Category Archives: மொழிவது சுகம்

மொழிவது சுகம்  3 மே மாதம் 2020

 தமிழா தமிழா….நாளை ?

நேற்று  காற்றுவெளி வைகாசி மின்னிதழில்  : ஒரு நாள் ஒரு மனிதன் ஒரு குடும்பம்,  என்கிற சிறுகதையை வாசிக்கக் கிடைத்தது ஒரு வார்த்தையில் சொல்வதெனில் அபாரம்.  எனக்கு இலக்கியம் என்பது வெறும் அழகியல் சார்ந்த கலை அல்ல, மனித மனத்தையும் சமூகத்தையும் உள்வாங்கிக்கொண்டு சொல்லப்படவேண்டும். சிறுகதை ஆசிரியர் மு. தயாளன் அப்படி எழுதியிருக்கிறார்.  பாராட்டுகள்.

கதைக்குள் போவதற்கு முன்பாக கதையை முன்னிட்டு என்னுள் விளைந்த  கருத்தை, பங்கிட்டு கொள்ள நினைக்கிறேன்.

இராமன் எத்தனை இராமனடி பாடலுக்கு எதிர்பாட்டு, ஏற்றப்பாட்டுக்குத்தான் எதிர்பாட்டிருக்க வேண்டுமென்பதில்லை.

இரண்டு பிரெஞ்சு பேராசிரியர்கள் : ஒருவர் தமிழர், மற்றவர் பிரெஞ்சுக்காரர். இருவரும் சந்திக்கின்றனர். அவர்கள் உரையாடும் மொழி என்னவாகயிருக்கும் ? நிச்சயம் பிரெஞ்சு மொழி, அது இயல்பு. காரணம் இருவருக்கும் தெரிந்த பொது மொழி பிரெஞ்சு. மாறாக இரண்டு தமிழ் அறிஞர்கள் :  ஒருவர் தமிழர் மற்றவர் பிரெஞ்சுக்காரர். இவர்கள் சந்திப்பு எந்த மொழியில் இருக்குமென எதிர்பார்க்கிறீர்கள் ? பொதுமொழியான தமிழில்தானே இருக்கவேண்டும். ஆனால் அப்படி இருப்பதில்லை. அதை நிராகரித்துவிட்டு தமிழறிந்த இருவரும் ஆங்கிலத்தில் உரையாடுவர். காரனம் நம் தமிழ் அறிஞருக்கு தமக்கு ஆங்கிலமும் தெரியும் என்பதைப் பறைசாற்றவேண்டும். தமிழ் அறிஞரான பிரெஞ்சு காரருக்குள்ள பிரச்சனை நடைமுறை தமிழில் சரளமாக உரையாடுவது.

தமிழில் பல ஆய்வுகள் செய்தவர், சங்க இலக்கியங்களப் பிரெஞ்சுமொழியில் மிகச் சிறப்பாக உள்வாங்கி மொழி பெயர்த்தும் இருப்பார். ஆனால் தமிழில் பேசுவதற்கு அப்பிரெஞ்சு தமிழ் அறிஞருக்குத்  தடுமாற்றம். காரணம் இங்கு சென்னைதமிழ், திருநெல்வேலி தமிழ், நாகர்கோவில் தமிழ்,  கோயம்புத்தூர் தமிழ், மதுரை தமிழ், சேரித் தமிழ்,  ஜஃப்னா தமிழ் என  பல தமிழ்கள். போதாதற்கு செட்டியார் தமிழ், நாடார் தமிழ், பிள்ளைமார் தமிழ், தெலுங்கர் தமிழ், பிராமணர் தமிழ், சினிமாதமிழ், தொலைக்காட்சி  காம்பையர் தமிழ் என தசரதனைப்போல தமிழுக்கும் ஏகப்பட்ட பத்தினிகள். இதில் அஃப்சியல் பத்தினி யாரோ ? உலகில் வேறு மொழிகளுக்கு இத்தனை சாளரங்கள் கொண்ட அந்தப்புரம்  இல்லை.

ஒரு முறை, மலையாளம் கற்ற ஒரு பிரெஞ்சு பெண்மணி, தமிழ் கற்ற ஒரு பிரெஞ்சு பெண்மணி இருவரும் மொழிபெயர்ப்பில் கூடுதல் பயிற்சிபெற சென்னை வந்து இறங்குகிறார்கள்.( ஏற்கனவே இதுகுறித்து எழுதியிருக்கிறேன்.) காதில் வாங்கிய தமிழைக் கேட்டு வந்த வேகத்தில் தமிழ் கற்ற பெண்மணி இது சரிப்படாது என பிரான்சு திரும்புகிறார். மலையாளம் கற்ற பிரெஞ்சு பெண்மணியோ தொடர்ந்து இயங்குகிறார். பிரெஞ்சு எடிட்ட ர்களால் அங்கீகரிக்கபட்ட  பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட  தமிழ்-பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர்கள் இன்றில்லை. அதன் விளைவு என்ன என்பதை  சொல்லவேண்டியதில்லை.

‘இன்று’  எனப்படித்துவிட்டு  இண்னைக்கு, இண்னைக்கி இன்னிக்கி என பேசுவதும் எழுதுவதும், பிறப்பால் தமிழரலாதவர்களுக்கும்,  தமிழ் நிலத்தில் வசிக்காத தமிழ் கற்கும் புதியவர்களுக்கும்  மருட்சியை ஏற்படுத்தும்  என்பதை உணரவேண்டாமா. இன்றைய நவீன இலக்கியங்கள் பெரும்பாலும் வட்டார வழக்கில் வருகின்றன.    ஐம்பது சொற்களைத் திரும்ப திரும்ப உபயோகித்து சிறுகதையை முடித்துவிடுகிறோம். இங்கே நாவல் எழுதக் கூட  ஐநூறு சொற்கள் போதும் பலமுறை அவற்றை உபயோகித்து படைப்பை முடித்துக்கொள்ளலாம்.

எனது பிரெஞ்சு மொழி பெயர்ப்புகளைத் திருத்திக்கொடுக்கும் பிரெஞ்சு பெண்மணி  திருமதி Lliliane என்பவர் இன்றைக்கும் எதாவதொரு பிரெஞ்சு படைப்பை வாசிக்க நேருகிறபோது அகராதியை புரட்டாமல் வாசிக்க முடிவதில்லை என்கிறார். இந்த ஒரு காரணங்கூட பிரெஞ்சு படைப்புகள் அதிகம் நோபல் பரிசு  பெறுவதற்கு காரணமாக இருந்திருக்கலாம். நம்மிட ம் அகராதியைத் தேடவேண்டிய நெருக்கடியை உண்டாக்குகிற நவீன தமிழ் இலக்கியங்கள் உண்டா ? அப்படியே உபயோகித்தாலும் அந்நெருக்கடியைச் சமாளிக்க வருடந்தோறும்  நவீன சொற்களை உள்வாங்கிய புதிய  அகராதிகள் உண்டா ? ஆனால் கறிக்குதவாத ஏட்டுசுரக்காய்  தமிழ் விழாக்களுக்கு நம்மிடத்தில் பஞ்மே இல்லை.

இனி சிறுகதைக்கு வருகிறேன்.

ஒரு நாள் ஒரு மனிதன் ஒரு குடும்பம்.

கொரோனா தொற்று, ஐரோப்பா, புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பம், ஊரடங்கு,  இப்பிரசினைகளைக்கொண்டு, ஈழத்தமிழில் சொல்லபபட்ட ஒரு சிறுகதை.

கொரோனாவுக்கென படைக்கபட்ட இரு முதியவர்கள். அவர்கள் மகன் கோபி, மனைவி இரு பிள்ளைகள் கொண்ட இங்கிலாந்து வாழ்க்கைத்தரத்தில் ஒரு ஏழ்மையான குடும்பம். கோபி ஓர் இந்திய கட்டிட வேலை முதலாளியிடம் ஊழியம் பார்க்கிறவன். முறைப்படி அரசுக்குத் தெரிவித்து அவர் அவனை வேலைவாங்கவில்லை. இதனால் முதலாளி  தொழிலாளி இருவருக்கும் இலாபம். முதலாளி அரசுக்கு செலுத்தவேண்டிய சில வரிகளை ஏமாற்றலாம். தொழிலாளி தனக்கு வேலையில்லையென  சம்பந்தப் பட்ட அரசு நிறுவங்களிடம் உதவித் தொகை கேட்டுப் பெறலாம்.

இருந்தும் கொரோனாவால் தமிழ்க்  குடும்பம் தள்ளாடுகிறது. களவாய் செய்த வேலை இல்லைஎன்றாகிவிட்ட து. ஒரு மாதமல்ல மூன்றுமாதத்திற்கு பிரச்சனை நீளும் என்கிறபோது அவர்கள் என்ன செய்ய முடியும். இதற்கிடையில் கொரோனாவைக் கோடிட்டுக் காட்டும் இருமல் கிழவர்.   கணவன் மனைவி இருவருடைய உரையாடலும் அதிகம் புலம் பெயர்ந்த குடும்பங்களில் கேட்க கூடியதுதான் :

« ஏனப்பா சோசல் காசு வரும் தானே ? » என்று திவ்யா கணவனுக்கு ஆறுதல் கூறுகிறாள்.

« அது வந்தென்ன பிரயோசனம். அப்பிடியே கொண்டுபோய் சீட்டுகட்டச் சரி » என்றான் கவலையோடு.

« ஓமப்பா, அது வேறை கிடக்குது. அது எப்பையப்பா முடியுது ? »

« இரண்டு சீட்டும் முடிய இன்னும் ஆறுமாதம் கிடக்குது »

« நீங்கள் அணடைக்குச் சீட்டு எடுக்கேக்கையே சொன்னனான். இப்ப அவசரப்படவேண்டாமெண்டு. நீங்கள் கேட்டால் தானே. அவசர அவசரமாய் தங்கச்சிக்கு எடுத்தனுப்பினியள். இப்பக்கிடந்து மண்டையைப்போட்டு உடைக்கிறியள். »

 

மேற்கண்ட உரையாடலைக்காட்டிலும் கிழவரின் இருமல் சத்தத் திற்குப்பிறகு தம்பதிகளுக்கிடையே நடக்கும் கீழ்க்கண்ட உரையாடலில் கதை பிரகாசிக்கிறது.

« இந்த நேரம் பார்த்து இந்த மனிசனும் இருமித்தள்ளுது »

……………………………………..

………………………………………

அவன் என்ன நினைத்தானோ தெரிய வில்லை.

« இஞ்சரப்பா பிள்ளையளை அவரோட விளையாட விடாதையும். »

« ஏனப்பா, அது சும்மா இருமல்தான். »

« அது எனக்குத் தெரியும். எதுக்கும் முன்னெச்சரிக்கையா இருக்கிறது நல்லது தானே. »

« ஓமப்பா அதுவும் சரிதான். அவர் வாழ்ந்து முடிச்சவர். »

இத்துடன் கதை முடிவதில்லை எல்லா வறிய குடும்பங்களிலும் நடப்பதுபோலவே அப்போதைய தேவைகளைச் சமாளிக்க உண்டியலை உடைத்து 35 பவுண்களுடன் தமிழ்க் கடைக்குச்செல்கிறான், கோபி. கொரோனவை முன்வைத்து இலாபம் பார்க்கும் கடைக்காரனை மனதிற்குள் திட்டித் தீர்க்கிறான். பட்டியலில் இருந்த அனைத்தையும் வாங்க இயலவில்லை.  முதியவருக்கு இருமல் மருந்தை  வாங்க வேண்டிய கட்டாயம். பொருட்களுடன் திரும்பவந்தபோது அதிர்ச்சிக் காத்திருந்தது. வீட்டெதிரே முதியவரை அழைத்துபோக ஆம்புலன்ஸ்.

சிறுகதையின் கடைசி வரி மிகவும் முக்கியம். நான் அதைச் சொல்லப்போவதில்லை. நீங்கள் வாசிக்கவேண்டும்.

_________________________________________________

 

 

மொழிவது சுகம் டிசம்பர் 1 2019

அ. திறனாய்வு பரிசில்

பேராசிரியர் க. பஞ்சாங்கம் பெயரால் ஒரு திறனாய்வாளர் பரிசில் ஒன்றை ஆண்டு தோறும் வழங்கத் தீர்மானித்துள்ளோம். கீழே அதற்கான அறிவிப்பு உள்ளது.  உங்களுடைய ஆதரவினை எதிர்பார்க்கிறோம்.

 

பேராசிரியர் ,முனைவர்க.பஞ்சாங்கம்-சிறந்த திறனாய்வாளர் பரிசில்-2020

வாழ்வின்போக்கினைத் தன் பட்டறிவு சார்ந்தும் பிறர் பட்டறிவு சார்ந்தும் உற்றுநோக்கித் தெளிந்து இலக்கிய இயக்கங்களை நுட்பமாக விளங்கி புதியபுதியகோட்பாடுகளை உட்படுத்திச் சங்ககாலம் முதல்இக்காலம் வரையிலான படைப்புகளைக் கூர்மையாக ஆய்ந்து தமிழிலக்கியத்திறனாய்வை வளப்படுத்தி வரும் பேராளுமை ‘ பஞ்சு’ எனும் க.பஞ்சாங்கம்.

தமிழ்த்திறனாய்வில் குறிப்பிடத்தக்க இளம்திறனாய்வாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் அவர்பால் அன்புகொண்டநண்பர்கள் சிலரால் அமைக்கப்பட்டதே இப்பரிசில்.

தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த திறனாய்வு நூலுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் பேராசிரியர்க.பஞ்சாங்கம் அவர்களின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வழங்கப்படும்.

இந்த ஆண்டுக்குரிய பரிசிலினைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு 2019 சனவரி முதல் டிசம்பர் வரை வெளிவந்துள்ள நூலின் இரண்டு படிகளைச் சனவரி 15,2020க்குள் கீழுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

தேர்வுக்குழு வின் முடிவே இறுதியானது.

முகவரி: பாரதிபுத்திரன்
எண்10, நான்காம்குறுக்குத்தெரு
துர்கா காலனி
செம்பாக்கம்  ,   சென்னை-600073
மின்னஞ்சல்: nayakarts@gmail.com
செல்பேசி:94442 34511

 

ஆ. எது சுதந்திரம் ?

சுதந்திரம் ஒரு பொல்லாத வார்த்தை.

அதற்கு இலக்கணம் எழுதப்பட்டிருக்கிறதா ? விதிமீறல்களை எப்படிஅறிவது. தனிமனிதன் தன்னிடத்தில் கொட்டிக்கிடக்கிறது என  நம்பப்படும் சுதந்திரம் குடும்பம், பொதுவெளி, சமூகம், தேசம் என்று வருகிறபோது, படிப்படியாக அதன் கடிவாளம் இறுக, வீரியம் குறைகிறது. எனது சுதந்திரத்திற்கு முதல் ஆபத்து அப்பா என்ற பெயரில் வந்தது, அவர் சுமத்திய விதிமுறைகள் பிள்ளைகள் நலனுக்காக எனச்சொல்லப்பட்டது. அறம், அமைதி, ஒழுங்கு, கூடிவாழுதல், மக்கள் நலன், தேசப்பாதுகாப்பு எனச் சுதந்திரத்தில் குறுக்கிட உரிமங்கள் வழங்கப்படுகின்றன.

தந்தை என்ற காவலர் பிடியிலிருந்து தப்பித்து பணி, மணவாழ்க்கை என்றுவந்தபோது மீண்டும் எனது சுதந்திரத்திற்கு கடிவாளமோ என நினைத்தேன். மணச் சடங்கின் மூலமாக அவளைப் பற்றி நானும் என்னைப்பற்றி அவளும் அதிக அறிந்திராத நிலையில், இருதரப்பு பெற்றோர்களின் திருப்திக்கு, உறவினர்களின் ஆசீர்வாதத்துடன் இணைந்தபோது சுதந்திரம் என்பது சம்பாதிக்க, இருவருமாக பீச்சுக்கும் சினிமாவிற்கும்போக, அவள் பரிமாற நான் சாப்பிட, அனைத்துக்கும் மேலாக மக்கட்பேறுக்கு விண்ணப்பிக்க ஆசிவதிக்கப்பட்டதென விளங்கிக்கொண்டேன்.

மனைவியின் தந்தை பிரெஞ்சுக் காலனி ஆதிக்கத்தின்போது இந்தோ சீனா யுத்த த்தில் கலந்துகொண்டவர். அவர்கள் குடுடும்பத்தில் அனைவரும் பிரெஞ்சு குடிமக்கள். எனவே இந்திய தேசத்தை விட்டு வெளியேற சுதந்திரம் எனக்கு இருந்தது . இதனைத் துரிதப்படுத்தியவர் எனக்கு ஆர். ஓ வாக இருந்த அதிகாரி. அப்பா கிராம முனுசீப். அவருக்கு மகனை கலெக்டராக பார்க்க ஆசை. ஆனால் அவரால் வருவாய்துறையில் என்னை கிளார்க் ஆகத்தான் பார்க்க முடிந்தது.

ஒரு முறை கோப்பு ஒன்று அவர் மேசைக்குச் சென்றது. என்னை அழைத்தார். «  என்ன நீ உன் விருப்பத்துக்கு எழுதியிருக்கிறாய். பழைய கோப்பைப் பார்த்து அப்படியே எழுதவேண்டியதுதானே ? ADM(Additional District Magistrate) கேட்டால் என்னயா பதில் சொல்வேன் » என எறிந்து விழுந்தார். ஆட்சியர் அலுவலகம் என்றாலும் வருவாய் துறை செயலராக இருந்த ஆட்சியர், புதுவை அரசு தலைமைச் செயலக அலுவலகத்தில் பணி புரிவார். அவர் District maagistrate -ம் கூட. அதுபோலவே மாவட்ட ஆட்சியரின் அலுவலகமாகச் செயல்பட்ட எங்கள் அலுவலகத்தில் வருவாய் துறை துணைச் செயலரும், கூடுதல் மாஜிஸ்ட்ரேட்டும் ஒருவரே. மாஜிஸ்ட்ரேட் என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் தலையிட. அன்றைக்கு நான் சமர்ப்பித்திருந்த கோப்பும் அருகிலிருந்த வீராம்பட்டணம் என்ற கடலோர கிராமப் பிரச்சனை சார்ந்த து. கோப்பு section 32 (the police act) சம்பந்தப்பட்டது.

என்னுடைய வருவாய் துறை அதிகாரி (Revenue Officer) யின் குணம் பழைய கோப்புகளில் உள்ள வார்த்தைகளை வரி பிசகாமல் கமா, முற்றுப்புள்ளி உட்பட அப்படியே உபயோகிக்கவேண்டும், இல்லையெனில் கோப்பில் சந்தேகம் வந்துவிடும். கோப்பு நேராக வருவாய்துறை அதிகாரி மேசைக்குப் போவதில்லை.  அதற்கு முன்னதாக செக்‌ஷன் தாசில்தார் பார்த்திருதார் . R.O வின் கோபத்தைச் சந்திப்பது முதன் முறை அல்ல, எனவே நானும் கோபப்பட்டேன்.  « கோப்பை இப்படித்தான் போடவேண்டும் என்ற விதிமுறையும் இல்லையே, வேண்டுமானால் எழுத்து மூலம் ஒரு சுற்றறிக்கை அனுப்புங்கள், அதன்பின் செய்கிறேன், எனக்கூறிவிட்டு வந்தேன் » அவர் பதிலுக்கு « இங்கே நாங்கள் சொல்கிறபடி வேலையை செய்ய இஷ்டம் இல்லைன்னா எழுதிக்கொடுத்திட்டு போ » என்றார். வீட்டிற்குத் திரும்பினேன் திருமணம் முடித்து எட்டாண்டுகளுக்குப் பிறகு மனைவிமூலம் எதற்கும் இருக்கட்டுமென பெற்றிருந்த பிரெஞ்சுக் குடியுரிமை திமிரைக் கொடுத்திருந்தது. பிரெஞ்சு சுதந்திரத்தை சுவாசிக்க நினைத்தேன்.

அப்போது மாமியார் வீட்டோடு இருந்தேன். அவர்கள் வீடு புதுச்சேரி அப்போது மேலண்டை புல்வார் என்கிற இன்றைய அண்னாசாலையில் இந்தியன் காபி ஹவுஸிற்கு அடுத்தவீடு. சம்பவத்திற்கு ஒருவாரத்திற்கு முன்புதான் அவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் வசித்த  தொழில் மற்றும் கலால் துறை ஆணையர் பாக்கியம் பிள்ளை திருநெல்வேலிகாரர், « எலே உனக்கு துணைத் தாசில்தார் உத்தியோக ஆர்டர் வந்திடும் » எனச் சொல்லியிருந்தார். சிலமாதங்களுக்குமுன் துறை சார்ந்த Internal examination எழுதியிருந்தேன்.  இந்தியச் சுதந்திரத்தைக் காட்டிலும் பிரெஞ்சு சுதந்திரம் கவர்ச்சியாக இருந்து. பிரெஞ்சு பர்ஃப்யூகளுடன் புதுச்சேரியில் வலம்வந்த பாரீஸ் வாசிகள், தேவலோகப் பிரஜைகளாக கண்ணிற்பட புறப்பட்டுவந்துவிட்டேன்.  பிரான்சுக்கு வந்ததும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தபோது மாதம் 800 ரூபாய் சம்பாத்தியத்தில் இந்தியாவில் உழைத்தவனுக்கு,  உதவியத்தொகையாக 4200 பிராங் கொடுத்தார்கள். எனது சமூக இயல் முதுகலைக்கு equivalent வாங்க இயலவில்லை. Alliance française -ல் D4  வரை கற்ற பிரெஞ்சுமொழி போதாதென்கிற நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வழிகாட்டுதலில்  DPECF, பின்னர் DECF (accountancy).  அதன் பின்னர்  மொழிபெயர்ப்பாளர் டிப்ளோமா.  கடைசியில் வாய்த்தது உதவி கணக்காயர் (Aide comptable) பணி. மீண்டும் சுதந்திரம் வேண்டி, உதறி விட்டு  சொந்தமாகத் தொழில்.  தொழிலில் கூட்டு எனது சுதந்திரத்தைப் பாதிக்கும் எனக்கருதி என்னுடன் இணைந்துகொள்ள  விரும்பிய பிரெஞ்சு நண்பனின் உதவியை நிராகரித்ததென முடிந்தவரை இழப்பினைபொருட்படுத்தாது எனது சுதந்திரம் என நினைப்பவற்றை   காப்பாற்ற நினைக்கிறேன்.

எனினும் எனக்கான சுதந்திரங்கள் எவை என்ற கேள்வி இன்றைக்கும் தொடர்கிகிறது ?  எனது குறைகளோடும் நிறைகளோடும் வாழ அனுமதித்துக்கொள்ளும் சுதந்திரம். வேண்டுதல் வேண்டாமைகளை நிரந்தரமாக்கிக்கொள்ளாத சுதந்திரம். மறுப்பதை ஏற்கவும், ஏற்றதை மறுக்கவும் மனதை அனுமதிக்கும் சுதந்திரம். விரும்பி சாப்பிட்டப்பொருள் பூஞ்சைப் படிந்திருந்தால் எறியும் சுதந்திரம். இறுதியாக நாமார்க்கும் குடியல்லோம் என வாழும் சுதந்திரம்.  ஒக்கல் வாழ்க்கை  எனக்கென்று வழங்கிய எளிய பூமராங்குகளில் சில. இவற்றை முடிந்தமட்டும் மூன்றுபேருக்கு எதிராக உபயோகிப்பதில்லை என்பதில் கவனமாக இருக்கிறேன்.

ஒன்று :  கண்ணாடியில் தெரியும் எனது பிறன்,

இரண்டு :  மனைவியின் கண்கள்

மூன்று : என்னை நானாக  இருக்க அனுமதிக்கும் நட்புகள். மனிதர்கள்.

—————————————

 

 

 

 

மொழிவது சுகம் நவம்பர் 1 2019

 

 

அ. கேள்வியும் பதிலும்

அக்டோபர் மாதம் தமிழ் படைப்புலக நண்பர்கள் வருகையால் இல்லம் நிறைந்திருந்தது. ஒருவர் நாஞ்சில் நாடன், மற்றவர் பதிப்பாள நண்பர் கண்ணன். இரண்டாவது வாரத்தின் தொடக்கத்தில் வந்திருந்த நண்பர் நான்சில்நாடனை பாரீஸில் வழி அனுப்பிவிட்டு, இறுதியில் இரண்டு நாட்கள் காலச்சுவடு நண்பர் கண்ணனையும்  அவர் துணைவியாரையும் வரவேற்க ஸ்ட்ராஸ்பூர் திரும்பவேண்டியிருந்த து. பின்னர் அவர்களை வழி அனுப்பிவிட்டு விடுமுறையில் இருந்த பேரப்பிள்ளைகளுடமன் திரும்பவும் பத்து நாட்கள். 4 ந்தேதி ஸ்ட்ராஸ்பூ திரும்பினேன்.  இதற்கிடையில் விபத்து. பிரச்சினை வாகனத்திற்கென்றாலும், கடைபிடித்தாகவேண்டிய சில சடங்குகள் இருக்கின்றன.

இந்திய இலக்கிய நண்பர்களுடன்  உரையாட விடயங்கள் இருந்தன. அகத்தியரின் கமண்டலக் கங்கை நதி வற்றினாலும் நாஞ்சிலார் மனக்குடத்தில்அடைத்துவைத்திருந்த சொல் நதி   வற்றாதது என்பதைப் புரிந்துகொள்ள அனேகச் சந்தர்ப்பங்கள். போதாதென்று கம்பநாட்டானின் கவித்தேனை அள்ளி அளித் தருவார்.  இனிமையான தருணங்கள் அவை. அதுபோலவே சு.ராவின் எழுத்துக்களில் எனக்கு மோகம் உண்டு. பதிப்பாளர் கண்ணனை, சுராவாகவே பார்க்கிறேன். படைபாளிகள் பதிப்பாளர்கள் அரிதாக புத்தகவாசிப்புக்கு நேரத்தை ஒதுக்கும் மனிதர்கள் என அனைவரையும்  உள்ளடக்கிய எழுத்தாளர் உலகம், பிற மனிதர்களையும் பார்க்க பார்க்க மேன்மக்களைக் கொண்ட உலகம்.

அக்டோபர் பத்தொன்பது அன்று பாரீஸில் நண்பர் அலன் ஆனந்தன் சிறிய இலக்கிய நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தார். சிறப்பு விருந்தினர் நாஞ்சில் நாடன்.  சொற்கள் குறித்து, அவற்றின் முக்கியத்துவம் குறித்து நல்லதொரு கருத்துரையை வழங்கினார். கலந்துரையாடலில் இருகேள்விகள் எனக்கு முக்கியமாகப் பட்டன. ஒன்று  அன்றாட வழக்கில் தமிழர்கள் மிக க் குறைவான சொற்களையே தமிழர்கள் கையாளுகிறார்கள் என்பதைக் கவலையுடன் நாஞ்சிலாருடன் தெரிவித்தபோது, தங்கள் உபயோகத்திற்கு அதுபோதும் என்று நினைக்கிறார்கள், அதை அப்படித்தான் பார்க்கவேண்டும் என்றார் ஒரு நண்பர். நாஞ்சிலார் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பிரத்தியேகமாக கையாளப்படுகிற சொற்கள் பல,  பழந்தமிழுக்குச்சொந்தம், இன்று வழக்கில் அவற்றினை உபயோகிக்கத் தவறுவதால் தமிழுக்குப் பெரும் தீங்கிழைக்கிறோம் என்ற பொருளில் பதில் அளித்தார். எனக்குச் சொற்கள் உபயோகம் விதவிதமாக உண்டு பசி ஆறுவதுபோல. கம்பன் விருந்து படைக்க நாஞ்சில்போன்ற மனிதர்கள் பரிமாறுகிறபோது, வெறும் சோறுபோதும் பசியாறிவிடுவேன் என்பது பேதைகுணம்.   மற்றொரு நண்பர் தமிழ்ச் சொற்களில் வடமொழியைக் கலப்பது தவறென்கிற தொனியில்   « கிருஷ்ணா » என்று எழுதுவது சரியா ? எனக்கேட்டார். கேள்வியை எழுப்பியவர் இயல்பாகவே அக்கேள்வியை வைத்தார். எங்களைச் சங்கடத்தில் ஆழ்த்தும் நோக்கம் கிஞ்சித்தும் இல்லை.  எனினும் பாரீஸில் இக்கேள்வியின் பின்புல அனுபவம் எனக்குப் புதிதல்ல. இதுபோன்ற கேள்விகளுக்கும் அல்வா, ஆப்பிள் போன்ற சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களைத் தேடும் நண்பர்களுக்கும் எனது அனுபவ அறிவின் பாற்பட்டு ஒரு பதிலைச் சொல்லவேண்டி இருக்கிறது. அன்றாட உணவு, உடுத்தும் உடை,  சமயம் சடங்கு இவற்றில் தமிழ் மரபை மீறி இருக்கிறோம்.  ‘கிருஷ்ணா’ போன்ற பெயர்களை தமிழில் எழுத மறுப்பதால்  தமிழ் வளர்ச்சி தடைபடுகிறது என்பதை நான் நம்பத் தயாரில்லை. கள்ளை ஒதுக்கி விஸ்கி எடுக்கலாம், வேட்டியைத் தவிர்த்து பேண்ட்டைப் போடலாம், கறிச்சோறு பிரியாணி ஆகலாம். யாப்பிலக்கணத்தை உடைத்து புதுக்கவிதை எழுதலாம், யார்பெயரிலோ வடமொழிகலப்பது தமிழைப் பாழ்படுத்திவிடும் ? என்கிற திறனாய்வைச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.   எதிர் வீட்டுகாரன் நிலைப்படியை எப்படிவைத்திருந்தாலென்ன. அதுபற்றிய அக்கறை அவனைஅறிந்தவர்க்கும், அவன் தேடும் விருந்தினர்க்கானது.  தொல்காப்பியத்தையும் நவீன இலக்கியத்தையும் நன்கறிந்த பேராசிரியர்களுக்கு எனது பெயர் விமர்சனத்திற்குரியதல்ல.  முப்பது ஆண்டுகால பிரான்சு வாழ்க்கையில் எனக்கு உயிர் தந்த மொழிக்கும்,  நலம் சேர்த்த மொழிக்கும் அணில்போல ஏதோ செய்திருக்கிறேன். பிரெஞ்சு மொழி சிந்தனையாளர் René Descartes «  je pense donc je suis » (நான் சிந்திக்கிறேன் எனவே உயிர் வாழ்கிறேன்) என்பார்.   நண்பர்களிடத்தில் (அண்மையில் நாஞ்சில் நாடனிடமும்) அப்புகழ்பெற்றவரியை ‘நான் எழுதுகிறேன் அதனால் உயிர் வாழ்கிறேன்’ எனச் சொல்வதுண்டு. தாய்மொழியும் வாழ்க்கை மொழியும் என்ற இக்கட்டுரை ஆப்பிளுக்கும், அல்வாவுக்கும் தமிழ்ச்சொற்களைத் தேடி வியர்வைசிந்தும்  மேற்படி பேராசிரிய வகையறாக்களுக்காகச் சமர்ப்பிக்கப்படுகிறது.

ஆ. தாய்மொழியும் வாழ்க்கை மொழியும்

அமெரிக்க அதிபரோ, சீன அதிபரோ இந்தியாவிற்கு  வருகை புரிந்தால், மகாபலிபுரத்தை உத்தியோக பூர்வ சந்திப்பு தளமாக அமைத்துக்கொண்டால்கூட இந்திய உடைக்கு முன்னுரிமை தருவதில்லை. மாறாக  இந்தியத் தலைவர்கள்  இத்தலைவர்களின் எல்லைக்குள் இந்திய பாரம்பர்ய உடையில் கால்பதிப்பதில்லை. காமராஜரும் காந்தியும், இந்தியப் பெண் பிரமுகர்களும் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. மேற்கத்திய தலைவர்களோ பிறரோ உங்கள் தலைவர்கள் « கோட்டு சூட்டின்றி வரவில்லையெனில் கைகுலுக்கமாட்டோம் ஒப்பந்தங்களில் கையொப்பமிடமாட்டோம் » என்று உடைகுறித்த நெறியை இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் வற்புறுத்துவதாக செய்திகள் இல்லை. இருந்தும் இந்திய எல்லைக்குள் வேட்டி சட்டை அணிபவர்கள்,  அதன் எல்லைக்கு அப்பால் கால் பதிக்கிறபோது, வேறு உடையில் காணவைப்பது எது ? என்ற கேள்வியின்  அடிப்படையிலேதான் தாய்மொழியையும் வாழ்க்கைமொழியையும் புரிந்துகொள்ளவேண்டும்.

 

தாய்மொழி : உயிர்மொழி, கருவில் காதில் வாங்கிய மொழி, தாலாட்டு மொழி, வீட்டில் தம்பி தங்கைகளுடன் சண்டையிட்ட மொழி, கண்டிப்புச் சூட்டில் கரிசனத்தை விளாவும் மொழி, உறவுகளுடனும்   நெருங்கிய   நண்பர்களுடனும் இயல்பாக உரையாட உதவும் மொழி. சிந்தனை மொழி.

வாழ்க்கை மொழி : உடல்மொழி, வீட்டைவிட்டு வெளியில் வந்தால் கையாளும் மொழி. கடையில், பேருந்தில், அலுவலகத்தில், பொதுவெளியில், கல்விக் கூடங்களில், ஆய்வகங்களில், நமது குடிமரபுக்கு அந்நியப்பட்ட மனிதர்களிடத்தில் விருப்பமின்றி நிர்ப்பந்தத்தின் பேரில் உபயோகிக்கும் மொழி, பிழைப்பு மொழி.

ஆக தாய்மொழி  இயல்பாகவும், விரும்பியும்  உபயோகிக்கும் மொழி. வாழ்க்கைமொழி பிழைத்தெழவேண்டிய இடர்ப்பாடு காரணமாகவும், வேறுசில காரணங்களை முன்னிட்டும்  ஏற்றுக்கொண்ட மொழி.  

தாய்மொழியும் வாழ்க்கைமொழியும் ஒன்றாக வாய்க்கப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மன், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெய்ன், நார்வே, சுவீடன் ஜப்பான், தென்கொரியா என பல நாடுகளை இந்த வரிசையில் அடுக்கலாம்.

பிரான்சுநாட்டின் இன்றைய மக்கள்தொகை 7 கோடி. இவர்களில்  49 இலட்சம் மக்கள் அந்நியர்கள் என்கிறார்கள்.  பிரெஞ்சுக் குடியுரிமைபெற்றிராத அந்நிய மக்களின் தொகை இது. எஞ்சியுள்ள  69.5 கோடிமக்களில் பிரெஞ்சுக்குடியுரிமைபெற்ற அந்நியர்களும் அடக்கம்.. உலகத்தில் இனத்தால் சமயத்தால், நிறத்தால் வேறுபட்ட  நூற்றுக்கு மேற்பட்ட தாய்மொழிகொண்ட மக்கள்  பொருளாதார காரணங்களுக்காக பிரான்சு நாட்டில் குடியேறி  வாழ்கிறார்கள். சொந்த நாட்டில் பிரச்சனைகாரணம் என்று சொல்லமுடியாது. சிரியா நாட்டில் பிரச்சினையெனில் அண்டை நாடான துருக்கியில் தஞ்சம் புகலாம், இடையில் குறுக்கிடும் நேற்றுவரை கம்யூனிஸப்பிடியிலிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் கோரலாம். ஆனால் அவர்கள் அகதிகளாக குடியேறுவது ஜெர்மன் பிரான்சு போன்ற நாடுகாளில். பொருளாதாரக் காரணங்களை முன்வைத்து பல மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட நாங்கள்  வீட்டில் தமிழ், அரபு, சீனம் என்று ஏதோ ஒரு மொழியைப் பேசினாலும், வீட்டை விட்டு   வெளியில்வந்தால்  உபயோகித்தே ஆகவேண்டிய மொழியாக இருப்பது  பிரெஞ்சு மொழி.  காரணம் எங்கள் வாழ்க்கை மொழி அது. விரும்பியோ விரும்பாமலோ வீட்டில் எந்த மொழி பேசினாலும்  அந்நியர்கள் வாழ்க்கைமொழியான பிரெஞ்சு மொழியில் நாட்களைச் சுமப்பது கட்டாயம்.  பிரான்சுநாட்டில் வாழும்  அந்நிய மக்களின்  தாய்மொழி இடத்தையும், அவர்களின் முதல் தலைமுறைக்குப்பின்னர் வாழ்க்கைமொழி ஆக்ரமித்துக்கொள்ளும். முப்பது ஆண்டுகள் தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து 31 வயதில் பிரான்சு வாழ்க்கையை ஏற்கிற்போது வீட்டில் தமிழையும், வெளியில் வந்தால் வாழ்க்கைமொழியாக பிரெஞ்சு மொழியை நாங்கள் ஏற்கிறோம். எஞ்சிய காலத்தில்  தாய்மொழியும் வாழ்க்கைமொழியும் ஒன்றாக வாய்க்கப்பெற்ற மனிதர்கூட்டத்துடன்   போட்டியிடமுடியாமல் இரண்டாம் குடிகளாக வாழவேண்டிய சிக்கல். பின்னாட்களில் இங்கேயே பிறப்பும் வாழ்க்கையும் என்கிறபோது மூதாதையர் மொழியைக் காட்டிலும் எதார்த்த வாழ்க்கைக்கான மொழி எது என்ற தேடல் முன்னுரிமை பெற்றுவிடுகிறது.  மொரீஷியஸ் தொடங்கி பல காலனி நாடுகளில் அரங்கேறிய உண்மை இது.

இன்று தமிழ் நாட்டின் நிலமை என்ன. பிரெஞ்சுக்கார ர்கள்போல  ஜெர்மனியரைப்போல,  ஜப்பானியரைப்போல  தாய்மொழியும் வாழ்க்கை மொழியும்  தமிழர்களுக்கு ஒன்றா ?  புலபெயர்ந்த எங்களைப்போலத்தான் தமிழர்கள், வாழ்க்கைமொழியாக தாய்மொழி அல்லாத ஒன்றை கல்விக்கூடங்களில், அலுவலங்களில், பொது வெளிகளில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் நாட்டின் வரலாறு  சுதந்திர வரலாறல்ல. களப்பிரர் தொடங்கி இன்றுவரை இதுதான் உண்மை. நம்முடைய உடலில்  நூறு விழுக்காடு  கீழடி மரபணு இருக்கக்கூடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தெலுங்கர்களும், மராத்தியர்களும், கன்னடர்களும், பிறரும் வீட்டில் எந்த மொழி பேசினாலும் அன்று  தமிழ்நாட்டில் வாழ்க்கைமொழியாக தமிழை ஏற்றுக் கொண்டார்கள், பேசினார்கள், எழுதினார்கள்.  காரணம் தமிழே அன்றி தமிழர்களல்ல.

இன்று தமிழ்நாட்டில் குடியேறும் அந்நியர் நேற்றைய தெலுங்கரைப்போல, மராத்தியரைப்போல தமிழை வாழ்க்கைமொழியாக கொள்ளவேண்டிய நெருக்கடி உண்டா ? தமிழ் நாட்டில் வீட்டைவிட்டு வெளியில் வந்தால் காலை முதல் மாலைவரை தமிழ்பேசாமலேயே நாளைத் தள்ளிவிட்டு வீட்டிற்குத் திரும்பலாம். புலம்பெயரும் மக்கள் வேறுவழியின்றி  உய்யும்பொருட்டு  பிறமொழியை வாழ்க்கை மொழியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்களெனில்  தாய்த் தமிழகமக்கள் விரும்பியே அந்நியமொழியை வாழ்க்கைமொழியாக தெரிவு செய்கிறார்கள் என்பது ஒப்புகொள்ளபட்ட உண்மை.  தமிழ்நாட்டின் கல்விக் கூடங்களும் பெதுவெளிகளும் தெள்ளத் தெளிவானச் சாட்சியங்கள்.

ஒரு மொழியின் வளர்ச்சி வாழ்க்கைமொழியாக அதை வளர்த்தெடுப்பதில் உள்ளது. ஆங்கிலமும் பிரெஞ்சும்  இலக்கியமொழி மட்டுமல்ல இன்று பலகோடி மக்களின் கல்விமொழி, அறிவியல் மொழி, வணிகமொழி, நவீன மொழி. மானுட வாழ்க்கையின் மாறுதல்களுக்கு இணையாக நித்தம் நித்தம்  தம்மைப் புதுப்பித்துக்கொள்ளும் மொழி.  ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களுளும் தங்கள் அறிஞர் பெருமக்களுக்கு குலம் கோத்திரம் தேடி நேரத்தை செலவிடுபவர்கள் அல்லர். தவிர, நவீன உலகின் நகர்வுகள் அனைத்தும் இம்மொழிபேசும் மக்களை முன்நிறுத்தி பின்செல்வதாக இருப்பதால் இம்மொழிசார்ந்த உடமைகளுக்கும் நாகரிகத்திற்கும் உபரிமதிப்பு கிடைத்துவிடுகிறது. நமக்கு தமிழ்ப்பற்று என்பதும் ஓர் பிழைப்பு, அரசியல். புறவாசல் களஞ்சியத்தில் பெருச்சாளிகளை அனுமதித்து.  தெருவாசலில் பந்தல்போட்டு வள்ளுவன் எந்த சாதியென வாக்குவாதம் செய்கிறோம்,  ஆப்பிளுக்கும் அல்வாவிற்கும் தமிழ்சொற்கள் தேடி வியர்வை சிந்துகிறோம்.

——————————————————-

 

 

 

 

மொழிவது சுகம் அக்டோபர்   2019: தக்கார் எச்சம் : காந்தி

ஒரு சிலரே   உலகம் எங்கும் அறியப்பட்டவர்கள். அமெரிக்கா – அபிரகாம் லிங்கன், இங்கிலாந்து – சர்ச்சில், சீனா – மாசேதுங், வியட்நாம் – ஹோசிமின், ரஷ்யா – லெனின், பிரான்சு – தெகோல் , கியூபா – காஸ்ட்ரோ, இஸ்ரேல் – கோல்டா மேயர், எகிப்து – நாஸர், இந்தியா – காந்தி எனப் பட்டியலை விரித்துக்கொண்டு போகலாம்.

நாடறிந்த தலைவர்கள் அனைவரும் உலகறிந்த தலைவர்களாக இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை.  உலகறிந்த தலைவர்களிலும் அமாவாசை  நாட்களின் பித்ருகளாக அன்றி உண்மையில் கொண்டாடப்படும் தலைவர் குறைவு. இத்தலைவர்களில் பலரும் அவரவர் சொந்த நாடுகளில்கூட  ஆராதிக்கப்படுவதேகூட வரலாறு தரும் நிர்ப்பந்த்தால்.

ஒரு தலைவரின் பெருமையும் புகழும்  அவர் மறைவிற்குப் பிறகு யார் அவர்களைக் கொண்டாடுகிறார்கள் என்பதைப்  பொறுத்தது.   நமக்குப் பிரச்சினை,  தலைவர்கள் அல்ல அவரை அடுத்து வருகின்றவர்கள் . « அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும் » என காத்திருக்கிற அவர் நம்புகிற சீடர்கள்.

தலைவரை தொடரும்  முன் வரிசை அபிமானிகள் கூட்டத்தில்  உண்மையான விசுவாசிகளோடு மேலே குறிப்பிட்ட பழமொழிக்கிணங்க ஒன்றிரண்டு  சாமர்த்தியசாலிகள் கலந்திருப்பார்கள். திண்ணை காலியானவுடன்  தலைவர் இடத்தில் அமருகிற இந்த நரிகளின்  நோக்கம் தலைவர் விட்டுச்சென்ற அட்சயபாத்திரத்தின் ஓட்டை உடைசலைத் தட்டி ஈயம் பூசுவது. மறைந்த தலைவர் ஈட்டிய புகழை, தங்கள் வளர்ச்சிக்கு மடை திறந்து விடுவது.  தலைவரை முன்நிறுத்தி வளர்ந்ததும், ஒரு சில ஆண்டுகளில் இறந்த தலைவர் நிழல்  இவர்கள் நிஜம் என்று ஆகிப்போவார்கள். உண்மையில்  தலைமைக்கும் கொள்கைக்கும்  அபாயமாக இருப்பது  இந்த சாமர்த்தியசாலிகளே.  இந்த அபாயத்தை உணர்ந்தோ என்னவோ, முக்காலமும் உணர்ந்த இந்திய புத்திசாலி தலைவர்களில்  ஒரு சிலர் உலகில் வேறு ஜனநாயக நாடுகளில் அரிதாக காண்கிற வாரிசு அரசியலைப் கடைபிடிக்கின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பதுபோல தலைவர்களுக்கு ‘குலசாமி’ லேபில் கிடைக்கிறது. சந்த தியினர் « பொங்க வைக்கவும், கிடாவெட்டவும், மொட்டைபோட்டு  காதுகுத்தவும் » இந்த வாரிசு அரசியல் உதவுகிறது. இவர்கள் புகழை மொட்டைபோட காத்திருக்கும் கபட சீடர்களிடமிருந்தும் காப்பாற்றிக்கொள்ள முடிகிறது.

காந்தியின் வெற்றி :

நிழலுக்கு அதிகம் காத்திராமல் பாலை நிலமென்றாலும் கடந்து செல்ல துணிபவன் வாழ்க்கையில் ஜெயிக்கிறான். பெருங்கூட்டத்தில் தனக்கென ஒரு அடையாளத்தைக் கட்டிக் காப்பவன், வாகை சூடுகிறான். காந்தி தேர்வு செய்த ஒத்துழையாமை இயக்கம், சத்தியாகிரகம், அகிம்சை சொற்கள் விடுதலைக்  களத்திற்குப் புதியவை. உயிர்ப் பலிகளை வேண்டியவை அல்ல. தொண்டர்களைத்  தீக்கிரையாக்கி தலைவர்கள் நினைவுகூர கண்டவையும் அல்ல.

ஒரு தலைவரை அவர் பிறந்த நாட்டின் எல்லை கடந்து, மொழிகடந்து, நிறம் கடந்து, சமயம் கடந்து   எவ்வித நெருக்கடியும் இல்லாத நிலையில் உலகமக்களில் ஒரு பகுதியினர்ஒவ்வொரு நாளும்  நினைவு கூரும் அதிசயம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.  பிரான்சு நாட்டில் மட்டும்,  நாங்கள் வசிக்கின்ற ஸ்ட்ராஸ்பூர் உட்பட மூன்று நகரங்களில் (இந்த எண்ணிக்கை கூடுதலாக இருக்குமே அன்றி குறைவாக இருக்க வாய்ப்பில்லை. )  அரசின் பங்களிப்புடன் காந்தி சிலைகள். நிறுவப்படுள்ளன.  நகரில்  உள்ள ‘Café Philo’ விலும் ‘Espace Culturel des Bateliers என்கிற அமைப்பின் தத்துவ கலந்துரையாடல்களிலும் , வருடந்தோறும் காந்திய சிந்தனைகள் குறித்து பேசப்படுகின்றன, விவாதிக்கப்படுகின்றன. அமைதி குறித்த அரங்குகளில் ஐநா சபை தொடங்கி பிரான்சு பாராளுமன்றம்வரை அவப்போது  காந்தி  என்கிற மூன்று எழுத்து ஒலிக்கிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா முதல் இந்நாள் பிரெஞ்சு அதிபர் மக்ரோன்வரை காந்தி பெயரை உச்சரிப்பதைச் செய்திகளில் கேட்கிறோம், பார்க்கிறோம்.

இங்கேதான்  நமது வள்ளுவனின் :

‘ தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்’

குறள் உதவுகிறது. இக்கட்டளைக்கல் சராசரி மனிதர்களை மட்டுமல்ல,  தலைவர்களை உரசிப்பார்க்கவும் உதவும். இங்கே எச்சம் என்பதை  ஒரு தலைவர் விட்டுச்சென்ற கொள்கைகள், புகழ்கள், சிந்தனைகளாக மட்டுமின்றி அவர் விட்டுச்சென்றவற்றை உண்மையாகப் பின்பற்றி அதில் வெற்றியும் பெற்ற  அப்பழுக்கற்ற சீடர்களாகவும் காண வேண்டும். காந்தியின் சீடர்களும் அவரைப்போலவே உலகெங்கிலும் அறியப்பட்டிருக்கிறார்கள் என்பது காந்திக்குக் கிடைத்த பெருமை. இப்படியொரு பெருமை உலகில் வேறுதலைவர்களுக்கு இன்றைய தேதியில் வாய்த்ததில்லை. நெல்சன் மண்டேலாவின் சுயசரிதையையும்,  மார்ட்டின் லூதர் கிங்கின் சுயசரிதையையும் காந்தி என்கிற பெயரின்றி வாசிக்க இயலாது என்பது வரலாறு தரும் உண்மை. இத்தலைவர்கள் காந்தியைத் தங்கள் பிழைப்புக்காகக் கொண்டாடியவர்கள் அல்ல. எங்கோ பிறந்த ஒரு தலவைனை சாதிய விடுதலை, சமய விடுதலை, வர்க்க விடுதலை என்ற முழக்கமின்றி தங்கள் இன விடுதலைக்கு முன்னோடியாக கொண்டு  நேசித்த அபிமானிகள். காந்தியைத் ‘ தக்கார்’ என்பதை உலக அரங்கில் எண்பிக்கும் எச்சங்களாக இருப்பவர்கள் யாரோ எவரோ அல்ல ஆப்ரிக்க காந்தி என ழைக்கபடும் நெல்சன் மண்டேலாவும், அமெரிக்க காந்தி என அழைக்கபடும் மார்ட்டின் லூதர் கிங்கும்.

காந்தி குறைகளற்ற மனிதரா ?  அப்படி யாராவது  ஒருவர் உலகில் உண்டென்றால் சொல்லுங்கள். ஒரு மனிதனை உரசிப்பார்த்து அறிய அவரைக் கொண்டாடுகிறவர்கள் யார் என்றும் பார்க்கவேண்டும்.

உலகில் பண்பட்ட மனிதர்கள் என நம்பப்படுகிற  பிரெஞ்சு மொழி அறிவு ஜீவி ரொமன் ரொலான் (Romain Rolland) என்பவரும் நமது மகா கவியும் காந்தியைப் கொண்டாடுவது எனக்கு முக்கியமாகப் படுகிறது.

Romain Rolland :

« De tranquilles yeux sombres. Un petit homme débile, la face maigre, aux grandes oreilles écartées. Coiffé d’un bonnet blanc, vêtu d’étoffe blanche rude, les pieds nus. Il se nourrit de riz, de fruits, il ne boit que de l’eau, il couche sur le plancher, il dort peu, il travaille sans cesse. Son corps ne semble pas compter. Rien ne frappe en lui, d’abord, qu’une expression de grande patience et de grand amour »

மகா கவி :

வாழ்க நீ எம்மான்

வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க!

நன்றி திண்ணை

———————————————————–

மொழிவது சுகம் கட்டுரைகள் -3:ஒரு ‘போ(Po)’ன மொழியின் கதை

( மொழிவது சுகம் நூல் தொகுப்பிலிருந்து )

 

அந்தமான் நிக்கோபார் தீவுகளி சேர்ந்த போவா(Poa) இனத்து முதியவள் அப்பெண்மணி. மரணம் கதவைத் தட்டிக்கொண்டிருந்த நேரம். பிறரிடம் கதைக்க அவரிடம் சொற்கள் இருந்தன, கேட்பதற்கும், புரிந்துகொள்ளவும் காதுகளும், மொழிஞானமும் உள்ளவர்களில்லை. எத்தனை நாட்களுக்குத் தற்கூற்றுமொழியில் தனக்குத்தானே அல்லது சூன்யத்துடன் கதையாடமுடியும். தமது பால்ய வயது அனுபவங்களையும், தாமறிந்த கதைகளையும் இவரது ‘போ’ மொழியில் புரிந்துகொள்ளவல்ல ஒரே மனித உயிராகவும் துணையாகவுமிருந்த அவரது அன்னை இறந்து 30 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அன்று தொடங்கி கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் பொழுதை இயற்கையோடு கழித்தவராம்: பறவைகளும் விலங்குகளும் தமது மூதாதையார் மொழிகளை அறிந்தவைகள் என்ற வகையில் அவற்றுடன் நேரம் கிடைக்கும்போதெல்லாம் உரையாடிவருவாராம்.

 

கடந்த மாதம் முதல் வாரத்தில் 85வது வயதான அம்மூதாட்டி இறந்துபோனாள். அவளோடு இந்திய துணைக்கண்டத்தில் பேசப்பட்டுவந்த மிகப்பழமையான மொழிகளில் ஒன்றும் ஒப்பாரிக்கு ஆளின்றி புதைக்கபட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். சொற்கள் உலகை நமக்கு புரியவைக்கின்றன. சொற்கள் கட்டமைக்கும் உலகமென்பது எல்லகளற்ற பரந்த வெளி, பேரண்டம். ஒவ்வொரு மொழியும் தமது சொற்களுக்கென தனித்துவத்தைக் கூர்தீட்டிவைத்திருக்கிறது. சொல்லின் புரிதல் அகராதிகளால் தீர்மானிக்கப்படுவதல்ல, அதற்கும் அப்பாற்பட்டது. எண்பத்தைந்து வயது போவா பெண்மணியோடு ‘அவளுடைய மொழிமாத்திரமல்ல, அம்மொழிகொண்டிருந்த அறிவுத் திரட்சியும் – வரலாறு, பண்பாடு, சடங்குகள், மரபுகளென்ற பிற விழுமியங்களும் காற்றில் கலந்தன. போவா பெண்மணிக்கு அந்தமான் நிக்கோபார் தீவுகளிலுள்ள பல்வேறு வகையானத் தாவரங்களின் பெயர்கள் மனப்பாடமாகத் தெரியுமாம், வேறு மொழிகளில் மூங்கிலுக்கு அவ்வளவு பெயர்களில்லை என்கிறார்கள். ஆக ஒரு மொழியின் இழப்பென்பது பண்பாட்டின் இழப்பு மாத்திரமல்ல பல நேரங்களில் இயற்கையையும் அதன் கூறுகளைப்பற்றிய ஞானத்தையும்  தன்னகத்தே கொண்ட இழப்பு. .

 

அந்தமான் நிக்கோபார் தீவு  மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஆறுமொழிகளுள் போவாமக்களின் போ(Po) மொழியுமொன்று  என்கிறார்கள். கடந்த நூற்றாண்டில் ஏறக்குறைய 5000பேர்கள் பேசிவந்த மொழி. உலகில் அதிகமொழிகளைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஐக்கியநாட்டு சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவிலிலுள்ள மொத்த மொழிகளின் எண்ணிக்கை 1635, அவற்றுள் 37 மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானபேர் உபயோகிக்கின்றனர். இந்தியாவிலுள்ள மொழிகளுள் 196 மொழிகள் வெகுவிரைவில் அழிந்துபோகுமென்றும் யுனெஸ்கோ அறிக்கை தெரிவிக்கிறது(1). இந்திய அரசியல் சட்டம் 22 பிரதான மொழிகளை அரசு மொழியாக ஏற்றுக்கொண்டிருந்தபோதிலும் நாடு தழுவிய மொழிகளாக ஆங்கிலமும், இந்தியும் இருக்கின்றன. அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் உள்ள 85 விழுக்காடு மக்களுக்கு இந்தி தாய் மொழி அல்ல, இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் குடியேறிவசித்துவரும் அவர்களுக்கு இன்று இந்திதான் பிரதான மொழி. வளர்ந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மலையாளம் இன்ன பிற மொழிகள் இந்திக்காகத் தம்மை அங்கே அழித்துக்கொண்ட பிறகு ஆதரவற்ற ‘போ’மொழி இத்தனை நாள் நீடித்ததே கூட வியத்தலுக்குரியது. தனிமனிதன், அவன் சார்ந்த சமூகம், அரசு இம்மூவரும் மொழியின்பால் அக்கறைகொண்டவர்களாக இருக்கவேண்டும். இந்திய மைய அரசைப்பொறுத்தவரை மாநிலத்திலுள்ள மொழிகளுக்கு ஆதரவாக எடுக்கும் எந்த முடிவும் இந்திய ஸ்திரத் தன்மைக்கு எதிராக முடியுமென்ற உண்மையை அவர்கள் அறியாதவர்களல்ல. தவிர குஜராத்திகளும், பஞ்சாபிகளும், இராஜஸ்தானியர்களும், பீகாரிகளும் தங்கள் மொழியிடத்தில் இந்தியை ஏற்றுக்கொண்டபிறகு, பிறருக்கு ஒரு நீதியெனில் எப்படி? ஆக பிறமொழிகளைப்போலவே தமிழின் தலையெழுத்து தமிழ்நாடு அரசு மற்றும் தமிழர்களைச் சார்ந்தது. இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இலத்தீன் அமெரிக்கநாடுகளில் போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ் மொழிகளும். ஆப்ரிக்க நாடுகள் மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தில் பிரெஞ்சும் ஆங்கிலமும் எஜமானர்கள். எங்கள் கிராமத்தில் பண்ணைகளில் வேலைசெய்தவர்களிற் பலர் பின்னாட்களில் சென்னைக்குச் சென்று துறைமுகத்திலும், கொத்தவால் சாவடியிலும் வேலைபார்த்து பொங்கலுக்கும் ஊர் திருவிழாவுக்கும் கிராமத்துக்கு வருவார்கள். கூட்டுறவு வங்கிகளிலும், சில நேரங்களில் சென்னையிலுள்ள தங்கள் பண்ணையாட்களிடமும் கடன்பட்டு வரப்பில் குடைபிடித்து நடக்கப்பழகிய ஒன்றைரை ஏக்கர் நிலக்கிழார்கள் ஜமீன்தார் மனோபாவத்துடன்  தனது முன்னாள் பண்ணையாட்களை விசாரிப்பார். அந்த முன்னாளும் வேட்டியும் சட்டையும் போட்டபின்பும், ‘ஐயா ஏதோ உங்கள் புண்ணியத்துலே நல்லா இருக்கேன்’, என்று கூறிவிட்டு கொத்தவால் சாவடியிலிருந்து கொண்டுவந்த வாழைப்பழதாரை கொடுத்துவிட்டு காலில்விழ, ஆசீர்வாத கூத்தும் நடக்கும். காமன் வெல்த் நாடுகள் என்ற முத்திரையும், கிரிக்கெட் மட்டையை தூக்கிபிடிக்கிறபோதும், ஆங்கிலத்தைப் பேசுகிறபோதும் அதுதான் நடக்கிறது. மேதகு விக்டோரியா மகாராணிக்கு நாம் நிரந்தர அடிமைகள். ஆண்டானிடமிருந்து அடிமை விடுதலை பெறுவதும், முதலாளியியத்திடமிருந்து தொழிலாளியின் விடுதலையும், காலனிய ஆதிக்கத்திலிருந்து சுதந்திரமுமென அரசியல் விடுதலையைச் சந்திக்க முடிந்தது, ஆனால் பண்பாட்டு விடுதலை என்பது வேறு, அதற்கு விடுதலைக்கான கதவுகள் அடைப்பட்டதுதான் ஒருபோதும் திறவாதவை.  நமது வாழ்க்கை மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் வணிகத் தந்திரங்களாலானது என்றானபிறகு,  மொழியில் தமிழராக நீடிப்பது எத்தனை தலைமுறைக்கு சாத்தியம்.

 

அந்தமான் தீவு போவாப் பெண்மணியின் உதாரணத்தை பிரான்சு நாட்டிலுள்ள மொரீஷியஸ் தமிழர்களின் வீட்டிலும் சந்திக்கிறேன். ஒவ்வொரு மொரீஷியர் தமிழர் வீட்டிலும் எழுபது அல்லது எண்பது வயதில் ஒரு முதியவரோ அல்லது மூதாட்டியோ இருப்பார்கள். அவர்களுக்கு தமிழ் வருமென்று சம்பந்தப்பட்டவர்களின் மகனோ மகளோ தெரிவிப்பார்கள். பிறகு திடீரென்று ஒருநாள் அந்த முதியவரையோ அல்லது மூதாட்டியையோ கைப்பிடித்து அழைத்து வருவார்கள். இருக்கின்ற மூன்று படிகளை ஏறிமேலேவர ஐந்து நிமிடமெனில், மூச்சிறைப்பு அடங்கி சுவாசம் தனதியல்புக்கு வர ஒரு ஐந்து நிமிடம்பிடிக்கும். அதற்குள் அவரது மகனோ மகளோ பேசு பேசு என்று அவசரப்படுத்துவார்கள். வெகுகாலமாக உபயோகமின்றிக் கிடந்த ‘தமிழ்’, காற்றும் உமிழ்நீருமாக கலந்து வரும்: ‘வணக்கம்’ என்பார், பதிலுக்கு ‘வணக்கம்’,  என்பேன். ‘பொண்டாட்டி எப்படி?’ என்று அடுத்த கேள்விவரும், ‘இதற்கு என்ன பதிலைச் சொல்வதென்று? தெரியாமல் நான்  என் மனைவியைப் பார்க்க, அவள் புதுப்பெண்போல தலையைக் குனிந்துகொண்டிருப்பாள். நான் விழிப்பதைவைத்து, தமிழில் பேசி என்னை மடக்கிவிட்டதாக நினைத்து சந்தோஷத்துடன் புறப்பட்டுச் செல்வார்கள். அடுத்த சில மாதங்களில் அம்மொரீஷியரின் குடும்பத்தில் தமிழறிந்த அந்த ஒரு உறுப்பினர் இறந்திருப்பார். தமிழ்மொழியும் அவரோடு சேர்ந்து  அக்குடும்பத்திலிருந்து விடுபட்டிருக்கும். இது பெரும்பாலான மொரீஷியஸ் தமிழ் குடும்பங்களின் நிலை. இன்றைய மொரீஷியர் தமிழரின் தமிழர் பண்பாடு¦ன்பது நிறம், பெயர்கள், கடவுள் வழிபாடுகளில் மட்டுமே முடங்கிக்கிடக்கிறது, மொழி அடையாளமில்லை. தென் ஆப்ரிக்கா, இந்தியப் பெருங்கடலிலுள்ள தீவுகள் தமிழரிடத்திலும் எஞ்சியிருப்பது மேற்கூறப்பட்ட குறியீடுகள்தான். அதாவது பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழ் மண்ணிலிருந்து விடுவித்துக் கொண்ட நமது மூதாதையர்களின் இன்றைய நிலைமை இது. ஒரு நூறாண்டுகாலம் கடந்ததென்றால்  அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களை முன்னிட்டு புலம்பெயர்ந்துள்ள இலங்கை அல்லது இந்திய தமிழ்க்குடும்பங்களுக்கும் இதுதான் நேரும்.

 

தமிழர்கள் தமிழை மறக்காலிருக்க எனக்குத் தெரிந்த யோசனை, பேசாமல் தமிழை வரமளிக்கிற தேவதையாக மாற்றி, மாநாடுகளைக்கூட்டாமல் குடமுழுக்கு கும்பாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்வது. நமது  பொதுப்பண்பின்படி தீமிதித்தோ, தேர் இழுத்தோ, கிறிஸ்துவ சகோதரர்களெனில் தமிழ்பூஜை வைத்தோ மொழியை நாம் மறக்காமலிருக்க இது உதவும். தமிழர்களின் நலன்கருதி இனமானத் தலைவர் வீரமணியும்  கலைஞரிடம் இதைப் பக்குவமாக எடுத்துச்சொல்லவேண்டும், இப்போதுள்ள சூழலில் அவரும் கேட்பார் போலத்தான் தெரிகிறது.

————————————–

 

 

 

மொழிவது சுகம் கட்டுரைகள் – 2:

சுவர்கள்: பெர்லின் முதல் உத்தபுரம்வரை

 

(இக்கட்டுரைகள் பத்தாண்டுகளுக்கு முன் பு எழுதப்பட்டவை யுகமாயினி இதழிலும், பின்னர் நூலாகவும் வெளிவந்தவை)

அந்நியரிடமிருந்து சொந்த உடமைகளைக் காத்துக்கொள்ள வேலி. அதிகாரமும், நீதியும் உங்கள் கையிலிருப்பின் நத்தம், புறம்போக்கு, அனாதீனங்களை உடமையாக்கிக்கொள்ளவும் வேலிபோடலாம். கட்சி பேதமின்றி எல்லா தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அதற்கான சாமர்த்தியமுண்டு. அமைச்சரில் ஆரம்பித்து, கிராம நிர்வாக ஊழியர்வரை அவரவர் செல்வாக்கிற்கேற்ப பொதுநிலத்தை அபகரிப்பதென்பது ஒரு கலையாகவே இங்கே வளர்ந்திருக்கிறது. ஒருவரும் விதிவிலக்கல்ல. இவர்கள் எல்லோருக்குமே சட்டம் தமது கடமையைச் செய்யுமென்று நன்றாகத் தெரியும். நடிகனென்றால் தமிழ்நாட்டில் அரசு பொது நோக்கிற்காக கையகப்படுத்திய நிலத்தைக்கூட கேட்டு வேலிபோட முடியும். ஏழைகள் சிரிப்பில் இறைவனை காண்பவர்களில்லையா? அந்நியரிடமிருந்து சொந்த உடமைகளைக் காத்துக்கொள்ள மாத்திரமல்ல, அரசு எந்திரங்களின் ஆசீர்வாதத்தோடு பொதுசொத்தை அபகரிக்கவும், அப்பாவி தமிழ் அகதிகளை பட்டியில் அடைக்கவும் வேலிக்கு உபயோகமுண்டு. இந்த வேலிக்கு இன்னொரு வடிவமும் உண்டு பெயர்: சுவர்.

 

பிரிவினையென்றால் தடுப்புச் சுவர் எழுப்பி வாழப் பழகுவதென்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல, காலங்காலமாய் மனிதர் இரத்தத்தில் கலந்தது. ஆற்றோரங்களை மனிதரினம் தேடிப்போனபோது ஏற்பட்டிருக்கலாம். தமக்கென்று ஒரு குடிசைவேண்டுமென கலவி முடித்த ஆதாமும் ஏவாளும் யோசித்திருப்பார்கள். சுவர் பிறந்த காரணத்திற்கு சுயநலம் ஒரு கிரியாஊக்கி. மனிதரினத்தில் இச்சுவர்களுக்குப் பல பெயர்கள். நிறம் என்கிறோம், சாதி என்கிறோம், மதம் என்கிறோம், மொழி என்கிறோம், உங்களுக்குத் தெரிந்த இங்கே சொல்ல அலுப்புற்றவையும் அவற்றுள் அடக்கம். அவரவர்க்கு கிடைத்த கற்களைக்கொண்டு சுவர் எழுப்புவது மாத்திரம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சுற்றுச் சுவருக்குளே உட் சுவர்களும் உண்டு. வெங்காயம்போல உரித்துக்கொண்டுபோனால் தனிமைச் சுவரில் அது முடியும். ஒருவகையில் அது நான், எனதென்ற சுயமோகத்தின் உச்சம். ‘பிறர்’ என்ற சொல்லின் மீதான அச்சம். ஆனாலும் சுவர்கள் நிரந்தரமானதல்ல என்பதும் வாழ்வியல் தரும் உண்மை. அடைப்பட்டுக்கிடந்தவன் அலுத்துபோய் ஒரு நாள் சன்னலைத் திறக்கிறான், பிறகொருநாள் கதவைத் திறக்கிறான். ஆனாலும் ஒருவன் கதவினைத் திறக்கிறபோது உலகின் ஒரு மூலையில் இன்னொருவன் கதவினை அடைத்துக்கொண்டு எனக்கு ஒருவரும் வேண்டாம் என்கிறான்.  இன்னாதம்ம இவ்வுலகம் இனியது காண்பர் அதன் இயல்புணர்ந்தோர், என்று கூறி நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்வதைத் தவிர வேறு வழிகளில்லை.

 

கடந்த வாரம் நவம்பர் 9ந்தேதி பெர்லின் சுவர் வீழ்ந்து இருபது ஆண்டுகள் முடிந்த தினத்தை கோலாகலமாக ஜெர்மன் நாடு தமது நட்புநாடுகளுடன் சேர்ந்து கொண்டாடியது. அந்த வெற்றிக்குப்பின்னே மிகப்பெரிய சோகம் ஒளிந்துகிடக்கிறது. நாஜிகள் செய்தபாவத்திற்கு ஜெர்மன் மக்கள் மிகமோசமாக தண்டிக்கப்பட்டனர். ஸ்டாலின் அரக்க மனம் ஹிட்லருக்கு எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல. ஹிட்லராவது தனது ஆட்சிகாலத்தில் தன்னைச் சார்ந்தவர்களையும் தன்னினத்தையும் நேசித்தான். ஸ்டாலின் தன் நிழலைக்கூட நம்பியவனல்ல. இன்றைய இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களைப்போலவே பெர்லின் நகரத்தை சேர்ந்த ஒவ்வொரு ஜெர்மானிய குடும்பத்திலும் உயிரிழப்புண்டு, போரின் வடு உண்டு. நாஜிப்படைகளுக்கு தரத்தில் ஓர் இம்மி அளவும் செம்படைகள் குறைந்தல்ல. இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜெர்மன் வீழ்ந்து 1945ம் ஆண்டு சோவியத் யூனியன் படைகள் பெர்லின் நகரத்திற்குள் நுழைந்தபோது இரண்டு மில்லியன் பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளானார்கள். அடுத்து இரண்டாம் உலகப்போரில் வெற்றிக்கு உதவியமைக்கு நன்றிக்கடனாக இங்கிலாந்தும், அமெரிக்காவும் ஜெர்மனியிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளை சோவியத் ரஷ்யாவே வைத்துக்கொள்ளலாமென சம்மதிக்க பெர்லின் நகரம் பாட்டாளிகளின் அரசு என்றபெயரில் 1945ம் ஆண்டு ஜூலைமாதம் காம்ரேட்டுகள் வசமானது. கிழக்கு ஜெர்மனியில் தங்கிய சோவியத்படை உள்ளூர் காம்ரேட்டுகள் துணையுடன் நடத்திய அராஜகத்தில் பாதிக்கக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கும் மேல். அவர்களில் சம்பவத்தின்போது இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே பத்தாயிரத்துக்குமேல். நடந்தகொடுமைகளை வெளியிற் சொல்ல அருபது ஆண்டுகள் அவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. நாஜிகள் வீழ்ச்சிக்குப்பிறகு அதன் தலைவர்கள் விசாரணக்குட்படுத்தபட்டு தண்டித்தது நியாயமெனில் அதே போர்க்கால குற்றங்களுக்காக தண்டிக்கப்படவேண்டியவர்கள் மேற்கத்திய படைளிலும், சோவியத் படைகளிலும் பலர் இருந்தனர் ஆனால் அது நடக்கவில்லை. சரித்திரம் ஜெயித்தவனை நியாயவானாக ஏற்றுக்கொள்கிறது, குற்றங்களிலிருந்து தற்காலிகமாக விடுதலை அளிக்கிறது.

 

மார்க்ஸியத்தை ஏற்றுக்கொண்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலேயே ஓரளவிற்கு வளத்துடன் இருப்பதாக நம்பப்பட்ட கிழக்கு பெர்லினிலிருந்து நாள் தோறும் மக்கள் வெளியேறி மேற்கு ஜெர்மனிக்குச் சென்றுக் கொண்டிருந்த நிலையில் (1948க்கும் -1961ற்குமிடையில் மேற்கு ஜெர்மனிக்குக் புலம்பெயர்ந்த கிழக்கு ஜெர்மனியர்கள் 2.7மில்லியன்பேர்கள்), கம்யூனிஸ நாடுகளில் பாலும் தேனும் பாய்ந்தோடுகிறது என்ற பிரசாரத்தைக் கேலிகூத்தாக்கியது. கூட்டம்கூட்டமாக மக்கள் வெளியேறுவதைத் தடுக்க நினைத்த கிழக்கு ஜெர்மன் அரசு சுவர் எழுப்ப தீர்மானித்தது. மேற்கத்தியர்கள் பணம்கொடுத்து கிழக்குஜெர்மனியர்களை விலைக்கு வாங்குவதாகவும், மனிதக் கடத்தலைத் தடுப்பதற்காகவே சுவர் எழுப்பப்படுவதாகவும் கிழக்கு ஜெர்மன் அரசுதரப்பில் விளக்கம் சொன்னார்கள். 165 கி.மீ நீளமும் 302 காவல் அரண்களும், குறிபார்த்து சுடுவதில் வல்ல காவலர்களும், மின்சாரம் பாய்ச்சப்பட்ட வேலியும், தானியியங்கி துப்பாக்கிப் பொறுத்தப்பட்ட காவல் தூண்களுங்கொண்ட சுவர் 1961ல் பெர்லினை இரண்டு துண்டாக்கியது. தாயின் மார்பிலிருந்து குழந்தையைப் பிடுங்கி எறிந்ததுபோல உறவுகள் பிரிக்கபட்டனர். கடுமையான காவலையும் மீறி உயிரை பணயம்வைத்து சுவரைக் கடக்க நீர், நிலம், ஆகாயமென அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. துப்பாக்கிக்குண்டுக்குப் பலியானவர்கள் உண்டு, கைது செய்யப்பட்டவர்கள் உண்டு; எனினும் முயற்சி தொடர்ந்தது. அதிகாரத்தையும், பொய்யான பிரச்சாரங்களையும் மட்டுமே நம்பி மார்க்சியத்தை செயல்படுத்திவந்தவர்கள் தங்கள் தோல்வியை உணர்ந்தபோது நிலைமை கைமீறிவிட்டது. 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ந்தேதி பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. பெர்லின் சுவரோடு ஐரோப்பியக் கண்டத்தைப் பொறுத்தவரை கம்யூனிஸமும் இடிந்து விழுந்தது. மேற்கத்திய ஐரோப்பியநாடுகளுக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே அதுகாறும் நிகழ்ந்துவந்த நிழல் யுத்தமும் பனிப்போருங்கூட அத்துடன் முடிவுக்குவந்தன.

 

1989 பெர்லின் சுவர் இடிக்கபட்ட அந்த ஆண்டில்தான் தமிழ் நாட்டில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த உத்தபுரமென்ற கிராமத்தில் தலித் மக்களுக்கு எதிராக சுவரொன்றை  எழுப்புவதற்குக் காரணங்களைத் தேடியிருக்கிறார்கள். தேடியவர்கள் உயர்சாதிமக்கள் என்று சொல்லிக்கொள்கிற வேற்று சாதியினர். பிரச்சினை ஒருபக்கம் அரசமரம், மற்றொருபக்கம் முத்தாலம்மன் கோவில். முத்தாலம்மன் பக்தர்களான சாதியினருக்கு அரசமரம் சுற்றும் சாதியினர் அருகில் வரக்கூடாதாம். அரசமரத்துக்கும் முத்தாலம்மனக்கும் இடையே பத்தடிதூர இடைவெளியை அவர்கள் இரு சாதிகளுக்கான இடைவெளியாகக் கணக்கிட்டுவிட்டார்கள் போலிருக்கிறது. சாதிச்சண்டைவளர்ந்து, அரசாங்கத்தின் ஆதரவு எப்போதும் பலம் வாய்ந்தவன்பக்கம் என்ற நீதிப்படி உருவான ஒப்பந்தத்தை ஏற்கும்படி தலித்மக்கள் வற்புறுத்தப்பட்டார்கள். 1989ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் இரு சாதியினருக்குமிடையில் நடந்த மோதலில் சாதிக்கு இரண்டென உயிர்ப்பலிகளை முத்தாலம்மனுக்கும் அரசமரத்திற்கும் கொடுத்திருக்கிறார்கள். பிரச்சினைக்குத் தீர்வாக 300 மீட்டருக்குத் தடுப்புச் சுவர். தண்ணீர்த் தொட்டி, ரேஷன்கடை, பள்ளிக்கூடம் தலித்துக்கென்று தனியே ஒதுக்கி தமது உயர்சாதியினர்(?) குணத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். 2008ம் ஆண்டு கள ஆய்வில் இறங்கிய மதுரை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலையீட்டால் உண்மை வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கிறது. கிழக்கு ஜெர்மனியில் சுவரை எழுப்பிய பொதுவுடமைத் தோழர்கள் உத்தபுர தீண்டாமைச் சுவரை இடித்தாகவேண்டுமென்று புறப்பட்டது காலத்தின் கட்டளை. 61ல் எழுப்பட்ட பெர்லின் சுவரை இடிக்க 1989 வரை  ஜெர்மன் மக்கள் காத்திருக்கவேண்டியிருந்தது 1989ல் காந்தி தேசத்தில், பெரியாரை போற்றும் மாநிலத்தில் தலித் மக்களுக்கெதிரான உத்தபுர சுவரை முழுவதும் இடிக்க எத்தனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டுமோ? பாலஸ்தீன மக்களைத் தடுத்து அவர்கள் நிலப்பரப்பை கையகப்படுத்தி 2005 ஆண்டில் உலநாடுகளின் எதிர்ப்பை துவம்சம் செய்து இஸ்ரேலியர்கள் கட்டிக்கொண்டிருக்கிற சுவரையும் இங்கே அவசியம் நினைவு கூர்தல்வேண்டும்.

 

லூயி தெ பெர்னியே என்ற எழுத்தாளர் தமது நாவலொன்றில் ‘சரித்திரத்திற்கு ஆரம்பமென்று ஒன்றில்லை என்பார். அவரைப் பொறுத்தவரை இன்றைய நிகழ்வு நேற்றைய சம்பவத்தின் விளைவாக இருக்கலாம் அல்லது நாளைக்கு நடக்கவிருப்பதின் காரணியாக இருக்கலாம். வரலாறு வெற்றிபெற்றவர்களால் மட்டும் எழுதப்படுவதல்ல, ஒடுக்கப்பட்டவர்களாலும் எழுதப்படுவது, என்ற நம்பிக்கை எனக்குமுண்டு. அவ்வப்போது எழும் முனகலுங்கூட உரத்து ஒரு நாள் ஒலிக்குமென நம்புகிறவன். உலகமே எனதுகையிலென்று கொக்கரித்த பலரும் கேட்பாரற்று செத்து மடிந்திருக்கிறார்கள். இலங்கைத் தமிழனமோ, பாலஸ்தீனமோ, உத்தபுரமோ ஒடுங்கிவிடாது. அவர்களுக்கான காலம் வரும் வேலியோ, சுவரோ எடுபடும், இடிபடும். சரித்திரம் அவர்களது வெற்றிக்கெனவும் சில பக்கங்களை ஒதுக்கியிருக்கிறது.

 

——————————

 

நாமார்க்கும் குடியல்லோம்

நாமார்க்கும் குடியல்லோம்

( மொழிவது சுகம் நூல் தொகுப்பிலிருந்து  )

“காலையில் எழும்ப வேண்டியது

ஒரு கோணியோடு

ஒரு தெருவு நடந்தால் போதும்

கோணி நிறைந்துவிடும்

காகிதங்கள் ஏராளம் செலவாகின்றன

தலை நிமிர்ந்து வாழலாம்”

 

என்கிற வரிகளும்,  “ஐம்பது பைசாவிற்கு கால் மடக்கி கையேந்துகிறது எங்கள் ஊர் யானை”  என்ற வரியும் தமிழர்களைப் பற்றிய சித்திரமாக கவிஞர் மு. சுயம்புலிங்கத்தினால் சுட்டப்படுகிறது. அவரவர்க்கு ஒரு கோணி கைவசம் இருக்கிறது, நிரம்புகிறது. தலை நிமிர்ந்து வாழ்கிறோம். சுதந்திரமென்றும் சொல்லிக்கொள்கிறோம். கோணி மனிதர்களுக்கு மாத்திரமல்ல தன்மானமிக்க ஆனைகளுங்கூட மேடை தானமாகக் கிடைத்தால் கால் மடக்கி, பணிவு காட்டும் சுதந்திரம். தார்மீகச் சுந்திரமா? சட்டம் தரும் சுதந்திரமா என்ற கேள்விகளுக்கு அவசியமில்லை. நாம் பிழைக்கிறோம் என்பது முக்கியம். மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ, எனக்கேட்கும் துணிச்சல்மிக்க எழுத்தாளர்கள் தமிழுக்குச் சாத்தியமா? என்ற கேள்வி கவிஞர் சுயம்புலிங்கத்தின் கவிதைகளை வாசித்த பிறகு எழுகிறது.

 

மரிதியய் கம்பனுக்கு வேண்டியவர்(இரண்டு வாரங்களுக்கு முன்பு அவரைக் குறித்து எழுதியிருந்தேன், இக்கட்டுரையை அதன் தொடர்ச்சி எனலாம்). பிரெஞ்சில் இன்றைய தேதியில் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர்: கறுப்பரினம், பெண்மணி என்பது இலக்கியத்திலும் கோட்டாவை வற்புறுத்தி அடையாளம் பெற நினைப்பவர்களுக்கு உதவக்கூடிய தகவல். 2009ம் ஆண்டுக்கான கொன்க்கூர் இலக்கிய பரிசினை, நியாயமானத் தேர்வில் வென்றவர். ஆனாலும் அப்பெண்மணி பரிசுக்குரியவரல்ல என்ற விமர்சனம் வந்தது. விமர்சித்தவர்கள் அப்பெண்மணியின் எழுத்தாளுமையையோ, பரிசுக்குரியதாகத் தேர்வு செய்த அவரது நூலையோ கேள்விக்குட்படுத்தவில்லை, அவரது பிரெஞ்சு அடையாளத்தைக் கேள்விக்கு உட்படுத்தினார்கள். தற்போது பிரெஞ்சு அதிபராக உள்ள நிக்கோலாஸ் சர்க்கோசியினுடைய கடந்த கால செயல்பாடு பிரான்சு நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களுக்கு எதிரானதாக இருந்ததென்ற குற்றசாட்டு உண்டு. நகரின் பின் தங்கிய பகுதிகளில் வாழ்ந்த கறுப்பரின மக்களும், அரபு மக்களும் குறிப்பாக இளைஞர்கள் அவரை இனவெறியாளரென்றே சித்தரித்திருந்தார்கள். அவர் உள்துறை அமைச்சராக இருந்த நேரத்தில் புலம்பெயர்ந்த மக்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் அறிவு ஜீவிகளை முகஞ்சுளிக்க வைத்தன. சர்க்கோசி 2007ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டபொழுது கறுப்பரினத்தை சேர்ந்த அறிவுஜீவிகள், கலையுலக பெருமக்கள், பாடகர்கள் எனப் பலர் அவருக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்படி சர்க்கோசியின் எதிரணியிலே இடம்பெற்றவர்களுள் மரி தியய்யும் ஒருவர். அதிபர் தேர்தல் முடிவு சர்க்கோசிக்கு ஆதரவாக இருந்தது. வெற்றிபெற்றதாக அறிவிக்கபட்டார். நிக்கோலாஸ் சர்க்கோசி ஒரு மிருகம், அத்தகைய மனிதரின் கீழ்வந்த பிரான்சும் எனது நம்பிக்கையை இழந்துவிட்டது, இங்கிருந்து வெளியேற விரும்புகிறேன், என்ற கூறி பிரான்சு நாட்டைவிட்டு வெளியேறியவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் தமது கணவருடன் வசித்து வருகிறார்.

 

மரி தியய்க்கு பரிசளித்திருக்கக்கூடாதென்று சொல்ல நினைத்த எரிக் ராவுல் என்ற ஆளும் கட்சி உறுப்பினர்: “2009ம் ஆண்டிற்கான கொன்க்கூர் இலக்கிய பரிசுக்கென அறிவிக்கபட்ட முடிவு தவறானது. தேர்வுக்குழுவினர் சரியான நபரை தேர்வு செய்ய தவறிவிட்டனர். பரிசுக்குரியவர் பிரான்சு தேசத்தின் அடையாளம் கொண்டவராகவும் அதன் பெருமைகளை போற்றுகிறவராக இருக்க வேண்டும். அதற்கு மாறாக இப்பெண்மணி (மரி தியைய்) நமது (பிரான்சு) நாட்டையும் நமது அதிபரையும் சிறுமைபடுத்தி பேசியிருக்கிறார். விமர்சித்து இருக்கிறார். இவ்விடயத்தில் நமது கலை, பண்பாட்டுத் துறை அமைச்சர் தலையிட்டு ஆவன செய்யவேண்டும்” என்றார். அவருக்கு ஆதரவாக குரல்கொடுக்க அதிபரின் துதிபாடிகளும் முன் வந்தனர். ஆனாலும் இப்பிரச்சினையில் கலை பாண்பாட்டுதுறை அமைச்சரும், பரிசு அளித்த கொன்க்கூர் அமைப்பும், தேர்வுக்குழுவில் அங்கம் வகித்த எழுத்தாளர்களும், பரிசுபெற்ற எழுத்தாளர் பெண்மணியும் என்ன சொல்லப்போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதில் பிரெஞ்சு மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

 

மரிதியய் பெண்மணியை பரிசுக்குரியவராகத் தேர்வுசெய்த படைப்பாளிகள் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கூச்சலை வன்மையான கண்டித்தனர். “அரசியல் வாதிகள் ஓய்ந்த நேரங்களில் இலக்கியமென்றால் என்னவென்று தெரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும். இலக்கிய பரிசினை ‘மிஸ் பிரான்சு’ தேர்வு என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். மரிதியய் என்ன எழுதியிருக்கிறார் எனப்பார்த்து பரிசினை அளிக்கிறோமே தவிர என்ன பேசினார் எனப்பார்த்து பரிசுவழங்குவதில்லை. தவிர சுதந்திரம் சுதந்திரமென்று வாய்கிழிய பேசுகிறோம், ஓர் எழுத்தாளரை இப்படி பேசக்கூடாது அப்படி பேசக்கூடாது என்று தெரிவிப்பதன்மூலம் இவர்கள் என்ன சொல்லவருகிறார்கள். சுதந்திரமான நாட்டில்தானே இருக்கிறோம்? என்ற கேள்வியையும் அரசாங்கத்தைப் பார்த்து கேட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக எழுத்தாளர்களும் களத்தில் குதித்தனர்.

 

கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சருக்கு வருவோம். இவர் பெயர் பிரெடெரிக் மித்தரான் முன்னாள் அதிபர் பிரான்சுவா மித்தரானின் சகோதரர் மகன். இடது சாரி சிந்தனையாளர், எழுத்தாளர், கலை விமர்சகர். தீவிர வலதுசாரி சிந்தனைகொண்ட சர்க்கோசி ஆட்சிக்கு வந்தவுடன், எதார்த்தவாதியானார். உலக அரசியலில் இனி தீவிர வலதுசாரிகளுக்கோ அல்லது தீவிர இடது சாரிகளுக்கோ இடமில்லை என்ற உண்மையை சர்க்கோசியும் அறிந்திருந்த காரணத்தால், தமது கட்சி அமைச்சரவையில் இடதுசாரி சிந்தனைவாதிகள் பலரை சேர்த்துக்கொண்டார். அவர்களுள் பிரடெரிக் மித்தரானும் ஒருவர். கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பதவி அவருக்குக் கிடைத்தது. வலது சாரி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தபோதும் அவரது இடதுசாரி சிந்தனையை எவரும் சந்தேகித்ததில்லை.

 

போலந்தில் பிறந்தவரும், தற்போது பிரான்சில் வசிப்பவருமான பிரபல திரைப்பட இயக்குனரான ரோமன் போலஸ்கியை (Rosemary’s Baby, Chinatown) சமீபத்தில் ஸ்விஸ் காவல்துறை கைது செய்தது.  அவர் கைது செய்யப்பட காரணம் 1977ம் ஆண்டு திரைப்படமொன்றை இயக்குவதற்காக அமெரிக்காவில் தங்கி இருந்தபொழுது இளம்வயது பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் பாலியியல்குற்றச்சாட்டு. இப்பிரச்சினையில், ரோமன் போலஸ்கி ஒரு பிரெஞ்சு குடிமகனாகவும் இருந்ததால் அமெரிக்காவைக் கண்டித்து  பிரடெரிக் மித்தரான் அறிக்கை வெளியிட்டார். முப்பது ஆண்டுகளைக் கடந்த ஒரு வழக்கில் வெறும் குற்றசாட்டுகளின் அடிப்படையில் ஒரு சாதாரண மனிதரைபோல ரோமன் போலஸ்கிபோன்ற கலைவிற்பனரை கைது செய்யவேண்டும், விசாரணைக்குட்படுத்தவேண்டுமென அமெரிக்கா எதிர்பார்ப்பது நியாயமல்ல என்றார். இவரது அறிக்கையை பலரும் கண்டித்தார்கள். போலன்ஸ்கியின் தவறை நியாயப் படுத்துகிறார் என்றார்கள். எனினும் அமைச்சர் ரோமன் போலஸ்கியை உணர்வு பூர்வமாக ஆதரித்ததைப் பலரும் சிலாகித்தார்கள். எனவே அமைச்சரின் கருத்து எழுத்தாளர் மரிதியய்க்கு ஆதரவாக இருக்குமென்று நம்பினார்கள். ஆனால் நடந்தது வேறு. ஓடோடிச்சென்று ரோமன் போலஸ்கியை ஆதரித்தவர், எழுத்தாளருக்கு ஆதரவாக ஒரே ஒரு வார்த்தை..ம் இல்லை. எழுத்தாளருக்கு உண்டான பேச்சு சுதந்திரம் எழுத்தாளரை விமர்சிக்கிறவர்களுக்கும் உண்டு எனக்கூறி தமக்கு அமைச்சர் பதவி அளித்த சர்க்கோசிக்கு விசுவாசமாக நடந்துகொண்டார். “ஐம்பது பைசாவிற்கு கால் மடக்கி கையேந்துகிறது எங்கள் ஊர் யானை” என்ற கவிஞர் சுயம்புலிங்கத்தின் வரிக்கொப்ப.

 

பிரான்சு நாட்டையும், அதிபரையும் விமர்சனம் செய்துவிட்டு, பிரெஞ்சு இலக்கிய பரிசினை வாங்குவது தவறு என்ற ஆளும் கட்சியின் விமர்சனத்தை பரிசுபெற்ற பெண்மணி மரி தியய் எப்படி எடுத்துக்கொண்டார். “இங்கே பாருங்கள் எனக்குப் பரிசினைக்காட்டிலும் பேச்சு சுதந்திரம் முக்கியம், அதிபர் சர்க்கோசி குறித்தும், அவர் நிர்வாகத்தின் கீழுள்ள பிரான்சு குறித்தும் எனக்கு இப்போதும் ஒரே அபிப்ராயந்தான். பரிசுக்காக அதிபரிடமோ, பிறருடனோ சமரசம் செய்துகொள்ள நான் தயாரில்லை”, எனக் கறாராகச்சொல்லிவிட்டார்.

 

“தனது எண்ணத்தையும் கருத்தையும் சுதந்திரமாகத் தெரிவிப்பதே மனித உரிமைகளுள் மிகவும் உன்னதமானது” என 1789ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் 26ந்தேதி மனித உரிமை பிரகடனத்தின் பிரிவுக்கூறு எண் 11 தெரிவிக்கிறது. அதன்படி ஒரு குடிமகன் சுதந்திரமாக பேசவும், எழுதவும், எழுதியதைப் பிரசுரிக்கவும் அது வழிவகுக்கிறது. ‘நான் சிந்திக்கிறேன் எனவே வாழ்கிறேன்’ – ‘Je Pense donc je suis’ என்பார் ரெனே தெக்கார்த். ‘எழுதுகிறேன் எனவே சுதந்திரமாக இருக்கிறேன்’, என்பது எனது சொந்தப் புரிதல். எழுத்து வெளியைப்போல ஒரு சுதந்திர உலகம் இருக்க முடியாது. எழுத்து என்னை வசீகரித்ததற்கும் பிரதான காரணம் இதுவே. சுதந்திரம் என்ற சொல் தனி மனிதன், சமூகம் என்ற இரு முனைகளுக்கும் கயிற்றில் நடக்க முயல்கிற கழைக்கூத்தாடியொருவனின் கவனத்தைப் பெற்றது. இரு முனைகளும் ஒத்துழைக்கவேண்டும். சில சில்லறைவிதிகளென்ற கம்பைக் கையிலேந்தியபடி பிசகாமல் அடியெடுத்து வைக்கும் வித்தை. சுதந்திரத்தினை இருவகையில் தனிமனிதன் பிரகடனபடுத்தமுடியும்: எதிர் தரப்பு அதிகாரத்திற்கு அடிபணிவதில்லை, கட்டளைக்குக் கீழ்ப்படிவதில்லை, இச்சைக்கு இணங்குவதில்லையென எதிர்வினைகளூடாக தன்னுடைய சுதந்திரத்தைக் காப்பதென்பது ஒரு வகை. எனது எண்ணம், எனது சிந்தனைகள், எனது முடிவுகளென சொந்த விருப்பத்தை பூர்த்திசெய்வதன் ஊடாக சுதந்திரத்தைப் போற்றுவதென்பது இன்னொருவகை. இரண்டிற்கும் நோக்கமொன்றுதான்: நாமார்க்கும் குடியல்லோம்.

(மொழிவது சுகம் நூல் தொகுப்பிலிருந்து)

__________________________________________

 

 

 

மொழிவது சுகம் – sep 1 -2019 : தனிமனிதனும் கூட்டமும்

சாலையின் தனித்து நட க்கிறபோது வழியில் கிடக்கும் கல்லை பலர் பார்க்க எடுத்து, ஓரமாகப் போடுகிறான் ஒருவன், அவனுடைய பொது நல சேவையை வியக்கிறோம், கைத்தொலைபேசியில் அக்காட்சியைப்பிடித்து முகநூலில் பதிவுசெய்து,   « நீங்கள் மானமுள்ள தமிழனாக இருந்தால் பாராட்டுங்கள் ! » என பண்பான  வேண்டுகோளை வைக்கிறோம்.  அந்தப் பொதுநல சேவகனே மறுநாள் செய்தி த் தாளில் கலகக்காரனாக அவதாரம் எடுத்கிறான், சிலையை உடைக்கிறான். தனி மனிதனாக இருக்கிறபோது வெளிப்பட்ட அவனுடைய நல்ல பண்பு  கூட்டத்தில் கலந்தபோது எங்கே போனது?

மூன்று கிழமைகள் விடுமுறைக்கு பாரீலிருந்து மகன் குடும்பம் வந்திருந்தது. பேரனுக்கு 8 வயது. பேர்த்திக்கு 2 வயது. அவ்வப்போது பிள்ளைகளுக்கு இணக்கமான இடங்களுக்குச் செல்லவேண்டி இருந்தது. அதன் ஒர் பகுதியாக எங்கள் ஊரிலிருந்து  இருநூறு கி.மீ தொலைவில் இருந்த  அம்னேவீல் (Amnéville) விலங்குக் காட்சி சாலைக்குச் சென்றிருந்தோம். ஓரிடத்தில் வெள்ளை நிற புலிகளை அடைத்து வைத்திருந்தார்கள். ஓரளவு பெரிய நிலப்பரப்பு, சிறிய நீர்த்தேக்கம் பாறைகள், அடர்ந்த புற்கள், ஒன்றிரண்டு மரங்கள் இயற்கைவேலிகள் என்ற சூழலில் பார்வையாளருக்கென்று தடித்த கண்ணாடியாலானத் தடுப்பு. மனிதர் இயல்புப்படி யாருமற்ற கண்ணாடியைப் பகுதியைத் தவிர்த்துவிட்டு பார்வையாளர்கள் குவிந்திருந்த இடத்தை நெருங்கி, அவர்கள் பார்வைக் குத்திட்டிருந்த செயபடுபொருளைக் கூட்டத்தின் இடுக்கில் தேடியபோது பரணொன்றில் துணிப்பொதி போல விலங்குக்  கிடந்தது. அசைத்த வாலைத் தவிர விலங்கென்று சொல்ல எதுவுமில்லை, வாலையே விலங்கென்று சாதித்தால் சொல்கின்ற ஆளைப்பொருத்து நம்புவதற்கு கூட்டமுண்டு, குழந்தைகள்?  கொஞ்சம் நன்றாக பார்க்கலாம் என்றால்,  ஆசைக்குத் தடையாக  மனிதர் வேலி, சரீரத் திரை. நான் பார்க்கிறேனோ இல்லையோ என் பேர்த்திக்கு நான்குகால் மனிதனைக் காட்டவேண்டுமே, « ஓ புலி மாமோய், (மனசுக்குள்தான்) ! » எனச் சோலைக்கொல்லை வள்ளிபோல கூவி அழைத்தேன்,பலனில்லை. கைவிரலைப் பிடித்திருந்த பேர்த்திமீது தற்போது கவனம் சென்றது. அவள் என்ன செய்வாள் என்று தெரியும், அவளுக்கும் மொத்தக் கூட்டமும் அதிசயிக்கிற துணிப்பொதியைப் பெரிதுப்படுத்திக் காட்ட வேண்டும். தவறினால் கையை உதறிவிட்டு ஓடுவாள். அவள் பொதுவாகவே ஓரிடத்தில் நிற்கமாட்டாள். ஓடிக்கொண்டே இருப்பாள். ஓடியதும் சிறிது நின்று நாம் பின்னால் ஓடி வருகிறோமா என்று பார்ப்பாள். நாம் வருவது உறுதியானதும், ஓடுவதைத் தொடர்வாள். நாம் பின் தொடரத்  தவறினால் அவள் ஓடுவதில்லை என்பதையும் ஒன்றிரண்டு முறைக் கண்டிருக்கிறேன். எனினும் அந்த அனுபவத்தைச் சோதித்துப் பார்க்க எங்களுக்கு அச்சம். அன்றும் கையை உதறினாள், ஓடினாள். வழக்கம்போல அவள் மீதான பார்வையை அகற்றாமல் வேகமாய்த் தொடர்ந்தேன். பார்வையாளர்கள் இன்றி காலியாகவிருந்த பக்கம் சட்டென்று நின்றவள் கையைக் காட்டினாள். அங்கே பிரார்த்தனைபோல ஒரு மரத்தருகே இன்னொரு புலி. ஐரோப்பிய சரீரங்களின் அழுக்கு வாசத்திற்கிடையில்  சற்றுமுன்பு தேடிய புலிபோல அன்றி, இப் பெண்புலி( ?)  «  நான் வச்சிக்கிட்டு வஞ்சனையா பண்றேன் பார்த்துக்கோங்க ! » என்பதுபோல நின்றிருந்தது, அது மட்டுமல்ல முற்பிறவியில் மாடலிங் தொழிலில் இருந்திருக்குமோ என்னவோ போனஸாக அப்படி இப்படி catwalkம் செய்துக் காட்டியது. இன்னொரு பக்கம் ‘அதோ அங்க’ , ‘இல்லை இல்லை அங்க’  எனச் சொற்கள் உதவியுடன் சிக்காதப்  புலிக்குத் தூண்டில்போடுவதில்  கூட்டம் ஆர்வமாக இருக்க, இங்கே நானும் பேர்த்தியும் ஒரு சில நிமிடங்கள் தனித்து விஐபி தரிசனமாக புலிவரதரைக்  கண்டு மெய்சிலிர்க்க முடிந்தது.

அசலான வாழ்க்கையிலும் நமக்கு நேர்வது இநத்தகைய அனுபவமே.  கூட்டம் வழிநடத்துகின்ற ஏதோ ஒன்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.  உண்மை மலைபோல நின்றாலும்  கவனிப்பாரற்றுப்போக வாய்ப்பிருக்கிறது.  கூட்டம் பாதுகாப்பைத் தரும் என்பது நம்பிக்கை.  தனிமனிதனாக  அடைய முடியாதப் பலனை கூட்டம் பெற்று தரும் என்பது கருத்து.  குறைந்த எண்ணிக்கையிலான மனிதர்களைக்கொண்ட ஒரு குழு சேதங்களைக் கொடுப்பதுமில்லை, கொள்வதுமில்லை. கல்வி, ஏற்ற தாழ்வற்ற பலன்கள் பரிமாற்றம், விட்டுக்கொடுத்தல், சகிப்புத் தன்மை போன்றவை, இக்குழுவின் பண்பை ஒழுங்குபடுத்துகின்றன.

நமக்குச்சிக்கல் பெரும் எண்ணிக்கையிலான மனிதர் கூட்டம் : ஒன்று கட்டுக்கடங்கிய கூட்டம்  மற்றொன்று கட்டுக்கடங்கா கூட்டம்.

கட்டுக்கடங்கிய கூட்டம் : நியதிகளின் அடிப்படையில் , தலைவர்கள் தொண்டர்கள்  என்கிற ஆகம விதியின் கீழ் எஜமானும் –  அடிமைகளும் இணைந்து செயல்படும்  கூட்டம். இருதரப்பும் பலன்களை முன்வைத்து விசவாசம் காட்டுபவர்கள். இவர்களின் ஒற்றுமை எதிரிகளின் வலிமையையும், அடையும் பலன்களின் அளவையும் பொருத்தது.    பிறமைகளுக்கு அதிக சேதம் இவர்களால் நேர்வதில்லை.

கட்டுக்கடங்கா கூட்டம் :  வதந்திகள் உருவாக்கும் கூட்டம். பைத்தியக்கார மனநிலை. இக்கூட்டம் எதிரிகளுக்கு மாத்திரமல்ல, தனக்கும் சேதம் விளைவித்துக்கொள்ளும்.

பொதுவில் கூட்டம் என்கிற  தனிமனிதர்களின் குவியல் விநோதமான பண்புகளைக்கொண்டது. ஐந்து தலை 21 கண்கள், 12 கைகள் 38 கால்கள் என்றொரு உயிரை கற்பனை செய்து பாருங்கள். கூட்டமும் அப்படியொரு விலங்கு.  கடைகள், விழாக்கள், அலுவல் நேரங்களில் பேருந்துகள், இழவு வீடுகள்,  வீதிகளில் ஊர்வலங்கள்  எங்கென்றாலும் ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்கள் கூடும் இடங்களில்  தனிமனிதன் தன்னுடைய  அடையாளத்தைத் தொலைத்து கூட்ட த்தின் பண்பை உள்வாங்கிக்கொள்கிறான்.  அப்பொதுப்பண்பு மகிழ்ச்சியாக இருக்கலாம், துன்பமாக இருக்கலாம், சத்தம் போட்டுப்பேசலாம், கல்லெறியலாம், கலகலவென சிரிக்கலாம் வீச்சரிவாளை எடுக்கலாம்.  தனிமனிதனும் சொந்த விருப்பத்தை ஒதுக்கிவிட்டு கூட்ட த்துடன் சேர்ந்து இரங்கல் தெரிவிக்கவேண்டும், வெடித்து சிரிக்கவேண்டும், கலகலப்பாக இருக்கவேண்டும், கல்லெறிய வேண்டும். கற்ற கல்வியை, அறிந்த ஒழுங்கை, தொலைத்து எடுப்பார் கைப்பிள்ளையாகும் அவலம் கூட்டத்தால்  நிகழ்கிறது.

எல்லோரும் பார்க்கிறார்கள் நாமும் பார்ப்போம், எல்லோரும் ஓடுகிறார்கள் நாமும் ஓடுவோம்,  அட்சய திதிக்கு நகைக் கடைக்குப் போகிறார்கள், போகிறோம்,  அத்திவரதர் முன்பாக மண்டி இடுகிறார்கள்,  செய்கிறோம் . தரிசித்துவிட்டு வருகிறபோது ஒருவர் விழுகிறார், மிதிபடுகிறார் அதனாலென்ன நமக்கு முன்னே ஓடுகிறவர்  மிதிக்கிறார்   மிதிக்கிறோம், தனிநபராக இருந்தபோது  ஏதோ ஒரு பெயரில் அறியப்பட்ட நான் இருளென்கிற கூட்டத்தில் புதையும்போது யாரோ, இலட்சக்கணக்கான  மனிதர்கூட்டத்தில்  ஒருவன் என்ற குறியீட்டைத்தவிரத் தன்னைச் சுட்ட எதுவுமில்லை.   கூட்டம் என்ற முகமூடி சாட்சிகளை, நீதியைக் குழப்பிவிடும் என்பதால் துணிச்சல்.  பாதையில் கிடக்கும் கல்லால் சக மனிதனுக்கு ஆபத்து நேருமென்று கல்லை அகற்றிய அவனே கூட்ட த்தில் கலந்ததும், அக்கல்லைக் கொண்டே தாக்குதல் என்கிற வினையை அரங்கேற்ற ஒரு எதிரியைத் தேடுகிறான்.  செய்த தனிமனிதனைக் காட்டிலும், அவனைச் செய்யத் தூண்டிய கூட்டத்திற்குப் குற்றத்தில் எப்போதும் பெரும்பங்கு இருக்கிறது.

—————————————————————————

மொழிவது சுகம் ஆகஸ்டு 1 2019: சாதியும் சமயமும்

பிராமணர்களால் இந்தியச் சமூக அமைப்பில் பிரச்சினை  என்பது பொய்யா

« – இன்றைய தேதியில் அதுபொய்யாகத்தான இருக்க முடியும்முதன் முதலாக இந்தியா வந்தபோது என் எண்ணமும் அதுதான். நான் தங்கியிருக்கிற சினேகிதரின் குடும்பம் புதுச்சேரிக்கருகில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கிராமம். 60 களில் ஊரை காலிசெய்துகொண்டு அவர்கள் மூதாதையர்களெல்லாம் புதுச்சேரி சென்னையென்று பிழைககப் போய்விட்டார்களாம்அவர்களின் கூற்றின்படி இன்றைக்கு 95 விழுக்காடு பிராமணர்கள் நகரத்தில் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் தாமுண்டு, தங்கள் பிழைப்புண்டு என்று இருப்பவர்கள்.   இவர்களில் உயர்சாதி திமிரோடு இருப்பவர்கள் ஐந்து அல்லது பத்து சதவிகிதத்தினர்தானாம். ஒரு மாதம் தொடர்ந்து செய்தித் தாள்களை வாசித்துப்பாருங்கள். உங்களுக்குத் உண்மை தெரியவரும்இதுல பாத்தீங்கன்னா இங்குள்ள கீழ்த்தட்டு மக்களுக்கும், நடுத்தரவர்க்கத்திற்கும் தங்கள் வாழ்க்கை பற்றிய கவலையில் இதையெல்லாம் நினைத்துப் பார்க்கக் கூட நேரமில்லை. ஆனால் இவர்களில் சில மேட்டுவர்க்கத்தினருக்கு, தங்கள் இருத்தலை உறுதிசெய்ய சாதி அரசியல் தேவைப்படுது. “புதுச்சேரி கடைத்தெருவுல நம்ம சாதிக்காரப் புள்ளையோட அந்தச் சாதிக்கார பையனைப் பார்த்தேன். ஒதுங்கியிருந்து பயலுவ, நாங்களும் வடம் பிடிக்கிறோம்னு, தேர் வடத்துல கை வைவைக்கிறான், அவங்க குளத்துல தண்ணி வத்திப்போச்சாம் நம்ம குளத்துல இறங்கிட்டாளுவஎன்கிற காரணத்தைவைத்து ஒருவரை ஒருவர் வெட்டிமாள்வதும், கோர்ட்டுக்கு நடப்பதும் யார்சாதி என்ற சொல்லை விட்டுடுவோம், ஆதிக்க சக்தியா தன்னை வைத்துப் பார்க்கிற எந்தக்கூட்டமும் ஆரோக்கியமான சமூகத்துக்கு எதிரானதுதான். »

 

இது ‘இறந்த காலம்’ என்கிற நாவலில் கதைமாந்தர்களில் ஒருத்தியின் கருத்து. நாவலில் இடம்பெறும் மாந்தர்கள் அனைவரும் படைப்பாளியின்  பார்வையைக் கொண்டிருக்கவேண்டும் என்பது கட்டாயமல்ல. பொதுவாக  எனது நாவல்களில் இடம்பெறும் கதை மாந்தர்களின் கருத்தில்  எனக்கு இணக்கம் முரண்பாடு இரண்டுமுண்டு. ஆனால் இவ் விஷயத்தில், இப்பெண்ணின் கருத்தில் உடன்படுகிறேன்.   இக்கருத்தை சற்று விரிவாகக் காண்பது  இக்கட்டுரையின் நோக்கம்.

இந்திய உப கண்டத்தில் பிறந்து, தங்கள் ஆயுளில் கணிசமான காலத்தை இந்திய மண்ணிலே கழிக்க நேரும் சராசரி மனிதனுக்கு  சாதியும் சமயமும் ஓர் உடும்பு, பிடித்தால் விடுவதில்லை. அவற்றின் பிடியிலிருந்து தப்பிப்பது எளிதும் அல்ல. அதிலும் சாதியின் பிடி சமயத்தின்பிடியைக் காட்டிலும் வலிமையானது. சாதியையும் சமயத்தையும் விலக்கி வாழ்வதாகச் சொல்லிக்கொள்கிற  ஒன்றிரண்டு விழுக்காட்டில் போலிகளும் உண்டு உண்மைகளும் உண்டு, அதுபோல சாதிய சமய வாழ்க்கைக்குத் தங்களைச் சமரசம் செய்துகொண்டு  வாழ்பவர்களிடத்திலும் தீவிரவாதம் மிதவாதம் இரண்டுமுண்டு.

என் வீட்டில்  மனைவியின் சமய நம்பிக்கையில், சாதியப் பிடிப்பில்  நான் குறுக்கிடுவதில்லை. எனது பகுத்தறிவு எனது உயர்வுக்கும் தாழ்வுக்கு நானே பொறுப்பு கடவுள்கள் தீர்மானிப்பதல்ல என நம்புகிறது. அவளுடைய பகுத்தறிவு  அவள் முடிவு சார்ந்து வேறு காரணங்களை முன் வைக்கிறது. நாம் பகுத்து அறிந்து ஒன்றை சரி அல்லது தப்பு எனத் தீர்மானிக்கிறோம். எடுக்கின்ற முடிவு நமக்கானது. அதைப் பிறருக்கு தெரிவிக்கவும் செய்யலாம் ஆனால் நாம் பகுத்தறிந்த முடிவு பிறருக்கும் சரியாக இருக்கும் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூடாது என்பதும் பகுதறிவின்பாற்பட்ட துதான். எனவே எனது மனைவியின் பகுத்தறிவில் நம்பிக்கைவைத்து அவள் தனக்கென்று எடுக்கும் முடிவில் நான் குறுக்கிடுவதில்லை.

புலம்பெயர்ந்த மண்ணில் சாதியை மறந்து சமயத்தை மறந்து வாழநேரினும் இந்தியாவிற்குத் திரும்பும் போது என்  பெற்றோர் வழி குடும்பம், என்மனைவி வழி குடும்பம் எனப் பார்க்கும் போது, புலம்பெயர்ந்த மண்ணில் மறந்திருந்த சாதி பிறப்பெடுக்கிறது. சாதிக்காரர் கள் என்கிறவர்களெல்லாம் என் மூதாதையர்களாக  என் பாட்டனுக்கு, முப்பாட்டனுக்கு பங்காளிகளாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் விலகிச்சென்றவுடன் சாதியும் விலகிசெல்வதை உணர்கிறேன். ஆக சாதியை இலைமறை காயாக எனது ஆயுள் உள்ளவரைவரை சுமக்கவேண்டிய நிர்ப்பந்தம் தெரிகிறது.  எனது பிள்ளைகளுக்கு அப்பிரச்சினை இல்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மதுரையிலிருந்து யாதவச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆயர் விருதுக்குப் பரிந்துரை செய்து என்னைத் தொடர்புகொண்டார்கள். பரிந்துரை செய்தவர்களில் முக்கியமானவர் மதுரை யாதவா பெண்கள் கல்லூரி ஆங்கிலத்துறை தலைவராக இருந்து ஓய்வுபெற்ற பேராசிரியை  திருமதி அழகி கார்மேகம். அவர் உறவினர் மட்டுமல்ல எனது படைப்புகளை தொடர்ந்துவாசித்துப் பாராட்டிவரும் முதிர்ச்சி பெற்ற வாசகர். தொ.மு. பரமசிவத்திற்கு விருதளித்த விபரத்தைச் சொன்னார்கள். அப்படியும் தயங்கினேன். நண்பர் க.பஞ்சாங்கம், தமிழ்மணி ஆகியோருடன் எனக்குள்ள சங்கடத்தை த் தெரிவித்தேன். அவர்களின் சமாதானத்தின் பேரில் விருதைப் பெறுவதென முடிவாயிற்று. யாதவச் சங்கத்தின் அன்பின் காரணமாக புதுச்சேரி ஆன ந்த ரங்கப்பிள்ளைப் பற்றிய தொடர் ஒன்றையும் எழுதப் போகிறேன். சாதியின் பேரால் நல்லது எது நடந்தாலும் வரவேற்கிறேன். மனிதர் மனங்களில் மாற்றங்கள் நிகழ்ந்தால் ஒழிய சாதிகள் மறையா.

சமூக  அமைப்பின் இயற்பியல் நிகழ்விற்கு – அது  முன்னெடுத்துச் செல்லப்பட – நேர்வகை , எதிர்வகை மின் தூண்டல்களுக்கிடையே   இணக்கம் வேண்டும், அன்றேல் சமூகம் தேங்கிய  குட்டைஆகிவிடும்.  தன் வேரினை அறியவும் பெருமிதம் கொள்ளவும்  உதவும் மனிதரின அடையாளம், தான் அல்லாத மற்றமைகளை இணைத்துப் பார்க்க விருப்பமற்று உருவான இன அடையாளங்களும், வேற்றுமைகளும் ஒருவகைச் சாதிப் பிரிவினைதான். சாதிகள் எங்கில்லை.  எதில் இல்லை. சமூக அமைப்பில் உலகமெங்கும் வெவ்வேறு பெயரில் சாதிகள் கொட்டிக்கிடக்கின்றன.  எனது தமிழ்ச்சாதி ஒருபக்கமிருக்கட்டும். இங்கே ஐரோப்பாவில் வெள்ளையருக்கு நான் ஆசிய சாதிகூட  அல்ல( இவர்களுக்கு ஆசியர்கள் என்றால் சீனர், ஜப்பானியர், கொரியர், வியட்நாமியர்..)இந்திய சாதி. இன்னும் சொல்லப்போனால் ஓர்  இன வெறிகொண்ட வெள்ளையனுக்கு நான் தீண்ட த் தகாதவன், கறுப்பன்.  ஆங்கிலத்தில் அல்லது பிரெஞ்சு மொழியில் சொல்வதானால் வெள்ளை இனவெறிக்க்கூட்ட த்திற்கு  நான் ஒரு ‘Paria’.  இக்கூட்டம் அவர்கள் அல்லாத பிறமைகளை அப்படித்தான் பார்க்கிறது.

இதற்காக ஒட்டுமொத்த வெள்ளையர்களும் எனக்கு எதிரானவர்கள் என்று வஞ்சினம் காப்பது எனது வாழ்க்கையைச் செப்பனிட உதவாது. என்னை வெறுக்கின்ற ஐரோப்பியர் எண்ணிக்கையைக் காட்டிலும், எனது முன்னேற்றத்தில் உழைப்பில் குறுக்கிடாத ஐரோப்பியர் எண்ணிக்கை அதிகம். அதுபோல, ஒட்டுமொத்த பிராமணர்களும் தப்பானவர்கள், சூட்சிக்காரரகள், தந்திரக்காரர்கள் என்கிற பிரச்சாரத்தை இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் தொடர்வது நாகரீகமல்ல என்பதென் கருத்து.   தமிழுக்குத் தொண்டாற்றிய பிராமனர்களையும் உதாசீனபடுத்திவிட முடியாது. நிதானமாக நன்றியுடன் அசைபோடக் கடமைப்பட்டிருக்கிறோம்.

தமிழ்ச் சாதி உருப்பட உபசாதிகளுக்கிடையே இணக்கம் காண்பதொன்றே உகந்த வழி.

——————————————————————————

மொழிவது சுகம் – ஏப்ரல்1, 2017

அ. மரங்களின் வாழ்க்கை ரகசியம், ஆ. இலக்கிய சொல்லாடல் : இலக்கிய காப்பிக்கூடம் (Café littéraire) ; இ.  பிரான்சில் என்ன நடக்கிறது ?

அ. மரங்களின் வாழ்க்கை ரகசியம்.:

பீட்டர் வோலீபன் (Peter Wohlleben) என்ற ஜெர்மன் இயற்கையியல்  la vie sécreteஅபிமானி ஜெர்மன் மொழியில் எழுதி பல இலட்சம் பிரதிகள்   விற்பனையில்  சாதனை புரிந்துள்ள  நூல் அண்மையில் பிரெஞ்சு மொழியில்   வந்துள்ளது. மொழிபெயர்ப்பாளர்,  Bernard Mangiante.  நூலின் பெயர் « மரங்களின் வாழ்க்கை ரகசியம்.(‘La vie sécrète des arbres ) » . பிரான்சுநாட்டிலும் நூலுக்கு நல்ல வரவேற்பென்று,  பிரெஞ்சு மொழியில் கலை இலக்கியத்திற்கென்று பிரத்தியேகமாகச் செயல்படும் France Culture வானொலி மூலம் அறியவந்தேன்.  நூல்,  மரங்களின் வாழ்க்கை நெறிகளை பேசுகிறதென்று சொல்லப்படுகிறது, இதுவரை வாசித்ததில்லை.

இயற்கை என்றால் பசுமை, வயல்கள், காடு, மரங்கள் செடி, கொடிகள் என்றே பொருள்கொண்டு பழகியிருக்கிறோம். ஆனால் ஆதனை இப்பிரபஞ்சத்தின் இயல்பு நிலை எனபொருள்கொண்டால்  மனிதர் உட்பட, பாரதி சொல்வதுபோல நிற்பது, நடப்பது, ஊர்வது பறப்பது அனைத்தும்( அவற்றின் தோற்றம்,  இயல்பான வாழ்க்கை முதலான), பிரபஞ்சத்தின் உண்மை நிலை (Reality), இயற்கை ஆகிறது. பிரெஞ்சு மொழியில் « tel qu’il est » என்றும்,  ஆங்கிலத்தில்   « As it is » என்றும் ஒன்றைப் பார்ப்பது. தமிழில் சொல்வதெனில்  எதுவாக இருக்கிறதோ அதனை அதுவாகப் பார்ப்பது. « Il vaut mieux être que paraître. »   என பிரெஞ்சு மொழியில் சொல்வதைப்போல , « பாசாங்கு தோற்றத்தைக்காட்டிலும் உண்மைத் தோற்றம் மேலானது » . ஆனால் அது மனிதரால் முடிகிற காரியமா ?

எதையும் கூட்டியோ குறைத்தோ ; பார்த்து, மதிப்பிட்டு விலை பேசி , விமர்சித்து வாழப்பழகிய மனித குணம் இயற்கைக்குரிய நியாயமான மதீப்பிட்டை அளித்து, உள்ளது உள்ளவாறு வாழப்பழகியதுண்டா என்றால் இல்லை. தேவைசார்ந்து பழகிய கண்களுக்கு மலரும் முள்ளும் அதனதன் கடமையை, அதனதன் இருத்தலை  அதனதன் கடப்பாட்டை நிறைவேற்றப் பிறந்தவை என்பதை மறந்து போவதும் இயற்கை. ஏன் எனில் அந்த « முள்ளும் மலரும் » எனக்கென்ன செய்கிறது என்ற பார்வை எடுத்த முடிவு. இதற்கு மலரோ முள்ளோ பொறுப்பு அல்ல. இங்கே « இயற்கையைப் பூதம் » என வர்ணித்து  எழுதுகிறேன் எனவைத்துக்கொள்ளுங்கள், என்னுடைய பூதத்திற்கும்,  நீங்கள்  கற்பனையில் காண்கிற பூத த்திற்கும் வேறுபாடிருக்கலாம்.  இந்த இரண்டு அணுகு முறைகளும்கூட ஒரு வகையில் இயற்கைக்கு, எதார்தத்திற்கு சேதம் விளைப்பவைதான். நகைக் கடையின் பெயர்கள் தான் வேறு, ஆனால் செய்கூலியில் சேதாரத்தைச் சேர்க்காத மனித வியாபரிகள் இருப்பதில்லை. இம்மனித உயிரிகளைத் தவிர பிற ‘இயற்கைக்’கூறுகள்  பொய்யின்றி அலங்காரமின்றி, ஜோடனையின்றி, வாசனாதி தைலங்களின்றி, அறிவை விருத்தி செய்யும் முனைப்பின்றி, அகந்தையின்றி ஆசையின்றி, கனவுகளின்றி  பிரபஞ்சத்தில் தமது பிறப்பையும் பதிவு செய்கின்றன. இறப்பையும் மருத்துவரிடம் போகாமல் ஏற்கின்ற பக்குவம் அவற்றுக்கு மட்டுமே உண்டு. தமது பிறப்பின் பயனை  தமக்கென கொள்ளாமல் இப்பிரபஞ்சத்திற்கு அர்பணித்துவிட்டு,  கல்லறை பற்றிய கனவுகளின்றி, ஈமச்சடங்குகள் குறித்த எதிர்பார்ப்புகளின்றி, சமயச் சடங்குகளின்றி மண்ணில் அவை மக்கிப்போகின்றன. மக்கி எருவாகி இறந்த பின்னும் ஈட்டிய கடனை திருப்பித் தரும் நேர்மை இயற்கைக்கு மட்டுமே உண்டு.

அண்மையில் மொழிபெயர்த்திருந்த ‘புரட்சியாளன்’ நூலில் அல்பெர் கமுய் (Albert Camus), கலை இலக்கிய படைப்பாளிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறபொழுது, இயற்கையை, இவ்வுலக உண்மையை , எதார்த்தத்தை  தாம் எதிர்பார்க்கின்ற வகையில் திருத்த முற்படுபவர்கள் என்ற  பொருளில் குறிப்பிட்டிருப்பார். அவ்வாறு மனிதர்கள் முயல்வதற்கு  இயற்கையின் குறைய நிவர்த்தி செய்யவேண்டும் என்ற விருப்பம் மட்டுமே  காரணமல்லவென்றும், இயற்கையை உள்ளது உள்ளவாறு முழுமையாகச் சொல்வதற்குரிய இயலாமையும் காரணமென்று அதில் விளக்கியியுமிருப்பார். உண்மைதான் ஒரு காட்சியை, ஓர் எதார்த்தத்தை  எத்தனை வரிகளில், எத்தனைச் சொற்களில் உபயோகித்தாலும், முழுமையாக மொழிப்படுத்த, கலையில் வடிக்க, சித்திரமாகத் தீட்ட சேதாரமின்றி இயலாததுதான், இயற்கை எந்தவொரு கண்ணிக்கும் , பொறிக்கும், வலைக்கும் பிடிபடாத விலங்கு.

அண்மையில்,  பியர்லெமேத்ர் (Pierre Lemaître) என்பவர் எழுதியிருந்த ‘Au revoir la-haut)  எனும் புதினத்தை வாசிக்க நேர்ந்தது. அவருடைய இவ்வரிகள் மறக்கமுடியாதவை : « Son cerveau mélangeait la réalité et des dessins, des tableaux, comme si la vie n’était rien d’autre qu’une œuvre supplémentaire et multiforme dans son musée imaginaire. »Au-revoir-la-haut

« வாழ்க்கை என்பதும் ஒரு கலை படைப்பு, பல வடிவங்களால் ஆனது என்பதன்றி வேறல்ல என்பதைப்போல எதார்த்தத்தடன் சித்திரங்களையும், ஓவியங்களையும் தனது கற்பனை அருங்காட்சியகத்தில், ஒன்று திரட்டினான் » என்ற படைப்பாசிரியரின் வரிகளை அல்பெர் கமுய் எழுப்பும் பிரச்சினை சார்ந்த தீர்வாகத்தான் பார்க்கவேண்டியுள்ளது. ஆசிரியர் சொல்வதைப்போல வாழ்க்கையையும் கலைபடைப்பாக அது எத்தனை கோணல்மாணலாக தீட்டப்படிருப்பினும், எதார்த்தத்திற்கு அல்லது இயற்கைக்குச் சமதையாக, கதை மாந்தனைப்போல  (அவன் முதல் உலகப் போரில் படுகாயமுற்று சிகிச்சைபெறும் வீரன், ஓவியனும் கூட)   மனதில்  நிறுத்தி திருப்தியுறுவதைத்  தவிர மனிதர்க்கு வேறுவழிகள் இருப்பதாக தெரியவில்லை. அதுவொன்றுதான், மனிதரினும் பார்க்க பெருமை மிக்க இயற்கையை, அதன் அகந்தையை வெல்ல பொய்யாகவே வாழப்பழகிய  மனிதன் கைகொள்ளக்கூடிய நிரந்தர தந்திரமாக இருக்க முடியும்.

. இலக்கிய சொல்லாடல் : இலக்கிய காப்பி கூடம் (Café littéraire) 420px-Café_de_Flore

இலக்கிய காப்பிக்கூடம் என்ற பெயரில் காப்பி இருப்பினும் காப்பி, தேநீர், பீர், தண்ணீர், பழரசங்கள், சோடா ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பரிசாரகரிடம் கொண்டுவர பணித்துவிட்டு  உரையாட, விவாதிக்க, அல்லது தன்னந்தனியாக அமர்ந்து எழுத இலக்கியவாதிகள், ஓவியர்கள் தேர்வு செய்யும் விடுதிகளுக்கு இலக்கிய காப்பிக்கூடம் என்று பெயர். பிரான்சு நாடெங்கும் முக்கிய நகரங்களில் இத்தகையை கலை இலக்கிய காப்பிக்கூடங்கள் பிரசித்தம் என்றாலும் பாரீஸ் நகரத்திற்கு கூடுதல் பெருமையுண்டு. தவிர கலைஇலக்கியத்தின் பல பிரிவினரும் தொன்று தொட்டு இத்தகைய இடங்களுக்கு வந்து போவதை ஆண்டுகள் பலவாக தொடர்ந்து பின்பற்றிவருகின்றனர்.

இவர்கள், முழுக்குடியர்களாக  சட்டையைப் பிடித்துக்கொள்வதற்கென்றே பாருக்குச்  செல்லும் படைப்பாளிகள்  அல்ல, தவிர குருவை அரியாசனத்தில் அமர்த்தி, அவரின் பிரதாபத்தை அரசியல் தலைவர்- தொண்டர்கள் உறவின் அடிப்படையில் வாய்பிளந்து கேட்கும் சிஷ்யர்கள் இலக்கணத்தையும் அவர்கள் படித்ததில்லை, எனவே இந்தக் காப்பிக் கூடங்களின் இலக்கிய உரையாடல்கள் அனைத்துமே சக படைபாளிகளுடன், சிந்தனையாளர்களுடன், கவிஞர்களுடன், ஓவியர்களுடன் மூத்தவர் இளையவர் என்ற வேறுபாடின்றி சரி சமமாக அமர்ந்து உரையாடும், விவாதிக்கும் களம். பதினேழாம் நூற்றாண்டிற்கு முன்பே le cabaret என்கிற இரவு விடுதிகள், மதுவை பிரதானமாக அருந்துகிற le taverne  விடுதிகள் ஆகியவற்றிற்குச் சென்று உரையாடும் வழக்கம் படைப்பாளிகளுக்கு இருந்துள்ளது.  ஆனால் இத்தகைய காப்பி பார்களுக்கான செல்வாக்கு பதினேழாம் நூற்றாண்டில்தான் கிடைத்திருக்கிறது. அழகியல், தத்துவம், அரசியல் ஆகியவற்றில் ஈடுபாடுகொண்டிருந்தவர்களின் வாழ்க்கையில் தங்கள் சொந்த இல்லங்களைத் தவிர்த்த சிறப்பு பொதுவெளியாக துறைசார்ந்த நண்பர்களுடன் விவாதிக்கும் களமாக காப்பி பார்கள்  உருவான காலமிது. அந்தவகையில்  முதலாவது இலக்கிய காப்பிக்கூடம் என்ற தகுதியைப் பெற்றது ‘le Procope’ (1986). இங்கு நாடகம் சார்ந்த புதிய முயற்சிகள் குறித்த கருத்துக்களை அத்துறை சார்ந்த நண்பர்கள் பகிருந்துகொண்டதாகச்  சொல்லப்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிவரை இக்காப்பிக்கூடம் நாடக ஆசிரியர்களிடை பயன்பாட்டில் இருந்த இந்த இடம், பின்னர் பிரெஞ்சு புரட்சியின் போது முன்னணி தலைவர்கள் பலரும் அவ்வப்போது கூடி விவாதிக்க உதவி இருக்கிறது.  பத்தொன்பதாம் நூற்றாண்டில் குறுகிய வீதிகளில் இருந்த காப்பி பாரை  விரும்பாத கலை இலக்கிய படைப்பாளிகள் அந்நாளில்  பாரீஸ் நகரில் Les grands boulevards எனப்புகழ்பெற்ற  பகுதியில் இருந்த காப்பிபார்களுக்கு வந்து செல்ல தொடங்கினர். இப்ப்குதியில் அவரவர் ஈடுபாட்டிற்கொப்ப துறை சார்ந்த நண்பர்களுடன் ஒரு பகுதியில் அவான் கார்டிஸ்டுகளும் (les avant-gardes), குறியீட்டாளர்களும்  சேன் நதியின் இதுடப்பக்கமிருந்த le Soleil d’or, le café de Cluny, le Vachette போன்ற காப்பி பார்களுக்கு வந்துபோக ;  சேன் நதியின் வலது பக்கமிருந்த காப்பிபார்களுக்கு போல்-ழான் தூலெ, கூர்த்தலின், ப்ரூஸ்ட் போன்றவர்கள் வந்து சென்றார்கள் அதேவேளை பாரீஸ் நகரின் மோன்மார்த்ரு  (Monmartre)பகுதியிலிருந்த  le chat noir காப்பி பாருக்கு வான் காக் முதலான நாடோடி வாழ்க்கை நடத்திய ஓவியக்கலைஞர்களும், க்யூபிஸ (Cubism) அபிமானிகளும்   வத்துபோவது வாழக்கமாயிற்று.  இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மோன்மார்த்ரு பகுதியிலிருந்து மோன்பர்னாஸ் பகுதியிலிருந்த காப்பிபார்களுக்கு போக ஆரம்பித்தார்கள், மீ எதார்த்த்வாதிகள் தங்கள் கொள்கைக்கு ஏற்ப இப்பகுதியிலிருந்து விலகி வெகுதூரத்திலிருந்த காப்பிபார்களில்  சென்று உரையாடினார்கள். நாற்பதுகளில் (1940) இத்தகைய காப்பி பார்கள் கலை இலக்கியவாதிகள் கூடும் இடமாக மட்டுமின்றி, அவர்களுக்கு எழுதவும் பயன்பட்ட து. அவ்வகையில் சிமொன் தெ பொவ்வார் அதிகம் வந்துபோகும் காப்பி பாராகLe Flore இருந்த து. பிரான்சு நாடெங்கும் முக்கிய நகரங்களில் இன்றும் இலக்கியவாதிகள் மட்டுமின்றி, தத்துவத்தில் ஈடுபாடு கொண்டோரும் காப்பி பாரில் கூடுகிறார்கள், அவற்றிர்க்கு Café Philosophique என்று பெயர்.

 

. பிரான்சில் என்ன நடக்கிறது.

அடுத்த மாதம் பிரான்சில் அதிபர் தேர்தல். இதுபற்றி விரிவாக அடுத்த மாத த்தில் எழுதுகிறேன். அமெரிக்க அதிபர் தேர்தலில் ட் ரம்ப் போன்ற மனிதர்களைத் தேர்ந்தெடுத்த முகூர்த்தம் பிரான்சிலும் அதுபோன்ற தலவர்களுக்கு இன்று செல்வாக்கு.  அந்நியர்களை வெளியேற்றினால், பிரான்சு  ஐரோப்பாவிலிருந்து  வெளியேறினால் நாட்டின் மொத்த பிரச்ச்சினைகளும் தீர்ந்துவிடும் என்கிற பேச்சை நம்பும்  வெகுசன அரசியல் பிரான்சிலும் பிரசித்தம். அண்மைக்காலங்களில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கும் இந்த மாற்றத்தில் பங்கிருக்கிறது. இன்று பரவலாக ஐரோப்பிய நாடுகளில் வலது சாரிகளின் பேச்சு சாதாரண மக்களை எளிதாக ஈர்க்கிறது.  ஏற்கனவே ஆஸ்த்ரியா, நோர்டிக் நாடுகள் சிலவற்றில்  தீவிரவாதம் ஜெயித்துவிடுமோ என்ற அச்சத்தில் நடுநிலையாளர்கள் கவலைப்பட,  தேர்தல் முடிவுகள் தீவிர வலது சாரிகளுக்கு எதிராகவே இருந்தன.  அந்த  அச்சம் பிரான்சில் இன்று இருக்கிறது. Front National  எனும்`பாசிஸக் கட்டியின் தலைவர் மரி லெப்பென்(Marie Le pen)  என்ற பெண்மணி கருத்துக் கணிப்பின்படி தற்போது போட்டியாளர்களில் அதிக சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ள வேட்பாளர். பொதுவாக பிரான்சு நாட்டில் இனவேற்றுமை இல்லை என்று சொல்லிவிடமுடியாது. அமெரிக்காவில் ஒபாமா அதிபராகலாம், பிரான்சு நாட்டில் சாத்தியமில்லை.   இந்த நிலையில் அண்மைக்காலத்தில் பிரெஞ்சு பொலீசாரின் தாக்குதலுக்கு ஒரு கறுப்பரின இளைஞர் உள்ளானார், பெரும் கொந்தளிப்பு உருவாகித் தணிந்தது. தற்போது சீனர் ஒருவர் பாரீஸில் சுடப்பட்டுள்ளார். இறந்த சீனர் கத்தியால் தாக்கவந்ததாகவும் தற்காப்புக்காக தாங்கள் ஆயுத த்தை உபயோகித்த தாகவும் பொலீஸார் கூறுகின்றனர். பாதிக்கபட்டவர் தரப்பினர் வாதமோ அதை முற்றாக மறுக்கிறது. விளைவாகத் தொடர்ந்து சீனர்கள் வீதியில் போராடுவது தொடர்கிறது(இப்போராட்டத்திற்குப் பின்புலத்தில் சீன அரசு இருக்கிறதென்ற குற்றச்சாட்டை, பிரான்சு உளவுத் துறை தெரிவிக்கிறது, அதைக் இறந்த சீனரின்  வழக்கறிஞர் கடுமையாக மறுத்திருக்கிறார்) இதற்கிடையில் சீன அரசு தங்கள் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என பிரெஞ்சு அரசுக்குத் தெரிவிக்க, அடுத்த சில நாட்களில்   பிரெஞ்சுக்கார ர் ஒருவர் சீனாவில் தாக்கப்பட்டாரென்று செய்தி.

உலகெங்கும் தேசியவாதம் தலைதூக்கியிருக்க, இதே ஐரோப்பாவில்  பிரான்சுக்கு அண்டை நாடான சுவிஸ்ட்ஸர்லாந்து,  நான்கு மொழி பேசும் மக்கள் அவர்களின் வெவ்வேறு கலாச்சாரம், கணிசமான புலம்பெயர்ந்த மக்கள்  என்ற நிலையிலும் அமைதியான வாழ்க்கையைப் பேதமின்றி தம் பிரஜைகளுக்கு வழங்கிவருகிறதென்ற  உண்மையையும் தெரிந்துகொள்ளவேண்டும்.

—————————————————————————–