Tag Archives: கதைப்பொருள்

எழுத்தாளனின் முகவரி-10 – உங்களுக்காக எழுதுங்கள்

எல்லோருக்கும் பிடித்தது?

மேற்கத்திய உலகில் புத்தக கடைகளுக்குச் சென்றால் புதிய நூல்களைப் பார்வைக்கு வைப்பதுபோலவே ‘Best seller’ நூல்களையும் வரிசைபடுத்தி பார்வைக்கு வைப்பார்கள். இப் ‘பெஸ்ட் செல்லர்’களில் இரண்டுமுண்டு: வேர்க்க விறுவிறுக்க அல்ல மூச்சிறைக்க ஓடிவந்து  மெட்ரோ அல்லது பேருந்து பிடித்து, எதிரில் அல்லது பக்கத்து இருக்கைக்காரர்களின் சாடையான பார்வைகள் மொய்த்தொதுங்க, காப்பி போட்டோமே கேஸை நிறுத்தினோமா என்ற பிரதான கவலைக்கிடையில் நுணிப்புல் மேயப்படும் நாவல்கள் ஒரு ரகம்; முதுகின் பின்புறம்  நிற்கும் மனைவியிடம், கொஞ்சம் படிக்கணும் என்னை தொந்தரவு செய்யாதே எனக் கூறிவிட்டு இரவு எட்டுமணிக்குமேல் தீவிரமாகப் பக்கங்களைப் புரட்டவைக்கும் நாவல்கள் மற்றொரு ரகம். முதற் பிரிவை ‘வெகுசன ரசனை’க்குரியவை என்கிறார்கள். இரண்டாம் வகைமைக்கு படைப்பிலக்கியங்களென்று பெயர்.

பிரான்சில் இன்றைய தேதியில் சூப்பர் ஸ்டார் ‘மார்க் லெவி’ (Marc Levy) பெருவாரியான மக்களின் திணவுகளைப் புரிந்துகொண்டு எழுதுகிறவர். கணிப்பொறியாளர். சொந்த முதலீட்டில் தொடங்கிய நிறுவனம் கைகொடுக்கவில்லை, எழுத்தாளராக மாறினார். 2000 மாவது ஆண்டில் முதல் நாவல் வெளிவந்தது. நாவலின் பெயர். Et si c’était vrai (If Only It Were True). நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில், 32 நாடுகளில், இதுவரை ஐந்து மில்லியன் புத்தகங்களென்கிறது அதன் வெற்றி. அவர் படைப்புகள் வெகுசன இரசனைக்குரியவை.

படைப்பிலக்கியங்கள் எனப்படுகிற இரண்டாவது வகைமைக்கு மரி தியாய்( Marie NDiaye) பெண் எழுத்தாளரை உதாரணத்திற்குச் சொல்லலாம். பிரெஞ்சு படைப்பிலக்கிய  ஆளுமைகளுள் முக்கியமானவர். இவரைப்பற்றி ‘மொழிவது சுகம்’  கட்டுரையொன்றில் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். மரி தியாய் நாவல்களுள் Trois Femmes puissantes (Three Strong Women) குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒன்று. 2009ல் வெளிவந்தபோது படைப்பிலக்கியங்களில் ‘பெஸ்ட்- செல்லர்’ எனப்பெயரெடுத்தது. திருகலான நடைக்குச் சொந்தக்காரர். வாசிப்பவர்கள் திக்குதெரியாதக்காட்டில் அலைவதும், புதைமணலில் சிக்குவதுமான அனுபவத்தை பெற நேரிடுமெனச் சொல்லப்படுவதுண்டு. அவரது நாவலொன்றில் ஒருவரி 100 பக்கங்களில் சொல்லப்பட்டிருக்கிறதென அண்மையில் வெளிவந்திருக்கும் ‘Ladivine’ நாவலுக்கு எழுதப்பட்ட விமரிசினத்தைப் படித்துப் தெரிந்துகொண்டேன். ‘Ladivine’ இன்றைக்கு பெஸ்ட்- செல்லர்.

தமிழுக்கு வருவோம். இங்கே பெஸ்ட்-செல்லர் என்ற சொல் வழக்கிலிருக்கிறதா? மேற்கத்திய நாடுகளைப்போல நீண்டவரிசையில் காத்திருந்து எழுத்தாளரிடம் கையொப்பம் பெற்று புத்தகங்களை வாங்கிச்செல்லும் காட்சிக்கு சாத்தியமுண்டா? பெரும்பாலான பதிப்பகங்கள் ‘அரசு நூலகத்தேவைக்கு’ வாங்குவார்களா? அதற்கான அரசாணை கிடைக்குமா? என தவமிருக்கிற அவல நிலை.  ‘பெஸ்ட்-செல்லர்’ என்பதெல்லாம்  நமக்கு அதிகம் என்பதைப் புரிந்து கொண்டு ஒரு வசதிக்காக இக்கேள்வியை மாற்றி எழுப்புகிறேன்.

” எல்லோரும் விரும்பும் வகையில் எழுதுவதெப்படி? “

என்னைக்கேட்டீர்களெனில் தெரியாதென்பேன்.  சிட்னி ஷெல்ட்டனை, ‘பெஸ்ட் நாவலைக்கொடுக்க என்ன செய்யணும்? எனக் கேட்டபொழுது அவர் கூறிய பதிலும், ‘ எனக்குத் தெரியாது’, என்பதுதான்.  ‘ஒரு கப் காபிகொண்டு வா, எல்லோரும் விரும்பற மாதரி நாவலொன்று எழுதணும்’, என்றெல்லாம்  மனைவியிடம் இதுநாள்வரை சொன்னதில்லை. ஒரு பொருளை உற்பத்தி செய்கிறவன், எல்லோருக்கும் இப் பொருளைக் கொண்டு போக நினைக்கிறேன்’ எனச் சொல்கிறபோது, ‘மலிவு’ என்ற சொல் மூக்கிய சூத்திரமாக ஏற்றுக்கொள்ளபட்டு பொருளின் தரத்தில் சமரசம் செய்துகொள்கிறான். கவனிக்கப்படவேண்டுமென்பது வேறு, வீதியில் போகிறவர்கள் அவ்வளவுபேருக்கும் காட்சிப்பொருளாக இருக்கப்போகிறேன் என்பது வேறு. தமிழில் எழுதப் படிக்க்கத் தெரிந்திருக்கிற எல்லோரையும் சென்றைடைய வேண்டுமெனில் அரிச்சுவடிதான் எழுதவேண்டும், நாவல் எழுதமுடியாது. உண்மையில் எல்லோரையும் திருப்தி செய்ய எழுதுகிறேன் என்பதற்குப் பொருள் ஒருவரையும் திருப்திசெய்யப்போவதில்லை என்பதுவே. பொதுவாக ஒரு நல்ல எழுத்தாளன் பிறருக்காக எழுதுவதில்லை, தன்னைச் சந்தோஷப்படுத்திக்கொள்ள எழுதுகிறான்.

ஏதோ ஒரு கதைப்பொருள் திடீரென்று துளிர்த்து அதன் பசுமையை மூளையெங்கும் தூவுகிறது. உறங்குவதற்கு முன்பும், விழிப்பின்போதும், டாய்லெட்டிலும், எங்கோ எதற்கோ யாருக்காவோ காத்திருக்கிறபோதும் – ஆக மொத்தத்தில் அவன் ஒற்றையாக இருக்கிறபோதெல்லாம் அக்கதைப்பொருள் கொசுபோல மொய்க்கிறது. நாய் ஈபோல விடாமற் துரத்துகிறது. குழந்தைப் பிச்சைக்காரர்களைப்போல எளிதிற் விலக்க முடியாததொரு விலங்கு.  அடுத்துக் கதைப்பொருளுக்கான பாத்திரங்கள் வேண்டும்: அவர்கள் குடும்பத்தைச்சேர்ந்தவர்களாக இருக்கலாம்;  வீட்டைப்பூட்டிக்கொண்டிருக்கிறபோது வந்து இறங்குகிற விருந்தாளிகளாக இருக்கலாம்; எட்டாம் வகுப்பு தோழியாக இருக்கலாம், மழையில் நனைகிற கழுதையாக இருக்கலாம்; வீட்டில், வீதியில், சக பயணத்தின்போது, மழைக்காக குடைவிரிக்கிறபோது, “எதிரில் ஆள்வருவது கண்ணுக்குத் தெரியலை” எனத் திட்டிவிட்டுப் போகிறவர்களாக இருக்கலாம். கதைப்பொருளும், கதைமாந்தர்களும் தயார் என்றானதும் எழுதுகிறான். எழுதும் உத்தி அவனது சுயமுயற்சி. பரந்த வாசிப்பு அனுபவம், வடம்பிடித்து அவனை இழுத்துச்செல்கிறது. எப்படிச் சொல்லலாமென்பதில் மட்டும் தெளிவும் அக்கறையுமிருந்தால், மூன்றாம் சாமத்தில் கூட கண்விழித்து விதியுலாவைக் காண்கிற வாசகனைப் பெறமுடியும்.

பிறர் அறிவுரைகள் வேண்டாம்- தேர்வு செய்து வாசியுங்கள் -பிடித்ததை எழுதுங்கள்

எப்படி எங்கே எதைத் தொடங்குவது? சான்கிளேர் லூயி (Sinclair Lewis) என்கிற நோபெல் பரிசுபெற்ற அமெரிக்க எழுத்தாளருக்கு நேர்ந்த சம்பவம். அவருடைய  Main street நாவலுக்கு புலிட்ஸர் பரிசு கிடைத்ததும், எழுதுவதுகுறித்த பயிற்சி வகுப்புகள் நடத்தவேண்டுமென்று பல பல்கலைகழகங்கள் கேட்டிருக்கின்றன. ஒவ்வொருமுறையும் தட்டிக் கழித்து வந்திருக்கிறார். ஒருநாள்  தவிர்க்க முடியவில்லை. ஐவி லீக் காலேஜ்க்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டார் (அல்லது இச்சிக்கலுக்கு முடிவுகட்டவேண்டுமென அவர் தீர்மானித்திருக்கவேண்டும்) அந்த நாளும் வந்தது, அதற்கான நேரமும் வந்தது.  நிர்வாகத்தின் வற்புறுத்தலுக்கு தப்ப முடியாத மாணவர்களும் ஆசிரியர்களும் வந்திருக்க கல்லூரி ஆடிட்டோரியத்தின் அரங்கு நிரம்பியிருந்தது. எதிர்காலத்தில் சான்க்கிளேர் லூயி போல எழுதிப் பேர்வாங்கவேண்டுமென்ற எண்ணத்துடன் வந்திருந்த மாணவர்களும் கூட்டத்திலிருந்தனர்,  சான்க்ளேர் வழிமுறையைக் கேட்கும் ஆவலில் காத்திருக்கின்றனர். அவரை நிர்வாகத்தினர் வரவேற்று அரங்கத்திற்கு அழைத்து வந்தனர். மேடைக்கு வந்தவர் அதனை அளப்பதுபோல குறுக்கும் நெடுக்குமாக தாண்டுகால் வைத்தார். இரண்டொரு நிமிடங்கள் கேட்டறிய வந்த கூட்டத்தை அமைதியாகப் பார்த்தார்: இங்கே எதற்காக காத்திருக்க வேண்டுமென்பதுபோல,  “வீட்டில் உட்கார்ந்து ஏன் நீங்கள் எழுதக்கூடாது?” என்று கேட்டுவிட்டு மேடையிலிருந்து இறங்கிவிட்டாராம். அவர் சொல்லவந்தது, “பிறர் அறிவுரைகளுக்காகக் காத்திருக்காதீர்கள்.”

எழுத்து சுதந்திரம்?

தமிழ் படைப்பிலக்கிய சூழலில் ‘பெஸ்ட்- செல்லர்’களுக்கு வாய்ப்பில்லாத நிலையில்,  உயிர் வாழ்க்கையின் நிர்ப்பந்தங்களுக்காக கூடுபாயவேண்டியிருக்கிறது. தொலைகாட்சிக்கோ, திரைப்படத்திற்கோ எழுதுகிறபொழுது அறிவுசார் கொத்தடிமைகளென்கிற ஒப்பந்தத்தில் படைப்பாளர்கள் கையொப்பமிடுகிறார்கள். அங்கே அவர் எழுதுவதில்லை, அவரோடு சேர்ந்து ஆயிரம் பேர் பேப்பரும் கையுமாக அலைகிறார்கள். “சார், நடிகர் பொண்டாட்டி ஒரு மாதரியான பொம்பளை, என்னை தப்பா நினைப்பாங்க. கதையை மாத்த முடியலைன்னாலும்
பரவாயில்லை, வசனத்தையாவது மாற்றுங்கண்ணு, ” இயக்குனர் மூலமாக நடிகை சிபாரிசு செய்யலாம். வியாபாரமாகிற நடிகரெனில், முழுக்கதையையும் வசனத்தையும் அவரது ஒளிவட்டமே தீர்மானம் செய்யும். இயக்குனர்,  தம் பங்கிற்கு “பிரிவியூவில்  பத்திரிகையாளர்கள் நம்ம படத்தின் முடிவு சரியில்லைண்ணு அபிப்ராயப்படுகிறார்கள். அதனாலே ஆவிக்கு கதைநாயகன் தாலிகட்டுவதுபோல திரும்ப ஒருகாட்சியை ஷ¥ட் பண்ணி சேர்த்துக்கலாம். ஒரு வடகொரியா படத்துலே அப்படியொரு காட்சி வருது,” என்பார். வடகொரியா படத்துலே தாலியெல்லாம் கட்டுறாங்களாண்ணு? எழுத்தாளர் அவரைக் கேட்கமுடியாது. கேட்டால் மாலை அவர் ஆட்டோவிலே வீட்டுக்குத் திரும்பவேண்டியிருக்கும், கார் அனுப்பமாட்டாங்க. கேமராமேன் தம்பங்கிற்கு கோணம்பார்த்தே, உரையாடல்களை கத்தரித்திருப்பார். எழுத்தாளர் அங்கே படைப்பாளியல்ல. பணியாளர். எஜமானர்கள் கட்டளையை நிறைவேற்ற கடமைப்பட்டவர். சுதந்திரமாக எழுதமுடியாதது படைப்பாகாது.

எவ்வித நிர்ப்பந்தத்திற்கும் ஆளாகாமல் எதைப் பற்றி எழுதப்போகிறோம் என்பதில் தெளிவு வேண்டும். நாவலுக்குண்டான பிரதான கரு உங்களிடம்தான் உருவாகிறது. நாவல் எழுதத்தொடங்குகிறபோதும் எழுதுகிறபோதும் நான் வாசிப்பதில்லை. அதுகூட எனது எழுத்தை நிர்ப்பந்திக்குமென நம்புகிறேன். எப்படி கொண்டுபோகவேண்டும் என்றும் ஆரம்பத்தில் தீர்மானிப்பதில்லை. பிரதான பாத்திரங்கள், ஒன்றிரண்டு துணைபாத்திரங்களென்று என்னோடு உரையாட ஆரம்பித்துவிடுவார்கள். நமது திரைப்படங்களில் முதற் பிரவேசம் அநேகமாக கதைநாயகனுக்குச்சொந்தமாக இருக்கும், அதை நான் விரும்புவதில்லை. நான் கிராமத்திலிருந்து வந்தவன். தெருக்கூத்துகளில் முக்கியபாத்திரங்களின் அறிமுகம் நடு நிசியில்தான் அரங்கேறும். அதைத்தான் நானும் எனது நாவல்களில் உத்தியாகக் கையாளுகிறேன். துணைப்பாத்திரங்களைக்கொண்டு நாவலைத் தொடங்கிவிடுவேன், முதல் ஐந்து அத்தியாயங்கள் வரை எப்படி முடிக்கப்போகிறோமென்றே தெரியாது. பிறகுதான் ஒன்றன் பின் ஒன்றாக பூக்கள் இதழ்பிரிப்பதுபோல அத்தியாயங்கள் விரிந்து என்னை பரவசமூட்ட, அப் பரவசத்தில் திளைத்தபடி எழுதிக்கொண்டிருப்பேன். இப்படியொரு பத்து அத்தியாங்களை எட்டியதும், பதினொன்றாவது அத்தியாயத்திலிருந்து ஒவ்வொரு அத்தியாயத்திலும் என்ன எழுதப்போகிறேன் என்பதை எண்களிட்டு அத்தியாயச் சுருக்கங்களை எழுதிக்கொள்வேன். அப்படிச்சுருக்கங்களை எழுதுகிறபோது, முதல் பத்து அத்தியாயங்களை திரும்பவும் எழுதவேண்டியிருக்கும். திட்டமிடுதலும் முக்கியம், நாவலை முடிக்கும் வரை அதனோடும், நாவலில் வரும் பாத்திரங்களோடும் வாழப் பழகிகொள்ளுங்கள்.  பெஸ்ட்-செல்லரை எட்டமுடிகிறதோ இல்லையோ, மனமார ஒரு சிலர் பாராட்டுகிறபோது அதன் இனிமையை நெஞ்சில் ருசிப்பீர்கள்.

————————————————