Tag Archives: ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தேர்தல்

மொழிவது சுகம் – மே 28 -2014

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தேர்தல் – பிரான்ஸ்

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தேர்தலில் எதிர்பார்த்ததுபோலவே பாசிஸ்டு சிந்தனைகொண்ட கட்சிகளின் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக பிரான்சு நாட்டில் Front National (தேசிய முன்னணி) தீவிர வலது சாரி கட்சி, நாட்டில் நன்கு அறியப்பட்ட வலது மற்றும் இடது சாரி கட்சிகளை பின் தள்ளிவிட்டு முந்திக்கொண்டிருக்கிறது. வரவிருக்கும் நாட்டின் பொதுத் தேர்தல்களின் முடிவு என்னவாக இருக்கும் என்பதற்கான அறிகுறி இது.

இந்த நூற்றாண்டில் பல சொற்களுக்கு விநோதமாகப் பொருள்கொள்ளவேண்டியிருக்கிறது. குடும்பம், வீதி, சமூகம் நாடு, சாதி, மதம், இனம், நிறம் என்கிற பல்வேறு கூறுகள் தங்கள் பண்பில் முரண்படும் ஒன்றிர்க்கு வழங்கும் சொல், அந்நியன். இந்த ‘அந்நியனை’ ஒருவர் நேசிப்பதும் வெறுப்பதும், அந்நியரின் இருப்பிடத்தைப் பொருத்தது. ‘யாரும் இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சௌக்கியமே’ என்பது ‘அந்நியன்’ சொல்லைப் பொருத்தவரை மிகவும் உபயோகமான வாக்கியம். இந்த அந்நியன் மூன்றாவது வீட்டில் இருந்தால் பிரச்சினையில்லை. நமக்கு அண்டைவீட்டுக்காரன் என்கிறபோது பிரச்சினை வருகிறது. இரண்டு வீடுகள் தள்ளியிருக்கும் அந்நியனின் வளர்ச்சி நம்மைப் பிரம்மிக்க வைக்கிறது. போகும்போது வரும்போதும் அவன் புன்னகைக்காக ஏங்குகிறோம். வாய்ப்பு அமையுமானால் வீடு தேடி சென்று பாராட்டவும் செய்வோம், கேட்கிற மனைவியிடம் அதிலென்ன தப்பு, அவர் உழைப்பு அப்ப, பாராட்டித்தானே ஆகவேண்டும் என்போம். ஆறுமாதம் கழிந்தது. அந்த மூன்றாவது வீட்டு அந்நியர் அடுத்த வீட்டுக்கு குடித்தனம் வருகிறார். மூன்றாவது வீட்டில் இருந்தவரை அவரின் உயர்வை சங்கடங்களின்றி ஏற்றமனம், அவர் துயரங்களைப் பரிவுடன் அணுகிய மனம், அவர் அண்டைவீட்டுக்காரரானதும் விரோதியாகப் பார்க்கிறது. தனது முன்னேற்றத்திற்கு இந்த அண்டைவீட்டு அன்னியர் தடையாக இருப்பார் என்கிற கற்பனையில், தமது தினசரி சந்தோஷங்களை தொலைத்து தூக்கமின்றி தவிக்கத் தொடங்குகிறது. அவருக்கு எதிராக வாய்ப்பு அமையுமானால் காய்களை நகர்த்தி தமது மனப்ப்புண்ணுக்கு மருந்திடுகிறது. இந்த அண்டைவீட்டு அந்நியர் அரசியல் நமது சமூகத்தின் எல்லா படிநிலைகளிலும் இன்று இடம்பிடித்திருக்கிறது. இவ் வாழ்க்கை அரசியல் நமது வர்க்க அரசியலையெல்லாம் ஓரங்கட்டிவிட்டன.ஒரு ஐரோப்பிய தொழிலாளி, ஆப்ரிக்கன் ஒருவரை அல்லது ஆசிய நாட்டவர் ஒருவரை அவர் நாட்டிலிருந்தபோது சக தொழிலாளியாகப் பார்த்தார், ஓடினார், உதவிக்கரம் நீட்டினார். அதே தொழிலாளி தனது அண்டைவீடுக்காரர் என்கிறபோது முகம் சுளிக்கிறார். பங்காளியாகப் பார்க்கிறார். பிரான்சு நாட்டில் பிரெஞ்சு தேசியவாதத்தை முன் நிறுத்திய ‘ தேசிய முன்னணி’ கட்சியில் இன்றைக்கு யார் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களெனப் பார்த்தால் சாதாரண தொழிலாளிகள், வேலையில்லாதவர்கள், பாமர மக்கள். நேற்றுவரை இடதுசாரி கட்சிகளில் தீவிர அனுதாபிகளாவும் உறுப்பினர்களாகவும் இருந்தவர்கள். மேற்கத்திய நாடுகளில் இதுவரை காணாத அளவில் பொருளாதார நெருக்கடிகளும், வேலையின்மையும் உள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தமது பொதுவுடமைக் குடையைச் சுருக்கிக்கொண்ட பிறகு அந்நாடுகளின் மக்கள் ஜெர்மன், பிரான்சு, இங்கிலாந்து முதலான வளர்ந்த ஐரோப்பிய நாடுகளுக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்ற கொள்கை முடிவுகளால் உள்ளே நுழைவது எளிதாகியிருக்கிறது. ஏற்கனவே ஐ.நாவின் மனித உரிமை அமைப்பு விதி முறைகளின் கீழ் வெளிநாட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் வந்துவிட்டனர் என்ற கோபத்தீயில் இருக்கிற மேற்கு ஐரோப்பிய வெள்ளையர்களுக்கு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஒரு சில மக்கள் வருகை எண்ணெய் ஊற்றியதுபோலாகிவிட்டது. அடித்தட்டுமக்களின் பலவீனத்தில் அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகள் இந்தியாவில் மட்டுமில்லை உலகின் எல்லாபகுதிகளிலும் இருக்கிறார்கள் என்பதை உறுதிபடுத்தும் வகையிலே ஐரோப்பிய பாராளுமன்ற முடிவுகளும் இருக்கின்றன. அவ நம்பிக்கை கூடாதுதான், நல்லதே நடக்குமென நம்புவோம்.