Tag Archives: தகவலைத் தெரிவிக்க எழுதுதல்

எழுத்தாளன் முகவரி -8

புனைவும் -உண்மையும்

பிரெஞ்சு மொழியியல் அறிஞர்  ரொலான் பர்த் (Roland Gerard Barthes)  ‘ Ecrivain, Ecrivant. என படைப்பாளிகளை இருவகையாக பிரிக்கிறார்.

Écrivantஎன்பவர்களை கட்டுரையாளர்கள் எனபொருள் கொள்ளலாம். ரொலான் பர்த் தரும் விளக்கத்தின்படி கட்டுரையாளர்களுக்கு  மொழி ஒரு கருவி. அம்மொழியின் பணி நடந்தவற்றிற்கு தாங்கள் சாட்சி என்பதை பிறருக்கு உணர்த்துவது, அறிந்தவற்றைப்  பிறருக்கு விவரிப்பது, உற்ற ஞானத்தை பிறருக்கு போதிப்பது. இப்பணியிற் பெரிதாய் நாம் கொண்டாட ஒன்றுமில்லை. பார்த்தை பொறுத்தவரை இங்கே மொழி செயல்பாடற்றது

Ecrivain என்றால் தமிழில் படைப்பாளிகள் என பொருள் கொள்ளலாம். ரொலான் பர்த் பார்வையின் படி படைப்பாளிகள் மொழி தகவலைச் சுமப்பதோடு பிற பணிகளையும் செய்கிறது.  சொல்லப்படும் தகவலும் ஐயப்பாடுடையதாக அதாவது இருமுடிவிற்கு வழிகோலுகின்றவகையில் அமையவேண்டுமென்கிறார். தீர்க்கமான ஒரு முடிவைச்சொல்கிறபோதுகூட தொடர்ந்து கேள்விக்கு ஆளாகிற ஒரு முடிவாக அது அமையவேண்டுமென்பது பர்த் முன் வைக்கும் யோசனை.

ரொலான் பர்த் கருத்தின் அடிப்படையில் எழுத்துக்களை இருவகையாகப் பிரிக்கின்றனர்: முதலாவது தகவலைத் தெரிவிக்க எழுதுவது; இரண்டாவது படைப்புக்கென எழுதுவது.

தகவலைத் தெரிவிக்க எழுதுதல் என்று சொல்கிறபோதே, ஓரளவிற்கு அவ்வெழுத்தின் செயல்படும் விதத்தை ஊகிக்கலாம். இங்கே மொழியின் பணி சம்பந்தப்பட்டத் தகவலைக் கொண்டு சேர்க்கும் வாகனம் -பொதி சுமக்கும் கழுதை- தகவலைக்கொண்டு சேர்க்கும் பணியில் மொழியின் சேவையை ஒரு கழுதையின் இடத்தில் வைத்தே பார்க்கிறோம். கொஞ்சம் கடுமையான சொல்லை இங்கே மொழிக்கு உவமைப்படுத்தியிருந்தபோதிலும் அதில் உண்மையில்லாமலில்லை. சமையற் குறிப்பு, அறிக்கைகள். நித்யா டிஸ்மிஸ் என்று தூயதமிழில் எழுதும் திமுக குடும்ப ஏடு, டெங்கு சுரம் வராமல் தடுக்க  கொசுவை விரட்டி பிடியுங்கள் என அமைச்சர் தரும் யோசனை, கற்பில் சிறந்தவள் சீதையா? மண்டோதரியா? என்பதுபோன்ற சிகாமணிகளின் கட்டுரைகள் அனைத்தும் தகவலைத் தெரிவிக்கும் எழுத்துக்கள் அதாவது ரொலான் பர்த் மொழியில் சொல்வதெனில் ‘Ecrivant’.

படைப்பு எழுத்துக்கள்: இங்கேயும் சொல்வதற்கு விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அதை சொல்கிறவர் கொஞ்சம் சுவாரசியமாகச் சொல்லவேண்டுமென்று நினைக்கிறார். எழுதுபவர் உண்மையை சொன்னால்போதுமென்று நினைப்பதில்லை கொஞ்சம் பொடிவைத்து பேசுகிறார். அப்படி பேசுவதற்குச் சில கற்பனை பாத்திரங்களை படைக்கிறார்.கற்பனை காட்சிகளையும் தீட்டுகிறார். நல்ல வாசகன் அமைந்தால் பொருள், தொனி, அழகு, சந்தம் அவ்வளவையும் பெறலாம். இவ்வெழுத்திலும் பிறவிடங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் இருந்தபோதிலும், எழுதுபவர் சுயசிந்தனையிற் புதிதாக உதித்ததைச் சேர்த்து அவ்வெழுத்துக்கு மெருகூட்டுகிறார். தாம் கற்பனையில் எழுப்பிய உலகத்தில் தமது விருப்பத்துக்குகந்த மனிதர்களை நடமாடவிட்டு அவர்களை நாமென்கிறார். கவிஞனாக இருப்பபன் கவிதையில் நாம் இதுவரை அறிந்திராத காட்சியைத் தீட்டுகிறான்; சொல் புதிது பொருள் புதிது என்கிறான். ஓர் தத்துவவாதி, புதிதாய் ஒரு தத்துவத்தைக்கூறி நம்மைச் சிந்திக்க வைக்கிறான். படைப்பு என்றவகையில் உருவாகும் எழுத்துகள் சென்ற தலைமுறை ஞானத்தை பேணுவதோடு வரும் தலைமுறை உயர்விற்கும் உதவுகிறது.

மேற்கண்ட இரண்டையும் வேறு சொற்களில் சொல்வதெனில் ஒன்று ஆவணம் மற்றது இலக்கியம்: புனைவு, அபுனைவு. பிரெஞ்சில் முன்னதை
‘நடை’ யென்றும் பின்னதை ‘நாட்டிய’ மென்றுங்கூட ஒப்பிடுவதுண்டு.

நடையை எடுத்துக்கொள்ளூங்கள். தகவலைப்போன்றே அது தெளிவானது. புறவுலகோடு தொடர்புடையது. ஒரிடத்தில் தொடங்கி இன்னொரு இடத்தில் முடிந்துவிடும். ஏதாவதொன்றை சுமக்கும் பணி அதற்குண்டு. நடையில் நிதானமிருக்கலாம் அவசரமிருக்கலாம், நேர்த்தியாய் அழகாய் நடக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. தகவலைத் தெரிவிக்கும் மொழியின் பணியும் நடையை ஒத்ததே.  சொல்லவேண்டிய கருத்தை ஒரு முனையிலிருந்து சுமந்து சென்று அடுத்த முனையில் இறக்கிவைத்துவிட்டதெனில் மொழியின் பணிமுடிந்தது. ஆனால் நடனம் அப்படிப்பட்டதல்ல, கைகளும் கால்களும் பிறவும் நளினமாக இயங்கவேண்டும். நடனமாடுகிறவர் தமது நாட்டியம் நேர்த்தியாக அமைய வேண்டுமென்பதில் கண்ணுங்கருத்துமாக இருக்கிறார். நன்றாக ஆடினால் கூடுதலாகக் கூட்டம் வருமென்பதும் சம்பாதிக்கமுடியுமென்பதும் உண்மைதான் ஆனால் ஆடும் கலைஞனுக்கு அது முதன்மையான நோக்கு அல்ல. தவிர முடமல்லாத மனிதர் யாராயினும் நடக்கலாம் ஆனால் நடனமாட ஞானம், உழைப்பு,பொருத்தமான உடல் என்று பலவிழுமியங்கள் தேவைப்படுகின்றன.

எனினும் ஓர் எழுத்தை அல்லது படைப்பை தெள்ளத் தெளிவாக மேற்கண்டவகையில் இரு பிரிவுக்குள் அடக்கவியலாது. கட்டுரையைக்கதைபோல சொல்லவும், கதையைக் கட்டுரைபோல எழுதவும் செய்கிற ஆசாமிகளைப்பார்க்கிறோம். வராலாற்றாசிரியர்களே சார்பற்று, சமநிலையில் சொல்ல வாய்ப்பில்லை என்கிறபோது பிறவற்றை புனைவுகளாக சொல்லலாம் தவறில்லை. தகவலைத் தெரிவிக்கிற  விளம்பரங்களைக்கூட நேர்த்தியாகவும் கலைநயத்துடனும் சொல்லத்தவறினால், செய்யப்படும் விளம்பரத்திற்குரிய பலன் கிட்டுவதில்லை.

இன்றைய எழுத்துக்களை Fiction என்பதைக்காட்டிலும் Faction என்று சொல்வதுதான் பொருந்தும். கட்டுரை எழுதும்போதுகூட கதை சொல்லும் திறனை கலவுங்கள். அவ்வாறே புனைவில் கட்டுரைக்குரிய நம்பகத் தன்மை ஏற்படுத்தித்தரும் உண்மையைக் கலவுங்கள்.

எனது இரண்டாவது நாவல் மாத்தாஹரி. முதல் உலகப்போரின்போது அவள் பெயர் பிரசித்தம். பரத்தையென்று விமரிசிக்கப்பட்டவள். பிரெஞ்சு அரசுக்குப் பெண் உளவாளியாகப் பணியாற்றியவளை பின் நாளில் பிரெஞ்சு அரசு தண்டித்துக் கொலைசெய்தது. புதுச்சேரியிலிருந்து கனவுகளுடன்  பாரீஸ¤க்கு திருமணமாகிவரும் பெண்கள் அநேகரின் வாழ்க்கை இன்னல்களை ஓரளவு அறிந்திருந்தேன். நான் வசிக்கிற ஸ்ட்ராஸ்பூரில் ஒரு புதுச்சேரி பெண் தீக்குளிக்கவும் செய்தாள்.  நான் இளைஞனாக இருந்த காலத்தில், புதுச்சேரியில்எனக்கு நெருங்கிய உறவினர் வீட்டில் பவானிபோன்றே பெண்ணொருத்தியிருந்தாள். அவள் அறிவுக்கும் அழகுக்கும் வாய்த்தவனோ எல்லாவற்றிலும் நேரெதிர். இந்த உண்மைகளையெல்லாம் ஒன்றுதிரட்டி புனைவாகச் சொல்லவேண்டுமென்று விரும்பினேன்: பவானி உருவானாள். பலரும் இன்றைக்குப் மாத்தாஹரி கதையில் வரும் பவானியை உண்மையென்றே நம்புகிறார்கள். அப்படியொரு நம்பகத்தன்மையை வாசக நண்பர்களுக்கு உருவாக்கியிருந்தேன்.

உண்மையையும் புனைவையும் சரியான விகிதத்தில் கலந்து வெற்றிபெற்ற படைப்பாளிகள் நிறைய பேருண்டு. தமிழில் ரா.சு நல்லபெருமாளின் ‘போராட்டங்கள் சிறந்த உதாரணம். சார்லஸ் டிக்கன்ஸ¤டைய நாவல்கள் அனைத்துமே அப்படிப்பட்டவையெனலாம். லியோ டால்ஸ்டாயும், ஸ்டெந்த்தாலுங்கூட அதை நன்றாகவேச் செய்தார்கள். அனுபவங்களென்று  நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திப்பவைகள் புனைவுகளுக்கு உதவக்கூடும். உண்மைக்கூறுகளை கற்பனை மெருகேற்றிச்சொல்லும் திறன் உங்களுக்கிருந்தால் கதைசொல்லலில் நீங்கள் தேர்ந்தவர். கணவன் அல்லது மனைவியைச் சந்தேகிக்கும் தம்பதி; “எதிர் வீட்டுபெண்ணைப் பார்த்தியா!” எனக் கேள்வியையும் கேட்டு அதற்குப் பதிலையும் சொல்வதுபோல, அப்பெண் வெளியில் போனதில் ஆரம்பித்து வீடு திரும்பும் வரை நேரில் கண்டதைப்போல சொல்லத்தெரிந்த பெண்மணி; தொலைபேசியை எடுத்ததுமே புலம்புகிற மனிதர்கள் இவர்களெல்லாங்கூட கதை சொல்வதில் தேர்ந்தவர்கள்தான். ஆனால் இவர்களிடமுள்ள பிரச்சினை நாக்கு புரளும் அளவிற்கு விரல்கள் (உட்கார்ந்து எழுத )  ஒத்துழைப்பதில்லை.

உண்மையைப் புனைவில் கலப்பதென்பதென்பது ஒரு வித தொழில் நுட்பம். உண்மை புனைவென்ற இரு இழைகளையும் சேர்த்து திரிப்பதன் இலக்கு, கதைக்கு நேர்த்தியையும், கதைமீதான ஆர்வத்தையும் ஏற்படுத்தித்தருகின்ற வகையில் புனைவுக்கொரு நம்பகத் தன்மையை ஏற்படுத்தித் தருதல்.

———————————————————