Tag Archives: கா•ப்காவின் நாய்க்குட்டி

அண்மையில் வெளிவந்த கா•ப்காவின் நாய்க்குட்டி (நாவல்) முதல் அத்தியாயம்)

பிராஹா, செக் குடியரசு: 2013, ஏப்ரல், 6 சனிக்கிழமை

 

 

நோக்கமற்ற தேடுதல் இருக்கிறதா? அல்லது தேடுதல் இல்லாத மனிதர்கள் உண்டா? கண்ணுக்கெட்டியவரை மனிதர்கள் – ஒவ்வொரு நாளும் ஒன்றைத் தேடிக்கொண்டிருப்பவர்கள். உடமையாக்கிக்கொண்ட பிறகு, திருப்தியுறாமல் வேறொன்றைத் தேடுவார்கள். கண்டறிய வேண்டிய பொருள் அல்லது கைக்கு எட்டவேண்டிய பொருள் இவர்களுக்கோ, இவர்களின் சுற்றத்திற்கோ சில கணமேனும் மகிழ்ச்சிதரக்கூடியதென்கிற கனவில் பதட்டத்துடன் அலைபவர்கள். தேடும் இக்கணம்வரை கண்ணிற்படாமலேயே கைக்கு எட்டாமலேயே, பொருள் ஒளிந்து விளையாடலாம். அல்லது சற்று முன்பாக குழந்தையின் சிறுபொம்மைபோல அது கைநழுவி மேசைக்கு அடியிலோ, சோபாவிற்குக் கீழேயோ விழுந்து கிடக்கலாம். தன்னைக்கொண்டாடிய குழந்தையின் அரவணைப்பிற்காக பொம்மைக்கும் ஏக்கங்கள் உண்டு, தணியுமா என்பதைக் காலம் தீர்மானிக்கவேண்டும். அதுவரை குழந்தை தேடும், தேவையெனில் பெற்றோர்களும் தேடலாம். தேடும் பொருள் எப்பொழுதும் நமது பார்வை பரப்பிற்கு வெளியிலிருக்கிறது. இருள் விலகி பொழுது புலர்ந்து தேடலை எளிதாக்கலாம். வயதுக்குரிய, உடலுக்குப் பொருத்தமான, மூளைக்குகந்த தேடுதல் இருக்கிறது. தேடுதல் எதுவாயினும் தேவையைக்காட்டிலும், அதன் பெறுமதி ஒரு குன்றிமணியேனும் தூக்கலாக இருக்கவேண்டுமென்பது விதி. தேடலில் உள்ள சிக்கல், பெரும்பாலான நேரங்களில் நாம் தேடும் பொருள் மற்றவர் இடத்திலும், மற்றவர் தேடும்பொருள் நம்மிடத்திலும் இருக்கிறது. பிறர் தேடுகின்றார்களேயென்று தமக்கு வேண்டாத பொருளை ஒருவரும் விட்டுக்கொடுப்பதுமில்லை. அவள் சராசரி மனிதர்கூட்டத்தில் ஒருத்தி, தேடுவது பரம்பொருளுமல்ல, இருந்தும் தேடும்பொருள் இதுவரை கிடைக்கவில்லை.

பிராகு அல்லது பிராஹா (செக் மொழியில்) ‘செக்’ நாட்டின் தலை நகரம். செக் குடியரரசைக் காட்டிலும் தலை நகரம் ‘பிராஹா’ அதன் குறுக்கே ஓடும் வெட்லாவா நதிபோல வயதில் மூத்தது, பல தலைமுறைகளைக் கண்டது. பொஹீமியப் பேரசு, ஜெர்மானியப் புனித ரோமப் பேரசு, அண்மைக்காலம் வரை செக்கோஸ் லோவோக்கியா ஆகியவற்றின் தலைநகரென்ற வரலாற்றைக் கொண்டது. மத்திய ஐரோப்பாவின் கலைவளத்தையும் பாரம்பரியத்தையும் பெற்றிருக்கிற பிராஹா நகரில் தான் பிற சுற்றுலாபயணிகளிலிருந்து வேறுபட்டவளாய் நித்திலா அலைந்துகொண்டிருக்கிறாள்.

‘பிராஹா’ நகரத்திற்கு நேற்றுமாலை வந்தாள். வாகீசனுடைய சினேகிதன் தெரிவித்த ஓட்டல் முகவரிக்குச் சென்று அவனைப்பற்றி விசாரித்தாள். அதுபோன்ற பெயரில் யாருமில்லை என்று ரிசப்ஷனில் கிடைத்த பதில், பாதி உற்சாகத்தை குறைத்துவிட்டது. தங்கள் ஓட்டலுக்கு வேறு சில கிளைகள் பிராஹாவில் இருப்பதாகவும் அங்கே சென்று விசாரிக்கும்படியும் ரிசப்ஷனிஸ்ட்டுகளில் ஒருத்தி கூறினாள். அவள் கூறியதைச் செயல்படுத்த பலமுறை யோசித்து பின்னர் தற்காலிகமாக கைவிட்டாள். அவள் கூறிய ஓட்டல்கள் திசைக்கு ஒன்றாய் புறநகர்ப் பகுதியில் இருந்தன. அங்கெல்லாம் சென்று தேடத் தற்போதைக்குத் துணிச்சலும் இல்லை நேரமும் இல்லை. பாரீஸ் நகரில் பல இடங்களுக்குத் தனியே போய்வந்திருக்கிறாள், இருந்த போதிலும் தனி ஆளாக இந்த ஊருக்குப் புறப்பட்டு வந்தது தவறு. தவிர பிரான்சு அரசாங்கம் தமது வதிவிடத்தை உறுதி செய்யாத நிலையில் அசட்டுத் தைரியத்துடன் பிராஹா புறப்பட்டு வந்திருக்கக்கூடாது. வறட்டு கௌவுரவம் பார்க்காமல் ஹரிணி அக்காளை அழைத்திருந்தால் வந்திருப்பாள் எனவும் நினைத்தாள். நீதி மன்றத்தில் வீராப்பாக அவரிடம் பேசிவிட்டு தற்போது அவரை அழைத்து வந்திருக்கலாமோ இவரை அழைத்து வந்திருக்கலாமோ என்றெல்லாம் யோசித்து குழப்பிக்கொள்வது தேவையா என்றும் நினைத்தாள். வாகீசன் தன்னுடைய பொருள். அவனை உடமை ஆக்கிக்கொள்ள போதாது தவறவிட்டவள் அவள். எனவே அவள்தான் அவனைத் தேடிக் கண்டெடுக்கவேண்டும், அதுதான் முறை. சோர்ந்து போகாதே தேடு! கிடைப்பார் எனத் தனக்குச் சமாதானம் கூறிக்கொண்டாள்.

தன்னைச் சுற்றிலும் பார்வையை ஓடவிட்டாள், ‘இல்லை’. கடந்த இரண்டு நாட்களைப்போல இந்த ‘இல்லை’யை அத்தனை ச் சுலபமாக ஏற்க மனம் தயாரில்லை. கால்களிரண்டும் கனத்தன. காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததை வயிறு நினவூட்டியது. அடி உதட்டை மடித்து பற்களை அழுந்தப் பதித்து வயிற்றை அலட்சியம் செய்தவளாக பார்வையின் பரப்பை அதிகரித்தாள். அவன் இல்லையென்றாலென்ன, அவனாக இருக்கலாமோ என சந்தேகிக்க அவன் முகத்தின் சாயலில் அவள் இதயத் துடிப்பைச் சுண்டிவிட; முன் தலையையும் மார்பையும் வேர்வையால் நனைத்து அவளிடம் பதட்டத்தை உருவாக்கக்கூட ஒருவருமில்லை. பெருந்திரளாக கூடியும், வியந்தும், கலைந்தும் செல்கிற மனிதர் கூட்டத்திடை, அதிசயமாக இந்தியத் துணைக்கண்ட மனிதரின சாயலில் ஒரு ஜீவன்கூட கண்ணிற்படவில்லை, சலிப்புடன் கால்போனபோக்கிலே நடக்கிறாள்.

பிற்பகல் தனது, எல்லைக்கோட்டை நெங்கிக்கொண்டிருக்கிறது. உள்ளூர்மக்கள் – வேலை முடிந்து வீடு திரும்புகிறவர்கள் – குறுக்கிடும் மனிதர்களில் சிலரிடம் ஒதுங்கியும், சிலரைத் தள்ளிக்கொண்டும் வேகமாய் நடக்கிறார்கள், பலர் நடப்பதுபோல ஓடுகிறார்கள். இரயிலையோ, பேருந்துகளையோ பிடிக்கும் அவசரம் கால்களில். சுற்றுலா பயணிகளுக்கு நேரமிருக்கிறது. கால்களைப் பிணைந்திருப்பதைப்போல அவர்கள் நடையில் தொய்வு. நேஷனல் மியூசியத்தின் முகப்பை படமெடுத்துக்கொண்டிருந்தவர்கள் போக மற்றவர்கள் வென்ஸ்லஸ் சதுக்கத்தில் கண்களையும், இறங்குவரிசையில் நீளமாக அமைந்த படிகளில் கால்களையும் வைத்து இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை மணிநேரமாக வெளியில் அலைகிறார்களோ? முகங்கள் கருத்திருக்கின்றன, விழிவெண்படலத்தில் அழுக்கும், கண்மணிகளில் அலுப்பும் தெரிகிறது. தங்கச் சரிகைபோல, சதுக்கத்தை வெயில் மூடியிருக்கிறது. சதுக்கத்தை மூடியதுபோக மிச்சம்மிருந்தவை மனிதர்களின் இமைளிலும், தலைமுடிகளிலும் பொன் தூவிகள்போல ஒட்டிக் கிடக்கின்றன. அந்திக்காற்றோடு வெயிலும் சலசலக்கிறது. மனிதர் கையிலிருந்து நழவி விழுந்ததைக் கொத்துவதற்கு தரை இறங்கிய புறாவொன்றை மனிதர் கால்கள் விரட்ட, அச்சமும் ஏமாற்றமுமாக இறக்கைகளை படபடவென்று அடித்து பறந்துபோகிறது. தலையில் கெப்பி அணிந்த இளம்பெண்ணொருத்தி நிழற்குடையின் கீழ் ஐஸ் விற்றுக்கொண்டிருக்கிறாள். அவள் அணிந்திருக்கும் டெனிம் ஜாக்கெட் பெரிதாக இருக்கிறது, பொத்தானிடப்டாமல் திறந்து கிடக்கிறது. உள்ளே தெரிந்த பனியனில் ‘ஐ லவ்’ மட்டும் தெரிகிறது, ‘ பிராஹா ‘ என்ற வார்த்தை டெனிம் ஜாக்கெட்டுக்குள் ஒளிந்திருக்க வேண்டும். இவள் நெருங்கி அவளைக் கடந்தபோது, பரபரப்பான தனது வியாபாரத்திற்கிடையிலும் இவளைப் பார்த்து சிரிக்கிறாள். காற்றில் அலையும் தனது குட்டை பாவாடைபற்றிய அக்கரையின்றி வியாபாரத்தில் மும்முரமாக இருக்கிறாள். சுற்றுலா பயணிகளின் கூட்ட வெள்ளம் அவளைத் தள்ளிக்கொண்டு போகிறது. பொஹீமிய வழித்தோன்றலான புனித வென்ஸ்லஸ் (St.Wencesles) குதிரையில் ஆரோகனித்திருக்கிற சிலை முன்னே சில நொடிகள் நிற்கிறாள்.

-“மன்னிக்கவேண்டும், எங்கள் இருவரையும் சிலைமுன்னே வைத்து ஒரு படம் எடுக்க முடியுமா?”- திரும்புகிறாள்.

நடுத்தரவயது சீனத் தம்பதிகள்; தோல் நீக்கிய ஆல்மண்ட் பருப்புபோன்ற கண்களைச் சுருக்கிய, பல்வரிசைதெரியும் சிரித்த முகங்கள். கணவர் கையில் டி.எஸ்.எல்.ஆர் கனோன் புகைப்படகருவி கைமாறுவதற்குத் தயாராகக் காத்திருக்கிறது. நெற்றியில் விழுந்த கேசங்களை ஒதுக்கிவிட்டு தலையாட்டுகிறாள். கேமராவை இவளிடம் கொடுத்துவிட்டு அதைக் கையாளும் நுட்பத்தைச் சுருக்கமாக சீனஆங்கிலத்தில் தெரிவிக்கிறார். அருகிலிருந்த பெண்மணி (மனைவி?) எடுக்கவிருக்கும் நிழற்படத்திற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தவள், கழுத்தில் ஒதுங்கியிருந்த மணிமாலைக்கு மார்பிடையே இருந்த குழியில் இடமொதுக்கித் தந்து திருப்திபட்டவளாய் இவளைநோக்கிப் புன்னகைக்கிறாள். அப்புன்னகை, தம்பதிகள் இருவரும் சிலை அடிக்குச்சென்று சேர்ந்தாற்போல இவளைத் திரும்பிப்பார்த்தபோதும் அவளுடைய உதட்டுச் சாயத்தோடு ஒட்டியிருக்கிறது. தள்ளி நின்று கோணம் பார்க்கிறாள். பிற பயணிகள் இவர்கள் படம்பிடிப்பதற்கு ‘தொந்திரவு ஆகிவிடக்கூடாது’ என்பதுபோல ஒதுங்கி நடக்கிறார்கள். சீனர் விவரித்தவண்ணம் கிளிக் செய்தத் திருப்தியில், அவர்களிடம் கேமராவைத் திருப்பிக் கொடுக்கிறாள். வாங்கிய சீனர் எடுத்திருந்த படத்தை எல்.சி.டி. ஸ்க்ரீனில் கொண்டுவந்து இவளிடம் காட்டுகிறார். இவள் தலையை இலேசாகச் சாய்த்துப் படத்தைப் பார்த்து முறுவலிக்கிறாள். கேமராவைக் கையில் வாங்கிய தம்பதிகள் இருவரும் சேர்ந்தாற்போல தலைகளை இறக்கி நன்றி கூறி விலகி நடக்கிறார்கள்.

வென்ஸ்லஸ் சிலையிலிருந்து இருபது அல்லது இருபத்தைந்து மீட்டர் தூரத்தில் ஸ்லேட் நிறத்திலிருந்த சலவைக்கற்களில் இரண்டு இளைஞர்களின் மார்பளவு உருவங்கள், ஒற்றை ரோஜா கிளைகளும், ஒன்றிரண்டு மலர் வளையங்களும் அவற்றின் எதிரில் தரையிற் கிடக்கின்றன. மெழுகுவர்த்தியொன்றை கொளுத்தி நட்டுவிட்டு ஓர்இளம்ஜோடி படம்பிடித்துக்கொள்கிறது. எரியும் மொழுகுத்திரிகளின் சிறு தீ நாக்குகள் காற்றை ருசித்துக்கொண்டிருக்கின்றன. அருகிற் சென்று பார்க்கிறாள். செக் மொழியில் எழுதியிருக்கிறார்கள். ஓர் இளம்பெண், முடிந்தமட்டும் இவள் காதை நெருங்கி “சோவியத் யூனியன் ஆக்ரமிப்பின்போது அவ்விளைஞர்கள் இருவரும் உயிர்த் தியாகம் செய்தவர்கள்” என ஆங்கிலத்தில் விளக்கினாள். ‘அப்படியா?” என்ற வார்த்தையின்றி தலையாட்டல்மூலம் விளக்கத்தைக் அங்கீகரிக்கிறாள், தொடர்ந்து நன்றியைத் தெரிவிக்கும் வகையில் ஒரு முறுவல். சதுக்கத்தின் இரு பக்கமும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆக்ரமித்திருக்கின்றன. கனவில் மிதப்பவள்போல பார்த்துகொண்டு நடக்கிறாள் நிதானமாகப் பார்வையை நான்குபக்கமும் ஓடவிட்டபடி நடக்கிறாள். பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் கடந்திருக்கலாம். முடிச்சு முடிச்சாக திரளுகிற சுற்றுலாபயணிகள்; பெண்களை குறிவைத்து திறந்துள்ள படிகம் அல்லது பளிங்கு கல் பொருள் விற்பனையகங்கள், தோல் பொருட்கள், நினைவுப் பொருட்கள் விற்கும் கடைகள்; மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழியும் காப்பி பார்கள், உணவகங்கள்; கவனத்தைச் செலுத்தாது தாண்டுகால் வைத்து ஒன்றிரண்டு குறுகலான தெருக்களில், திருப்பி எழுதிய ‘ட’ வடிவ வரைபாதையில் நடந்தபோது கண்ணுக்குப் புலனாகாத ஒரு குழலூதி அவளைக் கவர்ந்துசெல்வதுபோல இருக்கிறது.

ஒரு திறந்த வெளியில் மீண்டும் மனித சமுத்திரத்தில் விழுந்திருக்கிறாள். உயர்த்திப் பிடித்த சுருக்கிய குடைகள். சீருடைபோன்ற ஒற்றை வண்ண மழைக் காப்பு ஆடைகள். பிள்ளைகளுடன் வந்திருக்கிற தவிப்பும் பொறுப்புமிக்க தம்பதிகள். இளம் காதலர்கள். தோழிகள். நண்பர்கள். அல்லது இவை எதுவுமே அற்ற மனிதக் கலவை. ஆபூர்வமான உடையணிந்து இசைகச்சேரி அல்லது நாடக விளம்பரத்திற்குத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த முகங்களுக்கிடையில் நடந்தபோது தன்னை ஒர் இம்ப்ரஸனிச ஓவியமாக உணர்ந்தாள். கூட்டம் அத்தனையும் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. அவர்களுடைய அந்திவெயில் முகங்களில் செந்தூர நிழல்கள் ஏடுகள்போல மிதக்கின்றன. கும்பலை நெருங்காமல் தள்ளி நிற்கிறாள், நேர் எதிரே வானியல் கடிகாரம். கடிகாரத்துடன் இருக்கிற நான்கு பொம்மைகளும் பதினைந்தாம் நூற்றாண்டு பிராஹா மக்களின் மன நிலையை எதிரொலிக்கின்றனவாம். கூடியிருந்த பயணிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதுபோல நான்கு பொம்மைகளில் ஒன்றான எலும்புக்கூடு, மணல் நிரம்பிய நாழிகைக் கண்ணாடிக் குடுவையை ‘ணங்’ என்று தட்டித் திருப்பி வைக்கிறது. பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் கடிகாரத்திற்கு மேலாக இருக்கிற இரண்டு சன்னல்களைக் கடந்து வரிசையாகக் கூட்டத்தைப் பார்த்து கை அசைத்தபடி கடந்து செல்கிறார்கள். இறுதியாக சேவற்கோழியின் கொக்கரிபோடு காட்சி முடிவுக்கு வருகிறது. இதுகுறித்த அக்கறையின்றி தங்கள் அன்றையைப் பொழுதைக்குறித்த கவலையோடு ஜாஸ் இசைக்கும் ரோமா கலைஞர்கள். மெல்ல கூட்டம் கலையத் தொடங்கியது. பிரான்சு நாட்டில் ஸ்ட்ராஸ்பூர் நகரக் கதீட்ரலிலும் பார்த்திருக்கிறாள் . எனினும் புதுநிலத்தில், தன்னை அறிந்திராத மனிதர்களிடை முகவரியின்றி ஒன்றை அறியநேர்வதும் பரவசப்படுவதும் சுகமாக இருக்கிறது.

ஓர் இளம்பெண் இவளை நெருங்கி, ” யூரோ மாற்றனுமா?”, எனக்கேட்டபோது வேண்டாம் என சொல்ல நினைத்து, முக இறுக்கத்துடன் தலையை இருமுறை ஆட்டுகிறாள். “என்ன சொல்கிறீர்கள், வேண்டுமா வேண்டாமா?” என மறுபடியும் இளம்பெண் அவளை நடக்க அனுமதிக்காதவள் போல குறுக்கே நின்று கேட்கிறாள். கேட்டது மாத்திரமல்ல, சட்டென்று அவள் கைப்பையைத் தொடவும் செய்கிறாள். இவள் மூளை’ஆபத்து, கவனமாய் இரு’ என எச்சரிக்கவும், நிலமை புரிந்து பெண்ணின் கையை வேகமாய்த் தட்டிவிட்டு மேலே நடக்கிறாள். திரும்பத் திரும்ப நடந்த வீதிகளிலேயே நடப்பதுபோலவும் கனவுலகில் சஞ்சரிக்கிற உணர்வும் வருகின்றன.

இவளைச் சுற்றியுள்ள மனிதர்களில் பெரும்பாலோர் ஆர்வத்துடன் நகரைச் சுற்றிப்பார்க்கிறார்கள். இவள் கண்கள் மட்டும், தேடலில் கழிகிறது. தேனீக்கள் போல கூட்டம் கூட்டமாக பிராஹா நகர சுற்றுலா தலங்களை மொய்க்கிற மனிதர்களிடை, பேருந்துகளில் பயணம் செல்வர்களிடை, உணவு விடுதி மேசைகளில், பூங்காவிலுள்ள இருக்கைகளில், கடைகளில் எதையோ வாங்குபவனாகவோ அந்த முகத்தையும் அந்த முகத்துக்கு உடையவனையும் தேடுகிறாள். அவனைத் தேடி அலுத்த நேரங்களில் பிராஹா நகரத்தின் தெருக்களில் அலைகிறாள். நேற்று படகுபிடித்து வெட்லாவா நதியில் ஒரு மணிநேரம் பயணித்தது அலைச்சலின் வலியை குறைக்க உதவியது. நதிக்கரை ஓரமிருந்த பழமைவாய்ந்த பிராஹா நகரத்தில் கட்டிடங்கள், கலை அற்புதங்கள், பிராஹா கோட்டை, நேஷனல் தியேட்டர், எனப் பார்த்துக்கோண்டே போனபோது பத்தடி நீளத்திற்கு ஒரு பெயர்ப்பலகை, அதில் ‘காப்கா மியூசியம்’ என்று எழுதியிருந்தது.

பிரான்சிலிருந்து புறப்படும்போது காப்காவோ, மிலென் குந்தெராவோ மனதில் இல்லை. வாகீசன் மாத்திரமே மனதில் இருந்தான். ஓர் இரவு வெகு நேரம் இலக்கிய உரையாடலை அவனுடன் நடத்தி அவள் தெரிந்துகொண்ட பெயர்கள் பிராஹா வாசிகளான குந்தெராவும் காப்காவும், வாகீஸனைத் தேடி அலையும் கால்கள், காப்காவின் தடத்தை தேர்வுசெய்தபோதும் அதே ஆர்வத்துடன் நடந்தன. காப்கா பிறந்த வீட்டைப்பார்த்தாள். அவர் அடக்கம் செய்ததாக நம்பப்படும் யூதர்களின் புதிய கல்லறைக்கும் சென்றாள். யூதர்களின் பழைய கல்லறையில் காப்கா ஆவியாகத் திரிவதாகவும், ஆவியையேனும் சந்தித்துவிடவேண்டுமென்றும் ஒரு முறை பேச்சிடையே குறிப்பிட்டான், ஒருவேளை காப்காவைத் தேடி கல்லறைகளில் அலைந்துகொண்டிருப்பானோ?

எத்தனை நிமிடங்கள் நடந்திருப்பாள் அல்லது எவ்வளவு தூரம் நடந்திருப்பாள் என்று தெளிவாக உறுதிபடுத்தமுடியவில்லை. யூதர்களின் பழைய கல்லறைக்கு முன்னால் நிற்கிறாள். கல்லறை நுழைவு வாயிலில் பெரிய இரும்புக்கதவு. ஓர் ஆள் உள்ளே நுழையலாம் என்பதுபோல திறந்திருக்கிறது. இவ்வேளையில் திறந்திருக்கும் வழக்கமுண்டா? என்பதையெல்லாம் யோசிக்கும் மனநிலையிலில்லை. உள்ளே நுழைய முயன்றபோது, கதவு ‘கரகர’வெனக் கிறீச்சிட்ட சத்தம் அசாதரணமாக ஒலித்து நடுக்கத்தை ஏற்படுத்தியது. சற்றுமுன்புவரை அவளுடன் தொடர்ந்த வாசமும், வெப்பமும், மனிதர் குரல்களும் சட்டென்று அடங்கின. உறையவைக்கும் குளிரும், கல்லறை மணமும் இவளைச் சூழ்ந்தது. கண்ணெதிரே இருள் படுக்கைகளில் ஆழ்துயிலில் கல்லறைகள், ஒழுங்கற்ற வரிசைகளில் நேராகாவும், சாய்ந்தும் கற்கள். மனிதர் வந்துபோகும் சுவடின்றி அநாதைகள் போலிருக்கின்றன. மெல்லிய இருளில் பொதிகள் குவித்திருப்பதுபோல புதர்களும் காட்டுச்செடிகளும். பராமரிப்பற்ற கல்லறை. கண்களை மூடி தியானிப்பதுபோல நிற்கிறாள். காப்காவிற்கா, வாகீசனுக்கா என குழம்பினாள். இமைமயிர்களில் மின்மினிப்பூச்சிகள் கரிய இருளின் சிலந்திக் கண்கள்போல ஒளிர்கின்றன. அச்சம் பிராண்டியது, நாக்கு வறண்டு உடம்பு உதறி அடங்கியது. திரும்பி நடக்கலாம் என்று யோசித்தபோது ‘வள் வள்’ என்று சப்தம். எங்கிருந்து வந்ததென பார்க்கிறாள். அவளைச்சுற்றி நான்கைந்து மீட்டர் தூரம்வரை மெலிந்த இருள். நாயின் தோற்றத்தில் எந்த ஜீவனுமில்லை. மெல்லிய இருள்கூட்டிற்கு, அப்பால் சற்று தடித்த இருள், மரங்கள் அடர்ந்த புதர்களா வேறு ஏதேனுமா எனவிளங்கிக்கொள்ள இயலாதவகையில் மலைபோலகுவிந்து கண்ணுக்கெட்டியவரை நீண்டு வியாபித்திருந்தது. அவ்விருளிலிருந்து குரைத்த நாய் வெளிவருமா என்று காத்திருருந்தாள்; வந்தால் தைரியாகக் எதிர்கொள்வதெனவும் தீர்மானித்தாள். அவர் எதிர்பார்த்தற்கு மாறாக, எதிரிலிருந்த கல்லறை அசைவதுபோல இருக்கிறது. உடல் மீண்டும் வெடவெடக்கிறது, இதயம் வேகமாகத் துடிக்கிறது. திரும்பிப்பார்க்க்கூடாதென்று தனக்குள் முனுமுனுத்துக்கொள்கிறாள். வேகமாக நடந்து கல்லறை வாயிற் இரும்புக் கதவை தள்ளித் திறந்து வெளியில் வந்ததும், இதய ஓட்டம் நிதானத்திற்கு வருகிறது. உடல் நடுக்கமும் தணிந்திருக்கிறது. வேகமாக சற்று முன் வந்த திசையில் நடக்கிறாள் அவளுக்கு முன்பாக ஒரு நாய்குட்டி. அவள் கட்டுபாட்டில் இல்லை என்பதுபோல கால்களிரண்டும் நாய்க்குட்டியைத் தொடருகின்றன. ஒரு வேளை தேடலுக்கான விடையா. அலைச்சலுக்கான முடிவா? நாய்க்குட்டி அவளுக்கு முன்னால் ஓடிக்கொண்டிருக்கிறது. சிலுசிலுவென்று காற்றடித்தபோதிலும் உடலில் வெப்பம் உறைத்தது. மேலே போட்டிருந்த ஸ்வெட்டரை உருவித் தோளிற் போட்டுக் கொண்டாள். நாய்க்குட்டியை மறந்தவளாக குறுகலான வீதிகளிற் புகுந்து வடக்கே நடந்தபோது, சற்று முன்பிருந்த இடிபாடுகளில்லை. காற்றில் தற்போது இறுக்கமும், தூசும், ரெஸ்டாரெண்ட் மசாலாக்களின் வாசமும் தூக்கலாக இருக்கின்றன. பழைய நகரத்தின் மாலா ஸ்ட்ரானா பகுதி. ஸ்லாவ் மொழியில் உள்ள பெயர்களை நினைவு கூர்வது கடினம். பலமுறை ச் சொல்லிப்பார்த்துக்கொண்ட பெயர்கள் தற்போது ஞாபகத்தில் இல்லை.

வெல்ட்டாவா நதியின்இருகரைகளையும் இழுத்துப் பிடித்திருப்பதுபோல சார்லஸ் பாலம், அ தன் வாயிலில் நிற்கிறாள். இருள் மெல்ல மெல்ல நிரம்பிக் கொண்டிருக்கிறது. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு ஏற்கனவே நீரில் கரைந்திருந்தது. இருளோடு கலந்து சிலுசிலுவென்று காற்று. பாலத்தின் நுழைவாயிலில் ஒரு பெரிய கோபுரம். கோபுரத்தைக் கடந்ததுமே இடதுபுரம் உணவு விடுதிகள். நீரில் கால் நனைப்பதுபோல அமர்ந்துகொண்டு ஜோடி ஜோடியாக உணவருந்தும் மனிதர்கள்.பாலத்தின் மீது நடப்பது சுகமாக இருக்கிறது. கரையோரங்கள் பொன்னாரங்களில் வைரம்பதித்ததுபோல மஞ்சள் ஒளியில் ஜொலிக்கின்றன. ஒளிரும் உல்லாசப் படகுகள், நீரின் சலசலப்பையும்; கால்களால் பாலத்தில் நீளத்தையும், சொற்களால் காற்றினையும் கலகலப்பாக்கிக்கொண்டிருக்கிற மனிதர்ச் சந்தடியை குலைத்துவிடக்கூடாதென்பதுபோல படகுகளின் எஞ்சின்கள் மெல்ல உறுமுகின்றன, இலைபோல சொகுசாய் நீர் இழுத்த இழுப்புக்கு உடன்பட்டு மிதந்து போகின்றன. அந்திப்பொழுதின் அழகைக்கூட்டப் பாலத்தின் நெடுகிலும் தெருப்பாடகர்கள், ஜாஸ் கலைஞர்கள், கிட்டார்களின் சினுங்கல்கள், அவற்றில் மயங்கி நிரந்தரமாக பாலத்தின் கைப்பிடி நெடுகிலும் கல்லாய் சமைந்தவிட்ட பரோக் காலத்து கன்னங்கரேல் சிற்பங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஐரோப்பியர் இருவர் தண்ணீர் பக்கம் கைகாட்டுகின்றனர்,” Not there, look at your left!” தலையை நிமிர்த்தி பார்த்த நடுத்தர வயதைக் கடந்த பெண் “yes yes, now I see” என்கிறாள்”. இவள் வழக்கமாக உல்லாசப் பயணிகளிடம் காண்கிற செயல்கள்தானென நினைக்கிறாள். அவர்களுடன் சீனர்கள் கும்பலொன்று சேர்ந்துகொண்டது. அவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்கிறபோதும் அவர்கள் கைகளும் பார்வையும் ஐரோப்பிய தம்பதிகள் பார்த்த திசைநோக்கி இருக்கின்றன. அடுத்த சில நொடிகளில் பார்ப்பவர் எண்ணிக்கை அதிகரிக்க நித்திலா எதிர்த் திசையிலிருந்த பாலத்தின் கைப்பிடியை நோக்கி ஓடுகிறாள். நதியிலிருந்த ஒரு படகில் பரபரப்பு, நீரில் இருவர் குதித்திருப்பது தெரிகிறது. இதற்குள் கரையோரம் சைரன் ஒலிக்க hasič, sanitka என்றெழுதிய வாகனங்கள். என்ன? என்பதுபோல அருகிலிருந்த ஐரோப்பியரை விசாரிக்கிறாள். ‘தெரியவில்லை’ நானும் உங்களைப்போல இப்போதுதான் வந்தேன்”- என்கிறார். “படகிலிருந்து யாரோ ஆற்றில் விழுந்திருக்கவேண்டும் ” அருகிலிருந்தவர் குறுக்கிட்டார். “பிறகு”? -இவள். “பிறகென்ன, இது போன்ற விபத்துகளுக்கென்றுள்ள பாதுகாப்பு படையினர் நீரில் விழுந்த நபரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்”

கைத் தொலைபேசி ஒலிக்கிறது. எடுக்கிறாள். மறு முனையில் பாரதி.

« நித்திலா எங்கிருக்கிற? «

« பிராஹாவில்தான் வேறெங்க. குழந்தை எப்படி இருக்கிறான்? »

« குழப்படி இல்லாமல் ஒழுங்காய் இருக்கிறான்., உன் அக்கா கதைக்கவேணும் எண்டு சொன்னா, கொஞ்சம் பொறு போனை அக்காட்டைக் கொடுக்குறன. »

« உன்ர மனசுல என்ன நினைக்கிற ? நான் உயிரோடிருக்கவா வேண்டாமா? ஊரு சனங்களுக்குப் பதில் சொல்ல முடியலை. ஒழுங்கா ஊருக்கு வந்து சேர்! »

தொடர்ந்து அவள் ஏதேதோ புலம்பிக்கொண்டிருக்க இவள் போனைக் துண்டித்துவிட்டாள், இரண்டொரு நிமிடங்கள் கழித்துப் பாரதிக்குப் போன் போட்டாள். மறுமுனையில் பாரதியின் “ஹலோ!”

« அக்காள் இன்னும் பக்கத்தில் நிற்கிறாளா? »

« ஓம்! »

« அவளை எப்படியாவது சமாளி. நாளைளக்கு நான் வாரன். »

« நீ போனதற்கு ஏதேனும் பலனுண்டா? »

« இதுவரை இல்லை. ஆனால் அவர் கிடைக்கும் மட்டும் தேடப் போரன், என்ன புதினம்? »

« சட்டத் தரணி தன்னை வந்து சந்திக்கச் சொன்னா. »

« ரெண்டொரு நாளில் பார்க்குறன் என்டு சொல்லு.”- என இவள் கூறிமுடித்ததும், மறுமுனையில் தொலைபேசி மூச்சிழந்தது. கைக் கடிகாரத்தில் நேரத்தைப்பார்த்தாள். இரவு ஒன்பது மணி. உடனே புறப்பட்டால்தான் பத்துமணிக்குள் ஓட்டலை அடைய முடியும். நாளைக்கு காலையில் பிரான்சு செல்ல சௌகரியமாக இருக்குமென நினைத்ததும். வேகமாக மெட்ரோ ஸ்டேஷனை நோக்கிச் சென்றாள்.

சாரலஸ் பாலத்தின் வடக்கு வாயிலில் இறங்கி நடந்தபோது நதியை ஒட்டிய கூட்டம் கலையாதிருக்கிறது. கூட்டத்திடை நடுத்தர வயதில் தம்பதிகள் தனித்துத் தெரிந்தனர், பெரியவர் இந்தியர்போல இருந்தார். ஓரிரு வினாடிகள் அவரை அவதானித்தாள். பின்னர் தொடர்ந்து நடந்தாள். நடையில் முழுக்கவனத்தையும் செலுத்தாது இரண்டொருமுறை திரும்பிப் பார்திரும்பிப் பார்க்கவும் செய்தாள். நிலவொளியியின் மடியில் வெல்ட்டாவா நதி ஆழ்ந்த நித்திரையில் இருந்தது, நாய்க் குட்டி கூட்டத்தில் ஓரமாய் நின்றிருந்தது அது வீண்கற்பனைபோலவும் இருந்தது.



———————————————

Kafka Naykutti Wrapper 3-1கா·ப்காவின் நாய்க்குட்டி (நாவல்) Rs.295

ஆசிரியர் : நாகரத்தினம் கிருஷ்ணா
காலசுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிட்டெட்
669 – கே/பி.சாலை, நாகர்கோவில்- – 629001

———————————————