Tag Archives: செக்கோவ்

எழுத்தாளனென்ற முகவரி -1:

கற்பனை வளர்தல்வேண்டும்

கவிநயம் பிறப்பில்வேண்டும்

சொற்பொருள் அறிவும் வேண்டும்

சுவைபட உரைத்தல் வேண்டும்.

– கண்ணதாசன்

“A Poet who could only sit on chair and write verses would never write any verses worth reading” -Thomas Carlyle

சிறந்த எழுத்தாளனாக வருவதற்கு ஏதேனும் சூத்திரம் இருக்கிறதா? எழுத்தாளர்களென்று ஒரு சிலரைமட்டுமே இந்த உலகம் அறிந்திருக்கிறது, எதனால்? ஏன்? அண்மையில் உள்ளூர் நூலகமொன்றில் பிரபல எழுத்தாளர்கள் அனுபவங்களின் தொகுப்பை வாசித்தேன், மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அநேகமாக  உங்களில் சிலருக்கு உதவலாம்.

 கடின உழைப்பும் – எழுதவேண்டுமென்ற விருப்பமும்

தேடிவந்த இளம் எழுத்தாளர் ஒருவருக்கு செக்கோவ் கூறிய யோசனை.”இரவுபகல் பாராது தொடர்ந்து எழுது, படி; இரண்டையும் ஒரு வெறியொடு செய்”. இளைஞர், தனது குருவின் வார்த்தைகளை செயல்படுத்தினாரா, வெற்றிபெற்றாரா என்பது நமக்குத் தெரியாது. பல நேரங்களில் உபதேசங்களைக் கேட்பதோடு சரி, நாம் பின்பற்றுவதில்லை. அவற்றைச் செயல்படுத்துவதற்கும் செக்கோவ் கூறியதுபோல விருப்பம் வேண்டும். ‘எனக்கு எழுதவேண்டுமென்று ஆசை’ ஆனால் நேரமில்லையென பதினைந்து ஆண்டுகளாக நண்பரொருவர் சொல்லிக்கொண்டிருக்கிறார். வேறு சிலர், தமிழை முறையாகப்படித்திருக்கிறேன், எனக்கு எழுத்து வசப்படாமல் போய்விடுமா என எழுத உட்காருவார்கள், வேர்த்து விறுவிறுத்து அதை முடித்தும் இருப்பார்கள், பலன் என்ன வென்று சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கைத் துணைதான் சொல்லமுடியும். சைவ சமயத்தில் ஸத்காரியவாதம் என்ற சொல் உள்ளது. அதற்கு உள்ளது போகாது, இல்லது வாராது என்பது பொருள். ஆக எழுத்துக்கு உழைப்பு மட்டும் போதாது, உழைப்பு அல்லாத ஒரு ஜீன் தேவைப்படுகிறது.

இரவுபகலென்று பாராமல் உழைக்கவேண்டுமென செக்கோவ் கொடுத்த யோசனை கடின உழைப்பின் தேவையை வற்புறுத்துகிறது. ஒரு வெற்றிக்கு கடின உழைப்பு தேவைதான். மாதத்தில் நிலையாக ஒரு வருமானம் இருந்தால் போதுமென்று நினைப்பவன் அவனுக்கு விதிக்கப்பட்ட நேரம்வரை உழைக்கிறான். கூடுதலாக இரண்டு மணி நேரம் உழைத்தால் அக்கூடுதல் பணமாக அவனுடைய வங்கிக்கனக்கில் உருமாற்றம் பெறுகிறது. கடின உழைப்பு அவன் எதிர்பார்க்கிற பணத்தைக்கொடுக்கிறபோது திருப்தியுறுகிறான்.

ரூமெர் காடென் (Rumer Gooden) என்ற பெண்மணியை நண்பர்கள் பலர் அறிந்திருக்கலாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்து கிட்டத்தட்ட ஒரு நூறாண்டுகாலம் வாழ்ந்த சிறந்த எழுத்தாளர்.   புனைவுகள், அபுனைவுகளென்று எழுதிக் குவித்தவர். செக்கோவ் ஓர் எழுத்தாளனுக்குத் தேவையென வற்புறுத்துகிற கடின உழைப்பு ரூமர் காடோனை பொறுத்தவரை எழுத்தின் மீதுள்ள நம்பிக்கையும், நோக்கத்தில் உறுதியும், அதை முடித்தே தீருவதென்ற சிந்தையும்’ ஆகும். கடினமாக உழைப்பது பிற காரியங்களுக்கு உதவலாம். ஒரு கலைஞனுக்கு உதவுமா? பற்றுதலின்றி  மாடுபோல உழைக்க படைப்பாளிக்கு ஆகுமா? எந்தத் துறையிலும் வெற்றியென்பது பக்தியுடன் அளிக்கும் உழைப்பினாற் கிடைப்பது. எழுத்தை படைப்பாக மாற்ற, மிகக்கூடிய பற்றுதலும் ஆர்வமும்  தேவைபடுகிறது.

ஓர் எழுத்தாளனுக்கு வேண்டிய கடின உழைப்பு,  என்வரையில் கீழ்க்கண்டவகையில் தொடங்குகிறது:

– முதலில் நாம் பார்த்ததை, கேட்டதை, வாசித்ததை, உள்வாங்கிக்கொண்டதை பிறறிடம் சொல்ல கற்றிருக்கிறோமா என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். அமைதியாக இருக்கிறபோது யோசித்துபார்ப்பது நல்லது, எழுதி வரிசைபடுத்துவது அதைவிட நல்லது. உங்கள் கற்பனைகளை கலக்காமல் உண்மையைமட்டும் பிற நண்பர்களிடம் முழுமையாகச் சொல்ல முடிகிறதா என முயன்றுபாருங்கள். எவையேனும் விடுபட்டிருந்தால் சொல்லலில் அவை விடுபட்டதற்கான காரணங்களை யோசியுங்கள்.

நீங்கள் நடந்ததனைத்தையும் அல்லது சொல்லவந்தது முழுவதையும் ஒருவரிடம் தெரிவித்திருந்தும் அவர் ஏன் விளங்கிக்கொள்ளவில்லை என்பதற்கான மூலத்தையும் கண்டுபிடியுங்கள். அதற்கு அவர் காரணமா நீங்கள் காரணமா எனத் தீர்மானியுங்கள், நீங்கள் காரணமெனில் எப்படிக்கூறினால் அவர் புரிந்துகொள்வார் என யோசியுங்கள்.சொல்லலை எழுத்தில் வடிக்கிறபோது வேறு கவனங்கள் தேவை. ஒரு சமையல் செய்முறையை நடமுறைபடுத்துவதுபோல. அது அவர்போலவோ இவர்போலவோ என்பதைத் தவிர்த்து உங்கள் எழுத்து என்பதை நிறுவும் முயற்சி. உலகில் எத்தனை மில்லியன் மனிதர்கள், எனினும் ஒருவரைப்போல மற்றொருவர் நூறு விழுக்காடு ஒற்றுமையுடன் உருவத்தில், குணத்தில் இருக்க வாய்ப்பே இல்லை மயிரிழை வேறுபாடேனும் இருக்கத்தான் செய்யும் அந்தப்பேனை பெருமாளாக்க முடிந்தால் உங்களுக்குள் எழுத்தாளர் இருக்கிறார்.

ரெபெக்கா வெஸ்ட் ஒவ்வொரு முறையும் எழுதத் தொடங்குகிறபோது எப்படி ஆரம்பிப்பது, எப்படி கொண்டுபோவதென்பதை யோசிப்பதற்கே பல மணி நேரங்கள் செலவிடுவாராம்; நாவலுக்கான அத்தியாயமொன்றை  ஒரு முறை இருபத்தாறு தடவை சளைக்காமல் எழுதிப்பார்த்திருக்கிறார். பிறரிடமிருந்து நமது எழுத்து நமது குழந்தை வேறுபட்டதென சொல்லவேண்டியவர்களாக இருக்கிறோம்.

ஒரு கதையை எழுதவேண்டுமென தீர்மானிக்கிறீர்கள். அக்கதை நடபெறும் இடம் நீங்கள் முன்பின் அறிந்திராத இடம் என வைத்துக்கொள்ளுங்கள் என்ன செய்வீர்கள். ரூமெர் காடென் பின்பற்றும் வழிமுறைகள் உங்கள் வழிமுறைகளோடு இசைகிறதா என்று தெரிந்துகொள்ளுங்கள்.

சொல்லவிருக்கிற கதை என்ன என்பதை முதலில் தீர்மானிக்கிறார். “அக்கதையை எந்தப் பின்புலத்தில் சொல்லலாமென முடிவுசெய்வதும், அவ் வாழ்க்கைமுறையை எழுத்தில் கொண்டுவர எடுக்கும் பிரயத்தனங்களும் அடுத்து வருபவை”, என்கிறார். “நிச்சயம் அங்கு ஏற்படும் வெற்றிடங்களை கற்பனைகளால் நிரப்புவது அவசியம் ஏனெனில் எழுதுவது ஆவணமல்ல, புனைவு. எனது பாத்திரங்களை உயிருள்ள பாத்திரங்களென எனது வாசகர்கள் நம்புகிறார்கள்”. என்கிறார். பாத்திரங்களுக்கு வைக்கும் பெயர்களும் அவருக்கு முக்கியமாம். பெயரிடாத கதைமாந்தர்களின் அதன் குணங்களை கட்டமைக்க அவருக்கு ஆவதில்லையாம்.

கதையைத் தீர்மானியுங்கள், கதைமாந்தர்களை தேர்வுசெய்யுங்கள், பெயர்சூட்டுங்கள்; எழுத உட்காருங்கள் பிற எழுத்திடமிருந்து உங்கள் எழுத்து வேறுபடுத்திக்காட்ட எத்தனைமணி நேரம் செலவிடவேண்டியிருந்தாலும், சோர்வுறாதீர்கள்.

(தொடரும்)