Tag Archives: கலைப்படங்கள்

தமிழ் சினிமா பற்றி பிரெஞ்சு பத்திரிகையாளர்கள்

அண்மையிற் பிரபல பிரெஞ்சு சஞ்சிகை  இந்தியாவைப்பற்றிய சிறப்பு இதழொன்றை வெளியிட்டிருந்தது. அவ்விதழ் தயாரிப்புக்காக இந்தியா சென்றிருந்த பத்திரிகையாளர்களில் ஒரு பிரிவினர் கோலிவுட்டையும் எட்டிப்பார்த்துவிட்டு வந்தனர். அதை ஓளிநாடாவில் வெளியிட்டுள்ளார்கள். தமிழ் சினிமாவை கேலிசெய்திருக்கிறார்களென நினைக்கவேண்டாம், கடைசியில் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய முழுவதுமாக ஒளிநாடாவைப்பாருங்கள், அல்லது மொழிபெயர்ப்பின் கடைசி ஐந்துவரிகளை தவறாமற் படியுங்கள்.

http://www.lexpress.fr/actualite/monde/kollywood-l-autre-cinema-indien_1201939.html

“இந்தியா சினிமா என்றதும் பம்பாய் பற்றி பேசுகிறோம், உடனடியாக பாலிவுட் நமது நினைவுக்கு வருகிறது. நமது வாசகர்கள் அதிகம் அறிந்திராத இந்தியா சினிமா ஒன்றிருக்கிறது, பெயர் ‘கோலிவுட்’, அது குறித்தும் நாம் தெரிந்து கொள்வதும் அவசியமாகிறது. கோலிவுட்டைத் தெரிந்துகொள்ள இந்தியாவின் தென்கிழக்கிலுள்ள சென்னைக்குச் செல்லவேண்டும். பாலிவுட் திரைப்படத் தயாரிப்புக்குத் தேவையானச் செய்பொருட்களைக்கொண்டே இவர்களும் திரைப்படங்கள் தயாரிக்கிறார்கள். ‘மசாலா சினிமாக்கள்’ என்று பொதுவில் அழைக்கப்படுகின்றன. அதாவது ஒரு கரண்டி காதல், ஒருகரண்டி சண்டை, ஒரு கரண்டி ஆட்டம், ஒரு கரண்டி பாட்டு, ஒரு சிட்டிகை  நகைச்சுவை எனப்போட்டுத் தயாரிக்கப்படும் ஒருவகையான கோக்டெய்ல் அனுபவம். தமிழ் சினிமா என்பது தொய்வின்றி இயங்கும் ஓர் வணிக சினிமா. போலிவுட் சினிமா தயாரிப்பிலுள்ள பரபரப்பும் வேகமும் தமிழ் சினிமாக்களிலும் இருக்கின்றன.  நாங்கள் அங்கு சென்றிருந்தபோது பத்திரிகையாளர் சந்திப்புகள், திரைப்படங்களைப்பற்றிய அறிமுகம், நடிகர் நடிகைகளின் பேட்டி ஆகியவற்றை காணமுடிந்தது. அவர்களுக்குத் திரையுலகம் தேவாலயம். ஒரு சில நடிகர் நடிகைகளுக்குக் கோவிலெழுப்பி வழிபடுகிறார்கள். வேறு சில நடிக நடிகையரிடம் வெறித்தனமான அபிமானமும் இருக்கிறது.  திரைப்படம் வெகுவிரைவாக நகர்கிறது, காட்சிகள் படுவேகமாக வந்துபோகின்றன. ‘Story Board’, ‘Script’ என்றெதுவுமில்லை. நடனங்கள் மிகமிக முக்கியம். குறைந்தபட்சம் ஐந்து பாட்டுகள், ஐந்து நடனங்கள் கட்டாயம் இருந்தாகவேண்டும். இதில் ஆச்சரியத்திற்குரிய விஷயம் நடிகர் நடிகைகள் ஓரிரு நிமிட ஒத்திகைக்குப்பிறகு, தொடர்ந்து அப்பியாசம் செய்துப்பார்க்க நேரமில்லாதபோதும் மிகத் துல்லியமாக சொல்லிக்கொடுப்பதை செய்கிறார்கள். நடிகர் நடிகைகளுக்குத் தங்கள் இருப்பைக் கட்டிக்காத்துக்கொள்ளும் உந்துதலிருப்பதால் வெகு எளிதாக ரசிகர்களிடம் கலக்கிறார்கள், சூழ் நிலை எதுவாயினும் படம் எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறார்கள். அத்தகைய எளிமையான அணுகுமுறையை பிரான்சில் நாம் பார்க்கமுடியாது. தவிர சொற்ப வருமானத்தைக்கொண்ட தங்கள் ரசிகர்களுக்கு இருக்கிற சந்தோஷமும் பொழுதுபோக்கும் சினிமா மட்டுமே என்பதை நடிகர்கள் உணர்ந்திருக்கிறார்கள். திரைப்படம் வெளிவர ஒருமாதம் இருக்கிறபொழுது அப்படத்தின் இசைக்கு பொது அறிமுகம் நடைபெறுகிறது, பத்திரிகையாளர்களை அழைத்து விழா எடுத்து பாடலை வெளியிடுகிறார்கள். அதனால் ரசிகர்கள் அப்பாடலை மனனம் செய்து பாடுகிறார்கள். வானொலிகள் திரும்பத் திரும்ப ஒலிபரப்புகின்றன. அப்பாடல்களின் வெற்றியைப்பொறுத்தே படத்தின் வெற்றியும் தீர்மானிக்கப்படுகிறது. பாடல் வெளியீடு நடைபெற்ற ஒரு மாதத்திற்குப் பிறகு திரைப்படம் வருகிறது. முதற்காட்சி மிகவும் முக்கியம். நடிகைகளுக்குப் பாலாபிஷேகம் செய்கிறார்கள்; திரைப்பட விளமபரங்களில் மஞ்சள் பூசுகிறார்கள். தியேட்டருக்குள்ளே மக்கள் முண்டியடித்துக்கொண்டு நுழைகிறார்கள். தங்கள் அபிமான நடிகர் திரையில் தோன்றியவுடன் ஆரவாரம் செய்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து இவர்களும் ஆடுகிறார்கள். நாணயங்களை திரையில் வீசுகிறார்கள். அடுத்தடுத்து இருபது முப்பதுமுறை படத்தைத் திரும்பத் திரும்பத் பார்க்கும் வழக்கமிருப்பதால், திரைப்படத்தில் கவனம் செலுத்தாமல் கேலி கிண்டலில் ஆர்வமாக இருக்கிறார்கள். இதை வேறெங்கும் நாம் காணமுடியாது. அடுத்து நடிகர் நடிகைகளுக்கு இருபதாயிரத்திலிருந்து முப்பதாயிரம்வரை ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன, ஒவ்வொரு மன்றத்திலும் இருபது இருபத்தைந்து உறுப்பினர்கள் இருப்பார்கள். அவர்களுக்குத் தங்கள் அபிமான நடிகர் நடிகையரின் ஒவ்வொரு அசைவும் செயல்பாடும் முக்கியம், அதுபற்றி பேசுகின்றனர், விவாதிக்கின்றனர். சில ரசிகர் மன்றங்கள் சமூகப்பணிகளிலும் ஆர்வம் காட்டுகின்றன. ஒரு சில ரசிகர்களிடம் பேசினோம், “எங்கள் நடிகருக்காக நாங்கள் எதையும் செய்வோம்”, என அவர்கள் சொல்கிறார்கள். கடந்தகாலத்தில் அதற்கு உதாரணங்கள் இருக்கின்றன. நடிகர்கள் அரசியலுக்கு வருகிறபொழுது அவருடைய ரசிகர்கள் அவ்வளவுபேரும் அடுத்தநொடி அவரை ஆதரித்து அரசியலுக்கு வருகின்றனர். உங்கள் அபிமான நடிகர் இறந்துவிட்டால்? என்ற கேள்வியை எழுப்பிய நேரத்தில் அவர்கள் முகத்தில் கவலை படர்வதை அவதானிக்க முடிந்தது. தங்கள் நடிகர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அம்மருத்துவ மனைவாசலில் ரசிகர்கள் உட்கார்ந்துவிடுகிறார்கள். அந்நடிகரின் கவனிப்பில் ஏதேனும் பிரச்சினைகளிருப்பின் மருத்துவமனையை துவம்சம் செய்துவிடுவார்கள். அந்நடிகரை கவனித்துக்கொள்ளும் மருத்துவர்களுக்கும் ஆபத்து. பெரும்பாலான தமிழ்ப்படங்கள் ஏன் அவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதற்கு இந்த ரசிகர்களே காரணம். இத்தகைய தமிழ்த் திரைப்படங்கள் அசலான வாழ்க்கையிலிருந்து விலகியவை.

கலைப்படங்கள்:

வணிக ரீதியில் இப்படங்களுக்கு ஏற்பட்ட தோல்வி 2012ல் மாற்றுத் திரைப்படங்களுக்கு காரணமாயின. இயக்குனர்கள், படைப்பாளிகள் திறனில் நம்பிக்கைவைத்து, நட்சத்திர நடிகர் நடிகைகளின்றி குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்படும் புதிய அலை படங்கள் வரத்தொடங்கியுள்ளன.  வணிக ரீதியில் ஏற்படும் இழப்புகளை சமாளிக்கவேண்டிய நெருக்கடிளிருப்பதால் தற்போதைக்கு பிரான்சு கலைப்படங்களோடு இவற்றை ஒப்பிடமுடியாதென்கிறபோதும் இந்தியாவின் மாற்று வகைப்படங்களின் சோதனைக்களமாக கோலிவுட் இன்று மாறியுள்ளதெனச்சொல்லவேண்டும். புதியதொரு உத்வேகத்தை கோலிவுட் திரைப்படங்களிற் பார்க்க முடிகிறது. தமிழ்ப்பட தொழில் நுட்ப வல்லுனர்களையும் கலைஞர்களையும் போலிவுட் திரையுலகினர் இன்று தேடிவருகிறார்கள்.

—————————————–