Tag Archives: தோட்டத் தொழிலாளர்கள்

கவனத்தைப் பெற்ற கவிதையும் பதிவுகளும் செப்டம்பர் -21

1. கவனத்தைப் பெற்றக் கவிதை

விழி பேசிய வார்த்தைகள்
-கணியன் செல்வராஜ்

விடுமுறை நாட்களில்
வீட்டுக்குவந்தால்
அக்காவைப் பார்க்க
அம்மா
அனுப்புவது வழக்கம்

நல்ல நாளுக்குக் காய்ச்ச
நாலுபடி
நல்ல அரிசி

கடை மசாலாவுக்கு ருசிகுறைவு என
அரைத்ததில் பாதியும்
ஐந்நூறு ரூபாயும்

கூடவே பேத்திக்குத்
தெருவில் விற்க வந்தவனிடம்
பார்த்துப் பார்த்து பேரம் பேசி எடுத்த
புத்தாடையையும்
கொடுத்தனுப்புவாள்

அக்கா வரவேற்கும் முன்பே
ரேஷன் கடை
இலவச சேலையும்
கரும்பு வெட்டி
காய்ந்த கையும்
அவள்
கஷ்ட்டத்தைச் சொல்லி
வரவேற்கிறது

அம்மா, அப்பா
எதிர்வீட்டுத் தோழியையும்
விசாரித்தபடி

அம்மா பாப்பாவுக்கு
எடுத்துப்போட்ட
கொடியும் கொலுசும்
விளையாடப்போகும்போது  தொலைச்சிடுவானு
அவுத்துட்டேன்

கழுத்துல கெடந்த செயினு
கொக்கி போடக்
கடையில கொடுத்திருக்கு

மாமா இப்ப எல்லாம்
குடிச்சுட்டு அடிக்கிறதில்லை
இந்தக் காயம் தண்ணீர்க் குழாயில்
தவறி விழுந்தது

கேட்கும் முன்பே
காரணம் சொல்வாள்
விடைபெறும்போது மட்டும்
இதுவரை பேசிய உதடுகள்
மௌனம் சாதிக்க
கண்கள் மட்டும்
கைக்கூப்பிக் கெஞ்சும்
“அம்மாவிடம் எதையும் சொல்லாதே!”

– நன்றி – ஆனந்தவிகடன்

——————————————-

2. கவனத்தைப்பெற்ற பதிவுகள்

அ. அண்ணா சிறுகதைகள் – பெருமாள் முருகன்

அண்ணாவின் சிறுகதைகளைத் தொகுத்துள்ள பெருமாள் முருகன் அத்தொகுப்புக்கென எடுத்த முயற்சிகளையும், தொகுப்பிற்கான காரணத்தையும் தெரிவிக்கிறார்.

“சிறுகதைகள், கவிதைகள், கடிதங்கள், கட்டுரைகள் என ஏராளமாக எழுதியிருக்கிறார் (அண்ணா). எல்லாவற்றையும் ஒருசேரத் தீவிரமாக வாசித்தவன் அல்ல நான். ஆனால் அவருடைய சிறுகதைகளை ஓரளவு வாசித்திருந்தேன். அக்கதைகளின் வடிவ வேறுபாடுகள் என் மனத்தில் பதிந்தன. தொலைபேசி உரையாடல் தொகுப்பு ஒன்றையே ஒரு கதையாக்கி இருப்பார். இன்னொரு கதை வரவு செலவு  அறிக்கையாக இருக்கும். உரையாடலே இல்லாமல் ஒரு கதை உருவாகியிருக்கும். விதவிதமான வடிவ வேறுபாடுகளைக் கொண்டு கதை எழுதியிருக்கிறார் என்றால் சிறுகதை வடிவம் பற்றிய உணர்வு அவருக்கு நிச்சயம் இருந்திருக்கும் என்று எனக்குத் தோன்றியது. அப்படியான உணர்வு உடையவர் நிச்சயம் சில நல்ல கதைகளையாவது எழுதியிருப்பார் என்பது என் நம்பிக்கை. அந்த எண்ணத்தில்தான் அண்ணாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுதி ஒன்றை உருவாக்க விழைந்தேன்” என்கிறார் தொகுப்பாசிரியர்.

அண்ணாவின் கதைகள் பற்றிய தொகுப்பாளரின் ஓர்மையும் புறம் தள்ளக்கூடியதல்ல.

http://www.perumalmurugan.com/

2. அற்றகுளத்து அற்புத மீன்கள்

தேவிபாரதியால் தொடர்ந்து காலச்சுவடில் எழுதப்பட்ட  அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு “அற்ற குளத்து அற்புதமீன்கள்” கடந்தமாதம் நான்காம் தேதி ஈரோட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது. நூலை பிரபஞ்சனுக்கும், பா. செயபிரகாசத்திற்கும் சமர்ப்பித்திருக்கும் தேவிபாரதி தொடக்ககாலத்தில் அவர்களைத் ( அவர்களை மட்டுமல்ல வண்ண நிலவன், பூமணியும் கூட வருகிறார்கள்) தேடி அலைந்ததை பகிர்ந்துகொள்கிறார். எழுதப்பட்ட கட்டுரையின் சொற்களும் வாக்கியமும் ஒப்பற்றத் அத்தருணத்தை புத்துணர்வுடன் வெளிப்படுத்தியிருக்கின்றன.

தேவிபாரதியின் கட்டுரைகளை வாசித்திருக்கும் எனக்கு அவரது படைப்புகளை முழுமையாக வாசிக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. அதிகம் வாசித்திராத நிலையில் அண்மையில் சுவிஸ் வந்திருந்த நண்பரைச் சந்திக்க தயங்கினேன். இந்திரன் தேவிபாரதி, தளவாய் சுந்தரம் போன்றவர்களின் எழுத்துக்களை என்னிடத்தில் தொலைபேசியில் உரையாடும்போதெல்லாம் மாச்சரியங்கிளின்றி பாராட்டுவார்.

இக்கட்டுரையை நண்பர்கள் அவசியம் வாசிக்க வேண்டும்

http://devibharathi.blogspot.fr/

இ. கவாத்துக்குத் தப்பிய செடிகள்

தமிழ் மகன் இலங்கைக்குச் சென்றுவந்ததைத் தெரிவிக்கும் கட்டுரை.

இலங்கையில் பலகாலமாக உயிர்வாழ்ந்தும் சகத் தமிழர்களாலேயே அந்நியர்களாக நடத்தப்படுகிற தோட்டத் தொழிலாளர்கள் பற்றிய கட்டுரை. அவர்களைப் பற்றிய விரிவான தகவலைக் கட்டுரை தரவில்லை.  ஈழம் குறித்து எவ்வளவு கட்டுரைகள் கவிதைகள், இரங்கற்பாடல்கள், அனற்பறக்கும் விவாதங்கள் இவர்களின்(தோட்டத்தொழிலாளர்கள்) நிலைகுறித்து ஏன் இரண்டொருவரிகள், நலன் விசாரிப்புகள் நம் கண்ணிற்படவில்லை என்பது புரியாதபுதிர்.

தமிழில் ஒரு முதுமொழியுண்டு, ” எளியாரை வலியார் வாட்டினால் வலியாரை தெய்வம் வாட்டும்”

http://www.tamilmagan.in/
———————–