Category Archives: படித்ததும் சுவைத்ததும்

படித்த தும் சுவைத்த தும் :la Tresse பிரெஞ்சு நாவல்

I can’t Breath

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது பழையத் திரைப்படப் பாடல்.

சகமனிதனை நேசிக்க ஒரு காரணம் இருக்கிறதெனில் வெறுக்கவும் எதோ ஒரு வெண்டைக்காய் காரணம் இருக்கவே செய்கிறது. வெள்ளையர்களுக்கு ஆப்ரிக்க மக்கள்மட்டுமே கறுப்பர்கள் அல்ல நாமனைவருமே கறுப்பர்கள். என்னுடைய பிரான்சு அனுபவத்தில் சொந்த  அனுபவத்தில் சொல்கிறேன். பல அலுவலங்களில் அவர்கள் முக குறிப்பு தெரிவிக்கும் செய்தியை அறிந்திருக்கிறேன்.

எனக்குத் தெரிந்த இலங்கை நண்பர் ஒருவரின்  மகன் பிரெஞ்சுப் பெண்ணொருத்தியை காதலித்து மணம் முடித்தார். திருமண வரவேற்பில் மகனின் பெற்றோரை அவர் சார்ந்த குடும்பங்களை அவருடைய வெள்ளையர் சமப்ந்தி குடும்பம்  எப்படி நடத்தினர் என்பதை அத்திருமணத்தில் கலந்துகொண்டவகையில் நானறிவேன்.

ஒரு எல்லையை நிர்ணயம் செய்துகொண்டு கை குலுக்குவார்கள். இதை வெள்ளையரின் பொதுவான குணம் என முடிவுக்கு வரலாமா ? இயலாது. அமெரிக்க கறுப்பர் போராட்ட த்திற்கு ஆதரவாக பிரான்சு நாட்டில் நடந்த போராட்ட த்தில் ஐரோப்பிய இனத்தவரும் பங்கேற்றனர் (இங்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கறுப்பரின இளைஞர் கைதுசெய்யப்பட்டபோது மரணித்திருந்தார், அச்சம்பவத்தை அமெரிக்காவில் நடந்த சம்பவத்திற்கு இணையாகப் பார்க்கின்றனர் இளஞரின் குடும்பமும் அவர் ஆதரவாளர்களும்).

 

வெள்ளையர்களின் நிறவெறி ஒருபக்கம் இருக்கட்டும், நாம் எப்படி ? நமது சாதிப்பிரிவினைகள் நமது சமூகத்தில் அனைத்து மக்களையும் சரிசம மாய் நத்துகிறதா ?  இங்கே வெளியில் மார்க்ஸியம் பேசுபவர்கள், பெரியாரியம் பேசுபவர்களில் எத்தனைபேர் சொந்த வாழ்க்கையில் அக்கொள்கைக்கு நேர்மையாக நடந்துகொண்டிருக்கின்றனர் ? அவன் நம்மவன் என்றுதான் இங்கு காய்கள் நகர்த்தப்படுகின்றன. அவர்களின் குற்றமும் அல்ல,  மனிதர் குண த்தின் இயல்பு அது. விதிவிலக்கில்லையா ? எப்படி இல்லாமல் போகும். ஐந்து அல்லது பத்து விழுக்காட்டினர் உண்மையாகவும் இருக்கலாம். முரண்களை நம்பியே உலகம் இயங்கு கிறது.

அண்மையில் la Tresse  என்றொரு பிரெஞ்சு நாவலைபடித்தேன்.Laetitia Colombani என்ற பெண்மணி எழுதிய நாவல். நாம் இந்தியாவிலிருந்துகொண்டு அமெரிக்க கறுப்பினத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பது போன்று அவர் ஸ்மிதா என்ற தலித் பெண்ணை மையமாக வைத்து பிரான்சிலிருந்துகொண்டு  இந்தியாவைச் சாடுகிறார், இந்தியாவில் எதுவும் சரியில்லை என்கிறார். அந்நாவலில் ஸ்மிதா அன்றி  இரண்டு பெண்ள் வருகிறார்கள். ஒருத்தி ஜூலியா இத்தாலியைச் சேர்ந்தவர், மற்றவர் சாரா கனட நாட்டைச் சேர்ந்தவர். ஜூலியாவையும் சாராவையும் பிரச்சனைகளியிலிருந்து மீள முடிந்த பெண்களாக சித்தரிக்கும் நூலாசிரியர் இந்தியத் தலித் பெண்ணை(பகல் பூர், உத்திரபிரதேசம்) இந்திய சமூக அமைப்பின்படி கைகளால் நாள் முழுக்க மலம் அள்ள பிறந்தவள், ஊருக்குள் நுழைகிறபோது, அவளைக்ண்டு மற்றமக்கள் ஒதுங்கி க் கொள்ள வசதியாக காக்கையின் இறகை தலையில் அப்பெண்மணி சொருகிக் கொள்வது கட்டாயம், தலித் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப  இயலாது, அவ்வாறு பள்ளிக்குச் சென்ற ஸ்மிதாவின் பெண்ணை  பிராமண ஆசிரியர் பிரம்பால் அடித்து பள்ளியிலிருந்து துரத்திவிடுகிறார். இப்படியல்லாம் கதை நீளும். மூன்று பெண்களின் வாழ்க்கையைத் தலைமயிர் பிணைப்பதாக வரும் புனைவில் ஜூலியாவின் இத்தாலி சமூக அமைப்பு குறித்தும் சாராவின் கனடா நாட்டு சமூக அமப்புக் குறித்தும் விமர்சனங்கள் இல்லை. ஆனால் இந்தியா என வருகிறபோது, ஆசிரியரின் கை நீளுகிறது, இழிவான விமர்சனங்கள்.

இந்தியாவில் நலிந்த பிரிவினர் படும் அவலம் ஊரறிந்த சத்தியம். மறுப்பதற்கில்லை. ஆனால் கதையாசிரியரின்  எழுத்தில் ஒருவகை sadism இருந்தது. பிரெஞ்சு மொழியில்  நூலை விமர்சித்து  ஒரு கட்டுரை எழுதினேன் பல பிரெஞ்சு நண்பர்களுக்கு அனுப்பியும் வருகிறேன். இந்நிலையில்  எனக்குள் வேறொரு கேள்வியும் எழுகிறது.

அமெரிக்க கறுப்பரினத்திற்கு தாராளமாக குரல்கொடுப்பதிலுள்ள நியாயம் புரிகிறது. ஆனால நம்முடைய மனிதர்களை சரி சமமாக நடத்துகிறோமா ? என என்னை நானே கேட்டுக்கொண்டேன்.   la Tresse ஆசிரியர் போன்று மான்களிடம் கருணைகாட்டும் சைவப் புலிகள் நம்மிலும் பலர் இருக்கிறார்கள்.   கொத்தடிமைகளாக செங்கற் சூளைகளிலும், தொழிற்சாலைகளிலும் பணிசெய்துகொண்டு, சாலையோரம், கழிவுநீர்க் கால்வாய்கள் ஓரம் குடிசைகளில் இந்தியாவெங்கும் வாழும் சமூகத்தின்நலிந்த பிரிவினரரின்  கழுத்தை மிதித்திருப்பது நம்முடைய கால்கள் இல்லையா, அவர்கள் « we can’t breath ! » என்பது நம் காதில் விழுவதுண்டா ?  ஆணனவக்கொலைகள் தெரிவிக்கும் அறம், கறுப்பினத்திற்கு எதிரான வெள்ளையரின் நிறவெறி அதிகாரத்திற்கு எந்த வகையில் குறைந்தது ?

பெண் சிவப்பாய் இல்லையென நிராகரிக்கிற தமிழன் தமக்குள்ள நிறவெறியை உணர்வதுண்டா? பதினாறு வயதினிலே மயிலு கூட வெள்ளைத்தோலுடன் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கும் தமிழ்த்திரை ஜாம்பவான்களும், திராவிடத்தை சிவப்புத் தோல் நடிகைகளிடம் அடகுவைக்கும் அரசியலும்  இனமானமும் தெரிவிப்பதென்ன?  இரண்டு தமிழ் பெண்களுக்கு கறுப்பு வண்ணத்தை அடித்து , தமிழிலக்கியத்தையும் அவமதித்து, « எங்கிட்டயும்  இரண்டு பெண்கள்  இருக்குப் பழகிக்குங்க » என வெடகமின்றி கிடைத்த கூலிக்கு மாரடிக்கும்  தமிழறிஞர்களைப் பெற்ற தேசம் நம் தேசம். அதையும் வெட்கமின்றி ரசித்தோம். இங்கு யாருக்கும் வெட்கமில்லை என்பதுதான் உண்மை.

சினிமாக்களிலிருந்து சீரியல்கள்வரை கறுப்பு தமிழச்சிகளை வேண்டாமென்கிறோமே, தன்மானத் தமிழர்கள் இவற்றையெல்லாம் யோசிப்பதுண்டா? ஒருவேளை அவர்கள் இலக்கணத்தில் தமிழன் வேறு தமிழச்சி வேறா? உலகஅழகியாக அண்மையில் அங்கோலா நாட்டைச்சேர்ந்த ஒரு கறுப்பரினபெண்ணை தேர்வுசெய்திருக்கிறார்கள். உலக அழகிதேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த பலர் இவ்வளவிற்கும் கறுப்பர்களில்லை வெள்ளையர்கள். நம்மால் ஒரு கறுப்பு தமிழச்சியை குறைந்த பட்சம் தொலைகாட்சியில் செய்தி வாசிப்பவராகவாவது அனுமதிப்போமா?

படித்ததும் சுவைத்ததும்

மலர்கள் விட்டு ச்சென்ற வெற்றிட த்தில்

……(கொரியகவிதைகள் மொழிபெயர்ப்பு தொகுப்பு) மொழிபெயர்த்தவர்கள் : பா. இரவிக்குமார், . கல்பனா

பரிசல் வெளியீடு

 

. « you don’t value a thing unless you have it »

அட்சதைகளுக்காக அடிமைச் சாசனமாக எழுதப்படும் அலங்காரக் கவிதைகளைக் காட்டிலும் « அம்மா இங்கே வா ! ஆசை முத்தம் தா, தா ! » என எழுதப்படும் உயிர்க்கண்ணிகளில்  கவிஞன் வாழ்கிறான்.  « நூலுக்காக கவிதைகள் அல்ல , கவிதைகளுக்காக நூல்  ». கவிதைக்கு மட்டுமல்ல கலை, இலக்கிய ஆக்கங்களுக்கும் இம்முத்திரை பொருந்தும். « The Lacuna » என்றொரு ஆங்கில நாவல், ஆசிரியர் Barbara Kingsolver. ஆழ்நீரில் மூழ்கும் விளையாட்டில் ஆர்வம் கொண்ட ஒருவனின் நாட்குறிப்பாக நீளும் நாவலில் மீன்கள் எழுப்பும் ஓசை குறித்து  ஒரு சுவாரசியமான உரையாடல் உண்டு:

« மீன்கள் எழுப்பும் ஓசையை வெறும் சத்தமாகவும் கருதலாம், பேச்சாகவும் கருதலாம் »,  என்கிறான் ஒருவன் நூலின் கதை நாயகனிடம். « அதை எப்படி அறிவது ? » என்கிற கேள்விக்கு, « மற்ற மீன்கள் புரிந்துகொள்ள  வாய்ப்பளித்து ஒரு மீன் எழுப்பும் ஓசை, பேச்சு » ; பதிலாக « தான் இருப்பதைக் காட்டிக்கொள்ள எழுப்பும் ஓசை, சத்தம் » என்பது கிடைக்கும் பதில்.  இதில் இன்னொன்றையும் நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். அவ்வோசை உண்மையில் வெறும் சப்தமாகவும் இருக்கலாம், செய்தியாகவும் இருக்கலாம். அவ்வோசையக் காதில் வாங்குகிற பிறவும் எது உண்மையில் பேச்சு, எது வெறும் ஓசை என்பதை என்பதைப் பகுத்தறியும் ஞானம் வேண்டும். இலக்கிய உலகிற்கும் இது பொருந்தும். இங்கு காதுகள் செவிடாகும் அளவிற்கு பறைகள் கொட்டப்படுகின்றன. சங்குகள் ஊதப்படுகின்றன. இருப்பதைக் காட்டுவதற்காகச் சத்தமிடும்  இம்மீன்கள் எழுப்பும் ஓசைகளை பல நேரங்களில் «  புரியாமல் புரிந்துகொண்டது போல » தங்கள் செவுள்களை அசைத்து  அண்டங்காக்களைக்கூட குயில்களென சாதிக்கவும்  ஒரு கூட்டமுண்டு , புரிந்து இதன் அடிப்படை « கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் » ஃபார்முலாக்கள். இச்செய்தியின் மறு விவரணதான் இத்தொகுப்பிலுள்ள « மீன் பாடல்  » என்கிற கவிதை தெரிவிக்கும் செய்தி :

« தொட்டியில் ஒரு மீன் கவனிக்கிறது.

ஒரு பறவையின் பாடல் சன்னல் வழியே பாய்கிறது

பறவை வணங்கி வாழ்த்துகிறது

« எப்படி இருக்கிறீர்கள், திருமீனே ! »

தன் செவுள்களை நெகிழ்த்திக்கொண்டு

மீன் பதிலளிக்கிறது :

« இரண்டு நீர்க்குமிழிகள் ».

இம்மீன் அளிக்கும் பதிலில் கவிஞன் இருக்கிறான். இவ்விரு நீர்குமிழிகள் சொல்லவருவதென்ன ? வாசிப்பவரின் கற்பனைக்கொப்ப இட்டு நிரப்பிக்கொள்ளலாம். மீனின் “இரண்டு நீர்க்குமிழ்கள்” அதன ஓசை புரிந்த பறவைக்கு விளங்கும், காரணம் அதுபேச்சு வெறும் சத்தமல்ல. ஆக உண்மையான இலக்கியம்   யாருக்கு சத்தமாகாதோ அவர்களுடனேயே உரையாடலை நிகழ்த்தும். எல்லோருக்கும் புரியவில்லையே என்ற வருத்தம் உண்மையான படைப்பாளிக்கு கூடாது. நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான சு. வெங்கிடசுப்பராய நாயகர் அனுப்பிய குறும்பட ஒளிப்பதிவில் தற்செயலாக வாசிக்க நேர்ந்த  « you don’t  value  a thing unless you have it » வாசகம் தெரிவிக்கும் செய்தியும் இதுதான்.

« மலர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தில் » தமிழில் மொழி பெயர்க்கபட்ட கொரிய மொழிக்கவிதைகளின் தொகுப்பு. மொழிபெயர்ந்தவர்கள் கவிதை அனுபவங்களில் தோய்ந்தும், கவிதைகளை வாசித்தும், கவிதைகளை எழுதியும், கவிதைகளோடு பழகியும் வருகிற கவிஞர்கள் : பா இரவிக்குமார், ப. கல்பனா. கவிதைகள் கொரியமொழியிலிருந்து ஆங்கிலத்திற்குப் பயணித்து அங்கிருந்து  தமிழுக்கு வந்துள்ளன. 78 கவிதைகள் கொண்ட ஒரு தொகுப்பு. பரிசல் வெளியீடு. தொகுப்பிற்கு மொழிபெயர்ப்பாளர்கள் எழுதியுள்ள முன்னுரைகள், மொழிபெயர்ப்புக்கான காரணங்களைத் தெரிவிக்கின்றன. தொகுப்பிற்குள் நுழைவதற்கு முன்பாக இம்முன்னுரையை  அவசியம் வாசிக்கவேண்டும். பொறுப்புணர்ந்து சிரத்தையுடன் எழுதபட்ட முன்னுரைகள். ப. கல்பனா, கொரியமொழிக்கவிதைகள் பால் நாட்டம் கொண்ட காரணத்தை முன்வைக்க, பா. இரவிக்குமார் மொழிபெயர்ப்புக் கூட்டுமுயற்சியில் எதிர்கொண்ட சிக்கலையும் கண்ட தீர்வையும் எழுதுகிறார். இம்முன்னுரைகளை வாசிக்காமல் தொகுப்பிற்க்குள் நுழைவது வரவேற்பின்றி ஒரு வீட்டுக்குள் காலெடுத்துவைப்பதற்குச் சமம்.

மொழிபெயர்த்த இருவரும் கவிஞர்கள், கலை  இலக்கியங்களில் ஈடுபாடுகொண்டவர்கள் எனவே சடங்காக அன்றி ஆர்வத்துடனும் அக்கறையுடனும் இக்கொரிய கவிதைகளை கொண்டுவந்திருக்கிறார்கள். ஒரு கட்டுரையை அல்லது ஆவணமொன்றை மொழிபெயர்ப்பதற்கும்  இலக்கிய படைப்புகளை மொழிபெயர்ப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. சொல், சொல்லின் பொருள், சொல்லின் உபயோகம், அதற்கான காரணம் அனைத்தையும் உள்வாங்கி க்கொண்டு தாய்மொழியில் கொண்டுவருகிறபோது, மூலமொழியின் முகம் கோணாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய அக்கறை மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கிறது. ஒரு கவிஞனின் மொழியாடலை, உள்ளத்தை, அவன் உணச்சிகளை சமைத்தல் என்பது அவனுடைய சம தளத்தில் நின்று பெறுவோர்க்கே சாத்தியம். கவிஞர்களின் படப்புகளை கவிஞர்கள் இருவர் மொழிபெயர்த்திருக்கின்றனர் என்ற நம்பிக்கை நூலைத் தொடும்போது நமக்கு எழுவது இயற்கை.

. மொழிபெயர்ப்புக்காக ஒரு கவிதை

கீழ்க்கண்ட கவிதையை வாசியுங்கள், இது கொரியக் கவிதையின்

ஆங்கில வடிவம்:

The Rust Tree Inside Me by Jung Kut-byol
(
녹나무

I’ve been sitting on the windowsill. What has gone wrong?
Alongside a movie theater, a few bars, and a closed supermarket
absurd red insects disappear
I know there’s not any place better than here.
I feared the clock and the train,
wars and horror movies, too. I was young then.

………………………………………………

……………………………………………………

தொகுப்பில் இடம் பெற்றுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு இது :

எனக்குள் இருக்கும் துருவேறிய மரம் –  யுங் கட் பையல்

சன்னலருகில் அமர்ந்த்திருக்கிறேன்

என்ன தவறு நேர்ந்துவிட்டது

திரையரங்குகளில்

சில மதுக்கடைகளில்

மூடிய அங்காடிகளில்

வேடிக்கையான சில பூச்சிகள் மறைகின்றன.

இந்த இடத்தைவிட

சிறந்த இடம்

வேறொன்றுமில்லை

என்பதை அறிவேன்

கடிகாரத்தையும் இரயிலையும்

கண்டு அஞ்சினேன்….

போரையும் பயங்கரத் திரைப்படங்களைப்

பார்த்தும்.

அப்போது நான்

இளையவள்.

 

இது வெறும் மொழியாக்கமல்ல, கவிதை ஆக்கம். மூலமொழியில் இக்கவிதையை நாம் அறிந்தது இல்லை. ஆனால் ஆங்கில மொழியில் அக்கவிதைக்குரிய அத்துணை அடர்த்தியும், செறிவும் நேர்த்தியும் தமிழுக்கு வந்திருக்கிறது, தமிழ்க்கவிதையாகப் படைக்கப்பட்டிருக்கிறது.

 

. சுவைக்காக ஒரு கவிதை

 

முதுமை என்பது வாழ்க்கைப் போரின் தோல்விக் கட்டம். எல்லாபோர்களையும் போலவே உயிர் வாழ்க்கை யுத்தமும்: எல்லைப்பிரச்சனைகள், எதிரிகள், திட்டமிடல்கள், சூட்சிகள், யுத்த தந்திரங்கள் ஆயுதங்கள், வெற்றிகள், சமாதானங்கள் என்கிற   தொடர் அத்தியாயங்களால் எழுதப்பட்டவை. பலமுறை வில்லன்களுடன் போரிட்டும் வெற்றியை ருசித்துமிருப்போம் தோல்வியில் துவண்டு பினர் வீறுகொண்டு எழுந்துமிருப்போம். ஆனால்  உயிர்வாழ்க்கை யுத்தகளத்தில் இறுதிக்கட்ட போரென்று ஒன்றுண்டு, அதில் தலைவன் வாகை சூடுவதில்லை. தோற்றேஆகவேண்டும். அவன் இராமனாக இருந்தால் கூட. எதிரியின் ஆயுதம் முதுமை எனும் ஈட்டி. எதிரி யாரென்று சொல்லவில்லையே,  இயற்கை. இராவணனைக் காட்டிலும் பல தலைகள் கொண்ட விலங்கு. கடலைப்போல காற்றைபோல அமைதியையும் அறியும் வெகுண்டெழவும் செய்யும். இறுதிவெற்றி தமக்கென்ற இறுமாப்பு என்றைக்கும் அதற்குண்டு.

மகா அலெக்ஸாந்தர் மகாசீஸர் அவர்களைப்போல வெல்லமுடியாதென்று வீறாப்பு பேசிய மகாமகா மனிதர்கள் பலரும் இறுதியில் மண்ணுக்குள் புதையுண்டவர்கள், தீக்குள் சாம்பலானவர்கள்தான். ஏதோ ஒரு நாளில் இயற்கை விழுங்கி ஏப்பமிடும் மனிதர் வாழ்க்கையை . “இலை உதிர்கால நாள் »    கவிதை நமக்குத் தெரிவிக்கும் உயிர் வாழ்க்கைப் பற்றிய சத்தியம் கவனத்திற்கொள்ள தக்கது.

 

பெர்சிமன் மரக்கிளையின் நுனியில்

அமர்ந்தது ஒரு தும்பி

மயங்கி யிருந்த ஒரு நாள் முழுவதும்

காற்றடித்தபோதும், அது அசையவில்லை

குளிர்மழைபெய்தபோதும்

மரக்கிளையை ருசித்தபடியே.

அது அசையவே இல்லை.

 

மெதுவாக அதனை நெருங்கியபோது

திடுக்கிட்டேன்

அதேஇடத்தில்

அது முக்திநிலை அடைந்திருப்பதைப் பார்த்து.

 

கவிதைகள் சில  ஏமாற்றத்தைத் தரினும், அக்விதைகளில் இடம்பெறும் சில வரிகள் அந்த ஏமாற்ரத்தைத் தவிர்க்க உதவுகின்றன:

 

…………..

தயவு செய்து

உங்களை நீங்களே

ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்.

 

தாலாட்டைப் பாடி

மக்களை நிரந்தரமாக உறங்க வைக்கும்

போலிக் கவிஞர்களே…

நீங்கள் கவிதை எழுதவேண்டும்

என்பதற்காக

வறுமையை வணிகம்செய்து

ஒரு கவளச்சோற்றுக்குத்

தவிக்கும்

பசித்த வாயை அழுக்காக்காதீர்கள்.

 

——-

மலர்கள் மக்களின் கனவுகளாக

இருந்தால்,

எவ்வளவு அழகாக இருப்பார்கள்

மனிதர்கள்

_______

 

 

மேர்குறிப்பிட்ட கவிதைகள் அன்றி இத்தொகுப்பில் நான் வாசித்து மகிழ்ந்த பிற கவிதைகள்: பனிப்பாதை, பனி, மலர்கள் விட்டுச் சென்ற வெற்றித்ட த்தில், அன்றில், சொல், அறிமுகம், மலர்கள், என்னையே அழித்துகொள்ளுதல், ஒரு கதவு திறக்கிறது.

 

மீண்டும் தகவலுக்காக

 

மலர்கள் விட்டுசென்ற இட த்தில்…

கொரியமொழி கவிதை தொகுப்பு

 

மொழிபெயர்ப்பாளர்கள்

பா. இரவிக்குமார் – ப . கல்பனா

பரிசில் வெளியீடு.

 

———————————————————–

மொழிவது சுகம் மே 10 – 2020

அ. படித்த தும் சுவைத்த தும்: சாமத்தில் முனகும் கதவு

    மனம் அதிசயமானது, அதிவினோத பராக்கிரமசாலி. ஐம்புலன்களால்: தொட்டு, பார்த்து, கேட்டு, சுவைத்து,  நுகர்ந்து அறிய இயலாதவற்றை மனம் தொடுகிறது, மனம் காண்கிறது, மனம் கேட்கிறது, மனம் சுவைக்கிறது, மனம் நுகர்கிறது.

மனத்தின்  உண்மையான சொரூபம் நிர்வாணமானது.  உடலைப்போல அலங்கரிக்கப்பட்டதோ, வாசனை ஊட்டப் பட்ட தோ அல்ல. சமயம், சமூகம், அறிவதிகாரம், அனுபவ மூதுரை முதலான கட்டுகள் இறுக மறக்கும் நிலையில் அல்லது தளர்கின்ற கணத்தில் “பசியாற வேட்டையாடுவதில் தவறில்லை” எனபோதிக்கிற மனதின் நியாயத்திற்கு ஐம்புலன்கள் சேவகர்கள். இந்த மனத்தை உளவியல் அறிஞர்கள் நனவு(consciousness), முன்நனவு அல்லது மன உணர்வின் இடைநிலை அல்லது தயார்நிலை(preconciousness), இறுதியாக நனவிலி நிலை (unconsciousness) என வகைப்படுத்துகின்றனர். எழுத்தென்பதே நனவிலி நிலையின் வெளிப்பாடென்பது இவ்வறிஞர்களின் கருத்து.

கேஜே.அசோக்குமார் எழுத்துகள் நனவிலி  நிலையைக் கடந்தவை. அதாவது மன வீட்டின் நிலைப்படியைக் கடந்து, நுழைவாயிலில் காத்திருந்து அலுத்து, வீதிக்கு வந்தவை. தன்னையும் தானறிந்த மனிதர்களையும் மனக்கண்களால் பார்ப்பவை, மனதால் பரிசீலிப்பவை, சிற்சில சமயங்களில் கதையாடல் தேர் தமக்கான வீதியை திசைதப்பியபோதும் கவனத்துடன் தேரடிக்குத் திரும்புகிற கதைகள்.

முதல் மனிதனும் இரண்டாம் மனிதனும்:

மனிதர் சமூகத்தை மூன்று மனிதர்களாகப் பிரதிநிதித்துவப்படுத்தலாம்.  முதல்மனிதன் வேறுயாருமல்ல நாம். மூன்றாம் மனிதன்: நாம் அதிகம் சந்திக்க வாய்ப்பற்ற பெரும் திரளான மக்கள் கூட்ட த்தில் ஒருவன். இரண்டாம் மனிதன்? கண்களுக்கு அப்பால் இருக்கிற மனிதனல்ல தினம் தினம் கண்ணிற் படுகிற மனிதன், கடலுக்கு அப்பால் இருப்பவனல்லன், கைக்கெட்டும் தூரத்தில் இருப்பவன். தூரத்து சொந்தமல்ல பங்காளி .  மூன்றாவது வீட்டிலோ அடுத்த தெருவிலோ வசிப்பவன் அல்ல, உங்கள் தெருவில் நீங்கள் தினமும் சந்திக்கிற எதிர்வீட்டுக்காரன். வேறொரு துறைசார்ந்த ஊழியனல்ல, உங்கள் அலுவலகத்தில் அடுத்த மேசையில் கோப்பு பார்க்கிற சக ஊழியன். வேறு கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியரல்ல, உங்கள் கல்லூரியில் உங்கள் துறை சார்ந்த பேராசிரியர். மலையாள எழுத்தாளரோ, கன்னட மொழி எழுத்தாளரோ அல்ல  நம்பைப்போலவே நோபல் விருதை தவறவிட்ட தமிழ் எழுத்தாளர்.  இந்த இரண்டாம் மனிதனை, அவன் விழுந்தால் ஓடிச்சென்று அனுதாபம் தெரிவிக்கும் மனம் ஆறுதல் படுத்தும் மனம், அவன் எழுந்து கம்பீரமாக நடந்தால்  அசூயை கொள்கிறது. கந்தல் கோலத்தில் பிச்சை கேட்கும் மனிதனுக்கு இரக்கப்படும் மனம், அவனே கொஞ்சம் வெள்ளையும் சள்ளையுமாக வீதிக்கு வந்தால் “இவனுக்கு வந்த வாழ்வைப் பாரு”என்கிறது.  இச்சிறுகதை தொகுப்பின் பிணவாடை   சகமனிதன் வளர்ச்சிக்கண்டு காயும் மனங்களுக்கு நல்ல உதாரணம்.

பெரும் எண்ணிக்கையில் இயங்கும் இத்தகைய முதல் மனிதர்களின் மனதை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது கே ஜே.  அசோக்குமாரின் கதைகள். அவர் கதைகள் தன்மையில் சொல்லப்பட்டாலும் படர்க்கையில் சொல்லப்பட்டாலும் வீழ்ந்த மனிதர்களைப் பற்றியது, அவர்களின் வீழ்ச்சிகாண காரணத்தை பார்வையாளனாக அறிய முற்படுவது.

“இரண்டாண்டுகளுக்கு முன்பு பார்த்ததைவிட பாதியாகிவிட்டிருந்த” வௌவால்கள் உலவும் வீடு கதையில் வரும் அண்ணன்; “உன்னைச் சுமந்து செல்ல முடியாது எனச் சொல்லும்படி வளைந்த முன் சக்கரம் ஆடியபடி மறுப்பு தெரிவிக்கின்ற “ சாமத்தில் முனகும் கதவு நாயகன் கூத்தையா; “பிச்சைக்கார ர் என முதலில் நினைத்திருந்தான். ஆனா இல்லைஎன்றும் சொல்ல முடியாது.” எனும் மயக்கத் தோற்றம்கொண்ட அந்நியன் என ஒருவன் பெரியவர்; “தாழ்ப்பாள் போடப்பட்டிருப்பதை உறுதிபடுத்திக்கொண்டு விளக்குகளை அணைக்காமல் “ படுத்துறங்கும் போதும் கனவில் புலியைக் காண்கிற வருகை கதைநாயகன்; “வாசனையே இல்ல. இத யாரு வச்சிக்குவா” எனக் கனகாம்புரம் பூவை விரும்பாத வாசமில்லாத மலர் சந்திரா; “நான் சத்தியபிரகாஷைக்கொன்று அவனுடலில் உட்புகவேண்டும்” என்கிற கொதிநிலை பொறாமையில் உள்ள பிணவாடை பரந்தாமன். “ஆமாமா, நாங்க பிரிஞ்சோன்னயே பெரிய கட தெருவில நட த்த முடியாம வித்துட்டு கும்பேஸ்வரம் கோயில் கிட்டப் போச்சி, அப்புறம் உங்கப்பன் திருவாலூரு போயிட்டு திரும்பிவந்தப்ப கீழ சந்து தெருவில வந்துச்சு. அப்பவே ரொம்ப ஒடிச்சிட்டாரு” மாங்காச்சாமி வரும் கதை சொல்லியின் தந்தை. கதிர்தான் முதலில் பஸ் ஸ்டாண்ட் என்று அழைக்க ஆரம்பித்தான். பஸ் ஸ்டாண்டில் கண்டெடுக்கப்பட்டதால் இப்பெயர்” பஸ் ஸ்டாண்ட் கதையில் வரும் சிறுவனென  தொகுப்பில் எழுத்தின் மையப்பொருளாக இடம்பெறும் ஆண் பெண் இரு பாலருமே வீழ்ந்த மனிதர்களாக இருக்கிறார்கள்.

மனித மனத்தின் ஓட்டைகளும் இரத்தக் கசிவும் அவசரச் சிகிச்சைக்கு காத்திருக்கும் நோயாளியை நினைவூட்டுகின்றன. நமக்கும் வாழ்ந்த மனிதர்களைக்காட்டிலும் வாழ்ந்துகெட்ட மனிதர்களெனில் கூடுதல் கரிசனம்.  மனிதர்களின் இச்சபலத்தை புரிந்துகொண்டு, பரிவும் குற்றவுணர்வுமாக  கதைசொல்லி இம்மனிதர்களை தேடிஅலைகிறார். அலைந்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்ளும் மொழியும் இதமானவை.

கே.ஜே அசோக்குமாரின் கதைகளில்  உவமைகளும் உருவகங்களும் படிமங்களும் ஏராளம். கொஞ்சம் குறைத்துக் கையாண்டிருக்கலாம். பல இடங்களில் பொருத்தமாக கதைக்கிசைந்து கையாண்டிருப்பதால், அவற்றின் இருப்பையும் சந்தேகிக்க முடிவதில்லை.

“எதிர்ச்சாரி வீட்டுவாசலில் இரவெல்லாம் திரிந்த களைப்பில் இரண்டு நாய்கள் வண்டியில் அடிபட்ட துபோல படுத்துக்கிடந்தன.”

“நீருக்கு அடியில் தெரியும் கூழாங்கல்லைப்போல மின்னும் கண்களோடு உற்சாகத்தோடு அவர் பேசுவதைக்கேட்க சிலர் எப்போதும் இருப்பார்கள்.”

“ கூரையில் ஒட்ட டைகள் வெளித்திண்ணைவரை பரவித் தொங்கிக்கொண்டிருப்பதை இப்போதுதான் கவனிப்பதுபோலப் பார்த்தான்”

“ உச்சியில் சில சில்வண்டுகள் பறந்துகொண்டிருந்தன. நீர்போன்ற தெளிந்த நீலவானத்து பின்னணியில் அது தெளிவாகத் தெரிந்த து.”

தன்மையில் சொல்லப்பட்ட கதைகள் சுயத்துடன் கதை சொல்லிக்குண்டான போராட்டங்களை விவரிப்பவை, ஆழ்மனதின் சிக்கல்கள் குழப்பமின்றி கதைகளாக்கப்பட்டுள்ளன. இத்த்கைய முயற்சிகள் தமிழுக்குத் தேவை. தமிழ்ச் சிறுகதைக் களத்தில் அதிகம் வாசித்திராத கதைக்களங்கள்.  வருகை, எறும்புடன் ஒரு சனிக்கிழமை, சாமத்தில் முனகும் கதவு, அவன் (இதே பெயரில் நான் எழுதியுள்ள ஒரு கதை நினைகுக்கு வந்தது.) ஆகியவை அவ்வகையிலான கதைகள்.

எனக்குக் குறிப்பாக சாமத்தில் முனகும் கதவு, அபரஞ்சி, அந்நியன் என ஒருவன், மாங்காச்சாமி, பின் தொடரும் காலம் ஆகியவை முக்கியமான கதைகள்.எனது தேர்வும் உங்கள் தேர்வும் இணங்கியாக வேண்டும் என்கிற  நிர்ப்பந்தங்கள் இல்லை. ஆனால் ஒரு நல்ல வாசிப்புணர்வை கே ஜே . அசோகுமார் கதைகள் தரும் என்பது உறுதி.

சிலவருடங்களுக்கு முன்பு இச்சிறுகதை தொகுப்பு ஆசிரியரின்  சிறுகதையொன்றை சொல்வனம் இணைய இதழில் வாசித்தேன். பாராட்டியிருந்தேன்.  இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலால கதைகள்  அதை நிரூபித்துள்ளன. மேலும் வளர்வார். பாராட்டுகள்.

நன்றி : திண்ணை இணைய இதழ்

__________________________________________________________

 

 

 

 

.

இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம்- உரைநடையில் – க பஞ்சாங்கம்

 நெஞ்சை அள்ளும் இளங்கோவடிகளின்   உரைநடை சிலப்பதிகாரம்’

                                               நாகரத்தினம் கிருஷ்ணா

‘ நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று   பேச்சிலும் எழுத்திலும் பாரதியின் பாடல்வரியை மேற்கோள் காட்டும் பலர் அம் மகாகவியைப்போல   இளங்கோவடிகளின் படைப்பை  சுவைத்திருப்பார்களா ?  எனக் கேட்டால், இல்லை என்பதுதான் பதிலாகக் கிடைக்கும்.  இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம்  பேரிலக்கியங்களில் ஒரு மலைத்தேன்.  மலைத்தேனைப்போலவே காவியச்சிலம்பும் கடும் முயற்சியின்றி  மாந்தக்கூடிய தீஞ்சுவை அல்ல.   காலத்தாலும், கற்றோர்  தொழும் மொழியாலும் பாமரர்க்கு எட்டாத உயரத்தில், கட்டப் பட்டத் தேன்கூடு அது. இளங்கோவடிகள் எனும் தேனீ, தமிழ் நிலத்தின் காடுமேடெல்லாம் அலைந்து, அழகியல் பூக்களைத் தேடி மோந்து, அவற்றின் சுவைதரும் மதுரத்தை புலன்களில்  சுமந்து ஒராயிரம் தேனிக்களின் பணியை தான் ஒருவனாக  கலை நயத்துடன்  கட்டி எழுப்பிய  தேன்கூடு சிலப்பதிகாரம். இன்றைக்கிந்த மலைத்தேன் குடத்தை, முடவர்களாக அண்ணாந்துபார்த்துக்கொண்டிருந்த  நம் கைகளில் தந்து  எளிதாக மாந்துவதற்குரிய நற்காரியத்தைச் செய்திருக்கிறார், பேராசிரியர்.

பேராசிரியர்  க. பஞ்சாங்கம் இந்நூலைக்குறித்து எனதுக் கருத்தை  எழுத்துவடிவில் கேட்டிருந்தார். அக்கருத்தை அணிந்துரை என்றபெயரில் அழைப்பதென அவர் தீர்மானித்திருந்தாலும் எனக்கதில் உடன்பாடில்லை. சிலப்பதிகாரம் என்ற பெருங்காப்பியத்தை –  மூல ஆசிரியரின் கவிதைமொழியை, உரைநடை மொழியாக உருமாற்றம் செய்யும் துணிவும் ஆற்றலும் எல்லாருக்கும் ஆகிவராது. இவரோ சிலப்பதிகாரத்தின் மீதும் தமிழ் மொழி மீதும் கொண்டுள்ள தீராத காதலினால், விரும்பி இப்பணியைத் தொடங்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.  இவருக்கு பல முகங்கள் உண்டு : தமிழ்ப் பேராசிரியர், படைப்பிலக்கிய நிலத்தின் நஞ்செய், புஞ்செய்களான தொன்மம் நவீனம்  இரண்டிலும் ஆழமான அறிவும் தேர்ச்சியும் பெற்றவர், கவிஞர், கட்டுரையாளர், புனைகதையாளர் அனைத்துக்கும் மேலாக   நெஞ்சில் கோடாமையை நிறுத்திய திறனாய்வாளர் எனத் தமிழுலகம் ஏற்றுக்கொண்ட மனிதர், பெரியர், செயர்க்கரிய செயல்களைச் செய்வார். நான் சிறியன், இத்தகையை முயற்சியை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளக்கூட போதாதவன். அறிந்ததெல்லாம் தற்கால இலக்கியங்கள் மற்றும் புனைவுலகம்.  எனவே இது முன்னுரை அல்ல  ஒரு சராசரி படைப்பிலக்கிய இரசிகனின் கருத்து.

இம்முயற்சியில் மூன்று கூறுகள் இருக்கின்றன. முதலாவதாக உரைநடைமொழிக்குப் பேராசிரியர் தேர்வு செய்த நூல் ; அடுத்து  தம் முயற்சியைத் திருவினையாக மாற்றிய  உரைநடை ஆசிரியரின் ஆற்றலும், உழைப்பும் ;  இறுதியாக இந்நூல் தரும் வாசிப்புப் பலன்.  இம்மூன்றும் இந்த நூலைக்குறித்த எனது கருத்தைத் தெரிவிக்க உதவியவை.

படைப்பிலக்கியத்தின் வடிவம் என்கிறபோது கவிதை , உரைநடை என்ற இரண்டு சொற்களும் நம் கண்முன் நிற்கின்றன. இரண்டும் உடன்பிறந்தவை என்கிறபோதும், குணத்தால் பங்காளிகள்:  கவிதை என்ற சொல்  இன்றைக்கும் புதிராகவும், எளிதில் விளங்கிக் கொள்ள இயலாததாகவும், பண்டித மொழிக்குரியதாகவும்,  அதனால் கற்றறிந்த மேலோரின் அறிவுப் புலனுக்கு மட்டுமே எட்டக்கூடிய இலக்கிய பண்புகளைக் கொண்டதாகவும், படைப்பாளியின் நெஞ்சை வெகு அருகில் நின்று புரிந்துகொள்ள உதவும் ஊடகமாகவும் இருக்கின்றது.  மாறாக உரைநடை என்ற சொல் மகிழுந்தில் பயணிப்பதல்ல, பேருந்தில் பயணிப்பது, அன்றாடம் நீங்களும் நானும் உரையாடும் மொழியில், பெருவாரியான மக்களின் வாழ்வியலோடு  தொடர்புடைய மொழி.  அடர்த்தியும் சொற் சிக்கனம், இவற்றிலிருந்து விடுபட்டு வாசிப்பவருடன் நெருக்கம் காட்டும் மொழி.  உலகெங்கும் படைப்பிலக்கிய மொழியாக கவிதையே  தொடக்கத்தில் இருந்துவந்திருக்கிறது.  முடியாட்சி அரசியலில்  இலக்கிய சமூகத்தில்  கவிதைமொழி  மேட்டிமை அடையாளத்தைப் பெற்றிருந்தது. உரையாசிரியர்கள், இல்லையெனில்  நம்மில் பலரும் சபை நடுவே நீட்டு ஒலை வாசியாத, குறிப்பு அறியமாட்டாத நன் மரங்களாக மட்டுமே  இருந்திருப்போம்.   முடியாட்சியை மக்களாட்சியாக மாற்றுவதற்கு நடத்திய புரட்சியை ஒத்ததுதான் அந்த நாளில் இலக்கிய வெளியில் கவிதை சிம்மாசனத்தில் உரைநடையை உட்காரவைக்க எடுத்துக்கொண்ட முயற்சிகளும்.  கவிதை உரைநடை வடிவத்திற்கு உட்படாமல் இருந்திருந்தால், கல்விப்புலத்திலும், கருத்துப்புலத்திலும் இன்று நாம் கண்டிருக்கிற நுட்பமான வளர்ச்சிகள் இல்லையென்று ஆகியிருக்கும். இலக்கண பண்டிதர்கள் பெருகி இருப்பார்கள், இலக்கிய படைப்பாளிகள் சுருங்கி இருப்பார்கள்.       பேராசிரியர் க. பஞ்சாங்கம் பல நூற்றாண்டுகளுக்கு  முன்பு எழுதப்பட்ட இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தை

பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்குங் கயிறு

குறளாரின் மூதுரைக்கிணங்க இன்றைய படைப்புலகின் முதன்மை மொழியில், எழுதியிருக்கிறார். ‘ 20ம் நூற்றாண்டு என்பது உரைநடைத் தமிழின் எழுச்சி காலம்’ என்பதற்கொப்ப இயங்கியுள்ளார். கவிதை மொழியை உரைநடைமொழியில் கொண்டுவந்திருக்கிற இப்பணி, நகல் அல்ல அசல். சிலம்புக்கு நிகரானதொரு காவியம் உலகில் எழுத்துவடிவில் எங்குமில்லை. குடிமக்களை காவிய மாந்தர்களாக உயர்த்திய பெருமை,  கதைமாந்தர்களின்  கலை இலக்கிய ஈடுபாட்டினையும் நுண்நோக்கி  எழுத்தில் சேர்த்த அருமை, படைப்பினத் தொடங்கும் உத்தி, கதை சொல்லும் பாங்கு, இயற்கையின் ஊமை வினைகளை சொல்லோவியமாகத் தீட்டும் திறன் என சிலப்பதிகாரத்தை  எழுதிய படைப்பாளிக்கும், நிகராக அவர்காலத்தில் ஒருவருமில்லை.

இத்தகைய சீர்மை மிக்கதொரு நூல்  பெருவாரியான  மக்களைச் சென்றடையவேண்டும் அதன் பெருமையை அவர்கள் தாமே வாசித்து உணரவேண்டும்  என்ற நோக்குடன், படைப்பாளியை மேலும் கொண்டாடும் வகையில் பேராசிரியர். க பஞ்சாங்கம் உழைத்திருக்கிறார். கணியன் பூங்குன்றனாரின் ‘உண்டாலம்ம இவ்வுலகம் ‘ என்ற பாடலையொத்து துஞ்சலின்றி, அயர்வின்றி, தமிழ்கூறும் நல்லுலகிற்கென எடுத்துக்கொண்ட முயற்சி. முயற்சியின் பொருண்மையை அவரது முன்னுரை கோடிட்டுக் காட்டுகிறது.  ஒவ்வொரு சொல்லையும், அச்சொற்களை சுமக்கும் பாடல் வரியையும், அவற்றின்  சுவை குன்றாமல் நயம் குலையாமல்  ‘ செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து.’   என்ற குறளுக்கிணங்க, உரைநடை காப்பியமாக எழுதியிருக்கிறார்.  தான் செயல்பட்ட விதம், முன்னோடிகள் முயற்சிக்கும் இவருடைய முயற்சிக்கும் உள்ள வேறுபாடு, எழுதியகாலத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் என  தம்  முன்னுரையில்  இளங்கோவடிகளின் சிலப்பதிகார உரைநடை படைப்பாளி   பகிர்ந்துகொண்டுள்ளவற்றை   நண்பர்கள் கட்டாயமாக  வாசிக்க வேண்டும்.  இன்றைய இலக்கியத் தேவைக்கேற்ப காலம்கருதி  இளங்கோவடிகளே இவருள் புகுந்து, இதனை எழுதியிருப்பாரோ என்ற ஐயம் எனக்குண்டு.

« இந்த நூற்றாண்டு வாசகன் தன் நெஞ்சிற்கு நெருக்கமாக, இதம் தரும் ஒன்றாக உரைநடைத் தமிழை உணர்வதில் எந்த வியப்புமில்லை » என நூலாசிரியர் முன்னுரையில் குறிப்பிடுவதுபோல இப்படைப்பும் வாசகர் நெஞ்சிற்கு நெருக்கமாக இதம்தரும் உரைநடை சிலப்பதிகாரமாக உணரப்படும்,  இளங்கோவடிகளின் புகழோடு இணைத்து நூலாசிரியரும், நூலும்  பேசப்படுவார்கள் என்பது உறுதி.


இளங்கோ அடிகளின் ”   சிலப்பதிகாரம்”

பேராசிரியர் க பஞ்சாங்கம்

அன்னம் பதிப்பகம்,மனை எண் -1, தஞ்சாவூர்.

 

படித்ததும்சுவைத்ததும் -15 : ஆந்தரேயி மக்கீன்

முன்பின் தெரியாதவனின் வாழ்க்கை

பிரெஞ்சு மொழியில் எழுதும் புலம்பெயர்ந்த படைப்பாளிகள் :

–  மூன்றாம்  உலக நாடொன்றில் பிறந்து அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களுக்காக புலம்பெயர்ந்து, தங்கள் பிழைப்பை உறுதிசெய்துகொண்ட பின்னர் படைப்புலகிற்குள் நுழைகிறவர்கள் ஒருவகை ;

– அதேகாரணத்திற்காக சிறுவயதிலேயே பெற்றோருடன் பிரான்சு நாட்டில் குடியேறி கல்வியைப் பிரஞ்சு மண்ணில் முடித்து, பிரஞ்சு பண்பாட்டில் திளைத்து, மிகத் திறமையாக மொழியைக் கையாண்டு கவனம் பெறுகிற கிழக்கு ஐரோப்பியர்கள் இன்னொருவகை.

ஆந்த்ரேயி மக்கீன், இரண்டாவது அணியினரைச் சேர்ந்தவர்.  முன்னாள் சோவியத் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்சு நாட்டில் வாழும் எழுத்தாளர். கம்யூனிஸ நாடுகளின் அடக்குமுறைக்குத் தப்பித்து மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்க்கையைத் தொடரும்  ஐம்பதைக் கடந்த கிழக்கு ஐரோப்பிய எழுத்தாளர்கள் இங்கிலாந்தைப்போல ஜெர்மனைப்போல பிரான்சு நாட்டிலும்  குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர்.

புலம்பெயர்ந்த எழுத்திற்கென்றுசில  பொதுவான குணங்கள் உண்டு : சொந்தமண்ணையும் உறவுகளையும் பிரிந்து, தன்னையும் தன்குடும்பத்தையும் எதிர்கால நலனுக்காக நிகழ்காலத்தில் அடகுவைத்து ;  தனது அடையாளம் வேரா கிளையா என்பது தெரியாமல் ; தொலைத்தவற்றையும், கண்டெடுத்தவற்றையும் சமன்செய்ய வக்கின்றி ; கடந்தகாலம்x நிகழ்காலம் ; தாய்நாடுxதஞ்சமடைந்த நாடு ; வாழ்ந்த ஊர்x வாழ்கின்ற  ஊர் எனும் இருமைப்பண்புகளில் சிக்குண்டு ; எங்கிருக்கிறேன், நான் யார் ? என்ற கேள்வியில் உழன்று ; ஆசிய சதுப்புநிலத்தில் சிக்கிய சைபீரிய பறவைபோல இரை மறந்து திசை நினைத்து வாடும் எழுத்து புலம்பெயர்ந்தவர் எழுத்து :  பிறந்த மண்ணைக்குறித்த ஏக்கம், பெருமிதம் – குடியமர்ந்த நாடு அளிக்கும் ஏமாற்றம் சோர்வு –   எனக் கதைக்கும்முறை.   ஆந்த்ரேயி மக்கீனிடமும் இவை எதிரொலிக்கின்றன.

‘ ஒரு நாள் மாலை நேரம். இருவரும் மலைச் சரிவொன்றில் பனிச்சறுக்கு விளையாடிக்கொண்டிருந்தார்கள். சாட்டையால் அடிப்பதுபோலக் குளிர்காற்று அவர்கள் முகத்தில் வீசிக்கொண்டிருந்தது உறைந்த பனித்துகள்கள் காற்றில் கலந்து  அவர்கள் கண்களை மறைத்தன. இறங்கும் வேகம் உச்சத்தை அடைந்தபோது, பின்னாலிருந்த அவ்விளைஞன் அவள் காதில் ‘நான் உன்னைக் காதலிக்கிறேன், நதேன்கா’, ’ என்கிற செக்காவ் வரிகளுடன்  நாவல் தொடங்குகிறது. ‘புலம் பெயர்ந்த ஒருவரின் தாயகம் அவர் தாயகத்தின் இலக்கியம்’(பக்கம் 24) என யாரோ ஒருவர் குறிப்பிட்டதாக நவலில் வரும் கூற்றை  ஆந்திரேயி மக்கீன் இங்கு நியாயப்படுத்துகிறார்.

செக்காவ் கதையில் வருகிற அத்தகைய சந்தர்ப்பமொன்றில், இந்நாவல் கதைநாயகன் ஷூட்டோவ் தன்னுடைய முன்னாள் ரஷ்யக் காதலி ‘யானா’ என்பவளிடம் உரைத்த காதல் மொழி என்பதோடு நேற்றைய லெனின் கிராடு அனுபவங்களைத் திரும்பப்பெறவும்,  தன் வேரினைத் தேடி அவன் பயணிக்கவும் உந்துதலாக அமைகிற மொழியும் இதுவே.  இருநூறுபக்கமுள்ள நாவலில் முதல்  79 பக்கங்களில்  சொல்லப்படும் கதைநாயகனின்  இரண்டு பெண்களோடு சம்பந்தப்பட்ட வாழ்க்கை ஒரு புலம்பல். மாறாக நாவலின் பிற்பகுதியில், செயிண்ட் பீட்டர்ஸ் பர்கில் ஓட்டலொன்றில் (ஷூட்டோவ் முன்னாள் காதலி யானாவிற்குச் சொந்தமானது) வேண்டா விருந்தாளியாகக் கட்டிலில் கிடக்கிற வோல்ஸ்கி என்ற ‘முன்பின் தெரியாத’ கிழவனின்  இறந்த கால மீட்டெடுப்பு காட்சிகள் ஆந்திரேயி மக்கீன் ஒரு பேரிலக்கியவாதி என்பதை உறுதி செய்பவை. உண்மையில்  நாவலின்  இதயத் துடிப்பிற்குத் தமணியும் சிறையுமாக இருப்பவர்கள் வோல்ஸ்கி – மிலா ஜோடியினர் :  தம்பதிகளின் வாழ்க்கைப்பாதை  செப்பனிடப்படாத பாதை, கற்களும் முட்களும் நிறைந்த பாதை. பகைவர்கள் லெனின்கிராடை முற்றுகையிட்டிருக்க, தோழர்கள் என நம்பப் பட்ட ஆட்சியாளர்கள் சொந்த மக்களின்  வாழ்க்கையை முடமாக்கிய காலம்.

எழுத்தாளன் ஷூட்டோவுடைய  நிகழ்காலம், இறந்தகாலத்தைக்கொண்டு  மூன்று ஓவியச்சீலைகளை  ஆந்திரேயி மக்கீன் நம் கண்முன் விரிக்கிறார்.ஷூட்டோவ்-லெயா-பாரீஸ், ஒன்று ; ஷூட்டோவ்- யானா – செயிண்ட் பீட்டர்ஸ் பர்க், இரண்டு ; வோல்ஸ்கி-மிலா-லெனின் கிராட், மூன்று.

 

அ. ஷூட்டோவ்-லெயா- பாரீஸ்

கதை நாயகன் ஷுட்டோவ், ‘ ஐம்பது வயதாகிறது, நிறையப் படித்திருக்கிறான், ஆய்வு செய்திருக்கிறான், வறுமையைக் கண்டிருக்கிறான். அவ்வப்போது கொஞ்சம் வெற்றியையும் பார்த்திருக்கிறான்’  என்கிற தன்னைப்பற்றிய அவனது கர்வம்  அலட்சியப்படுத்தக்கூடியதல்ல.  அவனுக்குத் தான் வாசித்த நேற்றைய ரஷ்யக் காதல் கதை’மிக எளிமையானது, இருந்தாலும் சரியானது, பொருள் பொதிந்தது’ மாறாக இன்றைய பிரெஞ்சுக் காதல் கதைகள் ‘ நூறுபக்கம் பாரீஸ் நகர காமக் களியாட்டங்கள், பின்னர் மனச்சோர்வு’ இவ்வளவுதான். ஒரு தொலைக்காட்சி பேட்டியின்போது ‘பிரெஞ்சு மொழி பேசும் கறுப்பரின எழுத்தாளன் ஒருவன் ‘அங்கிள் பென்’ விளம்பரத்தில் வருபவன்போல இளித்துக்கொண்டிருந்தான், மெல்லிய கண்ணாடி அணிந்த  சீனன் ஒருவன் தன்பார்வையை இங்கும்மங்கும்  சுழலவிட்டுக்கொண்டிருந்தான், அதிலும் குறிப்பக ரஷ்யனான ஷூட்டோவை  அடிக்கடிப்பார்த்துக்கொண்டிருந்தான், பிரஞ்சு இலக்கியம் உலக மயமானதற்கு முத்தான மூன்று சான்றுகள்’  என தன் எண்ணத்தில் எச்சிலைச் சுமக்கும் கதைநாயகனோடு, இளைஞர்களை இன நிற வேறுபாடின்றி மோகிக்கிற  பிரெஞ்சு வாலைக் குகமரி ஒருத்தி இரண்டரை ஆண்டுகள் குப்பைக் கொட்டியதே  நமக்கு அதிகமென்று தோன்றுகிறது  பாரீஸ் காதலி லெயா,பிரிவதென்று தீர்மானித்து அனைத்தையும் மூட்டைகட்டி வைத்துவிடுகிறாள் . அவனைவிட்டுப் பிரிந்து, இன்னொருவனுடன் செல்ல ஆயிரத்தெட்டுக் காரணங்கள் அவளுக்கு இருக்கின்றன :

* முதலாவதாக அவனுடைய வயது முக்கியக்காரணியாகப் படுகிறது. அவனுக்கு அவள் தந்தை வயது, அவளுக்கு அவன் மகள் வயது. இங்கே மாக்ஸ் கலோ(Max Gallo) என்ற பிரெஞ்சு எழுத்தாளரின் ‘பெண்களின் பார்வை’ (Le regard des femmes) கதை நாயகன் பிலிப் இதே வயது காரணமாக காதலி லிசா தன்னைவிட்டு விலகிப்போவதாக புலம்பும் காட்சிகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிவதில்லை.

* இரண்டாவதாக இவன் செக்காவ் ரசிகன், ‘கிரங்கவைக்கும் குளிர், எளிதில் மருளும் காதலர்கள் ‘ என செக்காவ் படைப்புக் காட்சியை ஒரு எழுத்தாளனாகப் பார்ப்பவன். ஷூட்டோவிற்கு, செக்காவ்  ‘ நான் உன்னைக் காதலிக்கிறேன், நதேன்கா ‘ என்ற வரியைக்கூட காவியமாக்கும் திறமைசாலி.  ஆனால் லெயா தெய்வமாகக் கொண்டாடும்  எழுத்தாளர்கள் புத்தகங்களில் ‘…காதல் மணம் வீசுவதில்லை. எச்சில் நாற்றம்தான் வீசுகிறது… அருவருப்பு ….  ‘  என்கிற  நிலமை.

இப்படி நடுத்தர வயதைக்கடந்த எழுத்தாளனுக்கும், அவன் மகள் வயதுடைய பெண்ணொருத்திக்கும் இடையிலான பேதங்கள் அவர்களுக்கிடையே தீராத வாக்குவாதத்திற்குக் காரணமாக ஒரு நாள் அவன் ரஷ்யப்பெயரை ‘சர்க்கஸ் கோமாளி’ எனக் கோபத்துடன் நக்கல் செய்து அவர்கள்  உறவுக்கு விடைகொடுக்கிறாள்.

‘லெயா’ என்ற இளம்பெண்ணின் இழப்பு, கதை நாயகனை பாரீஸிலிருந்து லெனின்கிராடிற்கு அதாவது இன்றைய செயிண்ட் பீட்டர்ஸ் பர்கிற்கு துரத்துகிறது. அவன் நினைவில் நிழற்படமாகவிருக்கிற  ‘யானா’ என்கிற முன்னாள் காதலியையும் அவள் சார்ந்த லெனின்கிராடு நினைவுகளையும் உயிர்ப்பிக்க ‘வெகு நாட்களுக்கு முற்பட்ட முகவரிகள் ! வேடிக்கையான சின்ன சின்ன தொலைபேசி எண்கள் ! பழைய பயண பையிலிருந்த எடுத்த கையேட்டுக் குறிப்புகளைப் படித்து பழைய வாழ்க்கையை  தம்முடைய இளமைக்காலத்தை மீட்டெடுக்க நினைப்பது, நாவலின் முதல் பகுதி.

 

ஆ. ஷூட்டோவ் – யானா- செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்

சோவியத் யூனியன் ருஷ்யாவாகவும், லெலின் கிராடு  செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் எனவும் மறுபிறவி கண்டபிறகு , ஷூட்டோவ்  தன் காதலி ‘ யானா’விடம் கடந்த கால லெனின்கிராடு நினைவுளை எதிர்பார்ப்பது கேலிக்குரியது. எதையோ நினைத்து தாயகம் திரும்பும் கதைநாயகன் நாம் நினைப்பதுபோலவே ஏமாற்றத்திற்குள்ளாகிறான். பழைய லெனின் கிராடு இல்லை, ‘மேற்கத்திய நாகரிகத்தின் சாரத்தை அவன் பிரான்சில் கூட காணத வகையில் இங்கு கொண்டுவந்துவிட்டார்கள்.’  புரட்சியின் பேரால் கொல்லப்பட்ட  இரண்டாம் நிக்கலிஸின் கொள்ளுப்பேரனுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் செயிண்ட்பீட்டர்ஸ்பர்க் அது.  ‘கிரேக்க பாதிரிமார்கள் புனிதரின் எச்சமிச்சங்களை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். ஓரின சேர்க்கையை விரும்பும் இரண்டு ராக் பாடகிகள் ஆங்கிலேயரின் மிதமிஞ்சிய நாணத்தைச் சாடுகிறார்கள். பெர்லுஸ்கோனி பவரோத்தியுடன்  டூயட் பாடுகிறார். ரஷ்ய சிலவராட்சி உறுப்பினர் ஒருவர் ஆல்ப்ஸ் மலையில் ஆறு சேலட்கள் வாங்குகிறார்’ கதை நாயகன் எதிர்பார்த்த  ‘லெயா’ வயது ‘யானா’ இன்று முதுமை வயதில் ருஷ்யா எடுத்துள்ள புதிய அவதரத்திற்கேற்ப ‘கொத்து கொத்தான ஹாலோஜன் மின் விளக்குகளின் கீழ் பிரகாசிப்பவள் ‘. மேற்குலகின் நகலாக காட்சி அளிக்கும் இன்றைய ருஷ்யாவின் நடைமுறைகள் அவனுடைய இனத்தோடு சேரும் சுக உணர்வும்,இருபது ஆண்டுகள்கழித்து நம்முடைய உலகத்தோடு தொடர்புகொள்வோம்  என்ற நம்பிக்கையும்’ பொய்க்க காரணமாக இருக்கின்றன.   

        ‘ ரஷ்யா அதற்கும் அதன் விதிப்பயனுக்குமிடையே  குறுக்கிட்ட அறுபது எழுபது ஆண்டுகால  நிகழ்ச்சிகளைத் துடைக்க முயலுகிறது. ஆம் அழகான ஒன்றை அச்சமும், அறிவுசார் அடிமைத்தனமும் ஆயிரமாயிரம் கொலைகளும் கலந்து சேறும் சகதியுமாக ஆகிவிட்டன’, ‘ஷூட்டோவ் மனதுக்குகுள் சிரித்துகொண்டான். தெளிவு மனதைக் காயப்படுத்தியது. அவனைக் கண்டு கொள்ளாமலேயே வரலாறு தன் போக்கைத் துறந்து மீண்டும் தூய்மை ஆகின்றது. அவனோ எல்லோரும் மறக்க விரும்பும் அம்மோசமான காலக்கட்டத்தின் சேற்றிலேயே உழன்றுகொண்டிருந்தான். ‘நான் வந்தது தவறு’, என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான்’(பக்கம் 74), என ஷுட்டோவ் நினைக்கிறான்.

 

இ. வோல்ஸ்கி – மிலா – லெனின்கிராட்

        ‘ யாரிடமாவது மனம் திறந்து தனது பயனற்றுப் போன பயணம், யானாவிடம் மீண்டும் இணைய முடியாத சோகம் ஆகிய எல்லாவற்றையும் சொல்லிவிடவேண்டும்’(பக்கம் 78) என்றிருந்த ஷுட்டோவுக்கு  புதையலைப் போல ஒரு சந்திப்பு. பாரீஸ் வாழ்க்கையிலிருந்தும், தன்னைக் கைவிட்ட ‘லெயா’ என்ற இளம்பெண்ணின் இழப்பளித்த துயரத்திலிருந்தும் தப்பிக்க ஷூட்டோவ் தேடிவரும் லெனின்கிராட் நகர இளமைக்காலத்தையும்  நாற்பதுகளில் கண்ட சோவியத்யூனியனையும்  ஒரு முதியவர் வடிவில் செயிண்ட்பீட்டர்ஸ்பர்க் இவனுக்கென்றே பத்திரபடுத்தி வைத்திருக்கிறது.  

        பத்து நாளைக்கு முன்னால் ஒரு முதியோர் இல்ல த்தில் சேர்க்கப்பட இருந்தார். அதற்குள் மூன்றாவது நூற்றாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. எல்லாம் மூடப்பட்டுவிட்டன. விளைவு,  எங்களுக்கு  ஒட்டும் உறவும் இல்லாத இந்த வயோதிகரை நாங்கள் வைத்திருக்க வேண்டியதாயிற்று !’(பக்கம்54 ) என முதியவரை ஷூட்டோவின் முன்னாள் காதலி அறிமுகப்படுத்துகிறாள். அவள்  கூறியதுபோல பத்துநாளைக்கு முன்பாக கிழவரை முதியோர் இல்லத்தில் சேர்த்திருந்தால், இந்த நாவலே இல்லை. ஷூட்டோவ் மட்டுமல்ல நாமும் ஏமாந்திருப்போம். முன்பின் தெரியாதவன் வாழ்க்கை என நாவலுக்கு பெயரிட்டதும், எழுத முற்பட்ட தும் முதியவரின் கல்லறை காரணமாகத்தான், என்பது நாவல் இறுதியில் தெரிய வருகிறது.

சில நேரங்களில் மனிதர் வாழ்க்கையில் சந்திப்பு என்பது அவர்களின் விதியைத் தீர்மானிக்கிற சம்பவமாகவும் அமைவதுண்டு.  வோல்ஸ்கி ஓர் இசைநாடகக் கலைஞன், தொழிலுக்கேற்ப நன்குபாடவும் செய்வான். அவனைப்போன்றே இசைநாடகப் பாடகியாகவும் நடிகையாகவும் இருப்பவள் மிலா. இருவரின் முதல் சந்திப்பு  எதேச்சையாக  இசைக்கல்லூரி  மாணவர்கள்காக  இருந்தபோது நிகழ்கிறது. ‘செம்பட்டை முடியுடன் கூடிய ஓர் இளம்பெண்’ ஆன  ‘மிலா’வை, ‘தன்னுடைய பாட்டின் மென்மையினால் வாழ்ந்து விடலாம், தன்னை வெற்றிகொண்டவர் பட்டியலில் சேர்த்துக்கொண்டு, இருளிலும் கூடப் பிரகாசிக்கும் கண்களைக்கொண்ட பெண்களைக் கவரமுடியும்’ என்று வோல்ஸ்கி மனப்பால் குடித்திருந்த தருனத்தில்  சந்திக்கிறான்.   பிரிவோம் சந்திபோம்’  என்ற சூத்திரத்தினால் முடையப்பட்ட வோல்ஸ்கி – மிலா உறவில் எதிர்பாலின வேட்கைக்கு அதிகப் பங்கில்லை. அவர்கள் பரஸ்பர அன்பிற்குச் சாட்சியாக இருப்பது  நூற்றுக்கணக்கான லெனின்கிராட் வாசிகளைப்போல  ‘உன்னிடம் மட்டுமே என் கனவுகளை ஒப்படைக்கிறேன் அன்பே’, என்ற பாடல் மட்டுமே.  ‘மிலாவுக்கு எப்படியோ, அவனுக்கு ஊர் மெச்சும் இசைநாடகக் கலைஞனாக புகழ்பெறும் கனவுகள் இருந்தன.  ஆனால் விதி வேறு திட்டங்களை வைத்திருந்தது.   இவர்களுக்கிடையே நிகழும் மூன்று சந்திப்புகளும், அவை துளிர்க்கின்ற தருனம் முதல்  இற்றுவிழும் நொடிவரை சொல்லப்படும் வாழ்க்கையும், பின்புலமாகச் சித்தரிக்கப்படும் சோவியத் யூனியனும் நம் நெஞ்சைவிட்டு அகலாதவை.

இரண்டாவது சந்திப்பு  நிகழும்போது : இரண்டாம் உலகப்போர், லெனின் கிராட் முற்றுகை, குண்டுவீச்சு, தினம் தினம் கல்லறையாக மாறும் வகையில் ஆயிரமாயிரம்பேர் இறந்துகொண்டிருக்கிறார்கள். பஞ்சமும் பசிநோயும் மக்களை வாட்டுகிறது. தற்போது அவன் இசைநாடகக் கலைஞன் இல்லை. பிணம் சுமப்பவன். ஆம் தங்களைச் சுற்றிலும் இறந்து கிடக்கும் சடலங்களை உயிரோடிருப்பவர்கள்தான் கல்லறைக்குக் கொண்டு செல்லவேண்டும். அதன்படி ஒரு பிணத்தை வண்டியில் போட்டு இழுத்துச் செல்கிறான். இவனைப்போலவே பெண்ணொருத்தி பிணவண்டியை இழுத்து வருகிறாள். இருவரும் மூச்சுவாங்க சற்று ஓய்வெடுத்து, கைவசமிருக்கும் காய்ந்த ரொட்டியைக் கடிக்கிறபோது, தங்கள் காரியத்தை இலகுவாக்கும் நோக்கில் வோல்ஸ்கி அப்பெண்ணிடம் பேச்சு கொடுக்கிறான் :

– நான் என் அணடைவீட்டுக்காரர்  பிணத்தை இவ்வாறு சுமந்து செல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை .வருத்தமாக இருக்கிறது. உங்களுடைய பிணம் யாருடையது ?

        – என் அம்மா !  என்று அவளிடமிருந்து பதில் வருகிறது.

        இருவரும் ஒரு நிமிடம் முகத்தில் எவ்வித சலனத்தையும் காட்டிக்கொள்ளாமல், பொங்கி எழுந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு மவுனமாக நின்ற இடத்திலேயே  நின்றார்கள். குளிர் பூஜ்யத்துக்குக் கீழ் முப்பது டிகிரி. அழுவதற்கு அதுவல்ல நேரம். ‘ (பக்கம் 98  )என ஆந்திரேயி மக்கீன் எழுதுகிறார்.

எதிரபாராமல் இசை நாடக அரங்கும் இவர்களுக்குக் கதவைத்திறக்கிறது. புணர்வாழ்வு கிடைத்த தென கலைஞர்கள் இருவரும்  கிடைத்தப் பாத்திரமேற்று நடிக்கின்றனர். இவர்களின் மகிழ்ச்சி அதிக நாள் நீடிப்பதில்லை. யுத்தம் வோல்ஸ்கி – மிலா ஜோடியைப் பிரிக்கிறது. வோல்ஸ்கி லெனின்கிராடை காப்பாற்றும் பொருட்டு போர்முனைக்குச் செல்கிறான். யுத்தம் செய்யும் களம் நிலையாக ஓரிடம் என்று சொல்லமுடியாததால் இருவருரிடையே கடிதப்போக்குவரத்துகள் இல்லை. ஆகத் திரும்பப் பிரிவினைச் சந்திக்கின்றனர்.

மூன்றாவது சந்திப்பு –  நீண்ட இடைவெளி,  ஒரு சனிக்கிழமை நிகழ்கிறது.  வோல்ஸ்கி  தனது கடந்த காலத்தில் மூழ்கி இருக்கிறபோது முகவரியொன்று நினைவுக்கு வர  ‘மிலா’ வைப்பற்றி விசாரிக்கலாம் என்று அங்கு போகிறான்.  வழியில்  பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஒருந்தியை ‘செம்பட்டை முடி பரத்தை, போரின் விளவு’ என்று முனுமுனுத்துவிட்டு, சற்று தூரத்தில் துணி காயவைத்துக் கொண்டிருந்த  பெண்மணியிடம் ‘மிலா’வைப் பற்றி விசாரிக்கிறான். அவள் காறித் துப்பிவிட்டு ‘உன் சல்லாபங்களைத் தொடங்க இரவுவரைகூட காத்திருக்க கூடாதா, வெட்க க்  கேடு, இனி பகலில்கூட வருவார்கள்’, என்கிறாள். திரும்ப வருகிறபோது பெஞ்சில் அமர்ந்திருந்த பெண்னை மறுபடியும்  காண்கிறான் :

அவள் கவிழ்ந்தடித்துப் படுத்திருந்தாள். தாலாட்டைப்போல, அவள் அன்பே உன்னோடு மட்டும் என் கனவைப் பகிர்ந்துகொள்கிறேன் என்று பாடினாள். அடுத்த அடி அவனுக்கு ஞாபகம் வந்தது. சற்று உரத்த குரலில் பாடினான். அப்போது அவள் உதடுகள் அசைந்த து அவனுக்கு வியப்பாக இல்லை. கண்கள் மூடியபடியே ஒரு புன்னகையைச் சிந்தி அவளுக்குள் இருந்த இன்னொரு ஜீவனை எழுப்பிவிட்டு பாடவைத்தாள். வோல்ஸ்கி அவளைத் தூக்கிவிட்டான். அவனுடன் அவள் சென்றபோது ஓர் இனிய கீதத்தின் தாக்கத்தால் அவள் தள்ளாடி நடந்தாள்.

‘என்று மக்கீன் அந்த ஜோடியின்  சந்திப்புகளை எழுதுகிறபோதெல்லாம்  படைப்பு அமரத்துவம் பெற்றுவிடுகிறது.  இந்த இடைப்பட்டக் காலத்தில்  அநாதைச் சிறுவர்களைக் காப்பாற்றத் தான் எடுத்த முயற்சிகளையும் அவர்களின் ஒரு வேளை ரொட்டிக்காக தாய்நாட்டின் உயர் ராணுவ அதிகாரிஒருவனுக்குச் சோரம் போகத் தொடங்கி இன்று ஓர் வேசியாக வெளி உலகிற்கு அறியப்பட்டுள்ள அவலத்தையும் பகிர்ந்துகொள்கிறாள்.

மிலா ஓர் இசை ஆசிரியை ஆகவும், வோல்ஸ்கி ஓர் அஞ்சல்துறை ஊழியனகாவும்  மீண்டும் வாழ்க்கையை ஆரம்பிக்க, ஸ்டாலின் அரசாங்கத்தின் இரகசியக் காவற்படை பொய்யானக் குற்றச் சாட்டை முன்வைத்து இவர்களைச் கைது செய்கிறது. அன்றைய வழக்கபடி விசாரனை, கடுங்குளிர் நிலவும் பிரதேச முகாம்களில் சிறையென,  பிரிவு இவர்களின் வாழ்க்கையில் மறுபடியும் குறுகிடுகிறது. ‘மிலா’ உடனான நான்காவது சந்திப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வோல்ஸ்கி  ஏமாற்றத்திற்கு ஆளாகிறார்.

 

நாவலின் இறுதியில் கூறுவதுபோல ‘எழுதுவதற்குத் தகுதியான வார்த்தைகள், மொழியில் சொல்லமுடியாத வார்த்தைகள்தான்’  என்பதாலோ என்னவோ, அந்த சொல்லமுடியாதவை  நெஞ்சில் ஏதேதோ அனுபவங்களாக விம்மித் துடிப்பதை உணருகிறோம். உணர்ச்சிப்பெருக்கில்  வார்த்தையின்றி  வோல்ஸ்கி கிழவனைப்போலவே பேச்சை வெறுத்து மௌனத்தில் ஆழ்கிறோம்.  ‘போர்கள், முகாம்கள், இரண்டு உயிர்களின் வலுவற்ற உறவுகள் என இப்படித்தான் கோல்ஸ்கி – மிலா ஜோடி வாழ்க்கை இருக்கின்றது.

வாழ்க்கையில் முதன் முதலாக எந்த ஊரும் சொந்த ஊர் இல்லையென்றும், அவன் போகும் இடங்கூட விரும்பிப் போகும் இடமில்லையென்றும், ஆயினும் இதுவரை இல்லாத அள்வுக்கு அவனுடைய சொந்த நாட்டின் மீது பற்று ஏற்பட்டிருந்தது. ஆனால் அந்த நாடு ஓர் இடத்தைக் குறிக்கவில்லை. ஒரு சகாப்தத்தைக் குறித்த து – வோல்ஸ்கி வாழ்ந்த சகாப்தம். …ஆம் வெட்கப்படவேண்டிய அரக்கத்தனமும் கொலைவெறியும் தலைவிரித்தாடிய அந்தக் காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாளும் தலையைத் தூக்கி ஒருவன் வானத்தைப் பார்த்திருக்கிறான்’  என்பது பாரீஸுக்கு திரும்பும் ஷூட்டோவ் மனநிலை. நம்முடைய மனநிலையும் அதுதான்.

இதுபோன்ற நூல்கள் தமிழில் வருவதனால், தமிழ் படைப்புகள் கூடுதல் வளம் பெறும். பதிப்பகத்திற்கும், மொழிபெயர்ப்பாளருக்கும் தமிழ் படைப்புலகம்  நன்றி கூற கடமைப்படுள்ளது.

—————————————————————-

முன்பின் தெரியாதவனின் வாழ்க்கை (நாவல் )

தமிழில் பேராசிரியர் திரு  கிருஷ்ணமூர்த்தி

வெளியீடு காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்

 

————————————————————————————————-