Tag Archives: கலகம் செய்யும் இடதுகை

கலகம் செய்யும் இடதுகை

1நண்பர் வெங்கட சுப்புராய நாயக்கர் மொழிபெயர்ப்பில் நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ள சிறுகதை தொகுப்பு- பிரெஞ்சிலிருந்து மொழி பெயர்க்கபட்டவை -. இத்தொகுப்பில் எட்டு கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒருவிதம்.

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நாயகரை அறிவேன். மொழிபெயர்ப்பாள நண்பரிடம் அதிசயிக்கும் விடயம், எந்தத் தகவலையும் நகைச்சுவையுடன் சொல்லும் ஆற்றல். ஏதோ சட்டை பையிலிருந்து எடுப்பதுபோல உரையாடலின் போது  வேடிக்கையாக வாரத்தைகள் வந்துவிழும். சொல்லிக்கொண்டிருப்பதை துண்டித்துவிட்டு, அவரது சாதுர்யமான வார்த்தை விளையாட்டினை இரசித்து, சிரிக்கவேண்டிவரும். அவரது இந்த இயல்பான குணம், நாள்தோறும் கி.ராவை சந்திப்பதை அவர் வழக்கமாக்கிக் கொண்டிருப்பதால்  கூடுதலாக மெருகேறி இருக்கிறதென்பது என் அனுமானம். இந் நகைச்சுவை உணர்வு, மொழிபெயர்ப்பிற்கு  தேர்வு செய்த கதைகளிலும் எதிரொலிக்கிறது, .

ஒவ்வொரு சிறுகதைக்கும் முன்பாக அக்கதை ஆசிரியர் பற்றிய சிறு குறிப்புகள் தொகுப்பில் இருக்கின்றன. சுருக்கமான இந்த அறிமுகம் அக்கதை குறித்த பொதுபார்வையை வாசகனுக்கு அளித்து, வாசிப்பிற்கு அவனை தயார்படுத்துகிறது. அடுத்து குறிப்பிடவேண்டியது சிறுகதைகளுக்கான பெயர்கள். ஜோடி பொருத்தம் என்ற சிறுகதை பியர் கிரிப்பாரி என்பவர் எழுதியிருக்கிறார். மூலக்கதையில் ஆசிரியர் என்ன பெயர்வைத்திருந்தாலும், மொழி பெயர்ப்பாளர் சூட்டிய பெயர் மிகக் கச்சிதமாகப் பொருந்துகிறது, அவ்வாறே ‘கலகம் செய்யும் இடதுகை’ என மற்றொரு சிறுகதையின் பெயர். இச்சிறுகதையின் தலைப்பே நூலுக்குரிய பெயராகவும் அமைந்துள்ளது. மொழிபெயர்ப்பாளர் ஒவ்வொரு சிறுகதைக்கும் தமிழ்சூழலுக்குப் பொருந்துகிற, தமிழ் வாசகனை அந்நியப்படுத்தாதப் பெயர்களை கொடுத்திருக்கிறார்: சொர்க்கத்தின் கதை, அந்த பச்சை டைரி, திருடா என்ன வாழ்க்கையடா உன் வாழ்க்கை ஆகியவற்றை உதாரணமாகக் கூறலாம்.. ஒரு படைப்பிற்குப் பெயர் சூட்டுவதில் உள்ள சிக்கல், மொழிபெயர்ப்பிலும் உள்ளன. மூலநூலின் பெயர், மொழிப்பெயர்ப்பு செய்யவிருக்கிற மொழியுடனும், மண்ணுடனும் மக்களுடனும் இணங்கிப்போக சாத்தியமில்லையெனில் பொருத்தமான வேறு பெயரை தேர்வு செய்யவேண்டும். நாயகர் அதை மிகச்சிறப்பாகவே செய்திருக்கிறார்.  பெயரை படிக்கிறபோதே அக்கதையையும் படித்தாக வேண்டுமென்கிற ஆவலை, நூல் நம்மிடத்தில் ஏற்படுத்தித் தருகிறது, நூலுக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் கிடைக்கும் முதல் வெற்றி இது.

பன்முகத் தன்மைகள் கொண்ட கதைகள்:

இத்தொகுப்பிலுள்ள எட்டுகதைகளும்: மனித வாழ்க்கையின் ‘இருப்பு’ மற்றூம் அசைவியக்கத்தைக் குறியீடுகளாக அடையாளப்படுத்துகின்றன:  மொழி, உத்தி, நடை, காலமென்ற கூறுகளால் ஊட்டம் பெற்ற அவற்றுள் தன்னை எழுதுதலும் உண்டு, தன்மையிற் சொல்லப்பட்டதுமுண்டு; உருவகக் கதைகளும் இருக்கின்றன. ஜோடிப்பொருத்தம் என்ற பெயரைக்கேட்டதும், ஆண் பெண் சம்பந்தப்பட்ட சிறுகதையென நினைப்போம், ஆனால் அச்சிறுகதை ஒரு ஜோடி செருப்புகளின் கதை. முழுக்கதையையும் இங்கே சொல்வது அறமாகாது. மற்றொரு உருவகக்கதை, கலகம் செய்யும் இடதுகை.

எனக்கு இத்தொகுப்பிலுள்ள கதைகளில் ‘அந்த பச்சை டைரி’, ‘அவளுடைய கடைசிக் காதலன்’, ‘அடையாளம்’,  ‘நெஞ்சத்தைத் துளைத்தவள்’ ஆகியவை நான் விரும்பி வாசித்த கதைகள், மனித மனதின் பல்வேறு வடிவங்களை, சூழலின் எடுப்பார் கைப்பிள்ளையாக அவை செயல்படும் விந்தையை கதைப்போக்கில் சந்திக்கிறோம்.

“வெங்கட சுப்புராய நாயகரின்’ மொழி எளிமையானது. அதோடு இயல்பானது. சாதாரண வாசகரும் அவரை வாசிக்கக்கூடும் என்பது இந்தப் புத்தகத்தின் பலம். புலமையை விரிப்பதல்ல இலக்கிய தளம். மனங்களை இணைப்பதே மொழியாக்கத்தின் முக்கிய பணி. சுப்புராய நாயக்கர் அதைச் செய்திருக்கிறார்.” (முன்னுரை -பிரபஞ்சன்)

மேற்கண்டவரிகளை இந்நூலுக்கு அளித்துள்ள முன்னுரையில் இறுதியாக பிரபஞ்சன் எழுதியிருக்கிறார். இந்நூலின் மொழியாக்கப் பெருமையை விவரிக்க இவ்வரிகளே போதுமானவை. நண்பர் பஞ்சாங்கமும் ‘தீராநதி’ இதழில் இதற்கு மதிப்புரை எழுதி இருப்பதாக அறிகிறேன். மொழிபெயர்ப்பிற்கென இலக்கண வரைவுகள் இருக்கின்றனவா? எதை மொழி பெயர்க்கலாம், எப்படி மொழி பெயர்க்கலாம்?  என்ற பெயரில் அவரவர்க்கு கருத்துகள் இருக்கின்றன. இப்போதைக்கு எனக்குத் தெரிந்த எளிமையான வழி, புதிதாக மொழி பெயர்ப்பு துறைக்கு வருபவர்கள் நாயக்கரின், ‘கலகம் செய்யும் இடது கை நூலை’ கட்டாயம் வாசிக்க வேண்டும். இவற்றிலுள்ள சில கதைகள், தமிழில் புதிய முயற்சிகளில் இறங்க நினைக்கும் படைப்பாளிகளுக்கும் உதவும்.

………………………………………………….

கலகம் செய்யும் இடதுகை

பிரெஞ்சு மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
ஆசிரியர் வெங்கட சுப்புராய நாயகர்

வெளியீடு:
நற்றிணை பதிப்பகம்
பழைய எண்:123A, புதிய எண்:243 A
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி,
சென்னை-600005
இந்தியா
———————————————————-