Category Archives: கவிதைகள்

நேற்றொரு விதி செய்தோம்!

நேற்றொரு விதிசெய்தோம் !

 

தருமபுரி பேருந்து

கும்பகோணம் பள்ளி

தூத்துகுடிப் போராட்டம்

திருச்சி நடுகாட்டிப்பட்டி

தீவிர ரசிகர்களுக்கென்றே

ஸ்பெஷல் காட்சிகள்.

அடுத்தடுத்து  ரிலீஸுக்குப் படங்கள்

காத்திருப்பதால்

ஒருவாரம்

அவை நிறைந்து ஓடினாலே, அதிகம்.

 

நேற்றொரு விதி செய்தோம் அதை

நித்தமும் காப்பதெம் கடமை !

நினைவேந்தல்,  இழந்தபிள்ளையின்

படத்திறப்பென்று

ஒப்பனையுடன் கதாவைத் தட்டுவோம்- நீ

கண்ணீருடன் திற,

அதிஷ்ட்டமிருப்பின்

ஐந்து லட்சம் பத்துலட்சம்

மொய்யும் எழுதுவோம் ! தவறினால்

ஒரேஒரு ஸ்டில்

எங்கள் கவலை தீரும் !

————————————————————-

 

 

கவனத்தை ஈர்த்த கவிதை நவம்பர்-2012

சந்திப்பு…
– தேனம்மை இலட்சுமணன்

ஒரு உறவு ஏற்படும்போதே
அதிலிருந்து விலகிப்
பார்ப்பதான சிந்தனையும்
தோன்ற ஆரம்பிக்கிறது.

எந்நேரமும் பிரியலாம்
என்ற அணுக்கத்தோடே
பகிரப்படுகிறது எல்லா
சொந்த விஷயங்களும்

இந்நேரத்தில் இன்னதுதான்
செய்து கொண்டிருக்கக்கூடும்
என்பது தெரியும் வரை
தொடர்கிறது பேச்சு.

ஏன் பேசுகிறோம்
எதற்கு சந்திக்கிறோம்
என்ன உண்கிறோம் என்பது
சிந்தனைக்கு உரியதாயில்லை.

முதல் முதல் ஏற்பட்ட
ஒரு சந்திப்பு மட்டுமே
வித்யாசமாய் இருந்ததால்
நினைவில் இருக்கிறது.

அடுத்தடுத்து நட்பும் பிரிவும்
சகஜமாகிப்போவதால்
எல்லாமே ஒரு
சாதாரண விஷயமாகிறது.

ஆனாலும் முதல் சந்திப்பின்
ஆவலும் சந்தித்த பின் நீர்ப்பும்
புரையேற்றிக் கொண்டேயிருக்கிறது
திரும்பச் சந்திக்கும் ஆவலை.

எல்லா சந்திப்புகளையும்
தூக்கிப்போட்டுவிட்டுப்
போகச் சொல்கிறது
யதார்த்த வாழ்க்கை.

ஏதோ ஒன்று இனிமையைத்
தூண்டிக்கொண்டே இருப்பதால்
இன்னும் விட்டுப் போகாமல்
தொடர்கிறது சில சந்திப்பு.

-திண்ணை இணைய இதழில் 25-9-2011 அன்று பிரசுரமான கவிதை.

http://honeylaksh.blogspot.fr

—————————————–