Tag Archives: காஃப்கா

காஃப்காவின் நாய்க்குட்டி – மஜ்ஜையின் ருசி- ரா. கிரிதரன்

Giri

(திரு. ரா. கிரிதரன் புதுச்சேரியைச் சேர்ந்தவர். தற்போது இலண்டனில் பணியாற்றி வருகிறார். வளர்ந்து வரும் நல்ல சிறுகதை எழுத்தாளர். இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், குறு நாவல்கள் எழுதியுள்ளார் கர்னாடக சங்கீதம் – ஓர் எளிய அறிமுகம் எனும் நூலை தமிழாக்கம் செய்துள்ளார். சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த ‘ நந்தா தேவி’ சிறுகதை இவரது எழுத்தாளுமைக்கும் கதைசொல்லலுக்கும் நல்ல உதாரணம், தமிழுக்குப் புதிது. சொல்வனம், காந்தி டுடே இணைய இதழ்களிலும; வார்த்தை, வலசை சிற்றிதழ்களிலும் படைப்புகளைக் காணமுடியும். பதாகை இணைய இதழ் இரண்டுவாரங்களுக்கு முன்பாக பாவண்ணன் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. இதழ் நன்கு வரப்பெற்று பாவண்ணனுக்குப் பெருமை சேர்த்திருக்கிறது. இதழின் பொறுப்பாசிரியர் ரா.கிரிதரன். பிறந்த மண் புதுச்சேரிக்குப் பெருமை சேர்க்க உள்ள அன்புத் சகோதரர்.http://solvanam.com/?author=25 ; http://beyondwords.typepad.com)

காஃப்காவின் நாய்க்குட்டி – மஜ்ஜையின் ருசி

– ரா. கிரிதரன்

Kaafkaavin Naaikkutti Wrapper
இலண்டனிலிருக்கும் முக்கியமான சுற்றுலாத்தளங்களில் ஒன்றான டிரஃபால்கர் சதுக்கத்திற்கு ஓர் இருள் கவியும் நேரத்தில் சென்றிருந்தேன். உலக முகங்களில் சகல தினுசுகளும் பார்க்கக் கிடைக்குமிடம். புன்னகைக்கும் ஐரோப்பிய முகங்கள், புகைப்படமெடுத்து இருட்டை வெளிச்சத்தில் ஆழ்த்தும் சீனர்கள், காதலர்கள், மெத்ரோ பிடிக்க ஓடும் அலுவலகர்கள், சண்டை பிடிக்கும் அம்மா மகள், வாத்தியக்கருவி இசைப்பவர்கள் என ஒரு புத்துலகில் பிரவேசித்தது போலொரு நெகிழ்வுக்கூடல். சிங்கங்களின் சிலைகளுக்குப் பின்னே தெரிந்த ஆளுயரத் தொட்டிகளிலிருந்து நீரூற்று நடனத் துளிகளில் குழந்தைகளின் சந்தோஷங்கள் பல்லாயிரமாகத் தெறித்தன. உலகத்திலேயே மிகவும் அழகான சதுக்கம் எனத் தோன்றியது. அழகானப் பொழுதும் கூட. இவற்றுக்கு நடுவே ஆங்காங்கே தனிமையில் பிரக்ஞையற்றுச் சுற்றும் சிலரும் தெரிந்தனர். நாம் அறிந்த சில முகங்கள் – பங்களாதேஷ், பாகிஸ்தான் சில சமயம் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பிழைப்புக்காக வந்து தனித்துச் சுற்றுபவர்களும் இருந்தனர். அவர்களது தனிமை அந்த சதுக்கத்தின் குதூகலத்தில் கரைந்துகொண்டிருந்தது. பிறிதொரு நாள் அதிகாலை ஐந்து மணிக்கு அதே இடத்துக்கு வரநேர்ந்தது. நீரூற்று சலனமற்றுக் கிடந்தது, தெருவிளக்கிலிருந்தும் கடைகளிலிருந்தும் வெளிப்பட்ட நியான் வெளிச்சம் கருங்கல் சுவர்களில் மோதிப்படர்ந்திருந்தன. காற்றின் ஓசையைத் தவிர வேறெந்த சத்தமும் இல்லை. அழும் குழந்தை கையில் அது வேண்டியதைத் திணித்தது போல நிசப்தம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் கடை வாசல்களில் சிலர் மூட்டை போல குளிருக்குச் சுருண்டு படுத்திருந்தனர். வெறும் தனிமை மட்டுமே இருந்தது.

நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ நாவலைப் படித்து முடித்தபோது என்னையும் அப்படிப்பட்ட தனிமை சூழ்ந்தது போலுணர்ந்தேன். கும்மாளங்களும், குதூகலங்களும் முடிந்த பிற்பாடு வரும் தனிமை அல்ல இது. நம் கண்முன்னே திரிந்த மனிதர்கள் அவரவர் தேடல்களைத் தொடரத்தொடங்கிவிட்டதில் நம்மை சூழும் தனிமை. அப்படியாகப் படிக்கும்தோறும் சந்தோஷத்தைக் கொடுத்த படைப்பு. அதற்குப் பல காரணங்கள் உண்டு; குறிப்பாக, புதுவிதமானக் களத்தில் சொல்லப்பட்ட அகப்பயணம் பற்றிய கதையாக நாவல் இருந்தது ஒரு காரணம். நாவலில் வரும் சின்னச் சின்ன பாத்திரங்கள் கூட துல்லியமாகத் துலங்கி வந்து நம்முடன் இருந்தது அடுத்த முக்கியமான காரணம். எனக்கு சந்தோஷத்தைத் தந்தது என்பதால் கதை மிக இலகுவான சிக்கலைப் பற்றிச் சொல்கிறது என நினைக்கவேண்டாம். மனித வாழ்வின் அவலத்தைப் பற்றிப் பேசும் ஒரு படைப்பு படிப்பவர் மனதில் ஆகப்பெரிய தாக்கத்தை அபத்தத்தின் வழியே உருவாக்க முடியும் என்பதைக் காட்டும் படைப்பு. ஒரு நவீன நாவல் இம்மூன்று முக்கியமான தளங்களையும் கணக்கில் கொண்டு சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவத்தைத் தரமுடியும் என்பதற்கு உதாரணம் இந்த நூல்.

‘நீலக்கடல்’, ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கெளமுதி’, ‘சன்னலொட்டி அமரும் குருவிகள்’, ‘எழுத்தின் தேடுதல் வேட்டை’ போன்ற புத்தகங்களுக்குப் பிறகு நான் படிக்கும் அவரது நாவல். முதலிரண்டு நாவல்களும் மிகவும் சம்பிரதாயமான கூறுமுறையில் எழுதப்பட்டவை. ‘நீலக்கடல்’ பிரெஞ்சு ஆட்சியின்போது மொரீசியஸ் தீவில் நடந்த தமிழர் காலனியாதிக்கத்தைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட வரலாற்று நாவல். பலவிதங்களில் இந்த நாவல் தமிழ் நவீன இலக்கியத்துக்கு முன்னோடியாக அமைந்திருக்கிறது. காலனியாதிக்கத்தைப் பற்றி நவீன வரலாற்றுப் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட முதல் நாவல் என இதை வகைப்படுத்தலாம். குறிப்பாக பிரஞ்சு காலனியாதிக்கம் உலக சரித்திரத்தில் மிகவும் கோரமான பக்கத்தைக் கொண்டது. நமது புதுச்சேரி முன்னோர்கள் இதை நேரடியாக அனுபவித்தவர்கள். பிரஞ்சு காலனியாதிக்கம் பிரிட்டீஷ் ஆட்சியை ஒப்பிட்டால் அதிக வன்முறையற்றது எனும் பொதுப்பிம்பத்தை பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’, ‘மானுடம் வெல்லும்’ போன்ற நாவல்கள் கோடிட்டுக் காட்டியது என்றால் நீலக்கடல் அக்காலகட்டத்து வாழ்க்கையை வாழ்ந்து காட்டியிருக்கும் ஒரு ஆழமானப் படைப்பு எனலாம். சரித்திரக் கதையில் அமைந்திருக்கும் காதல், வீரம் போன்ற ஒற்றைப்படையான மிகை உணர்வுகளைத் தாண்டி வரலாற்று பூர்வமாக மனித அவலத்தையும், ஆதிக்கத்தின் கரிய பக்கத்தையும் காட்டிய நாவல்.

எழுத்து முறையில் ‘நீலக்கடல்’ செவ்வியல் பாணியை ஒத்திருந்தது என்றால் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ பின்நவீனத்துவத்தின் கூறுமுறையை ஒத்திருக்கிறது எனலாம். எழுத்துமுறையில் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ அடைந்த பாய்ச்சலைக் காட்டுவதற்காக சொல்லப்பட்ட இந்த ஒப்பீடு அன்றி பின்நவீனத்துவ பாணியில் மையமற்று சொல்லப்பட்ட கதையாக இருக்கிறது எனும் அர்த்தத்தில் அல்ல. மிகத் திட்டவட்டமான மையமும், வாழ்க்கை தரிசனமும் ஒருங்கே அமைந்திருப்பதால் சில புனைவுக் கற்பனைகளையும் (பேசும் நாய்க்குட்டி) மீறி யதார்த்தத்தில் ஊறிய படைப்பாகவே அமைந்திருக்கிறது. அண்மைக்காலத்தில் இத்தனை சுவாரஸ்யமாக எழுதப்பட்ட மிகச் சொற்பமான நாவல்களில் இதுவும் ஒன்று என்பதும் இதன் பலம்.

மனித வாழ்க்கை துவங்கிய நாளிலிருந்து சந்திக்கும் சிக்கல்களான இடப்பெயர்வு,மனித உறவுகள் மீதான அதிகாரம் தரும் தத்தளிப்பு போன்றவற்றிலிருந்து விடுதலையைத் தேடி அலையும் மனிதர்களின் கதை இது. புதுச்சேரியிலும், யாழ்ப்பாணத்திலும், பிரான்ஸிலும், பிராஹாவிலும் நடக்கும் கதையாக அமைந்திருந்தாலும் மனிதர்கள் சந்திக்கும் சிக்கல்களில் பெரிய மாற்றமொன்றும் இல்லை. விடுதலை வேட்கை அரிக்காத மானுடனே கிடையாது எனும்போது தேசக்கட்டுப்பாட்டால், உறவுகளின் துஷ்பிரயோகத்தால், நெருங்காத உறவின் உஷ்ணத்தால் சிறைபட்டிருக்கும் மனிதன் பெறத்துடிக்கும் முதல் கைவிளக்கு விடுதலை. அதற்கானத் தேடுதலில் அலைபவர்கள் விலையாகக்கொடுப்பது என்ன? கொடுத்த விலைக்குக் கிடைத்த சுதந்திரம் மதிக்கத்தக்களவு இருக்கிறதா அல்லது மற்றொரு சிறையா? சிறையிலிருந்து சிறை, அங்கிருந்து வேறொரு தங்கக்கூண்டு என வழிதெரியாத இருட்டுக் குகைக்குள் கடக்கும் மானுட வாழ்வின் மதிப்பென்ன?

இந்த நாவலின் நித்திலா, ஹரிணி, கமிலி, வாகீசன், சாமி என ஒவ்வொருவரும் கற்பனாவாதிகள், தேடுதலில் ஈடுபடுபவர்கள், ஏமாளிகள் என நமக்குத் தோன்றிய வகையில் வகைப்படுத்தலாம். அவர்கள் தேடும் ஒவ்வொரு விஷயமும் ஏதோ ஒரு உயர்ந்த லட்சியத்தை நோக்கிய பயணமாக இருப்பதில்லை. தங்கள் சொந்த இருப்பை ஸ்திரப்படுத்திக்கொள்ள, வாழ்வின் குழப்பங்களுக்குத் தீர்வு ஏற்பட, உறவுச்சிக்கல்களிலிருந்து விடுபட என லட்சியங்கள் மண்ணில் பாவித்து பல சமயம் பிறர் காலடியிலும் தேய்ந்துவிடுகிறது – அக்காவின் புருஷனால் திருமணத்துக்குத் துரத்தப்படும் நித்திலா போல. ஏதோ ஒரு வகையில் எல்லாரும் விடுதலைக்காக ஏங்கி நிற்பதோடு மட்டுமல்லாது தங்களது ஸ்வாதீனமான இருப்பிடத்தை விட்டு விலக வேண்டிய அவசியத்துக்கும் உள்ளானவர்கள்.

நேர்கோட்டு பாணியில் அல்லாது கதை ஒவ்வொரு கதாப்பாத்திரங்களினூடாகத் தாவித்தாவி செல்கிறது. அப்படித் தாவிச் செல்வதிலும் ஒரு ஒழுங்கு அமைந்திருக்கிறது. தனது காதலன், அக்கா கொடுத்த தகவலின்படி தன்னைத் திருமணம் செய்யப்போகும் வாகீசனைத் தேடி இலங்கைவாசியான நித்திலா ஐரோப்பிய பிராஹா நகரத்தை வந்தடைவதிலிருந்து கதை தொடங்குகிறது. மிகச் சரியான இடம்தான். கதையில் தொடக்கத்தில் கொடுக்கப்படும் தேதிகளுக்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது – 2013, ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கும் கதையாகத் தொடங்குகிறது. நித்திலா ஓரு முன்னாள் போராளி. இலங்கை உள்நாட்டுப்போரின் இயக்கத்தில் பயிற்சி எடுத்தவள். போர் முடிந்து மறுசீரமைப்பின்போது இலங்கை அரசால் புகலிடம் கொடுப்பட்டாலும், இயக்கத்தில் ஈடுபட்டதை மறைத்ததினால் விசாரணைக்குத் தேடப்படும் குற்றவாளி. பிரான்ஸிலிருக்கும் அக்காளும் மாமாவும் அழைத்ததன் பேரில் வந்துவிடுகிறாள். பிராஹா நகரில் தன்னந்தனியாக வாகீசனைத் தேடி அலைவது எதனால்? ஹோட்டலில் வேலை செய்யும் வாகீசன் ஒரு எழுத்தாளனாக ஆசைப்படுபவன். பிராஹா நகரில் பிரான்ஸ் காஃப்காவின் நினைவிடங்களில் நேரத்தைக் கழிக்க விருப்பப்படுபவன் – பிராஹா வருவதற்கான முகாந்திரங்கள் கச்சிதமாக அமைந்திருக்கும் தொடக்கம்.

சார்லஸ் பாலமும், வெல்ட்டாவா நதியும் பிராஹாவின் பிரதானமான அடையாளங்கள். சார்லஸ் பாலம் பழைய பிராஹாவை நவீனப் பகுதியோடு இணைக்கும் மிக முக்கியமான இடமாகும். வெல்ட்டாவா நதியைத் தாண்டி நிற்கும் பாலம் நெடுக கருங்கல் சிற்பங்களும், நவீன விளக்குகளும் பொருத்தப்பட்டு சுற்றுலா மையமாகக் காட்சி அளிக்கிறது. இந்த நாவலில் வெல்ட்டாவா நதியும் இந்த பாலமும் தேடுதலின் தவிப்பைக் காட்டும் படிமமாக உருவாகியுள்ளது. பிராஹா நகரில் வாகீசனைத் தேடும் நித்திலா பாலத்தைக் கடக்கும்போது அங்கு படகு கவிழ்ந்து ஒரு ஜோடி இறந்துவிட்டதை அறிகிறாள். கூடவே ஒரு வயதான இந்தியர் அவளைப்பார்ப்பதை கவனிக்கிறாள். இவர்கள் அனைவரையும் ஒரு நாய்க்குட்டி பார்ப்பதையும் கண்டுகொள்கிறாள். வண்ண ராட்டினத்தைச் சுற்றும்போது வெள்ளையும் வண்ணங்களும் சேர்வதும் பிரிவதுமாகக் கண்ணுக்குத் தெரிவது போல இங்கிருந்து ஒவ்வொரு கதாபாத்திரமும் துலங்கி எழத்தொடங்குகிறது. அவ்வப்போது அவர்களது தேடுதலின் தீவிரம் அதிகரிக்கும்போது பிராஹா நகரின் சார்லஸ் பாலத்தின் மீது அவர்களது வாழ்க்கைப் பயணம் குறுக்கும் நெடுக்குமாகக் கடப்பதுமாக அமைகிறது.

இந்த இடத்தில் ஒரு நேர்கோட்டான பாதையில் செல்லாமல் ஒரு புதிர்வட்டப்பாதையில் செல்லும்படி ஆசிரியரைத் தூண்டியிருக்கும் விஷயங்களைப் பற்றி எண்ணிப்பார்க்கிறேன். கன்னியாகுமரியில் பெண்ணாசையால் வாழ்வைத் தொலைத்து பின் சுதாரித்து மீண்டவர் பிள்ளைகள் பெரியவர்களானதும் அதே பெண்ணின் ஒப்புதலில் திடுமென வாழ்விலிருந்து நிராயுதபாணியாக நீக்கப்படும் சாமியின் சித்திரம். புதுச்சேரிக்கு சுற்றுலா செல்லும் பிரான்சு தேசத்து எலிஸபெத்தும் தமிழனும் இணைந்த புதிர் நொடியில் உருவாகிப்பிறந்த ஹரிணி ஒரு புறம். மாமனின் துன்புறுத்தலைத் தவிர்க்க திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருப்பதாக நம்பி வரவழைக்கப்பட்ட வாகீசனைத் தேடி நித்திலாவின் பயணம் ஒரு திசையில். ஊருக்குத் திரும்ப முடியாது எழுத்தாளனாகவும் ஸ்திரப்பட முடியாது ஹோட்டலில் காலத்தைக் கழிக்கும் வாகீசன் விசா சிக்கலுக்காகத் திருமணம் செய்துகொள்ளும் வாழ்க்கை. இவையனைத்தையும் இணைப்பது அவர்களது இருத்தலின் மீதிருக்கும் ஆதாரப்பிடிப்பு. இவர்கள் அனைவரும் முன்னர் வாழ்ந்த வாழ்வைவிட மேலான ஒன்றை அடையும் முயற்சியில் நம்மைப்போன்றவர்கள் தாம். ஆனால் அவர்களின் நிஜ உலகம் ஒரு நாய் வேட்டைக்களம். புதைகுழி. வீழ்ந்தால் மீளமுடியாத நிலையில் இந்தப்பயணம் அவர்களது ஜீவமரண முடிவைத் தாங்கிய ஒன்று.

ஒன்றுடன் ஒன்று முற்றிலும் வேறுபட்ட கதையாக அமைந்தாலும் அவர்களது வாழ்க்கை லட்சியம் ஓருடலாக்குகிறது. அவர்களது வாழ்விலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பக்கங்களை அடுத்தடுத்த பகுதிகளாகப் படிக்கும்போது நமக்கு எந்தவிதமான குழப்பமும் ஏற்படுவதில்லை. சொல்லப்போனால் நித்திலா வாழ்வில் வரும் சிறு வெளிச்சம் ஹரிணியின் வாழ்வைக் காட்டுகிறது. நித்திலாவுக்காக மொழிபெயர்ப்பாளராக வரும் ஹரிணியின் போராட்டம் அவளது அம்மாவுடனான சங்கமத்துக்கு உதவுகிறது. அம்மாவிடம் கொஞ்சமும் உதவி கேட்கக்கூடாது எனும் வீறாப்புடன் வாழ்ந்து வருபவள் நித்திலாவின் விசா சிக்கலுக்காக நாடு கடத்துவதைத் தவிர்ப்பதற்காக எலிஸெபத்துடன் பேசத்தொடங்குகிறார். ஹரிணியின் அம்மாவோடு ஒரு புது பிணைப்பு உருவாகிறது. அதே போல, கொடூர வாழ்விலிருந்து நித்திலாவை மீட்கப்போராடும் வாகீசன் தனது விசா சிக்கலைத் தீர்ப்பதற்காக ஒரு பிரான்ஸ் நாட்டுப்பிரஜையைத் திருமணம் செய்ய வேண்டியிருக்கிறது. இப்படி ரிலே ரேஸ் போல சக மனித உறவுகளுக்குள் இருக்கும் முடிச்சுகளை இன்னும் சிக்கலாக்கி பாத்திரங்களை பகடைக்காயாக மாற்றியிருக்கிறார் ஆசிரியர். அவர்களை நன்றாகவே அலைக்கழிய வைக்கிறது.

ஜன்னலில் விரையும் சொட்டு நீரைப்போல ஏதோ ஒரு நிதானத்துக்கு வரத்துடிப்பது போல ஏனோ இந்த கதாபாத்திரங்களுக்கு வாழ்வு அமைந்துவிட்டது. சடசடவென ஒரு குழிக்குள் விழுவதும் பின்னர் நிதானமாக எழுந்து முழு சக்தியைத் திரட்டி தேடுவதுமாக வாழ்வைக் கழிக்கிறார்கள். அந்தத் தேடுதலும் தகுந்த முடிவைத் தருவதில்லை. சிலர் தேடுதலுக்காகவே பிறந்தவர்கள் – அவர்களது இயல்பு தங்கள் இயல்பை சந்தேகிப்பது. அங்கிருந்து நகர்வதும் அலைவதும் மட்டுமே.

“ஹரிணி தான் உட்கார்ந்திருந்த சோபாவிலிருந்து எழுந்து, எலிஸபெத்தின் கைகளைப் பிடித்து மண்டியிட்டிருந்தாள். எலிஸபெத் சோபாவிலிருந்து இறங்கினார். அவள் முகத்தை தனது மார்பில் சேர்த்து அணைத்தார். வெதுப்பான ஹரிணியின் கண்ணீர் எலிஸபெத்தின் சன்னமான மேலாடையை நனைத்து மார்பைத் தொட்டது. அவள் கைகள் மேலும் இறுகின. இரு பெண்களின் விம்மலும் தேம்பலும் வெகுநேரம் அங்கே கேட்டது”

பல கதாபத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் இந்த நாவலின் வெற்றி அவர்களுக்கிடையே இருக்கும் அக ஆழத்தை சரியான அளவு காட்டியதில் இருப்பதாகத் தோன்றியது. ஒருவிதத்தில் ஒருவரது செயல் மற்றொருவரின் தேவையை நிரப்புகிறது. அதன் மூலம் இருவரும் அகவிடுதலையில் அடுத்த கட்டத்தை அடைகிறார்கள். புதுத் தளம் புதுச் சிக்கல்கள். கதாபாத்திர வார்ப்பினால் மட்டுமே உருவான இணைப்பு மட்டுமல்ல, இந்த நாவலின் அடியாழத்தில் அதிகாரத்துக்கும், விடுதலைக்கும் உண்டான இழுபறி ஆட்டமும் ஒரு காரணம். சொல்லப்போனால், நாவலின் தரிசனம் இந்த இழுபறி ஆட்டத்தில் அமைந்திருக்கிறது.

இலங்கையில் போர் முடிந்து சீரமைப்பு நிலைமைத் தொடங்கியதில் பாதிக்கப்பட்ட பல அகதிகளில் நித்திலாவும் ஒருத்தி. போர் நின்றுவிட்டால் அகதியாக காலத்தைக் கழிப்பவர்கள் தங்களது சொந்த நாட்டுக்குத் திரும்பவேண்டும் என்பது அரசு விதி. அது எப்படி நடக்கிறது என்பதை அந்த விதி பார்ப்பதில்லை. நன்னடத்தை விதிகளால் அரசியல் அகதிகளுக்கு இடம் கொடுக்க இருக்கும் சுதந்திரம் அதைப் பறிக்கவும் அரசுக்கு வழிவகுக்கிறது. நித்திலாவின் சுதந்திரம் இந்த அதிகாரத்தின் முனையில் ஊசலாடுகிறது. ஆனால் அரசு குடியுரிமைச் சிக்கலை சரிசெய்தாலும் மத்யூஸ் மாமனின் தொந்திரவிலிருந்து அவளுக்கு விடுதலை கிடையாது. அதை வாகீசன் கையில் அவள் ஒப்படைத்தால், அவனும் ஒரு சூழ்நிலைக் கைதி என்பதை அறியாமலேயே. சுதந்திரம், சமத்துவக்கனவை கனவாகவே வைத்திருக்கும் பிரான்ஸில் சுதந்திரம் என்பது பண்டமாற்று முறையைப் போன்றது என்பதை நித்திலா, வாசீகன், ஹரிணி வாழ்க்கை நிரூபிக்கிறது என்றால் கன்னியாகுமரியிலிருந்து, பிராஹா வந்தாலும் ஆன்மசுதந்திரம் என்பது தேடிக்கொண்டே இருக்கும் நித்திய பயணம் மட்டுமே என்பதை சாமி காட்டுகிறார்.

இத்தனை உள்ளடுக்குகளைக் கொண்ட நாவலை நாகரத்தினம் கிருஷ்ணா தனது திறமையான புனைவு மொழி மூலம் குழந்தை விளையாட்டு போலாக்கிவிட்டார். வாசகனின் கவனத்தைத் தொடர்ந்து தக்கவைக்குவிதமான நடுவாந்திர மொழிப் பிரயோகம். நீண்ட வாக்கியங்களைத் தவிர்த்ததன் மூலம் ஒருவித அவசர கதியைப் புகுத்த முடிந்திருக்கிறது. அதே சமயத்தில் நித்திலாவின் கதையில் வரும் இலங்கைத் தமிழ் எவ்விதமான விலக்கத்தையும் கொடுக்காது இலங்கை அகதியின் வாழ்க்கையைத் தத்துரூபமாகக் காட்டுகிறது. பொதுவாக நான் பார்த்தவரை அது இருதலைக்கொல்லி வாழ்க்கை தான். சொந்த சமூகத்தின் விடுதலை தனக்கிடப்படும் மூக்கணாங்கயிறு எனும் நிலைமை வேண்டுதலுக்கு எதுவுமில்லாத நிலைக்கு மக்களைத் தள்ளிவிடும். அந்த மனநிலையைக் காட்டும் நித்திலாவின் கதாபாத்திரம் மிகக்கச்சிதமானப் படைப்பு. அவளது குறிப்பு வரும்பகுதிகள் மட்டும் கதையாகச் சொல்லப்படாமல் அவள் எழுதிய குறிப்புகளாகவே பதியப்பட்டிருந்தால் நாவல் இன்னொரு ஆழத்தை சந்தித்திருக்கும். இது மட்டுமே எனக்கு சிறு குறையாகத் தெரிந்தது.

அகப்பயணத்தைப் போல புறப்பயணமும் நெடியது. கன்னியாகுமாரி, புதுச்சேரி, பாரீஸ், ஸ்டிராஸ்பூர், பிராஹா என தங்கள் கவலைகளைச் சுமந்தபடி அவர்களது வாழ்வு ஓடிக்கொண்டேயிருக்கிறது. நாய்க்குட்டியாக மாறிவிடும் வாகீசனும் அவனது பிரெஞ்சு மனைவியும் கூட ஒருவிதத்தில் தங்கள் கஷ்டங்களிலிருந்து விடுதலை அடைந்துவிட்டார்கள் எனலாம். கதையின் புனைவு உத்தியாக மட்டும் நின்றிருந்தால் ஆழத்தைக் கூட்டியிருக்காது. நாய்க்குட்டியாகப் பாவித்து வாகீசன் பேசுபவை திக்கற்றவனின் சுயபுலம்பலாகவே தோன்றுகிறது.

மீண்டும் ஒருமுறை டிரஃபால்கர் சதுக்கத்தில் நான் கழித்த அதிகாலைப் பொழுதை நினைத்துப்பார்க்கிறேன். தனித்துவிடப்பட்டது போல சோபைகூடிய வெளி. ஏதோ ஒருவிதத்தில் தேடுதலைத் தக்கவைத்துக்கொண்டிருப்பவர்கள் வந்துசெல்லும் crossroads ஆக நம் வாழ்க்கை மாறிவிட்டது. கூட்டுரோட்டு சந்திப்பு போல சிலர் சேர்கிறார்கள், சிலர் பிரிகிறார்கள். வாழ்வின் அபத்தத்தைப் புரிந்துகொள்ளமுடியாமல் தவிப்பவர்களுக்கு மத்தியில் தங்கள் குழப்பங்களுக்கும் கவலைகளுக்கும் ஏதேனும் ஒருவிடிவு கிடைக்கும் எனும் எதிர்பார்ப்பில் இந்த crossroads வழியே ஓடிக்கொண்டே இருக்கின்றனர். வாழ்க்கை மீதான பிடிப்பு, இருத்தலின் தேவை என சமாதானப்பேச்சு எத்தனை சொன்னாலும் தேடுதல் எனும் தளத்தை வாழும் கலை என்பதாக எடுத்துக்கொள்வதில் தான் தீர்வு அமைந்திருக்கிறது. அக்கலையை மிக நேர்த்தியாகக் காட்டும் நாவலாக காஃப்காவின் நாய்க்குட்டி அமைந்திருக்கிறது. நீலக்கடல் முதல் நாகரத்தினம் கிருஷ்ணாவைத் தொடர்ந்து வருபவன் எனும் முறையில் அவரது அடுத்தகட்ட பயணத்துக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்

—————————————————————–
நன்றி: சொல்வனம் இதழ்

அண்மையில் வெளிவந்த கா•ப்காவின் நாய்க்குட்டி (நாவல்) முதல் அத்தியாயம்)

பிராஹா, செக் குடியரசு: 2013, ஏப்ரல், 6 சனிக்கிழமை

 

 

நோக்கமற்ற தேடுதல் இருக்கிறதா? அல்லது தேடுதல் இல்லாத மனிதர்கள் உண்டா? கண்ணுக்கெட்டியவரை மனிதர்கள் – ஒவ்வொரு நாளும் ஒன்றைத் தேடிக்கொண்டிருப்பவர்கள். உடமையாக்கிக்கொண்ட பிறகு, திருப்தியுறாமல் வேறொன்றைத் தேடுவார்கள். கண்டறிய வேண்டிய பொருள் அல்லது கைக்கு எட்டவேண்டிய பொருள் இவர்களுக்கோ, இவர்களின் சுற்றத்திற்கோ சில கணமேனும் மகிழ்ச்சிதரக்கூடியதென்கிற கனவில் பதட்டத்துடன் அலைபவர்கள். தேடும் இக்கணம்வரை கண்ணிற்படாமலேயே கைக்கு எட்டாமலேயே, பொருள் ஒளிந்து விளையாடலாம். அல்லது சற்று முன்பாக குழந்தையின் சிறுபொம்மைபோல அது கைநழுவி மேசைக்கு அடியிலோ, சோபாவிற்குக் கீழேயோ விழுந்து கிடக்கலாம். தன்னைக்கொண்டாடிய குழந்தையின் அரவணைப்பிற்காக பொம்மைக்கும் ஏக்கங்கள் உண்டு, தணியுமா என்பதைக் காலம் தீர்மானிக்கவேண்டும். அதுவரை குழந்தை தேடும், தேவையெனில் பெற்றோர்களும் தேடலாம். தேடும் பொருள் எப்பொழுதும் நமது பார்வை பரப்பிற்கு வெளியிலிருக்கிறது. இருள் விலகி பொழுது புலர்ந்து தேடலை எளிதாக்கலாம். வயதுக்குரிய, உடலுக்குப் பொருத்தமான, மூளைக்குகந்த தேடுதல் இருக்கிறது. தேடுதல் எதுவாயினும் தேவையைக்காட்டிலும், அதன் பெறுமதி ஒரு குன்றிமணியேனும் தூக்கலாக இருக்கவேண்டுமென்பது விதி. தேடலில் உள்ள சிக்கல், பெரும்பாலான நேரங்களில் நாம் தேடும் பொருள் மற்றவர் இடத்திலும், மற்றவர் தேடும்பொருள் நம்மிடத்திலும் இருக்கிறது. பிறர் தேடுகின்றார்களேயென்று தமக்கு வேண்டாத பொருளை ஒருவரும் விட்டுக்கொடுப்பதுமில்லை. அவள் சராசரி மனிதர்கூட்டத்தில் ஒருத்தி, தேடுவது பரம்பொருளுமல்ல, இருந்தும் தேடும்பொருள் இதுவரை கிடைக்கவில்லை.

பிராகு அல்லது பிராஹா (செக் மொழியில்) ‘செக்’ நாட்டின் தலை நகரம். செக் குடியரரசைக் காட்டிலும் தலை நகரம் ‘பிராஹா’ அதன் குறுக்கே ஓடும் வெட்லாவா நதிபோல வயதில் மூத்தது, பல தலைமுறைகளைக் கண்டது. பொஹீமியப் பேரசு, ஜெர்மானியப் புனித ரோமப் பேரசு, அண்மைக்காலம் வரை செக்கோஸ் லோவோக்கியா ஆகியவற்றின் தலைநகரென்ற வரலாற்றைக் கொண்டது. மத்திய ஐரோப்பாவின் கலைவளத்தையும் பாரம்பரியத்தையும் பெற்றிருக்கிற பிராஹா நகரில் தான் பிற சுற்றுலாபயணிகளிலிருந்து வேறுபட்டவளாய் நித்திலா அலைந்துகொண்டிருக்கிறாள்.

‘பிராஹா’ நகரத்திற்கு நேற்றுமாலை வந்தாள். வாகீசனுடைய சினேகிதன் தெரிவித்த ஓட்டல் முகவரிக்குச் சென்று அவனைப்பற்றி விசாரித்தாள். அதுபோன்ற பெயரில் யாருமில்லை என்று ரிசப்ஷனில் கிடைத்த பதில், பாதி உற்சாகத்தை குறைத்துவிட்டது. தங்கள் ஓட்டலுக்கு வேறு சில கிளைகள் பிராஹாவில் இருப்பதாகவும் அங்கே சென்று விசாரிக்கும்படியும் ரிசப்ஷனிஸ்ட்டுகளில் ஒருத்தி கூறினாள். அவள் கூறியதைச் செயல்படுத்த பலமுறை யோசித்து பின்னர் தற்காலிகமாக கைவிட்டாள். அவள் கூறிய ஓட்டல்கள் திசைக்கு ஒன்றாய் புறநகர்ப் பகுதியில் இருந்தன. அங்கெல்லாம் சென்று தேடத் தற்போதைக்குத் துணிச்சலும் இல்லை நேரமும் இல்லை. பாரீஸ் நகரில் பல இடங்களுக்குத் தனியே போய்வந்திருக்கிறாள், இருந்த போதிலும் தனி ஆளாக இந்த ஊருக்குப் புறப்பட்டு வந்தது தவறு. தவிர பிரான்சு அரசாங்கம் தமது வதிவிடத்தை உறுதி செய்யாத நிலையில் அசட்டுத் தைரியத்துடன் பிராஹா புறப்பட்டு வந்திருக்கக்கூடாது. வறட்டு கௌவுரவம் பார்க்காமல் ஹரிணி அக்காளை அழைத்திருந்தால் வந்திருப்பாள் எனவும் நினைத்தாள். நீதி மன்றத்தில் வீராப்பாக அவரிடம் பேசிவிட்டு தற்போது அவரை அழைத்து வந்திருக்கலாமோ இவரை அழைத்து வந்திருக்கலாமோ என்றெல்லாம் யோசித்து குழப்பிக்கொள்வது தேவையா என்றும் நினைத்தாள். வாகீசன் தன்னுடைய பொருள். அவனை உடமை ஆக்கிக்கொள்ள போதாது தவறவிட்டவள் அவள். எனவே அவள்தான் அவனைத் தேடிக் கண்டெடுக்கவேண்டும், அதுதான் முறை. சோர்ந்து போகாதே தேடு! கிடைப்பார் எனத் தனக்குச் சமாதானம் கூறிக்கொண்டாள்.

தன்னைச் சுற்றிலும் பார்வையை ஓடவிட்டாள், ‘இல்லை’. கடந்த இரண்டு நாட்களைப்போல இந்த ‘இல்லை’யை அத்தனை ச் சுலபமாக ஏற்க மனம் தயாரில்லை. கால்களிரண்டும் கனத்தன. காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததை வயிறு நினவூட்டியது. அடி உதட்டை மடித்து பற்களை அழுந்தப் பதித்து வயிற்றை அலட்சியம் செய்தவளாக பார்வையின் பரப்பை அதிகரித்தாள். அவன் இல்லையென்றாலென்ன, அவனாக இருக்கலாமோ என சந்தேகிக்க அவன் முகத்தின் சாயலில் அவள் இதயத் துடிப்பைச் சுண்டிவிட; முன் தலையையும் மார்பையும் வேர்வையால் நனைத்து அவளிடம் பதட்டத்தை உருவாக்கக்கூட ஒருவருமில்லை. பெருந்திரளாக கூடியும், வியந்தும், கலைந்தும் செல்கிற மனிதர் கூட்டத்திடை, அதிசயமாக இந்தியத் துணைக்கண்ட மனிதரின சாயலில் ஒரு ஜீவன்கூட கண்ணிற்படவில்லை, சலிப்புடன் கால்போனபோக்கிலே நடக்கிறாள்.

பிற்பகல் தனது, எல்லைக்கோட்டை நெங்கிக்கொண்டிருக்கிறது. உள்ளூர்மக்கள் – வேலை முடிந்து வீடு திரும்புகிறவர்கள் – குறுக்கிடும் மனிதர்களில் சிலரிடம் ஒதுங்கியும், சிலரைத் தள்ளிக்கொண்டும் வேகமாய் நடக்கிறார்கள், பலர் நடப்பதுபோல ஓடுகிறார்கள். இரயிலையோ, பேருந்துகளையோ பிடிக்கும் அவசரம் கால்களில். சுற்றுலா பயணிகளுக்கு நேரமிருக்கிறது. கால்களைப் பிணைந்திருப்பதைப்போல அவர்கள் நடையில் தொய்வு. நேஷனல் மியூசியத்தின் முகப்பை படமெடுத்துக்கொண்டிருந்தவர்கள் போக மற்றவர்கள் வென்ஸ்லஸ் சதுக்கத்தில் கண்களையும், இறங்குவரிசையில் நீளமாக அமைந்த படிகளில் கால்களையும் வைத்து இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை மணிநேரமாக வெளியில் அலைகிறார்களோ? முகங்கள் கருத்திருக்கின்றன, விழிவெண்படலத்தில் அழுக்கும், கண்மணிகளில் அலுப்பும் தெரிகிறது. தங்கச் சரிகைபோல, சதுக்கத்தை வெயில் மூடியிருக்கிறது. சதுக்கத்தை மூடியதுபோக மிச்சம்மிருந்தவை மனிதர்களின் இமைளிலும், தலைமுடிகளிலும் பொன் தூவிகள்போல ஒட்டிக் கிடக்கின்றன. அந்திக்காற்றோடு வெயிலும் சலசலக்கிறது. மனிதர் கையிலிருந்து நழவி விழுந்ததைக் கொத்துவதற்கு தரை இறங்கிய புறாவொன்றை மனிதர் கால்கள் விரட்ட, அச்சமும் ஏமாற்றமுமாக இறக்கைகளை படபடவென்று அடித்து பறந்துபோகிறது. தலையில் கெப்பி அணிந்த இளம்பெண்ணொருத்தி நிழற்குடையின் கீழ் ஐஸ் விற்றுக்கொண்டிருக்கிறாள். அவள் அணிந்திருக்கும் டெனிம் ஜாக்கெட் பெரிதாக இருக்கிறது, பொத்தானிடப்டாமல் திறந்து கிடக்கிறது. உள்ளே தெரிந்த பனியனில் ‘ஐ லவ்’ மட்டும் தெரிகிறது, ‘ பிராஹா ‘ என்ற வார்த்தை டெனிம் ஜாக்கெட்டுக்குள் ஒளிந்திருக்க வேண்டும். இவள் நெருங்கி அவளைக் கடந்தபோது, பரபரப்பான தனது வியாபாரத்திற்கிடையிலும் இவளைப் பார்த்து சிரிக்கிறாள். காற்றில் அலையும் தனது குட்டை பாவாடைபற்றிய அக்கரையின்றி வியாபாரத்தில் மும்முரமாக இருக்கிறாள். சுற்றுலா பயணிகளின் கூட்ட வெள்ளம் அவளைத் தள்ளிக்கொண்டு போகிறது. பொஹீமிய வழித்தோன்றலான புனித வென்ஸ்லஸ் (St.Wencesles) குதிரையில் ஆரோகனித்திருக்கிற சிலை முன்னே சில நொடிகள் நிற்கிறாள்.

-“மன்னிக்கவேண்டும், எங்கள் இருவரையும் சிலைமுன்னே வைத்து ஒரு படம் எடுக்க முடியுமா?”- திரும்புகிறாள்.

நடுத்தரவயது சீனத் தம்பதிகள்; தோல் நீக்கிய ஆல்மண்ட் பருப்புபோன்ற கண்களைச் சுருக்கிய, பல்வரிசைதெரியும் சிரித்த முகங்கள். கணவர் கையில் டி.எஸ்.எல்.ஆர் கனோன் புகைப்படகருவி கைமாறுவதற்குத் தயாராகக் காத்திருக்கிறது. நெற்றியில் விழுந்த கேசங்களை ஒதுக்கிவிட்டு தலையாட்டுகிறாள். கேமராவை இவளிடம் கொடுத்துவிட்டு அதைக் கையாளும் நுட்பத்தைச் சுருக்கமாக சீனஆங்கிலத்தில் தெரிவிக்கிறார். அருகிலிருந்த பெண்மணி (மனைவி?) எடுக்கவிருக்கும் நிழற்படத்திற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தவள், கழுத்தில் ஒதுங்கியிருந்த மணிமாலைக்கு மார்பிடையே இருந்த குழியில் இடமொதுக்கித் தந்து திருப்திபட்டவளாய் இவளைநோக்கிப் புன்னகைக்கிறாள். அப்புன்னகை, தம்பதிகள் இருவரும் சிலை அடிக்குச்சென்று சேர்ந்தாற்போல இவளைத் திரும்பிப்பார்த்தபோதும் அவளுடைய உதட்டுச் சாயத்தோடு ஒட்டியிருக்கிறது. தள்ளி நின்று கோணம் பார்க்கிறாள். பிற பயணிகள் இவர்கள் படம்பிடிப்பதற்கு ‘தொந்திரவு ஆகிவிடக்கூடாது’ என்பதுபோல ஒதுங்கி நடக்கிறார்கள். சீனர் விவரித்தவண்ணம் கிளிக் செய்தத் திருப்தியில், அவர்களிடம் கேமராவைத் திருப்பிக் கொடுக்கிறாள். வாங்கிய சீனர் எடுத்திருந்த படத்தை எல்.சி.டி. ஸ்க்ரீனில் கொண்டுவந்து இவளிடம் காட்டுகிறார். இவள் தலையை இலேசாகச் சாய்த்துப் படத்தைப் பார்த்து முறுவலிக்கிறாள். கேமராவைக் கையில் வாங்கிய தம்பதிகள் இருவரும் சேர்ந்தாற்போல தலைகளை இறக்கி நன்றி கூறி விலகி நடக்கிறார்கள்.

வென்ஸ்லஸ் சிலையிலிருந்து இருபது அல்லது இருபத்தைந்து மீட்டர் தூரத்தில் ஸ்லேட் நிறத்திலிருந்த சலவைக்கற்களில் இரண்டு இளைஞர்களின் மார்பளவு உருவங்கள், ஒற்றை ரோஜா கிளைகளும், ஒன்றிரண்டு மலர் வளையங்களும் அவற்றின் எதிரில் தரையிற் கிடக்கின்றன. மெழுகுவர்த்தியொன்றை கொளுத்தி நட்டுவிட்டு ஓர்இளம்ஜோடி படம்பிடித்துக்கொள்கிறது. எரியும் மொழுகுத்திரிகளின் சிறு தீ நாக்குகள் காற்றை ருசித்துக்கொண்டிருக்கின்றன. அருகிற் சென்று பார்க்கிறாள். செக் மொழியில் எழுதியிருக்கிறார்கள். ஓர் இளம்பெண், முடிந்தமட்டும் இவள் காதை நெருங்கி “சோவியத் யூனியன் ஆக்ரமிப்பின்போது அவ்விளைஞர்கள் இருவரும் உயிர்த் தியாகம் செய்தவர்கள்” என ஆங்கிலத்தில் விளக்கினாள். ‘அப்படியா?” என்ற வார்த்தையின்றி தலையாட்டல்மூலம் விளக்கத்தைக் அங்கீகரிக்கிறாள், தொடர்ந்து நன்றியைத் தெரிவிக்கும் வகையில் ஒரு முறுவல். சதுக்கத்தின் இரு பக்கமும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆக்ரமித்திருக்கின்றன. கனவில் மிதப்பவள்போல பார்த்துகொண்டு நடக்கிறாள் நிதானமாகப் பார்வையை நான்குபக்கமும் ஓடவிட்டபடி நடக்கிறாள். பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் கடந்திருக்கலாம். முடிச்சு முடிச்சாக திரளுகிற சுற்றுலாபயணிகள்; பெண்களை குறிவைத்து திறந்துள்ள படிகம் அல்லது பளிங்கு கல் பொருள் விற்பனையகங்கள், தோல் பொருட்கள், நினைவுப் பொருட்கள் விற்கும் கடைகள்; மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழியும் காப்பி பார்கள், உணவகங்கள்; கவனத்தைச் செலுத்தாது தாண்டுகால் வைத்து ஒன்றிரண்டு குறுகலான தெருக்களில், திருப்பி எழுதிய ‘ட’ வடிவ வரைபாதையில் நடந்தபோது கண்ணுக்குப் புலனாகாத ஒரு குழலூதி அவளைக் கவர்ந்துசெல்வதுபோல இருக்கிறது.

ஒரு திறந்த வெளியில் மீண்டும் மனித சமுத்திரத்தில் விழுந்திருக்கிறாள். உயர்த்திப் பிடித்த சுருக்கிய குடைகள். சீருடைபோன்ற ஒற்றை வண்ண மழைக் காப்பு ஆடைகள். பிள்ளைகளுடன் வந்திருக்கிற தவிப்பும் பொறுப்புமிக்க தம்பதிகள். இளம் காதலர்கள். தோழிகள். நண்பர்கள். அல்லது இவை எதுவுமே அற்ற மனிதக் கலவை. ஆபூர்வமான உடையணிந்து இசைகச்சேரி அல்லது நாடக விளம்பரத்திற்குத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த முகங்களுக்கிடையில் நடந்தபோது தன்னை ஒர் இம்ப்ரஸனிச ஓவியமாக உணர்ந்தாள். கூட்டம் அத்தனையும் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. அவர்களுடைய அந்திவெயில் முகங்களில் செந்தூர நிழல்கள் ஏடுகள்போல மிதக்கின்றன. கும்பலை நெருங்காமல் தள்ளி நிற்கிறாள், நேர் எதிரே வானியல் கடிகாரம். கடிகாரத்துடன் இருக்கிற நான்கு பொம்மைகளும் பதினைந்தாம் நூற்றாண்டு பிராஹா மக்களின் மன நிலையை எதிரொலிக்கின்றனவாம். கூடியிருந்த பயணிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதுபோல நான்கு பொம்மைகளில் ஒன்றான எலும்புக்கூடு, மணல் நிரம்பிய நாழிகைக் கண்ணாடிக் குடுவையை ‘ணங்’ என்று தட்டித் திருப்பி வைக்கிறது. பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் கடிகாரத்திற்கு மேலாக இருக்கிற இரண்டு சன்னல்களைக் கடந்து வரிசையாகக் கூட்டத்தைப் பார்த்து கை அசைத்தபடி கடந்து செல்கிறார்கள். இறுதியாக சேவற்கோழியின் கொக்கரிபோடு காட்சி முடிவுக்கு வருகிறது. இதுகுறித்த அக்கறையின்றி தங்கள் அன்றையைப் பொழுதைக்குறித்த கவலையோடு ஜாஸ் இசைக்கும் ரோமா கலைஞர்கள். மெல்ல கூட்டம் கலையத் தொடங்கியது. பிரான்சு நாட்டில் ஸ்ட்ராஸ்பூர் நகரக் கதீட்ரலிலும் பார்த்திருக்கிறாள் . எனினும் புதுநிலத்தில், தன்னை அறிந்திராத மனிதர்களிடை முகவரியின்றி ஒன்றை அறியநேர்வதும் பரவசப்படுவதும் சுகமாக இருக்கிறது.

ஓர் இளம்பெண் இவளை நெருங்கி, ” யூரோ மாற்றனுமா?”, எனக்கேட்டபோது வேண்டாம் என சொல்ல நினைத்து, முக இறுக்கத்துடன் தலையை இருமுறை ஆட்டுகிறாள். “என்ன சொல்கிறீர்கள், வேண்டுமா வேண்டாமா?” என மறுபடியும் இளம்பெண் அவளை நடக்க அனுமதிக்காதவள் போல குறுக்கே நின்று கேட்கிறாள். கேட்டது மாத்திரமல்ல, சட்டென்று அவள் கைப்பையைத் தொடவும் செய்கிறாள். இவள் மூளை’ஆபத்து, கவனமாய் இரு’ என எச்சரிக்கவும், நிலமை புரிந்து பெண்ணின் கையை வேகமாய்த் தட்டிவிட்டு மேலே நடக்கிறாள். திரும்பத் திரும்ப நடந்த வீதிகளிலேயே நடப்பதுபோலவும் கனவுலகில் சஞ்சரிக்கிற உணர்வும் வருகின்றன.

இவளைச் சுற்றியுள்ள மனிதர்களில் பெரும்பாலோர் ஆர்வத்துடன் நகரைச் சுற்றிப்பார்க்கிறார்கள். இவள் கண்கள் மட்டும், தேடலில் கழிகிறது. தேனீக்கள் போல கூட்டம் கூட்டமாக பிராஹா நகர சுற்றுலா தலங்களை மொய்க்கிற மனிதர்களிடை, பேருந்துகளில் பயணம் செல்வர்களிடை, உணவு விடுதி மேசைகளில், பூங்காவிலுள்ள இருக்கைகளில், கடைகளில் எதையோ வாங்குபவனாகவோ அந்த முகத்தையும் அந்த முகத்துக்கு உடையவனையும் தேடுகிறாள். அவனைத் தேடி அலுத்த நேரங்களில் பிராஹா நகரத்தின் தெருக்களில் அலைகிறாள். நேற்று படகுபிடித்து வெட்லாவா நதியில் ஒரு மணிநேரம் பயணித்தது அலைச்சலின் வலியை குறைக்க உதவியது. நதிக்கரை ஓரமிருந்த பழமைவாய்ந்த பிராஹா நகரத்தில் கட்டிடங்கள், கலை அற்புதங்கள், பிராஹா கோட்டை, நேஷனல் தியேட்டர், எனப் பார்த்துக்கோண்டே போனபோது பத்தடி நீளத்திற்கு ஒரு பெயர்ப்பலகை, அதில் ‘காப்கா மியூசியம்’ என்று எழுதியிருந்தது.

பிரான்சிலிருந்து புறப்படும்போது காப்காவோ, மிலென் குந்தெராவோ மனதில் இல்லை. வாகீசன் மாத்திரமே மனதில் இருந்தான். ஓர் இரவு வெகு நேரம் இலக்கிய உரையாடலை அவனுடன் நடத்தி அவள் தெரிந்துகொண்ட பெயர்கள் பிராஹா வாசிகளான குந்தெராவும் காப்காவும், வாகீஸனைத் தேடி அலையும் கால்கள், காப்காவின் தடத்தை தேர்வுசெய்தபோதும் அதே ஆர்வத்துடன் நடந்தன. காப்கா பிறந்த வீட்டைப்பார்த்தாள். அவர் அடக்கம் செய்ததாக நம்பப்படும் யூதர்களின் புதிய கல்லறைக்கும் சென்றாள். யூதர்களின் பழைய கல்லறையில் காப்கா ஆவியாகத் திரிவதாகவும், ஆவியையேனும் சந்தித்துவிடவேண்டுமென்றும் ஒரு முறை பேச்சிடையே குறிப்பிட்டான், ஒருவேளை காப்காவைத் தேடி கல்லறைகளில் அலைந்துகொண்டிருப்பானோ?

எத்தனை நிமிடங்கள் நடந்திருப்பாள் அல்லது எவ்வளவு தூரம் நடந்திருப்பாள் என்று தெளிவாக உறுதிபடுத்தமுடியவில்லை. யூதர்களின் பழைய கல்லறைக்கு முன்னால் நிற்கிறாள். கல்லறை நுழைவு வாயிலில் பெரிய இரும்புக்கதவு. ஓர் ஆள் உள்ளே நுழையலாம் என்பதுபோல திறந்திருக்கிறது. இவ்வேளையில் திறந்திருக்கும் வழக்கமுண்டா? என்பதையெல்லாம் யோசிக்கும் மனநிலையிலில்லை. உள்ளே நுழைய முயன்றபோது, கதவு ‘கரகர’வெனக் கிறீச்சிட்ட சத்தம் அசாதரணமாக ஒலித்து நடுக்கத்தை ஏற்படுத்தியது. சற்றுமுன்புவரை அவளுடன் தொடர்ந்த வாசமும், வெப்பமும், மனிதர் குரல்களும் சட்டென்று அடங்கின. உறையவைக்கும் குளிரும், கல்லறை மணமும் இவளைச் சூழ்ந்தது. கண்ணெதிரே இருள் படுக்கைகளில் ஆழ்துயிலில் கல்லறைகள், ஒழுங்கற்ற வரிசைகளில் நேராகாவும், சாய்ந்தும் கற்கள். மனிதர் வந்துபோகும் சுவடின்றி அநாதைகள் போலிருக்கின்றன. மெல்லிய இருளில் பொதிகள் குவித்திருப்பதுபோல புதர்களும் காட்டுச்செடிகளும். பராமரிப்பற்ற கல்லறை. கண்களை மூடி தியானிப்பதுபோல நிற்கிறாள். காப்காவிற்கா, வாகீசனுக்கா என குழம்பினாள். இமைமயிர்களில் மின்மினிப்பூச்சிகள் கரிய இருளின் சிலந்திக் கண்கள்போல ஒளிர்கின்றன. அச்சம் பிராண்டியது, நாக்கு வறண்டு உடம்பு உதறி அடங்கியது. திரும்பி நடக்கலாம் என்று யோசித்தபோது ‘வள் வள்’ என்று சப்தம். எங்கிருந்து வந்ததென பார்க்கிறாள். அவளைச்சுற்றி நான்கைந்து மீட்டர் தூரம்வரை மெலிந்த இருள். நாயின் தோற்றத்தில் எந்த ஜீவனுமில்லை. மெல்லிய இருள்கூட்டிற்கு, அப்பால் சற்று தடித்த இருள், மரங்கள் அடர்ந்த புதர்களா வேறு ஏதேனுமா எனவிளங்கிக்கொள்ள இயலாதவகையில் மலைபோலகுவிந்து கண்ணுக்கெட்டியவரை நீண்டு வியாபித்திருந்தது. அவ்விருளிலிருந்து குரைத்த நாய் வெளிவருமா என்று காத்திருருந்தாள்; வந்தால் தைரியாகக் எதிர்கொள்வதெனவும் தீர்மானித்தாள். அவர் எதிர்பார்த்தற்கு மாறாக, எதிரிலிருந்த கல்லறை அசைவதுபோல இருக்கிறது. உடல் மீண்டும் வெடவெடக்கிறது, இதயம் வேகமாகத் துடிக்கிறது. திரும்பிப்பார்க்க்கூடாதென்று தனக்குள் முனுமுனுத்துக்கொள்கிறாள். வேகமாக நடந்து கல்லறை வாயிற் இரும்புக் கதவை தள்ளித் திறந்து வெளியில் வந்ததும், இதய ஓட்டம் நிதானத்திற்கு வருகிறது. உடல் நடுக்கமும் தணிந்திருக்கிறது. வேகமாக சற்று முன் வந்த திசையில் நடக்கிறாள் அவளுக்கு முன்பாக ஒரு நாய்குட்டி. அவள் கட்டுபாட்டில் இல்லை என்பதுபோல கால்களிரண்டும் நாய்க்குட்டியைத் தொடருகின்றன. ஒரு வேளை தேடலுக்கான விடையா. அலைச்சலுக்கான முடிவா? நாய்க்குட்டி அவளுக்கு முன்னால் ஓடிக்கொண்டிருக்கிறது. சிலுசிலுவென்று காற்றடித்தபோதிலும் உடலில் வெப்பம் உறைத்தது. மேலே போட்டிருந்த ஸ்வெட்டரை உருவித் தோளிற் போட்டுக் கொண்டாள். நாய்க்குட்டியை மறந்தவளாக குறுகலான வீதிகளிற் புகுந்து வடக்கே நடந்தபோது, சற்று முன்பிருந்த இடிபாடுகளில்லை. காற்றில் தற்போது இறுக்கமும், தூசும், ரெஸ்டாரெண்ட் மசாலாக்களின் வாசமும் தூக்கலாக இருக்கின்றன. பழைய நகரத்தின் மாலா ஸ்ட்ரானா பகுதி. ஸ்லாவ் மொழியில் உள்ள பெயர்களை நினைவு கூர்வது கடினம். பலமுறை ச் சொல்லிப்பார்த்துக்கொண்ட பெயர்கள் தற்போது ஞாபகத்தில் இல்லை.

வெல்ட்டாவா நதியின்இருகரைகளையும் இழுத்துப் பிடித்திருப்பதுபோல சார்லஸ் பாலம், அ தன் வாயிலில் நிற்கிறாள். இருள் மெல்ல மெல்ல நிரம்பிக் கொண்டிருக்கிறது. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு ஏற்கனவே நீரில் கரைந்திருந்தது. இருளோடு கலந்து சிலுசிலுவென்று காற்று. பாலத்தின் நுழைவாயிலில் ஒரு பெரிய கோபுரம். கோபுரத்தைக் கடந்ததுமே இடதுபுரம் உணவு விடுதிகள். நீரில் கால் நனைப்பதுபோல அமர்ந்துகொண்டு ஜோடி ஜோடியாக உணவருந்தும் மனிதர்கள்.பாலத்தின் மீது நடப்பது சுகமாக இருக்கிறது. கரையோரங்கள் பொன்னாரங்களில் வைரம்பதித்ததுபோல மஞ்சள் ஒளியில் ஜொலிக்கின்றன. ஒளிரும் உல்லாசப் படகுகள், நீரின் சலசலப்பையும்; கால்களால் பாலத்தில் நீளத்தையும், சொற்களால் காற்றினையும் கலகலப்பாக்கிக்கொண்டிருக்கிற மனிதர்ச் சந்தடியை குலைத்துவிடக்கூடாதென்பதுபோல படகுகளின் எஞ்சின்கள் மெல்ல உறுமுகின்றன, இலைபோல சொகுசாய் நீர் இழுத்த இழுப்புக்கு உடன்பட்டு மிதந்து போகின்றன. அந்திப்பொழுதின் அழகைக்கூட்டப் பாலத்தின் நெடுகிலும் தெருப்பாடகர்கள், ஜாஸ் கலைஞர்கள், கிட்டார்களின் சினுங்கல்கள், அவற்றில் மயங்கி நிரந்தரமாக பாலத்தின் கைப்பிடி நெடுகிலும் கல்லாய் சமைந்தவிட்ட பரோக் காலத்து கன்னங்கரேல் சிற்பங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஐரோப்பியர் இருவர் தண்ணீர் பக்கம் கைகாட்டுகின்றனர்,” Not there, look at your left!” தலையை நிமிர்த்தி பார்த்த நடுத்தர வயதைக் கடந்த பெண் “yes yes, now I see” என்கிறாள்”. இவள் வழக்கமாக உல்லாசப் பயணிகளிடம் காண்கிற செயல்கள்தானென நினைக்கிறாள். அவர்களுடன் சீனர்கள் கும்பலொன்று சேர்ந்துகொண்டது. அவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்கிறபோதும் அவர்கள் கைகளும் பார்வையும் ஐரோப்பிய தம்பதிகள் பார்த்த திசைநோக்கி இருக்கின்றன. அடுத்த சில நொடிகளில் பார்ப்பவர் எண்ணிக்கை அதிகரிக்க நித்திலா எதிர்த் திசையிலிருந்த பாலத்தின் கைப்பிடியை நோக்கி ஓடுகிறாள். நதியிலிருந்த ஒரு படகில் பரபரப்பு, நீரில் இருவர் குதித்திருப்பது தெரிகிறது. இதற்குள் கரையோரம் சைரன் ஒலிக்க hasič, sanitka என்றெழுதிய வாகனங்கள். என்ன? என்பதுபோல அருகிலிருந்த ஐரோப்பியரை விசாரிக்கிறாள். ‘தெரியவில்லை’ நானும் உங்களைப்போல இப்போதுதான் வந்தேன்”- என்கிறார். “படகிலிருந்து யாரோ ஆற்றில் விழுந்திருக்கவேண்டும் ” அருகிலிருந்தவர் குறுக்கிட்டார். “பிறகு”? -இவள். “பிறகென்ன, இது போன்ற விபத்துகளுக்கென்றுள்ள பாதுகாப்பு படையினர் நீரில் விழுந்த நபரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்”

கைத் தொலைபேசி ஒலிக்கிறது. எடுக்கிறாள். மறு முனையில் பாரதி.

« நித்திலா எங்கிருக்கிற? «

« பிராஹாவில்தான் வேறெங்க. குழந்தை எப்படி இருக்கிறான்? »

« குழப்படி இல்லாமல் ஒழுங்காய் இருக்கிறான்., உன் அக்கா கதைக்கவேணும் எண்டு சொன்னா, கொஞ்சம் பொறு போனை அக்காட்டைக் கொடுக்குறன. »

« உன்ர மனசுல என்ன நினைக்கிற ? நான் உயிரோடிருக்கவா வேண்டாமா? ஊரு சனங்களுக்குப் பதில் சொல்ல முடியலை. ஒழுங்கா ஊருக்கு வந்து சேர்! »

தொடர்ந்து அவள் ஏதேதோ புலம்பிக்கொண்டிருக்க இவள் போனைக் துண்டித்துவிட்டாள், இரண்டொரு நிமிடங்கள் கழித்துப் பாரதிக்குப் போன் போட்டாள். மறுமுனையில் பாரதியின் “ஹலோ!”

« அக்காள் இன்னும் பக்கத்தில் நிற்கிறாளா? »

« ஓம்! »

« அவளை எப்படியாவது சமாளி. நாளைளக்கு நான் வாரன். »

« நீ போனதற்கு ஏதேனும் பலனுண்டா? »

« இதுவரை இல்லை. ஆனால் அவர் கிடைக்கும் மட்டும் தேடப் போரன், என்ன புதினம்? »

« சட்டத் தரணி தன்னை வந்து சந்திக்கச் சொன்னா. »

« ரெண்டொரு நாளில் பார்க்குறன் என்டு சொல்லு.”- என இவள் கூறிமுடித்ததும், மறுமுனையில் தொலைபேசி மூச்சிழந்தது. கைக் கடிகாரத்தில் நேரத்தைப்பார்த்தாள். இரவு ஒன்பது மணி. உடனே புறப்பட்டால்தான் பத்துமணிக்குள் ஓட்டலை அடைய முடியும். நாளைக்கு காலையில் பிரான்சு செல்ல சௌகரியமாக இருக்குமென நினைத்ததும். வேகமாக மெட்ரோ ஸ்டேஷனை நோக்கிச் சென்றாள்.

சாரலஸ் பாலத்தின் வடக்கு வாயிலில் இறங்கி நடந்தபோது நதியை ஒட்டிய கூட்டம் கலையாதிருக்கிறது. கூட்டத்திடை நடுத்தர வயதில் தம்பதிகள் தனித்துத் தெரிந்தனர், பெரியவர் இந்தியர்போல இருந்தார். ஓரிரு வினாடிகள் அவரை அவதானித்தாள். பின்னர் தொடர்ந்து நடந்தாள். நடையில் முழுக்கவனத்தையும் செலுத்தாது இரண்டொருமுறை திரும்பிப் பார்திரும்பிப் பார்க்கவும் செய்தாள். நிலவொளியியின் மடியில் வெல்ட்டாவா நதி ஆழ்ந்த நித்திரையில் இருந்தது, நாய்க் குட்டி கூட்டத்தில் ஓரமாய் நின்றிருந்தது அது வீண்கற்பனைபோலவும் இருந்தது.



———————————————

Kafka Naykutti Wrapper 3-1கா·ப்காவின் நாய்க்குட்டி (நாவல்) Rs.295

ஆசிரியர் : நாகரத்தினம் கிருஷ்ணா
காலசுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிட்டெட்
669 – கே/பி.சாலை, நாகர்கோவில்- – 629001

———————————————

காஃப்காவின் பிராஹா -4

மே -10 -2014Prague 211

இத்தொடரின் இறுதிப் பாகத்திற்கு, (கொடுத்துள்ள தலைப்பிற்கும் ) வந்திருக்கிறேன். படைப்பிலக்கியத்தில் ஆர்வமுள்ள எனக்கு பிராகு என்றதும் ஞாபகத்திற்கு வந்திருக்கவேண்டிய பெயர்கள் மிலென் குந்தெரா, மற்றொன்று பிரான்ஸ் காஃப்கா. அப்படி வந்ததா என்றால் இல்லை. வரவில்லை. இருந்தும் காஃப்காவை (?) சந்தித்தேன். ஆமாம் சந்தித்தேன். இக்கணம்வரை அப்படியொரு வாய்ப்பு எனக்கு எப்படி அமைந்தது? எனப்பலமுறை திரும்பத் திரும்ப என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.

Prague 131செக் நாட்டிற்கு பெரிய வரலாறு என்று எதுவுமில்லை. பத்தாண்டுகளாகத்தான் செக் நாடு. 1993 வரை செக்கோஸ்லோவோகியா (இதுவும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவானதுதான்) என்றிருந்த நாட்டை செக்-ஸ்லோவாக் அண்ணன் தம்பிகள் இருவரும் அடிதடியின்றி பாகம் பிரித்துக்கொண்டார்கள். தனிக்குடித்தனம் போனபிறகு அவர்களுக்கிடை காவிரி- முல்லைப்பெரியாறு சண்டை சச்சரவுகள் இல்லை. அவரவர் பாட்டுக்குத் தாமுண்டு தமது நாடுண்டு என்றிருக்கிறார்கள். செக்நாடு நிலப்பரப்பு 80000 ச.கி.மீ. (தமிழ் நாடு 130060 ச.கீ); மக்கட்தொகை 2012ம் ஆண்டுக் கணக்கின்படி 11 மில்லியன் மக்கள் (தமிழ்நாடு தோராயமாக 72 மில்லியன் மக்கள்). செக் நாட்டுக் கல்வியாளர்கள், கலை, சிற்ப, இலக்கிய ஆளுமைகள் உலகறியப்பட்டவர்கள். சமீபத்திய உதாரணத்திற்கு: 1984ம் வருட இலக்கியத்திற்கான நோபெல் பரிசுபெற்ற அவான் கார்டிஸ்ட்டும் கவிஞருமான Jaroslav Seifert. நோபெல் பரிசெல்லாம் வேண்டாம், « நொந்தே போயினும் வெந்தே மாயினும் …… வந்தே மாதரம் » என்று முழங்கிய பாரதிக்கு, இந்தியாவின் அண்டைமாநில மொழித்துறைகள் செலுத்தும் மரியாதை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஆசை. எலிவளையென்றாலும் தனிவளைவேண்டும் என்பது இதற்காகத்தான்.

Prague 185
நேற்றிரவு நாங்கள் தங்கியிருந்த உணவு விடுதிக்குத் திரும்ப, முதல் நாளைப்போலவே இரவு பத்து மணி ஆகியிருந்தது. டிராம்வேயில் இறங்கி விடுதியின் ரிசப்ஷன் டெஸ்க்கை நெருங்கினால், ஒரு பெருங்கூட்டம் திரண்டிருந்தது. சற்றுதள்ளி அவர்களுடைய கைப்பெட்டிகள், முதுகுப் பைகள் குவிக்கப்பட்டிருந்தன. இரவு அந்த ஓட்டலில் தங்கவந்த சுற்றுலா பயணிகள் போலிருக்கிறது. அவர்கள் ஸ்லாவ் மொழிதான் பேசினார்கள் என்றாலும் செக், ஸ்லோவாக், செர்பியா இவற்றுள் ஏதோ ஒரு நாடாக இருக்கவேண்டும் என்பது புரிந்தது. ரஷ்ய மொழி தெரியாதென்றாலும் அவர்கள் உச்சரிக்குவிதம் ஓரளவு பழகியிருந்தது. எங்களுடைய அறைக்குரிய ஓட்டல் விதிப்படி காலையில் புறப்படுகிறபோது ரிசப்ஷனிஸ்ட்டிடம் கொடுத்துவிட்டுச் செல்லவேண்டும். எங்களுடன் வந்திருந்த பயணிகளில் பலர் சாவியைக் கொடுக்காமலேயே கையில் வைத்திருந்தனர். அவர்கள் செய்த காரியம் சரியா தவறா என்பது இங்கே முக்கியமில்லை, ஆனால் அதிலுள்ள சௌகரியம் அப்போதுதான் எனக்கு விளங்கிற்று. அவர்கள் வந்த வேகத்தில் லிப்ட் எடுத்து அவரவர் அறைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். நானும் மனைவியுமாக எங்கள் அறை சாவிக்கு காத்திருக்க வேண்டியிருந்தது. ஐந்து நிமிடக் காத்திருப்பு பத்து நிமிடமாயிற்று. ஏற்கனவே வரவேற்பு பெண்மணியைச் சுற்றியிருந்த கும்பல் கலைந்துபோனதும் மற்றொரு கும்பல் அந்த இடத்தை ஆக்ரமித்துவிட்டது. ரிசப்சனிஷ்ட்டைச்சூழ்ந்த கும்பலைப்பார்க்க எனக்கு மோடியைச் சூழ்ந்த NDA எம்.பிக்கள்தான் நினைவுக்கு வந்தனர். நமக்கென்று உள்ளது எங்கே போய்விடும் என பொன். இராதாகிருஷ்ணன் போல ஒரு ஓரமாக நிற்கிறேன். ரிசப்னிஷ்ட் பெண் கடைக்கண் பார்வைகூட என் மேல் விழவில்லை. அப்பெண்மணியைக் குறை சொல்ல முடியாது. அத்தனை பேரையும் அவர் ஒருவராய் எப்படி சமாளிப்பாரென மனம் சமாதானம் செய்துகொண்டாலும், காத்திருக்க பொறுமையில்லை. கும்பலை விலக்கிவிட்டு, எனது அறை எண்ணைக்கூறி சாவி வேண்டும் என்றேன். அந்த எண்ணுக்குரிய புறாக்கூட்டில் சாவியை சில நொடிகள் தேடினார். தேடிய வேகத்தில் திரும்ப வந்தார். சாவி இங்கில்லை என்றார். உடனே மீண்டும் கும்பலிலிருந்த பயணிகள் பக்கம் அப்பெண்மணியின் கவனம் சென்றது. ஐந்து நிமிடங்கள் கழிந்தன மீண்டு அப்பெண்மணியை விடுவதாக இல்லை. ”மீண்டும் சாவி?” என்றேன். அதுதான் இங்கில்லை என்றேனே, என்றாள். நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களை உடனே கூப்பிடு, எனக்குரிய பதில் கிடைத்த பிறகுதான் மற்றவர்களை கவனிக்க அனுமதிப்பேன் என்றேன். இரண்டொரு விநாடிகள் அவள் மூக்கும் முழியும், காதுகளும் சேர்ந்தாற்போல சிவந்தன. தொலைபேசியை எடுத்தாள். யாரையோ அழைத்தாள். நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களைத்தான் அழைக்கிறாள் என நினைத்தேன். பாதுகாவலர் ஒருவரை அழைத்தார். அவருக்கு ஸ்லாவ் மொழி மட்டுமே தெரிந்திருந்தது. அவர் என்னவோ கூறினார். கையிலிருந்த சிறு பெட்டியைக்காட்டினார். ரிசப்னிஷ்ட் அவர் உங்கள் அறையைத் திறந்துகொடுப்பார் என்றார். அவர் எங்களுடன் வந்து அறையைத் திறந்துகொடுக்க, அன்றிரவும் மணி பதினொன்று ஆகியிருந்தது.

மே பத்தாம் தேதி வழக்கம்போல காலையிலேயே எழுந்துவிட்டபோதிலும், மற்ற நண்பர்கள் பத்துமணிக்கு முன்பாக புறப்படுவதில்லை என்று தீர்மானித்தவர்கள்போல பொறுமை காப்பதால் நிதானமாகமாகவே கீழே இறங்கினோம். டைனிங்ஹாலில் வழக்கம் போல ஐரோப்பிய உணவுகள். செக் மக்கள் காலையில் பெரும்பாலோர் சாசேஜ் சூப் உடன் ரோஹ்லிக் என்ற பிரெட், தயிர், சீஸ் இவற்றையெல்லாங்கூட பிற ஐரோப்பியர்களைப்போலவே விரும்பிச் சாப்பிடுகிறார்கள்; நானும் மனவியும் வழக்கம்போல், அவர்களுடைய ரோஹ்லிக், ஆம்லேட் ஆரஞ்சு ஜூஸில் காலை உணவை முடித்துக்கொண்டோம். முடித்து விட்டு வரும்போது பயணிகளில் ஒருவர் எங்கள் அறை சாவியைக்கொண்டுவந்து கொடுத்தார். தவறுதலாக, வந்திருந்த சக பயணி ஒருவர் அறையில் கிடைத்தது என்றார்கள். அதன் பூர்வாங்க விசாரணையில் இறங்கவில்லை. மீண்டும் அறைக்குச்சென்று கைப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு இறங்கினோம். இன்றைய திட்டம் வெல்ட்டாவா (Vltava – உச்சரிப்பு குழப்பம் இருக்கிறது, முந்தைய பக்கங்களில் வல்ட்டாவா என எழுதியிருந்தேன், தற்போது வெல்ட்டாவா என உச்சரிப்பதுதான் சரியென அறியவந்தேன்) – நதியில் படகு சவாரி, பிற்பகல் மீண்டும் பிராகு நகரத்தை வலம்வருவது. ஓட்டலை காலிசெய்துவிட்டு பேருந்தில் நாங்கள் கொண்டுவந்த பெட்டிகளை வைத்தாயிற்று. பேருந்து ஓட்டுனர்கள் படகுசவாரிக்கு வசதியாக எங்கள் பேருந்து, படகுத் துறைக்கே எங்களைக் கொண்டுபோய் சேர்த்தது

வெல்ட்டாவா படகு சவாரி

Prague 145வெல்ட்டாவா நதியில் இரவுவேளையில் படகிற் செல்ல கொடுப்பினை வேண்டும். எங்கள் பயணத்திட்டத்தில் இரண்டாம் நாள் மாலை படகு சவாரி எனச்சொல்லியிருந்தார்கள். பயணச் சீட்டை எங்கே பெறலாம் என்கிற தகவலின்மையும், மாலை ஆறுமணிக்குமேல் பயணச்சீட்டு விற்கும் முகமைகள் தொழில் புரிவதில்லை என்ற காரணத்தினாலும் அம்முயற்சியை பயண ஏற்பாட்டாளர்கள் கைவிட்டனர். ஆக 10ந்தேதி காலை படகுச்சவாரிக்குத் தயார்படுத்திக்கொண்டவர்களாய்ப் புறப்பட்டோம். மதிய உணவை படகிலேயே வைத்துக்கொள்ளலாம் என்ற சிலரின் யோசனையைப் பெரும்பானமை நிராகரித்துவிட்டது. படகுச் சவாரியை முடித்துக்கொண்டு அவரவர் விருப்பத்திற்கு எங்கேயேனும் மதிய உணவை எடுக்கலாம் எனத் தீர்மானித்து படகடிக்குச் சென்றோம். நாங்கள் ஐம்பதுபேருக்குமேல் இருந்ததால் மொத்தமாக படகொன்றை ஒரு மணிநேர சவாரிக்கு வாடகைக்கு எடுத்தோம். அதிலேயே உண்வு எடுத்துக்கொள்வதெனில் குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகலாம். மொத்தபேரும் மேற் தளத்தில் அமர்ந்துகொண்டோம். Prague 151உடலை வருத்தாத வெயில், Prague 167நதியில்விளையாடி கொடியிற் தலைசீவி நடந்துவந்த இளங்காற்றின் சிலுசிலுப்பு, வலப்பக்கம் எனது வாழ்க்கைத் துணை, சற்று தூரத்தில் கூச்சலும் கும்மாளமுமாக ஆண்கள் ஓரணி பெண்கள் ஓரணியென உத்திபிரித்து பாட்டுக்குப் பாட்டு, இடைக்கிடை கொறிப்பதற்கு நண்பர்கள் பகிர்ந்துகொண்ட பகடிகள், கேலிகள், கிண்டல்கள், சிப்ஸ், வேர்க்கடலை, வீட்டுப் பக்குவத்துடன் செய்திருந்த முறுக்கு…. மகிழ்ச்சியை அளக்க நீட்டல், நிறுத்தல், கொள்ளளவு… எதுவும் காணாது. கம்பனைத்தான் அழைக்கவேண்டும். நதிக்கரையெங்கும் பிராகு நகரத்தின் கட்டிடம் மற்றும் கலை அற்புதங்கள் – சார்லஸ் பாலம், பிராகு கோட்டை, நேஷனல் தியேட்டர்…- எழில் கொஞ்ச முறுவலிக்கின்றன. Prague 159                                            Prague 164அப்போதுதான் ஒருநொடி, ஐம்பது நொடியென ஆரம்பித்து நிமிடங்களைஉண்டு ஒரு பெயர் கண் சிமிட்டுகிறது, கண்ணாடியைச் சரி செய்துகொண்டு மீண்டும் ஒரு முறை படிக்கிறேன். வெள்ளைப் பதாகை விரித்ததுபோல பத்தடி நீளத்திற்கு ஒரு பெயர்ப்பலகை: Prague 156‘காஃப்கா மியூசியம்’ என்று எழுதியிருக்கிறது. படித்து முடித்த மாத்திரத்தில் ஒரு சோர்வு தட்டியது. அடடா! எப்படியான வாய்ப்பைத் தவறவிட்டோம்! என நினைத்துக்கொண்டேன். நண்பர்களே! பிராகுவிற்கும் காஃப்காவிற்குமுள்ள பந்தம் குறித்து எவ்வித பிரக்ஞையுமற்று பயணம் செய்திருக்கிறேன் என நான் கூறுவதை நீங்கள் நம்பத்தான் வேண்டும். படகுச்சவாரி முடிந்ததும், வந்திருக்கிற நண்பர்களில் எவராவது விரும்பினால் அழைத்துக்கொண்டு மியூசியத்தைப் பார்த்து வருவது என சட்டென்று முடிவெடுத்தேன். படகு சவாரி முடிவுக்குவந்து, நண்பர்கள் படகைவிட்டு இறங்கியதும் “இரவு 10மணிக்கு பேருந்து நிற்கும் இடம் இதுதான் இங்கேயே வந்துவிடவேண்டுமென ஏற்பாட்டாளர்கள் வார்த்தைக்குக் காத்திருந்ததுபோல சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து வந்திருந்த நண்பர்கள் சென்றார்கள். பயண ஏற்பாட்டாளர் வேறு, “தனித்தனியே எங்கும் போகவேண்டாம், நான்கைந்து பேராகச் செல்லவும். அப்போதுதான் இரவு பத்துமணிக்கு எளிதாக அனைவரும் ஒன்றுசேர முடியுமென்றார். அவர் கூறிய மறுகணம் காஃப்கா மியூசியத்தைப் பார்க்க சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்தேன். தவிர பிரான்சிலிருந்து புறப்படும்போது காஃப்கா குறித்து இம்மிகூட நினைப்பு இல்லை என்கிறபோதும், முதன்முறையாக அதொரு குறையாக அரித்தது.Prague 193

 

Prague 132படகுத் துறையிலிருந்து ஒரு சிறு குழுவாகப் பிரிந்து, நகரத்தின் இதயப்பகுதியில் 200 கடைகள் சேர்ந்தாற்போலவிருந்த ஒரு பேரங்காடி மையத்தில், ஓர் இந்தியத் தமிழர் எங்களைபார்த்ததும் தனது மனைவியிடம் ‘இலங்கைத் தமிழர்கள்’ எனக்கூறியது காதில் விழுந்தது. மணி பிற்பகல் இரண்டு. நல்ல பசி. மூன்றாவது தளத்தில், பொதுவாகப் பேரங்காடி மையங்களிற் காண்கிற எல்லாவிதமான உணவகங்களும் இருந்தன. ஒரு சீன உணவகத்தைத் தேர்வுசெய்து நானும் மனைவியும் சாப்பிட்டோம். அருகிலேயே பயண ஏற்பாட்டாளரின் சகோதரியும் கணவரும், பிள்ளைகளுமாக உணவருந்தினார்கள். பேரங்காடி மையத்திலேயே காலாற நடந்துவிட்டு ஐந்து மணி அளவில் கீழே இறங்கினோம். வொரெயால் தமிழ்ச் சங்கதலைவர் இலங்கைவேந்தன், திரு திருமதி குரோ என நாங்கள் ஐந்து பேருமாக பழைய பிராகுவில் இதுவரை காலெடுத்துவைக்காத பகுதிகளுக்குள் நுழைவதெனத் தீர்மானித்து Starmestske Namesti க்கு மேற்காக நடந்தோம், அதாவது புனித நிக்கோலாஸ் தேவாலயத்தினை நோக்கி. Prague 199இங்கும் வழியெங்கும் Prague 194நினைவுப்பொருட்கள் கடைகள், ஓவியக் கண்காட்சி சாலைகள். மனிதர்களை சித்திரவதைப் படுத்த உபயோகித்த கருவிகளையுங்கூட ஓரிடத்தில் காட்சிப்படுத்தியிருந்தார்கள், தாய் மசாஜ்க்கான இடங்களும் இருந்தன. கிரிஸ்ட்டல், விலையுயர்ந்த கற்களில் செய்த பொருட்களின் விற்பனையகங்கள் இங்கும் நிறைய இருந்தன. ஒரு திறந்தவெளியில் முடிந்தது. அங்கு முதன் முத்லாக கத்தோலிக்க மதச்பைக்குஎதிராகக் குரல்கொடுத்ததால் உயிருடன் எரிக்கபட்ட ஜான் ஹஸ் (Jan Hus)  என்பவரின் நினைவுசின்னம் இருக்கிறது. Prague 201அதை பார்த்துவிட்டு காப்பி குடிக்கலாம் என்று ஒரு விடுதிக்குச் சென்று வெளியில் போட்டுவைத்திருந்த மேசையில் அமர்ந்து ஐந்துபேரும் அவரவர்க்கு பிடித்தமான காப்பியை வரவழைத்து குடித்துவிட்டு வெரெயால் தமிழ்ச் சங்கதலைவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டுத் திரும்பினேன்.

காஃப்கா பிறந்த வீடு

Prague 212நான் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வலது பக்கம் வீதியோரம் கட்டிடத்தின் முகப்பில் காஃப்காவின் பாதி உடல் சிலையாக பொறித்திருந்தது. அந்த இடத்திற்கு Namesti Franz Kafka என்று எழுதியிருந்தது. அதிர்ச்சியில் உறைந்திருந்தேன். உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது. இலங்கைவேந்தனிடம் ஏதோ பேசவேண்டும் என நினைக்க நா குழறுகிறது. காஃப்காவைப் பற்றி சுருக்கமாகக்கூறினேன். வந்திருந்த பிறரும், குறிப்பாக எனது சந்தோஷத்திற்கு எவ்வித குறையும் நேர்ந்துவிடக்குடாது என்பதுபோல வொரெயால் தமிழ்சங்க தலைவர் என்னுடன் வந்தார். ஐவருமாக நடக்கவில்லை ஓடினோம். என் ஊகம் சரி. அந்தக்கட்டிடத்திற்கும் காஃப்காவிற்கும் சம்பந்தமிருக்கிறது. ஆனால் உணவு விடுதி. ஓட்டல் சர்வர்களை விசாரிக்கிறேன்: காப்காவின் வீடா? ஆம் என்பதுபோல தலையாட்டுகிறார். சந்தோஷத்துடன் அவர் கைகளைப் பிடித்துக்கொள்கிறேன். உள்ளே போய் பார்க்கலாமா? தாராளமாக என்று பதில் வருகிறது. உள்ளே போனால் சுவர் முழுக்க காஃப்காவின் புகைப்படங்கள். Prague 2141883 ஜூலை 3ந்தேதி காஃப்கா இந்த இடத்தில்தான் பிறந்திருக்கிறார். சரியாக சொல்லவேண்டுமெனில் மைஸ்லோவா (Maislova) வீதியும் கப்ரோவா (Kaprova) வீதியும் சந்திக்கும் இடத்தில் இருக்கிறது. துர் அதிர்ஷ்ட்டமாக 1897 ம் வருடத்தில் தீ விபத்தொன்றில் அக்கட்டிடம் முற்றிலும் எரிந்து சாம்பலாகிவிட 1906ல் இப்புதிய கட்டிடம் எழும்பி இருக்கிறது. கட்டிடத்தின் முகப்பில் உள்ள அரை உருவ காஃப்கா சிலையை வடித்தவர் செக் நாட்டின் புகழ்பெற்ற சிற்பக் கலைஞர் Hladik . இல்லத்தில் நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். Prague 197நண்பர் இலங்கைவேந்தனுக்கு நன்றி சொல்லவேண்டும். அந்த வீதியில் நடந்ததும், அவர் நினைவாக நடத்தப்படும் புத்த்கக்கடை, நூல்நிலையம் முன்பு கழித்த நொடிகளும் பிறவும் மறக்க முடியாதவை. பிராகுவும்காஃப்காவும் என்னுள் அடுத்த நாவலுக்கான உந்துதலை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள். அதனாற் சில தகவல்களில் முழுமையாக விவரிக்காமல் போனது. பொறுமையுடன் வாசித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
———————————-

 

 

 

காஃப்காவின் பிராஹா -2

மே 8 -2014 -தொடர்ச்சி:
‘Staromestiske Namasti’ ஸ்லாவ் மொழிவருமெனில் உச்சரித்து பாருங்கள். கடந்த வாரத்தில் வென்ஸ்லஸ் சதுக்கம் என்று சொல்லியிருந்தேன் இல்லையா (Wenceslas Square) அதுவும் இப்படி “namesti” என்று தான் முடிந்தது. எனவே ஸ்லாவ் மொழியில் ‘namesti’ என்றால் சதுக்கம் என வைத்துக்கொள்ளுங்கள். ஸ்லாவ் மொழி பேசுபவர்களை முதன்முதலாக பழைய ஜேம்ஸ்பாண்ட் படங்களில்தான் கண்டிருக்கிறேன். பனிப்போர் காலங்களில் ஸ்லாவ் மொழி பேசுபவர்கள் ஒன்றிரண்டு பேராவது ஜேம்ஸ்பாண்ட் படங்களில் தலைகாட்டுவார்கள். ரோஜர் மூர் படத்திலும் சரி அதற்கு முன்பாக சீன் கானரி படத்திலும் சரி அது கட்டாயம். டில்லி பாபு என்றொரு நண்பனும் நானும் சென்னை ராயபுரத்தில் பிரைட்டன் தியேட்டரில் ஒருமுறை ஜேம்ஸ் பாண்ட் படமொன்று பார்க்கச் சென்றோம் (‘Never say Never again’ அல்லது ‘you only live twice இரண்டிலொன்று ). பார்த்த ப்டத்தில் எந்தக் காட்சியும் பெரிதாய் ஞாபகத்தில் இல்லை. ஆனால் வில்லன் ரஷ்ய மொழியில் பேசியபொழுது எங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த வடசென்னை துறைமுகத் தொழிலாளி ‘இன்னாபா இவன் அப்பப்ப வாயால … விடறான்” என சாராய வாடையுடன் உரத்து கூறியது நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. இருந்தாலும் ஸ்லாவ் மொழியைக் குறை சொல்லக்கூடாது. ஸ்லாவ் மொழிகளும் (ரஷ்ய, செக் முதலான..) இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பங்களுள் அடங்குகின்றன. இந்தி, உருது,வங்காளம் போன்ற மொழிகளுக்கு அவை பங்காளி, திராவிட மொழிகளுக்கு சம்பந்தி முறை. எனவே கொசோவா, ஸ்லோவாக், செக் நாட்டின் அதிபர்களையெல்லாம் கூட மோடி அழைத்திருக்கலாம், தவறே இல்லை.

Prague 038 Prague 039 Prague 041 Prague 057

‘Staromestiske Namasti’ என்கிற பிராஹா நகரத்தின் பழைய நகரம் வென்ஸ்லஸ் சதுக்கத்திலிருந்து கிழக்கே இருக்கிறது. அதிக தூரமில்லை நிதானமாக கடைகளைப் பார்த்துக்கொண்டு நடந்தால் (அதாவது கடை உள்ளே நுழையாமல்) அதிககப் பட்சம் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள். முடிச்சு முடிச்சாக திரளுகிற சுற்றுலாபயணிகள் மீது கவனத்தை செலுத்தாது; பெண்களை குறிவைத்து திறந்துள்ள படிகம் அல்லது பளிங்கு கல் பொருள் விற்பனையகங்கள், தோல் பொருட்கள், நினைவுப் பொருட்கள் விற்கும் கடைகள்; அடுத்தடுத்து மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழியும் காப்பி பார்கள், உணவகங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தாது தாண்டுகால் வைத்து ஒன்றிரண்டு குறுகலான தெருக்களில் திருப்பி எழுதிய ‘ட’ வடிவ வரைபாதையில், கண்ணுக்குப் புலனாகாத ஒரு குழலூதி (The Pied Piper of Prague?) நம்மை கடத்திக்கொண்டு போகிறார்’ – ஒரு திறந்த வெளியில் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிடாலும் வந்தடைகிறோம். அங்கே மனிதர் சமுத்திரத்தில் கலக்கிறோம். பொதுவில் சுற்றுலா தளங்களில் காண்கிற காட்சிகள்: சுற்றுலா பயணிகள் உயர்த்திப் பிடித்த சுருக்கிய குடைகளின் கீழ் அணி திரண்டும்; சீருடைபோல ஒற்றை வண்ணத்தில் மழைக் காப்பு (K-.way) ஆடைகளிலும்; பிள்ளைகளுடன் வந்திருக்கிற தவிப்பும் பொறுப்புமிக்க கணவன் மனைவியும்; இளம் காதலர்களும்; தோழிகள், நண்பர்கள் அலது இவை இரண்டுமல்லாத விசேட கலவையாகவும் சுற்றுலாபயணிகள்; இடைக்கிடை ஆபூர்வமான உடையணிந்து இசை அல்லது நாடகத்திற்கு விளம்பரத்திற்காக துண்டு பிரசுரங்களை விநியோகிக்கிறவர்கள் ஆகியோரையும் கணக்கிற்கொண்டால் சொதி, சம்பல், மரக்கறிகள், பாயாசம் அரிசிச்சோறு அத்தனையும் ஒன்றாக பரிமாறப்படும் ஈழத்தமிழர் இல்ல உணவுத் தட்டுகளை ஒத்ததொரு படிமம், அல்லது ஒர் இம்ப்பரனிஸ ஓவியம், மனிதர் போக மிச்சமிருந்த வெளிகளில் அவர்களின் மூச்சும் மொழியும். கேமராக்களை, வீடியோ கேமாராக்களை கண்களில் அணிந்து, வந்ததற்கு சாட்சியங்கள் தயாரிப்பதில் மும்முரமாக பலர் ஈடுபட்டனர். இதில் நானும் அடக்கம். இல்லையென்றால் உங்களை நம்ப வைப்பதெப்படி? வழக்கம்போல ஆசிய நாடுகளில் தற்போதைக்கு அதிகமாக உலகப்பயணம் மேற்கொள்கிற சீனர்களை கணிசமான எண்ணிக்கையில் அங்கும் பார்க்க முடிந்தது. கூட்டம் அத்தனையும் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. கும்பலை நெருங்காமல் தள்ளி நிற்கிறோம். அண்ணாந்து பார்த்தவர்களின் உயரத்தோடு ஒப்பிடுகிறபொழுது நானும் எனது துணைவியும் குள்ளம் என்பதால் இந்த எச்சரிக்கை. நட்சத்திர தகுதியை எட்டிய வி.ஐ.பி.க்குக் காத்திருக்கும் சராசரி மனிதர்களின் அதே எதிர்பார்ப்பு நின்றிருந்தவர்களின் முகத்தில் அல்லது அவர்கள் முகத்தை மறைத்திருந்த கேமராக்களில் தெரிந்தது. ஒட்டுமொத்த காத்திருப்பும், எதிர்பார்ப்பும் ஒரு கடிகார வி.ஐ.பி.க்காக.

பிராகு வானியல் கடிகாரமும் பிறவும்

Prague 034ஐரோப்பாவின் பெரும்பாலான நகரங்களில் வானியல் கடிகாரங்கள் இருந்தபோதிலும் ஸ்ட்ராஸ்பூர்(Strasbourg) வானியல் கடிகாரமும், பிராகு வானியல் கடிகாரமும் புகழ் பெற்ற்வை. பொதுவாக இக் கடிகாரங்கள் பிறகடிகாரங்களைப்போலவே நேரத்தை தருவதோடு சில வானியல் தகவல்களையும் தருகின்றன. தற்போதெல்லாம மிக நுணுக்கமான தகவல்களைத் தருகிற கைக்கடிகாரங்கள் விலைக்க்குக் கிடக்கின்றன. இருந்த போதிலும் திண்டுக்கல் லியோனி தமது குச்சி மிட்டாய் ரசிகர்களுக்கு வினியோகிக்கும் சொற்களில் அவற்றின் பெருமையைக் குறைத்து மதிப்பிடமுடியாது, ஒவ்வொன்றையும் அவற்றிற்கான கால சூழலில் எடைபோடுவது கட்டாயம் ஆகிறது. கடிகாரம் நிறுவப்பட்ட ஆண்டு பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கம். சரியாகச் சொல்வதெனில் பதினைந்தாம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் (1410 ) பின்னர் இன்றிருக்கிற வானியல் கடிகாரத்தை 1490ல் செம்மை படுத்தியவர் Hanus என்கிற கடிகார நிபுணர். இதுபோன்ற அதிசயங்களுக்குப் பின்னால் உலாவும் கதை இதற்கும் உண்டு. கடிகார நிபுணரின் கண்களை கடிகாரத்தை செம்மை படுத்திய மறுநாள் பறித்துவிட்டார்களாம் – (Page 98 Prague et la Républiques Tchèque). கடிகாரத்துடன் இருக்கிற நான்கு பொம்மைகளும் பதினைந்தாம் நூற்றாண்டு பிராகு மக்களின் மன நிலையை எதிரொலிக்கின்றனவாம். கூடியிருந்த பயணிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதுபோல நான்கு பொம்மைகளில் ஒன்றான எலும்புக்கூடு மணல் நிரம்பிய நாழிகைக் கண்ணாடிக் குடுவையை இலேசாகத் தட்டித் திருப்பி வைக்கிறது. பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் கடிகாரத்திற்கு மேலாக இருக்கிற இரண்டு சன்னல்களைக் கடந்து வரிசையாகக் கூட்டத்தைப் பார்த்து கை அசைத்தபடி கடந்து செல்கிறார்கள். இறுதியாக சேவற்கோழியின் கொக்கரிபோடு காட்சி முடிவுக்கு வருகிறது. நாங்கள் சென்றிருந்தபோது இரவு எட்டுமணி. பழைய நகர சதுக்கத்தை அடைந்திருந்த ஓரிரு நிமிடங்களில் மேற்கண்டவை நடந்து முடிந்தன. ஏற்கனவே Strasbourgல் இருக்கிற தேவாலயத்தில் கண்ட காட்சிதான். தலையைத் திருப்பினால் இதுகுறித்த அக்கறை அல்லது பிரக்ஞையின்றி தங்கள் அன்றையை பொழுதைக்குறித்த கவலையோடு ஜாஸ் இசைக்கும் ரோமா கலைஞர்கள். மெல்ல கூட்டம் கலையத் தொடங்கியது. சட்டென்று அவ்விடத்தைவிட்டுச் செல்வது கடினமாக இருந்தது. பயணத்தின் தொடக்கத்தில் பிற ஐரோப்பிய நகரங்களோடு ஒப்பிட்டது உண்மைதான், ஆனால் பிராகுவின் பழமையை போற்றுகிற இப் பகுதி வெனீஸ், பார்சலோனா போன்ற நகரங்களைக்காட்டிலும் கூடுதலாகக் கவர்ந்தது, அக்கவர்ச்சியில் தொன்மத்தின் சாயலை இழக்காத கட்டிட முகப்புகளுக்கும் தேவாலயங்களுக்கும் பெரும்பங்குண்டு.

சார்லஸ் பாலம்:

Prague 066பிராகு நகரிர்க்குச் சென்று சார்லஸ் பாலத்தில் காலாற நடந்து போகமற் திரும்புவது, என்பது ஆக்ரா சென்கிறவர் தாஜ்மகாலைப் பார்க்காமற் திரும்புவதுபோல என வைத்துக்கொள்ளலாம். பாலத்தில் நுழைவாயிலில் ஒரு பெரிய கோபுரம். கோபுரத்தைக் கடந்ததுமே இடதுபுரம் உணவு விடுதிகள். நீரில் கால் நனைப்பதுபோல அமர்ந்துகொண்டு ஜோடி ஜோடியாக உணவருந்தும் மனிதர்கள். கரையோரங்கள் பொன்னாரங்களில் வைரம் பதித்ததுபோல மஞ்சள் ஒளியில் ஜொலிக்கின்றன. Prague 069வில்ட்டாவா நதியின் இருகரைகளையும் இழுத்துப் பிடித்திருப்பவைபோல நகரமெங்கும் பாலங்கள் இருப்பினும் சார்லஸ் பாலத்தின் அழகைப் எழுத வார்த்தைகள் போதாது, பாரதி பார்த்திருந்தால் “சிந்து நதியின்மிசை”யைத் திருத்தி பாடியிருக்கலாம். கண்கள் விரியத் திறந்து அந்த அழகைக் குடித்தேன். முதன் முதலாக மனைவி மீது எனக்குப் பொறாமை வந்த தருணம். அவளுக்குக் கொஞ்சம் பெரிய கண்கள். அவள் கண்களை சிலாகித்து நல்லதாக நான்கு வார்த்தைச் சொல்லி இருக்கலாம். வரவிருக்கும் இரவு ‘கையறு இரவாக’ கழிந்துவிடகூடாதென்று சுஜாதாவுக்குப் பழகிய பட்சி என்னிடமும் ஜாக்கிரதை என்றது.
சார்லஸ் பாலத்தில் இருள் மெல்ல மெல்ல கவித்துகொண்டிருந்தது. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு ஏற்கனவே நீரில் கரைந்திருந்தது. பாரதியின் ‘பட்டு கரு நீல புடவையும் பதித்த நல் வைரமும்’ வரிகளை நினை படுத்துகிற ஒளிரும் உல்லாசப் படகுகள், நீரின் சலசலப்பையும்; கால்களால் பாலத்தில் நீளத்தையும், சொற்களால் காற்றினையும் கலகலபாக்கிக்கொண்டிருக்கிற மனிதர்ச் சந்தடியை குலைத்துவிடக்கூடாதென்பதுபோல படகுகளின் எஞ்சின்கள் மெல்ல உறுமுகின்றன, இலைபோல சொகுசாய் நீர்ளிழுத்த இழுப்புக்கு உடன்படுவதுபோல மிதந்து போகின்றன. பாலத்தின் நெடுகிலும் தெருப்பாடகர்கள், ஜாஸ் கலைஞர்கள், கிட்டார்களின் சினுங்கல்கள், அவற்றில் மயங்கி நிரந்தரமாக பாலத்தின் கைப்பிடி நெடுகிலும் கல்லாய் சமைந்தவிட்டதுபோல பரோக் காலத்து சிற்பங்கள். இதற்கு முன்பு லண்டன் டவர் பிரிட்ஜ், சான்பிரான்ஸிஸ்கோ கோல்டன் கேட், வெனிஸ் நகரப் பாலங்கள், எனப் பார்த்திருக்கிறேன், ஏன் பிரான்சில் கூட அழகான பாலங்களைக் கண்டதுண்டு, ஆனாலும் இது அழகில் ‘ஏறக்குறைய சொர்க்கம்’ (உபயம் மீண்டும் சுஜாதா).

(தொடரும்)