Tag Archives: பத்ரிக் மொதியானொ

பத்ரிக் மொதியானொ: நினவுகளை கலை நுட்பத்துடன் எடுத்துரைக்கக் கூடியவர்

France Nobel Literature” நோபெல் பரிசும் பிரெஞ்சு இலக்கியமும் இணைபிரியாதவை, ஏனெனில் பிரெஞ்சு இலக்கியம், நோபெல் பரிசு என்கிற ஒளிப்பிரபைக்குள் வருகிறது” -என ‘பத்ரிக் மொதியானொ’வின் பெயரை 2014ம் ஆண்டு நோபெல் இலக்கிய பரிசுக்குத் தேர்வு செய்து முடிவை அறிவித்த தினத்தில் பிரான்சு நாட்டு வெளியுறவு அமைச்சர் கூறியிருந்தார். அவருடைய நாட்டின் இலக்கியபுகழ் குறித்து பெருமிதம்கொள்ள அமைச்சருக்குக் காரணங்கள் இருக்கின்றன. உலக நாடுகளில் நோபெல் பரிசை அதிகம் வென்ற நாடுகளில் பிரான்சு முதலாவது – இது நாள்வரை பதினைந்து பரிசுகள். அமெரிக்காவும் இங்கிலாந்தும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. 1964 ஆம் ஆண்டு தமக்களிக்கப்பட்ட பரிசை ழான் போல் சார்த்துரு மறுக்கவில்லையெனில் பரிசுபெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்குமெனவும் பிரெஞ்சு மக்கள் தெரிவிக்கிறார்கள். ழான் போல் சார்த்ருவின் மறுப்பு நோபெல் பரிசுத் குழுவினரைச் சீண்டியதாகவும், கோபமுற்ற பரிசுக்குழுவினர் இருபது, ஆண்டுகள் பிரெஞ்சு இலக்கியவாதிகளைத் தண்டித்தத்தாகவும்(?) பேச்சு. 1985ம் ஆண்டு குளோது சிமோன் என்ற பிரெஞ்சு எழுத்தாளருக்குப் பரிசினை அளித்ததின் மூலம் பிணக்கு முடிவுக்கு வந்ததாகப் பிரெஞ்சு மக்களிடையே பரவலாக எண்ணமிருக்கிறது. 2008ல் கிளேசியோவுக்கு இலக்கியத்திற்கான நோபெல் பரிசு கிடைத்த ஆறாண்டுகள் இடைவெளியில் மற்றுமொரு பரிசு எந்பதால் பிரெஞ்சு இலக்கிய உலகம் மகிழ்ச்சியில் திளைக்கிறது, தங்கள் எதிர்காலம் ஆரோக்கியமானதென நம்பிக்கைக்கொண்டிருக்கிறது.

” நான் எழுதிய நூல்களைக் குறித்து குழப்பமே மிஞ்சுகிறது. ஓரே ஒரு புத்தகத்தைத்தான் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக எழுதியிருக்கிறேன். ( 30ம்க்கு மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன). நடப்பது அனைத்துமே உண்மை அல்லாதது போலவும், கனவில் நிகழ்வதுபோலவும்; என்னைப்போன்ற பிறிதொருவருக்கே பரிசும், புகழும் வந்தடைந்திருப்பதுபோலவும். நினைக்கத் தோன்றுகிறது. எனது பெயர், பரிசுபெற வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் இருக்கிறதென்று சொன்னார்கள், ஆனால் தேர்வு செய்யப்படுவேன் என நினைக்கவில்லை. நான் போற்றிய,வியந்த எழுத்தாளர்களுக்கு இணையாக நானும் வைக்கப்படுவேன் என நினைத்ததில்லை. ” -இவை, தேர்வுக்குழு தமது பெயரை அறிவித்த நாளில் பிரெஞ்சு பத்திரிகையாளர்களிடம் மொதியானொ கூறியவை, அவரை அறிந்தவர்களுக்கு இப்பதில் வியப்பினை அளித்திருக்க வாய்ப்பில்லை.

“பத்ரிக் மொதியானொவா, யார் அந்த ஆள்?” எனக் “தி கார்டியன்” இதழ் பத்திரிக்கையாளர் கேட்டதாக ஒரு செய்தி பிரெஞ்சு தினசரியொன்றில் வெளியாகி இருந்தது. அவர் கோபத்திற்குக் காரணம், அமெரிக்க எழுத்தாளர் ‘பிலிப் ரோத்’ திற்கு பரிசு கிடைக்காதது. இல்லை என்றானதும் கோபம் பத்ரிக் மொதியானொ மீது திரும்பியிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் அறியப்பட்ட அளவிற்கு ஆங்கில மொழி பேசும் பகுதிகளில் மொதியானொ நன்கறியப்டாத பெயாராம். அமெரிக்காவில் இதுவரை மோதியானாவின் மூன்று நூல்களே வந்திருப்பதாகவும் அவையும் பிற பிரெஞ்சு எழுத்தாளர்களைக்காட்டிலும் விற்பனையில் தேக்க நிலையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. நோபெல் பரிசு அக்குறையைக் களைந்து விடுமென பிரெஞ்சு இலக்கிய உலகம் எதிர்பார்க்கிறது.

பத்ரிக் மொதியானொ எப்படி? பிரான்சு நாட்டைப் பொறுத்தவரை, நோபெல் பரிசு அளிக்காமல் இருந்திருந்தாலுங்கூட ஓர் முக்கியமான எழுத்தாளர். என்றைக்குப் பிரெஞ்சு இலக்கிய உலகு தங்கள் நாட்டின் அதிமுக்கியம்வாய்ந்த “கொன்க்கூர் பரிசை” அளித்தார்களோ, அன்றிலிருந்தே அவர் ஓர் முக்கிய எழுத்தாளர். பிரான்சுக்கு வந்த புதிது, பிரெஞ்சு இலக்கியத்தில் அதிகம் அக்கறை கொள்ளாத தொடக்க காலம். ஒரு நாள் இரவு ‘ஆண்ட்டென் 2′ என்ற பிரெஞ்சு சேனலின் வாரம் ஒருமுறை நடபெறும் இலக்கிய நிகழ்விற்கு பத்ரிக் மொதியானொ’ வந்திருந்தார். நல்ல உயரம், அதற்கேற்ற உடல் வாகு. நிகழ்ச்சியை நடத்திய மொழிவிற்பன்னர் ‘பெர்னார் பீவோவும் கிட்டத்தட்ட அவரைப்போலவே இருந்தார். ‘பெர்னார் பீவோ’வின் கேள்விகள் சுருக்கமாக இருந்தபோதிலும் நிகழ்ச்சியைப் பார்த்த எனக்கு அவற்றைப் புரிந்துகொள்வதில் சங்கடங்கள் இருந்தன. மாறாக பத்ரிக் மோதியானோவின் பதில்கள் எளிதாகப் புரிந்தன. ஒவ்வொரு பதிலையும் நிறுத்தி நிதானமாகக்கூறினார். அவருடைய பதில் நீளமாக இருந்தபோதிலும் எளிமையான சொற்களைக் கையாண்டார். ஆனால் அதைக் கூறிய விதம், அவரை முன்பின் அறிந்திராத என்னை நகைக்கச் செய்தது. பாதி வாக்கியத்தை கூறுவார், பல நொடிகளை தயக்கத்துடன் கழித்த பிறகு, மீதி வாக்கியத்திற்கு வீட்டிற்கு சொல்லியனுப்பி இருப்பதுபோலக் காத்திருப்பார், வந்து சேர்ந்ததை உறுதிப்படுத்திக்கொண்டவர்போல மிச்சமிருக்கும் வாக்கியம் வெளிப்படும்.. அப்பதிலும் திரும்பத் திரும்பவரும், ‘கீறல் விழுந்த இசைத்தட்டு’ போல. நிகழ்ச்சியை நடத்தியவருக்கும் வந்திருந்த பார்வையாளர்களுக்கும் மொதியானொவின் பதில்கள் எப்படி இருந்தனவோ தெரியாது. எனக்கு அன்று இரண்டொரு பிரெஞ்சு சொற்கள் கற்க வாய்பாக அது அமைந்தது. தொண்ணூறுகளில் இருந்துதான் பிரெஞ்சு இலக்கியத்தில் ஆர்வம் பிறந்ததென்று சொல்லவேண்டும். உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்கானப் பாடத் திட்டத்தில் நவீன இலக்கியங்களிலிருந்து சில பகுதிகளைப் பிரசுரித்து எளிமையான கேள்விகளுடன் விளக்கம் சொல்லப்பட்டிருக்கும். பல நவீன எழுத்தாளர்கள் அப்பாடநூல்கள் மூலமாக எனக்குத் தெரியவந்தார்கள். அவர்களில் பத்ரிக் மொதியானொ¡வும் ஒருவர். இவர்களுக்கெல்லாம் நோபெல் பரிசு கிடைக்குமென சில பெயர்கள் பிரெஞ்சு இலக்கிய உலகில் அவ்வப்போது வதந்திகளாக பரவும்: ஹூல்பெக், மரி தியய், பஸ்க்கால் கிஞ்ஞார் எனப் பெயர்கள் அடிபடும், மொதியானோவின் பெயரும் அதிலுண்டு, பட்டியலில் மூன்றாவதாகவோ நான்காவதாகவோ வருவார். ஒருவேளை மற்றவர்களை மொதியானொ முந்திக்கொண்டதற்கு வயது அல்லது அவரது சுவீடன் உறவு காரணமாக இருந்திருக்கலாம் என்ற வதந்தி தற்போது.

பத்ரிக் மொதியானொ¡விற்கு நோபல் பரிசினை வழங்கியிருப்பதன் மூலம் பிரெஞ்சு இலக்கிய உலகின் தனித்துவம் மீண்டும் உலகிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதென்றே நம்பவேண்டியிருக்கிறது. உலகிற்கு பிரெஞ்சு இலகியத்தின் பங்களிப்பைக் குறைத்து பதிப்பிடமுடியாது. எடுத்துரைப்ப்பிலும், கதைசொல்லலிலும் வடிவத்திலும் ஒரு மாபெரும் புரட்சியை நடத்திக் காட்டியவர்கள். கடந்த 30 ஆண்டுகளாக ஆண்டுகளாக ‘Ecriture de soi’ எனப்படுகிற ‘தன்னை எழுதுதல்’ பிரெஞ்சு இலக்கிய உலகை ஆளுமை செய்கிறது. கட்டுரை, சிறுகதை, புதினம் எனும் எடுத்துரைப்பின் அனைத்துவடிவங்களிலும் இது நிரூபணம் ஆகியுள்ளது. மொதியானொவின் எழுத்துக்கள் அனைத்துமே தன்னை எழுதுதல் வகைமை சார்ந்தவை. அவருடைய கதைகள், கட்டுரைகள் நாவல்கள் அனைத்துமே அவர் வாழ்க்கையை, அவர், குடும்பத்தை, அவர் நண்பர்களை, அவர் சந்தித்த மனிதர்களை, அவர் குடியிருந்த வீட்டை, அந்த வீடிருந்த கட்டிடத்தை, அக்கடிதம் இருந்த வீதியைத் திரும்பத் திருப்ப அலுக்காமல் பேசுபவை. அவருடைய தன்னை எழுதலில்: சுய வரலாறும் உண்டு, சுய புனைவும் உண்டு. அவருடைய சுயபுனைவுகள் வித்தியாசமானவை, எடுத்துரைப்பில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு அதிலின்று வெற்றியும் பெற்றிர்ருக்கின்றன. கதைக் களனை அவர் பயன்படுத்திக்கொள்ளும் விதமும், எளிமையான கதைசொல்லலும், தேடலும், மொதியானோவை தனித்து அடையாளப்படுத்துகின்றன.

Un pedigree என்பது அவருடைய சுயவரலாறு, 2005ல் வெளிவந்தது. இலக்கிய விமர்சகர்களின் கருத்துப்படி அதொரு hetro-biography, auro-biography அல்ல. அதாவது தன்னை பிறனாகப் பாவித்து எழுதப்பட்ட சுயவரலாறு. இங்கே நோபெல் பரிசு அறிவிக்கப்பட்டதும் பத்திரிகையாளர்களிடம் அவர் தெரிவித்த: “பரிசு அறிவிப்பும் அது சார்ந்த கொண்டாட்டங்களும் எனக்கல்ல, என்னைபோன்ற ஒருவருக்கு அளித்ததாகவே பார்க்கிறேன்” என்ற கூற்றை நினைவு கூர்தல் வேண்டும். பத்ரிக் மொதியானொவின் சுயவரலாறு இப்படித் தொடங்குகிறது; ” ஜூலை மாதம் 30ந்தேதி 1945ம் ஆண்டு பூலோஜ்ன் – பில்லியான்-கூர்- ல், எண்-11, மார்கரீத் சந்தில் பிறந்தேன்” காலச் சுவடு வெளிவந்திருக்கும் ‘உயிர்க்கொல்லி’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பத்ரிக் மொதியானொவின் சிறுகதை ‘சேன் நதியில்’ கதை சொல்லியும், மதாம் பிளாஷ் மகளான சோனியாவும் பிறந்தது பூலோஜ்ன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது, வீட்டு எண்ணை மட்டும் தவிர்த்திருக்கிறார். அவருடைய சுயவரலாற்றில், ” மொதியானோவின் தாய் நாடகபட்டறையில் பயிற்சிபெற சேர்ந்ததும், தன்னைச் (மொதியானோவை) சரியாகக் கவனிப்பதில்லை” – என்றும் வருகிறது. ‘சேன் நதி’க் கதையிலும் நாடகப் பட்டறையில் தொழில்முறை கலைஞராக பயிற்சி பெறும் சோனியா தனது மகளை கவனிப்பதில் அக்கறைகொள்வதில்லை. அதுபோலவே மொதியானொவின் சுயவரலாற்றில், நீதிமன்றத் தீர்ப்பின்படி வீட்டுத்தளவாடங்களை அபகரிக்க நீதிமன்ற உத்தரவுடன் அரசாங்க பிரதிநிதி வரப்போகிறார் என்றறிந்து, வீட்டுத் தளவாடங்களை இரவோடிரவாக எழுத்தாளரின் தந்தை வேறிடத்திற்கு அனுப்பியதாகக் கூறியிருப்பார், “வீடு வெறிச்சோடிக்கிடக்கும்”, என சொல்லப்பட்டிருக்கும். இக்காட்சியையும் “சேன்நதி” சிறுகதையில் அப்படியே பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். அதுபோலவே சுயவராற்றில், ” மூன்றாவது மாடியில் எந்நேரமும் விருந்தினர்களின் சிரிப்பும் கும்மாளமும் அமர்க்களப்படும், நாங்கள் ( மொதியானொவும் அவரது சகோதரரும்) அதைக் காதில் வாங்கியிருக்கிறோம். நாங்கள் கவனிப்பாரற்று இருக்க பக்கத்து அறையில் அவரது சினேகிதர் சினேகிதைகளுடன் அம்மா கொண்டாட்டத்தில் இருப்பார்கள்” என்பதெல்லாம் ‘உயிர்க்கொல்லித் தொகுப்பில் இடம்பெற்றுள்ள “சேன் நதி”க்கதையில் அப்படியே இடம் பெறுகின்றன. இவ்வுண்மை அவருடைய அனைத்துப் புனைவுகளுக்கும், எடுத்துரைப்பிற்கும் பொருந்தக்கூடியது. எனவே பத்ரிக் மொதியானொ பிரெஞ்சு எழுத்தாளர்களையும் பார்க்க ஒப்பீட்டு அளவில் கூடுதலாக ‘தன்னை எழுதுதலில்’ முழுமையாக ஒப்படைத்துக்கொண்டவர் எனத் தெரிவிக்கலாம். நோபெல் பரிசு பத்ரிக் மொதியானொவிற்குக் கிடைத்தது என்பதைவிட ‘தன்னை எழுதுதலுக்குக்’ கிடைத்தப் பரிசு எனக் கூறினால் மிகையில்லை.

1978ம் ஆண்டு மொதியானொ¡விற்குப் பிரெஞ்சு இலக்கிய உலகின் கொன்க்கூர் பரிசு (Prix Goncourt) அவருடய “Rue des boutiques obscures”( ரோமிலுள்ள தெருவின் பெயரை நாவலின் தலைப்புக்குப் பயன்படுத்திக்கொண்டார் ) மொதியானொவை நெருங்கக் காரணமாயிற்று. வாசிப்புத் தேர்வுக்கு இதுபோன்ற பரிசுகளும் நமக்கு உதவுகின்றன. கொன்க்கூர் பரிசுபெறும் நாவல்களை வாங்குவதென்ற முடிவின் அடிப்படையில், பழைய புத்தகக்கடையில் பாக்கெட் நாவல் தரத்தில் வீட்டிற்கு வந்தது. இந் நாவலும் சரி இதற்கு முன்பாக வாசித்திருந்த ஒன்றிரண்டு சிறுகதைகளும் சரி பலரும் கூறுவதைப்போல மொதியானொ கடந்த காலத்தைத் தேடும் மனிதரென்பதை தெரிவிக்கின்றன. எழுத்தாளருக்கு கடந்த காலம் என்பது அவருடைய கடந்த காலம் அல்ல, அவருடன் வாழ்ந்த சக மனிதர்களின் கடந்த காலம். “பிறருடைய கடந்த காலத்தை தன்னுடைய நினைவுகளிலிருந்து மீட்கிறார்”. “Rue des boutiques obscures” நாலை ஆங்கிலத்தில்” Missing person” என்று மொழிபெயர்த்திருந்தது வியப்பை அளித்தது. பிறவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் என்னபெயர் கொடுப்பார்கள் என்ற கேள்வி எழுந்ததால் இந்த வியப்பு. கிடைக்கிற தகவல்களை வைத்து பார்க்கிறபோது மோதியானோவின் எல்லா நாவல்களுமே தொலைந்த மனிதர்களைத் தேடுபவைதான் – ‘தொலைத்த காலத்தைத் தேடும்’ மர்செல் ப்ரூஸ்டு போல.

பத்ரிக் மொதியானொவை இன்னார் என்று புரிந்துகொள்ள தமிழில் வந்துள்ள உயிர்க்கொல்லி சிறுகதைத் தொகுப்பில் உள்ள ‘சேன் நதி ‘ என்ற ஒரு கதை போதுமானது. அவரது படைப்புகளின் பொதுப்பண்புகளாக: அவர் வாழ்க்கையிலும்அவருக்கு வேண்டியவர்களின் வாழ்க்கையிலும் குறுக்கிட்ட மனிதர்களின் பழைய நினைவுகளில் ஆழ்தல், அவற்றை மீட்டெடுத்தல், கையில் முகவரியை வைத்துக்கொண்டு அம் முகவரிக்குரிய நபர்களைத் தேடுதல், அவர்களின் அடையாளங்கள், மொதியானொவின் காலம் ( குறிப்பாக பாரீஸ் ஜெர்மன் ஆக்ரமிப்பிலிருந்த நாட்கள்) மொதியானொ காற்பதித்த இடங்கள் ( பாரீஸ் வீதிகள், சந்து பொந்துகள், நதிக்கரைகள், பூங்காக்கள்) இரண்டாம் உலகயுத்தம், ஜெர்மானியர் பிடியிலிருந்த பாரீஸ் நகர மக்களின் துயர வாழ்க்கை ஆகியவைத் திரும்பத் திரும்ப வருகின்றன. நோபெல் பரிசு தேர்வு முடிவை வெளியிட்ட அன்று “கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக ஒரு புத்தகத்தையே திரும்பத் திரும்ப எழுதிவருவதைப் போன்ற உணர்வும் இருக்கிறது” எனப் பத்திரிகையாளர்களிடம் மொதியானொ கருத்து தெரிவித்தமைக்குக் காரணம் இதுவே. எனினும் நினைவுகளை துல்லியமாகவும் கலை நுட்பத்துடனும் சொல்வதில் அவர் நிகரற்ரவர்.
——