில் தென் அமெரிக்காவைக் கைப்பற்றவும், அங்கு ஸ்பெயின் நாட்டின் காலனி ஆதிக்கத்தை நிறுவவும் காரணமாக இருந்தவர். ஸ்பானிய தொல்லிலக்கியங்களை நினைவு கூர்பவர்களுக்கு முதலிற் கவனத்திற்கு வருவது ‘Don Quichotte’ (Cervantes), அடுத்தது ‘The Seducer of Seville and the Stone Guest’ ( Tirso de Molina). இவை இரண்டிற்கும் ஈடானதொரு படைப்பொன்றும் இருக்கிறது பெயர்: The True History of the Conquest of New Spain, ஆசிரியர் Bernal Diaz Castillo. 1580ம் ஆண்டு எழுதப்பட்ட இந்நூல் கடந்த ஐந்து நூற்றாண்டுகளாகவே முதலிரண்டு இடத்தைப்பெற்றிருக்கிற நூல்களைப்போலவே விற்பனையில் சாதனைப் படைத்து வருமொரு படைப்பு. மெக்சிகையும் இதர பகுதிகளையும் கொர்ட்டெஸ¤ம் துணைக்குச்சென்ற அவரது படைவீரர்கள் 500பேரும் இரண்டுவருடப் போராட்டத்திற்குப் பிறகு எவ்வாறு கைப்பற்றினார்கள், அங்கிருந்த 18மில்லியன் மக்களையும் அவர்தம் மண்ணையும் ‘அஸ்டெக்’ வம்சாவளி ஆட்சியினரிடமிருந்து எவ்வாறு மீட்டெடுத்தார்கள் என்பதை அழகியலையும், செவ்வியலையும் சரிசமமாகக் கலந்து சொல்லப்பட்ட நாவல். முதல் இரண்டு நூல்கள் இருக்கிறதோ இல்லையோ, மூன்றாவது இடத்தை பெற்றிருக்கும் இந்நாவலை தங்கள் வீட்டிலில்லை எனசொல்வதற்கு ஸ்பெயின் மொழி பேசுபவர்கள் பல முறை யோசிப்பார்களாம். நூலைப்பற்றிய புகழுரைகளை மறந்துவிட்டு, நூலாசிரியர் பற்றிய தகவலுக்கு வருவோம்.  இவரைக்குறித்து பெரும் புதிர் இருப்பதாக நம்பப்பட்டது. அந்நாவலை வாசித்தவர்கள் நூலாசிரியர் வேறுயாருமல்ல  நாவலில் வருகிற வெற்றிவீரனான கொர்த்தெஸ் உடன் சென்ற 500 படைவீரர்களுள் ஒருவரென இதுவரை நம்பினார்கள். அதுதான்  இல்லை என்கிறார் பிரெஞ்சு வரலாற்றாசிரியரும் ஆய்வாளருமான ‘Duverger’.

Bernal Diaz Castilloவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியபோது அவரைப்பற்றிய உண்மைகள் சில இந்த ஆய்வாளருக்குத் தெரிய வந்திருக்கின்றன. அதன் அடிப்படையில் நூலாசிரியரின் பூர்வீகத்தைப் பற்றிய தேடலில் மிகத் தீவிரமாக இறங்கினார்.  கௌதமாலா மற்றும் ஸ்பெயின் ஆவணங்களை இரவுபகலாக ஆய்ந்ததற்குப் பலன்கள் கிடைத்தன: நூலாசிரியரென நம்பப்பட்ட Bernal Diaz மழைக்குக்கூட பள்ளிக்கு ஒதுங்கியவரல்ல, தவிர கொர்த்தெஸின் தென் அமெரிக்க படையெடுப்பை பெர்னால் மிகத் துல்லியமாக விவரித்திருந்தார்.  ஸ்பெயின் மன்னருக்கும் படைத்தளபதிக்குமிடையே ஏற்பட்ட பிணக்கும் தர்க்கமும் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தன.- இவைகளெல்லாம் பிரெஞ்சு ஆய்வாளரை யோசிக்க வைத்தன. இத்தனைபெரிய காவியத்தை ஓர் எழுத்தறிவற்ற சாதாரண வீரன் படைத்திருக்க சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வருகிறார். மேலும் மேலும் ஆவணங்களைத் தோண்டியதின் விளவு,  Bernal Diaz Castillo என்கிற பெயர் ‘புனைபெயர்’ என அறியபட்டது.  The True History of the Conquest of New Spain என்ற நூலின் உண்மையான ஆசிரியர் வேறுயாருமல்ல அது கடைசியில் நூலின் கதை நாயகனாகச்சொல்லப்பட்ட  கொர்ட்டெஸ்தான் என்ற முடிவுக்கு வருகிறார் பிரெஞ்சு ஆய்வாளர். சொந்த பெயரில் எழுதிய ஆக்கத்தை மன்னரின் ஆணைக்கேற்ப முதலில் கொர்ட்டெஸ் தீயிட வேண்டியதாயிற்று. ஸ்பெயின் மன்னர், பிறகு தெளிவாக தடையும் பிறப்பித்து விட்டார், அதன்படி நூலை மீண்டும் எழுதி அரங்கேற்ற கொர்ட்டெஸ¤க்கு வாய்ப்பு மறுக்கப்பட, கொர்ட்டெஸ் கண்டுபிடித்த தந்திரமே, தனது படைவீரன் ஒருவன் பெயரில் சொந்த அனுபவத்தை நூலாகக் கொண்டுவரத் துணிந்தது.

கடந்த 30 ஆண்டுகளாக பின் நவீனத்துவத்தை மறந்து (பின்-பின் நவீனத்துவம்?) வேறு பாதைகளில் மேற்கத்திய நாவலுலகம் பயணம் செய்துகொண்டிருக்கிறது. அதில் ஒருவகை தமது சொந்த அனுபவத்தை நூலாக எழுதுவது. உண்மையில் இதை பதினாறாம் நூற்றாண்டிலேயே கொர்ட்டெஸ் பின்பற்றியிருக்கிறார் என அறியவருகிறோம்.  1980லிருந்து மேற்கத்திய புனைகதை உலகத்தின் பாதை என்ன என்பதைத் தொடராக எழுதும் எண்ணமிருக்கிறது.
————————————————————————————————————————————-