Tag Archives: நீலக்கடல்

மூத்த இலக்கியவாதிகள் திறனாய்வாளர் விமர்சனங்கள்-4

புதுச்சேரி வட்டாரம்-வரலாறு சார்ந்த நாவல்கள்:
‘நீலக்கடல்’ குறிப்பாக… – தேவமைந்தன்.

 

\dmaindan1nilakadal(தேவமைந்தன்ஒருகுறிப்பு:-தேவமைந்தனின்இயற்பெயர்அ. பசுபதி. 11-03-1948ல் கோவையில் பிறந்த இவர் புதுச்சேரி அரசின் தாகூர்கலைக்கல்லூரியில் தமிழ்த் துறைத்தலைவராகப் பணிபுரிந்துதன் 52-ஆம் அகவையில் விருப்பஓய்வுபெற்றவர். 1968ஆம் ஆண்டு முதல் தேவமைந்தன் படைத்தகவிதைகள், ‘உங்கள்தெருவில் ஒருபாடகன்‘(1976) ‘புல்வெளி‘(1980) ‘போன்சாய்மனிதர்கள்‘(1993) என்ற மூன்று நூல்களாக வெளிவந்துள்ளன. 1969 முதல் வானொலி உரைகள் நிகழ்த்திவருபவர். ‘செந்தமிழும் நாப்பழக்கம்” என்ற இவர்தம் வானொலி உரைத்தொடர் பலமுறை ஒலிபரப்பாகிவருகிறது. புலம்பெயர்ந்தோர் இலக்கியம் குறித்துப் புதுவை நடுவண் பல்கலைக் கழகத்தில் தேவமைந்தன் ஆற்றியஉரை, கீற்று.காம்–இல் பதிவேற்றப் பட்டுள்ளது. திண்ணை.காம்–ல் தொடர்ந்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதிவரும் தேவமைந்தனின் கவிதைப்பக்கங்கள் மரத்தடி.காம், புதுச்சேரி.காம், வார்ப்பு.காம், கவிகள்.தமிழ்.நெட், கீற்று.காம் ஆகிய வலையேடுகளில்உள்ளன.
http://kalapathy.blogspot.com,
http://360.yahoo.com/pasu2tamil,
http://httpdevamaindhan.blogspot.com ஆகிய வலைப்பூக்கள் இவருடையவை.)

———————————

புதுச்சேரி வட்டாரம்-வரலாறு சார்ந்த நாவல்கள்:
‘நீலக்கடல்’ குறிப்பாக… – தேவமைந்தன்.

 

1673 ஆம் ஆண்டு, பிரெஞ்சினர் தாங்கள் இந்தியாவில் முதன் முதலாகக் காலூன்றத் தேர்ந்து கொண்ட நிலப்பகுதியே புதுச்சேரி. காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளும் உள்ளடங்கியது இந்த மாநிலம். முன்னர் பிரெஞ்சினர் ஆளுகைக்கு உட்பட்டிருந்த சந்திரநாகூர் 1954ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்துடன் இணைக்கப்பட்டது. காரைக்கால், புதுச்சேரியிலிருந்து 140 கி.மீ தொலைவில் தெற்கில் தமிழ்நாட்டின் பொறையாறு அருகில் உள்ளது. மாகி மலபார் கடற்கரைப் பகுதியில், அதாவது அரபுக் கடல் பகுதியில் கேரளத்தின் தலைச் சேரிக்கு ஏழு கி.மீ. அருகில் உள்ளது. ஏனாம், ஆந்திர மாநிலத்தில் காகினாடாவுக்குத் தெற்கில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அருகில் உள்ளது. புதுச்சேரியைப் போலவே ஏனாமுக்குக் கிழக்கிலும் வங்காள விரிகுடா உள்ளது. சுருக்கமாகச் சொன்னால் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலப்பகுதிகளில் மூன்று வங்காள விரிகுடாவை ஒட்டியும் ஒரு பகுதி அரபுக் கடலை ஒட்டியும் உள்ளன. 1673ஆம் ஆண்டில் பிரஞ்சுக் கிழக்கிந்தியக் கும்பெனி தன் வாணிகத் தொடர்பைத் தொடங்கியது. 1721இல் மொரீஷியசும் மாகியும் அடுத்த பத்தாமாண்டில் ஏனாமும், அதற்கு ஏழு ஆண்டுகள் கழித்து காரைக்காலும் பிரெஞ்சினரால் கையகப்படுத்தப் பட்டன.

 

1814 ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட வெர்சேல்ஸ் அமைதி உடன்படிக்கைக்குப் பின்னால் ஆங்கிலேயர் வசமிருந்த பிரெஞ்சிந்தியப் பகுதிகள் பிரெஞ்சினரிடமே ஒப்படைக்கப் பெற்றன. இந்திய நாடு விடுதலை பெற்றதை அடுத்துத் தானும் விடுதலைப் போரில் தீவிரமாகக் குதித்த, புதுச்சேரி மாநிலம் 1954, நவம்பர் 1 முதல் விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது. இதையே ‘இணைப்புத் தீர்மான ஒப்பந்தம்'(De-facto settlement) என்பார்கள். இதனால் எழுந்த சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள 1956இல் ஒப்பந்தம் ஒன்று இந்திய பிரெஞ்சு நாடுகளுக்கு இடையில் உருவாக்கப்பெற்றது. விளைவாக 1962, ஆகஸ்ட் 16இல் ‘நடைமுறை அதிகா  மாற்ற ஒப்பந்தத்தில்’ (De-jure transfer) இந்தியப் பிரதமர் நேருவும் பிரஞ்சுத் தூதுவரும் கையொப்பமிட்டனர். அந்த நாள்தான் புதுச்சேரியின் விடுதலை நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

1963இல், இந்திய அரசியலமைப்புச் சட்டம் – ஏழாவது திருத்தத்தின்படி புதுச்சேரி இந்திய நடுவண் அரசின் ஆட்சிப் பகுதியானது. இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவைக்கு ஓர் உறுப்பினரும், மாநிலங்களவைக்கு ஓர் உறுப்பினரும் தேர்ந்தெடுத்து அனுப்பும் உரிமை புதுச்சேரி மாநிலத்துக்கு வழங்கப்பெற்றது. மேலே கொடுக்கப்பட்டிருப்பது, ஆகவும் சுருக்கமான வரலாறு. விரிவான வரலாற்றை விரும்புவோர் முனைவர் சு. தில்லைவனம் அவர்களின் ‘புதுவை வரலாறும் பண்பாடும்’ ‘தமிழகம் புதுவை வரலாறும் பண்பாடும்’ போன்ற நூல்களில் விரிவாக அறிந்து கொள்ளலாம். ஆனந்தரங்கப் பிள்ளை சொஸ்தலிகித தினப்படி சேதி குறிப்பு முதலான ஆவணங்கள், கல்வெட்டுகள் பல வற்றிலிருந்து அரிதின் முயன்று நெய்யப்பெற்றவை அந்த நூல்கள். இன்னுமொரு சுவையான செய்தி. புதுச்சேரியில், கடந்த 1910களில் ‘புதுவைக் கலைமகள்’ என்ற ‘மாத சஞ்சிகை’ நடந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் வித்தியாபானு, விவேகபானு, விவேகபோதினி, வித்யாவிஹாரிணி முதலிய அதே தன்மையுள்ள தமிழ் இலக்கியப் பணியில் ஈடுபாடுள்ள இதழ்கள் நடத்தப்பட்டு வந்தன.  1916ஆம்  ஆண்டில், ‘புதுவைக் கலைமக’ளில், அதன் ஆசிரியர் தம்பி புருஷோத்தமன், ‘ரமணி’ என்ற நாவலைக் கண்டித்து எழுதினார்: அந்தத் திறனாய்வுரையின் தலைப்பு ‘குணா குணவாராய்ச்சி” (புதுவைக் கலைமகள்– [1916] தம்பி புருஷோத்தமன்) என்பதாகும். சொற்போக்கிலும் பொருட்போக்கிலும் ‘ரமணி’ போன்ற நாவல்கள் எவ்வளவு நடைமுறைக்கு முரண்போக்கில் போயின என்பதை அதில் காட்டினார். தம் கதாபாத்திரங்கள் மாறுவேடம் போட்டு விட்டால் போதும்.. ஏற்கெனவே அவர்களுடன் மிகவும் நெருங்கிப் பழகியவர்களுக்குக் கூட அவர்களைத் தெரியாமல் போய்விடும் என்ற அக்கால நாவலாசிரியர்கள் குடித்த மனப்பாலுக்கு மருந்து வழங்கினார். “உலக வழக்கிற்கு முரண்படாதனவாயும், தேசா சாரத்தைத் தழுவினவாயும், பொது சனங்களின் நடவடிக்கைகட்குப் பொருந்தினவாயும், காலதேச நிச ரூப வர்த்தமானங்கட்கு  ஒத்தனவாயுமுள்ள கற்பனைக் கதைகளே நாவல் எனப்படும்” என்று சாராம்சமாக நாவலுக்கு இலக்கணம் எழுதினார். இந்த அடிப்படையிலேயே – தன் எதிர்பார்ப்பை மிகவும் சிறப்பாக நிறைவேற்றும் வகையில் நாவல்கள் தன் ஊரிலேயே பின்னர் படைக்கப்படும் என்று தம்பி புருஷோத்தமன் நினைத்திருப்பாரா! நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல்’ நாவலில் பிரஞ்சுத் தீவான மொரீஷியஸ் முதலானவற்றின் வரலாற்று அடிப்படைகளுக்கு ‘Les Tamouls A L’lle Maurice – Ramoo Sooria Moorthy,’ ‘Les Indienes A L’lle de France, ‘ ‘A Lougnon – (Correspondance du Conseil Superieur de Boubob et de la Compagne des Indes)’ முதலான பற்பல நேரடி ஆவணங்களே சான்று காட்டப் பெற்றுள்ளன.

 

புதுச்சேரியின் சூழல், பேச்சுவழக்கு அதாவது வட்டார வழக்குச் சொற்கள் நிரம்பிய ‘ஆண்களும் பெண்களும்'(1985) என்ற நாவலைப் பிரபஞ்சன் எழுதினார். பிரான்சுக்குப் போய்வரும்  தமிழர்களைக் குறித்தும் பிரஞ்சுப் பண்பாடு குறித்தும் நிரம்பவே கவலைப் பட்டிருக்கிறார்  பிரபஞ்சன். ஜவஹர்லால் நேரு ‘பிரஞ்சுப் பண்பாட்டின் சாளரம்’ என்று புதுச்சேரியைப் பற்றிச் சொன்னதையும் வேதனையோடு நினைத்துப் பார்த்திருக்கிறார். “என் தலைமுறையில் ஜவஹர்லால் நேரு சொன்ன பிரஞ்சுக் கலாச்சாரத்தின் ஜன்னலை நாடிப் பார்த்திருக்கிறேன். சாயங்காலம் ஆனால் பாருக்குச் சென்று குடிப்பதைத் தவிர எங்கள் பிரஞ்ச் தொடர்புடைய  தமிழர்கள் வேறு ஒன்றையும் கற்று வைத்துக் கொள்ளவில்லை. இவர்கள் பேசும் மொழியில் சில பிரஞ்ச் சொற்களைக் கலந்து பேசுகிறார்களே அன்றி பிரஞ்சின் இதயம் எங்கும் காணக் கிடைக்கவில்லை. மேலோட்டமான வாழ்க்கைப் போக்கில் பிரஞ்ச் பண்பாட்டுக் கூறுகள் எங்கள் மேல் படிந்திருக்கின்றன என்பது மெய்தான்!” என்று பிரபஞ்சன் மொழிவது ‘எழுத்தாளர் தர்ம’த்துக்கு ஏற்றதே.(அரவிந்தாசிரமத்தில் வாழ்ந்து ‘வைகறை’ என்ற ஆசிரமக் காலாண்டிதழை வெளியிட உதவிய பி. கோதண்டராமன் சென்ற எழுபதுகளில் எழுதிய ‘எழுத்தாளர் தர்மம்’ என்ற சிறந்த புத்தகம், இங்கே நினைவுகூரத் தக்கது) “எங்கள் தமிழர்கள் இந்த இரண்டு நூற்றாண்டுத் தாகத்தின் விளைவால் மதத்தை மாற்றிக் கொண்டார்கள்; பிரான்சுக்குப் போய் உத்தியோகம் பார்த்தார்கள்; காசு சம்பாதித்தார்கள். அன்றி பிரான்சிலிருந்து தமிழ் மண்ணுக்கு என்ன கொண்டு வந்து சேர்த்தார்கள்? தமிழர்களின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தின் மீது பிரான்ஸ் சிந்தனை ஆட்சி செலுத்தவில்லை. மாற்றி அமைத்து விடவில்லை. உன்னதமான பிரான்சின் கலைகள், இலக்கியங்கள், பல்வேறு பயன்பாடான வாழ்க்கை நெறிகள் எங்கள் மண்ணுக்கு இறக்குமதியாகி, எங்கள் ரத்தத்தில் கலந்து கொண்டனவா, இல்லை” என்று பிரபஞ்சன் சொல்லியதும் குறிப்பிடத்தக்கது.
இருபதாண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்துள்ள நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கட’ல் (திண்ணை.காம் வலையேட்டில் நெடுங்காலம் தொடராக வெளிவந்து அச்சில் ஐந்நூறு [தெமி 1×8] பக்கங்கள் நிரம்பிய நாவல் – முன்னுரைகள் நீங்கலாக…) அந்தப் போலி வாழ்க்கையை வாய்ப்புக் கிடைக்குமிடத்தி லெல்லாம் வெளிப்படுத்தியுள்ளார். இப்பொழுது, திண்ணை.காம்-இல்  தொடராக வெளிவரும் ‘மாத்தா ஹரி” இன்றும் புதுச்சேரியில் நீடிக்கும் அந்த ‘சொல்தா வாழ்க்கை’யின் ஆடம்பரத்தை அப்பட்டமாகச் சித்திரிக்கின்றன. சொல்தாக் குடும்பங்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்த எனக்கு, வேம்புலி நாயக்கர் மருமகளைப் பற்றிய நுணுக்கமான ஒலி+ஒளி+வாசனைச் சித்திரிப்பு மிகவும் சரியாகவே பட்டது.(ப.316) பிரபஞ்சனின் ‘மகாநதி” (1990) இரண்டு தலைமுறைகளைப் பற்றிய நாவல். பிரஞ்சு இந்தியாவின் காலகட்டத்தைச் சார்ந்தது ஒன்று. புதுச்சேரி – விடுதலைப் போராட்டத்திலிருந்து விடுதலை பெற்றது வரையிலுமானது மற்றது. கள்ளுக்கடை நடத்தி வசதியாக வாழ்ந்த கோவிந்தன், தான் ஏற்றுக்கொண்ட அண்ணல் காந்தியின் கொள்கைகளால் அதை மூடிவிட்டு இட்டளிக்கடை வைத்துப் பிழைக்கும் வறுமைநிலைக்குத் தள்ளப்படுவதும், அவரால் முன்னுக்கு வந்தவர்கள் அரசியல் விளையாட்டில் உயர்ந்து போவதும் அந்த நிலையிலும் தன் மனத்தைத் தூய்மையாக அவர் வைத்துக்கொள்ள விரும்புவதும் அதன் கதைப்பின்னல். பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்(1991) என்ற நாவல் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க புதுச்சேரி வரலாற்று நாவல். இதன் கதை சுழலும் காலகட்டம் 1735 ஆமாண்டு முதல் 1743 வரையுள்ள ஏழரை ஆண்டுக் காலகட்டம். குவர்னதோர் துய்மா, அவரின் முதன்மை துபாஷ் பெத்ரோ கனகராய முதலியார், சிறிய துபாஷ் ஆனந்தரங்கம் பிள்ளை, அவர்தம் துணைவியார் மங்கத்தாய், அவர்தம் நண்பர் நாகாபரண பண்டிதர் முதலான பல பாத்திரங்கள் இதில் உலா வருகின்றன. தாசியாகப் பிறந்தாலும் தன் நியாயமான வாழ்க்கைக்காகப் போராடும் கோகிலாம்பாள் இதில் குறிப்பிடத்தக்கவள். வானம் தொட்டு விடும் தூரத்தில் இருப்பதாகப் படுகிறது அவளுக்கு. அப்படியே கையைஉயர்த்தினாள். வானம் கைக்கு வசப்படவில்லை – என்று அறிமுகம் ஆவாள் கோகிலாம்பாள். அதன் விளைவோ என்னவோதான் அடுத்த நாவல் வானம் வசப்படும் என்று உருவானது.

 

அவளையும் அவள் இசையாற்றலையும் நன்கு புரிந்து கொண்டு உயர்த்தும் வேதபுரீசுவரர் கோயில் பஞ்சாட்சரக் குருக்கள், ஆறு ரூபாய் கடனுக்காகச் சிறையிலடைக்கப்பட்டு காதுகள் அறுக்கப்பட்ட சின்னக் கறுப்பு அவனால் எட்டு ரூபாய்க்கு விற்கப்பட்ட அவன் மகள் மானங்காத்தாள், தன் மகளை நினைத்துக் கொண்டே மனநலமிழந்த பேச்சி முதலான அவலக் கதைமாந்தர் அன்றைய புதுச்சேரியை நினைவுபடுத்துகின்றனர். மதரீதியாகப் புரட்சி செய்யும் சீமான் ஐயரும்(மேனாள் சிறுவன் குருசு), தகுதி இல்லாதவர்களிடம் தகுதியில்லாத பொருள்களைக் கேட்கச் சொல்லித் தன் நடுப் பிராயக் கணவனான தளபதி ராகுஜியை நிர்ப்பந்தித்து அவை கிடைத்தபின் அலட்சியம் செய்யும் இளம் பெண் மோஹனா, பிரஞ்சுக்காரனாகப் பிறவாமல் தமிழனாகப் பிறந்ததற்கு மனம் புழுங்கி வாடும் வாகட வரதன் முதலியோரும் குறிப்பிடத்தக்கவர்களே. தண்டுக்கீரை என்ற ஆண்பெயர், அவன் மனைவியான வெள்ளப்பூண்டு என்ற பெண்பெயர், அவர்களின் மகனான கொடுக்காப்புளி என்ற பிள்ளைப் பெயர் ஆகியவை அந்தக் காலப் பெயர்களை, குறிப்பாகப் பொருளியலாலும் சனாதன தர்மத்தாலும் ஒடுக்கப்பட்டவர்களை நினைவு படுத்துகின்றன.

 

பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’ என்ற நாவல் ‘மானுடம் வெல்லும்’ என்பதன் தொடர்ச்சியே போன்று புதுச்சேரி வரலாற்றைச் சித்திரிப்பதாகும். ஆனந்தரங்கப்பிள்ளை, மங்கை அம்மாள் (அவர் தயாரிக்கும் இரவுத் தாம்பூல விளக்கம் பக்.36-37), பானுகிரஹி, அவள் சேடி நீலவேணி, குவர்னர் துரை துய்ப்ளெக்ஸ், மதாம் (ழான்) துய்ப்ளெக்ஸ், பாதிரியார் பெனுவா சாமியார், ரங்கம்மாள், குருசு(குசினி வேலை) முதலான கதை மாந்தர் பலர் இந்த நாவலில் வருகின்றனர். அளவிலும் பெரியது இது.  இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியின் நிகழ்காலத்தையும் புதுவைத் தொழிலாளர் போரட்டங்களையும் பிரபஞ்சன் மூன்றாம் பாகமாகச் சொல்வதாக இருந்தார் என்று நினைக்கிறேன். (மானுடம் வெல்லும் முன்னுரை, கடைசிப் பகுதி) ‘வானம் வசப்படும்,’ ஆனந்தரங்கப்பிள்ளையின் முழு வாழ்க்கையைச் சொல்வதாகவும், 1942ஆம் ஆண்டு தொடங்கி அடுத்த இருபதாண்டுக் கால, புதுச்சேரி, தமிழக அரசியல், மற்றும் தமிழக உழைப்பவர் வரலாற்றைப் புலப்படுத்துவதாகவும் உள்ளது. இதன் இறுதிப் பகுதியில், சேசு சபைச் சாமியார்களின் தூண்டுதலால் மதாம் துய்ப்ளெக்ஸ் (ழான்) தன் கணவரிடம் சொல்லி சம்பாக் கோயிலை இடிக்கச் சொன்னதும். அதற்கேற்ப குவர்னர் துய்ப்ளெக்ஸ் முசே பராதியிடம், அவ்வாறு – சம்பா (ஈசுவரன்) கோவிலை இடிக்க ஆட்கள், அதற்கு மேற்பார்வை பார்க்க தமது இஞ்சினீர் முசே எழர்போல்டு, தமது பாதிரி கொர்து ஆகியோரை இடிக்கும் நாளுக்கு முந்திய இரவே சம்பா கோவிலுக்குள் புதுச்சேரி மக்கள் அறியாதவண்ணம் தங்கிக் கொள்ளுமாறு செய்வித்ததும் பிறவும் உணர்ச்சி பூர்வமாகச் சொல்லப்பட்டுள்ளது. அதே சமயம் முசே கொடுதி வீட்டுக்கு அருகில் இருக்கப்பட்ட மசூதியை இடிக்கக் குவர்னர் சொன்னதற்கு, துலுக்கர் படைத் தலைவனும் மாயே (மாகி)க்காரனுமான அப்துல் ரகுமான் அதை ஆவேசத்தோடு எதிர்த்ததுடன், குவர்னரிடமே சென்று உறுதியுடனும் நெஞ்சுரத்துடனும் முழக்கமிட்டு, “மசூதியை இடிக்க வேண்டாம்!” என்று தன் உத்தரவைத் தானே குவர்னர் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு செய்ததும் அருமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி வாழ்க்கையை சமூக எதார்த்த நோக்கில் சித்திரிக்கும் நாவல்களைப் படைப்பதில் குறிப்பிடத் தக்கவர் பாவண்ணன் ஆவார். 1987இல் ‘வாழ்க்கை ஒரு விசாரணை’ நாவலில் புதுச்சேரி மண்ணின் மனிதர்களை அசலாக நடமாடவிட்ட திறம் மிக்கவர். நல்லவனாக இருந்தால் இந்த நாசகார சமூகத்தில் என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதைக் குடிகாரனாக இருந்தாலும் எவர் வம்புக்கும் போகாதவனும் மானமுள்ள உழைப்பாளியுமான காளியப்பன் என்ற கதைமாந்தன் மூலம் மட்டுமல்ல அவனைச் சார்ந்தவர்களைக் கொண்டும் சித்திரித்திருக்கிறார் பாவண்ணன். வடிவேலுத் தாத்தா, மங்காத்தா,ரங்கன், அருக்காணி, கண்ணம்மா போன்ற கதைமாந்தரும் இந்த நாவலின் எதார்த்தப் பாத்திரங்களே. வடிவேலுத் தாத்தா தன் சூழலின் நிகழ்வுகளையே கதைகளாக்கிச் சொல்லும் திறமையை இயல்பாகப் பெற்றவர். எவருக்கும் அஞ்சாதவருங்கூட. “நீ சொத்து சேரு. ஊடு கட்டு. ஆயிரம் பணக்காரனாக இரு. வேணாம்ல. அதிகார மசுரு இன்னா வாழுதுங்கறேன்?” என்ற அவரது கேள்வியில் விரிவாகச் சொல்ல முடியாத சமூக ஆதிக்க மனிதர்களின் வரலாறும் அவர்களின்முன் மானமுள்ளவன் வாழவேண்டிய திடமும் ஆகச் சுருக்கமாக மொழியப்பட்டு விடுகின்றன. பாவண்ணனின் முழுவீச்சிலான புதுச்சேரிச் சமூக விமரிசனச் சித்திரிப்பைச் ‘சிதறல்கள்(1990)’ நாவலில் காணமுடியும்.

 

சென்ற எண்பதுகளின் முதற்பாதியில் புதுச்சேரியின் முதன்மையான மூன்று ஆலைகள் மூடப்பட்டதனால் ஆலைத் தொழிலாளர் குடும்பங்கள் சிதறிப்போனதே அதன் கருப்பொருள். அந்தக் காலகட்டத்தில் அத்தகைய சிதறல்களைக் காணநேர்ந்த எங்களுக்கு, அந்த நாவல் மேலுமதிகமான சோகத்தை விளைவித்தது மறக்க முடியாத வேதனை. புதுச்சேரியில் பிரஞ்சியர் ஆலை தொடங்கிய வரலாறு இதில் வயணமாகச் சொல்லப்பெறுவதும் குறிப்பிடத் தக்கது. பாவண்ணனின் ‘ஒரு மனிதரும் சில வருஷங்களும்(1989),’ மனிதர் தம் சகமனிதர்களை நம்பிச் செயல்படுவதால் விளையும் தனிமனிதச் சோகத்தை நேரடியாக உணர்த்திக் காட்டியது. தங்கை கணவருக்குச் செய்யும் கடன் உதவியால் கடனாளியாகித் தானும் சிதைந்து தன் அன்பான குடும்பத்தையும் சிதைவுக்கு உள்ளாக்கும் ரங்கசாமி நாயக்கர் கடைசியில் ஊரைவிட்டே காணாதுபோய்விடும் அவலம் வாசிப்பவர் நெஞ்சத்தையும் சிதறடித்துவிடும்.  பாவண்ணன் படைத்த ‘இது வாழ்க்கை அல்ல(1988)’ என்ற நாவல், வெகு எளியதாக எங்கும் காணக் கூடியதும் குடும்பங்கள் பலவற்றில் நிகழ்வதுமான மாமியார் மருமகள் போராட்டத்தை மையமிட்டுச் சித்திரிப்பது. நாவலாசிரியனின் கதைசொல்லும் திறனின் உச்சத்தை அந்த நாவலில், சாதாரணமான கதைப்பின்னலைத் தெரிவு செய்துகொண்டதன் உத்தி மூலமே சாதித்துக் காட்டினார் பாவண்ணன். கேசவன் என்ற கதைப்பாத்திரம் தனது துணைவியிடமும் தாயாரிடமும் மாட்டிக் கொண்டு படும் உளைச்சல்கள் புதுச்சேரியில் மட்டுமே நிகழ்வதல்ல.. அல்லவா? ஆகக் கசப்பானதும் வறட்சியானதுமானதொரு பொல்லாத வாழ்க்கையை நிர்ப்பந்தமாகச் சுமக்க நேரும் புதுச்சேரி கிராம-நகர மக்களே பாவண்ணனின் படைப்புலகத்தில் உயிர்ப்பானவர்கள்.

 

புதுச்சேரி வரலாற்று நாவல்களில் தன் முன்னோடிகளைப் படைத்தவர்களாலும் வலையேட்டு(திண்ணை.காம்) வாசகர்களாலும் பின்னர் அச்சுநூல் வாசகர்களாலும் ஒப்ப ஒருமையுடன் தலையசைத்துப் பாராட்டப்பெறும் நாவல் ‘நீலக்கடல்'(அச்சு வடிவம்: திசம்பர் 2005) ஆகும். திண்ணை இணைய இதழும் ஆசிரியர் குழுவும் அவர்கள் தந்த அணைப்பும் ஆதரவும் இந்த நாவலின் வெற்றிக்குப் பின்னால் உள்ள உருவாக்கத்தில் அகத்தியமான பங்கு வகிக்கின்றன.(ப.14)

 

“ஒரு சரித்திர நாவல் போலத் தோன்றுகிறது இது. ஆனால் வரலாற்று நாவல் என அறிந்தவைகளிலிருந்து இது மாறுபட்டும் இருக்கிறது. சோழ பாண்டிய ராஜ்யங்களின் மகோன்னதங்கள், வைர முடிகள், வாள் சண்டைகள், இலக்கண ஒழுங்கு பிசகாத பழந்தமிழ் வசனங்கள், வாளிப்பான உடற்கட்டு கொண்ட இளவரசிகள், சண்டை போடுவது ஒன்றையே மூச்சாகவும், தொழிலாகவும் கொண்ட பலசாலி இளவரசர்கள், அவர்களை விடவும் பலசாலிகளான குதிரைகள், யானைகள், அரசியல் மற்றும் அந்தப்புர சூழ்ச்சிகள் (இவைகள் ஒன்றா அல்லது வேறுவேறா), ஒற்றர்கள், பைராகிகள் ஆகியன இதில் இல்லை. ஆனாலும் இது வரலாற்று நாவல்தான் ஒரு வகையில்” என்று சொல்லும் பிரபஞ்சன்(‘உண்மையும் இனிமையும் கூடிய வரலாற்று நாவல்’: நீலக்கடல், ப.7), அடுத்து அந்த வரலாற்றுத் தளத்தைத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

 

பதினெட்டாம் நூற்றாண்டின் பிரஞ்சிந்தியத் தமிழனின் வரலாறு, புதுச்சேரி வரலாறு, தமிழில் இதுவரை அறியப்படாத மொரீஷியஸ் வரலாறு என்ற மூன்று வரலாறுகளும் ஜீவநதிகளாய் இயங்கி ‘நீலக்கட’லில் ஐக்கியமாகின்றன. பதினான்காம், பதினெட்டாம் நூற்றாண்டு, இருபத்தொன்றாம் நூற்றாண்டு என மூன்று நூற்றாண்டுகளைத் தன் கால அளவாக, உயிர்ப்பு வெளியாகக் கொண்டுள்ளது. ‘நீலக்கடல்.’ பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியப் பெருங்கடலின் தொப்புளாகத் தெரியும் மொரீஷீயஸ் தீவில் நாவல் தொடங்குகிறது. பத்தாம் நூற்றாண்டில் அரபியர்கள் கண்டெடுத்து ‘டினா அரோபி'(Dina Arobi) என்று வியந்து பெயரிட்டழைத்த நிலமுத்து. பின்னர் கி.பி.1500இல் ‘அன்னத் தீவு’ என்று போர்த்துகீசியர்களாலும் 1598இல் ‘மொரீஸ்’ என்று [தங்கள் இளவரசர் நினைவாக] டச்சுக்காரர்களும் 1715இல் ‘பிரஞ்சுத் தீவு’ என்று பிரஞ்சுக்கார்களாலும் பெயர்சூட்டு விழா நடத்தப்பட்ட தீவு. அதைப் பிரஞ்சுக்கார்களிடமிருந்து இந்திய வணிகம் நடத்தக் கி.பி.1810இல் கைப்பற்றிய ஆங்கிலேயர் மீண்டும் சூட்டிய பெயரே மொரீஷியஸ். (“பெயரில் என்ன இருக்கிறது!” என்று விதண்டாவாதம் பேசுபவர்கள் கவனிக்க வேண்டிய சேதி இது.)
ஆம். “பெயர் சூட்டியதிலும், வளத்தை உறிஞ்சியதிலும் ஐரோப்பியருக்கு இருந்த அக்கறைகளின் வரலாறுகளைவிட அத்தீவுக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துத் தவழவிட்ட தமிழரின் உதிர இலக்கியம் உயர்ந்தது.”(ப.13) அந்த மொரீஷியஸ் பூர்வ குடிகளான தமிழரின் வரலாற்றைக் கதைபோலச் சொல்வதே நாகரத்தினம் கிருஷ்ணாவின் முதல் நோக்கம். தெய்வானை, தமிழ்நாட்டில் நாயக்கர் வம்ச வாரிசாக இருந்தும், காமாட்சியம்மாளால் சீனுவாச நாயக்கர் துணையோடு மொரீஷியசுக்குத் தப்பி வருவதும், நாவலிறுதியில் அவர்களோடு தமிழ்நாட்டுக்கே திரும்புவதும் வரலாற்றுப் புனைகதை மட்டுமே. ஆனால் தேவயானி எனும் தெய்வானையைச் சுற்றி மொரீஷியசும் காஞ்சி மாநகரும் திருச்சிராப்பள்ளியும் சுழலுகின்றன. கச்சியப்பர் மகளாகப் பிறக்கிறாள், ஒரு பிறவியில். நாயக்க மாதேவி ஆகவேண்டியவளாகப் பிறந்து, இன்னொரு பிறவியில் தான் ‘கருமாறி ‘ப் பாய்வதற்குக் காரணமான(விவரம்:ப.29) பக்திக்குரிய காமாட்சி அம்மனின் அவதாரமேயொத்த காமாட்சியம்மாளால் கரைசேர்க்கப்பெறுகிறாள். தாந்திரிக நிலையில் “வனத்திலிருந்து கடுந்தவமியற்றுவதைவிட, இளம்பெண்ணின் கடிதடத்திலிருந்து பேரின்பத்திற்குப் போகும் வழியை உணரக்கூடிய நாயகன் நாயகி மார்க்கத்து யோகி”(ப.440)யாகவும், நாயக்க மன்னர்கால தளவாய் வெங்கடாச்சாரியாகவும், பிரஞ்சுத்தீவில் அருணாசலத் தம்பிரானாகவும் ஏககாலத்தில் இயங்கும் – கச்சியப்பர் மகளாகப் பிறந்து பால்ய விவாகத்தில் தெய்வானை கைப்பிடிக்க நேர்ந்த சொக்கேசன், எந்தப் பிறவியிலும் அவள் – தன் மனத்துக்குகந்த பெர்னார் ஃபோந்த்தேனைக் கைப்பிடிக்க விடாமல் (மாந்திரீக முறைகளில் பெர்னாரின் மனவியலும் வாழ்வியலும் கெடுத்து) பார்த்துக் கொள்கிறான். வானவன் பல்லவரையன் திருக்குமாரன், பார்த்திபேந்திர பல்லவரையனாக(ப.477) வெற்றிவேந்தனாக விளங்கியபொழுதும் போர்க்களத்தில் இறந்துபோய்ப் பருவுடல் அடிப்படையில் தேவயானியை(கச்சியப்ப சிவாச்சாரியார் மகளான தேவயானியை)ச் சேரமுடியாமல் பார்த்துக் கொள்வதுடன் ‘கருமாறிப் பாய்வ’தான அவளின் பிரார்த்தனையையும் கொச்சைப்படுத்தி, காமாட்சியம்மன் கோயிலருகிலுள்ள சக்கரதீர்த்தத் தடாகத்தில் தலை குப்புறத் தள்ளி விடுகிறான். இப்படிப்பட்ட, வஞ்சகத்தால் மட்டுமல்ல – தாந்திரீக மாந்திரீக வல்லமைகளிலும் தலைசிறந்த எதிர்த் தலைவனை(Anti Hero) ‘நீலக்கடல்’ நாவலில்தான் பார்க்க முடிகிறது.

 

சரி. ‘நீலக்கட’லின் தொடக்கக் காட்சியைக் கொஞ்சம் பார்ப்போம். “சுற்றிலும் மலைத்தொடர்கள், அவற்றைத் தழுவி, பிரிவதற்கு மனமின்றி சுற்றிவரும் வெண்மையும் கருமையும் கலந்த மேகம்.. வடமேற்கில் கடல் – நீலக்கடல். கடல் நோக்கிக் காதலுடன் இறங்கிவரும் நிலம் – நெய்தல் நிலம், பெயர் போர் லூயி (Port Louis – லூயி துறைமுகம்). கடல் – தெய்வானை. காதலுடன் இறங்கிவரும் போர் லூயி நெய்தல் நிலம்தான் பெர்னார் குளோதன்.(பெர்னார் ஃபோந்தேனின் எள்ளுப் பாட்டன்.) பெண்மையும் கடலும் ஒன்றே என்ற உருவகநிலையில் – தெய்வானை தேவயானியாக, நீலக்கடல் எப்படி இந்த நாவலுக்கு முக்கியமோ அவ்வளவுக்கு பெர்னார் குளோதனுக்கு முப்பிறவி களிலும் முக்கியமானவள். அங்கே தெய்வானை கடலை ஒட்டிக் காத்திருப்பதாகக் கதை தொடங்குகிறது. யாருக்காகக் காத்திருக்கிறாள்? பெர்னாருக்காக அல்ல; தனக்காக. அவனைத் தேடவில்லை. தன்னையே தேடிக் கொண்டிருக்கிறாள். “தனியொருவளாகத் தொப்புள் கொடியைக் கைகளிற் பற்றித் தேடிக்கொண்டிருக்கிறாள்.”(பக்.31-32) தன் வேரினைத் தேடிக் களைத்துப் போனவள் அவள் மட்டுமா? காலையிலிருந்து மாலைவரை அடிமை வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு நொந்தலுத்துக் காளான்களென ..முளைத்துக் கிடக்கும் கபான்கள் எனப்படும் – மரப்பலகைகளால் உருவாக்கப்பட்டு கூரைகளில் இலை தழைகள் போட்டு மூடியிருந்த மனிதர்கள் என்று இன்னும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள நாள் தோறும் பின்மாலைக்குப்பின் அடுத்தநாள் வைகறை வரை தங்களுக்கு உதவிக்கொண்டிருந்த அவரவர் கூடுகளுக்குத் திரும்புபவர்களும் அப்படித்தான். “கடலை ஒட்டிய நெய்தல் நகரங்களான போர்(ட்) லூயி(ஸ்), புதுச்சேரி பற்றிய புதினமெனினும் காஞ்சீபுரமும் வருகின்றது. கடலுக்கும் காஞ்சிக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?”(ப.13) என்று கேட்டுக்கொண்டு அதற்கு ஓர் இருத்தலியல் விளக்கம் தருகிறார் நாவலாசிரியர்.ஆனால் இதற்கு எளியதொரு நிலவியல் காரணம் உண்டு. புதுச்சேரி அமைவிடம்(location) பற்றிய “புதுச்சேரியின் கிழக்கில் வங்காள விரிகுடாவும், ஏனைய மூன்று திசைகளில் காஞ்சீபுரம் மாவட்டமும் அமைந்துள்ளது” என்ற நிலவரைவுக் குறிப்பே போதுமானது. (மத்திய ஆட்சிப்பகுதிகள் – 6: புதுச்சேரி. qu.in ‘மனோரமா இயர்புக்’)

 

‘நீலக்கடல்’ குறித்துப் பதிவொன்றை இங்கே செய்வது நலம். இந்த நாவலில் நேர் எழுத்தாகவும் இணை எழுத்தாகவும் மறைமெய்ம்மையியல்(mysticism) ஊடுபாவப்படுகிறது.
இதே உணர்வை இன்னொருவர், அரசியல்வாதி, வேறுவகையில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் பெயர் மிகயில் செர்ரனோ(Miguel Serrano). ‘உண்மையைத் தேடி உலகெங்கும் பயணம் செய்தவர்.’ அரசியல் துறையில் இராஜதந்திரி. அரசியல் பணி தவிர்ந்த அனைத்துப் பொழுதுகளிலும் மறைமெய்ம்மையையே தேடி அலைந்தவர். இந்தியாவில், அவர் குமரி முதல் இமயம் வரை பயணம் செய்து பலதிறப்பட்ட சாதுக்களையும் யோகிகளையும் சந்தித்தார். புதுச்சேரி அரவிந்தாசிரமம், திருவண்னாமலை ரமணாசிரமம் உட்பட இமயமலையின் சித்தாசிரமம்(இதன் இருப்பையே இந்தியப் பகுத்தறிவு மன்றத்தினர் [I.R.A.] மறுப்பார்கள்) வரை சென்று பல்வேறு அனுபவங்களைப் பெற்று அவற்றை ‘The Serpent Of Paradise’ என்ற தன் நூலில் பதிவு செய்துள்ளார். ஜே.கிருஷ்ணமூர்த்தியை இங்கிலாந்தில் சந்தித்திருந்தபொழுதும் மீண்டும் இந்தியாவில் சந்தித்து அவரைப் பற்றிய தன் கோணத்தை ஆறு பக்கங்களில் பதிவு செய்திருக்கிறார். அதாவது, மறைமெய்ம்மை குறித்த தன் தேடலில், மறைமெய்ம்மையை முற்றாக ஒதுக்கித்தள்ளும் அவரையும் விட்டுவைக்காமல் ஆராய்ந்திருக்கிறார். நீட்ஷே, “சொர்க்கத்தை எட்டி உயரும் மரமொன்றுக்கு, நரகத்தை நோக்கித் தாழும் வேர்கள் இருக்கத்தானே வேண்டும்?” என்று வாதிட்டதைத் தன் பதிவுக்குத் தோரண வாயிலாகக் கட்டியவர். ‘தாந்திரிக மைதுனம்’ என்ற சடங்கைப் பற்றி (Chapter 15: THE SEARCH: The City of the Eternal Wedding, pp.91-92) அவர் செய்துள்ள பதிவுக்கு எதிர்மறையாக உள்ளது – ‘நீலக்கட’லில் அலை – 46இல் இடம்பெறும் சொக்கேசனின் விரிவான விளக்கம். தன்னைத் தாந்திரீகவாதி என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் அவன், உண்மையில் தாந்திரீகத்துக்குப் பகைவனாக இருக்கிறான். ” The Tantric is forbidden to practice love passionately or compulsively. This is a rule permitted only to the woman, since she is the active participant and because she represents the feminine aspect of the universe and the creative side of Siva himself. She is Shakti or Kundalini”(op.cit.p.91) என்பது செர்ரனோவின் பதிவு. வியக்கத்தக்க மற்றுமொரு பதிவு வேறுபாடு நாகரத்தினம் கிருஷ்ணாவுக்கும் மிகயில் செர்ரனோவுக்கும் உள்ளது.
‘நீலக்கட’லின் பக்கம் 23இல் வரும் இரண்யலோகத்துப் பெண்ணின் நுண்-பருவுடல் எழுத்தோவியமும் ‘சொர்க்கத்தின் சர்ப்ப’த்தின் பக்கம் 120-121இல் இடம்பெறும் (கஜுராஹோ அருகிலுள்ள கடலில் தான் நீந்தும்பொழுது செர்ரனோ சந்திக்கும்) சிறுத்தைக் கண்ணியின் நுண்-பருவுடல் எழுத்தோவியமும் ஒன்றே போல் உள்ளன. ‘நீலக்கட’லில் அமானுஷ்யமானதாக வருவது, ‘சொர்க்கத்தின் சர்ப்பத்’தில் புலனுணர்வாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தற்செயலாகத்தான் இந்த இருவேறு பதிவு ஒற்றுமை வேற்றுமைகள் நிகழ்ந்திருக்கக் கூடும். மிகயில் செர்ரனோவும், ஆங்கிலத்தில் அவர் புத்தகத்தை மொழிபெயர்த்த ஃப்ரேங்க் மக் ஷேனும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ‘நீலக்கடல்’ நாவல் கதைப்பின்னலின் மையக்கற்றையின் நிறைவுறுத்தலை(காரைக்கால் வெடிமருந்துக் கிடங்கு விபத்து) ஆனந்தரங்கப் பிள்ளை சொஸ்தலிகித தினப்படி சேதிகுறிப்பைக் கொண்டே நாகரத்தினம் கிருஷ்ணா முடித்திருப்பது மறுக்க முடியாத ஆதாரமாக உள்ளது. பெர்னார் குளோதன் வடிவை எடுத்துக் கொண்டு இப்பொழுது சொக்கேசன் வருகிறான். அடுத்தபடியே பெர்னார் குளோதனும் வந்து விடுகிறான். அவன் குரலைக் கேட்டதும், தன்னிடம் வந்தவன் அந்நியன் என்பதான தெய்வானையின் முன்னுணர்வு சரியென்று ஆகிவிடுகிறது. ஆனால் அப்பொழுதும் முன்புபோல் அசுரமிருகமே, அந்நியமே வென்றிருக்கிறது. கொடும் வெடிவிபத்தில் “பின்னையும் .. வெள்ளைக்காரரும் தமிழரும் சேதமுண்டு… மற்றபடி பூரண ஆயுசாயிருந்தபேரெல்லாரும் தப்பினார்கள்” என்பதான ஆனந்தரங்கப் பிள்ளையின் குறிப்பு, மறைமுகமாக பெர்னார் குளோதன் – தெய்வானையின் மொரீஷியஸ் காதல் வளர்ச்சி காரைக்காலில் தோற்றொழிந்ததைக் காட்டுகிறது. ஆனாலும், பெர்னார் ஃபோந்த்தென் தன் நிகழ்பிறவியில் – தன் எள்ளுப்பாட்டன்(பெர்னார் குளோதன்) பிறவியை – வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக உருப்பெறும் கச்சியப்ப சிவாச்சாரியார் நினைவு இல்லம் ஆகிய ‘காஞ்சி மனை’யில், அதன் நிர்வாகி’யாக நிகழ்பிறவியெடுத்திருக்கும் தேவயானி என்ற தெய்வானையைச் சந்திப்பதன் மூலம் தொடர்வதான குறிப்புடன் நாவலின் கதை முடிகிறது.பின்தொடரும் ‘அடங்கல்’ – மொரீஷியசில் 2002, ஜனவரி 21ஆம் நாள் பின்னிரவில் உருவான ‘தினா’ புயலினால் விளந்த பலவகையான சேதங்களைப் பட்டியலிடுகிறது. ‘உயிர்ச்சேதம்’ பற்றிய குறிப்பில் பிரான்சு நாட்டின் லியோன் நகரைச் சார்ந்த சுற்றுலாப் பயணி டானியல்(30வயது), மொரீஷியஸ் பாம்ப்ளிமூஸ் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பு மொதிலி மகள் சின்னத்தம்பு தேவானை(23 வயது) இருவரும் குறிப்பிடப் பெறுவது  மறை மெய்ம்மையை நாவலுக்குப் புறத்திலும் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது. தொடர்ந்து வரும் பகுதியில்(இறுவாய்) நாவலாசிரியர் நம்முன் வந்து காலதத்துவத்தை எடுத்துரைக்கிறார்.(பக்.518-520)  “பிறப்பென்று ஒன்றிருந்தால் இறப்பு இல்லாமலா? பார்த்திபேந்திரனோ, தேவயானியோ, பெர்னார் குளோதனோ, தெய்வானையோ, நீங்களோ நானோ சந்தித்தே ஆகவேண்டியிருக்கிறது”(ப.519) என்ற வரிசையில் பெர்னார் ஃபோந்தெனையும் தேவயானியையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். ஒரு சுற்று முற்றுப்பெற்றுவிடும். இந்த நாவலில் இழைந்தோடும் இணைத்தந்திக்கம்பி – கனவுகளைக் குறித்த தீவிரமான தேடல்.. பெர்னாரின் ‘பட்டபின்பும் துளிர்ப்பதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளும் முயற்சி”யை வேலு கொச்சைப்படுத்திய பொழுது, தன் நாட்டினரான பிரெஞ்சினர் முன்பெல்லாம் தீவிரமாக ஈடுபட்டார்களே அந்த மண்தேடும் முயற்சியல்ல தன் முயற்சி.. பிரெஞ்சுக்காரனாகப் பிறந்தும் மண்ணில் தன் வேர்தேடும் முயற்சி என்று பெர்னார் ஃபோந்த்தேன், நண்பன் வேலுவிடம் சொல்கிறான். இந்தியத் தமிழனான பொழுதும் தன் மரபுவழிப்பட்ட ஆய்வுகளை அறவே மதிக்காத வேலுவிடம் – சிக்மண்ட் பிராய்டு, கார்ல் குஸ்தாவ் யுங், மிஷல் ழூவே, அனாதோல், தெபேஃப் போன்ற உளவியல் அறிஞர்கள் கனவுகளைப் பற்றிக் கூறியவற்றையெல்லாம் மொழிந்து அவையெல்லாம் யூகங்களே, உண்மைகள் இந்திய நாட்டில்தான் பேணப்பெற்று வருகின்றன, அவற்றைத் தேடும் அக்கறை தனக்குண்டு என்று தெளிவாகத் தெரிவித்து விடுகிறான். (பக் 107-108) நாவலின் கடைசிப் பத்தி, வேதாந்தமும் ஜே.கிருஷ்ணமூர்த்தியும் இயற்கை ஈடுபாட்டாளர்களும் எதார்த்த நிகழ்வுகளுக்குக் காரணம் காட்டுவது போன்ற தொனியில் உள்ளது. “நீங்களோ நானோ உறவு பாராட்டுவது எதற்காகவென்று அறிவோம். உறவையும் நட்பையும் நாம் கொண்டாடுவது, பரஸ்பர சுயநலங்களின் தேவைக்காக”(ப.519) என்பது ஒரு சான்று. உலகம் இயங்குவது தத்துவங்களால் அல்ல. செயல்பாடுகளால். பறவை, தன்  சுயதேவைக்காகத்தான் எச்சமிடுகிறது. அதில் ஒரு விதை, தக்க சூழல் கிடைத்ததும் மரமாக முளைத்து வளர்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவரும் இயல்பாகத் தம் நலம் விழைந்து வாழ்ந்தாலே போதும். சொக்கேசன்கள் உருவாகவே முடியாது. அப்படிப் பார்த்தால் “எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!” என்ற பிரார்த்தனையும் சுயநலத் தேவையே. அப்பொழுதுதான் அவ்வாறு வேண்டுபவரும் நலமாக வாழ முடியும் அல்லவா?” அறிஞர் இ.ஜி.கரனின் (E.G. Garan) ‘உளவியலுக்கான சார்பியல்’ (Relativity for Psychology) என்ற உளவியல்-மெய்ப்பொருள் ஆய்வை நாவலாக மாற்றி அனைவரையும் படிக்க வைத்தவர் ஜான் இர்விங். ‘The World According To Garp’ என்பது அந்த நாவலின் தலைப்பு. நாகரத்தினம் கிருஷ்ணா, தன் கடும் உழைப்பினாலான நாவலிறுதியில், மனிதநேயம்-செயல்பாடு ஆகியவற்றுக்கு முரணானவும் நம்மைச் செயலற்றவர்களாக(inert) ஆக்கிவிடக் கூடியனவுமாகிய தத்துவங்களை உயர்த்திப்பிடிப்பது திகைப்பையே தருகிறது. மெய்யாக நாம் இயற்கையை மதிக்க வேண்டும் என்றால் எந்த ஒன்றையும் தத்துவார்த்தப்படுத்தாமல் பணிசெய்து கொண்டே போவதுதான் சரி. “தன்கடன் அடியேனையும் தாங்குதல்/ என்கடன் பணி செய்து கிடப்பதே.” இதில் ‘தன்’ என்பது ஏன் இயற்கையாக இருக்கக் கூடாது? இயற்கை, வாழ்க்கை, பால், ஊழ், முறை, தெய்வம் முதலிய சொற்கள் எல்லாமும் ஒருபொருள் பலபெயர்களாகத்தானே நம் மரபிலக்கணமும் ஏற்கிறது…

 

‘நீலக்கடல்’ நாவலின் இறுதி வரியாக நாகரத்தினம் கிருஷ்ணாவே தரும், ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற கணியன் பூங்குன்றன் பாட்டு(புறநானூறு 192) சொல்வது என்ன? “எமக்கு எல்லாம் ஊர்; எல்லாரும் சுற்றத்தார்; கேடும் ஆக்கமும் தாமே வரின் அல்லது, பிறர் தர வாரா; நோதலும் அது தீர்தலும் அவற்றை ஒப்பத் தாமே வருவன; சாதலும் புதியதன்று; கருவில் தோன்றிய நாளே தொடங்கியுள்ளது; வாழ்தலை இனிது என்று உவந்ததும் இலம்; ஒரு வெறுப்பு வந்த இடத்து இன்னாது என்று இருத்தலும் இலம்; மின்னுடனே மழை குளிர்ந்த துளியைப் பெய்தலால் அமையாது, கல்லை அலைத்து ஒலிக்கும் வளவிய பேர்யாற்று நீரின் வழியே போம் மிதவை(தெப்பம்) போல அரிய உயிர் ஊழின் வழியே படும் என்பது நன்மைக்கூறுபாடு அறிவோர் கூறிய நூலாலே தெளிந்தேம் ஆகலான், நன்மையின் மிக்கவரை மதித்தலும் இலேம்; சிறியோரைப் பழித்தல் அம் மதித்தலினும் இலேம்”(டாக்டர் உ.வே.சாமி நாதையர் பதித்த பழைய உரை, ப.348) என்பதுதானே தமிழரின் தலையாய மெய்யுணர்வு?

 

இல்லையெனில், வள்ளுவர் இரண்டு குறள்களாக மெய்ப்பொருள் குறித்து ஆக்கியிருப்பாரா? எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் (குறள் 355) எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்(குறள் 423) மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று அவர் எழுதியதை அறத்துப்பாலுக்கு (மெய்யுணர்தல்) முதலாவதும் பொருட்பாலுக்கு அடுத்ததுமாக (அறிவுடைமை) பால்வேறு அதிகாரம்வேறு என்று பிரித்தது பரிமேலழகரின் ‘சாமர்த்தியம்.’ எத்தன்மைத்து ஆயினும் என்பது அறிவியல்(science) யார்யார்வாய்க் கேட்பினும் என்பது உலகியல் என்று மு.வ. ஒருமுறை புதுச்சேரிக்கு (அனைத்திந்திய கல்லூரித் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கில் பங்கேற்க) வந்தபொழுது தெளிவாகச் சொன்னார்.
‘நீலக்கட’லின் ஆசிரியர் இரு நடைகளில் கதை சொல்லிப் போகிறார்: 1.புதுச்சேரியின் பதினெட்டாம் நூற்றாண்டுப் பேச்சு நடை. ஆனந்தரங்கப் பிள்ளையின் ‘சொஸ்த லிகித’மான ‘தினசரிப்படி சேதிக் குறிப்’பில் காணக்கிடைக்கும் நடை. 2. ஆசிரியரின் சொந்த மொழிநடை. சில பக்கங்களில் சட்டென்று இவ்விரு நடைகளும் தடம் மாறுவதை இரசித்து வாசிக்க இயல்கிறது. இந்த நடைவேற்றுமை இந்த நாவலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதைத்தான் புதுவைக் கலைமகள் திங்களிதளில் 1917ஆம் ஆண்டு ரா.வாசுதேவன் ‘Narrative’ என்பதை மனத்துள் கொண்டு ‘நவிலல்’ என்று பயன்படுத்தி இருக்கிறார். ரா.வாசுதேவன்(1917) கருத்துப்படி ஆசிரியரின் நவிலலே(narration) நாவலை உயர்த்திப் பிடிக்கிறது. கதை, கதைப்பின்னல்(plot) எல்லாம் அடுத்தபடிக்குத்தான். ‘நீலக்கட’லின் கதையை அப்படியே எடுத்துக்கொண்டு இன்னொருவர் நாவல் புனைந்தால் “இந்தப்படிக்குப் படித்துப்போட” முடியாது.

 

இலத்தீன் இலக்கியக் கலைச்சொல்லான purpureus…pannus என்பதற்கு விளக்கமான நடை நாகரத்தினம் கிருஷ்ணாவின் (மேலே நான் குறிப்பிட்டுள்ள) நடை. இந்தக் கலைச்சொல், கி.மு. முதல் நூற்றாண்டில் ஹொரேஸால் இயற்றப்பெற்ற ‘Ars Poetica’ என்ற செய்யுள் இலக்கியக் கலைநூலில் இடம் பெற்றது. இதன் ஆங்கில மொழியாக்கம் ‘Purple Patch’ என்பது. “It signifies a marked heightening of style in rhythm, diction, repetitions, and figurative language that makes a passage of verse or prose — especially a descriptive passage — stand out from its context”(M.H.Abrams 1971) என்ற அதன் விளக்கத்தைப் பார்த்தால் எந்த அளவு ஹொரேஸின்(1st Century BC) கலைச்சொல், நாகரத்தினம் கிருஷ்ணாவின் நடைக்குப் பொருத்தமாக இருக்கிறது எப்படி என்று ‘நீலக்கட’லை ஆழ்ந்து வாசித்தவர்கள் வியப்பார்கள்.

 

‘நீலக்கட’லின் இயல்களின் முடிவில் அடிக்குறிப்புப் போல் “நண்பனே!” என்று தொடங்கித் தொடர்ந்துவரும் நுண்ணுடல்-பருவுடல்கள் தமக்குள் மாற்றமாடும் உரையாடல்கள் புதுமையாகவும், அதேபொழுது, சிவஞானபோதம்-சிவஞானசித்தியார் சுபக்கம் பரபக்கங்கள் புலப்படுத்தும் சிவனிய மெய்ப்பொருள் நிரம்பியதாகவும் உள்ளது. ஒவ்வோர் இயலின் தொடக்கத்திலும், இடையில் – கதைமாந்தர் கூற்றுகளாகவும் மரபுரீதியான உலக ஞானிகள்-பிரெஞ்சுச் சிந்தனையாளர்கள்-ஆட்சியாளர்கள்-மறைமெய்ம்மையாளர்கள்-தமிழ்ச் சித்தர்கள்-சங்கப் புலவர்கள்-பக்தியுகப் பாவலர்கள்-மெய்ஞ்ஞானிகளின் மேற்கோள்களும், ஏற்றப் பாட்டுகள் – கப்பற் பாட்டுகளின் பகுதிகளும் பொருத்தப்பாட்டுடன் தரப்பெற்றுள்ளன. முழுதும் பிரெஞ்சிலேயே தரப்பட்டுள்ள மேற்கோள்கள் திண்ணை.காம் வலையேட்டில் வருகையில் புலம்பெயர்ந்த தமிழர்களில் பிரெஞ்சு மொழி அறிந்தவர்கள் புரிந்து கொண்டு இயலில் வரும் கதைநிகழ்ச்சிப் போக்குடன் பொருத்திப் பார்த்து உள்வாங்கிக் கொள்ளல் இயலும். ஆனால் அச்சுவடிவில் அவ்வாறு வரும்பொழுது, புதுச்சேரி முதலான பிரெஞ்சுமொழி கற்பிக்கப்படும் இடங்களில் உள்ள இளைய தலைமுறை புரிந்து கொள்ளாது.

 

புதுச்சேரிக்கடுத்து அதிகம் பிரஞ்சு மொழி பயிலப்படும் இடம் கோயம்புத்தூர். கொங்குத் தமிழ் போல கொங்குப் பிரஞ்சும், புதுவைத் தமிழ் போலப் புதுவைப் பிரஞ்சும் நடைமுறையில் உள்ளது என்பதை எத்தனைப்பேர் அறிந்திருப்பார்கள்! கோவையில் இளைய தலைமுறை மிகுதியும் பிரஞ்செடுத்துப் படிப்பதன் காரணம் மிக அதிகமாக மதிப்பெண் பெறுவதற்கே.
(“ஏனுங்கண்ணா, இந்தத் தமிழ் வாத்தியானுங்க ஏனுங்கண்ணா அவங்கவங்க ஜேப்பியிலிருந்து எடுத்துக் காசு குடுக்குறமாதிரி அளந்தளந்து மார்க்கு போடறாங்க?”).. “மிசியே! போன்சூருங்க!” என்பது கொங்குப் பிரஞ்சுக்கும்; “முசியே ஆறுமுகம் இப்ப ரெப்போசேரிட்டுக்கினு’ருப்பார், இப்ப போயி இம்சைபண்ணிக்கினு’ருக்காதே.. இன்னா! கண்டுபுடிச்சிக்கினியா?” (காரைக்காலில் “என்ன புள்ளா!”வும் சேரும்) என்பது புதுவைப் பிரஞ்சுக்கும் சான்று. பிரஞ்சையும் ஆங்கிலம் போலப் புழக்கத்திலிருந்தும் கல்வித் திட்டத்திலிருந்தும் நீக்கிவிடவே புதுவையிலுள்ள தமிழியக்கங்கள் முயன்று வருகின்றன. அதனால், “தமிழ் மக்கள் அனைவரும் பார்க்கவேண்டிய தொலைக்காட்சி மக்கள் தொலைக்காட்சி!” என்றும் தமிழோசையை “நாங்க படிச்சாச்சு..நீங்க..?” என்று விளம்பரங்கள் வருவது மட்டுமல்லாமல் புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்தவர்களிடம் மட்டுமல்லாமல் மற்றவர்களிடமும் ஆங்கிலத்தையும் பிரஞ்சையும் தவிர்க்கும் ஊடகங்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன. அசல் பிரஞ்சுக்கார்கள் அழகாகத் தமிழ் பேசுவதை அங்காடிகளில் கடை வைத்திருப்போரும் உணவகங்களில் பணியாற்றுவோரும் உணர்ந்திருக்கிறார்கள்.

 

பிரான்சிலிருந்து ஒவ்வோராண்டும் விடுமுறையில் வந்து பொது இடங்களில் இலவசமாகக் காட்சிப் பொருள்களாகும் புதுச்சேரித் தமிழர்கள் பலர்(சிலர் விதிவிலக்குகள்)- குறிப்பாகப் பெண்கள் தெருக்களின் பிளாட்பாரங்களில் தங்களுக்குத் தெரிந்தவர்களைப் பார்க்கும்பொழுது கடைப்பிடிக்கும் பிரஞ்சுப் பண்பாட்டுக்கே உரிய பழக்க வழக்கங்களும் ஒவ்வொரு கடையாக ஏறிப் பண்ணும் சேட்டைகளும் பேசும் பிரஞ்சும் எல்லோரும் கிண்டலடிக்கும் பொருள்களாகி விட்டன. அண்மையில் என் (பிரஞ்சுப்பேராசிரிய நண்பரிடம்) லெபெனானிலிருந்து இங்கு சில மாதங்களே தங்கவந்த அம்மையார் ஒருவர் (பிரஞ்சு வழியாக) மிகுந்த ஈடுபாட்டுடன் தமிழ் கற்றுக்கொண்டதும் வேலையாட்கள் முதலான பலரிடமும் தமிழே பேசிச் சென்றதும் இதற்குச் சான்று.
—————————————————————
உதவிய நூல்கள்(அகர வரிசைப்படி):
கிருஷ்ணா, நாகரத்தினம், நீலக்கடல், சந்தியா பதிப்பகம், ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ், 57 – 53ஆவது தெரு, அசோக் நகர், சென்னை – 600 083. முதற் பதிப்பு. 2005.
சண்முகசுந்தரம், முனைவர் சு., தமிழில் வட்டார நாவல்கள். காவ்யா, 16, 17ஆவது ‘E’ குறுக்கு, இந்திரா நகர், பெங்களூர் – 560 038. முதற் பதிப்பு. 1991.
சாமிநாதையர், டாக்டர் உ.வே., புறநானூறு மூலமும் பழைய உரையும். டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், திருவான்மியூர், சென்னை – 600 041. ஏழாம் பதிப்பு. 1971.
சுந்தரராஜன்(சிட்டி), பெ.கோ., சிவபாதசுந்தரம், சோ., தமிழ் நூறாண்டு வரலாறும்,வளர்ச்சியும், கிறிஸ்தவ இலக்கிய சங்கம். முதற் பதிப்பு. 1977.
தில்லைவனம், முனைவர் சு., தமிழகம்-புதுவை வரலாறும் பண்பாடும், சிவசக்திப் பதிப்பகம், 4, பாண்டியன் வீதி, சாந்தி நகர், இலாசுப்பேட்டை, புதுச்சேரி – 605 008. முதற் பதிப்பு 15-06-2004. விற்பனை உரிமை: நன்மொழிப் பதிப்பகம், 41, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி – 605 008.
பிரபஞ்சன், மானுடம் வெல்லும், கவிதா பப்ளிகேஷன், த.பெ. எண்:6123, 8, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டிபஜார் சென்னை – 600 017. இரண்டாம் பதிப்பு. 1995. (முதற் பதிப்பு 1990)
பிரபஞ்சன், வானம் வசப்படும், கவிதா பப்ளிகேஷன், சென்னை – 600 017. மூன்றாம் பதிப்பு. 1999. (முதற் பதிப்பு 1993)
பிரபஞ்சன், நேசம் மறக்கவில்லை நெஞ்சம். தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது.
Abrams, M.H., A Glossary of Literary Terms, Seventh Edition 2001.
Harcourt India Pvt. Ltd. New Delhi. First Published by Harcourt, Inc. 1999.
Serrano, Miguel., The Serpent Of Paradise(The Story of an Indian Pilgrimage),
Translated by Prank MacShane. Bell Books – Vikas Publishing house Pvt Ltd., Delhi 110006. 5 Daryaganj, Ansari Road,1975.
First published in 1974 by Routledge and Kegan Paul Ltd.,London.

வாழ்வின் பன்முகப்பிரதி – க. பஞ்சாங்கம்

Na.krishna -New books3 001

தமிழில் நாவல் என்ற இலக்கிய வகைமை தோன்றி ஒன்றரை நூற்றாண்டு காலத்தை நெருங்கிவிட்டது. ஆனாலும் தமிழ்மனப்பரப்பில் ‘நாவல் என்பது பாட்டி சொல்லுகின்ற பழங்கதை போன்றதுதான்’ என்ற பார்வைதான் இன்னும் ஆழமாக நிலைபெற்றுள்ளது. கல்விப்புலத்திலும்கூடப் பெரும்பாலான தமிழ்ப் பேராசிரியர்கள் அப்படித்தான் மாணவர்களுக்கு ஒரு நானூறு பக்க நாவலைக் கதையாக மட்டும் சுருக்கி இரண்டு வகுப்பில் நடத்திமுடித்து விட்டு, இரண்டு மாதிரி வினாக்களையும் சொல்லி நாவலை மாணவர்களிடமிருந்து மட்டுமல்ல, தன்னிடமிருந்தும் அப்புறப்படுத்திவிடுகிறார்கள். மேலும், இத்தகைய முறையில் நடத்துவதற்கு ஏற்ப அமைந்துள்ள எழுத்துக்களைத்தான் ‘நாவல்’ என்ற பாடப்பகுதிக்குத் தேர்ந்தெடுத்து வைக்கிறார்கள் என்பது இன்னும் பெரிய அவலம். இத்தகைய நிலைக்கு நேர்எதிர்மாறாக நாவல் என்பது கதை சொல்வதல்ல; அந்தப் பின்புலத்தில் சமூகத்தை ஆவணப்படுத்துவது; வரலாற்றை, நிகழ்வுகளைப் புனைவாக உருமாற்றுவதன் மூலம் அவற்றை அழகியலாக்குவது; வாழ்வின் நீள்வலியையும் வாதையையும் மொழிப்படுத்தி இருப்பின் அதிசயத்தைக் கொண்டாடுவது; ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்களை நிறுத்தி வாழ்வின் தீராத கவர்ச்சியாக இருக்கும் புதிர்களை நோக்கி மடைமாற்றி விடுவது; சமூகத்தின் ஆழத்தில் இயங்கும் எளிதில் பிடிபடாத நுண் அரசியலை, ஆதிக்கங்களை வெளிக்கொணர முயல்வது என்ற தளத்திலும் தமிழில் நாவல்கள் தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன; அத்தகைய வரிசையில்தான் நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ என்ற நாவல் வெளிவந்துள்ளது.

செஞ்சி ‘கிருஷ்ணபுரமென்றும்’ சிதம்பரம் ‘தில்லை’ என்றும் அழைக்கப்பட்ட கிருஷ்ணப்ப நாயக்கர் ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் (1597 – 1617) நடந்த வித்தியாசமான வரலாற்று நிகழ்வுகளைத் தனது புனைவிற்குள் கொண்டு வருவதன் மூலம் அற்புதமான ஒரு புதிய பிரதியைக் கட்டமைத்துள்ளார் நாகரத்தினம் கிருஷ்ணா. தமிழ்நிலம் சார்ந்த வாழ்வை, வரலாற்றை, இங்கிருந்து புலம்பெயர்ந்து போய் பிரான்சில் வாழ்ந்து கொண்டு ஓர் அந்நியச் சூழலில் தன்னை இருத்திக் கொண்டு நோக்குவதனால், அவருக்குள் இந்த மண் குறித்த கூடுதலான புரிதலும் அழகும் அசிங்கமும் கூடி வந்து கை கொடுத்துள்ளன போல் தோன்றுகிறது. ஏற்கனவே நீலக்கடல், மாத்தா ஹரி என்று இரண்டு நாவல்களை உலகத் தரத்தில் எழுதியுள்ளவர் என்பதும்குறிப்பிடத் தகுந்தது.

இந்த நாவலில் நிகழ்ச்சிகளும் அவற்றை எடுத்துரைக்கும் முறையியலும் ஒன்றையொன்று போட்டிப் போட்டுக் கொண்டு உள்ளே நுழையும் வாசகர்களை வேகமாக இழுத்துச்செல்கின்றன. மண் புழுக்கள் பந்து போலத் திரண்டு கொள்வது இயல்பு. அதுபோல இந்த நாவலின் நிகழ்வுகள், செறிவாக உயிரோட்டம் மிகத் திரண்டு உருண்டு கிடக்கின்றன. வாசகர்கள்தான் உருட்டி உருட்டி பின்னமுற்றுக் கிடக்கும் முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டே நகர வேண்டும். தில்லையில் தாசிக்குலப் பெண் சித்ராங்கியின் பணிப்பெண்ணான செண்பகத்திற்குக் கள்ள உறவில் பிறந்த ஒரு குழந்தை, விஜயநகரப் பேரரசின் இளவரசனாக முன்மொழியப்படும் நிலைக்கு எவ்வாறு கொண்டு செலுத்தப்பட்டான்; எதிர்பாராத நிகழ்வுகள் எப்படி மனித வாழ்வை வடிவமைக்கின்றன; என்பதுதான் நாவலின்அடிப்படை முடிச்சு. இந்த முடிச்சை வெவ்வேறு பக்கங்களில் வெவ்வேறு விதமாக அவிழ்க்கிற நிகழ்ச்சிகளைக் காலத்தாலும் இடத்தாலும் முன்னும் பின்னுமாக அடுக்கி வைத்திருப்பது தான்கதைசொல்லியின் மிகப்பெரிய பலம்.

இந்த நாவல் எடுத்துரைப்பின் பலம் அது கையாளும் மொழியில் இருப்பதாகப் படுகிறது. 17ஆம் நூற்றாண்டுத் தமிழ்மொழியில் எப்படிக் கதையை நிகழ்த்திச் செல்வது? என்ற பெரிய பிரச்சினையை நாவல் எதிர்கொண்டுள்ளது; சான்றாக, தில்லைவாழ் அந்தணர்கள் எப்படிப் பேசி இருப்பார்கள்? இன்றைக்குப் பிராமணர்கள் வீட்டில் பேசுகிற அந்தப் பேச்சுத்தமிழ் அன்றைக்குத் தோன்றியிருக்குமா? தெரியாத நிலையில் தீட்சதர்களின் பெயர்கள், அவர்கள் வாழ்ந்த வீடுகளின் தோரணை, தெருக்களின் முகம் முதலியவற்றைச் சொல்வதன் மூலமாகவே பிராமணக் குடும்பச் சூழலை வாசகர் மனத்திற்குள் கொண்டு செலுத்திவிடுகிறார்; அகராதிகளில் தேடிப்பிடித்துப் பிரத்தியேகமான வார்த்தைகளைக் கொண்டுவந்து வேலை வாங்கியுள்ளார்; நிகழ்ச்சிகளையெல்லாம் கதைமாந்தர்களை எல்லாம் இன்றைய யதார்த்தவாத எழுத்தாளர்கள் தங்களின் சாதனையாகக் கருதுகின்ற அந்தப் ‘பேச்சுமொழி உரைநடை’ இல்லாமலேயே சிறப்பாகப் படைத்துக் காட்டிவிடலாமென்பதை கிருஷ்ணா செய்துகாட்டிவிட்டார் என்கிற உண்மை, எனக்குள் பெரும் வெளிச்ச வெடிப்பாக இறங்கியது. இதுபோலவே ‘சேரி வாழ்வையும்’ பேச்சுமொழி உரையாடல் இல்லாமலேயே காட்சிப்படுத்த முடிந்திருக்கிறது.

மர்மங்களின் மேல் வெளிச்சத்துளிகளைத் தூவுவது போல ஒரு பாணியில் நாவலை எடுத்துச் செல்லும் கதை சொல்லி, வாழ்வில் எதிர்கொள்ள நேரும் அமானுஷ்ய விஷயங்களையும் தொன்மங்களையும் எடுத்துரைப்பிற்குப் பயன்படுத்தும்போது வாசிப்பின் ஆர்வமும் ஈடுபாடும் கூடிக்கொண்டே போகின்றன. படைப்பிற்குள் வாசகரும் தொழில்புரிய வேண்டிய சூழலை உருவாக்கிவிடுகிறார். “மரணக் கிணற்றுக்குள்” இருந்து கேட்கிற ஓலங்கள், ஹரிணி ஏதோ ஒரு பிடியில் சிக்கி ஓடிச் சென்று கிணற்றுக்குள் விழுவது போன்ற காட்சி, பேருந்து நிலையத்தில் சாமிநாதனென்று ஒருவனைப் பார்ப்பது, பிறகு அப்படி ஒரு ஆளே இல்லை என்று அறிய நேர்வது, செண்பகம் கமலக்கண்ணி என்ற ரூப / அரூப மயக்கம், – இப்படிப் பல மர்மமான நிகழ்வுகள் மூலம், ஒரு வரலாற்று நாவலை வாழ்வின் புதிரைத் தேடும் பயணமாகப் படைத்து விடுகிறார்; அதனால்தான் 2050இல் ஹரிணியின் மகளான பவானி (அடுத்த தலைமுறை) மீண்டும் புதுச்சேரி, செஞ்சி என்று வந்து தன் அம்மா குறித்த பல உண்மைகளைத் தெளிவுபடுத்திக் கொண்டு திரும்பும்போது அவளுக்குப் பசுவய்யாவின்

எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?
பாதத்தின் விளிம்பிலிருந்துதானா?
அல்லதுஅதன் அடியிலிருந்தா?

என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன என்று சொல்லி நாவலை முடிக்க முடிகிறது. 254 பக்கத்திற்கு இதுவரைப் புனைந்து வந்த அத்தனை வரலாற்று நிகழ்வுகளும் வெறும் நிழல்கள்தானா? எல்லாமே பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போய்விடுமா? தீராத வினையாய் வாசித்து முடித்த நமக்குள் தொடர்ந்து பயணிக்கிறது.

மதம், தாசி, அரசு என்ற மூன்றும் கூடிக்கொண்டு நாயக்கர் காலப் பொதுமக்களின் வாழ்வை எவ்வாறு சீரழித்தன என்று ஒரு வரலாற்று நாவல் போல இது புனையப்பட்டாலும் நிகழ்காலச் சமூகத்திலும் இந்தக் கூட்டணி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என முன்வைக்கின்ற அறச்சீற்றம் இப்புனைவுகளுக்குள் பொதிந்துவைக்கப்பட்டுள்ளது.

அகச்சமயம் புறச்சமயமென முறுக்கிக்கொண்டு கிடந்த பக்தி காலகட்டத்தை ஒட்டிப் புறச்சமயமான சமணத்தையும் பௌத்தத்தையும் கழுவேற்றி அழித் தொழித்த நிலையில் அகச்சமயத்திற்குள்ளேயே முரண்கள் முற்றி, தில்லை நடராஜர் கோயிலுக்குள் கோவிந்தனுக்கு என்ன இடமென்று இரண்டாம் குலோத்துங்கன் பெருமாளை அப்புறப்படுத்திய பின்பு, செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கர் தன் காலத்தில் மீண்டும் நடராஜர் கோயிலுக்குள் கோவிந்தராஜர் திருப்பணியைத் தொடங்குகிறார்; தீட்சதர்கள் தடுக்கிறார்கள்; சபேச தீட்சதர் அரசர் காலில் விழுந்து விண்ணப்பம் செய்கிறார்; “தாழ்மையாகப் பெரியவர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறோம்; முன்னோர்கள் காலத்தில் சைவவைணவ பிரிவினருக்கிடையே மாச்சர்யம் இருக்கக்கூடாது என்பதால் விபத்தாக(?) கனகசபைக்கருகிலேயே சித்திரக்கூடத்தையும் ஏற்படுத்திவிட்டார்கள். அப்பொழுதே நாங்கள் தடுத்திருக்க வேண்டும். தடுத்திருந்தால் இன்றிந்த பிரச்சினை எழாது. அச்சுதராயரைத் தொடர்ந்து இன்றைக்கு நீங்களும் வைணவ சன்னதியைக் கட்டியெழுப்புவதற்கு வந்து நிற்கிறீர்கள். நாட்டில் திருப்பணிக்குகந்த வைணவ ஸ்தலங்கள் ஏராளமாக உள்ளன. இது சிவ ஸ்தலம். கோவிந்தராஜர் இந்த ஆலயத்திலுள்ள பிற கடவுளர் போல பரிவார தெய்வங்களுக்குள் வருகிறாரே தவிர, அவருக்கு வேறு முக்கியத்துவங்கள் கூடாதென்பதுதான் எங்கள் பிரார்த்தனை. தீட்சதர்களாகிய நாங்கள் ஒருவருக்கும் பொல்லாங்கு பண்ண வேணுமென்று நினைக்கிறவர்களல்லாத படியால், அபகாரியம் செய்து சுவாமி ஆக்கினைக்கு ஆளாக வேண்டாமென்று தங்கள் பாதாரவிந்தங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார்; முடிவாக என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று மன்னன் கேட்டபோது, “எங்களை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; ஆனால் ஒரு கல்லைக்கூட கோவிந்தராஜருக்கென உள்ளே வைக்க அனுமதியோம்”. கோவிலில் நைவேத்தியம் செய்து பிழைக்கும் நீர் சவால் விடுகிறீரா? என்கிறது அதிகாரம்.

கோபுரத்தில் ஏறி உயிரை விடுவோம்” என்று தீட்சதர் கையை அசைத்துப் பேசிய போது “சிகை அவிழ்ந்து பின்புறம் ஆடியது” எனக் காட்சிப்படுத்துகிறார் கதைசொல்லி. “உமக்கு அப்படியொரு பிரார்த்தனையிருந்தால் தாராளமாகச் செய்யும்” என்று மன்னன் சொல்லி முடிப்பதற்குள், “சங்கரா! ஒரு குரல் தெற்குக் கோபுரத்தின் திசைக்காய்க் கேட்டது. ஈஸ்வர தீட்சதர் இரண்டாம் பிறைமாடத்திலிருந்து குதித்திருந்தார். நச்சென்று சத்தம். காலைப்பரப்பிக் கொண்டு இறந்தார். மூளை சோற்றுப் பருக்கை போல இரத்த சிவப்பில் சிதறிக் கிடந்தது . . . பிரகாரமெங்கும் மகாதேவா! சதாசிவா! எனக் குரல்கள் கேட்டன”. ஒவ்வொருவராக விழத் தொடங்கினர்; ஏன் ஒவ்வொருவராகச் செத்து மடிய வேண்டும், “மொத்த பேரையும் சுடுங்கள்” என ஆணை பிறந்தது. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த போர்த்துக்கீசிய மதபோதகர் பாதர் பிமெண்ட்டா அன்றைய இரவு தமது நாட்குறிப்பில் “கோபுரத்திலிருந்து குதித்து உயிரைவிட்ட தீட்சதர்கள் மாத்திரம் மொத்தம் இருபது பேரென மறக்காமல் குறித்துக்கொண்டார்”.

இந்தப் பகுதியைப் படிக்கும்போது இன்னும் அதிகமாக இந்நிகழ்ச்சியைப் புனைந்திருக்க வேண்டுமென எனக்குப்பட்டது; ஏனென்றால் இதுவரை தீட்சதர்கள் கோபுரத்தில் குதித்த இந்த வரலாறு, புனைவெழுத்திற்குள் வரவே இல்லை. இவர்தான் முதன்முதலில் இதைச் செய்துள்ளார்; மேலும் இந்நிகழ்வு வாய்வழிச் செய்திதான்; பெரிதும் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தும் இங்கே இன்னும் நிலவிக்கொண்டிருக்கிறது; இது குறித்து நாகரத்தினம் கிருஷ்ணாவிடம் கேட்டேன்;”இது வரலாறு; அந்தப் போர்த்துக்கீசிய மதத்துறவி தனது நாட்குறிப்பில் தான் கண்டதை அப்படியே எழுதியுள்ளார்; அது பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; நான் அதை பாரீஸ் நூலகத்தில் எடுத்து வாசித்துள்ளேன். வேறுசில வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அவர் எழுதியுள்ளது சரிதான் என்றும் தெரிகிறது. அதனால்தான் அவர் பெயரை அப்படியே நாவலில் சேர்த்துள்ளேன்” என்றார். இவ்வாறு கிருஷ்ணா கூறிய பிறகு, இதைத் தீட்சதர்களின் தனிப்பட்ட போராட்டமாக மட்டும் காட்டாமல், அவர்கள் தலைமையில் பொதுமக்களின் போராட்டமாகப் புனைந்திருக்கலாமே என்று எனக்குப்பட்டது. அரசை எதிர்த்து சபேச தீட்சதரின் மருமகன் ஜெகதீசன் சொல்வது போல உணர்ச்சிவசப்பட்டுத் திடீரென எடுத்த ஒரு முடிவு போல நாவலுக்குள் இது காட்டப்பட்டுள்ளது. சபேச தீட்சதரே ஒரு கட்டத்தில் ‘அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டோமே’ என்று மனம் மருகுவது போலச் சொல்லப்படுகிறது. கோபுரத்தில் இருந்து குதித்துத் தற்கொலை செய்யக்கூடிய அளவிற்கு ஒரு போராட்டத்தை உருவாக்க வேண்டுமென்றால், அது குறித்துப் பலவிதமான உரையாடல்கள், பலவிதமான தரத்தில், தளத்தில் பல நாட்கள் நடந்திருக்க வேண்டும்; இந்தப் புனைவெழுத்து அத்தகைய உரையாடல்களைக் கைப்பற்ற முனைந்திருக்கலாமோ என்று பட்டது; மேலும், தீட்சதர்கள் இத்தகைய முடிவெடுப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது புனைவெழுத்தின் பிடிக்குள் வரவில்லை என்று எனக்குத் தோன்றியது.

வரலாறுதோறும் மதப்பிரச்சினைகளைமதப் பிரிவுகளைக்கூர்மைப்படுத்திப் பெருவாரி மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் குறித்து விழிப்புணர்வு பொதுவெளியில் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள முடிகிறது. நாயக்கர் ஆட்சியிலும் இப்படித்தான் மதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கதைசொல்லி மிக நுட்பமான அவதானிப்புடன் பதிவுசெய்துள்ளார். “ஏற்கனவே எழுந்தால் வரி, உட்கார்ந்தால் வரி . . . ஏழைக் குடியானவனுக்கு உடலுள்ளவரை கடல் கொள்ளாத கவலைஅவர்களின் இத்தகைய கவலைகள் அதிகாரத்திற்கு வினையாகிவிடக் கூடாது என்பதற்காகத் தான் மதப்பிரச்சினை எப்பொழுதும் செத்துவிடாமல் பொத்திப் பாதுகாக்கப்படுகிறது போலும்.

இந்த நாவலில் அதிகாரப் போட்டி நிகழும்போது கூடவே சொந்தபந்தம் என்பதெல்லாம் மாயமாய் மறைந்து, “கொலைக்களமாக” மாறிப்போகும் நிகழ்வுகளை வாசிக்கும்போதும், பெண் கொடுப்பதும் எடுப்பதும் எவ்வாறு அரசியலின் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்க்கும்போதும் அதிகாரத்திற்கும் ஈவிரக்கமற்ற மனிதக்கொலைகளுக்குமுள்ள வரலாற்றுப் பிணைப்பைக் கதைசொல்லி புனைவாக்கி இருக்கும் பாங்கு நமக்குள் இறங்கி வினைபுரிவதை உணரமுடிகிறது.

ஒரு விதமான முக்கோணக் காதல் மிகவும் மூர்க்கத்தனமான முறையில் இயங்கும் பாங்கு இந்நாவலின் தொடக்கம் முதல் இறுதிவரை நீளுகிறது. தலைமைத் தீட்சதரின் மகளை பால்ய விவாகம் முடித்த கையோடு, நீண்ட ஆயுள் வேண்டி மணமாலையைக் காவிரிப் பெருக்கில் விடச் சென்ற பிள்ளைகளை ஆறு அடித்துச் சென்றுவிட, மணமகன் ஜெகதீசன் மட்டும் கிடைக்கிறான் உயிரோடு. அந்த ஜெகதீசனை ‘சித்ராங்கி’ என்ற தேவதாசியும், அவளது பணிப்பெண் செண்பகமும் காதலிக்கின்றனர். இந்தக் காதல் பின்னணி, தில்லை தொடங்கி கிருஷ்ணபுரம் (செஞ்சி) வரை நீளுகிறது. எடுத்துரைப்பிற்குள் வாசகர்களை வளைத்துப் போடுவதற்குக் கதைசொல்லிகளுக்கு வரலாறுதோறும் பயன்படும் மிகப்பெரிய கருவி இந்தக் காதல்தான். இந்தக் காட்சிகளையும் மிகவும் வித்தியாசமான பாணியில் சொல்லியுள்ளார் கிருஷ்ணா என்பது சுட்டிக்கூறப்பட வேண்டிய ஒன்றாகும். வறுமையில் இடையர் குலத்தைச் சார்ந்த கார்மேகத்தை ஒண்டிப் பிழைக்க நேர்ந்த ஒரு சூழலிலும் தன் காதலை மறக்க முடியாமல், ஒரு கிறுக்கனாகத் தன் திண்ணையில் தூங்கும் ஜெகதீசனோடு படுத்துத் தன் மனம் வேட்ட உடலை அடைந்து மகிழ்கிறாள் தாசியான சித்ராங்கி; மற்றொருத்தியான செண்பகமோ தனக்கும் ஜெகதீசனுக்குமான கள்ள உறவில் பிறந்த மகன் விஜயநகரப் பேரரசின் இளவரசனாக்கப்படுவான் என்கிற பெரிய வாய்ப்பு பொய்யாகிவிட்ட சூழலில், தனக்கு அரசன் கொடுத்த ஏவல் ஆட்களால், கிறுக்கனாகத் திரியும் ஜெகதீசனை இழுத்து வந்து, அவன் கையில் கத்தியைக் கொடுத்துத் தன்னைக் குத்த வைத்துச் செத்து மடிகிறாள்; ”பாவி! எல்லாம் உன்னால்தானே” என்று அவள் கத்தும்போது பரிதாபம் அதன் உச்சத்தைத் தொடுகிறது. ஒரு தமிழ்ப் புலவரின் மகளான செண்பகம் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (வரலாறு) எழுதுவதும் இப்படியாக இடையிலேயே முறிந்துவிடுகிறது. ‘கௌமுதி’ என்பதற்கு ‘வரலாறு’ என்று பொருள் சொல்வதுபோலவே “விழாக்கால நிலவு” என்று ஒரு பொருளும் சொல்லுகின்றன அகராதிகள். கதைசொல்லி ‘வரலாறு’ என்ற பொருளில்தான் பயன்படுத்தியிருப்பதாகச் சொன்னார்; ஆனால், ‘விழாக்கால நிலவு’ என்ற பொருளில் நாவலை வாசித்த போது, ஒரு புனைவெழுத்திற்குரிய அத்தனை ரசனையும் கூடி வந்ததாக உணர்ந்தேன்; இப்படித்தான் வாசகர்கள் மூலமாக எழுத்தாளரைவிடப் பிரதி பன்மடங்கு பெரிதாகத் தன்னை வளர்த்தெடுத்துக் கொள்கிறது போலும்.

நாவல் எழுத்து என்பது பன்முகப்பிரதியாகத் திரண்டு வர வேண்டும் என்பதற்கேற்பவும் இந்த நாவல் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டுள்ளது; நாயக்கர் கால ஆட்சியில் தமிழ் புறக்கணிக்கப்பட்ட வரலாற்றுண்மை (.65/140), விவசாயிகளின் நிலைமை (.25), பாளையக்காரர்களின் பெண்பித்து பிடித்த நிலை (75, 79, 164) போர்த்துகீசியர்கள், ஒல்லாந்துகாரர்கள் என்ற வெள்ளைக் காலனித்துவத்திற்கு முன்னால் பாளையக்காரர்கள் ஏமாந்து போகும் தன்மை, இடங்கைச் சாதியார் தெருப்பக்கம் மதப்போதகர்கள் கண் வைப்பது (137) சேரிமக்களின் வாழ்நிலை (39-43) ஆண்மையச் சமூகத்தில் தாசிப்பெண்கள் படும்பாடு(49- 71) உள்நாட்டுப் போரின் விளைவுகள் (245) நிகழ்காலத்தில் இந்தியப் பிரெஞ்சுக் குடிமக்களின் புதுச்சேரி வீடுகள் அரசியல்வாதிகளின் உடல் முறுக்கிய ஆட்களால் ஆக்ரமிக்கப்படும் அவலம், புலம்பெயர்ந்து வாழநேரும் மனிதர்களின் மனநிலை, களஆய்வு, ஆராய்ச்சி என்று வரும் வெளிநாட்டு ஆய்வாளர் உலகில் நடக்கும் சதி, சூழ்ச்சி எனப் பன்முகப்பட்ட மனிதப் பிரச்சினைகளும் இப்புனைவு வெளிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. நாவல் எனும் இந்த வடிவத்தை நன்றாக உள்வாங்கியதோடு அதை வேலை வாங்கும் திறமும் உழைப்பும் எழுத்தின் நிர்வாக முறையையும் அறிந்தவராகக் கதைசொல்லி வெளிப்படுகிறார். தமிழ்ப் புனைகதையுலகம் இவர் எழுத்தால் கனம் பெறுகிறது.

அந்தப் பஸ்ஸைப் பிடித்துச் செல்லுங்கள்’ என்பதற்குப் பதிலாக அந்தப் பஸ்ஸை எடுங்கள்’ என்று ஆங்கிலம் வருகிறது (.15). இதேபோல் அச்சுப்பிழையோ என்னமோ புரியாத சில தொடர்கள் (.18/23) இருக்கின்றன. மற்றொன்று ஒரு காதல் மடல், வெண்பா வடிவில் வருகிறது (.50)வெண்பா நன்றாகவே வந்துள்ளது. ஆனால், தளை தட்டுகிறது. கிருஷ்ணாவே எழுதினதாகச் சொன்னார்; அதை அடுத்த பதிப்பில் சரிபார்த்துக்கொள்ளலாம்.

கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (நாவல்)
நாகரத்தினம் கிருஷ்ணா
சந்தியா பதிப்பகம்,
நியுடெக் வைபவ், 53ஆம் தெரு,
அசோக் நகர்,
சென்னை. 83
பக்கங்கள்: 256, விலை: ரூ. 160

நன்றி: காலச்சுவடு செப்டம்பர் 2013

——————————————————————————–

மொழிவது சுகம் செப்டம்பர் 10 -2013

காலச்சுவடு செப்டம்பர் இதழில்: கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி

“என்பங்கிற்கும் தமிழிலக்கிய எல்லை கல்லைப் பிடுங்கி இரண்டு மில்லி மீட்டராவது தள்ளி நடவேண்டும்  என்று ஆசை, காலம் பதில் சொல்லும். “

இது எனது நீலக்கடல் (2005) நாவலின் முன்னுரையில் எழுதியிருக்கிற கடைசி வரிகள். அம்முன்னுரையை படித்துப் பலர் சிரித்திருக்கக்கூடும். நான் முதன்முதலாகக் கடைத் திறந்தபோதுகூட, சகத் தமிழர்கள், எத்தனை நாளைக்கு என்றார்கள்?இமயமலை எல்லாம் இல்லை, எப்படியோ இன்று ஒரு மேட்டிலே நிற்க முடிந்திருக்கிறது, என்னை அடையாளப் படுத்த முடிந்திருக்கிறது. பொருளோ, கதையோ தரமும் உழைப்பும் இருந்தால் நமக்கான இடம் உறுதி.

இம்மாத காலச்சுவடு இதழில் மதிப்பிற்குரிய நண்பர் முனைவர் க.பஞ்சாங்கம் அவர்கள் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல்குறித்து மதிப்புரை எழுதியிருக்கிறார். பரிசுகள் விருதுகளைக் காட்டிலும் இதுபோன்ற மனிதர்களின் பாராட்டுதல்கள்தான் ஓர் எழுத்தாளனுக்குத் தெம்பை அளிக்கும்.

எனது மனதிற்கு விசுவாசமாக நடந்துகொள்கிறேன், பெரிய இலக்கிய வாதியெல்லாமில்லை. ஆனால் உண்மையைச்சொல்ல நினைக்கிறேன், அறம் சோர்வுறும்போது, அது அவதி உறுகையில் துடிக்கிறேன். எதனோடும் இணைந்துபோனவனில்லை. பிடிவாதங்களுண்டு. ஆக எனது எழுத்தில்தெரியும் ஒளிக்கு இந்த உண்மை ஒருவிதத்தில் காரணமாக இருக்கலாம். உண்மையுடன் இணக்கமுள்ள மனிதர்கள் என்னை அல்ல எனது எழுத்தை அதிலுள்ள சத்தியத்தை வாழ்த்துகிறார்கள், பாராட்டுகிறார்கள். நேற்று திருவாளர்கள் பிரபஞ்சன், ரெ.கார்த்திகேசு, வெ.சபாநாயகம், கோ. ராஜாராம், பசுபதி என்கிற தேவமைந்தன், கி.அ. சச்சிதானந்தம், கோ.ராஜாராம், தமிழவன், பாவண்ணன், இந்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், ந.முருகேசபாண்டியன், சமுத்திரம், அவ்வை நடராசன், ஈரோடு தமிழன்பன்  என்னை முன் வைத்தல்ல அந்தந்தப் படைப்பை முன்வைத்து உற்சாகபடுத்தியிருக்கிறார்கள். இன்று திரு. க. பஞ்சாங்கம், என்னைத் தட்டிக்கொடுத்திருக்கிறார். மனமுவந்து பாராட்டி இருக்கிறார்.

நண்பர் க.பஞ்சாங்கம் அவர்களின் அறிமுகம் புதுச்சேரி காஞ்சி மாமுனி பட்ட மேற்படிப்பு முனைவர்  வெங்கிட சுப்பராய நாயக்கர் அவர்களால் கிடைத்தது. முதன் முதலாக அவரை (பஞ்சாங்கத்தை) 2005 என்று நினைவு, புதுவை பாரதியார் நினவு இல்லத்தில் நடைபெற்ற பாரதி அன்பர்கள் கூட்டத்தில் சந்தித்திருந்தேன். கி.ரா.வும் இருந்தார். திரு பஞ்சாங்கத்தோடு அதிகம் பழக்கமில்லையென்றாலும் அவ்வப்போது சிற்றேடுகளில் அவரது கட்டுரைகளை வாசிப்பதுண்டு. எனினும்  நெருங்கிப் பழகியவனில்லை. பல முறை எனது நூல்கள் வெளியீட்டு விழாவை புதுச்சேரியிலும், சென்னையிலும் நடத்தியிருக்கிறேன். சட்டென்று எனது நினைவுக்கு வராமலேயே கடந்த பெயர்களில் அதுவுமொன்றாக இருந்திருக்கிறது. நிலவு இதமானது, சுகமானது, அடக்கமானதுங்கூட, மேகங்கள் எளிதாக திரையிடமுடியும், எனினும் அதுபாட்டுக்கு எவ்வித காய்த்தல் உவத்தலின்றி, மேகங்களை விலக்கிக்கொள்ளவும், உள்ளங்களை கொள்ளைகொள்ளவும், உவகைக்கு வழிகாட்டவும் செய்யும். நண்பர் பஞ்சாங்கமும் ஓர் நிலவுதான். மொழியாற்றலும் எழுத்தாற்றலும் ஒருங்கே பெற்ற எளிய மனிதர். கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல் வெளியீட்டு விழாவில் நண்பர் பஞ்சாங்கம் இல்லாத குறை செஞ்சியில் குறிஞ்சி இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் நிவர்த்தி செய்யப்பட்டது.

நிகழ்ச்சியின் மொத்த ஏற்பாடும் குறிஞ்சி இலக்கியவட்டத்திற்கு உரியது. மாதாமாதம் பொருட்செலவையும் ஏற்றுக்கொண்டு தமிழுக்கு உழைத்துக்கொண்டிருக்கிறர்வர்களில் நறுமுகை இராதாகிருஷ்ணனும் ஒருவர். மதுரையிலிருந்து நண்பர் முருகேச பாண்டியனும், புதுச்சேரியிலிருந்து முனைவர் பஞ்சாங்கமும் எவ்வித எதிர்பார்புமின்றி வந்தார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கான நன்றியைத் தெரிவித்தபோது, நாவல் நன்றாக இல்லையென்றால் வந்திருக்க மாட்டேன், ஏதாவது சாக்குபோக்கு சொல்லியிருப்பேன், மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்றார் ந. முருகேசபாண்டியன். இருவருமே நாவலுக்கு மதிப்புரை எழுதபோவதாகத் தெரிவித்தார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு வழக்கம்போல நா. முருகேசப்பாண்டியனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தீராநதி மணிகண்டனிடம் பேசியதாகவும், கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி தமிழில் வந்திருக்கிற முக்கியமான நாவல்களில் ஒன்று எனவும் அதுகுறித்து மதிப்புரையொன்று எழுதவிருப்பதாகவும் என்னிடம் தெரிவித்தார். எனது நாவலுக்கு மதிப்புரைகளென்று எழுதப்பட்டவை அனைத்துமே அவர்களாக எழுதியதுதான் நான் கேட்டு பெறும் வழக்கமில்லை. அப்படி வாய்க்கவில்லையெனில் வாசித்தவர்கள் இரசனையை, அவர்கள் எதிர்பார்ப்பை நான் பூர்த்திசெய்யவில்லையென சமாதானம் அடைவேன்.

நண்பர் பஞ்சாங்கம் கூறியதைப்போலவே மதிப்புரை எழுதி கடந்த மேமாதத்திலேயே காலச்சுவடுக்கு அனுப்பியதாகத் தெரிவித்தார். காலச்சுவடுக்கென சில விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். கண்ணன் என்னை அன்பாக நடத்தினாலும் எவ்வித நிர்ப்பந்தத்தையும் அவருக்கு நான் கொடுப்பதில்லை.  எனவே கண்ணனிடம் அதுபற்றி பேசவில்லை ஆகஸ்டு மாத இறுதியில் சிங்கப்பூர் சென்று வந்திருந்த நண்பர் பஞ்சாங்கத்திடம் வழக்கம்போல பேசிக்கொண்டிருந்தபோது: நலன் விசாரிப்புகள் முடிந்ததும், ஆகஸ்டு இதழில் கூட உங்கள் நூல் மதிப்புரை வரக்காணோம். கட்டுரை கிடைத்ததென்று எஸ்.எம்.எஸ் வந்தது வேறு தகவல்கள் இல்லை, தவறினால் வேறு இதழ்களுக்கு அனுப்பி வைக்கலாமென்றார். எனக்காக பிரசுரிக்காவிட்டாலும், பஞ்சாங்கத்திற்காக கண்டிப்பாக பிரசுரிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது, அவரிடம் கண்ணன் நல்ல மரியாதை வைத்திருக்கிறார் என்பதை அறிவேன். கண்ணனிடம் மாதம் ஒரு முறை பேசும் சந்தர்ப்பம் வாய்த்தாலும் இது போன்ற விவகாரங்களில் தலையிடக்கூடாதென்று தீர்மானமாக இருந்தவன் ஒரு வழியாக விரதத்தைக் கலைத்து ஆகஸ்டு இறுதியில் கண்ணனிடம் கேட்டபொழுது, அடுத்தவாரம் கட்டுரை வருகிறது, ஆசிரியர் சுகுமாரனுக்கு கட்டுரை மிகவும் பிடித்திருந்தாகவும் தெரிவித்தார். இதழ் வெளிவருவதற்கு முன்பாக காலச்சுவடு குழும நண்பர்களுக்கு PDF இதழை அனுப்பிவைக்கத்தொடங்கி இருக்கிறார்கள், நானும் அதில் இருப்பதால் எனக்கும் வந்து சேர்ந்தது. அநேகமாக பல நண்பர்கள் அக்கட்டுரையை வாசித்திருக்கக்கூடும். உடனடியாக இங்கே பிரசுரிப்பது சரியாகாது, கூடிய சீக்கிரம் நண்பர்களுடன் எனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறேன். அக்கட்டுரையை படித்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் உறைந்து போய் இருந்தேன். கொடுக்கல் வாங்கலின்றி என்னை உற்சாகப்டுத்தியவர்களை நான் என்றும் மறந்தவனல்ல. நான் கடன் பட்டுள்ளவர்களில் பட்டியலில் பஞ்சாங்கமும் இணைந்துள்ளார். அதற்கு முன்பாக நண்பர் பஞ்சாங்கத்துடன் நான் அண்மிக்கக் காரணமாகவிருந்த நாயக்கருக்கும், செஞ்சியில் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, கருத்தரங்கிற்குக் காரணமான இலக்கியம் சீனு தமிழ்மணிக்கும், நறுமுகை இராதாகிருஷ்ணனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
————————————————–

மொழிவது சுகம் – ஏப்ரல் 27

துப்பறியும் புனைவுகள்: Whodunit

மேற்கத்திய நாடுகளில் குற்ற புனைவுகள் என வகைபடுத்தியபோதிலும், தமிழில் அவற்றை துப்பறியும் புனைவுகளென்றே அறிவோம். தவிர நம்முடைய துப்பறியும் புனைவுகளுக்கு நெடிய வரலாறு கிடையாது, அண்மைகாலத்தியவை. இருபதாம் நூற்றாண்டிலிருந்தே குற்றபுனைவுகளை தமிழ் எழுத்துலகம் சந்திக்க நேர்ந்தது. வடுவூர் துரைசாமி ஐயங்காரும் வை.மூ கோதைநாயகி அம்மாளும் முன்னோடிகள். குற்றப்புனைவுகள் அனைத்திலுமே பொலீஸார் வரவேண்டுமென்கிற அவசியமில்லை. அண்மையில் குற்ற நூல்களின் வரலாறு என்றதொரு நூலை வாங்கினேன். நூலாசிரியர்கள் இருவரும் குற்ற நூல்களின் வரலாற்றை அகழ்ந்து ஆய்ந்து அட்டவணை படுத்தியிருக்கிறார்கள். ஆசிரியர்கள் இருவரும் நூலைப்பற்றியும் நூலாசிரியர்கள் பற்றியும், நூல் உருவான விதம் பற்றியும் தகவல்களைத் தந்திருக்கிறார்கள். துப்பறியும் கதைகள் வாசகர்களிடம் ஏற்படுத்துகிற தூண்டலை இலக்கிய விமர்சகர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையே என்கிற ஆதங்கமும் தொனிக்கிறது.

முதல் குற்ற புனைவு எந்த நூற்றாண்டில், எங்கே எழுதப்பட்டதென நினைக்கிறீர்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் ஊர்பேர்தெரியாத சீனர் ஒருவரால் எழுதப்பட்ட அந்நூலின் பெயர் Trois affaires criminelles résolues par le juge Ti (Celebrated Cases of Judge Deei). இதொரு வரலாற்று குற்றப்புனைவு. குற்ற புனைவிற்கு என்ன பொருள் என்பதை அறிவீர்கள். வரலாறு என்பதற்கு என்ன பொருளென்றும் அறிந்திருப்பீர்கள். இரண்டையும் சேர்த்து பொருள்கொண்டால் வரலாற்று குற்றபுனைவு. சற்று எளிமையாகச் சொல்லவேண்டுமெனில், படைப்பாளியின் உயிர் வாழ்க்கைக்கு முந்தைய காலத்தில் நடந்ததென்று ஒரு புனைவை கட்டமைப்பது வரலாற்று குற்றவியல். பாத்திரங்களின் மொழி, சமூக அமைப்பு, காட்சிகள் விவரணை அனைத்திலும் கடந்த காலத்தைத் தெளிவாய்க் கொண்டுவரவேண்டும். இவ்வரலாற்று புதினங்களில் ‘யார் செய்திருப்பர்’ அல்லது எதனால் நிகழ்ந்தது என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. ஆங்கிலத்தில் இதனை’ Whodunit (Who done it) என்கிறார்கள். Celebrated Cases of Judge Dee. என்ற சீன நூலை ரோபர்ட் வான் குலிக்(Robert Hans van Gulik ) என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இந்நூலை வாசிக்கசந்தர்ப்பம் அமையவில்லை. ஆனால் எதிர்பாராதவிதமாக France-Culture என்கிற பிரெஞ்சு வானொலியில் பத்து பகுதிகளாக கேட்க வாய்ப்புக்கிடைத்தது. பிரெஞ்சில் தொடரைக்கேட்க விருப்பம் உள்ளவர்களுக்காக: http://www.franceculture.fr/oeuvre-trois-affaires-criminelles-resolues-par-le-juge-ti-roman-anonyme-chinois-du-xviiie-siecle-de-

பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் ‘பல்ஸாக்’ 1841ம் ஆண்டு எழுதிய Une ténébreuse affaire , என்ற நூலும் வரலாற்று குற்ற புனைவிற்கு நல்ல உதாரணம்.  பிறகு அகதா கிறிஸ்டி எழுதிய புனைவுகளில் சிலவும், கோனன் டாயில் புதினங்களும் அவ்வகைப்பட்டவை என்று கருதலாம். ஆனால் குற்றப்புனைவுகளை முழுக்க முழுக்க துப்பறியும் புதினங்களாக மாற்றிய புண்ணியவான்கள் ஆங்கிலேயர்களும் அமெரிக்கர்களும்.

இன்றைக்கு குற்ற வரலாற்று புதினங்கள் மூன்றாம் கட்டத்தை எட்டியிருக்கின்றன. இன்றைக்கு அவை இலக்கியம்: உம்பர்ட்டோ எக்கோ, குந்த்தர் கிராஸ், ட்ரூமன் கப்போட், ஓரான் பாமுக் போன்ற படைபாளிகள் குற்றப்புனைவுகளை இலக்கிய அந்தஸ்திற்கு உயர்த்தியவர்கள்.

தொடர்ந்து விற்பனையில் சாதனை செய்து அல்லது அதையே காரணமாக முன்வைத்து காழ்ப்பில் விமர்சனம் செய்பவர்கள்கூட கதைசொல்லலில் கல்கியின் இடத்தை என்றைக்கும்  எட்டப்போவதில்லை. எனக்கு அவருடைய பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும் வரலாறு குற்றப்புனைவு வகைமை சார்ந்ததே. எனது பங்கிற்கு நீலக்கடல், மாத்தாஹரி என்ற இரண்டு நூல்களை எழுதினேன். ஓரளவிற்கு அடையாளம் கிடைத்துள்ளது அதில் செய்திருக்கு பல முயற்சிகளை பாராட்டுகிறவர்கள் ஒருபக்கமெனில், உள்ளார்ந்த எரிச்சலில் உதாசீனப்படுத்தும் மனிதர்களுமுண்டு. நீலக்கடலுக்கும் மாத்தாஹரிக்கும் ஏன் எனது எந்தப்படைப்பிற்கு விமார்சனங்களை லாபி செய்து பெற்றவனல்ல. எழுதியவர்களை அவர்களின் விமர்சனத்திற்குப்பிறகே அறிமுகப்படுத்திக்கொண்டு நன்றி தெரிவித்திருக்கிறேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய மேற்கத்திய படைப்பாளிகளின் பெயர்களை கடந்த இருபது ஆண்டுகளாகத்தான் சற்று உரத்து பேசத் தொடங்கியிருக்கிறோம்.  இன்றைய மேற்குலகைப்பற்றியும் அதன் படைப்புகளையும் கொண்டாட வழக்கம்போல இவர்களுக்கு 50 ஆண்டுகள் தேவைப்படலாம்.

——————————–