“ ஆரோவில் நகரைச்சேர்ந்த ஆறு குடியிருப்புவாசிகள் மீதான காவல்துறையின் வழக்குப் பதிவு துரதிஷ்டமானது: ஆரோவில் நகர நிர்வாகம் கருத்து”
அண்மையில் (22 May 2022) ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் வெளிவந்த இச்செய்தி இணைப்பை நண்பர் பேராசிரியர் க. பஞ்சாங்கம் எனக்கு அனுப்பிவைத்தார். செய்தி புதுச்சேரி ஆரோவில் நகரம் பற்றியது, நண்பர் இச்செய்தியை எனக்கு அனுப்பியதற்கான காரணத்தை இக்கட்டுரையை வாசிக்கின்ற நண்பர்களில் ஒரு சிலர் (எனது படைப்புகளை அறிந்தவர்களாக இருப்பின்) ஊகித்திருக்கக் கூடும், மற்றவர்களுக்கு ‘ஏன்’ என்ற கேள்வி எழலாம். 2019 இறுதியில் வெளிவந்த என்னுடைய நாவல் ‘இறந்த காலம்’ ஆரோவில் நகரையும் அதன் இன்றைய பிரச்ச்னைகளையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு நாவல்.
« ஆரோவில் » நகரை, அதன் பிறப்பை, விடியல்நகரம் என்ற பொருள் கொண்ட இச்சிறுநகரத்தை, யாதும் ஊரே யாவரும் கேளீர் என்கிற வரிக்குச் சாட்சியமாகலாம் என்கிற நம்பிக்கையைத் தமிழறிந்த மக்களுக்கு ஊட்டிய மனிதர்களின் கானகத்தை, ஆன்மீக மார்க்ஸியக் கனவை நனவாக்க இந்திய மண்ணில், தமிழ் நாட்டில் புதுச்சேரிக்குக் கூப்பிடு தூரத்தில் அமைந்த மேற்கத்திய சாயல் கொண்ட கீழைதேசத்து சர்வதேச நகரின் தற்போதைய ‘தான்’(self) அடையாளத்தை அறிந்தவர்களுக்கு அல்லது ‘இறந்தகாலம்’ நாவலை வாசித்தவர்களுக்கு ஆங்கில தினசரியில் அண்மையில் வெளிவந்த இச்செய்தி வியப்பினை அளிக்க வாய்ப்பில்லை.
நாவலை வாசிக்காத நண்பர்களுக்குச் சுருக்கமாகச் சில செய்திகள். ஆரோவில் நகரம் அறுபதுகளின் இறுதியில் உருவானதொரு சர்வதேச நகரம். புதுச்சேரியை அறிந்தவர்கள் அரவிந்தர், அன்னை, அரவிந்தர் ஆஸ்ரமம் போன்ற பெயர்களைக் கேட்டிருக்கக் கூடும். பிரிட்டிஷ் இந்தியா காலத்தில், ஆங்கிலேயருக்கு அவர்கள் ஆட்சிக்கு – எதிரானவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்ட இந்தியர்கள், தண்டனையிலிருந்து தப்பிக்க, பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த புதுச்சேரிக்கு அடைக்கலம் தேடி வந்தனர். வந்தவர்களில், வங்காளத்தைச் சேர்ந்த அரவிந்தரும் ஒருவர். புதுசேரியில் அவர் ஆன்மீகவாதியாக மாறி ஓர் ஆஸ்ரமத்தையும் நிறுவினார். அவருடைய பெண்சீடராகவும், பின்னர் ஆன்மீகத் தோழியராகவும் மாறியவர்தான் பிரெஞ்சுப் பெண்மணியான மீரா அல்ஃபஸா, என்கிற « அன்னை ». இவருடைய ஆசியுடன் உருவானதுதான் ஆரோவில் நகரம். அடிக்கல் நாட்டியபோது அதன் இலட்சியங்கள் உன்னதமானவை :

« ஆரோவில் ஒரு சர்வதேச நகரமாகத் திகழவேண்டுமென விரும்புகிறது, இங்கு உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் ஆண்களும் பெண்களும் அமைதியாகவும், முற்போக்கான நல்லிணக்கத்துடனும், எல்லாவற்றிற்கும் மேலாக மதம், அரசியல், மற்றும் நாடு என்கிற அடையாளத்தைக் கடந்து வாழமுடியும். ஆரோவில்லின் நோக்கம் மனித ஒற்றுமையை நிலைநாட்டுவது. »
ஆக ஆரோவில்லை நிர்மாணித்தவர்களின் நோக்கத்தைக் குறைசொல்லமுடியாது. பிரச்ச்னை ஆரோவில்லையும் ஆஸ்ரமத்தையும் தொடர்ந்து நிர்வகித்தவர்களிடையே உருவான அரசியல் மற்றும் ஆதிக்கப்போட்டிகள். சில ஆரோவிலியன்களின் அத்துமீறல்கள். விளைவாகப் பிரச்சனைகள் வீதிக்கு வந்தன. பல குற்றசாட்டுகள், வழக்குகள் என ஒரு சராசரி நகரமாக மாறியதன் விளைவாக இன்று இந்திய அரசாங்கத்தின் நேரடிக் கண்காணிப்பில், கனவு நகரம். அடிக்கல் நாட்டப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. நகரை நிர்மாணித்தவர்களின் கனவு நிறைவேறியதா, சத்தியம் செய்ததுபோல சமய பேதமின்றி நிறபேதமின்றி உலகின் பல முனைகளிலிருந்தும் வருகின்ற மக்கள் ஆரோவில் குடிமகனாக வாய்ப்புண்டா ? நகரை விரிவாக்க அபகரிக்கபட்ட நிலங்களுக்கு உரிய நட்ட ஈடு ஏழைத் தமிழக விவசாயிகளுக்கு வழங்கபட்டதா ? என எழும் கேள்விகளுக்குத் தெளிவான பதில்களில்லை .
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
என்கிறார் வள்ளுவர். அதாவது “எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை ».என குறளுக்கு மு.வ.விளக்கம் தருகிறார்.
கானக விலங்குகளை எடுத்துக்கொள்வோம். வள்ளுவன் கூறுவதுபோல அனைத்தும் பிறப்பில் ஒத்தவைதான். எனினும் இயல்பில் சில கோரைப் புற்களையும் இலைதழைகளையும் மேய்ந்து பசியாற, வேறு சில பசிக்குத் தங்களுக்குத் தீங்கிழைக்காதவற்றை கொன்று பசியாறவேண்டிய இயற்கைத் தன்மையுடன் படைக்கப்பட்டுள்ளன. இயற்கையின் இந்த அநீதியிலிருந்து தம்பிக்க முதல்வகை விலங்குகள் குற்றமிழைத்தவரைத் தண்டிக்கப் பலமின்றி, ஓடி ஒளியவேண்டிய நெருக்கடி. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என நமக்கு வள்ளுவர் ஆறுதல் கூறினாலும், ஓர் உயிரின் இயல்பும், இயற்கை குணமும் அதன் பெற்றோர் உயிர் அணுக்களையும் சார்ந்தது என்கிறது அறிவியல். ஆனால் அதிலிருந்து மெள்ள மெள்ள விடுபட மனிதனால் முடியும். காரணம் மனித விலங்கு ஆறறிவு கொண்ட இனம். மனிதரினத்திற்கும் இயற்கை குணங்கள் உண்டென்கிற போதும் பல அடையாளங்களை முன்னிறுத்தி தமது சுயத்தை சமூகத்தில் பதிவுசெய்தாலும், அனைவரும் எதிர்பார்ப்பது அமைதியும் சுபிட்சமும் கூடிய வாழ்க்கை. ஆனால் அது அத்தனை எளிதானதல்ல என்பதை வரலாறுகள் உறுதிசெய்கின்றன. யுத்தங்களை வேடிக்கைபார்த்ததுபோதும் என ஒரு கட்டத்தில் தீர்மானித்து அமைதிகாண முயற்சிப்பதில்லையா ? எழுத்தும் ஒரு சமுகத்தின் மக்களிடையே இணக்கமான சூழ்நிலையை உருவாக்க, குறைகளை களைய தமது கதைமாந்தர்கள் ஊடாகப் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
கொடிய விலங்கிடமிருந்து, காட்டில் சாதுவான மிருகங்கள் உயிரைக் காத்துக்கொள்ள ஓடி ஒளிகின்றன. விலங்குகளின் புறதோற்றம் கொண்டு, அவை கொடியவையா அல்லவா எனத் தீர்மானிக்கமுடியும். மனிதரின் புறத்தோற்றம் என்பது என்ன ? அது ஒருவரைப் பார்த்து யார் எனக்கேள்வி கேட்பதில் தொடங்குகிறது ? அவரது அடையாளத் தேடலின் ஆரம்பம் அது.
ஒரு பெண்ணும் அவள் வீட்டுப் பசுவும் கருவுறுகிறார்கள் என்பதை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். ஒரு பசுவின் பேறுகாலம் ஒன்பது மாதங்கள் எனச்சொல்லப்படுகிறது. பெண்ணிற்குப் பேறுகாலம் பத்து மாதங்கள். இருவருக்கும் பிரசவ வலியும் சம்பவ நிகழ்வும் வள்ளுவர் குறள்படி அதிகவேற்றுமைகள் இல்லை. ஆனாலும் பிறந்த குழந்தையை அடையாளப் படுத்த தாய் மட்டும் போதாதென்று அவனது கணவனையும்( உண்மையில் தாய் மட்டுமே குழந்தையின் தந்தையை அறிவாள் என்கிறபோதும்) முன்னிறுத்தவேண்டிய சமூகத் தேவை மனிதருக்கு உள்ளது. கன்றுக்குத் தன் தந்தையை தாயுடன் உறவுகொண்ட காளையை அடையாளப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தங்கள் இல்லை.
ஓர் உயிரை மனிதன், பறவை, பூச்சி, விலங்கு என பகுத்து அடையாளம் காண ஆரம்பித்து மெள்ள மெள்ள ஆண் பெண், கொடிய சாதுவான, காடு வீடென அடையாளம் பெற்று குறிப்பாக மனித உயிர் பின்னர் ஆப்ரிக்கன், ஆசியன், ஐரோப்பியன் என இன அடையாளமும்; இந்தியன், பிரான்சு நாட்டவன், ஸ்பெயின் நாட்டவன் என்கிற தேச அடையாளமும், இன்னும் நுணுக்கமாக அதற்குள் நுழைந்து தமிழன், மலையாளி, தெலுங்கன் வங்காளி என பல குறியீடுகள் மனிதர்களின் அடையாளச் சங்கிலியில் கண்ணிகளாகளாக இருக்கின்றன. இவை அனைத்துமே செய்தொழில் அளித்த அடையாளங்களில்லை, பிறப்புதரும் உயிரியல் அடையாளங்கள், புற அடையாளங்கள். இவை நமது உடன் பிறந்த அடையாளங்கள்.
மனிதருக்கு இன்னொரு அடையாளம் அது அவனுடைய அக அடையாளாம். விலங்குகளித்திலிருந்து அவனை வேறுபடுத்திக் காட்டும் அடையாளம் : அறிவும், அதன்விளைவாக சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் திறனும்.
விலங்குகள் பிறர் கட்டளைக்கு கீழ்ப் படிய மட்டுமே தெரிந்தவை, அவை இன்று என்னால் உழமுடியாது என கிளர்ச்சியோ, ஒட்டுமொத்த உழவுமாடுகளையும் சேர்த்துக்கொண்டு, நிலம் எங்களுக்குச் சொந்தம், இனி மனிதர்கள் நிலத்தை உழவேண்டுமென புரட்சியிலோ இறங்குவதில்லை. மனிதன் சிந்திக்கிறான், சிந்தித்து அதனபடி நடக்கிறான். முட்டாளாக இருந்தால் கூட யோசித்து ஒரு முடிவச்சொல்கிறான். அம்முடிவுப்படி செயல்படுகிறான். அடிமையாக இருப்பதும், ஆள்பவனாக இருப்பதும் மனிதன் கற்றவை கேட்டவை மட்டுமின்றி, அவன் அனுபவத்தினாலும் எடுக்கிற முடிவு. அடிமையாக இருந்தது போதும் என கிளர்ச்சியில் இறங்குவதும், ஒட்டுமொத்த மாற்றம் வேண்டி புரட்சியில் இறங்குவதும் அவன் அறிவு தரும் வழிகாட்டலில். நடக்கின்றன. இது அம்மனிதனைச் சார்ந்த சமூகம், ஊர் அனைத்திற்கும் பொருந்தும்.
மனிதர்களின் அகஅடையாளம் நூறுவிழுக்காடு தீமையை மட்டுமே கொண்டோ அல்லது நன்மையைமட்டுமே கொண்டோ உருவாவது அல்ல அவரவர்க்கு கிடைக்கும் வாய்ப்பும் வசதியும், அமையும் சமூகச் சூழலும் பெற்ற கல்வியும், அனுபவமும் அதனைத் தீர்மானிக்கின்றது. நகரீக சமூகம் வன விலங்குகளுக்கான நீதிமுறையிலிருந்து விலக்களித்து மெலியாரை வலியாரிடமிருந்து காப்பாற்ற சட்டத்தையும் சாட்சிகளைக்கொண்டு இழைத்த குற்றங்களுக்குக் குற்றவாளி பொறுப்பென்கிறது. காரணம் குற்றம் இழைக்கிறவன் மனிதன், விலங்கு அல்ல. அவன் விரும்பினால், முனைந்தால் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமைகளைத் தவிர்க்கமுடியும், விலங்குகளிடமிருந்து அவனை வேறாக அடையாளப்படுத்துகிற அவனுடைய அறிவுக்கும் உணர்ச்சிக்குமான போராட்டத்தில் யார் வெல்கிறார்கள் எனபதை பொறுத்தது அது.
இயற்கை, இயல்பு என்பது ஒழுங்கின்மை பண்பைக்கொண்டது. காட்டில் செடிகொடியும்பிறவும் அதன் இயல்பில் வளரலாம், பிறவற்றை நிராகரித்து தம் நலம் பேணலாம். மாறாக ஒரு நகருக்கு அழகூட்ட பொது பூங்காவிற்கு கொண்டுவரப்படும் செடியும், கொடியும் மரமும் சில ஒழுங்குகளுக்கு, நியதிகளுக்கு உடபடவேண்டும் அதுதான் பூங்காவிற்கு அழகைத் தரும். ஆரோவில் நகருக்கு மட்டுமல்ல, எல்லா சமூகத்திற்கும் இதுபொருந்தும்.
நாடா கொன்றோ ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே
– ஔவை
_______________________________________
இறந்த காலம் (நாவல்)
ஆசிரியர்: நாகரத்தினம் கிருஷ்ணா
சந்தியா பதிப்பகம், சென்னை