Tag Archives: எஸ் ராமகிருஷ்ணன்

மொழிவது சுகம் செப்டம்பர் 10 -2013

காலச்சுவடு செப்டம்பர் இதழில்: கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி

“என்பங்கிற்கும் தமிழிலக்கிய எல்லை கல்லைப் பிடுங்கி இரண்டு மில்லி மீட்டராவது தள்ளி நடவேண்டும்  என்று ஆசை, காலம் பதில் சொல்லும். “

இது எனது நீலக்கடல் (2005) நாவலின் முன்னுரையில் எழுதியிருக்கிற கடைசி வரிகள். அம்முன்னுரையை படித்துப் பலர் சிரித்திருக்கக்கூடும். நான் முதன்முதலாகக் கடைத் திறந்தபோதுகூட, சகத் தமிழர்கள், எத்தனை நாளைக்கு என்றார்கள்?இமயமலை எல்லாம் இல்லை, எப்படியோ இன்று ஒரு மேட்டிலே நிற்க முடிந்திருக்கிறது, என்னை அடையாளப் படுத்த முடிந்திருக்கிறது. பொருளோ, கதையோ தரமும் உழைப்பும் இருந்தால் நமக்கான இடம் உறுதி.

இம்மாத காலச்சுவடு இதழில் மதிப்பிற்குரிய நண்பர் முனைவர் க.பஞ்சாங்கம் அவர்கள் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல்குறித்து மதிப்புரை எழுதியிருக்கிறார். பரிசுகள் விருதுகளைக் காட்டிலும் இதுபோன்ற மனிதர்களின் பாராட்டுதல்கள்தான் ஓர் எழுத்தாளனுக்குத் தெம்பை அளிக்கும்.

எனது மனதிற்கு விசுவாசமாக நடந்துகொள்கிறேன், பெரிய இலக்கிய வாதியெல்லாமில்லை. ஆனால் உண்மையைச்சொல்ல நினைக்கிறேன், அறம் சோர்வுறும்போது, அது அவதி உறுகையில் துடிக்கிறேன். எதனோடும் இணைந்துபோனவனில்லை. பிடிவாதங்களுண்டு. ஆக எனது எழுத்தில்தெரியும் ஒளிக்கு இந்த உண்மை ஒருவிதத்தில் காரணமாக இருக்கலாம். உண்மையுடன் இணக்கமுள்ள மனிதர்கள் என்னை அல்ல எனது எழுத்தை அதிலுள்ள சத்தியத்தை வாழ்த்துகிறார்கள், பாராட்டுகிறார்கள். நேற்று திருவாளர்கள் பிரபஞ்சன், ரெ.கார்த்திகேசு, வெ.சபாநாயகம், கோ. ராஜாராம், பசுபதி என்கிற தேவமைந்தன், கி.அ. சச்சிதானந்தம், கோ.ராஜாராம், தமிழவன், பாவண்ணன், இந்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், ந.முருகேசபாண்டியன், சமுத்திரம், அவ்வை நடராசன், ஈரோடு தமிழன்பன்  என்னை முன் வைத்தல்ல அந்தந்தப் படைப்பை முன்வைத்து உற்சாகபடுத்தியிருக்கிறார்கள். இன்று திரு. க. பஞ்சாங்கம், என்னைத் தட்டிக்கொடுத்திருக்கிறார். மனமுவந்து பாராட்டி இருக்கிறார்.

நண்பர் க.பஞ்சாங்கம் அவர்களின் அறிமுகம் புதுச்சேரி காஞ்சி மாமுனி பட்ட மேற்படிப்பு முனைவர்  வெங்கிட சுப்பராய நாயக்கர் அவர்களால் கிடைத்தது. முதன் முதலாக அவரை (பஞ்சாங்கத்தை) 2005 என்று நினைவு, புதுவை பாரதியார் நினவு இல்லத்தில் நடைபெற்ற பாரதி அன்பர்கள் கூட்டத்தில் சந்தித்திருந்தேன். கி.ரா.வும் இருந்தார். திரு பஞ்சாங்கத்தோடு அதிகம் பழக்கமில்லையென்றாலும் அவ்வப்போது சிற்றேடுகளில் அவரது கட்டுரைகளை வாசிப்பதுண்டு. எனினும்  நெருங்கிப் பழகியவனில்லை. பல முறை எனது நூல்கள் வெளியீட்டு விழாவை புதுச்சேரியிலும், சென்னையிலும் நடத்தியிருக்கிறேன். சட்டென்று எனது நினைவுக்கு வராமலேயே கடந்த பெயர்களில் அதுவுமொன்றாக இருந்திருக்கிறது. நிலவு இதமானது, சுகமானது, அடக்கமானதுங்கூட, மேகங்கள் எளிதாக திரையிடமுடியும், எனினும் அதுபாட்டுக்கு எவ்வித காய்த்தல் உவத்தலின்றி, மேகங்களை விலக்கிக்கொள்ளவும், உள்ளங்களை கொள்ளைகொள்ளவும், உவகைக்கு வழிகாட்டவும் செய்யும். நண்பர் பஞ்சாங்கமும் ஓர் நிலவுதான். மொழியாற்றலும் எழுத்தாற்றலும் ஒருங்கே பெற்ற எளிய மனிதர். கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல் வெளியீட்டு விழாவில் நண்பர் பஞ்சாங்கம் இல்லாத குறை செஞ்சியில் குறிஞ்சி இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் நிவர்த்தி செய்யப்பட்டது.

நிகழ்ச்சியின் மொத்த ஏற்பாடும் குறிஞ்சி இலக்கியவட்டத்திற்கு உரியது. மாதாமாதம் பொருட்செலவையும் ஏற்றுக்கொண்டு தமிழுக்கு உழைத்துக்கொண்டிருக்கிறர்வர்களில் நறுமுகை இராதாகிருஷ்ணனும் ஒருவர். மதுரையிலிருந்து நண்பர் முருகேச பாண்டியனும், புதுச்சேரியிலிருந்து முனைவர் பஞ்சாங்கமும் எவ்வித எதிர்பார்புமின்றி வந்தார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கான நன்றியைத் தெரிவித்தபோது, நாவல் நன்றாக இல்லையென்றால் வந்திருக்க மாட்டேன், ஏதாவது சாக்குபோக்கு சொல்லியிருப்பேன், மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்றார் ந. முருகேசபாண்டியன். இருவருமே நாவலுக்கு மதிப்புரை எழுதபோவதாகத் தெரிவித்தார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு வழக்கம்போல நா. முருகேசப்பாண்டியனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தீராநதி மணிகண்டனிடம் பேசியதாகவும், கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி தமிழில் வந்திருக்கிற முக்கியமான நாவல்களில் ஒன்று எனவும் அதுகுறித்து மதிப்புரையொன்று எழுதவிருப்பதாகவும் என்னிடம் தெரிவித்தார். எனது நாவலுக்கு மதிப்புரைகளென்று எழுதப்பட்டவை அனைத்துமே அவர்களாக எழுதியதுதான் நான் கேட்டு பெறும் வழக்கமில்லை. அப்படி வாய்க்கவில்லையெனில் வாசித்தவர்கள் இரசனையை, அவர்கள் எதிர்பார்ப்பை நான் பூர்த்திசெய்யவில்லையென சமாதானம் அடைவேன்.

நண்பர் பஞ்சாங்கம் கூறியதைப்போலவே மதிப்புரை எழுதி கடந்த மேமாதத்திலேயே காலச்சுவடுக்கு அனுப்பியதாகத் தெரிவித்தார். காலச்சுவடுக்கென சில விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். கண்ணன் என்னை அன்பாக நடத்தினாலும் எவ்வித நிர்ப்பந்தத்தையும் அவருக்கு நான் கொடுப்பதில்லை.  எனவே கண்ணனிடம் அதுபற்றி பேசவில்லை ஆகஸ்டு மாத இறுதியில் சிங்கப்பூர் சென்று வந்திருந்த நண்பர் பஞ்சாங்கத்திடம் வழக்கம்போல பேசிக்கொண்டிருந்தபோது: நலன் விசாரிப்புகள் முடிந்ததும், ஆகஸ்டு இதழில் கூட உங்கள் நூல் மதிப்புரை வரக்காணோம். கட்டுரை கிடைத்ததென்று எஸ்.எம்.எஸ் வந்தது வேறு தகவல்கள் இல்லை, தவறினால் வேறு இதழ்களுக்கு அனுப்பி வைக்கலாமென்றார். எனக்காக பிரசுரிக்காவிட்டாலும், பஞ்சாங்கத்திற்காக கண்டிப்பாக பிரசுரிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது, அவரிடம் கண்ணன் நல்ல மரியாதை வைத்திருக்கிறார் என்பதை அறிவேன். கண்ணனிடம் மாதம் ஒரு முறை பேசும் சந்தர்ப்பம் வாய்த்தாலும் இது போன்ற விவகாரங்களில் தலையிடக்கூடாதென்று தீர்மானமாக இருந்தவன் ஒரு வழியாக விரதத்தைக் கலைத்து ஆகஸ்டு இறுதியில் கண்ணனிடம் கேட்டபொழுது, அடுத்தவாரம் கட்டுரை வருகிறது, ஆசிரியர் சுகுமாரனுக்கு கட்டுரை மிகவும் பிடித்திருந்தாகவும் தெரிவித்தார். இதழ் வெளிவருவதற்கு முன்பாக காலச்சுவடு குழும நண்பர்களுக்கு PDF இதழை அனுப்பிவைக்கத்தொடங்கி இருக்கிறார்கள், நானும் அதில் இருப்பதால் எனக்கும் வந்து சேர்ந்தது. அநேகமாக பல நண்பர்கள் அக்கட்டுரையை வாசித்திருக்கக்கூடும். உடனடியாக இங்கே பிரசுரிப்பது சரியாகாது, கூடிய சீக்கிரம் நண்பர்களுடன் எனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறேன். அக்கட்டுரையை படித்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் உறைந்து போய் இருந்தேன். கொடுக்கல் வாங்கலின்றி என்னை உற்சாகப்டுத்தியவர்களை நான் என்றும் மறந்தவனல்ல. நான் கடன் பட்டுள்ளவர்களில் பட்டியலில் பஞ்சாங்கமும் இணைந்துள்ளார். அதற்கு முன்பாக நண்பர் பஞ்சாங்கத்துடன் நான் அண்மிக்கக் காரணமாகவிருந்த நாயக்கருக்கும், செஞ்சியில் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, கருத்தரங்கிற்குக் காரணமான இலக்கியம் சீனு தமிழ்மணிக்கும், நறுமுகை இராதாகிருஷ்ணனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
————————————————–

மொழிவது சுகம் பிப்ரவரி 25 2013

அ. இந்தியப் பயணம்

தில்லி, ரிஷிகேஷ், ஹரித்துவார், ஜெய்ப்பூர்

ஜனவரி 11 லிருந்து பிப்ரவரி 14 வரை இந்தியாவில் கழிந்தது. ஜனவரி 14 லிருந்து 20 வரை புது தில்லி சென்றிருந்தோம். இம்முறை எனது மனவியுடன் சென்றிருந்தேன். நண்பர் வெ. சுப. நாயகர் அவர் துணைவியாருடன் வந்திருந்தார். ஒரு வாரம் மிக நன்றாகக் கழிந்தது. முதல் நாள் தில்லி. இரண்டாம் நாள் ரிஷிகேஷ், ஹரித்துவார் பார்த்துவிட்டுத் திரும்பினோம் மூன்றாம் நாள் ஒய்வு,  உள்ளூரில் பார்க்கவேண்டியவற்றைச் சென்று பார்த்தோம். தில்லி குளிர்பற்றி எங்களுக்குப் பெரிதாய் சொல்ல ஒன்று மில்லை அடுத்த இரண்டு நாட்கள் ஜெய்ப்பூர், ஆக்ரா, பதேபூர் சிக்ரி, மதுரா  எனக் கழிந்தன. மறுநாள் (20 ஜனவரி) பிற்பகல் சென்னை திரும்பினோம். நாயக்கர் அன்றே புதுச்சேரி சென்றுவிட்டார். நான்  உறவினருடைய காரில் பிற்பகல் புத்தகக் கண்காட்சிக்குச்சென்றேன். என் வாழ்நாளில் அப்படியொரு கூட்டத்தைச் சந்தித்ததில்லை. எழுத்தாளர் நண்பர்களில் சிலரைச் சந்திக்க முடிந்தது. அடுத்த ஒரு வாரம் புதுச்சேரியை விட்டு எங்கும் போகவில்லை. வீட்டிற்குப் பெயிண்ட் அடிக்க  ஏற்பாடு செய்திருந்தோம். இப்போதெல்லாம் இந்தியாவில் இதற்கெல்லாம் கணிசமாக செலவு செய்யவேண்டுமென புரிந்துகொண்டேன். எஞ்சியப்பொழுது கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல் வெளியீட்டுவிழா சம்பந்தமாக கழிந்தது. நண்பர் எஸ். ராமகிருஷ்ணனும், தமிழவனும் தங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையில் எனது அழைப்பினை ஏற்று புத்தக வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்டது மன நிறைவாக இருந்தது. விழா சிறப்பாக அமைய அண்ணாமலை பாஸ்கரின் வேண்டுகோளை ஏற்று நண்பர் பெருமாளும் அவர் துணைவியாரும் உதவினார்கள். அவர்கள் தவிர திரு நந்திவர்மன், நாயக்கர், சீனு தமிழ்மணி ஆகியோரும் விழா சிறக்க காரணமாக இருந்தார்கள். சென்னையிலிருந்து உடல் நலன் பாதித்திருந்த நிலையிலும் கலந்துகொண்ட பெரியவர் கி.அ. சச்சிதானந்தத்தின் வருகையை மறுப்பதற்கில்லை. தோழி மதுமிதா அவர் சகோதரி, நண்பர் ஷங்கர நாராயணன், அகநாழிகை வாசுதேவன் நண்பர் சந்தியா நடராஜன் எனப்பலர் கலந்து கொள்ள விழா எதிர்பார்த்தைக் காட்டிலும் நன்றாக இருந்தது. இடையில் ஒரு நாள் மட்டுமே சென்னைக்குச் செல்ல முடிந்தது. மனைவியைக் ஓல்டு மகாபலிபுரம் சாலையிலிருக்கும் உறவினர் வீட்டில் விட்டுவிட்டு நாயக்கரும் நானும்  எஸ். ராமகிருஷ்ணன் வீட்டிற்குச் சென்றிருந்தோம். வெகு நேரம் உரையாடினோம். நண்பர் எஸ். ஆர். சில யோசனைகளைத் தெரிவித்தார். அவைகளை பிரான்சிலிருக்கும் நண்பர்களிடம் கலந்துபேசி நடைமுறைப்படுத்தும் எண்ணமிருக்கிறது. பிரான்சில் எனக்கு வேண்டிய நண்பர்கள் அனைவருமே பாரீஸில் இருக்கிறார்கள். நண்பர்களை நேரில் சந்தித்தே அதுபற்றி பேசமுடியும். புதுவையில் 7ம் தேதி உறவினர் வீட்டுத் திருமணமொன்றில் வெகுகாலத்திற்குப் பிறகு உறவினர்கள் சிலரைச் சந்திக்க முடிந்தது.

எட்டாம் தேதி காலை நண்பர் நாயக்கர் தமது கல்லூரியில்:

“Insiders’ and outsiders’ perspective of France” என்ற தலைபைக்கொடுத்து பேசக்கேட்டிருந்தனர். பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் படிக்கும் முதுகலை மாணவர்கள் வந்திருந்தனர். பேராசிரிய நண்பர்கள் ராஜா, தனியல் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. உயர்கல்வி மாணவர்களிடையே சொற்பொழிவு செய்வது இது மூன்றாவது முறை. புதுச்சேரி பல்கலை கழகத்தில் தமிழ்த்துறையில்  மொழிபெயர்ப்பு அனுபவம் குறித்து 2011ல் பேசினேன், நண்பர் நந்திவர்மன் ஏற்பாடு செய்திருந்தார். 2012ல் தில்லி ஜவஹர்லால்நேரு பல்கலைகழகத்தில் மொழிபெயர்ப்புபற்றிய கலந்துரையாடலை பேராசிரியர்கள் நாச்சிமுத்துவும், சந்திரசேகரனும் ஏற்பாடு செய்திருந்தார்கள். நண்பர் நாயக்கரும் நானும் கலந்துகொண்டோம்.

மதுரை

எட்டாம் தேதி இரவு மதுரை சென்றோம். இந்தியாவில் நீண்டதூரம் பயணமெனில் பேருந்தை தவிர்ப்பது நலம். ரதிமீனா என்றொரு சொகுசு பேருந்து, சொகுசு பெயரில் மட்டுமே. படுக்கைக்கும் சேர்த்து பணம் கொடுத்திருந்தோம். உறங்கவே முடியவில்லை. சம்பந்தி இரவில் காரோட்டத் தயங்குவதால் ஆட்டோ வைத்துக்கொண்டு சென்றோம். ஆட்டோவிற்கு இரு மடங்கு கட்டணம் கொடுத்து செல்லவேண்டியிருந்தது. மதுரையிலும் கொசு நிறைய இருக்கிறது. மதியம் புதுச்சேரியிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரை வந்திருந்த நண்பர் நந்திவர்மன் கல்வெட்டு பேராசிரியர் ஒருவருடன் வந்திருந்தார். வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அதுபோலவே புதுவையில் நடந்த புத்தக வெளியீட்டுவிழாவில் கலந்து கொள்ளாத நண்பர் ந. முருகேசபாண்டியன் இளங்கவிஞர் ஒருவருடன் மறுநாள் வந்திருந்தார். இரண்டு மணிநேரத்திற்கு மேல் நீண்ட எங்கள் உரையாடல் பிரான்சு, மொழிபெயர்ப்புகள், அயலகத் தமிழர்; கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி எனக் கழிந்தது.  நேரம் போதவில்லை என்ற வருத்தத்துடனேயே பிரிந்தோம். மறுநாள் புதுச்சேரிக்கு பேருந்துகள் பிடித்து வந்தது மிகவும் கொடூரமான அனுபவம். இனி மதுரை செல்வதெனில் இரயிலோ, வாடகைக் காரோ எடுத்துசெல்வதென தீர்மானிக்க வேண்டியதாயிற்று. சகோதரர் மகனுக்கு திடீரென்று திருமண ஏற்பாடுகள் செய்து நாங்கள் பிரான்சுக்கு புறப்பட இருக்கிறோம் என்பதால்  13ந்தேதி நிச்சயத்தாம்பூலம். திருமணம் ஏப்ரல் 15ந்தேதி வைத்திருக்கிறார்கள். காலச்சுவடு 12, 13, 14 தேதிகளில் கன்னியாகுமரியில் நண்பர்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்கிறது. நண்பர் கண்ணனிடம் வருவதாகச்சொல்லியிருக்கிறேன்.

பிப்ரவரி 14 சென்னையில் விமானமெடுத்து துபாய் வழியாக 15ந்தேதி பாரீஸ் வந்து இறங்கினோம். இரண்டு நாட்கள் பாரீஸில் மகன் வீட்டில் கழிந்தன. 16ந்தேதி ஸ்ட் ராஸ்பூர் வந்து சேர்ந்தேன். கடந்த ஒருவாரமாக பிரான்சில் கடுங்குளிர், பனியும் அதிகம். ஒவ்வொரு நாளும் -5, -10 என்று பாகைமானிபயமுறுத்த வெளியிற் செல்ல யோசிக்கிறேன்.

—————————————————

ஆ. பிரான்சில் என்ன நடக்கிறது?

Belle et bête (Beauty and the beast)
பிரான்சு வந்து ஒருவாரம் ஆகப்போகிறது. கடந்த ஒருவாரமாக சென்னைப் பத்திரிகையாளர்களின் மொழியிற்சொல்வதெனில்
மிகவும் பரபரப்பாக பேசப்படும் விவகாரம் ஒரு நூல். நூலின் தலைப்பு Belle et bête.

பிரெஞ்சு எழுத்தாளர் கிளேஸியோ  ‘உலகில் உண்மையென்று எதுவுமில்லையெனவும், அனைத்துமே கற்பனை அல்லது புனைவு என்பார். எனக்கும் அதில் உடன்பாடுண்டு. இயற்கை, உயிர்கள், இயக்கம், வெளி, இருத்தல், சூன்யம், புள்ளிகள், கோடுகள் ஓடும் நீர், தேங்கிய குட்டை, வெப்பம், குளிர்  இப்படி கண்ணுக்குத் தோற்றம் தரும் அனைத்துமே பொய் அல்லது மாயை என முடிவுக்கு வருவதொன்றே அநேகக் கேள்விகளுக்கு எளிதான பதிலான அமையும். மார்க்ஸ் போன்றே பொருளின் மதிப்பு பௌதிக வடிவத்தைச் சார்ந்ததல்ல என நம்மை தேற்றிக்கொள்ளமுடிந்தால் நிம்மதியாக உறங்கி எழலாம். சக எழுத்தாளரிடம் தயக்கமின்றி கை குலுக்கலாம், உட்கார்ந்து பேசலாம், சொல்லிக்கொண்டு புறப்படலாம்.

மர்செலா லாகுப்(Marcela lacub) என்ற பெண்மணி முகவரியைத் தொலைத்த ஓர் அரசியல்வாதியுடனான ஆறுமாத அந்தரங்க அனுபவத்தை, ” Belle et bête” நம்முடன பகிர்ந்துகொள்கிறார். இப்பெண்மணி யாரோ எவரோ அல்ல, பிரான்சுநாட்டின் தேசிய ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர், சட்ட நிபுணர், நேரம் வாய்த்தால் எழுதவும் செய்வார்.  நூலின் தலைப்பின்படி ‘Belle’ இப்பெண்மணியென்றால்,  ‘bête” யாரென்ற கேள்வி எழத்தான் செய்யும்.

அம்மணி தேடிப்போன ஆணிடம் முகமன் கூறினார், கை குலுக்கினார். நேரமிருந்தால் இருவரும் நாளை இரவு சேர்ந்து டின்னர் சாப்பிடலாமா என்றார். டின்னர் முடித்ததும் அரைபார்வையில் போதை தளும்ப, எனது கட்டில் இருவரைத் தாங்கக்கூடியதென்றார். அந்த ஆண் அல்லது ‘bête’ வேறு யாருமல்ல பிரெஞ்சு ஜனாதிபதி யென்றவெண்ணெய் திரண்டு வந்தபோது நியூயார் ஓட்டலொன்றில் தாழியை உடைத்தவர். நாவடக்கம் கொண்ட ஆசாமிக்கு புலனடக்கம் பலகாத தூரம். சீதையைத் தொடாமற் இராவணன் கெட்டதாக கீழைதேச பண்பாடு எழுதுகிறது. இவர் பெண்களைத் தொட்டே கெட்டு குட்டிசுவரானவர்.

———————————-

மொழிவது சுகம் நவம்பர் 21:

எஸ் ராமகிருஷ்ணன்:

வழங்கும் இலக்கிய தொடர் பேருரைகள் நவம்பர் 21லிருந்து 27 தேதிவரை ஒரு வாரகாலம் தினமும் மாலை 6 மணிக்கு ஆழ்வார் பேட்டையிலுள்ள ரஷ்ய அறிவியல் மற்றிம் கலாச்சார மையத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. திங்கள் தொடங்கி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைவரை நாளுக்கொன்றென ஏழு இலக்கிய சொற்பொழிவுகளை நிகழ்த்துகிறார். நண்பர் எஸ்.ரா. நிகழ்த்தும் இவ்வுரைகள் ஏற்பாட்டாளர்கள் சொல்வதுபோல இளம்வாசகர்கள், கல்விப்புலம் சார்ந்து இலக்கியம் பயில்வோரன்றி இலக்கியத்தில் ஈடுபாடுகொண்டோர் அனைவருக்கும் பயனளிக்கக்கூடியது. மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற சொற்பொழிவுகளை அடிக்கடி நிகழ்த்துகின்றனர். தமிழ் இலக்கியத்தில் நவீன இலக்கியத்தினை முன் வைத்து தொடர் சொற்பொழிவுகள் இதற்கு முன்பு நடந்திருக்கிறதாவென்று தெரியாது. நண்பர் எஸ்.ரா.விற்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் தமிழ் படைப்புலகு கடமைப்பட்டிருக்கிறது.

நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன் தளத்தில் அவரது மகளின் திருமண விழா படங்கள். காணக் கண்கொள்ளா காட்சி. பார்த்து மகிழ்ந்தேன். திருமணத்தில் கலந்துகொண்ட நண்பர் ஜெயமோகனின் வர்ணனையை வாசித்தால் திருமணத்தில் கலந்துகொண்ட அனுபவத்திற்கு உள்ளாவோம். அவருக்கே உரிய நடையில் மிக ழகாக நிகழ்ச்சியைச் சித்தரித்திருக்கிறார். புதுச்சேரியில் இருந்திருந்தால் நாஞ்சிலார் அழைக்காவிட்டாலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பேன். மணமக்களை வாழ்த்த அல்ல, வாழ்த்த அவருக்கு ஏராளமான உறவினர்களும் நண்பர்களும் அவர்களுக்குக்கிடைப்பார்கள். அவர் தயவில் நல்ல நாஞ்சில் நாட்டு சமையலை ஒரு பிடி பிடித்திருக்கலாம்.

வித்தியாசமான புத்தகவிழா

வருடம் தோறும் நவம்பர் மாதத்தில் 17-19 தேதிகளில் ஒரு வித்தியாசமான புத்தகவிழா ஒன்றை பிரான்சு நாட்டில் கொண்டாடுவார்கள். படைப்பிலக்கியத்தில் வாசகனை நகைப்பில் ஆழ்த்துகிற சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிற பகுதிகளை உரத்து வாசிப்பதென்பது நிகழ்ச்சியின் கருப்பொருள். இம்மையக்கருத்துக்கு உகந்தவை என்பது உடல்மொழியால் சொல்லகூடியவையாக இருத்தல்வேண்டும். படைப்பிலக்கிய பொது மரபிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டதாக இருக்கவேண்டும். தனது வாசகனை மகிழ்விக்கவும் வாய்விட்டு சிரிக்கவும் வைக்கும் வல்லமை அவ்வெழுத்துக்களுக்கு இருக்கவேண்டும். கடந்த வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும்  எனது சொந்தத் தொழில் சம்பந்தமாக பாரீஸ¤க்குச் சென்றவன் பாரீஸ் சொர்போன் பலகலைகழகத்தின் கலை பண்பாட்டுத்துறை சேவை ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் நிகழ்ச்சியில், 19ந்தேதி நிகழ்ச்சியில் காணும் வாய்ப்பு கிடைத்தது. பியர் ழூர்து(Pierre Jourde) என்ற எழுத்தாளர் வாசிப்புக்குரிய நூல்களை தேர்வு செய்திருந்ததாகக் கூறினார்கள். நன்கு அறியப்பட்ட மற்றும் அறியப்படாத எழுத்தாளர்களென இரு தரப்பினரின் படைப்புகளும் இடம்பெற்றிருந்தன. வாசிக்கப்பட்டவைகளில் அல்போன்ஸ் அல்லேஸ், மிகெல் தெ செவாந்த், இடாலோ கல்வினோ, டனியல் பென்ஸெக் போன்ற எழுத்தாள்ர்களின் பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. வாசித்த இருவரும் ஏற்கனவே, குறுந்தகடுகளில் ஒலிவடிவம் பெற்ற படைப்புகளுக்குக் குரல் கொடுத்தவர்கள். முன் வரிசையில் னric Chevillard. எதையும் நையாண்டிசெய்தே பபழக்கப்பட்டவர் Anti -novelist வகையறா என்கிறார்கள் (எனக்கு Anti -novel, New Roman, Modern novel, Post modern novel -விவாதத்திகுரியவை அனைத்துமே பழைய மொந்தையல்ல என்கிறார்கள்) இது பற்றி ஒரு தொடரை எழுதவேண்டும்.

தற்போதைய தமிழ் படைப்புகளில் நகைச்சுவை தேடவேண்டியிருக்கிறது. நகைசுவையாக எழுதுவதற்கு தனி ஆற்றல் வேண்டும். கல்கி எழுத்துக்களை நான் விரும்பிவாசிக்க நேர்ந்தது நகைச்சுவக்காகவே. கலைமணியின் எழுத்துகளில் தில்லானா மோகனாம்பாள், ராவ் பகதூர் சிங்காரம் இன்றளவும் எனக்கு தமிழில் விரும்பி வாசித்தவை. கடுகு என்கிற அகஸ்தியன், தேவன், துமிலன் போன்றோர் என்னைக் கவர்ந்திருக்கிறார்கள். பாக்கியம் ராமசாமியைக்கூட கொண்டாடடலாம். அவரது அப்புசாமியும் சீதாபாட்டியும் சில கணங்கள் மகிச்சியாக வைத்திருக்க உதவுபவை. புதுமைபித்தன் சிறுகதைகளில் சமூகத்தையும் நடைமுறை வாழ்க்கையையும் போகிறபோக்கில் ஏளனம் செய்து நம்மைக் கடந்து செல்வார். நாம்தான் ஓடிச்சென்று அவரை பிடிக்கவேண்டும்.

Les neiges du Kilimanjaro (The snow of Kilimanjaro):

எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் இச்சிறுகதையை (http://xroads.virginia.edu/~drbr/heming.html)  நண்பர்கள் வாசித்திருக்கக்கூடும். ஆப்ரிக்காவுக்கு தமது மனைவியுடன் சபாரிக்கு வந்த இடத்தில் வலது காலில் முள்குத்தி புரையோடிப்போக படுக்கையில் கிடக்கும் எழுத்தாளன் தமது கடந்தகால நினைவுகளில் மூழ்கிறான். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமென்று நம்மவர்கள் சொல்வார்கள். அறுபது வயதுக்குமேல் அமர்நாத் பனிலிங்க தரிசினத்திற்குச்செல்கிறவர்கள் தங்கள் கடந்தகாலத்தை அசைபோட்டுபார்ப்பார்களாவென்று தெரியவில்லை. எழுத்தாளனுக்குள்ள சாபக்கேடு எல்லாவற்றையும் கேள்விக்குடுப்படுத்துவது? இங்கே கூடாரத்தில் கால் கட்டுடன் இருக்கும் எழுத்தாளன் முன்னே அவனுடைய பழைய உன்னதமான நினைவுகளைக் கிளறும் வகையில் பனிமூடிய கிளிமாஞ்சாரோ, நெருங்கும் அவனது மரணத்தை ஞாபகப்படுத்த வெளியே வட்டமிடும் கழுகுகள். தன்னைத்தானே சபித்துக்கொள்கிறான். கங்குல்போல அவனுள் உறையும் பழைய நினைவுகள், பின்னோக்கி அழைக்கின்றன.  எழுத்தில் கனியிருப்ப காயைமுன்னிருத்தியதற்காக வருந்துகிறான். ‘அரசியல், பெண்கள்,மது, பணம், கனவுகள்’ என்ற சுழலில் திக்கித் தவிக்கும் எழுத்தாளர்களின் ஒருவராக இக்கதையில் ஹெமிங்வே தம்மை அடையாளப்படுத்திக்கொள்வார். இச்சிறுகதை 1952ல் கிரிகிரிபெக்கும் ஏவா கார்டனரும் நடித்து திரைக்கு வந்திருக்கிறது. இப்போது இணைய தளங்களில் பார்க்ககிடைக்கிறது. கதையை சிதைக்காமல் படமாக்கிருக்கிறார்கள். கிரிகிரி பெக்கும் ஏவா கார்டனரும் நல்ல இளமைக் காலத்தில் இருந்தபோது எடுத்தபடம். இருவரும் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். சிறுகதை தொடங்குவதுபோலவே திரைப்படமும் தொடங்குகிறது. பிற்காலத்தில் ஒரு பூர்ஷ்வாவாக மாறிபோன குற்றவுணர்வு ஹெமிங்வேக்கு இருந்திருக்கவேண்டும் இக்கதையில் அதற்கு கூடுதலாகவே வருந்துகிறார். இதேபெயரில் தற்பொழுது ஒரு பிரெஞ்சுப்படம் வந்துள்ளது. இப்படத்தில் கணவனும் மனைவியும் நாற்பது வயதைக் கடந்தவர்கள் தங்கள் வாழ்க்கையைக்குறித்து அலுத்துகொள்கிறார்கள். முதல் படத்திற்கும் இப்படத்திற்குமுள்ள பந்தம் அத்துடன் முடிந்தது. முதல் படத்தைபோன்றே கணவனும் மனைவியும் விஸ்கியை உறிஞ்சுகொண்டு தங்கள் நடந்துகொண்டது சரியா, தங்கள் வாழ்ந்தவிதம் சரியா என்று உரையாடுவதோடு சரி இவ்விரண்டு படங்களுக்கும் வேறு பந்தங்களில்லை. இங்கே கணவனும் மனைவியும் ஒரு கடற்கரை நகரில் படகு, கப்பல் கட்டுமான நிறுவனத்தில் தொழிலாளர்கள். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடியில் வேலை நீக்கம் செய்யப்படுகிறார்கள். தொழிற்சங்கத்தில்  கனவனும் மனைவியும் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள், தாங்கள் வேலை நீக்கம் செய்யப்பட்ட போதிலும் தங்கள் நண்பர்கள் உறவினர்களைக் காப்பாற்றி வேறு சிலரை வேலை நீக்கம் செய்ய காரணமாகிறார்கள். இவர்களுக்கு கிடைத்த பணத்தில் கிளிமாஞ்சாரோ செல்லலாமென்ற கனவு, இவர்கள் தந்திரத்தால் வேலை நீக்கம் செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களின் தாக்குதல்களால் முடிவுக்கு வருகிறது. இளைஞர்கள் இருவரையும் காவல்துறையிடம் காட்டிக்கொடுத்துவிட்டு பின்னர் தங்கள் செய்கைக்காக வருந்துகின்றனர். ஆனால் அவசியம் பார்க்க வேண்டியது The snow of Kilimanjaro (1952) திரைப்படம்.

—————————————