Tag Archives: கண்ணன்

மொழிவது சுகம் நவம்பர் 1 2019

 

 

அ. கேள்வியும் பதிலும்

அக்டோபர் மாதம் தமிழ் படைப்புலக நண்பர்கள் வருகையால் இல்லம் நிறைந்திருந்தது. ஒருவர் நாஞ்சில் நாடன், மற்றவர் பதிப்பாள நண்பர் கண்ணன். இரண்டாவது வாரத்தின் தொடக்கத்தில் வந்திருந்த நண்பர் நான்சில்நாடனை பாரீஸில் வழி அனுப்பிவிட்டு, இறுதியில் இரண்டு நாட்கள் காலச்சுவடு நண்பர் கண்ணனையும்  அவர் துணைவியாரையும் வரவேற்க ஸ்ட்ராஸ்பூர் திரும்பவேண்டியிருந்த து. பின்னர் அவர்களை வழி அனுப்பிவிட்டு விடுமுறையில் இருந்த பேரப்பிள்ளைகளுடமன் திரும்பவும் பத்து நாட்கள். 4 ந்தேதி ஸ்ட்ராஸ்பூ திரும்பினேன்.  இதற்கிடையில் விபத்து. பிரச்சினை வாகனத்திற்கென்றாலும், கடைபிடித்தாகவேண்டிய சில சடங்குகள் இருக்கின்றன.

இந்திய இலக்கிய நண்பர்களுடன்  உரையாட விடயங்கள் இருந்தன. அகத்தியரின் கமண்டலக் கங்கை நதி வற்றினாலும் நாஞ்சிலார் மனக்குடத்தில்அடைத்துவைத்திருந்த சொல் நதி   வற்றாதது என்பதைப் புரிந்துகொள்ள அனேகச் சந்தர்ப்பங்கள். போதாதென்று கம்பநாட்டானின் கவித்தேனை அள்ளி அளித் தருவார்.  இனிமையான தருணங்கள் அவை. அதுபோலவே சு.ராவின் எழுத்துக்களில் எனக்கு மோகம் உண்டு. பதிப்பாளர் கண்ணனை, சுராவாகவே பார்க்கிறேன். படைபாளிகள் பதிப்பாளர்கள் அரிதாக புத்தகவாசிப்புக்கு நேரத்தை ஒதுக்கும் மனிதர்கள் என அனைவரையும்  உள்ளடக்கிய எழுத்தாளர் உலகம், பிற மனிதர்களையும் பார்க்க பார்க்க மேன்மக்களைக் கொண்ட உலகம்.

அக்டோபர் பத்தொன்பது அன்று பாரீஸில் நண்பர் அலன் ஆனந்தன் சிறிய இலக்கிய நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தார். சிறப்பு விருந்தினர் நாஞ்சில் நாடன்.  சொற்கள் குறித்து, அவற்றின் முக்கியத்துவம் குறித்து நல்லதொரு கருத்துரையை வழங்கினார். கலந்துரையாடலில் இருகேள்விகள் எனக்கு முக்கியமாகப் பட்டன. ஒன்று  அன்றாட வழக்கில் தமிழர்கள் மிக க் குறைவான சொற்களையே தமிழர்கள் கையாளுகிறார்கள் என்பதைக் கவலையுடன் நாஞ்சிலாருடன் தெரிவித்தபோது, தங்கள் உபயோகத்திற்கு அதுபோதும் என்று நினைக்கிறார்கள், அதை அப்படித்தான் பார்க்கவேண்டும் என்றார் ஒரு நண்பர். நாஞ்சிலார் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பிரத்தியேகமாக கையாளப்படுகிற சொற்கள் பல,  பழந்தமிழுக்குச்சொந்தம், இன்று வழக்கில் அவற்றினை உபயோகிக்கத் தவறுவதால் தமிழுக்குப் பெரும் தீங்கிழைக்கிறோம் என்ற பொருளில் பதில் அளித்தார். எனக்குச் சொற்கள் உபயோகம் விதவிதமாக உண்டு பசி ஆறுவதுபோல. கம்பன் விருந்து படைக்க நாஞ்சில்போன்ற மனிதர்கள் பரிமாறுகிறபோது, வெறும் சோறுபோதும் பசியாறிவிடுவேன் என்பது பேதைகுணம்.   மற்றொரு நண்பர் தமிழ்ச் சொற்களில் வடமொழியைக் கலப்பது தவறென்கிற தொனியில்   « கிருஷ்ணா » என்று எழுதுவது சரியா ? எனக்கேட்டார். கேள்வியை எழுப்பியவர் இயல்பாகவே அக்கேள்வியை வைத்தார். எங்களைச் சங்கடத்தில் ஆழ்த்தும் நோக்கம் கிஞ்சித்தும் இல்லை.  எனினும் பாரீஸில் இக்கேள்வியின் பின்புல அனுபவம் எனக்குப் புதிதல்ல. இதுபோன்ற கேள்விகளுக்கும் அல்வா, ஆப்பிள் போன்ற சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களைத் தேடும் நண்பர்களுக்கும் எனது அனுபவ அறிவின் பாற்பட்டு ஒரு பதிலைச் சொல்லவேண்டி இருக்கிறது. அன்றாட உணவு, உடுத்தும் உடை,  சமயம் சடங்கு இவற்றில் தமிழ் மரபை மீறி இருக்கிறோம்.  ‘கிருஷ்ணா’ போன்ற பெயர்களை தமிழில் எழுத மறுப்பதால்  தமிழ் வளர்ச்சி தடைபடுகிறது என்பதை நான் நம்பத் தயாரில்லை. கள்ளை ஒதுக்கி விஸ்கி எடுக்கலாம், வேட்டியைத் தவிர்த்து பேண்ட்டைப் போடலாம், கறிச்சோறு பிரியாணி ஆகலாம். யாப்பிலக்கணத்தை உடைத்து புதுக்கவிதை எழுதலாம், யார்பெயரிலோ வடமொழிகலப்பது தமிழைப் பாழ்படுத்திவிடும் ? என்கிற திறனாய்வைச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.   எதிர் வீட்டுகாரன் நிலைப்படியை எப்படிவைத்திருந்தாலென்ன. அதுபற்றிய அக்கறை அவனைஅறிந்தவர்க்கும், அவன் தேடும் விருந்தினர்க்கானது.  தொல்காப்பியத்தையும் நவீன இலக்கியத்தையும் நன்கறிந்த பேராசிரியர்களுக்கு எனது பெயர் விமர்சனத்திற்குரியதல்ல.  முப்பது ஆண்டுகால பிரான்சு வாழ்க்கையில் எனக்கு உயிர் தந்த மொழிக்கும்,  நலம் சேர்த்த மொழிக்கும் அணில்போல ஏதோ செய்திருக்கிறேன். பிரெஞ்சு மொழி சிந்தனையாளர் René Descartes «  je pense donc je suis » (நான் சிந்திக்கிறேன் எனவே உயிர் வாழ்கிறேன்) என்பார்.   நண்பர்களிடத்தில் (அண்மையில் நாஞ்சில் நாடனிடமும்) அப்புகழ்பெற்றவரியை ‘நான் எழுதுகிறேன் அதனால் உயிர் வாழ்கிறேன்’ எனச் சொல்வதுண்டு. தாய்மொழியும் வாழ்க்கை மொழியும் என்ற இக்கட்டுரை ஆப்பிளுக்கும், அல்வாவுக்கும் தமிழ்ச்சொற்களைத் தேடி வியர்வைசிந்தும்  மேற்படி பேராசிரிய வகையறாக்களுக்காகச் சமர்ப்பிக்கப்படுகிறது.

ஆ. தாய்மொழியும் வாழ்க்கை மொழியும்

அமெரிக்க அதிபரோ, சீன அதிபரோ இந்தியாவிற்கு  வருகை புரிந்தால், மகாபலிபுரத்தை உத்தியோக பூர்வ சந்திப்பு தளமாக அமைத்துக்கொண்டால்கூட இந்திய உடைக்கு முன்னுரிமை தருவதில்லை. மாறாக  இந்தியத் தலைவர்கள்  இத்தலைவர்களின் எல்லைக்குள் இந்திய பாரம்பர்ய உடையில் கால்பதிப்பதில்லை. காமராஜரும் காந்தியும், இந்தியப் பெண் பிரமுகர்களும் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. மேற்கத்திய தலைவர்களோ பிறரோ உங்கள் தலைவர்கள் « கோட்டு சூட்டின்றி வரவில்லையெனில் கைகுலுக்கமாட்டோம் ஒப்பந்தங்களில் கையொப்பமிடமாட்டோம் » என்று உடைகுறித்த நெறியை இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் வற்புறுத்துவதாக செய்திகள் இல்லை. இருந்தும் இந்திய எல்லைக்குள் வேட்டி சட்டை அணிபவர்கள்,  அதன் எல்லைக்கு அப்பால் கால் பதிக்கிறபோது, வேறு உடையில் காணவைப்பது எது ? என்ற கேள்வியின்  அடிப்படையிலேதான் தாய்மொழியையும் வாழ்க்கைமொழியையும் புரிந்துகொள்ளவேண்டும்.

 

தாய்மொழி : உயிர்மொழி, கருவில் காதில் வாங்கிய மொழி, தாலாட்டு மொழி, வீட்டில் தம்பி தங்கைகளுடன் சண்டையிட்ட மொழி, கண்டிப்புச் சூட்டில் கரிசனத்தை விளாவும் மொழி, உறவுகளுடனும்   நெருங்கிய   நண்பர்களுடனும் இயல்பாக உரையாட உதவும் மொழி. சிந்தனை மொழி.

வாழ்க்கை மொழி : உடல்மொழி, வீட்டைவிட்டு வெளியில் வந்தால் கையாளும் மொழி. கடையில், பேருந்தில், அலுவலகத்தில், பொதுவெளியில், கல்விக் கூடங்களில், ஆய்வகங்களில், நமது குடிமரபுக்கு அந்நியப்பட்ட மனிதர்களிடத்தில் விருப்பமின்றி நிர்ப்பந்தத்தின் பேரில் உபயோகிக்கும் மொழி, பிழைப்பு மொழி.

ஆக தாய்மொழி  இயல்பாகவும், விரும்பியும்  உபயோகிக்கும் மொழி. வாழ்க்கைமொழி பிழைத்தெழவேண்டிய இடர்ப்பாடு காரணமாகவும், வேறுசில காரணங்களை முன்னிட்டும்  ஏற்றுக்கொண்ட மொழி.  

தாய்மொழியும் வாழ்க்கைமொழியும் ஒன்றாக வாய்க்கப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மன், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெய்ன், நார்வே, சுவீடன் ஜப்பான், தென்கொரியா என பல நாடுகளை இந்த வரிசையில் அடுக்கலாம்.

பிரான்சுநாட்டின் இன்றைய மக்கள்தொகை 7 கோடி. இவர்களில்  49 இலட்சம் மக்கள் அந்நியர்கள் என்கிறார்கள்.  பிரெஞ்சுக் குடியுரிமைபெற்றிராத அந்நிய மக்களின் தொகை இது. எஞ்சியுள்ள  69.5 கோடிமக்களில் பிரெஞ்சுக்குடியுரிமைபெற்ற அந்நியர்களும் அடக்கம்.. உலகத்தில் இனத்தால் சமயத்தால், நிறத்தால் வேறுபட்ட  நூற்றுக்கு மேற்பட்ட தாய்மொழிகொண்ட மக்கள்  பொருளாதார காரணங்களுக்காக பிரான்சு நாட்டில் குடியேறி  வாழ்கிறார்கள். சொந்த நாட்டில் பிரச்சனைகாரணம் என்று சொல்லமுடியாது. சிரியா நாட்டில் பிரச்சினையெனில் அண்டை நாடான துருக்கியில் தஞ்சம் புகலாம், இடையில் குறுக்கிடும் நேற்றுவரை கம்யூனிஸப்பிடியிலிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் கோரலாம். ஆனால் அவர்கள் அகதிகளாக குடியேறுவது ஜெர்மன் பிரான்சு போன்ற நாடுகாளில். பொருளாதாரக் காரணங்களை முன்வைத்து பல மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட நாங்கள்  வீட்டில் தமிழ், அரபு, சீனம் என்று ஏதோ ஒரு மொழியைப் பேசினாலும், வீட்டை விட்டு   வெளியில்வந்தால்  உபயோகித்தே ஆகவேண்டிய மொழியாக இருப்பது  பிரெஞ்சு மொழி.  காரணம் எங்கள் வாழ்க்கை மொழி அது. விரும்பியோ விரும்பாமலோ வீட்டில் எந்த மொழி பேசினாலும்  அந்நியர்கள் வாழ்க்கைமொழியான பிரெஞ்சு மொழியில் நாட்களைச் சுமப்பது கட்டாயம்.  பிரான்சுநாட்டில் வாழும்  அந்நிய மக்களின்  தாய்மொழி இடத்தையும், அவர்களின் முதல் தலைமுறைக்குப்பின்னர் வாழ்க்கைமொழி ஆக்ரமித்துக்கொள்ளும். முப்பது ஆண்டுகள் தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து 31 வயதில் பிரான்சு வாழ்க்கையை ஏற்கிற்போது வீட்டில் தமிழையும், வெளியில் வந்தால் வாழ்க்கைமொழியாக பிரெஞ்சு மொழியை நாங்கள் ஏற்கிறோம். எஞ்சிய காலத்தில்  தாய்மொழியும் வாழ்க்கைமொழியும் ஒன்றாக வாய்க்கப்பெற்ற மனிதர்கூட்டத்துடன்   போட்டியிடமுடியாமல் இரண்டாம் குடிகளாக வாழவேண்டிய சிக்கல். பின்னாட்களில் இங்கேயே பிறப்பும் வாழ்க்கையும் என்கிறபோது மூதாதையர் மொழியைக் காட்டிலும் எதார்த்த வாழ்க்கைக்கான மொழி எது என்ற தேடல் முன்னுரிமை பெற்றுவிடுகிறது.  மொரீஷியஸ் தொடங்கி பல காலனி நாடுகளில் அரங்கேறிய உண்மை இது.

இன்று தமிழ் நாட்டின் நிலமை என்ன. பிரெஞ்சுக்கார ர்கள்போல  ஜெர்மனியரைப்போல,  ஜப்பானியரைப்போல  தாய்மொழியும் வாழ்க்கை மொழியும்  தமிழர்களுக்கு ஒன்றா ?  புலபெயர்ந்த எங்களைப்போலத்தான் தமிழர்கள், வாழ்க்கைமொழியாக தாய்மொழி அல்லாத ஒன்றை கல்விக்கூடங்களில், அலுவலங்களில், பொது வெளிகளில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் நாட்டின் வரலாறு  சுதந்திர வரலாறல்ல. களப்பிரர் தொடங்கி இன்றுவரை இதுதான் உண்மை. நம்முடைய உடலில்  நூறு விழுக்காடு  கீழடி மரபணு இருக்கக்கூடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தெலுங்கர்களும், மராத்தியர்களும், கன்னடர்களும், பிறரும் வீட்டில் எந்த மொழி பேசினாலும் அன்று  தமிழ்நாட்டில் வாழ்க்கைமொழியாக தமிழை ஏற்றுக் கொண்டார்கள், பேசினார்கள், எழுதினார்கள்.  காரணம் தமிழே அன்றி தமிழர்களல்ல.

இன்று தமிழ்நாட்டில் குடியேறும் அந்நியர் நேற்றைய தெலுங்கரைப்போல, மராத்தியரைப்போல தமிழை வாழ்க்கைமொழியாக கொள்ளவேண்டிய நெருக்கடி உண்டா ? தமிழ் நாட்டில் வீட்டைவிட்டு வெளியில் வந்தால் காலை முதல் மாலைவரை தமிழ்பேசாமலேயே நாளைத் தள்ளிவிட்டு வீட்டிற்குத் திரும்பலாம். புலம்பெயரும் மக்கள் வேறுவழியின்றி  உய்யும்பொருட்டு  பிறமொழியை வாழ்க்கை மொழியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்களெனில்  தாய்த் தமிழகமக்கள் விரும்பியே அந்நியமொழியை வாழ்க்கைமொழியாக தெரிவு செய்கிறார்கள் என்பது ஒப்புகொள்ளபட்ட உண்மை.  தமிழ்நாட்டின் கல்விக் கூடங்களும் பெதுவெளிகளும் தெள்ளத் தெளிவானச் சாட்சியங்கள்.

ஒரு மொழியின் வளர்ச்சி வாழ்க்கைமொழியாக அதை வளர்த்தெடுப்பதில் உள்ளது. ஆங்கிலமும் பிரெஞ்சும்  இலக்கியமொழி மட்டுமல்ல இன்று பலகோடி மக்களின் கல்விமொழி, அறிவியல் மொழி, வணிகமொழி, நவீன மொழி. மானுட வாழ்க்கையின் மாறுதல்களுக்கு இணையாக நித்தம் நித்தம்  தம்மைப் புதுப்பித்துக்கொள்ளும் மொழி.  ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களுளும் தங்கள் அறிஞர் பெருமக்களுக்கு குலம் கோத்திரம் தேடி நேரத்தை செலவிடுபவர்கள் அல்லர். தவிர, நவீன உலகின் நகர்வுகள் அனைத்தும் இம்மொழிபேசும் மக்களை முன்நிறுத்தி பின்செல்வதாக இருப்பதால் இம்மொழிசார்ந்த உடமைகளுக்கும் நாகரிகத்திற்கும் உபரிமதிப்பு கிடைத்துவிடுகிறது. நமக்கு தமிழ்ப்பற்று என்பதும் ஓர் பிழைப்பு, அரசியல். புறவாசல் களஞ்சியத்தில் பெருச்சாளிகளை அனுமதித்து.  தெருவாசலில் பந்தல்போட்டு வள்ளுவன் எந்த சாதியென வாக்குவாதம் செய்கிறோம்,  ஆப்பிளுக்கும் அல்வாவிற்கும் தமிழ்சொற்கள் தேடி வியர்வை சிந்துகிறோம்.

——————————————————-

 

 

 

 

மொழிவது சுகம் செப்டம்பர் 10 -2013

காலச்சுவடு செப்டம்பர் இதழில்: கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி

“என்பங்கிற்கும் தமிழிலக்கிய எல்லை கல்லைப் பிடுங்கி இரண்டு மில்லி மீட்டராவது தள்ளி நடவேண்டும்  என்று ஆசை, காலம் பதில் சொல்லும். “

இது எனது நீலக்கடல் (2005) நாவலின் முன்னுரையில் எழுதியிருக்கிற கடைசி வரிகள். அம்முன்னுரையை படித்துப் பலர் சிரித்திருக்கக்கூடும். நான் முதன்முதலாகக் கடைத் திறந்தபோதுகூட, சகத் தமிழர்கள், எத்தனை நாளைக்கு என்றார்கள்?இமயமலை எல்லாம் இல்லை, எப்படியோ இன்று ஒரு மேட்டிலே நிற்க முடிந்திருக்கிறது, என்னை அடையாளப் படுத்த முடிந்திருக்கிறது. பொருளோ, கதையோ தரமும் உழைப்பும் இருந்தால் நமக்கான இடம் உறுதி.

இம்மாத காலச்சுவடு இதழில் மதிப்பிற்குரிய நண்பர் முனைவர் க.பஞ்சாங்கம் அவர்கள் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல்குறித்து மதிப்புரை எழுதியிருக்கிறார். பரிசுகள் விருதுகளைக் காட்டிலும் இதுபோன்ற மனிதர்களின் பாராட்டுதல்கள்தான் ஓர் எழுத்தாளனுக்குத் தெம்பை அளிக்கும்.

எனது மனதிற்கு விசுவாசமாக நடந்துகொள்கிறேன், பெரிய இலக்கிய வாதியெல்லாமில்லை. ஆனால் உண்மையைச்சொல்ல நினைக்கிறேன், அறம் சோர்வுறும்போது, அது அவதி உறுகையில் துடிக்கிறேன். எதனோடும் இணைந்துபோனவனில்லை. பிடிவாதங்களுண்டு. ஆக எனது எழுத்தில்தெரியும் ஒளிக்கு இந்த உண்மை ஒருவிதத்தில் காரணமாக இருக்கலாம். உண்மையுடன் இணக்கமுள்ள மனிதர்கள் என்னை அல்ல எனது எழுத்தை அதிலுள்ள சத்தியத்தை வாழ்த்துகிறார்கள், பாராட்டுகிறார்கள். நேற்று திருவாளர்கள் பிரபஞ்சன், ரெ.கார்த்திகேசு, வெ.சபாநாயகம், கோ. ராஜாராம், பசுபதி என்கிற தேவமைந்தன், கி.அ. சச்சிதானந்தம், கோ.ராஜாராம், தமிழவன், பாவண்ணன், இந்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், ந.முருகேசபாண்டியன், சமுத்திரம், அவ்வை நடராசன், ஈரோடு தமிழன்பன்  என்னை முன் வைத்தல்ல அந்தந்தப் படைப்பை முன்வைத்து உற்சாகபடுத்தியிருக்கிறார்கள். இன்று திரு. க. பஞ்சாங்கம், என்னைத் தட்டிக்கொடுத்திருக்கிறார். மனமுவந்து பாராட்டி இருக்கிறார்.

நண்பர் க.பஞ்சாங்கம் அவர்களின் அறிமுகம் புதுச்சேரி காஞ்சி மாமுனி பட்ட மேற்படிப்பு முனைவர்  வெங்கிட சுப்பராய நாயக்கர் அவர்களால் கிடைத்தது. முதன் முதலாக அவரை (பஞ்சாங்கத்தை) 2005 என்று நினைவு, புதுவை பாரதியார் நினவு இல்லத்தில் நடைபெற்ற பாரதி அன்பர்கள் கூட்டத்தில் சந்தித்திருந்தேன். கி.ரா.வும் இருந்தார். திரு பஞ்சாங்கத்தோடு அதிகம் பழக்கமில்லையென்றாலும் அவ்வப்போது சிற்றேடுகளில் அவரது கட்டுரைகளை வாசிப்பதுண்டு. எனினும்  நெருங்கிப் பழகியவனில்லை. பல முறை எனது நூல்கள் வெளியீட்டு விழாவை புதுச்சேரியிலும், சென்னையிலும் நடத்தியிருக்கிறேன். சட்டென்று எனது நினைவுக்கு வராமலேயே கடந்த பெயர்களில் அதுவுமொன்றாக இருந்திருக்கிறது. நிலவு இதமானது, சுகமானது, அடக்கமானதுங்கூட, மேகங்கள் எளிதாக திரையிடமுடியும், எனினும் அதுபாட்டுக்கு எவ்வித காய்த்தல் உவத்தலின்றி, மேகங்களை விலக்கிக்கொள்ளவும், உள்ளங்களை கொள்ளைகொள்ளவும், உவகைக்கு வழிகாட்டவும் செய்யும். நண்பர் பஞ்சாங்கமும் ஓர் நிலவுதான். மொழியாற்றலும் எழுத்தாற்றலும் ஒருங்கே பெற்ற எளிய மனிதர். கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல் வெளியீட்டு விழாவில் நண்பர் பஞ்சாங்கம் இல்லாத குறை செஞ்சியில் குறிஞ்சி இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் நிவர்த்தி செய்யப்பட்டது.

நிகழ்ச்சியின் மொத்த ஏற்பாடும் குறிஞ்சி இலக்கியவட்டத்திற்கு உரியது. மாதாமாதம் பொருட்செலவையும் ஏற்றுக்கொண்டு தமிழுக்கு உழைத்துக்கொண்டிருக்கிறர்வர்களில் நறுமுகை இராதாகிருஷ்ணனும் ஒருவர். மதுரையிலிருந்து நண்பர் முருகேச பாண்டியனும், புதுச்சேரியிலிருந்து முனைவர் பஞ்சாங்கமும் எவ்வித எதிர்பார்புமின்றி வந்தார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கான நன்றியைத் தெரிவித்தபோது, நாவல் நன்றாக இல்லையென்றால் வந்திருக்க மாட்டேன், ஏதாவது சாக்குபோக்கு சொல்லியிருப்பேன், மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்றார் ந. முருகேசபாண்டியன். இருவருமே நாவலுக்கு மதிப்புரை எழுதபோவதாகத் தெரிவித்தார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு வழக்கம்போல நா. முருகேசப்பாண்டியனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தீராநதி மணிகண்டனிடம் பேசியதாகவும், கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி தமிழில் வந்திருக்கிற முக்கியமான நாவல்களில் ஒன்று எனவும் அதுகுறித்து மதிப்புரையொன்று எழுதவிருப்பதாகவும் என்னிடம் தெரிவித்தார். எனது நாவலுக்கு மதிப்புரைகளென்று எழுதப்பட்டவை அனைத்துமே அவர்களாக எழுதியதுதான் நான் கேட்டு பெறும் வழக்கமில்லை. அப்படி வாய்க்கவில்லையெனில் வாசித்தவர்கள் இரசனையை, அவர்கள் எதிர்பார்ப்பை நான் பூர்த்திசெய்யவில்லையென சமாதானம் அடைவேன்.

நண்பர் பஞ்சாங்கம் கூறியதைப்போலவே மதிப்புரை எழுதி கடந்த மேமாதத்திலேயே காலச்சுவடுக்கு அனுப்பியதாகத் தெரிவித்தார். காலச்சுவடுக்கென சில விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். கண்ணன் என்னை அன்பாக நடத்தினாலும் எவ்வித நிர்ப்பந்தத்தையும் அவருக்கு நான் கொடுப்பதில்லை.  எனவே கண்ணனிடம் அதுபற்றி பேசவில்லை ஆகஸ்டு மாத இறுதியில் சிங்கப்பூர் சென்று வந்திருந்த நண்பர் பஞ்சாங்கத்திடம் வழக்கம்போல பேசிக்கொண்டிருந்தபோது: நலன் விசாரிப்புகள் முடிந்ததும், ஆகஸ்டு இதழில் கூட உங்கள் நூல் மதிப்புரை வரக்காணோம். கட்டுரை கிடைத்ததென்று எஸ்.எம்.எஸ் வந்தது வேறு தகவல்கள் இல்லை, தவறினால் வேறு இதழ்களுக்கு அனுப்பி வைக்கலாமென்றார். எனக்காக பிரசுரிக்காவிட்டாலும், பஞ்சாங்கத்திற்காக கண்டிப்பாக பிரசுரிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது, அவரிடம் கண்ணன் நல்ல மரியாதை வைத்திருக்கிறார் என்பதை அறிவேன். கண்ணனிடம் மாதம் ஒரு முறை பேசும் சந்தர்ப்பம் வாய்த்தாலும் இது போன்ற விவகாரங்களில் தலையிடக்கூடாதென்று தீர்மானமாக இருந்தவன் ஒரு வழியாக விரதத்தைக் கலைத்து ஆகஸ்டு இறுதியில் கண்ணனிடம் கேட்டபொழுது, அடுத்தவாரம் கட்டுரை வருகிறது, ஆசிரியர் சுகுமாரனுக்கு கட்டுரை மிகவும் பிடித்திருந்தாகவும் தெரிவித்தார். இதழ் வெளிவருவதற்கு முன்பாக காலச்சுவடு குழும நண்பர்களுக்கு PDF இதழை அனுப்பிவைக்கத்தொடங்கி இருக்கிறார்கள், நானும் அதில் இருப்பதால் எனக்கும் வந்து சேர்ந்தது. அநேகமாக பல நண்பர்கள் அக்கட்டுரையை வாசித்திருக்கக்கூடும். உடனடியாக இங்கே பிரசுரிப்பது சரியாகாது, கூடிய சீக்கிரம் நண்பர்களுடன் எனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறேன். அக்கட்டுரையை படித்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் உறைந்து போய் இருந்தேன். கொடுக்கல் வாங்கலின்றி என்னை உற்சாகப்டுத்தியவர்களை நான் என்றும் மறந்தவனல்ல. நான் கடன் பட்டுள்ளவர்களில் பட்டியலில் பஞ்சாங்கமும் இணைந்துள்ளார். அதற்கு முன்பாக நண்பர் பஞ்சாங்கத்துடன் நான் அண்மிக்கக் காரணமாகவிருந்த நாயக்கருக்கும், செஞ்சியில் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, கருத்தரங்கிற்குக் காரணமான இலக்கியம் சீனு தமிழ்மணிக்கும், நறுமுகை இராதாகிருஷ்ணனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
————————————————–