Tag Archives: புறங்கூறல்

மொழிவது சுகம் அக்டோபர் – 20 2013

1.  வாசித்ததில் மனதிற்பதிந்தவை.

அ. அம்மா நீ வென்றுவிட்டாய் – அ.முத்துலிங்கம்

தலைப்பை போடுகிறபோதே எழுத்தாளர் பெயரையும் கூடவே சேர்ந்துவிட்டேன், நீங்கள் என்னை சந்தேகிக்கக்கூடாது இல்லையா? .  கட்டுரையாளர் அ.முத்துலிங்கம்,  குசும்பு இல்லாவிட்டால் எப்படி.  அ.முத்துலிங்கம் குறிப்பிடுகிற அம்மா சுடச்சுட நோபெல் பரிசும் கையுமாக நிற்கிற அலிஸ் மன்றோவைபற்றியது. சிறுகதை எழுத்தாளரான 82 வயது கனேடியப் பெண்மணியை நேரில் சந்தித்த சம்பவத்தை அவரது பிரத்தியேக மொழியில் ஆங்காங்கே எழுத்தாளரைபற்றிய சுவாரஸ்யமான தகவல்களுடன் தந்திருக்கிறார். கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை.

http://amuttu.net/home

ஆ. சொல்வனம் 16-19-2013

தற்போதெல்லாம் இணைய இதழ்கள் நன்றாக வருகின்றன, அச்சிதழ்களைக் காட்டிலும் இலக்கிய அக்கறையுடன் செயல்படுகிறார்கள். இரு வாரத்திற்கு ஒரு முறையென வரும் சொல்வன இதழில் இம்முறை ஒரு சிறுகதை, இரண்டு பயணக்கட்டுரைகள், நூல் விமர்சனங்கள் என வந்திருக்கின்றன. வௌவால் உலவும் வீடு என்ற சிறுகதையை கே.ஜே. அசோக்குமார் என்பவர் எழுதியிருக்கிறார். மிக நன்றாகசொல்லப்பட்டிருந்தது. அண்மைக்காலத்தில் இப்படியொரு நல்ல சிறுகதை வாசித்த அனுபவம் எனக்கில்லை. அதுபோல ‘நம்மோடுதான் பேசுகிறார்கள்’ என்ற நூலின் புத்தக விமர்சனத்தையும், ரா.கிரிதரன் எழுதியுள்ள நார்வே பயணக்கட்டுரையின் இரண்டாம் பகுதியையும் விரும்பி படித்தேன். காபி பற்றிய ஒரு கலந்துரையாடலில் இதுவரை அறிந்திராத பல தகவல்கள். எங்கேயோ எப்போதோ வாசித்ததுபோல,  ஒரு வேளை சொல்வனத்தில்தான் ஏற்கனவே வந்ததா? இருந்தாலும் எத்தனை முறை குடித்தாலும் காபி அலுப்பதில்லை என்பதுபோலவே சொல்லப்படும் தகவல்களும் சுவையாகவே இருந்தன. ஆர். எஸ் நாராயணன் எழுதிய இயற்கை வேளாண்மை களஞ்சியமும் தொடராக வருகிறது. இதுதவிர மற்றுமொரு பயணக்கட்டுரையும், புத்தக விமர்சனமொன்றும் , ஒரு மொழி பெயர்ப்பு சிறுகதையும் உள்ளன.

http://solvanam.com/
————————————
2. புறங்கூறல்

பயனில சொல்லாமை – இன்னாச்சொல் மூன்றுமே ஒரு குடும்பத்துப் பிள்ளைகள்தான்

நமக்கு வெண்சாமரங்கள் வீசப்படுகிறபோதும், பரிவட்டம் கட்டுகிறபோதும் குளிரும் மனம், நமக்குத் தெரிந்த மனிதருக்கு என்கிறபோது வதைபடுகிறது. அதிலும் அவர் அண்டைவீட்டுக்காரராக இருப்பின் அம் மனிதரை பிடிக்காமல் போய்விடுகிறது நேற்றுவரை நம்மைபோல அவனும் இரு சக்கர வாகனத்தில் பயணித்த போது, கூடுவதும், குலவுவதும் ஆராதிப்பதும் அணைப்பதுமாகக் கழிந்த வாழ்க்கை,  பக்கத்து வீட்டுக்காரன் நான்கு சக்கர வாகனத்தில் போவதைப் பார்த்ததும் அல்லது அவன் பிள்ளைக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததும் நிலைகுலைந்து போகிறது. உறக்கமின்றி தவிக்கிறது. அண்டைவீட்டுக்காரனுக்கு ஏதேனும் அச்ம்பாவிதம் நடக்காதா என எதிர்பார்க்கிறது, இயலாதபோது, குறைகளை தனது குடும்பத்தில் ஆரம்பித்து அந்த அண்டைவீட்டுக்காரனுக்கு (இவன் இடப்பக்கம் வசிக்கிறான் என்றால்) வலப்பக்கம் ஓர் அண்டைவீட்டுக்காரன் இவனைப்போல தவித்துக்கொண்டிருப்பான் இல்லையா அவனிடம் சென்று   விமர்சித்து இருவருமாக ஆறுதல் அடைவார்கள். இம்மன நிலை அந்த அண்டைவீட்டுகாரனுக்கும் வேறு காரணங்களை முன்னிட்டு இவன் மீது ஏற்பட்டிருக்கும். அன்டைவீட்டுக்காரன் பற்றிய இந்த புறங்கூறல் ஒரு குறியீடுதான்.

அண்மையில் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் கூறிய தகவல்  பலரிடம் நாம் பொதுவில் காண்பதுதான். “எனக்கும் அவருக்கும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை உண்டு என்றவர், அவருக்கும் இன்னாரை …. பிடிக்காது என்றார்” ஒருவனை எளிதாக பலிகடாவாக ஆக்கவும் இப்படி நான்கு பேர்கூடி தங்கள் சரியான பக்கம் இருக்கிறோம் என்பதை நம்பச்செய்யவும் புறங்கூறலை  ஆயுதமாகக்கொள்வதுண்டு. தமிழ்நாட்டிலிருக்கும் ஆயிரத்தெட்டு கட்சிகளுக்கும், எழுத்தாளர்களிடையில் வெளிப்படையாகவும், இலைமறைகாயாகவும் வன்மம் பாராட்டுவதும் இப்படியான வக்கிரங்களின் அடிப்படையில்தான். மனைவி குடிகார கணவனைக்கொன்றாள் எனும் செய்தியைக்காட்டிலும், கள்ளக் காதலனுடன் சேர்ந்து கண்வனைக்கொன்றாள் என்ற செய்தியும், எதிர்கட்சி எம்.எல். ஏ ஆளும்கட்சி தலைவரை சந்தித்தார் என்ற செய்தியும் முக்கியத்துவம் பெறுகின்றன.

இம்மனக்கோளாறு நம் எல்லோரிடமும் உண்டு.

புறங்கூறுதல் எங்கிருந்து பிறக்கிறது, எதனால் பிறக்கிறது? அழுக்காறு, அவா, வெகுளி என வள்ளுவர் இன்னாசொல்லுக்கு முன்பாக மூன்று படிநிலைகளைத் தெரிவிக்கிறார். ஒரே குடும்பம், ஒரே அலுவலகம், ஒரே துறை, ஒரே ஊரைச்சேர்ந்த இருவருள் ஒருவர்தான், இம்மன சிக்கலில் கூடுதலாகப் பாதிக்கப்படுகிறார்கள். உலகில் எந்த நாடும், எந்த மதமும், எந்த இனமும் இதற்கு விதிவிலக்கல்ல. நம்மிடம் கொஞ்சம் கூடுதலாக இருக்குமென்கிற ஐயம் எனக்கு எப்போதுமுண்டு.  செத்த வீட்டில் கூட ஒப்பாரிமுடித்த கையோடு:

– ” அவள் கழுத்திலே இருக்கற சங்கிலி பர்வதத்துடையது மாதிரி இல்லை?”

– ” மாதிரி என்ன அவளுடையதுதான், இவளுக்கேது, சங்கிலி சரடெல்லாம்,”எனப் பேசும் பெண்களுண்டு. இது போன்ற உரையாடல் உங்கள் காதிலும் விழுந்திருக்கும். பார்வதி வீட்டிலிருந்து இரவல் வாங்கப்பட்ட நகையென்ற உண்மையை போட்டுடைக்கும் நல்லெண்ணத்திற்கு அடிப்படை காரணம், இவள் இரவல் வாங்கப்போனபோது, வேறொருத்தி முந்திக்கொண்டதும், இவளுக்கு அது வாய்க்கவில்லை என்கிற அசூயையுமாகும்.

ழான் குளோது லொதெ (Jean Claude Laudet) என்கிற உளப்பகுப்பியல் அறிஞர், “நம் ஒவ்வொருவரிடமும் அடுத்தவரைபற்றிய இருவிதமான அபிப்ராயங்கள் இருக்கின்றன, ஒன்று நேர்மறையானது, மற்றது எதிர்மறையானது என்கிறார். மற்றவரைப்பற்றிய எதிர்மறை அபிப்ராயங்கள், அவர் நம் அருகில் இருக்கிறபோது ஒளிந்துகொள்கின்றன. அவர் மறைந்ததும், வேறொருவர் கிடைக்கிறபோது  இல்லாத மனிதர் அடித்துத் துவைக்கப்படுகிறார். இப்படி சகட்டுமேனிக்கு மற்றர்களை விமர்சிப்பதற்கு சாமிவேல் லெப்பார்த்தியெ  ( Samuel Lepastier) என்கிற மற்றொரு உளப்பகுப்பாய்வாளர்  கூறும் காரணம், ஒன்று மற்றவர்களை குறை கூறி பேசுவதன்மூலம், நம்மை உயர்த்திக்கொள்ள முனைவது; இரண்டு நம்மிடம் கூடாதென்று நினைக்கும் அவதூறை மற்றவர்கள் தலையில் இறக்கிவைப்பது.

—————————————————————