Tag Archives: முராகாமி

எழுத்தாளன் முகவரி -18: நூலகமும் எழுத்தாளனும்

‘வாசிப்பு இன்றியமையாதது’ என நம்புகிற ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களின் நானும் ஒருவன். படைப்பிலக்கியத்தின் எத் துறையை எடுத்துக்கொண்டாலும் வாசிப்பும் உள்வாங்க்கிகொள்ளும் திறனும் முக்கியம். ‘படைப்பிலக்கியதுறையில்’ வெறும் கையை வைத்துக்கொண்டு முழம்போடமுடியாது. நவீன இலக்கிய அபிமானிகள் தெளிவாகச் சிந்திக்கக்கூடியவர்கள். அவர்களை முன்வைத்து படைக்கிறபோது அதற்கான தகுதியை நமது படைப்பிற்கு ஏற்படுத்தித் தரவேண்டும். ‘இவனா? என்ன பெரிதாக எழுதியிருக்கப்போகிறான்? என நினைக்கிற, நூலைத் தொட்டு பார்க்காமலேயே மதிப்பிடுகிற மனிதர்களைப் பெரிது படுத்துகிறீர்களோ இல்லையோ மேலே குறிப்பிட்ட வாசகருக்கு நாம் உண்மையாக இருக்கவேண்டும். அவர் அறிவுக்கேற்ப, படைப்பிலக்கியத்தில் செய்திருக்கிற ‘கால’ முதலீட்டிற்கு ஈடான இலாப அனுபவத்தை ஏற்படுத்தித் தரும் கடமையும் பொறுப்பும் படைப்பாளிக்கு இருக்கிறது. ஒரு படைப்பாளி வாசகர் ஒருவருக்குத் தரும் வாசிப்பு அனுபவத்தில், அப்படைப்பாளி பிற ஆசிரியர்களின் எழுத்துக்களை வாசித்துப்பெற்ற அனுபவமும் சேர்ந்தது. பிற உற்பத்தி தொழிகளில் உள்ளதுபோலவே ஒரு பொருளின் உற்பத்தியில் முதற் பொருள்களாக படைப்பாற்றலும், கற்பனைத் திறனும் உள்ளதெனில் அததன் துணைப்பொருட்கள் பட்டியலில் வாசிப்பை சேர்ப்பது கட்டாயம். எனவேதான் எழுத்துக்கும் கூடுதலான நேரத்தை வாசிப்புக்கு படைப்பாளியொருவன் ஒதுக்கவேண்டும். படைப்புத்துறை சார்ந்து வாசிப்புக்குரிய நூல்களை தேர்வு செய்யலாம். எல்லாவற்றையும் வாசிப்பதென்பது ஒருவகை, தேர்ந்தெடுத்து வாசிப்பதென்பது ஒருவகை.

 

வாசிப்பின் நேரத்தையும், வாசிக்கின்ற படைப்பயும் பொறுத்தே உங்கள் படைப்பு அமைகிறது. எழுதவும் வேண்டும் வாசிக்கவும் வேண்டும் என்பதால் நேரம் காணாதுதான். மேற்கத்திய எழுத்தாளர்களின் சௌகரியமான வாழ்க்கை தமிழில் முழுநேர எழுத்தாளர்களாக இருக்கிற நட்சத்திர எழுத்த்தாளர்களுக்கே வெறு கனவாக முடிகிறபோது, ஏதோ எங்களால் உங்களுக்கு விலாசம் கிடைக்கிறதே அதுபோதா எனும் உத்தம தமிழ் பதிபாளர்களை நம்பியா ஒரு தமிழ் எழுத்தாளன் பெண்டாட்டி, பிள்ளைகளுடன் ஜீவிக்கமுடியும். எனவே வேறு பணிகளில் இருந்துகொண்டு எழுத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. எனக்குத் தொழில் வணிகம். கடந்த ஐந்து ஆண்டுகளாக அப்பாரத்தை என் மனைவியில் தலையில் இறக்கிவைத்துவிட்டு எழுத்தில் கவனம் செலுத்தினாலும், அப்போதைக்கப்போது நிறுவனத்திலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்தியப்பொருட்கள் அங்காடிகடையைத் தவிர, ஒரு Immobilier Société யும் இருக்கிறது. இரண்டுமே மிகச் சிறிய நிறுவனங்கள், என்றாலும் இரண்டின் நிர்வாக விஷயங்கள், பொருட்களை வாங்குவது அவற்றின் விலையைத் தீர்மானிப்பது, வாடிக்கையாளரைக் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், விற்பனை வரி சம்பந்தமான தொடர்புகள், வருடாந்திர கணக்குகள் என பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. இதற்கிடையில் அவ்வப்போது மொழிபெயர்ப்புப் பணியையும் உப தொழிலாக செய்கிறேன். அதைக்கடந்துதான் வாசிப்பு எழுத்து என்று இயங்கவேண்டியிருக்கிறது.

 

நூல்களையும் இதழ்களையும் எப்படி தேர்வு செய்கிறேன்?

 

வீட்டில் சிறியதொரு நூலகம் இருக்கிறது, சிறுக சிறுகச் சேர்த்து உருவாக்கிய நூலகம். புதுச்சேரி வருகிறபோதெல்லாம் தமிழ் நூல்களை வாங்கிக்கொண்டு வருகிறேன். தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் வாசிக்கிறேன். மாதத்திற்கு மொழிக்கொன்று முடிக்கவேண்டுமென்பது திட்டம், அதைக் கடை பிடித்தும் வருகிறேன். தமிழில் காலச்சுவடு, தீராநதி இதழ்கள் வீட்டிற்கு கடந்த பத்தாண்டுகளாக வருகின்றன. கடை வைத்திருப்பதால் வெகு சன இதழ்களை வாசிக்கவும் சந்தர்ப்பம் வாய்க்கிறது. பிரெஞ்சு இலக்கிய திங்கள் இதழ் ‘Le Magazine Littéraire’ வீட்டிற்கு வருகிறது. தமிழ் நூல்களை மதிப்புரை எழுதுகிறவர்கள் யார் என்ற அடிப்படையிலும், நண்பர்களின் சிபாரிசிலும், புத்தகங்களை random ஆக ஒன்றைப் பிரித்து வாசிக்கிறபோது ஏதேனும் இரண்டு வரிகளில் உண்மையும், சொல் நேர்த்தியும் இருப்பின் வாங்கிவிடுவேன். பிரெஞ்சில் நூல்களைத் தேர்வு செய்வது எளிதாக இருக்கிறது. தினசரிகள், இலக்கிய திங்கள் இதழ்கள், ‘France Culture’ வானொலி ஆகியவற்றில் முன் வைக்கப்படும் விவாதங்கள், மதிப்புரைகள் ஆகியவற்றை 90 விழுக்காடுகள் நம்பலாம், குறிப்பாக François Busnel என்கிற இலக்கிய திறனாய்வாளரை கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறேன். மதிப்புரை எழுதத் தகும் என்ற நூல்களைத் தேர்வு செய்தே எழுதுவார். அண்மைக்காலமாக ஆங்கிலமொழியில் படைப்புகளை தேர்வுசெய்ய எனது மகள் உதவுகிறார். தமிழ் நூல்கள் சிலவற்றை நூலாசிரியர்களிடமிருந்து நேரடியாக அன்பளிப்பாக பெற்றிருக்கிறேன். ஈழத்தைச் சேர்ந்த நண்பர் மரியதாஸ் நான் இருக்கிற இதே ஊரில் வசிக்கிறார். எனது நாவல்கள் பதிப்புக்குப் போகும் முன்னும் பின்னும் வாசிப்பவர், ஆலோசனைகளும் வழங்குவார். அவற்றில் உடன்பாடிருக்குமானால் ஏற்கவும் செய்வேன். ஆனால் தமிழில் அவர் கல்கி, சாண்டில்யன், மு.வ. இவர்களைத் தாண்டிபோனதில்லை. அவர்களுக்கு அடுத்தபடியாக எஸ்.பொ.வத் தெரிந்து வைத்திருந்தார். மாறாகச் சங்க இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை. தமிழண்ணல், ஜெயமோகன், அண்மையில் நாஞ்சில் நாடன் இவர்களெல்லாம் சங்க இலக்கியங்களை பற்றி எழுதியபோது அவைகுறித்து விடிய விடிய அவரும் நானுமாக உரையாடி இருக்கிறோம். (அண்மையில் நண்பர் க. பஞ்சாங்கம் பிரான்சு வந்திருந்தபோது, அவரிடம் அழைத்துசென்றேன். கடந்த ஓராண்டுக்கு மேலாக கட்டில் வாழ்க்கை என்றிருப்பதால், பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் சந்திப்பு அவருக்கு ஆறுதலைத் தரும் என்று நம்பினேன், அது வீண்போகவில்லை.) அவர் எனக்குப் பரிசளித்த ஆங்கில நூல்கள்அதிகம். இவை எனது நூலகத்திற்கு எப்படியெல்லாம் நூல்கள் வந்தடைகின்றன என்பதற்கு சற்று விரிவானதொரு விளக்கம்.

 

நூலகம் ஏன்?

 

வருடா வருடம் வாங்கி சேர்க்கின்ற நூல்களைத் தவிர வார மாத இதழ்கள் வீட்டிற்கு வருகின்றன என்று கூறி இருந்தேன், இவற்றைத் தவிர இணைய இதழ்கள் வலைப்பூக்கள்என்றுள்ளன. பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் தினசரிகள் இவ்வளவும் வாசித்தபின்னும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை பிரெஞ்சு பொது நூலகத்திற்குச்சென்று நூல்களைக் கொண்டு வருகிறேன். ஒரு தடவையில் ஐந்து நூல்கள் எடுக்கலாம். தற்போது நூல்கள் புத்தகமாகவும், குறுந்தகடுகளிலும் கிடைப்பது ஒரு வசதி. ஆக சில நேரங்களில் குறுந்தகடு நூல்களையும் கொண்டு வருகிறேன், வாகனத்தில் போட்டுக்கேட்க வசதியாக இருக்கிறது.

 

இந்நிலையில் நாம் நூலகத்திற்குச் செல்ல பிரத்தியேகக் காரணங்கள் இருக்க முடியுமா? நிறைய இருக்கின்றன. உலகின் அத்தனை எழுத்தாளர்களும் ஒன்று கூடுகிற இடம் நூலகம். நூலகங்களில் இடம்பெறுதல் என்பது அந்நூல்களுக்கான மிகப்பெரிய விருது, வேறு பரிசுகளோ, விருதுகளோ, விமர்சனங்களோ, சிபாரிசோ வேண்டாம். ஒரு நூற்றாண்டைக் கடந்தும், எழுத்தாளன் காலத்தில் கரைந்தபோதும் அவன் படைப்பு நீர்த்துப்போகாமல், செல்லரிக்கப்படாமல் இருக்குமென்றால் அப்படைப்பில் நாம் எழுத்தாளனாக வருவதற்குரிய சூட்சமங்கள் இருக்கின்றன. அவை நாம் வாசிக்க வேண்டியவை. எழுத்தாளனாக வர நினைத்தால், நூலகத்திற்குச் செல்லும் வாய்ப்பைப் பெருக்கிக்கொள்ளுங்கள். என்னதான் இடம் பொருள் என நம்மிடமிருந்தாலும் ஒரு நல்ல நூலகத்தை உருவாக்கவோ பராமரிக்கவோ நமக்கு நேரமும் காணாது

 

எனக்கு எழுத்தின் மீது பற்றுதலை உருவாக்கியதில், நூலகங்களுக்கும் பங்கிருக்கிறது. ஒரு நூலகத்தின் வேலை நேரத்தை தெரிந்துகொண்டு பத்து மணிக்குத் திறக்கிறார்கள் என்றால் பதினோரு மணிக்கு உள்ளே நுழையுங்கள். கடையொன்றிர்க்குள் ஒரு பொருளை வாங்குவதற்காக நுழைகிற வாடிக்கையாளருக்குக் கிடைக்காத வரவேற்பு அங்குண்டு. தலைக்குமேலே உள்ளே உட்கூரைகூட தனிப்பட்ட அக்கறையுடன் நம்மை கவனிக்கிறதோ என எண்ணத் தோன்றும். ஊழியர்களின் மரியாதையான பார்வை முதலாவதாக, அதற்கடுத்து நூலகங்களுக்கென்றே உள்ள அமைதியான சூழல். ‘வேறு இடத்தில் அப்படியாதொரு ஒத்திசைவைகொண்ட மனிதர்களைச் சந்திக்க நமக்கு சாத்தியமா என்று தெரியவில்லை, ஆகச் சமரசம் உலாவும் இடம். இறந்தபின் ஏதோ சொர்க்கம் சொர்க்கம் என்று பேசிக்கொள்கிறார்களே அது இப்படியிருந்தால் தேவலாம் என் பல நேரங்களிக் நினைத்ததுண்டு.

 

சன்னமான மின்சார ஒளி, அவ்வப்போது உயிர் பெரும் காற்று – நமதுடலைச் சுற்றுவதற்குப் பதிலாக நெஞ்சைத் தொட்டு மயங்க்கம் தரும்; தரையை ஒத்தி எடுக்கும் பாதங்கள், காற்ற்றின் முனுமுனுப்புகளாக காதில் விழும் சொற்கள்; மெல்ல முன்னேறுகிறோம். தவம்போல புத்தகங்களில் ஆழ்ந்திருக்கும் மனிதர்களைக் கடந்தால் அங்கே நமக்காக அவர்கள் காத்திருப்பார்கள், வசாகாவரம் பெற்ற்வர்கள். யார் வேண்டுமானாலும் அவர்களுடன் கை குலுக்கலாம், கட்டி அணைக்கலாம். நிறம் பார்ப்பதில்லை, இன பார்ப்பதில்லை, குலம் கோத்திரம் சாதி எதுவும் வேண்டாம்: முதல் நாள் வேறொருவர் கொண்டுபோய் திருப்பித் தந்திருப்பார், இன்று நமக்காக அவை காத்திருக்கும். உலகில் பிறதுறைகளுக்கில்லாதாத பெருமை எழுத்திற்கு உண்டு, இங்கே எடுத்துரைக்கும் ஆற்றலும் மொழிவன்மையும், கற்பனை வளமும் கொண்ட எவருக்கும் நூலகத் தட்டுகள் இடம் கொடுக்கின்றன.. மெல்ல நெருங்கி அவற்றில் ஒன்றைதொட்டுப்பாருங்கள். உங்கள் கைப்பட்டதும் கண்பார்த்ததும் என்றோ மறைந்துபோன எழுத்தாளன் உயிர்த் தெழுவான்: அல்பெர் காமுய், தாஸ்த்தாவெஸ்கி, ஜேம்ஸ் ஜாய்ஸ், ஹெமிங்வே, முராகாமி, என்று எவராகவும் அது இருக்கலாம். அவர்களுடன் தொடங்குகிற உங்கள் உரையாடல் ஒரு நாள் அவர்களில் ஒருவராக உங்களையும் மாற்றினால் ஆச்சரியப்படமாட்டேன்.

————————————

மொழிவது சுகம் அக்டோபர் -20

1. புதுச்சேரி சுதந்திரம்

கடந்த ஆகஸ்டுமாதம் 16ந்தேதி -2012 அன்று, புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டு 50 ஆண்டுகளாகின்றன.

இந்தியாவின் பிறபகுதிகள் இந்தியக்குடியரசின் கீழ் வந்தபோதும். புதுச்சேரி காரைக்கால் போன்றவை இந்தியாவில் இணைய 15 ஆண்டுகள் காத்திருந்தன. புதுச்சேரியில் சுதந்திரப்போராட்டமென்பது நமத்துப்போனதொரு பட்டாசு.

1962ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16ந்தேதி பிரெஞ்சு அரசாங்கமும் நேரு தலமையிலான காங்கிரஸ் அரசாங்கமும் ‘De Jure’ ஒப்பந்தத்தில் கைச்சாற்றிட அதுவரை பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் நான்கும் இந்திய ஆளுகைக்குட்பட்ட தனி மாநிலமாக (அல்லது யூனியன் பிரதேசமாக) உருப்பெற்றது. காங்கிரஸின் முக்கிய தலைவர்களும், அன்றைய ஊடகங்களும் இதனைக் கடுமையாக எதிர்த்தார்கள். அண்டை மாநிலமான தமிழகத்துடன் இணைப்பதுதான் முறையென்றார்கள். பிரெஞ்சு மொழியைக் கற்றிருந்த நேரு அம்மொழிமீதிருந்த காதலால் பிரத்தியேக சலுகைகள்கொண்ட இந்திய யூனியன் பிரதேசமாக புதுச்சேரியை அறிவித்தார். அவர் தயவில் புதுச்சேரி அத்தைக்கு மீசை முளைக்கிறது. கையளவு பிரதேசமான புதுச்சேரி தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருந்தால் அநேகமாக ஒரு பிர்க்காவாகவோ அல்லது அதிகபட்சமாக ஒரு தாலுக்காகவோ வந்திருக்கலாம். இன்றைக்கு ஒரு ஆட்சியர், நான்கு துணை ஆட்சியர், டசன் கணக்கில் தாசில்தார்கள்.. போதாதற்கு ஒரு மந்திரிசபை. கோலி விளையாடியக் கையைத் துடைக்காமற்கூட மந்திரி ஆவதற்கான வாய்ப்புகள் புதுச்சேரியில் அதிகம்.

இந்தியா சுதந்திரம் பெற்றது 1947ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ந்தேதி. ஆனாலும் புதுச்சேரியின் சுதந்திரம் பற்றிய கேள்விகள் அப்போதைக்கு எழவில்லை. பல காரணங்கள் இரண்டு தரப்பிலுமிருந்தன. இங்கே சுதந்திரம் வழங்கினால் பிரான்சு தமது பிறகாலனிகளையும் ஒப்படைத்துவிட்டு வெளியேறவேண்டும். அந்த ஒரு காரனத்திற்காகவே புதுச்சேரியைக் கட்டிக்கொண்டு அழுதது.  இந்தியாவிற்கும் புதுச்சேரி அப்படியொன்றும் முக்கியமானதாகத் தோன்றவில்லை. ஒரே ஒரு நூற்பாலை. அதை நம்பியே பெரும்பாலான மக்களின் வாழ்க்கை. தண்ணீர் மின்சாரமென புதுச்சேரியின் அத்தியாவசிய வாழ்க்கை அண்டை மாநிலங்களைச் சார்ந்திருந்தது. ஆங்கிலேயர்களிடம் சுந்தந்திரம் பெற்றபின், நாட்டின் ஒரு பகுதியை அந்நியர்களிடம் விட்டுவைப்பதா என்றதொரு கௌரவப்பிரச்சினையாக காங்கிரஸ் அரசாங்கம் புதுச்சேரியைப் பார்த்ததேயன்றி, மற்றபடி கொடுக்கும்போது கொடுக்கட்டும் என்றே காத்திருந்தார்கள். 1948ல் பிரெஞ்சு அரசாங்கம் ஒரு யோசனையை முன்வைத்தது. பொது வாக்கெடுப்பொன்றிற்கு ஏற்பாடு செய்து பெரும்பாலான மக்கள் விரும்புவதுபோல செய்துவிடலாமென்றது. நேரு அபத்தமாக இந்த யோசனையை ஏற்றுக் கொள்கிறார். சந்திரநாகூரில் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் இந்தியாவோடு இணைவதை விரும்புகிறார்கள். விழித்துக்கொண்ட பிரெஞ்சு அரசாங்கம் பிற இடங்களில் வாக்கெடுப்பைத் தள்ளிவைப்பதாக அறிவித்து கடைசிவரை அதனை நடத்தவே இல்லை. இந்திய அரசாங்கமும் ஏன் நிறுத்தினாயென்று கேட்கவில்லை. புதுச்சேரியில் அப்படியொரு வாக்கெடுப்பை நடத்தினால் இந்தியாவிலும் நாளை குறிப்பாக காஷ்மீரில் அதுபோன்றதொரு பிரச்சினையைச் சந்திக்கக்கூடுமென்ற நிலை. ஆக இரு தரப்பிலும் பொது வாக்கெடுப்பிற்கு ஆதரவில்லை. இந்தியா இதையொரு கௌரவப்பிரச்சினையாகக் கருதி பிரெஞ்சு அரசாங்கத்தின் கீழிருந்த புதுச்சேரிக்கு நிர்வாக சிக்கல்களைக் கொடுத்து வந்தது. ஒரு கட்டத்தில் புதுச்சேரி நிர்வாகமே ஸ்தம்பித்து போகும் நிலை. அந்நிலையை எட்டியபோது ஏழாண்டுகள் கடந்திருந்தன.

இந்நிலையில்தான் 1954ம் ஆண்டு மே 7ந்தேதி  Dien Bien Phu யுத்தத்தில் வியட்நாமுடன் தோற்று ஜெனீவா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட கையோடு இந்தோசீனாவிலிருந்து பிரெஞ்சுக்காரர்கள் வெளியேறுகிறார்கள் அதே வேளை அல்ஜீரியாவில் காலனிவாசிகள் பிரான்சுடன் ஆயுதப்போரில் இறங்குகிறார்கள். அதன் விளைவாக புதுச்சேரியைக் கைகழுவும் முகாந்திரமாக 1954 ஆண்டு நவம்பர் 1ந்தேதி ‘De Facto’ வில் இரு நாடுகளும் கையொப்பமிடுகின்றன. பிரெஞ்சு அரசாங்கத்தின் பொருளாதாரம், பண்பாட்டு அரசியலுக்கு குந்தகமிருக்கக்கூடாதென்றவகையில் தயாரிக்கப்பட்ட இவ்வொப்பந்தம் காரணமாக அப்போதுமுதலே புதுச்சேரி தாதாக்களின் அரசாங்கமாகிவிட்டது. குபேர் புதுச்சேரி நிர்வாகத்தின் முதல் தாதா. இவர்களுக்கெல்லாம் புதுச்சேரி இந்தியாவில் இணைவதில் துளியும் விருப்பமில்லை. பிரெஞ்சு அரசாங்கத்திற்குத் தலையும் இந்திய அரசாங்கத்திற்கு வாலும் காட்டிவந்த மனிதர்.

‘De Facto’ விலிருந்து ‘De Jour’ ஒப்பந்தத்திற் கைச்சாற்றிட மீண்டும் ஏழாண்டுகளுக்குமேலாக காந்திருந்தார்கள். அதற்கும் புதுச்சேரி தியாகிகளோ, இந்திய அரசாங்கமோ காரணமல்ல. அல்ஜீரியாவில் காலனிமக்களுடன் நடத்திய  யுத்தத்தில் மிகக்கடுமையாக  தோற்றிருந்த பிரெஞ்சு அரசாங்கம் 1962ம் ஆண்டு ஜூலைமாதம் 16ந்தேதி அல்ஜீரியாவிற்கு சுந்திரத்தை வழங்கவேண்டியதாயிற்று. அதற்கும் ஒரு மாதத்திற்குப் பிறகு பிரெஞ்சு அரசாங்கம் புதுச்சேரியை ஒட்டுமொத்தமாக இந்தியாவசம் ஒப்படைப்பதென தீர்மானித்து 1962ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் 16ந்தேதி, புதுச்சேரியை இந்தியாவிடம் தாரைவார்க்கிறார்கள். ஆக உண்மையில் புதுச்சேரி சுதந்திரம்பெற ஒரு வகையில்  அல்ஜீரிய மக்களே மூல காரணம். அங்கே இடி இடிக்க இங்கே மழைபெய்தது. புதுச்சேரி சுதந்திரத்திற்கு புதுச்சேரி மக்களோ, நேருவின் காங்கிரஸ் அரசோ காரணமேயல்ல என்பதுதான் உண்மை. அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தமென்று கேட்பார்கள் புதுச்சேரி சுதந்திரத்தைப் பொறுத்தவரை சம்பந்தமிருக்கிறது.

தனிமனிதனாகட்டும்  ஒரு நாடாகட்டும் அதன் சிறுமை பெருமைளை அறிய வரலாற்றை புரட்டிப் பார்ப்பது அவசியமாகிறது. கொடுக்கிற விலையைப் பொருத்ததே பண்டங்களின் பெறுமானம் அமைகிறது. புதுச்சேரியின் வரலாற்றின் அடிப்படையில் ஒரு நாவலை அதன் வரலாற்றை வியந்தோதும் வகைமையின்றி எழுதும் ஆவலிருக்கிறது.

————————-

2.  மொ-யன் (Mo-Yan)

முராகாமிக்கு இவ்வருட இலக்கியத்திற்கான நோபெல் பரிசென்ற வதந்தி இருந்தது. சீனரான மொ-யன் என்பவருக்குக் கிடைத்திருக்கிறது. சீனர்கள் காட்டில் மழை பொழியும் நேரம். வல்லரசுக்கான அத்தனை இறக்கைகளையும் சிறகடித்து மேலே மேலே என்று பறந்துகொண்டிருக்கிறார்கள். அடுத்த தெரு ஆசாமி வீட்டில் உலை கொதிக்கலாம் ஆனால்  அண்டைவீட்டுக்காரன் அடுப்பில் பூனை தூங்கவேண்டுமென எதிர்ப்பார்க்கிற மனித மனத்திற்கு நாமும் விதிவிலக்கல்ல என்கிறபோதும் நலன் விசாரிக்கிறவர்களிடம் அவர்களுக்குக் கிடைத்தால் எங்களுக்குக் கிடைத்ததுபோல என பெருமூச்சுவிடவேண்டியிருக்கிறது. நமது சிற்றிதழ்களில் இப்போதெல்லாம்  இலக்கியத்திற்கென ஒதுக்குகிற பக்கங்களைப் பார்க்கிறபொழுது அப்பெருபெருமூச்சும் சிறுமூச்சாகிபோகிறது. அக்டோபர் பதினொன்றுவரை (அவரது பெயரை பத்துநாட்களுக்கு முன்பு நோபெல் குழுவினர் அறிவிக்கும்வரை) பிரெஞ்சு இலக்கிய இதழ்களில் எப்போதாவது ‘மொ-யன்’  பேரை படிக்கிறபோது அல்லது அவர் புகைப்படத்தை பார்க்கிறபோது அறுபதுகளில் சூ-என்-லாய் கொளுத்திப்போட்ட பகைமைக் கங்கு மனதில் விசிறிக்கொண்டு கனிய ஆரம்பித்துவிடும், அவசரமாய்ப் பக்கங்களை புரட்டிவிடுவேன். முந்தைய வரிகளில் சொன்னதுபோல அண்டைவீட்டுக்காரனென்ற பொறாமை காரணமாக இருக்கலாம். இன்னொரு காரணமும் இருக்கிறது, பெரும்பாலான காம்ப்ரேட் சீனர்களைப்போலவே கமுக்கமாகச்  சிரிக்கிறார். பஞ்ச சீலத்தில் கையெழுத்துபோட்ட போட்ட சூ-என்-லாயின் சிரிப்பு அது.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கி.பி. 2000 ஆண்டுக்கான நோபெல் பரிசுபெற்ற சீனரை ஞாபகம் நண்பர்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் கௌ-சிங்யங் (Gao- Xingjian). தமது எழுத்தைச் சீனக் காம்ரேட்டுகளுக்கு எதிராக உபயோகிக்கப்போக பிரான்சு நாட்டிற்கு 1988ம் ஆண்டு அரசியல் தஞ்சம் கேட்டு வரவேண்டியதாயிற்று. 1989ல் பிரெஞ்சுக் குடியுரிமையும் கிடைத்தது. சீனாவில் இருந்திருந்தால் முதல் நோபெல் பரிசுபெற்ற சீனர் என்ற பெருமை கிடைத்திருக்கும். மொ-யன் விஷயத்தில் சீனர்கள் கவனமாக இருந்தனர். இவரும் காம்ரேட்டுகளையும் அவர்கள் தலமையையும், அதிகார ஊழலையும் விமரிசிக்கத் தயங்கியவரல்ல. எனினும் சீன அரசாங்கம் இவரை வெளியேற்றவில்லை. ஏற்கனவே மனித உரிமையென்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும் நிலையிலிருந்த சீனர்களுக்கு, பொருளாதாரம் மற்றும் ராணுவபலம் போன்றவற்றால் பெறும் கீர்த்தியை பூர்த்திசெய்யவும் சீனஅரசு விமரிசினங்களைச் சகித்துக்கொள்ள கூடிய அரசு என்பதைத் தெரிவிக்கவும் மொ-யன் என்ற சரக்குச் சந்தைக்குத் தேவைபட்டது.

பிரெஞ்சுப் புத்தககடைகாரர்கள், ‘மொ-யன்’ படைப்புகளை தூசுதட்டி, பர்·யூம் அடித்து கடை பரப்புகிறார்கள். சீன உற்பத்தியென்றாலே பொருளாதாரச்சந்தையில் போலிச்சரக்கு, விலை மலிவு எனப்பொருள் கொள்ளப்படுவதுண்டு. எதற்கும் அச்சு அசலாக மாற்றுபொருளை தயாரிப்பதில் சீனர்கள் கைதேர்ந்தவர்களென்ற தீர்க்கமான கருத்துண்டு. சீனர்களின் ஆயுத பலம் கண்டு பயமிருக்கிறதோ இல்லையோ, போலி சரக்குகளைப் பற்றிய பயத்தை அதிகமாகவே மேற்கத்தியர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். ‘மார்க்ஸின்’ சரக்கிற்கே போலியைத் தயாரித்தவர்கள் ஆயிற்றே, பயமில்லாதுபோனால் எப்படி? மொ-யன் சரக்கை அசலான சரக்கென்று கடந்த சில தினங்களாக புத்தக விமரிசகர்கள் வானொலியிலும் தொலைகாட்சிலும் வற்புறுத்துகிறார்கள். ஏற்கனவே கூறியதுபோன்று இதுவரை மொ-யன் படைப்புகள் எதையும் வாசித்ததில்லை பிரெஞ்சு பத்திரிகையொன்றில் வந்தக்குறிப்பை அவரது படைப்புகளை வாசிக்க நினைக்கிறவர்களுக்காக சிபாரிசு செய்கிறேன்.

மொ-யன் பெற்றோர்கள் முன்பின்தெரியாதவர்களிடம் வாய் திறவாதே! – அதாவது பேசாதே!  என அடிக்கடி தங்கள் மகனை எச்சரிப்பதுண்டாம். பிற்காலத்தில் தமது எழுத்துக்கு ஒரு புனைபெயரை தேடியபொழுது, சிறுவயதில் காதில் விழுந்த ‘வாய் திறவாதே’ நினைவுக்கு வர அதனையே வைத்துக்கொண்டிருக்கிறார். ‘மொ-யன்’ என்ற புனைபெயருக்கு, அதுவே ரிஷிமூலம். ஆனால் ‘வாய் திறவாதே’ என்ற பெயரில் நிறைய எழுதுகிறார். எண்பதுக்கும் அதிகமாக சிறுகதைகள், புனைவுகள், அபுனைவுகளென எழுதிக்குவித்திருக்கிறார். நாவல்களில் புதிய உத்திகளை பயன்படுத்தியிருக்கிறாராம். கதைக்குள் கதை, நாவவலுக்குள் சிறுகதை, கடித இலக்கியம், சமூகம், ஆட்சியாளர்களெக்கெதிரான கலகக்குரல்கள், புதிய வரலாற்றுப்பார்வையென  இவரது எழுத்துப்பாதை தடங்கலின்றிச்செல்கிறது. முக்கிய நூல்கள் 1. Red Sorghom  2. The Rupublic of Wine. 3. Big breasts and Wide hips. பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் 4. La loi du Karma வாங்கி வைத்திருக்கிறேன், படித்துவிட்டு எழுதுகிறேன்.

 

நன்றி: C.I.D.F.  29-8-2012

————————————