Tag Archives: பிரெஞ்சு இலக்கிய

மொழிவது சுகம்- நவம்பர் -2

பெங்களூரும் திருவாரூரும்

கடந்த தி.மு.க ஆட்சியில் நடந்த ஒன்றிரண்டு நல்ல காரியங்களுள் அண்ணா நூற்றாண்டு நூலகமுமொன்று. அதைக் குழந்தை மருத்துவத்திற்கு அம்மையார் தாரைவார்த்திருக்கிறார். இது ஏதோ முதலமைச்சருக்கு தமிழ்நாட்டின் மீதும் தமிழர் நலனிலுமுள்ள அக்கரையால் நடந்ததல்ல வழக்கம்போலவே முன்னாள் முதலமைச்சரின் மீதுள்ள வயிற்ரெரிச்சலால் வந்தது. இருவருக்கும் அப்படியென்ன சொந்த பகைகள் இருக்க முடியுமோ? அண்மைக்கால தி.நகர் விவகாரங்கள் வரை தி.மு.க வுக்கும் முன்னாள் முதலமைச்சருக்கும் சிறுமை சேர்க்கிற விவகாரங்கள் உண்டு. ஆனால் கருணாநிதி இடைக்கிடை தமிழ்மீதும் தமிழர்மீதும் அவ்வபோது கருணைகாட்டுவார். இந்த அம்மாவிடம் எப்போதும் இருந்ததில்லை என்பதை மீண்டும் உறுதிபடுத்தியிருக்கிறார்.

ஆகா!சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியாயிற்று, மூவர் தூக்குதண்டனை முடிவுக்கு வந்ததென்று நினைத்தோம், உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கு பெப்பே என்றார் தமிழர்களைப்பார்த்து. ஆட்சிக்கு வந்த நாள்முதல் மக்களின்  அடிப்படை பிரச்சினைகளில் அக்கறைகொண்டு செயல்படுவதாக இல்லை அல்லது அதற்கான எந்த அறிகுறிகளுமில்லை. அந்த அம்மா எப்போதும் திருந்தமாட்டார், அப்படித்தான் என்பார்கள். அதில் உண்மையில்லாமலில்லை. அவருக்குக் கோபம் பெங்களூரிடமட்டுமல்ல திருவாரூரிடமும் இருக்கிறது மூர்க்கத்துடனிருக்கிற காவல் தெய்வத்திடம் வரத்தையா எதிர்பார்க்க முடியும்? பிடியுங்கள் சாபம் தமிழர்கள் கெட்டொழிந்து போகக் கடவது!

கொன்க்கூர் பிரெஞ்சு இலக்கிய பரிசு -2011

பிரான்சை தெரிந்து கொள்ளுங்கள் -10ல் இவ்வருடம் Carole Martinez என்ற பெண்நாவலாசிரியையின் நாவலான முனகலின் வெளி (Du domaine des Murmures) என்ற நாவலுக்கு  பரிசு கிடைக்க்ககூடுமென எதிர்பார்க்கிறேன் என்பதாக எழுதியிருந்தேன். எனது கணிப்பு தவறிவிட்டது. ஒரு ஓட்டுவித்தியாசத்தில் இவர் நூல் பரிசை இழந்துவிட்டது. கொன்கூர் நேற்று அறிவித்த தேர்வில் பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்த நாவல் L’Art français de la guerre -(பிரெஞ்சுக்காரர்களின் ராணுவக் கலை) என்ற இந்த புனைவு Alexis Jenni என்பவரால் எழுதப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ தளபதி தனது அனுபவங்களை, நிரந்தர வேலையின்றி ஊர்ச்சுற்றிக்கொண்டு காதல், மரியுவானா இரவு விடுதிகளென அலையும் ஓர் இளஞனிடம் பகிர்ந்துகொள்வதாகப் புனையப்பட்டுள்ளது. பிரெஞ்சுக்காரர்களில் காலனியகால ஆட்சியயையும் காலனிகளை நடத்திய விதமும், அம்மக்களின் சுதந்திர உணர்வுகளை நசுக்க எடுத்தமுயற்சிகளையும் நாவல் விவாதிக்கிறது. அலெக்ஸிஸ் ஜெனி என்கிற உயிரியல் ஆசிரியருக்கு இது முதல் புனைவு.அவர் தம்மை ஞாயிற்றுக்கிழமை எழுத்தாளர் என ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதாவது தாம் முழு நேர எழுத்தாளர் இல்லையென்ற பொருளில். ஐம்பது வயதில் முதல் நாவலை எழுதியிருந்த ஆசிரியரின் இந்நாவலை எந்த பதிப்பாளரும் பதிப்பிக்க முன்வரவில்லை 17 முறை பதிப்பாளர்களால் நிராகரிக்கபட்டதென்று சொல்கிறார்.

கொன்க்கூர் பிரெஞ்சு இலக்கிய பரிசு பிற இலக்கிய பரிசுகளைபோலவே  விமர்சனத்துக்கு உள்ளாவதுண்டு இவ்வருடம் இளையதலைமுறை எழுத்தாளர்களில் ஒரு சிலர் அதற்கெதிராக குற்றசாட்டை எழுப்பியுள்ளனர்.  தேர்வுக்குழுவினர் அனைவரும் சராசரியாக 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்கள் தங்கள் படைப்பை தேர்வு செய்யாமல் போனதற்கு வயதுதான் காரணம் என்கிறார்கள் இளம் எழுத்தாளர்கள். அவர்கள் சொல்வதுபோல பல நல்ல புதிய தலைமுறையினரின் நூல்கள் பரிசீலனை அளவிலேயே நிராகரிக்கபட்டதென்கிற குற்றச்சாட்டு இருக்கிறது.

பிச்சைபாத்திரம் நண்பர் சுரேஷ்கண்ணனின் வலைப்பூ.

ராயர் காப்பி கிளப்பில் எனக்கு அறிமுகமானவர். இராயர் காப்பி கிளப் பல நல்ல படைப்பாளிகளின் அறிமுகத்தை எனக்கு ஏற்படுத்தித்தந்தது. சுரேஷ் கண்ணனுக்கு நல்ல பார்வையுண்டு. மிக நாசூக்காக ஒரு தேர்ந்தபடைப்பாளியின் மொழியில் சொல்லக்கூடிய ஆற்றல் கண்டு வியந்திருக்கிறேன். இவரது திரைப்படங்கள் குறித்த விமர்சனங்கள், கட்டுரைகள் கவனத்தை பெறுபவை. தெய்வத் திருமகள் திரைபடங்குறித்த அவரது சமீபத்திய  கட்டுரையை விரும்பி வாசித்தேன்.

“மூலப்படைப்பை, நாய் கொண்டு போட்ட வஸது போல் வாந்தியெடுத்து வைத்து விட்டு அதை ‘தமிழின் உலக சினிமா’ என்று பெருமையடித்துக் கொள்வது மாத்திரமல்லாமல், அதை சர்வதேச விருதிற்கான போட்டிகளுக்கும் அனுப்பி வைக்க எத்தனை நெஞ்சுறுதி வேண்டும்? இந்த வணிகர்களின் சுயபெருமைத் தேடல்களுக்காக சர்வதே அரங்கில் ஒரு தேசமே அவமானப்பட நேர்வது எத்தனை பெரிய வெட்கமான செயல்.” (பார்க்க அவரது கட்டுரை  தெய்வத் திருமகன் எனும் இதிகாசம்’)

http://pitchaipathiram.blogspot.com/2011/08/blog-post_22.html

——