Tag Archives: மானுடம் வெல்லும்

எழுத்தாளன் முகவரி- 11:

கதையும் காலமும்

ஒரு நல்ல கதை சொல்லல், விருந்தோம்பலைப்போல. வாசகன் விருந்து, படைப்பாளி விருந்து படைப்பவன். இலையில் உட்காருபவனுக்கு எதில் தொடங்கலாமென்று தெரிந்தே இருக்கும், பிறந்தது முதல் சொந்தவீட்டில், உறவினர் வீட்டில், நண்பர்கள் வீட்டில், அந்நியர் வீட்டில் அவன் விரும்பியதை, விரும்பாததை சந்தோஷத்துடன் அல்லது கசப்புடன் சாப்பிட்டு முடிக்கிறான். விருந்தை இலையில் உட்காருவதற்கு முன், இலையில் உட்கார்ந்த பின் என இருவகையாகப் பிரித்துக்கொள்வோம். இ.மு.: வாசகன் சுந்ததிரத்தோடும், தேர்வோடும், விருப்பத்தோடும் சம்பந்தப்பட்டது. இல்லத்தரசனான கணவன் எனது சுதந்திரம் முக்கியத்துவம் பெறுகிறது, எனது தேர்வு முன்னிலை வகிக்கிறது, எனது விருப்பம் நிறைவேறுகிறதென அங்கே நினைக்கிறான், இ.பி.யில்? அவன் சுதந்திரமும், தேர்வும், விருப்பமும் மனைவியின் பரிசீலனக்கு உட்படுகிறது. உப்பும் உறைப்பும் அவள் எடுத்த முடிவு. நாக்கின்ருசி அவனால் தீர்மானிக்கப்ட்டதல்ல, அவள் தீர்மானித்தது, சமைத்துப்போட்டவர்கள் காட்டியது. படைப்பும் அப்படிபட்டதுதான், படைப்பாளியே வாசகனை உருவாக்குகிறான். விருந்தை வழிநடத்தும் பொறுப்பு விருந்து படைப்பவனுக்கு இருப்பது போல வாசகனை வழிநடத்தும் பொறுப்பு எழுத்தாளனுக்கு இருக்கிறது. அந்த வழி நடத்தலில் மிகமுக்கியமான இரண்டு  தனிமங்கள்: ‘தொடக்கமும்’, ‘முடிவும்’. ஒரு புனைவை எழுத உட்காருகிறபோது, எதில் தொடங்கவேண்டும் எங்கே முடிக்கவேண்டும் என்பதில் தெளிவும், காலத்துடன் அவற்றைச் சடைபோடும் சாதுர்யமும் இருந்தால், பாதிகிணறை தாண்டிவிட்டோமென்பது உறுதி.

புனைவுகள் அனைத்துமே வரிசைக்கிரமமாக சொல்லப்பட வேண்டுமென்பதில்லை: ஒரு நேர்க்கோட்டில் கதையை முன்னெடுத்துச் செல்பவர்கள் இருக்கிறார்கள், முடிவை நோக்கி கதையை நகர்த்தும் முறை, – விஷ்ணுபுரம் (ஜெயமோகன்)-வானம் வாசப்படும் (பிரபஞ்சன்). கதையின் முடிவை இடையில் வைத்து முன்னும் பின்னுமாக கதையைப் பிரித்து சொல்லுதலென்பது இன்னொரு ஒருவகை,  – வார்சாவில் ஒரு கடவுள் (தமிழவன்) -யாமம் (எஸ். ராமகிருஷ்ணன்). பின்னர் இறுதிச்சம்பவத்துடன் தொடங்கி – ஆரம்பத்தை முடிவில் வைப்பது என்பது பிரிதொருவகை – புலிநகக்கொன்றை (பி.எ. கிருஷ்ணன்) -மாத்தா ஹரி (நாகரத்தினம் கிருஷ்ணா). இம்மூன்று பிரிவுக்குள்ளும் அவரவர் கற்பனை சார்ந்து மேலும் பலவகைமைகளை கட்டமைக்க முடியும், மேற்கண்ட நாவல்களே அதற்கு சாட்சிகள்.

கதை ஆரம்பம் என்பது மிகமிக முக்கியமானது. கதையின் முதல் வாக்கியம், முதல் பத்தி அவற்றில் உபயோகிக்கபடும் சொற்கள், காற்புள்ளிகள், அரைப்புள்ளிகள், புள்ளிகள், உடுகுறிக்கள் இன்ன பிற சேர்ந்து நாவலின் தலைவிதியைத் தீர்மானிக்கின்றன.

முச்சந்தியில் நின்று கொண்டிருந்தது புளிய மரம். முன்னால் சிமிண்டு ரஸ்தா. இந்த ரஸ்தா தென் திசையில் பன்னிரண்டு மைல் சென்றதும், குமரித் துறையில் நீராட இறங்கிவிடுகிறது. வடதிசையில் திருவனந்தபுரம் என்ன, பம்பாய் என்ன, இமயம் வரைகூட விரிகிறது. அதற்கு அப்பாலும் விரிகிறது என்றும் சொல்லலாம். மனிதனின் காலடிச்சுவடு பட்ட இடமெல்லாம் பாதை தானே?” – ஒரு புளியமரத்தின் கதை -சுந்தரராமசாமி.

“பெரியபாட்டியின் கட்டில் சுவரிலிருந்து ஒரு அடியாவது தள்ளியிருந்தது. தண்ணீர் நிரம்பிய எவர்சில்வர் வட்டைகளின் உள்ளே அதன் கால் நுனிகள் அமிழ்ந்திருந்தன. சுவர்கள் அசாதாரணமான வெண்மையில் பளிச்சிட்டன. சுத்தமான படுக்கை விரிப்புகளிலும் தலையணை உறைகளிலும் அப்போதுதான் பெட்டிபோட்ட துணிகளின் முறுமுறுப்பு, கத கதப்பு. எப்போதும் சுவரில் ஓடிக்கொண்டிருக்கும் பல்லிகளைக் காணவில்லை. வேலைக்காரி செண்பகம் சில நாட்களுக்கு முன்புதான் ஒவ்வொன்றாகத் தேடி விரட்டினாள்”– புலிநகக்கொன்றை – பி.எ. கிருஷ்ணன்.

” உப்பரிகையின் மேல் நின்று வானத்தை அண்ணாந்து பார்த்தாள் கோகிலாம்பாள். வானம் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதாகப்பட்டது அவளுக்கு. அப்படியே கையை உயர்த்தினாள். வானம் கைக்கு வசப்படவில்லை. வானத்தை யார்தான் தொடமுடியும்? அது என்ன விரித்த ஜமக்காளமா, அல்லது பாயா, எக்கித்தொட?” – மானுடம் வெல்லும் -பிரபஞ்சன்.

எழுத்தைத் தொடர்ந்துப் படிக்க  வாசகனுக்கு உதவுவதைப்போலவே, கதையை உற்சாகத்துடன் நடத்திச்செல்ல படைப்பாளிக்கு உதவுவதும் ஒரு புனைவின் தொடக்கமே. முதல் வரிதொடக்கமென்பது, நமது பணிக்காலத்தில் முதல் நாள் வேலைக்கு ஒப்பானது: பதட்டமும், எதிர்பார்ப்பும் சிலிர்ப்பும், சந்தோஷமுமாக   தொடங்கி, வரும் நாட்களை ‘தலையெழுத்து’ இப்படி ஆகிவிட்டதென்றோ, புதுமாப்பிள்ளையின் குதூகலத்துடனோ எதிர்கொள்கிற சாத்தியங்களுள் இரண்டிலொன்றை ஏற்படுத்தித் தருவது.

ஓர் உண்மையை நாம் புரிந்து கொள்ளவேண்டும், கால வாரிசைப்படி முதலில் வரவேண்டியது, கதைசொல்லலில் பெரும்பாலும் முதலில் வருவதில்லை. நீங்கள் வாசித்த அல்லது வாசித்துக்கொண்டிருக்கிற எந்த வொரு புனைவை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டாலும், புனைவின் இடையிற்தான் வாசகர்கள் குறுக்கிடுகிறோம். மேற்சொல்லப்பட்ட மூன்று உதாரனங்களையும் திரும்பவும் வாசியுங்கள், நமக்குத் திறக்கப்படுவது நுழைவாயிலல்ல, சன்னலோ, புறவாசலோ அல்லது இரண்டுமற்ற வேறொரு கதவு ஆனால் நிச்சயமாக தெருக்கதவு அல்ல. தெருவில் கூவிப் பொருள் விற்பவர்களும், தெருவிபச்சாரிகளும் தங்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தைப்பெற என்ன செய்கிறார்களோ அதைத்தான் இங்கே எழுத்தாளர்களும் செய்கிறார்கள், எழுத வேண்டிய வகையில் எழுதினால் வாசக விசுவாமித்திரர்களைக் கவிழ்ப்பது சாத்தியமென்பதற்கு இவை எடுத்துக்காட்டுகள். பெரிய பெரிய கடைகளில் நுழைவாயில் காட்சிப்பேழைகளிலுள்ள அலங்கார அணிவகுப்பும் வாடிக்கையாளர்களை கவர்கிற உபாயந்தான். இத்தொடக்க உபாயத்தால் வாசகன் குறிப்பிட்ட புனைவிடம் சரண் அடைகிறான். சரணடைந்த வாசகனை தக்கவைத்துக்கொள்ள இத் தந்திரத்தை நாவலெங்கும் நீட்டிக்கவும் செய்யலாம் அதாவது எப்போது வாசகனிடமிருக்கும் விமர்சகத்திறன், நாவலாசிரியன் கதையை முடிக்கப்போகிறானென்று மனதிற் கிசுகிசுக்கிறதோ அதுவரை. வாசகனின் அம்முணுமுணுப்பை முன்னதாக ஊகிக்கத் தெரிந்து அங்கே புனைகதையை முடித்துக்கொள்ளவேண்டும்: Alice in Wonderlandல் வரும் King of Hearts முயலிடம் சொல்வதுபோல “Go on still you come to the end, then you stop.

ஆனாலிந்த முதலுக்கும் முடிவுக்குமிடையில் காலத்தோடு இணைந்து கதை சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. எந்தவொரு புனைவுக்கும் முடிவென்பது ஒன்றுதான், மாறாக ஆரம்பம்  இரண்டுவகை: ஒன்று ஒரு கதையின் கால வரிசைப்படியுள்ள ஓர் ஆரம்பம் மற்றது கதைசொல்லலின்படியுள்ள ஓர் ஆரம்பம். கால வரிசைப்படி கதைச்சொல்லப்படுவதில்லையென்பதை ஏற்கனவே புரிந்துகொண்டிருப்பீர்கள்.

‘புலிநகக்கொன்றை’ நாவலின் இம்முதல் பத்தியை திரும்பவும் வாசியுங்கள்:

“பெரியபாட்டியின் கட்டில் சுவரிலிருந்து ஒரு அடியாவது தள்ளியிருந்தது. தண்ணீர் நிரம்பிய எவர்சில்வர் வட்டைகளின் உள்ளே அதன் கால் நுனிகள் அமிழ்ந்திருந்தன. சுவர்கள் அசாதாரணமான வெண்மையில் பளிச்சிட்டன. சுத்தமான படுக்கை விரிப்புகளிலும் தலையணை உறைகளிலும் அப்போதுதான் பெட்டிபோட்ட துணிகளின் முறுமுறுப்பு, கத கதப்பு. எப்போதும் சுவரில் ஓடிக்கொண்டிருக்கும் பல்லிகளைக் காணவில்லை. வேலைக்காரி செண்பகம் சில நாட்களுக்கு முன்புதான் ஒவ்வொன்றாகத் தேடி விரட்டினாள்”

வாசித்தீர்களா? இது கதை சொல்லலின் தொடக்கம், – மாறாக கட்டிலிற் கிடக்கிறபாட்டியிடம் அசைபோடும் நினைவுகள், காலக்கிரமப்படி கதையொன்றை நமக்கு வைத்திருக்கின்றன, அதற்குமொரு தொடக்கமுண்டு, அதனை இரண்டாவது தொடக்கமென வசதிக்காக வைத்துக்கொள்ளலாம்.  கதை சொல்லல் தொடக்கம் பிரதான தொடக்கமெனில், கதையின் காலவரிசைத் தொடக்கம் துணைத்தொடக்கமாகிறது, கதைசொல்லற்படி ஒரு தொடக்கத்தை எழுதியாயிற்று, உபதொடக்கமென்கிற கடந்த காலத்திற்கு நுழைந்தாக வேண்டும்,  அதற்கான தருணமெது? என்பதைச் தேர்வு செய்வதில் எழுத்தின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.

‘கதை சொல்லல் தொடக்கத்தை’ வாசிக்கும் நமக்கு இரண்டு கேள்விகள் எழக்கூடும்: எதனால் பெரிய பாட்டி கட்டிலிற் கிடக்கிறாள், அதற்கு முன்னால் நடந்ததென்ன? என்பதொன்று, ‘பெரியபாட்டிக்கு அதன்பிறகு என்ன ஆயிற்று? என்பது மற்றொன்று. கேள்விக்கேற்ப பாட்டியின் கடந்த காலமோ, அல்லது வருங்காலமோ அடுத்து புனைவில் வருகிறது. அவற்றில் ஏதாவதொன்றைத்தான் படைப்பாளி உடனடியாக தேர்வு செய்ய முடியும், அதற்கான தருணமும் முக்கியம். படைப்பாளி மேற்கண்ட இருகேள்விகளுள் வாசகனுக்கு உடனடித் தேவை எது என்பதை ஊகித்து அக்கேள்விக்குரிய பதிலை தர எழுத்தாளர்கள் முன்வரவேண்டும், அடுத்தக் கேள்விக்கான பதிலை இரண்டுபக்கம் தள்ளி ஆரம்பிக்கலாம். புலிநகக்கொன்றை ஆசிரியர் நிகழ்காலமாக பாட்டியின் பேர்த்தியை (ராதா) சாட்சியாக வைத்து, கடந்த காலத்திற்கு நம்மை அழைத்துச்செல்கிறார். “நேற்று நடந்தவை பறந்துபோய்விட்டன. பலவருடங்களுக்கு முன்பு நடந்தவை பாறாங்கற்கள். அசைக்க முடியாதபடி அங்கங்கே நினைவிற் கிடந்தன” வென்று அக்கடந்த காலத்தை தான் எழுதுவதற்கு ஆசிரியர் நியாயமும் கற்பிக்கிறார்.

காலமும் வினைச்சொற்களும்.

பொதுவாக எல்லா புனைவுகளுமே கடந்த காலத்தில் எழுதப்படுகின்றன. ஆங்கிலத்திலோ பிரெஞ்சிலோ எழுதும்பாது அதனை simple pastல் எழுதுகிறார்கள். Flashback ஐச்சொல்ல, past perfect அவர்களுக்கு கைகொடுக்கிறது.  ”ராதாவின் வயதில் அவள் நம்மாழ்வாருக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்தாள்’ எனப் புலிநகைக்கொன்றை வரியை வாசித்தால், தமிழிலும் ஓரளவிற்கு இது சாத்தியம் என நினைப்போம். ஆனால் ஒரிருவரிகளுக்கு இது உதவலாம். கடந்த காலத்தை இரண்டொரு பக்கங்கள் நீட்டவிரும்பினால் ‘கொண்டிருந்தான், கொண்டிருந்தாள், கொண்டிருந்தது சொற்கள் வாசகனுக்கு அலுப்பைத்தரலாம். எனக்கென்று சில தேர்வுகளிருக்கின்றன. கடந்த காலத்தின் பொதுவான சம்பவங்களைத் தவிர்த்து பாத்திரங்களின் செயல்பாடுகளைச் சொல்ல வருகிறபோது நிகழ்காலத்தில் சொல்வது எனக்கு உகந்ததாக இருக்கிறது. பழைய படத்தைத் தியேட்டரில் பார்க்கிறபோது என்ன நடக்கிறது, அடைத்திருந்த கதவுகள் விரிய திறந்ததும் நுழையும் காற்றுபோல மனிதர்களும் அவர்களின் செயல்களும் நிகழ்காலத்திற்கு வந்து விடுகிறார்களில்லையா? அத்தகைய  Visual effects  கதைகளிற் கிடைக்க முயற்சி செய்கிறேன். புதுச்சேரியில் வருவாய்த் துறையில் ஊழியம் செய்தபோது, காலை நேரத்தில் பிரெஞ்சு மொழிவகுப்பிற்கு சென்றுவந்ததால் மாலையில் ‘கென்னடி டுட்டோரியல்’ என்ற ஸ்தாபனத்தில் வேலை செய்தேன். அங்கே வரலாறு பாடத்தை பயிற்றுவித்தேன். வரலாற்று பாடங்கள் இறந்த காலத்திற்குரியவை என்பது பலரும் அறிந்ததுதான். ஆனால் அதனை நிகழ்காலத்தில் நடப்பவையாக மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது எனது முறை. மொஹஞ்சாதாரோ நகருக்குள் நுழைகிறீர்கள்: முதலில் நீங்கள் பார்ப்பது அகன்ற தெருக்கள், செங்கற்களான கட்டிடங்கள்…’ என்ற சாயலில் பாடபோதனை இருந்தது. இன்றைக்கு எனது புனைவுகளிலும் அதைக் கடைபிடிக்கிறேன்.

அவரவர் விருப்பம் சாந்து வினைச்சொற்களின் காலத்தைத் தீர்மானிக்கலாம். எப்படி எழுதினாலென்ன? வாசகரை நமதெழுத்தோடு ஒன்றச்செய்யவும்  அவருக்கு அலுப்பேற்பட சாத்தியமுண்டு என்ற தருணத்தில் கதையை முடிக்கவும்  தெரிந்திருக்கவேண்டும்.

மீண்டும் உங்கள் கவனத்திற்கு:

“Go on still you come to the end, then you stop.
——————————————————