Category Archives: உலக எழுத்தாளர் வரிசை

பிரியாவிடை

                  பிரியாவிடை (Adieu)

( கதை பிரெஞ்சில் பிரசுரமான ஆண்டு 18 மார்ச் 1884)

  • கி மாப்பசான்
  • தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா

நண்பர்கள் இருவரும் இரவு உணவை முடித்துக் கொண்டிருந்தனர். உணவகச் சன்னலில் இருந்து  பார்க்க வெளியே பெருஞ்சாலையில் கூட்டம் கூட்டமாக மனிதர்கள். கோடை இரவுகளில் பாரீசில் வீசும் இதமான காற்று உடலைத் தொட்டது. பாதசாரிகள் தலைகளை உயர்த்தி நடப்பதற்குரிய காரணம் விளங்க, உணவகத்திலிருந்து வெளியேறவேண்டும் என்கிற உந்துதல். அங்கே செல்லவேண்டும், காற்றுதரும் கனவுகளில் ஏதேதோ வருகின்றன : தழையத் தழைய இலைகளுடன் நிற்கும் மரங்கள்,  நிலவொளியில் ஜொலிக்கிற நதிகள், மின்மினிப் பூச்சிகள், வானம்பாடிகள், இவற்றிறில் எதைத் தேர்ந்தெடுப்பது, எங்கே செல்வது என்பதில் நண்பர்கள் இருவருக்கும் குழப்பம்.  

அவர்களில் ஒருவரான ஹாரி சிமோன் ஆழ்ந்த பெருமூச்சுடன் கூறினார்:

–  ம்,  எனக்கு வயதாகிவிட்டது, தற்போது அதுபற்றிய கவலைதான். முன்பெல்லாம், இதுபோன்ற மாலைவேளைகளில்,  துர்த்தேவதை இறங்கினதுபோல எனதுடல் இருக்கும். தற்போது மனதில் விசனத்தைத் தவிர வேறொன்றுமில்லை. வாழ்க்கை வேகமாக ஓடுகிறது.

மனிதருக்குக் கனத்த உடல், நாற்பத்தைந்து வயது இருக்கலாம், தவிர வழுக்கையும் அதிகம்.

மற்றவர், பியர் கர்னியெ, கொஞ்சம் கூடுதலான வயது, நன்கு மெலிந்திருந்தார், அதேவேளை உற்சாகமான ஆசாமி.  நண்பர் சொல்லி முடிக்கட்டுமெனக் காத்திருந்தவர்போல இவர் தொடர்ந்தார்:

” அன்பிற்குரிய சினேகிதரே, எனக்கும் வயதாகிவிட்டது,  அதைச் சிறிதும் உணராமலேயே நானும் இருந்திருக்கிறேன்.  மகிழ்ச்சி, திடகாத்திரமான உடல், சுறுசுறுப்பென்று பலவும் என்னிடம் இருந்தன. இருந்தும் கண்ணாடிமுன் நிற்கிற ஒவ்வொரு நாளும்    ​​வயது தனது கடமையை நிறைவேற்றுவது கண்களுக்குப் புலப்படுவதில்லை, காரணம்  அப்பணியை மெதுவாகவும், அதற்கான நியதிகளின் அடிப்படையிலும் நிறைவேற்றுகிறது. மாற்றங்களை உணரமுடியாத வகையில் மெல்ல மெல்ல நம் முகத்தை அது திருத்தி எழுதுகிறது.

இந்த ஒரு காரணத்திற்காகவே வயதின் இரண்டு அல்லது மூன்றாண்டுகால கபளீகரத்திற்குப் பிறகு  நாம் அதிகம் மனம் உடைந்துபோவதில்லை. அதேவேளை  இம்மாற்றங்களை நாம் கொண்டாடவும் இயலாது. குறைந்தது ஆறு மாதங்கள் கண்ணாடி முன் நின்று முகத்தைப் பார்க்காமலிருக்க நமக்குப் பொறுமை வேண்டும், அப்போதுதான்  இப்பிரச்சினையின் உண்மை தெரியவரும்.  அன்று,  தலையில் இடி விழுந்திருக்கும்!

சரி பெண்கள் நிலமை என்ன, அருமை நண்பா!, அதை  எப்படிச்சொல்ல?, மிகவும் பரிதாபத்திற்குரிய ஜீவன்கள் அவர்கள்! அவர்களுடைய  ஒட்டுமொத்த மகிழ்ச்சியும்,  பலமும், உயிர்வாழ்க்கையும் எதில் அடங்கியுள்ளது  தெரியுமா? சுமார் பத்துவருடகாலம் மட்டுமே நிலைத்திருக்கிற அவர்களுடைய அழகில்.

என் விஷயத்திற்கு வருகிறேன்,  நானும், எப்படியென்று சந்தேகிக்காமலேயே முதுமையை அடைந்துவிட்டேன், இன்னமும் நானொரு பதின் வயது இளைஞன் என்று எண்ணிக்கொண்டிருக்க, ஐம்பதுவயதை நெருங்கியிருந்தேன். குறைபாடுகள் ஏதுமின்றி வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் சென்றது. முதுமையின் வருகை கவனத்தைபெற்றதில்லை, இருந்தபோதிலும் அது கொடுமையானது, உண்மையைப் புரிந்துகொண்டபோது கிட்டத்தட்ட ஆறுமாதங்கள்  அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் கிடந்து, பிறகு அதன் வழியில் செல்வதென முடிவெடுத்தேன்.

எல்லா ஆண்களையும் போலவே நானும் அடிக்கடி காதல் வயப்பட்டிருக்கிறேன், அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்று உண்டு.

சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, யுத்தம் முடிந்து சிறிதுகாலமிருக்கும், ஏத்ருத்தா(Etretat) கடலோரம்   அவளைச் சந்தித்தேன்.  காலைவேளையிலும், கடல் நீராடுகிறபோதும் அக்கடற்கரையின் அழகே தனி. குதிரை இலாடம்போல வளைந்து, செங்குத்தான வெண்ணிற பாறைகளால் சூழ்ந்திருக்கும். ஆங்காங்கே புதுமையான வகையில் வெடிப்பில் உருவான சிறு சிறு பிளவுகள். அவற்றுக்குக் ‘கதவுகள்’  என்று பெயடரிட்டிருக்கிறார்கள்.  செங்குத்தான பாறைகளில் ஒன்று மிகப்பெரியது, கடல் நீருக்குள், ஒரு பக்கம் தன்னுடைய பிரம்மாண்டமான காலை நீட்டிக் கிடத்தியதுபோலவும்,எதிர்பக்கம் மற்றொரு காலை, குத்துக்காலிட்டு அமர்ந்திருப்பது போலவும் தோற்றம் தரும் ; கடற்கரையெங்கும் பெண்கள் திரண்டிருப்பார்கள், சிறு நாக்குகள்போல பரவிக்கிடக்கும் கூழாங்கற்கள் நிறைந்த கடற்கரையில், பாறைகளுக்கிடையில் பெண்கள் குவிந்திருக்கும் காட்சி ஜொலிக்கும் வெள்ளாடைகளால் ஆன தோட்டமோ எனும் வியப்பைத் தரும். போதாதற்கு கடற்கரையும், பச்சை நீல வண்ணங்கள் கலவையிலான   கடல் நீரும், நிழலுக்கென விரித்திருந்த விதவிதமான குடைகளில் முழுவீரியத்துடன் காய்கிற சூரியனும் கண்களுக்கு விருந்தென்பதோடு, அக்காட்சி பரவசத்தையும் புன்னகையையும் நமக்கு அளிப்பவை.  கடல் நீருக்கு எதிரே  அமரலாமென்று செல்கிறோம். நீராடும் பெண்களைப் பார்க்கிறோம்.  சிலர் நீரை நோக்கிச் செல்கிறார்கள், பெரிய அலைகளைத் தவிர்த்துவிட்டு சிற்றலைகளின் நுரை விளிம்பை நெருங்குகையில், தங்கள் உடலைச் சுற்றியிருந்த மெல்லிய பருத்தித் துவாலையை  ஒயிலாக அவிழ்த்து எறிகிறார்கள். நீருக்குள் அடியெடுத்துவைப்பதில் பதற்றம் தெரிகிறது, தவிர நீரின் குளிர்ச்சி தரும்  சுகமான சிலிர்ப்பும், கணநேர சுவாச நெருக்கடியும் சிற்சில சமயங்களில் அவர்கள் தயக்கத்திற்கு காரணமாகின்றன.

கடல் நீராடலின் இச்சோதனையில், வீழ்பவர்களே அதிகம்.  கெண்டைக்கால் தசைப்பகுதியிலிருந்து மார்புவரை அதனை அவதானித்து தீர்மானிக்க முடியும். என்னதான்  மென்மையான  சரீரங்களுக்கு கடல் நீர் ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்ப்பென்கிற போதும் நீராட விரும்பாமல் கரைக்குத் திரும்புவதென்பது ஒரு சிலரின் பலவீனத்தையே காட்டுகிறது.  அந்த இளம் பெண்ணைக் முதன்முறையாகப் பார்த்தகணத்திலேயே  மனதில் பரவசம், ஒருவித மயக்கம். கடல் நீரின் சோதனைக்கு அவள் தாக்குப் பிடித்தாள், உறுதியாக நின்றாள். தவிர சிலரின் தோற்றங்களுக்கென்று ஒருவித வசீகரம் உள்ளது, அது கணத்தில் நமக்குள் நுழைந்து, எங்கும் பரவி நிரம்பும். நாம் எந்தப்பெண்ணைக் காதலிக்கப் பிறந்தோமோ அவளே நமக்கு அறிமுகமாகிறாள் என்பதென் கருத்து. இவ் உணர்வு தோன்றிய மறுகணம் உடலில் ஒரு சிலிர்ப்பு.

என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். முதன் முறையாக பெண்ணொருத்தியின் பிடிமானத்தில்சிக்குண்டது அப்போதுதான். எனது இதயத்தை  சூறையாடியிருந்தாள் கபளீகரம் செய்திருந்தாள்.  இப்படி ஒரு பெண்ணின் ஆதிக்கத்திற்கு அடிபணியும் அனுபவம் என்னை பயமுறுத்தியது என்கிறபோதும் அது இனிமையானது. கிட்டத்தட்ட ஒரு வகையில் சித்திரவதை,  அதே நேரத்தில், நம்பமுடியாத வகையில் மகிழ்ச்சி. அவள் பார்வை, புன்னகை, காற்றில் எழுந்தடங்கும் அவள் புறங்கழுத்து தலைமயிர், முகத்தில் காண்கிற மெல்லிய கோடுகள், முகக்கூறின் எந்த ஒரு சிறிய மெலிதான  அசைவும் என்னை மகிழ்வித்தன, புரட்டிப்போட்டன, பைத்தியமாக்கின. அவளுடைய தனித்தன்மையும், முகபாவமும், சமிக்கையும், செயல்பாடுகளும் என்னை ஆட்கொண்டிருந்தன, ஏன் உடைகளும், அணிகலன்களுங்கூட  என்னை வசியம் செய்திருந்தன. மரத்தளவாடத்தின் மீது கிடந்த அவளுடைய முகத்திரையையும், ஒரு நாற்காலியில் வீசப்பட்டிருந்த அவள் கையுறைகளையும்கண்டு  என் மனம் சலனப்பட்டிருக்கிறது. அவளுடையை ஆடைகளைப்போல  உடுத்தவேண்டுமென  எந்தப் பெண்ணாவது முயற்சித்தால்  அவளுக்குத் தோல்வி நிச்சயம் என நான் நினைப்பேன்.  விதவிதமான தொப்பிகள் அவளிடமிருந்தன, அவற்றைப் பிறபெண்களிடம் கண்டதில்லை.

அவள் திருமணமானவள், கணவன் வார இறுதியில் மட்டும் வீட்டிற்கு வருவான், என்னைக்கண்டும் காணாமலிருந்தான். எனக்கு அம்மனிதனிடத்தில் பொறாமையில்லை, அதற்கான பதிலும் என்னிடத்தில் இல்லை. மிக் கேவலமான ஓரு பிறவி,  சிறிதளவும் பொருட்படுத்தவேண்டிய மனிதனே அல்ல. அப்படியொரு மனிதனை என் வாழ்நாளில் அதற்கு முன் சந்தித்த தில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அவளைத்தான் நான் எப்படி நேசித்தேன்! அவள்தான் எவ்வளவு அழகு, எத்தனை நேர்த்தி, இளமை! அதாவது அவளே இளமையும், வனப்பும், புத்துணர்ச்சியுமாக இருந்தாள். பெண்ணென்றாலே அழகானவள், மென்மையானவள், தனித்தவள், வசீகரமும் கருணையும் ஒரு சேர உருப்பெற்றவள் என்றுணர்த்தியதும் அவள்தான், முன்னெப்போதும் அப்படியொரு எண்ணம் உதித்ததில்லை. தவிர கன்னங்களின் வளைவிலும், உதட்டின் அசைவிலும்,  சிறிய காதுகளின் வட்டமான மடிப்புகளிலும், மூக்கெஎன்று நாம் அழைக்கும்  இந்த கவர்ச்சியற்ற உறுப்பின் வடிவத்திலும்  என்னை மயக்கும் அழகு இருக்கிறதென்று ஒருபோதும் நான்புரிந்து கொண்டதில்லை.

இது மூன்று மாதங்கள் நீடித்தது, பின்னர் நான் அமெரிக்காவிற்கு புறப்பட்டேன், என் இதயமோ விரக்தி காரணமாக  நொறுங்கிப்போனது. இருந்தபோதும், அவளைப்பற்றிய நினைவுகள் உறுதியாகவும், வெற்றிக்களிப்புடனும் என்னுள் இருந்தன, அருகில் இருக்கையில் என்னை தன் வசம் எப்படி வைத்திருந்தாளோ அதுபோலவே நான் வெகு தூரத்திலிருந்தபோதும் என்னை  தன்வசம் வைத்திருந்தாள். வருடங்கள் கடந்தன.  அவளை மறந்தவனில்லை. அவளுடைய வசீகரமான உருவம் என் கண்ணெதிரிலும், இதயத்திலும் குடிகொண்டிருந்தது. என்னுடைய காதல் உண்மையாக இருந்தது, ஒருவகையில்  ஆரவாரமற்ற அன்பு. இன்றைக்கு அது   நான் சந்தித்த மிக நேர்த்தியானதும் கவர்ச்சியும் மிக்க  ஒன்றின் நினைவுப்பொருள்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் பன்னிரெண்டு வருடங்கள் என்பது  மிகவும் சொற்பம்! எப்படி போனதென்றே நமக்குத் தெரியாது! ஒன்றன் பின் ஒன்றாகச் வருடங்கள் உருண்டோடுகின்றன, அமைதியாகவும் வேகமாகவும், மெதுவாகவும், அவசரமாகவும், ஒவ்வொன்றும் நீண்டதென்கிறபோதும், கணத்தில் முடிந்துவிடும்!   வருடங்களின் எண்ணிக்கை வெகுசீக்கிரத்தில்  அதிகரித்துவிடும், அவை விட்டுச் செல்லும் தடயங்களும் மிகவும் சொற்பம். காலம் கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்க, அங்கே ஒன்றுமிருக்காது, அவை முற்றாகத் தொலைந்திருக்கும், நமக்கு முதுமையை வருடங்கள் எப்படித் தந்தன என்பதையே  புரிந்துகொள்ள முடியாது.

கூழாங்கற்கள் நிறைந்த ஏத்ருதா(Étretatetat)கடற்கரையில் கழித்த அந்த அழகான காலத்தை விட்டு விலகி சில மாதங்களே ஆகியிருந்தனபோல எனக்குத் தோன்றியது.

கடந்த வசந்த காலத்தில் நண்பர்களுடன் விருந்துண்ண  மெய்சோன்-லாஃபித்(Maisons-Laffitte)வரை செல்லவேண்டியிருந்தது.

இரயில் புறப்படவிருந்த நேரத்தில், கனத்த சரீரம்கொண்ட  பெண்மணி,  நான்கு சிறுமிகளுடன் எனது பெட்டியில்  ஏறினார். ஓரிரு நொடிகள் கவனம் அவரிடம் சென்றது: நல்ல அகலம், கையெது காலெது என்று சொல்லமுடியாத அளவிற்கு பருமன், முழு நிலவை யொத்த பெரிய  முகத்திற்குப் பொருத்தமாக ரிப்பன் கட்டியத் தொப்பி, தலையில். வேகமாக நடந்துவந்திருக்கவேண்டும் மூச்சிரைத்தது, குழந்தைகள் சளசளவென்று பேச ஆரம்பித்தனர். நான் தினசரியைப் பிரித்து வாசிக்கத் தொடங்கினேன்.

எங்கள் இரயில் அனியேர்(Asnières) நிலையத்தைக் கடந்திருக்கும், என் பக்கத்து இருக்கைப் பெண்மணி   திடீரென்று என்னிடம் :

–மன்னிக்கவும், நீங்கள் மிஸியெ கர்னியெ தானே? எனக்கேட்டாள்.

–  ஆமாங்க…நீங்க?

என்று நான் இழுக்க கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள். அது துணிச்சலான பெண்களுக்கே உரிய சிரிப்பு என்கிறபோதும், சிறிது வருத்தம் தோய்ந்திருந்தது. 

– உங்களுக்கு என்னைத் தெரியவில்லை?

அந்த முகத்தை நான் எங்கோ பார்த்திருக்கிறேன் என்பது உண்மை, ஆனால் எங்கே ? எப்போது ? என்கிற கேள்விகள் இருந்ததால் பதிலளிக்கத் தயங்கினேன்.

— ம்… என்ன சொல்ல … உங்களை அறிந்திருக்கிறேன் என்பது  நிச்சயம், ஆனால் பெயரை நினைவு கூர இயலவில்லை.

பெண்மணியின் முகம் வெட்கத்தால் சிறிது சிவந்தது.

–  நான் மதாம் ழூலி  லெஃபேவ்ரு.

முகத்தில் அறைந்ததுபோல இருந்தது, இதற்கு முன்பு அப்படியொரு அனுபவமில்லை. ஒரு நொடியில் எனக்கு எல்லாம் முடிந்துவிட்டதென தோன்றியது. என் கண்களுக்கு முன்பாக முகத்திரையொன்று கிழிந்தது போலவும் கொடுமையான, மனதுக்கு ஒவ்வாத செய்திகளை   அறியப்போவதாகவும் உணர்ந்தேன்.

அவளா இவள்! பருமனான இந்தச் சராசரி பெண்மணி, அவளா? நான் கடைசியாக பார்த்தபிறகு இந்த நான்கு  பெண்களைப் பெற்றிருக்கிறாள். இந்த நான்கு சிறு ஜீவன்கள்  தங்கள் தாயைப் போலவே என்னை அன்று ஆச்சரியப்படுத்தின. அவர்கள் அவள் வயிற்றில் பிறந்தவர்கள்; நன்கு வளர்ந்தும் இருந்தார்கள், வாழ்க்கையில் அவர்களுக்கென்று விதிக்கபட்ட இடத்தையும் பிடித்தாயிற்று. மாறாக எழிலும், நேர்த்தியும், பகட்டுமாக இருந்த அற்புதப் பெண்மணியின் கதை முடிந்திருந்தது, நேற்றுதான் முதன்முறையாக அவளைச் சந்தித்தது போல் இருக்கிறது, இதற்குள் இப்படியொருமாற்றம்.  இது சாத்தியமா? கடுமையான வலியொன்றை இதயத்தில் உணர்ந்தேன், அவ்வலியை   கொடூரமானதொரு படைப்பை, இழிவானதொரு அழிவைக் கண்முன்னே நிறுத்திய இயற்கைக்கு எதிரானதொரு கிளர்ச்சி அல்லது பகுத்தறியப்போதாத ஒரு கோபம் எனவும் எடுத்துக்கொள்ளலாம்.

அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தேன். அவளுடைய கைகளைப் பற்றினேன்.  என் கண்களில்  நீர்கோர்த்தது. அவளுடைய இளமைக்காகவும், அதன் மரணத்திற்காவும்  அழுதேன், காரணம் என்னைப் பொறுத்தவரை கனத்த சரீரத்திற்குரிய பெண்ணை நான் அறிந்தவனில்லை.

அவளிடமும் சலனம் தெரிந்தது,  தடுமாற்றத்துடன் வார்த்தைகள் வெளிப்பட்டன:

“நான் நிறைய மாறிஇருக்கிறேன், இல்லையா? என்ன செய்வது, நமக்காக எதுவும் காத்திருப்பதில்லை. நீங்கள்தான் பார்க்கிறீர்களே, இன்று நானொரு தாய், அதாவது தாய்மட்டுமே ;  ஆம் நல்ல தாயாக இருக்கிறேன், பிறவற்றுக்கெல்லாம் பிரியாவிடை கொடுத்தாயிற்று,  எல்லாம்  முடிந்தது.  உண்மையில் நாம் மறுபடியும் சந்திக்க நேர்ந்தால் நீங்கள் என்னை அடையாளம் காண்பது கடினம் என்றுதான்  நினைத்திருந்தேன். நீங்கள் மட்டும் என்ன, அன்றிருந்தது போலவா இருக்கிறீர்கள், நிறைய மாற்றம் ;  தவறுதலாக எதையும் சொல்லிவிடக்கூடாது என உறுதிபடுத்திக்கொண்டு உங்களிடம் பேச எனக்கும் சிறிது நேரம் பிடித்தது. தலை, முகம் அனைத்திலும் நரை தெரிகிறது . யோசித்துப்பாருங்கள், பன்னிரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன! பன்னிரண்டு ஆண்டுகள்! என் மூத்த மகளுக்கு தற்போது பத்து வயது.

அவள் மகளைப் பார்த்தேன். தாயின் முந்தைய  அழகை சிறுமியிடம் கண்டேன், இருந்தும் அவ்வுருவில்   முழுமையில்லை, சில முடிவு செய்யப்படாமலும், அடுத்து நிகழலாம் என்பதுபோலவும் எனக்குத் தோன்றியது. வாழ்க்கையை அன்று வேகமாகக் கடந்து செல்லும் இரயிலாகத்தான் கண்டேன்.

மெய்சோன் லாஃபித் நிலையத்தில் இரயில் நின்றது. என்னுடைய அந்த நாள் தோழியின் கையில் மெல்ல முத்தமிட்டேன். மனம் உடைந்திருந்ததால்,  அசட்டுத்தனமான சில உளறல்கள் அன்றி பெண்மணியிடம் சொல்லிக் கொள்ள  அன்று என்னிடம் வார்த்தைகளில்லை.  

மாலை, தனித்து என் வீட்டில், கண்ணாடி முன் நின்றவன் அகலவேயில்லை, நீண்டநேரமாக என்னை நானே பார்த்துக்கொண்டிருந்தேன். இறுதியில் இளமை பூரித்த எனது உடலும் முகமும்,  பழுப்பு மீசையும், கருத்த தலை முடியும்  மனதில் நிழலாடின.  தற்போது நான் முதியவன், அனைத்திடமிருந்தும் விடைபெற்றாயிற்று.

—————————————————-

படித்ததும் சுவைத்ததும் -13: டுயோங் த்யோங்

‘உலக எழுத்தாளர் வரிசை: டுயோங் த்யூயோங் ( Duong Thu Huong)

வியட்நாமைச் சேர்ந்த பெண் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர். சிறந்ததொரு நாவலாசிரியை, தீவிரமாக சோஷலிஸம் பேசிய முன்னாள் தோழர். தேசியத்தில் நம்பிக்கைவைத்து மேற்கத்திய திக்கதிற்கு எதிராக ஆயுதமேந்தியவர். வியட்நாம் நாட்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பிதாமகள். பின்னாளில் உள்நாட்டு மார்க்ஸியதோழர்களின் பிரபுத்துவ வாழ்க்கை இவரை சிந்திக்கவைத்ததது மாத்திரமல்ல, பொதுவுடமையின்பேரில் மக்களை அடிமைகளாக நடத்திய அம்மார்க்ஸிய முதலாளிகளின் போக்கு எரிச்சல் கொள்ளவும் செய்தது.இவரது குடும்ப வாழ்க்கை சிறப்பித்துச் சொல்லும்படியில்லை. துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திமணம் செய்துகொண்டவனோடு நடத்திய இல்லறவாழ்க்கை நரகம் என்று சொல்லப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகு கணவரிடமிருந்து மணவிலக்குப் பெற்றிருக்கிறார். உள்நாட்டுப் போரின்போது 30பேர்கொண்ட கலைக்குழுவொன்றை உருவாக்கி, போர்முனைக்குச் சென்று வீரர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார். ‘வேட்டுச் சத்தத்தினும் பார்க்க எங்கள் பாட்டுக்குரல் உரத்து ஒலித்தென’ என்ற பெருமிதம் அவருக்குண்டு. ‘எனக்கு அப்போதெல்லாம் நன்றாக பாடவரும், அதுபோலவே அபாயமான காரியங்களில் ஈடுபடுத்திக்கொள்ளும் துணிச்சலும் “திகம்’ என்கிறார். 1973ம் “மெரிக்கத் துருப்புகள் வடவியட்நாமிடம் நடத்திய யுத்தத்தில் தோல்வியுற்று விலகிக்கொண்டபிறகு நடந்த இரண்டாண்டுகால சகோதர யுத்தத்தின் இறுதியில் தென்-வியட்நாம் வட-வியட்நாம் நிர்வாகத்தின்கீழ் வருகிறது. டுயோங்கைப் பொறுத்தவரை வட-வியட்நாம் திக்கத்தின் கீழ்வராத தென்-வியட்நாம் மக்களின் வாழ்க்கை நன்றாகவே இருந்தது. 1979ம் ண்டு கம்யூனிஸ கட்சியுடன் இணைத்துக்கொள்ள அறிவுறுத்தி அழைப்பு வர, அந்நாட்களில் வியட்நாமியர்களின் பொதுவான மனநிலைக்கிணங்க, விருப்பமில்லாமலேயே கட்சியில் உறுப்பினரானார்.

‘காட்சித் திரிபுகளைக் கடந்து'(Beyond Illusions). என்ற முதல் நாவல் 1987ல் வெளிவந்தது. தொடக்க நாவலே நாட்டின் முதன்மையான நாவலாசிரியர்களில் அவரும் ஒருவரென்ற அங்கீகாரத்தை வழங்கியது என்கிறார்கள். ஒரு இலட்சம் பிரதிகள் விற்றனவாம், பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் பின் அட்டையில் எழுதியிருக்கிறது. வியட்நாம் போன்றதொரு சிறிய நாட்டில் அதற்குச் சாத்தியமுண்டா என்று தெரியவில்லை. போரினால் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் நாவலில் விரிவாகப் பேசபடுகின்றன. கம்யூனிஸத் தலைவர்களின் அதிகார அத்துமீறல்களை கடுமையாக நாவலில் விமர்சனம் செய்திருந்தார். 1988ம் ண்டு வெளிவந்த  குருட்டு சொர்க்கம் (Paradise of the Blind), மற்றொரு நல்ல நாவலென்ற கருத்து நிலவுகிறது. விற்பனை அளவிலும் சாதனை புரிந்திருக்கிறது. இம்முறையும் ள்பவர்களும், ட்சிமுறையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆட்சியாளர்களுக்கு எழுத்தாளர் கையைக் கட்டிப்போட பேரம் பேசுகிறார்கள், அரசாங்கத் தரப்பில் ஒரு பெரிய வீடொன்றை தங்கத் தாம்பாளத்தில் வைத்துப் பரிசாகத் தர தயார் என்கிறார்கள். எழுத்தாளர் மறுக்கிறார். மறுப்பதோடு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் ஆட்சியாளர்களைக் கண்டிக்கிறார். ஒருகட்சி ஆட்சிமுறையை ஒழித்து, ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கு அரசு முன் வரவேண்டுமென வற்புறுத்துகிறார். எனவே 1989ம் ண்டு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். மறு ஆண்டு வியட்நாமிய எழுத்தாளர் அமைப்பிலிருந்தும் அவரை நீக்குகிறார்கள். 1991ம் ண்டு எட்டுமாதங்கள் சிறைவாசம். அவரது நூல்கள் அனைத்தும் உள் நாட்டில் தடை செய்யப்படுகின்றன. வெகுகாலம் வியட்நாமில் வீட்டுக் காவலிலிருந்த எழுத்தாளர் விடுதலைக்குப் பிறகு 2006ம் ண்டிலிருந்து பிரான்சுநாட்டில் வசித்துவருகிறார். பிரெஞ்சு மொழியை அறிந்தவரென்ற போதிலும் வியட்நாமிய மொழியில் எழுதப்பட்டு பின்னர் பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் அவரது படைப்புகள் மொழிபெயர்ப்பு செய்யப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது.

டுயோங் த்யூயோங் எழுத்தில்  அண்மையில் வெளிவந்துள்ள நாவல் Au Zenith(1). புரிதலுக்காக ‘உச்சம்’ “ல்லது ‘சிகரம்’ என்று மொழிபெயர்க்கலாம். பொதுவாக சிகரத்தைத் தொட்டவர்களுக்கு இறங்கிவரப்போதாது, பெரும்பான்மையோருக்கு விபத்தென்பது தீர்மானிக்கபட்டது. அவர்கள் நிலை தடுமாறி விழுகிறபோது பரிதாபமான முடிவையே சந்திக்கின்றனர். உள்ளன்போடு நேசிக்கிறவர்களின் அழுகுரலைக் கேட்கக்கூட வாய்ப்பின்றி தனித்து போகின்றனர் என்பது வரலாறு தரும் உண்மை. பூமி அனைத்தும் எனது காலடியில்; வானம் எனது வெண்கொற்றகுடை; தீயும், காற்றும் நீருங்கூட என்னைக்கேட்டே செயல்படவேண்டுமென நினைத்த அசுரர்களுக்கு நேர்ந்த முடிவுகளும் நமக்கு இதைத்தான் கூறின.  Au Zenith என்ற பெருங்கதையாடலைக்கொண்டு பெரியதொரு இலக்கியபோரையே படைப்புகளத்தில் நடத்தி முடித்திருக்கிறார் இவர்.

இம்முறை வியட்நாமியர்களின் தந்தையெனப் போற்றப்படும் அதிபரின் பிம்பம் ஆட்டம் காண்கிறது. வியட்நாம் தேசத்தந்தை அதிபர் ஹோசிமின்குறித்து வெளியுலகு அறிந்திராத தகவல்களையும், இரகசியங்களையும் கருப்பொருட்களாகக் கொண்டு புனைவு நீள்கிறது. இழப்புகளை எண்ணி அழும் அந்திமக்காலம் அதிபர் ஹோசிமினுக்குச் சொந்தமானதென்பதைச் சொல்லுகிற புனைவு. நாவலில் ஹோசிமின் என்றபெயர் சாதுர்யமாகத் தவிர்க்கப்பட்டிருந்தபோதிலும் அதிபர் என்றசொல்லுக்குள்ளே ஹோசிமின் ஒளிந்திருப்பதை வெகு சுலபமாகவே கண்டுபிடித்துவிடுகிறோம். தூரதேசங்களிலிருக்கும் நம்மைப் போன்றவர்களுக்கும், உள்ளூர் அபாவிகளுக்கும் ஹோசிமின் என்ற சொல் தரும் புரிதல் என்ன? உத்தமர், பெண்களை ஏறெடுத்தும் பாராதவர். உடல் பொருள் ஆவி அவ்வளவையும் வியட்நாமுக்கு அளித்து தமது சொந்த வாழ்வைத் தியாகம் செய்தவர் போன்ற புகழுரைகள் – சர்வாதிகாரிகள் அனைவருக்குமே பூணப்படும் கவசமென்று நாமும் அறிவோம். ஆனால் அவர்கள் அந்தரங்கம் புனித நீரல்ல, மாசுபடிந்தது. துர்நாற்றம் கொண்டது. அதிபராக அவதாரமெடுப்பவன் கட்சிக்கும் நாட்டுக்கும் அன்றி வேறு பயன்பாடுகளற்றவன் என்பதை அவன் தீர்மானிப்பதல்ல, அவன் அவனுக்காகவே வடிவமைக்கிற “திகாரமையம் தீர்மானிக்கிறது; அவர்களுக்கு உடற் தினவுகள் கூடாது; காமம், காதல், பெண்கள் விலக்கப்பட்டது, விலக்கப்பட்டவர்கள் என்ற சர்வாதிகார ஓர்மத்திற்கு வலு சேர்க்கிறவகையில் தங்கள் தேச நாயகனை சுத்திகரிக்க நினைக்கிறார்கள். விளைவு அதிபரின் பெண்துணை அழிக்கப்படுகிறது. தடயமின்றி கரைந்துபோகிறாள். சுவான் என்ற ஒருத்தி, அதிபரைக் காதலித்தாளென்ற ஒரே காரணத்திற்காகவும், அவருடன் படுக்கையைப் பகிர்ந்து ஒரு மகனுக்கும் மகளுக்கும் தாயானவள் என்ற குற்றத்திற்காகவுவ் தண்டிக்கப்படுகிறாள். மகன்,மகள், மனைவி என்ற உறவுகளை ஒரு சராசரி மனிதன் விரும்பலாம், குடும்ப வாழ்க்கை ஊர் பேரற்ற மனிதர்களுக்கு அவசியமாகலாம், ஆனால் நாட்டின் அதிபருக்கு, தேசத்தின் நலனையே மூச்சாகக் கொண்ட மனிதருக்கு அம்மனிதரே விரும்பினாலுங்கூட சர்வாதிகார கவசம் அதை அனுமதிக்காதென்பது நாவல் வைக்கும் உண்மை. விசுவாசிகளென்று சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டம் இளம்பெண் சுவா¨னை(Xuan) கொலைசெய்து தெருவில் வீசிவிட்டுப்போகிறது. அவளுடன் பாலியல் வல்லுறவு கொள்பவன் உள்துறைமைச்சராக இருப்பவன். பெண் செய்த குற்றம் அதிபரைக் காதலித்தது அல்ல மாறாக சட்டபூர்வமாக அது அங்கீகரிக்கப்படவேண்டும் என்று விண்ணப்பித்ததற்காக. அவள் கொலை வாகன விபத்தென்று அறிவிக்கப்படுகிறது. பெண்ணுக்கும் அதிபருக்குமான உறவினை தொடக்கமுதல் அறிந்திருந்த அவளது ஒன்றுவிட்ட சகோதரியும் பின்னர் கொலை செய்யப்படுகிறாள், எதேச்சையாக இப்பெண்மூலம் அவளது காதலன் அறிந்திருந்த – ஆட்சியாளர்களால் மறைக்கபட்ட உண்மை வெகுகாலத்திற்குப் பிறகு வெளி உலகுக்குத் தெரியவருகிறது. பொதுவாக சோஷலிஸநாடுகளில் தனிமனிதன் அவனது இருப்பு, மகிழ்ச்சி, உறவு முதலான காரணிகளிலிருந்து அந்நியப்படுத்தப்படுகிறான். “காம்ரேட், உண்மையான Bolcheviqueற்கு குடும்பம் எதற்கென” கேட்ட ஸ்டாலினை இங்கே நினைவுகூர்தல் வேண்டும். ஸ்டாலின் மனைவி தற்கொலை செய்துகொண்டதும், அதை இயல்பான மரணமென்று வெளி உலகிற்கு அறிவித்ததும், மகன் போதைப்பொருளுக்கு அடிமையானதும், இரண்டாம் உலகபோரின்போதும் அவனுக்கேற்பட்ட சோகமான முடிவும் மறக்கக்கூடியதல்ல. ‘பெரிய அண்ணன்கள்’ அநேகரின் வாழ்க்கை வரலாறுகள், நமக்கு வாசிப்பு அலுப்பினை ஏற்படுத்துவதற்கு அவற்றின் ஊடுபாவாக ஒளிந்துள்ள இதுமாதிரியான ஒற்றுமை நிகழ்வுகளே காரணம். உலக வரலாற்றில் மாவீரர்களாக சித்தரிக்கபட்ட சர்வாதிகாரிகள் அனைவருக்குமே சொந்தவாழ்க்கை ஒளிமயமானதல்ல, அது இருண்ட குகைக்குச் சொந்தமானது. உடலும் மனமும் சோர தங்கள் இறுதி நாட்களை கடந்தகாலமாக உருமாற்றம் செய்து வேதனைகளோடு அவர்கள் மடிந்திருக்கிறார்கள்.

பொதுவுடமை சித்தாந்தம்- காலங்காலமாய் போற்றப்படும் மரபுகள் என்ற இரு கைகளுக்குள்ளும் சிக்குண்டு எவ்வாறு ஒரு தனிமனிதன் வாழ்க்கை அலைகழிக்கபடுகிறது என்பதே புனைவு மையப்படுத்தும் பொருள். டுயோங்குடைய முந்தைய நாவல்களும் தனிமனிதனை தேசாந்திரம் செய்யும் சோஷலிசஸ அரசியலை விமர்சித்திருக்கின்றன என்றாலும் இந்நாவலில் வரம்பற்ற அதிகாரத்தின் முடிவாக இருக்கும் ஒருவனே, தனிமனித தீண்டாமை கோட்பாட்டின் விளைவாக எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பது நாவல் தரும் விளக்கம். தங்கள் வாழ்நாளில் அதிகாரத்தில் உச்சியிலிருந்துகொண்டு ஆடிய மூர்க்க தாண்டவமனைத்தும், பதவி மோகத்தில் காயப்படுத்தப்பட்ட தனிமனித உணர்வுகளுக்காகத் தேடிக்கொண்ட களிம்பென்று விளங்கிக்கொள்ள வேண்டும். டுயோங் நமக்கு அறிமுகப்படுத்துகிற ஹோசி
மினைக் கண்டு பரிதாபப்படவேண்டியிருக்கிறது. தேசத்தந்தையென கோடானகோடி வியட்நாமியர்கள் புகழ்பாடிய நேற்றைய ஹோசிமின்
அல்ல இவர், விரக்தியின் உச்சத்தில், இறையின்றி மெலிந்துபோன நோஞ்சான் கழுகு. வாழ்க்கையின் கடைசிக்கட்டத்தில்
அனைத்துவகையிலும் தனிமைப்படுத்தப்பட்டுக் கிடக்கும் முதியவர்.

ஆசிரியர் நாவலின் தொடக்கத்திலேயே வாசகர்களைக் கனிவாய் எச்சரிக்கிறார். கற்பனையை மட்டுமே முழுமையாக நம்பி ஒரு நாவலைப் படைப்பதற்கான ஆற்றல் “வருக்கில்லையாம். ‘நான் எழுதுகிற புனைவுகள் அனைத்தும் உண்மைகள் அடிப்படையில் எழுதப்பட்டவை என்பது ஆசிரியர் தரும் வாக்கு மூலம். நாவலின் தொடக்கத்தில் அப்பா!.. அப்பா!.. என்றொரு அலறல். மலை அடிவாரத்திலிருந்து புறப்பட்ட இளஞ்சிறுவனின் அபயக்குரல் மலைகளெங்கும் எதிரொலிக்கிறது; மரங்கள் அதிர்ச்சியில் அசைந்துகொடுக்கின்றன, நிசப்தமான வெளியில் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டு அடங்குகின்றன. ஒருகணம் தம்மை மறந்த அதிபர் சுய நினைவுக்குத் திரும்புகிறார். ‘இல்லை, அவன் குரலில்லை’ இக்குரலுக்குடையவன் வேறு யாரோ’, தம்மைத்தாமே சமாதானம் செய்துகொள்கிறார்.. எனினும் அக்குரல் வெகுநாட்களாய் நெஞ்சுக்குள் கனிந்துகொண்டிருந்த சோகத்தை விசிறிவிட பற்றிக்கொள்கிறது- அவர் மீள்வாசிப்பு செய்யும் கடந்தகாலத்திற்குள் பிரவேசிக்கிறோம். தொடர்ந்து பையனின் அழுகுரல். ‘பையனின் தகப்பன் ஒருவேளை இறந்திருக்கக்கூடும், பாவம், இனி அவனொரு அனாதைச் சிறுவன். சட்டென்று அதிபர் மனதில் ஒரு கேள்வி, நான் இறப்பதாய் வைத்துக்கொள்வோம், என் மகனும் இந்தப்பையனை போலத்தான் அழுவானோ?(பக்கம் -23)

இளமைக்கால பாரீஸ் வாழ்க்கை, கடந்த கால காதல் ஆகியவற்றை எண்ணி எண்ணி ஆற்றொணாத துயரத்தில் மூழ்கும் அதிபரின் கதைக்கு இணைகதைகளாக மூன்றுகதைகள் வாசிக்கக் கிடைக்கின்றன. முதலாவதுகதை ‘வூ’ என்பவர் குறித்தது. வூ, அதிபரின் நம்பிக்கைக்கு உரியவர்மட்டுமல்ல அவருக்கு நெருக்கமான நண்பருங்கூட, ஹோசிமின் மகனை ரகசியமாக வளர்க்கின்ற பொறுப்பை ஏற்றிருப்பவர். பிறகு அவரது மனைவியாக ‘வான்’ என்பவளைப் பார்க்கிறோம்.   கடந்த காலத்தில் உழைக்கும் வர்க்கத்தில் ஒருத்தி, தீவிரமாக பொதுவுடமைக் கொள்கைக்கு வக்காலத்து வாங்கியவள்.  செம்படையில் சேர்ந்து எதிரிகளை விரட்டியவள். காலம் மாறுகிறது. இன்றைக்கு பொறுப்பான அதிகாரி. அதிகாரமும்  பதவிதரும் சுகமும் அவள் குணத்தை முற்றாக மாற்றி அமைக்கிறது. நாட்டின் விடுதலைக்குப் பிறகு சுகவாசியான அதிகாரவர்க்கத்துள் அவளும் ஒருத்தி என்று சுருக்கமாக முத்திரைகுத்திவிட்டு நாம் மேலே நகரலாம். ஊழலும் தன்னலமும் கொண்ட ஆட்சியாளர்களுக்கு அவள் உதாரணம். இரண்டாவது கதைக்குச் சொந்தக்காரன் செல்வாக்கான ஒரு கிராமத்துவாசி. ஹோசிமின் போல அல்லாது உறவும், கிராமமக்களும் விமர்சித்தபோதும், மகன்களும் முதல் மனைவியின் சகோதரர்களும் எதிர்த்தபோதும் தமது இருப்பிற்கும், சொந்த உணர்ச்சிகளுக்கு செவிசாய்த்து, முதல் மனைவியின் இறப்பிறகுப் பிறகு எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்த கூலிப்பெண்ணை மணக்கும் துணிச்சல்மிக்க கிழவன். மூன்றாவது கதை, சுவானுடைய சகோதரி கணவனுடைய கதை. சுவான் கொலைக்குப் பின்புலத்திலிருப்பவர்களைப் பழிவாங்கத்துடிக்கும் இளைஞனை ஆளும் வர்க்கத்தின் ஏவலர்கள் துரத்துகிறார்கள். நாவலில் சொல்லப்பட்டிருக்கிற அத்தனை கதைமாந்தர்களின் பண்பும், செயலும், விதியும் ஏதோ ஒருவகையில் ஹோசிமின் வரலாற்றோடு, வாழ்க்கையோடு முடையப்பட்டிருக்கிறது. “ம்மனிதர்களின் நிகழ்காலமும், கடந்தகாலமும், மனித வாழ்க்கையின் அகம் புறம், பொதுவாழ்க்கையில் அவர்களுக்கான பங்களிப்பென கதை பின்னல் நிகழ்கிறது.

நாவல் களம், சொல்லப்படும் அரசியல், கதைமாந்தர்கள், கொள்கை முழக்கங்கள் என்றபேரில் மக்களை ஏமாற்றும் ஆளும் வர்க்கம், அப்பாவி மக்கள், வெள்ளந்தியாய் வாழப்பழகிய கிராமங்கள், கவலை பூத்த முகங்கள், நம்பிக்கை வறட்சிகள், நிலைப்பாடு மோதல்கள்,அலைக்கும் காற்று, மொத்தத்தில் இந்திய நாவலொன்றை படிப்பதுபோன்ற உணர்வு, எனவே இவரது நாவலை அக்கறையுடன் வாசிக்க முடிகிறது. உயிர்ப்புள்ள படைப்புக்குரிய கலாநேர்த்தியும், கூர்மையும் ஆழமும் இப்படைப்டப்பிற்கான தனித்துவம். எழுத்தென்பது சம்பவமொன்றின் சாட்சிமட்டுமல்ல, எழுத்தாளனின் மனசாட்சியாக இருக்கவேண்டும், அது சத்திய வார்த்தைகளால் நிரப்பப்படவேண்டும். சகமனிதர்கள், சமூகமென்ற என்ற கடப்பாட்டுடன் ஒலிக்கும் படைப்பாளுமைகள் போற்றுதலுக்குரியவை. இலக்கியங்கள் இதைத்தான் சொல்லவேண்டுமென்றில்லை ஆனால் ஏதோவொன்றை சொல்லவே படைக்கப்படுவை. ட்யோங் த்யோங்கிற்கும் அந்த நோக்கம் நிறையவே இருந்திருக்கவேண்டும்: ஏராளமாக ஆளும் வர்க்கத்திடம் அவருக்குக் கோபம் இருக்கிறது, அது கடுங்கோபம். பிரான்சையும், அமெரிக்காவையும் அத்தனை திடத்தோடு எதிர்த்த மக்கள், எப்படி சர்வாதிகாரத்திற்கு அடிபணியும் கோழைகளாய் மாறிப்போனார்கள் என்றகோபம்; தேச நலன் என்பது தனிமனிதச் சுதந்திரத்தினால் மட்டுமே கட்டமைக்கப்படவேண்டும் என்ற சிந்தனைப்பள்ளிக்கு ஆசிரியர் சொந்தங்கொண்டாடுகிறார். இந்நாவலை நடத்திச்செல்வது கதைமாந்தர்களின்  மேதைமைக்கொத்த உரையாடல்கள், சல்லிவேர்கள்போல பரவி ஆனால் நாவலை நிறுத்த அவை முதற்பக்கத்திலிருந்து இறுதிவரை உதவுகின்றன. மனிதர் குரலுக்கான அதிகார
அளவையும், வீச்சையும் வயதே தீர்மானிக்கிறதென்பதும் நாவல் தரும் செய்தி. அதிபர் தனக்குத்தானே நடத்தும் உரையாடல்; அவரது காவலர்களுடனும், நம்பிக்கைக்குரிய ‘வூ’ வுடனும் நடத்தும் உரையாடல்;  ‘வூ’தம்பதிகளுக்கிடையேயான உரையாடல்; விவசாயியான கிழவன் குவாங் மகன்களுடன் நடத்தும் உரையாடல் என்ற பெரிய பட்டியலை அடுத்து வேறு சில பட்டியல்களும் உள்ளன. உரையாடல்களில் ஒன்றைப் புரிந்துகொள்கிறோம். குறைந்தபட்சம் இருவரின் பங்களிப்பு தேவையெனச்சொல்லபடுகிற உரையாடலில் ஒன்று மற்றொன்றை நிராகரிக்கும் போக்கே பெரிதும் காணகிடைக்கிறது. நவீனத்தால் அல்லது யுகமாற்றங்களால் புறக்கணிக்கமுடியாதவற்றுள் மரபான உரையாடலையும் சேர்க்கவேண்டும். உ.ம்.:  “தாய் சோன் மலையை மதிப்பதுபோல உனது தகப்பனையும் நினை’, ‘ஊற்று நீரை நேசிப்பதுபோல பெற்ற தாயையும் நேசிக்க வேண்டும்’.” ஓவியததையோ, சிற்பத்தையோ அவதானிக்கிறபோது சில புள்ளிகள், சில தடயங்கள், சில பகுதிகள் படைப்பாளியின் ஆளுமையை வெளிப்படுத்தக்கூடும், ஓர் ஆசிரியனின் இருப்பை, சுவாசத்தை, அசைவை உணர்த்தும் கணங்கள் அவை. சங்கீதத்தில் கமகங்கள் போன்றவை.டுயோங் த்யூயோங் நாலிலும் அத்தகையை கமகங்களை இடைக்கிடை நிறைய உண்டு. அறைக்குத் திரும்பியவர், கட்டிலில் இயல்பாய் எப்போதும்போல படுக்கிறார். குண்டு காவலாளி, கதவினைச் சாத்திவிட்டு  புறப்படுகிறான். படிகளில் அவனது கனத்த பாதங்கள் எழுப்பும் ஓசை, புத்தவிகாரங்களெழுப்பும் சீரான மணியோசையில் கரைந்துபோகின்றன”, ஓர் நல்ல உதாரணம்.

புரட்சிகள் தரும் மாற்றங்கள் வரலாற்றை மாற்றி எழுத உதவியதேயன்றி மானுட நெருக்கடிக்களுக்குத் தீர்வினைத் தந்ததில்லை. “வாழ்க்கைதரும் இன்னல்களுக்கு ஆறுதலாக இருந்த புத்த விகாரங்களின் பிரார்த்தனையும்- சேகண்டி ஓசையும் எங்கே போயின?” என்ற கேள்வியைக் கேட்டு குற்ற உணர்வில் வருந்தும் அதிபருடைய மனப்போராட்டத்தினூடாகவே புனைவுக்குண்டான விவரணபாணியை உருவாக்கமுடியுமென்பது இந்நாவலின் சாதனை.
—————————————————————————————————————————–
1. Au Zenith – Duong Thu Huong translated from Vietnamese Phuong Dang Tran-Sabine Wespieser Editeur, Paris

18. எழுத்தாளன் முகவரி -: எழுத்து, சில யோசனைகள்

படைப்பு என்பது படைத்தல்- பகிர்தல் என்ற இருவினைச்சொற்களின் உழைப்பால் உருவானது. கலைஞன் ஒருவனின் சுயசம்பாத்தியம், ஒருவகையில் அவனுடைய கலகக்குரல். எழுத்தோடு ஒப்ப்டுகிறபோது, மேடைபேச்சுக்குள்ள சிக்கல் அதனை ஒரு முறைதான் மேடையேற்றமுடியும். பேச்சாளர்கள் சொல்வதைத் தெளிவாகச் சொல்லவேண்டும், தவறினால் விமர்சனத்திற்கு உள்ளாவார்கள், அவர்கள் திருத்திக்கொள்ள வாய்ப்புகள் இல்லை. எழுத்திலும் இதுபோன்ற ஆபத்து இருக்கிறது என்றாலும் பலமுறை திருத்தங்கள் செய்யவும், நிறைவாக இருக்கிறதென உணர்ந்த பிறகே பிரசுரிக்கப்படவும் எழுத்தில் வாய்ப்புகள் உண்டு, பிரசுரித்த பிறகும் தவற்றைத் திருத்தி அடுத்த பதிப்பாகவேணும் கொண்டுவரமுடியும்.

உங்களுக்கு நாவல் எழுதும் எண்ணம் உண்மையிலேயே இருக்கிறதா? கவிதை எழுதுகிறோம் சிற்றிதழ்களில் பிரசுரமாகின்றன, அவற்றைப் புத்தகமாகக் கொண்டுவரலாமென்றால் பதிப்பாளர் தயங்குகிறார், இந்நிலையில் நாவலொன்றை எழுதி வடவேங்கடம் – தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம் கொண்டாடிட வழிதேடும் நண்பர்களுக்கு அருள்வாக்கு போல சில நல்ல யோசனைகளை ஓர் அமெரிக்க எழுத்தாளர் – பெயர் Salvatore Lombino ‘ – எழுத்தாளர் கையேடு’ (The Witer’s Handbook ) என்ற நூலின் கட்டுரையொன்றில் வழங்கியுள்ளார். எட் மக்பெய்ன், எவன் ஹன்ட்டர், ரிச்சர்ட் மார்ட்ஸன் என பல புனைபெயர்களில் எழுதிஎழுதி புகழையும் பொருளையும் ஒரு சேர அடைந்தவர். வரலாறு என்பது வெற்றிபெற்றவர்களால் எழுதப்படுவது என்பதால், நாமும் அவருடைய யோசனைகளைக் கவனத்திற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். குற்றவியல் புனைவுகளுக்குப் பெயர் பெற்ற இந்த எழுத்தாளருடைய படைப்புகள் சிலவற்றை, பிரான்சு நாட்டில் பிரெஞ்சு இலக்கியங்களில் கவனம் செலுத்தும் ‘கலிமார்’ பதிப்பித்திருக்கும் அதிசயமும் சேர்ந்துகொள்ள இவருடைய ஆலோசனைகளுக்குக் கவனத்துடன் காது கொடுக்க வேண்டியிருக்கிறது.

1. எழுதும் நேரம்

இரவு பகலாக நாவலெழுதும் எண்ணம் உங்களை அலைக்கழிக்கிறது.  உங்கள் நண்பர்களிடத்தில் அடுத்த புத்தககக் கண்காட்சியில் நாவல் வந்துவிடும் என சவடாலும் விட்டாயிற்று.  மனைவியும் தோழிகளிடம் நீங்கள் நாவல் எழுதவிருக்கும் இரகசியத்தை உடைத்தாயிற்று (மனைவி எழுதுகிறாள் என்பதை வெளியிற்சொல்லி பெருமைப்படும் ஆண்கள்?) எனவே எழுதவேண்டும்.  ஏதேதோ திட்டங்கள் சிந்தனைகள் யோசனைகள் – கதைகருக்கள்? இரவு நித்திரைகொண்டால் கனவிலுங்கூட கதை எழுதுகிறீர்கள். கனவில் எழுதியதை உறக்கம் கலைந்து நிஜத்தில் எழுதத் துடிக்கிறீர்கள். அதற்கு முன்பாக அவ்வாறு செய்யலாமா என சல்வட்டோர் லாம்பினொ விடம் கேட்பது நல்லது. அவர் என்ன சொல்கிறார்? அதற்கு அவசியமில்லை என்கிறார். திரும்பவும் கட்டிலிற் சென்று நிம்மதியாக உறங்குங்கள் என்கிறார். ஏனெனில் எழுதும்போது பாதிஉறக்கத்தில் நாம் இருந்துவிடக்கூடாதாம். அவரது யோசனைப்படி புத்துணர்ச்சியுடன் எழுதுவது முக்கியம். எனக்கும் அது நியாயமாகப்படுகிறது. அவர் சொல்வதைப்போல ஏதே என்னுள் படைப்புக்கடவுளே இறங்கிவிட்டதாக நினைத்துக்கொண்டு எழுத உட்கார்ந்து அடுத்த அரைமணி நேரத்தில் சோர்ந்து முடங்கியிருக்கிறேன். இரவு அதிகப்பட்சம் பத்துமணி, அதற்குமேல் விழித்திருப்பதில்லை, படுத்துவிடுவேன். உறங்க சிக்கல்கள் இருப்பதில்லை. இரவு உணவை எளிமையானதாக மாற்றிக்கொண்டிருப்பதால் படுத்ததும் உறங்க (குறட்டையுடன்) முடிகிறது. அதிகாலையில் விழிப்பு என்பது வெகு நாளாகக் கடைபிடிக்கும் பழக்கம்.  மூளையும் புத்துணர்ச்சியோடு இருப்பதைப்போன்ற உணர்வு. இரவு நேரங்களில் கண் விழித்து நான் எழுதுவதே இல்லை, வாசிக்க மட்டுமே செய்கிறேன், பெரும்பாலான நாட்களில் இரவு ஒன்பது ஒன்பதரைக்கெல்லாம் படுத்துவிடுவேன். ஆக எழுதுவதற்கு உகந்த நேரம் அதிகாலை. உங்களால் பின்னிரவுவரை சுறுசுறுப்பாக சோர்வின்றி எழுதமுடியுமென்றால் தாராளமாக காரியத்தில் இறங்கலாம். ஆனால் அரைத்தூக்கத்தில் எழுதாதீர்கள்.

2.குரலும் தொனியும்

என்ன எழுதப்போகிறீர்கள் என்பது பற்றிய தெளிவு உங்களிடம் இருக்ககும், எனவே தற்போதைக்கு கதைச் சுருக்கமென்றோ, அவுட்லைன் என்றோ எதையாவது மெனக்கெட்டு எழுதிக்கொண்டிருக்கவேண்டாம். அதற்கு முன்பாக நாவலில் கதைசொல்லியின் குரல் எப்படி ஒலிக்கவேண்டும் என்பதைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். கதைசொல்லியின் குரலும், தொனியும் மிகவும் முக்கியம். இக்குரலையும் தொனியையும் எப்படித் தீமானிப்பது? இரண்டு கேள்விகள் இவ்விஷயத்தில் நமக்கு உதவ முடியும். முதலாவது கதை சொல்வது அல்லது கதையில் பேசுவது யார்? இரண்டாவது ஏன் அதைச் சொல்கிறார்கள் அல்லது எதற்காக அவ்வாறு பேசுகிறார்கள்? கதை மாந்தர்களோடு மட்டும் இக்கேள்விகளை இணைத்துப் பார்க்கக்கூடாது, கதையைப் படைக்கிற நம்முடனும் இக்கேள்விகளுக்குப் பந்த மிருக்கிறது. அதுபோலவே படைக்கிறவன் வயதுக்கும், கதைக் குரலின் வயதிற்கும் தொடர்பிருக்கிறது. கதை எழுதத்தொடங்கிய காலத்தில் ‘அழகான ராட்சசி’, ‘இது ஒரு விவகாரமான கதை’ என்றெல்லாம் பெயர்கள் சூட்டி எடுத்துரைப்பிலும் இளமை, தொனி இரண்டையும் பேசவைத்திருக்கிறேன்.

“எங்களுக்குள் ஒரு ஸ்நேகம். ஸ்நேகம்னா மாலை சூரியன் நிறத்தில் அதிகம் ஒப்பனையில்லாமல், ‘லெ மோந்து’ ‘பிகாரோ’ போன்ற விஷயமுள்ள பிரெஞ்சு பத்திரிகைகளை கைகளில் இடுக்கிக்கொண்டு , சிரமத்துக்கிடையில் அவள் தனது ‘பெழோ 206’ லிருந்து கடைக்குச் சென்று திரும்பியதன் அடையாளமாக “விட்டல்” தண்ணீர் பாட்டில்களையும் “டெட்ராபாக்” பாலையும் இறக்கும் போதெல்லாம் உதவி செய்திருக்கிறேன். அவளைப்பார்க்கும்போதெல்லாம் ஒரு “ஹாய்” ஒரு “போன்ழூர்” அத்துடன் சரி. பெருசாக ஒன்று மில்லை. ஆனா அந்தப் “பெருசு”க்குத்தான் தூண்டிலோடு காத்திருந்தேன் -(இது ஒரு விவகாரமான கதை – கனவுமெய்ப்படவேண்டும் – சிறுகதைத் தொகுப்பு)

குறிப்பாக தன்னிலையில் கதை சொல்லபடுகிறபோது  கூடுதல் கவனம் தேவை. வயதுகேற்ற கதைக்கருவையும், கதை மாந்தரையும் தேர்வு செய்வது,  எடுத்துரைப்பை நீர்ப்பரவல்போல் முன்னெடுத்துச் செல்ல உதவும். அறுபது வயது படைப்பாளி, தனது புனைவொன்றில் இருபத்தைந்து வயது இளைஞனின் குரலை தொனியை பதிவு செய்யமுடியாதா? ஏன் முடியாது? ஆனால் மிகவும் கவனத்துடன் கையாளவேண்டும். ‘கரடிபொம்மை’ சிறுகதை அப்படியொரு முயற்சிகுரியது:

“ரஜனி அங்க்கிள் தோள்ல உட்கார்ந்துகிட்டும், கமல் அங்கிளோட கையைப் பிடிச்சுகிட்டும் பாட்டு பாடியிருக்கன். ஜெயா ஆண்ட்டிக்கூடவும் நடிச்சிருக்கன். இப்பக்கூட அவங்கக்கூட ஒரு படம் பண்ணேன். என்ன பேரு? என்னோட மெமரியில இல்ல.. உங்களுக்கு ஞாபகம் இருக்கா? ஆங் வந்திடுச்சி…..”அம்மாவும் நீயே அப்பாவும் நீயே”ங்கிற படம். அந்தப் படத்தின் ஷூட்டிங் முழுக்க அவங்க என்னோடதான் இருந்தாங்க. சிங்கப்பூர்லிருந்து வரவழைச்சதுன்னு சொல்லி நிறைய ‘கிண்டர்’ சாக்லேட் கொண்டு வருவாங்க. கை நிறைய “சூப்பா-சப்ஸ்’ கொடுத்துட்டு, ஷாட்ஸ் இல்லாதப்ப பக்கத்துலே நிப்பாங்க. அதிலும் போன சாட்டர்டே கடைசி ஷூட்டின்போது புற்றுக்குள்ள கையை விட்டு பாம்பைக் கையில் எடுக்க, ஜெயா ஆண்ட்டி ‘மை காட்!’னு சொல்லி என்னைக் கட்டிப் புடிச்சுகிட்டு நிறைய முத்தம் கொடுத்தபோது, யூனிட் மொத்தமும் வாயைப் பொளந்துகிட்டு நின்னுச்சி” ( கரடிபொம்மை – கனவு மெய்ப்படவேண்டும் – சிறுகதைத் தொகுப்பு)

படர்க்கையில் சொல்கிறபோது, பாத்திரங்களின் தன்மைக்கேற்ப அவ்வப்போது கதைமாந்தரின் குரலை மாற்றுவது கட்டாயம். ‘மாத்தா-ஹரி’ நாவல் படர்க்கையில் சொல்லபட்டிருந்தாலும், பாத்திரங்களுக்கேற்ப தொனி மற்றும் குரலைக் கொடுக்கக்கூடிய சொற்களை கையாண்டேன். நீங்களும் இம்முறையை முயற்சி செய்து பார்க்கலாம்.

“கண்களை இறுக மூடிக்கொள்கிறாள். வந்தவளை விழிமடல்களுக்குள் சிறைபடுத்தியாயிற்று . அவள் முரண்டு பிடிக்கிறாள். தப்பிக்கும் எண்ணமிருக்கிறது; தான் அனுமதிப்பதில்லை என்று தீர்மானித்தாயிற்று. அனுமதித்தால் சிறுக சிறுகச் சேர்த்துவைத்திருந்த அத்தனை நினைவுகளையும் கனவுகளையும் கூடவே கொண்டுபோய்விடுவாள். அவளுக்கு நினைவுகளின் வதை புரியாது. போடீ.. பெரிய பராசக்தி என்கிற நினைப்பு. உன்னைப்பற்றிய அர்ச்சனைகள் தப்பு, துதிப்பாடல்கள் தப்பு. இந்த உலகை ஏதோ இரட்சிக்கவந்தவளென்கிற நினைப்பும் ஆணவமும் உனக்கு நிறைய இருக்கிறது. பூச்சூடவோ, பொட்டுவைத்துக்கொள்ளவோ நிழலாய்த் தெரிகிற பற்களுக்கிடையில் விரல்வைத்து நகங்கடிக்கவோ, விழிகளைத் தாழ்த்தி நாணப்படவோ தெரியாமல் என்ன பெண் நீ?” ( மாத்தாஹரி – நாவல் )

இங்கே உங்கள் காதில் விழுகிற குரல் யாருடையது? படைப்பாளியுடையதா? கதைநாயகிக்குரியதா? படர்க்கை கதைசொல்லலிலும் கதைமாந்தரைத் தன்மையிற்பேசவைக்க முடியும் என்பதற்கு இதொரு உதாரணம். எனவே நாவல் தன்மையிற் சொல்லபடுகிறதெனில் எழுதுவதற்கு முன்பாகவும், படர்க்கையிற் சொல்லப்படுகிறதெனில் கதைமாந்தரை மனதில் நிறுத்தியும் பேசுவதற்கு அனுமதியுங்கள், குரலும் தொனியும் கதைகேற்ப பொருத்தமாக அமையும். குரலைத் தேர்வு செய்தானபிறகு, எழுதவிருக்கிற புனைவின் அவுட்லைனை எழுத உட்காருங்கள். அப்படி எழுதுகிறபோது, தயவு செய்து “நவராத்திரி என்ற பெயர்வைத்து ஒன்பது வேடங்கள் செய்தார், நான் தசாவாதாரம் பெயரில் பத்துவேடங்கள் செய்தால்தானே பெரிய நடிகன் என்பதுபோன்ற வீம்பெல்லாம் வேண்டாம். அவர் கதைக்கு ஆயிரம் பக்கங்கள் தேவைப்பட்டிருக்கலாம், உங்கள் கதைக்கருவிற்கு நூறுபக்கங்கள் போதுமென்றால், நூற்றி ஐம்பது பக்கங்களில் நிறுத்திக்கொள்ளுங்கள். அதுதான்  நல்லது. அதன் பிறகு அத்தியாயங்களைப் பிரித்துக்கொள்ளுங்கள். இருநூறுபக்க நாவலெனில் இருபதிலிருந்து நாற்பது அத்தியாயங்கள்வரை பிரித்துக்கொள்வது எனக்குத் தெரிந்த யோசனை. இனி அவுட் லைனுக்கு வருவோம்.

3. நாவலின் அவுட்லைன் அல்லது திட்டவரை.

புனைவொன்றின் கருவைத் தேர்வு செய்திருப்போம், அதாவது எதைக்குறித்து அல்லது எவ்வித விஷயத்தை மையமாக வைத்து எழுதப்போகிறோமென்பதில் நமக்குத் தெளிவு இருக்கக்கூடும். அவிஷயத்தை நினைவூட்டும் வகையில் ஒரு பெயரை அல்லது தலைப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். அது நாவலின் பெயராக இருக்கவேண்டிய கட்டாயமில்லை. மாறாக மையப்பொருளைச் சுற்றிவர அல்லது அதை மறந்துவிடாதிருக்க இத்தலைப்பு அல்லது குறிப்பு நமக்கு உதவக்கூடும். மாத்தாஹரி நாவலின் அவுட்லைனுக்கு வைத்த பெயர் ‘புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட பெண்ணின் கதை’ அதுபோல ஒவ்வொரு அத்தியாயத்திலும் என்ன எழுதபோகிறோம் என்பதிலொரு தெளிவு வேண்டும் அதற்கேற்ப ஒரு பெயரைச் சுருக்கமாக வைத்துக்கொள்ளலாம். சம்பவம், இடம் பெறும் மாந்தர்கள் என ஒரு முடிவுக்குவந்த பின்னர் நமது கற்பனைகளுக்குச் சொற்களை அணிவிக்கலாம். படித்துப்பார்க்கிறபோது அத்தியாயங்களுகிடையில் தொடர்பில்லை எனக்கருதினால், குறித்து வைத்து நாவலை முடித்தபிறகு அதனை எழுதிச்சேர்க்கலாம். அப்படி இரண்டொரு அத்தியாங்களை சேர்க்கவும், கதைக்கு எவ்விதத்திலும் உதவாது, பக்கங்களை மட்டுமே கூட்ட உதவுகிற அத்தியாயங்களைத் தவிர்க்கவும் செய்யலலாம்.

4. நாவலை நகர்த்துதல்

அதிக பக்கங்களில் ஒரு புனைவை எழுதவேண்டிய நிர்ப்பந்தமிருக்கிறபொழுது ஒரு நாளைக்கு இத்தனைப் பக்கங்கள் என ஒதுக்கிக்கொண்டு அவற்றை அந்த நாளில் முடிப்பது நல்லது. பிறகாரியங்களைபோலவே எழுத்திற்கும் திட்டமிடல் இன்றியமையாததென பலமுறை இத்தொடரில் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். ஏதேனும் ஒரு அத்தியாத்தை எழுதுவதற்குக் குறிப்பாக சரித்திர நாவல்களை எழுதுகிறபோது உரிய தகவல்கள் உரிய காலத்தில் கிடைக்காமல் போகலாம். அதற்காக எழுதுவதைத் தள்ளிபோடக்கூடாது. அச்சமயங்களில் ஆதாரங்களின் தேவையின்றி எழுதக்கூடிய அத்தியாயங்கள் இருக்கக்கூடும் அவற்றை எழுதி முடிக்கலாம். எழுதியவுடன் படித்துபார்க்காமல் மறு நாள் தொடங்குவதற்கு முன்பாக அதைப் படித்துபார்ப்பது நல்லது. மொத்த அத்தியாயத்தையும் எழுதிமுடித்திருந்தபோதிலும் அதனை முதற்படியாகவே கருதவேண்டும். எனக்கு இதுபற்றிய தெளிவு இரண்டாம் நாவலின் போதுதான் கிடைத்தது. நீலக்கடல் நாவலை முதலில் ஒரு பதிப்பகத்திற்கு அனுப்பியிருந்தேன். அவர்கள் உடனடடியாக அதனைப் பதிப்பிக்கவில்லை. அவர்கள் காலதாமதம் செய்வதாகப் புரிந்துகொண்டு வேறொரு பதிப்பகத்திடம் கொடுத்தேன். அவர்கள் உடனடியாகப் பதிப்பிக்கவும் செய்தார்கள். அவர்கள் கால அவகாசம் எடுத்து ஒழுங்காகச் செப்பனிட்டு கொண்டுவருபவர்களாக இருந்திருந்தால் நீலக்கடல் நாவல் கூடுதலாக வரவேற்பைப் பெற்றிருக்கும் என்கிற ஆதங்கம், இன்றைக்கும் உண்டு. நாம் எழுதி முடிக்கிற முதற்படி சுத்திகரிப்பு செய்யாத ஒன்று, பட்டைத் தீட்டப்படாத கல். நாம் நினைப்பதையெல்லாம் எழுத்தில் கொட்டிவிடவேண்டுமென்கிற ஆர்வக்கோளாரின் வெளிப்பாடு அது. எனவே தயவுசெய்து ஒருமுறைக்கு இருமுறை செப்பனிட்டு அனுப்பிவையுங்கள். மாற்றம் செய்யத் தயங்க வேண்டாம், தயங்கினால் உங்கள் எழுத்திற்குச் சிறுமை.
——————————————————

உலக எழுத்தாளர் வரிசை -7: ரஸ்ஸல் பாங்க் (Russell Banks)

“வீடுமுறவும் வெறுத்தாலும் என்னருமை 220px-Russell_banks_2011
நாடு பிரிந்த நலிவினுக்கென் செய்கேனே” (பாரதியார்)

முதலாளித்துவமும் நவீன சமூக அமைப்பும் மென்று உமிழ்ந்த மனிதர்களிடத்தில் அக்கறைகொள்கிற படைப்பிலக்கியவாதி ஒருவர் அமெரிக்காவில் இருக்கமுடியுமெனில் அது அநேகமாக ரஸ்ஸல் பாங்க் ஆக மட்டுமே இருக்க முடியும். சொந்தநாடுகளைக் கடந்து பிறநாடுளின் இலக்கிய விமர்சகர்களால் ஏற்றுகொள்ளபட்டவர்களையே உலக எழுத்தாளர்கள் என அழைக்கிறோம்.  இவர்கள் அனைவருமே கைவசப்பட்ட மொழியைக்கொண்டு  தங்கள்  எடுத்துரைப்பில் உலக நடப்புகள் சிலவற்றுள் தங்களுக்குள்ள உடன்பாடின்மையைப் பதிவுசெய்கிறார்கள்.  ஆண்குறி பெண்குறி, உடல் உறவுகளுக்கு இரண்டு பக்கங்கள் என்பது போன்ற திட்டமிடல்கள் உலக எழுத்தாளர் தகுதியை நிர்ணயித்து விடாது. படைப்பு மானுடத்தின்மீது அக்கறை கொண்டதாக இருக்கவேண்டும். தமது அனுபவங்களுக்கு கலைவடிவம் கொடுப்பது மட்டுமல்ல, அக்கலை வடிவங்கள் ஊடாக உற்ற அனுபவத்தினைப்பற்றிய கருத்தையும் சாதுர்யமாக எடுத்துரைக்க வேண்டும். மகிழ்ச்சியை தெரிவிக்கத் தவறினாலும் ஏமாற்றம், நிராசை, அவநம்பிக்கை, சிறுமையின் அதிகாரம் ஆகியவற்றுக்கு எதிரான அறச்சீற்றத்தைப் பதிவுசெய்யும் பொறுப்பு வேண்டும்.

அமெரிக்காவை வல்லரசு என்றோ, பணக்கார நாடு என்றோ ரஸ்ஸல் பாங்க் ஒருபோதும் ஏற்றுக்கொண்டவரல்ல. அவரது புனகதைகள் பலவும் கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்ப அக்கருத்தை வற்புறுத்தி வந்திருக்கின்றன. சமூகத்தால் கைவிடப்பட்ட மனிதர்களுக்கு ஆதரவளிப்பதே தமது எழுத்தின் குறிக்கோளென்று ரஸ்ஸல் செயல்படுகிறார். திக்கற்ற மனிதர்களே அவரது கதை மாந்தர்கள். கடைநிலைமனிதர்களின் தலைவிதியை எழுத்திலேனும் திருத்திவிடலாம் என்ற கனவுகளுடன் எழுதிக்கொண்டிருப்பவர். இரந்தும், கேட்பாரற்றும், வீதிகள் பாலங்களின் கீழ் உயிர் வாழ்க்கையின் அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய வக்கற்று நடைபிணமாகித் திரிந்தலையும் மனிதர்களைப்பற்றியதாக அவர் புனைகதைகள் இருக்கின்றன.  ஒரு தொண்டு நிறுவனமாக தம்மை உருமாற்றிக்கொண்டு செயல்படும் தோற்றத்தை நமக்கு ஏற்படுத்தி தருகிறது. வன்முறை, வன்புணர்ச்சி, கொலை, களவு, களவாணித்தனம் ஆகிய குற்றப் பண்புகளைக் காட்டிலும் அக்குற்றத்திற்குக் காரணமான சமூகத்தைத் தண்டிப்பதில் அவருக்கு ஆர்வம்.  அவரைப் பொறுத்தவரை உணர்ச்சிக்குப் பலியாகி குற்றமிழைக்கிறவர்கள் தண்டனைக்குரியவர்களல்ல மன்னிக்கப்படவேண்டியவர்கள், அவர்கள் நோயாளிகள்: உரிய சிகிச்சைக்குக் காத்திருப்பவர்கள். சமூகத்தின் கயமைக்கு யார் பொறுப்பு, எப்படி நிகழ்கிறது, அதனை அளவிடுவதால் கிடைக்கும் நன்மை தீமையென்ன என்ற ஆய்வு நோக்கில் அவர் படைப்புகளை அணுகவேண்டும். சட்டமும் நீதியும் குற்றவாளிகளை தண்டிக்கமட்டுமே செய்கின்றன. பலியாடுகளுக்கு தங்கள் பாதுகாப்புகுறித்த பிரக்ஞயை உணர்த்தும் பொறுப்பு சமூகத்தின் பங்குதாரனான தனக்குமுண்டு என்றுணர்ந்து ரஸ்ஸல் வினையாற்றுகிறார்.

தண்ணீர் குழாய்ப் பழுதுபார்க்கும் தொழிலாளியான ரஸ்ஸலின் தந்தைக்குக் குடிபழக்கமும் உண்டு. சகோதரன் வியட்நாம் யுத்தத்தால் சீரழிந்து போனவன், மற்றொரு சகோதரன் சண்டையும் சச்சரவும் நிறைந்த குடும்ப மரபுப்படி, காணாமற் போகிறான். குடிகாரத் தந்தை, வறுமை, திக்கு தெரியாமல் பயணித்த பெற்றோர்கள், அவர்கள் இழைத்த கொடுமைகள் ஆகியவற்றிலிருந்து தப்ப நினைத்த ரஸ்ஸலுக்கு  வார்த்தைகள் ஒளிகீற்றாக அவர் சிறைவாழ்க்கைக்குள் நுழைந்தன. அக்காலங்களில், சிறுவன் ரஸ்ஸல்,   ஒத்த வயதினரிடம்  தேடிச்சென்று  அளந்த கதைசொல்லலுக்குக் கிடைத்த வரவேற்பு அவனை உறசாகமூட்டியது, குடும்ப நரகத்திலிருந்து விடுவிக்கும் பிராணவாயுவாகவும் அமைந்தது தொடர்ந்து ஆர்வமுடன் செயல்பட்டான். பின்னாளில் ரஸ்ஸல் சிறந்த படைப்பாளியாக உருவானதின் பூர்வாங்கக் காரணமிது. அவர் வரையில், “வார்த்தைகள் என்பது அர்த்தமற்றவைகளுக்குப் பொருள் தேடும் முயற்சி, நிஜத்தை  எட்ட நம்மை வழி நடத்தும் ஓர் அரூப சக்தி” தவிர “எழுத்திடம் அடைக்கலம் வேண்டுவது  சிறுமைகளிடமிருந்து தப்புவதற்கு அல்ல மாறாக அதனை அடக்கி ஆளவும், நெறிபடுத்தவும், நடந்த வற்றைச் சாட்சிப்படுத்தவும், இறுதியாக படைப்பாளி தனது மனதிற்கு உகந்த மாற்றுலகை கட்டி எழுப்புவதுமாகும் (1). பதினாறு வயதிலேயே தனக்கு மனதளவில் சிகிச்சை தேவைப்பட்டதெனவும் அதன் பொருட்டே சொற்களின் உதவியை நாடியாகவும் தெரிவிக்கிறார். ஆனாலும் அப்போதைக்கு அவரது முயற்சிகள் இலக்கியம் என்பதைக் காட்டிலும் ஒருவகை சுயதேடல்களாகவே இருந்திருக்கிறது. எழுத்தை கையிலெடுக்கிற பெரும்பான்மையோர்  சிறைவாழ்க்கையை தேர்வுசெய்து கதவை அடைத்து வாழ்கிற இந்நாளில், ரஸ்ஸல் எழுத்துகளென்ற சிறகை விரித்து விசும்பைத் தொட விரும்பினாராம் (1)

ரஸ்ஸல் பாங்க்கின் கதை மாந்தர்கள் விளிம்புநிலை மனிதர்கள். சமூகம் விலக்கிவைத்த கடை நிலை மனிதர்கள். இரந்தும், குற்றம் புரிந்தும் வீதியோரங்களிலும் பாலத்தின் அடியிலும் ஆதரவு கரம் தேடி வாழும் உயிர்களாகவே அவர்களைச் சந்திக்கிறோம். தங்கள் ஆசைகளுக்குத் தடங்கல்களாக இருக்கிற வாழ்க்கை முறை, வரையரைகளுடன் கூடிய கனவுகள், எதிர்கொள்ள முடியாத சக்திகள் தரும் நெருக்கடி ஆகியவற்றைப் பற்றிய புரிதலெல்லாம் அவர்களுக்கு நிறையவே உண்டு. இம்மனிதர்களின் தலைகளின் சுமையாக இருப்பது, அவர்களின் பெற்றோர்கள், அவர்கள் பூர்வீகம் அதாவது அவர்களை இன்னார் வழிவந்தவர்கள் என அறிமுகப்படுத்தும் ‘இன்னார்கள்’ இவர்கள் மீது பெரும் பாரத்தை இறக்கியிருக்கிறார்கள். என்னதான் உழைத்தாலும், சோபித்தாலும் ‘இன்னார்’ என்ற சொல் அவர்கள் தலை விதியைத் தீர்மானிப்பதாக இருக்கிறது. இதனுடன் சமூகத்துடனான அவனுடைய கொடுக்கல் வாங்கல்கள், இயற்கையை எதிர்கொள்ள முடியாத பலவீனம், மூலதன உலகின் அமைப்புமுறையென வேறு பல காரணிகளும் கால்களைப் பிணைக்கின்றன.  எனினும் சிறிதுகூட இரக்கமற்ற சமூகப்பாட்டையில் தட்டுத் தடுமாறியோ, நொண்டிக்கொண்டோ, அவ்வப்போது விழுந்தெழுந்தும் மெல்ல என்றாலும் தொடர்ந்து நடக்கவே செய்கிறான். நீந்தத் தெரியாதவனைக் காப்பாற்ற முனைவதிலுள்ள சங்கடம் வாசிக்கிறபோது  ஏற்படுகிறது. அவன் மூழ்குகிறபோது அவனுடன் சேர்ந்து  மூழ்குகிறோம், அவன் நீர்மட்டத்திற்கு மேல் வந்து மூச்சுவிடும்போது,  வாய்கொள்ள காற்றை உள்வாங்கி ஆசுவாசப்படுத்திக்கொள்கிறோம். “நவீன உலகு ஆக்ரமித்துள்ள மனிதர்களின் இயல்பான நடவடிக்கைகள் ஊடாகவே பிரபஞ்ச உண்மைகளை நாவலாசிரியர்கள் நிலைநிறுத்த விரும்புகிறோம், அவற்றை தொடர்ந்து உயிர்ப்பிக்கவும் நம்மால் முடியும்”(2) என்று கூறும் ரஸ்ஸல் அம்மனிதர்களை தனது கதையாடலைக்கொண்டு தொடர்ந்து இயங்கச் செய்கிறார்.

அண்மையில் (2012) பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் வெளிவந்த ரஸ்ஸல் பாங்க்கின் நாவல் Lointain souvenir de la peau (3) (Lost memory of skin). இநாவலில் ரஸ்ஸலின் கவனம் பாலியல் குற்றவாளிகள் பக்கம் சென்றிருக்கிறது.  ரஸ்ஸலை பொறுத்தவரை குற்றவாளிகளைக்கொண்டே ஒரு சமுதாயத்தின் ஆரோக்கியத்தை அளக்க முடியும். வெப்பமானி, பால் மானிபோல சமூகத்தின் நோயை அளக்க உதவுபவர்கள் அவர்கள். இப்பாலியல் குற்றவாளிகளைத் தங்களின் ஒரு பிரிவினர் என்பதை பெரும்பாலோர் ஏற்பதில்லை. அந்தப் பிறருக்கு இவர்களெல்லாம் சமூகத்தை சீரழிக்கும் புல்லுருவிகள், ஊருக்கு ஒதுக்குப்புறமாய் வாழவேண்டியவர்கள். நடுத்தர அல்லது பணக்கார குடும்பங்களின் வம்சாவளியில் வந்தவர்களாக இருப்பின் அவர்களை அமெரிக்க்காவின் முதுகெலும்பென கொண்டாடுவர், அரசும் அவர்கள் வாழ்வில் அக்கற்றை கொண்டிருக்கும். இவர்கள் அருவருப்பான சாக்கடை புழுக்கள் என்ற எண்ணத்துடன் பாலியியல் குற்றவாளிகளுக்கென ஒரு காலனியை (ரஸ்ஸல் கற்பனையின்படி)உருவாக்குகிறது, தவிர அவர்கள் கண்ணிற்படும் சிறுவர் சிறுமியர்கூட பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகலாம் என்கிற அச்சத்துடன்  மக்கள்  குடியிருப்புகளிலிருந்து காலனியை குறைந்தது 760 மீட்டர் தள்ளி அமைக்கவேண்டும் என்ற நியதிப்படி உருவான காலனி அது. அங்கு குற்றவாளிகளைக் கண்காணிக்க மின்னணு காப்புகள் இல்லை. பதிலாக உலோக குண்டுகளுடன் கூடிய சங்கிலியாலான தளை.

கதை நாயகன் லெ கிட் இருபத்திரண்டு வயது இளைஞன். செய்த குற்றத்திற்கு மூன்று மாத சிறை தண்டனை அனுபவித்துவிட்டு  காலனி வாழ்க்கைக்கு வருகிறான். அவன்செய்தகுற்றம் வலைத்தளத்தில் பாலியல் தொடர்பான படங்களைப் பார்ப்பது,.  போலீஸார் விரித்த வலையில் வெகு எளிதாகச் சிக்கப் போதுமானதாக இருக்கிறது. தந்தையை இழந்தவன், தாய்க்கு மகனைக் காட்டிலும் வேறுவகையான தேவைகள் இருக்கின்றன.புறக்கணிக்கப்ட்ட  ‘கிட்’ போர்னோ போதைக்கு அடிமையாக நேர்ந்தது அவ்வகையில் தான். தண்டனைப்பெற்று திரும்பும் மகனை தாய் வெறுத்த நிலையில் அவனுக்கென்று கிடைத்த ஒரே ஆதரவு அவன் வளர்க்கிற பச்சோந்தி., அதனுடன்தான் அவன் வளர்ந்தான். பாலத்தின் கீழிருக்கும் குற்றவாளிகள் சேரியில் இவனைப்போல சங்கிலிக்குண்டை சுமந்து அரசுக் கண்காணிப்பின்கீழிருக்கும் நண்பர்கள் கிடைக்கிறார்கள், பொழுதும் போகிறது. அங்குதான் ஒருநாள் மாமிச மலைபோன்ற ஒரு சமூகவியல் பேராசிரியரைச் சந்திக்கிறான். பேராசிரியருக்கு நடுத்தெரு நாராயணர்களிடம் அக்கறை கொள்ள காரணம் இருக்கிறது, அவர் செய்யும் ஆய்வுக்கு அவர்கள்தான் பொருள். ஆக லெ கிட் அவருடைய ஆய்வுக்கு உதவமுடியுமென நம்புகிறார். இவர்கள் இருவரையும் கொண்டு எஜமானரான ரஸ்ஸல் தனது வேட்டையைத் தொடங்குகிறார். அவருக்கு குறி அமெரிக்காவின் அரசியல். ஒரு பக்கம் பாலியல் தொடர்பான வங்கிரங்களுக்குக் காரணமாக இருந்துகொண்டே இன்னொரு பக்கம் ஏமாந்த மனிதர்களைத் தண்டிக்கும் சொந்த நாட்டின் அரசியலை வழக்கம்போல மிகக் கடுமையாக ரஸ்ஸல் விமர்சிக்கிறார்.

குறைந்த பட்ச அன்பைக்கூட அறிந்திராத  ரஸ்ஸல் பான்க்கின் கதைமாந்தர்கள்  நிராதரவான நிலையில் நாவலெங்கும் அன்பிற்கு ஏங்குவதை உணரமுடிகிறது. மனம் இளகுகிறது. விழியோரங்களில் நீர்கசிவதை தடுக்க இயலவில்ல. ஏன் சிலருக்கு மட்டும் இப்படியான வாழ்க்கை? அவர்கள் செய்த குற்றமென்ன?  இச்சமூகத்திற்கு அதில் பங்கில்லையா? ரஸ்ஸல் மட்டும் கேட்கவில்லை நமக்குள்ளூம் கேட்டு அழுது புரளுகிறோம். அதுதான் எழுத்தின் வெற்றி.

வெளிவந்துள்ள படைப்புகள்:

பன்னிரண்டு நாவல்கள்

Family Life (1975)
The Sweet Hereafter(1991)
The Rule pf the Bone (1005)
Affliction(1989)
Lost Memory of Skin (2011)
அவற்றுள் முக்கியமானவை.

சிறுகததைகள் 6 தொகுப்புகள் வந்துள்ளன
Searching for survivors (1975)
The Angel on the Roof (2000)

இரண்டு கவிதை தொகுப்புகள்

இவற்றை தவிர அவரது படைப்புகள் திரைவடிவமும் பெற்றுள்ளன. ‘Affliction’ முக்கியமான திரைப்படம்

——————————————————-

1. Transfugeஇதழுக்கு (Sep.2005) அளித்த செவ்வி  ஒன்றில்

2. Le Magazine Littéraire, page 16 (août 2012)

3. Lointain souvenir de la peau, Russel Banks, Traduit de l’anglais (Etats-unis) par Pierre Furlan -Edition Actes Sud

‘உலக எழுத்தாளர் வரிசை – 6: டுயோங் த்யூயோங்

Duong Thu Huong - Viet Nam two

டுயோங் த்யூயோங் ( Duong Thu Huong) வியட்நாமைச் சேர்ந்த பெண் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர். சிறந்ததொரு நாவலாசிரியை, தீவிரமாக சோஷலிஸம் பேசிய முன்னாள் தோழர். தேசியத்தில் நம்பிக்கைவைத்து மேற்கத்திய திக்கதிற்கு எதிராக ஆயுதமேந்தியவர். வியட்நாம் நாட்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பிதாமகள். பின்னாளில் உள்நாட்டு மார்க்ஸியதோழர்களின் பிரபுத்துவ வாழ்க்கை இவரை சிந்திக்கவைத்ததது மாத்திரமல்ல, பொதுவுடமையின்பேரில் மக்களை அடிமைகளாக நடத்திய அம்மார்க்ஸிய முதலாளிகளின் போக்கு எரிச்சல் கொள்ளவும் செய்தது.இவரது குடும்ப வாழ்க்கை சிறப்பித்துச் சொல்லும்படியில்லை. துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திமணம் செய்துகொண்டவனோடு நடத்திய இல்லறவாழ்க்கை நரகம் என்று சொல்லப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகு கணவரிடமிருந்து மணவிலக்குப் பெற்றிருக்கிறார். உள்நாட்டுப் போரின்போது 30பேர்கொண்ட கலைக்குழுவொன்றை உருவாக்கி, போர்முனைக்குச் சென்று வீரர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார். ‘வேட்டுச் சத்தத்தினும் பார்க்க எங்கள் பாட்டுக்குரல் உரத்து ஒலித்தென’ என்ற பெருமிதம் அவருக்குண்டு. ‘எனக்கு அப்போதெல்லாம் நன்றாக பாடவரும், அதுபோலவே அபாயமான காரியங்களில் ஈடுபடுத்திக்கொள்ளும் துணிச்சலும் “திகம்’ என்கிறார். 1973ம் “மெரிக்கத் துருப்புகள் வடவியட்நாமிடம் நடத்திய யுத்தத்தில் தோல்வியுற்று விலகிக்கொண்டபிறகு நடந்த இரண்டாண்டுகால சகோதர யுத்தத்தின் இறுதியில் தென்-வியட்நாம் வட-வியட்நாம் நிர்வாகத்தின்கீழ் வருகிறது. டுயோங்கைப் பொறுத்தவரை வட-வியட்நாம் திக்கத்தின் கீழ்வராத தென்-வியட்நாம் மக்களின் வாழ்க்கை நன்றாகவே இருந்தது. 1979ம் ண்டு கம்யூனிஸ கட்சியுடன் இணைத்துக்கொள்ள அறிவுறுத்தி அழைப்பு வர, அந்நாட்களில் வியட்நாமியர்களின் பொதுவான மனநிலைக்கிணங்க, விருப்பமில்லாமலேயே கட்சியில் உறுப்பினரானார்.

‘காட்சித் திரிபுகளைக் கடந்து'(Beyond Illusions). என்ற முதல் நாவல் 1987ல் வெளிவந்தது. தொடக்க நாவலே நாட்டின் முதன்மையான நாவலாசிரியர்களில் அவரும் ஒருவரென்ற அங்கீகாரத்தை வழங்கியது என்கிறார்கள். ஒரு இலட்சம் பிரதிகள் விற்றனவாம், பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் பின் அட்டையில் எழுதியிருக்கிறது. வியட்நாம் போன்றதொரு சிறிய நாட்டில் அதற்குச் சாத்தியமுண்டா என்று தெரியவில்லை. போரினால் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் நாவலில் விரிவாகப் பேசபடுகின்றன. கம்யூனிஸத் தலைவர்களின் அதிகார அத்துமீறல்களை கடுமையாக நாவலில் விமர்சனம் செய்திருந்தார். 1988ம் ண்டு வெளிவந்த  குருட்டு சொர்க்கம் (Paradise of the Blind), மற்றொரு நல்ல நாவலென்ற கருத்து நிலவுகிறது. விற்பனை அளவிலும் சாதனை புரிந்திருக்கிறது. இம்முறையும் ள்பவர்களும், ட்சிமுறையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆட்சியாளர்களுக்கு எழுத்தாளர் கையைக் கட்டிப்போட பேரம் பேசுகிறார்கள், அரசாங்கத் தரப்பில் ஒரு பெரிய வீடொன்றை தங்கத் தாம்பாளத்தில் வைத்துப் பரிசாகத் தர தயார் என்கிறார்கள். எழுத்தாளர் மறுக்கிறார். மறுப்பதோடு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் ஆட்சியாளர்களைக் கண்டிக்கிறார். ஒருகட்சி ஆட்சிமுறையை ஒழித்து, ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கு அரசு முன் வரவேண்டுமென வற்புறுத்துகிறார். எனவே 1989ம் ண்டு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். மறு ஆண்டு வியட்நாமிய எழுத்தாளர் அமைப்பிலிருந்தும் அவரை நீக்குகிறார்கள். 1991ம் ண்டு எட்டுமாதங்கள் சிறைவாசம். அவரது நூல்கள் அனைத்தும் உள் நாட்டில் தடை செய்யப்படுகின்றன. வெகுகாலம் வியட்நாமில் வீட்டுக் காவலிலிருந்த எழுத்தாளர் விடுதலைக்குப் பிறகு 2006ம் ண்டிலிருந்து பிரான்சுநாட்டில் வசித்துவருகிறார். பிரெஞ்சு மொழியை அறிந்தவரென்ற போதிலும் வியட்நாமிய மொழியில் எழுதப்பட்டு பின்னர் பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் அவரது படைப்புகள் மொழிபெயர்ப்பு செய்யப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது.

டுயோங் த்யூயோங் எழுத்தில்  அண்மையில் வெளிவந்துள்ள நாவல் Au Zenith(1). புரிதலுக்காக ‘உச்சம்’ “ல்லது ‘சிகரம்’ என்று மொழிபெயர்க்கலாம். பொதுவாக சிகரத்தைத் தொட்டவர்களுக்கு இறங்கிவரப்போதாது, பெரும்பான்மையோருக்கு விபத்தென்பது தீர்மானிக்கபட்டது. அவர்கள் நிலை தடுமாறி விழுகிறபோது பரிதாபமான முடிவையே சந்திக்கின்றனர். உள்ளன்போடு நேசிக்கிறவர்களின் அழுகுரலைக் கேட்கக்கூட வாய்ப்பின்றி தனித்து போகின்றனர் என்பது வரலாறு தரும் உண்மை. பூமி அனைத்தும் எனது காலடியில்; வானம் எனது வெண்கொற்றகுடை; தீயும், காற்றும் நீருங்கூட என்னைக்கேட்டே செயல்படவேண்டுமென நினைத்த அசுரர்களுக்கு நேர்ந்த முடிவுகளும் நமக்கு இதைத்தான் கூறின.  Au Zenith என்ற பெருங்கதையாடலைக்கொண்டு பெரியதொரு இலக்கியபோரையே படைப்புகளத்தில் நடத்தி முடித்திருக்கிறார் இவர்.

இம்முறை வியட்நாமியர்களின் தந்தையெனப் போற்றப்படும் அதிபரின் பிம்பம் ஆட்டம் காண்கிறது. வியட்நாம் தேசத்தந்தை அதிபர் ஹோசிமின்குறித்து வெளியுலகு அறிந்திராத தகவல்களையும், இரகசியங்களையும் கருப்பொருட்களாகக் கொண்டு புனைவு நீள்கிறது. இழப்புகளை எண்ணி அழும் அந்திமக்காலம் அதிபர் ஹோசிமினுக்குச் சொந்தமானதென்பதைச் சொல்லுகிற புனைவு. நாவலில் ஹோசிமின் என்றபெயர் சாதுர்யமாகத் தவிர்க்கப்பட்டிருந்தபோதிலும் அதிபர் என்றசொல்லுக்குள்ளே ஹோசிமின் ஒளிந்திருப்பதை வெகு சுலபமாகவே கண்டுபிடித்துவிடுகிறோம். தூரதேசங்களிலிருக்கும் நம்மைப் போன்றவர்களுக்கும், உள்ளூர் அபாவிகளுக்கும் ஹோசிமின் என்ற சொல் தரும் புரிதல் என்ன? உத்தமர், பெண்களை ஏறெடுத்தும் பாராதவர். உடல் பொருள் ஆவி அவ்வளவையும் வியட்நாமுக்கு அளித்து தமது சொந்த வாழ்வைத் தியாகம் செய்தவர் போன்ற புகழுரைகள் – சர்வாதிகாரிகள் அனைவருக்குமே பூணப்படும் கவசமென்று நாமும் அறிவோம். ஆனால் அவர்கள் அந்தரங்கம் புனித நீரல்ல, மாசுபடிந்தது. துர்நாற்றம் கொண்டது. அதிபராக அவதாரமெடுப்பவன் கட்சிக்கும் நாட்டுக்கும் அன்றி வேறு பயன்பாடுகளற்றவன் என்பதை அவன் தீர்மானிப்பதல்ல, அவன் அவனுக்காகவே வடிவமைக்கிற “திகாரமையம் தீர்மானிக்கிறது; அவர்களுக்கு உடற் தினவுகள் கூடாது; காமம், காதல், பெண்கள் விலக்கப்பட்டது, விலக்கப்பட்டவர்கள் என்ற சர்வாதிகார ஓர்மத்திற்கு வலு சேர்க்கிறவகையில் தங்கள் தேச நாயகனை சுத்திகரிக்க நினைக்கிறார்கள். விளைவு அதிபரின் பெண்துணை அழிக்கப்படுகிறது. தடயமின்றி கரைந்துபோகிறாள். சுவான் என்ற ஒருத்தி, அதிபரைக் காதலித்தாளென்ற ஒரே காரணத்திற்காகவும், அவருடன் படுக்கையைப் பகிர்ந்து ஒரு மகனுக்கும் மகளுக்கும் தாயானவள் என்ற குற்றத்திற்காகவுவ் தண்டிக்கப்படுகிறாள். மகன்,மகள், மனைவி என்ற உறவுகளை ஒரு சராசரி மனிதன் விரும்பலாம், குடும்ப வாழ்க்கை ஊர் பேரற்ற மனிதர்களுக்கு அவசியமாகலாம், ஆனால் நாட்டின் அதிபருக்கு, தேசத்தின் நலனையே மூச்சாகக் கொண்ட மனிதருக்கு அம்மனிதரே விரும்பினாலுங்கூட சர்வாதிகார கவசம் அதை அனுமதிக்காதென்பது நாவல் வைக்கும் உண்மை. விசுவாசிகளென்று சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டம் இளம்பெண் சுவா¨னை(Xuan) கொலைசெய்து தெருவில் வீசிவிட்டுப்போகிறது. அவளுடன் பாலியல் வல்லுறவு கொள்பவன் உள்துறைமைச்சராக இருப்பவன். பெண் செய்த குற்றம் அதிபரைக் காதலித்தது அல்ல மாறாக சட்டபூர்வமாக அது அங்கீகரிக்கப்படவேண்டும் என்று விண்ணப்பித்ததற்காக. அவள் கொலை வாகன விபத்தென்று அறிவிக்கப்படுகிறது. பெண்ணுக்கும் அதிபருக்குமான உறவினை தொடக்கமுதல் அறிந்திருந்த அவளது ஒன்றுவிட்ட சகோதரியும் பின்னர் கொலை செய்யப்படுகிறாள், எதேச்சையாக இப்பெண்மூலம் அவளது காதலன் அறிந்திருந்த – ஆட்சியாளர்களால் மறைக்கபட்ட உண்மை வெகுகாலத்திற்குப் பிறகு வெளி உலகுக்குத் தெரியவருகிறது. பொதுவாக சோஷலிஸநாடுகளில் தனிமனிதன் அவனது இருப்பு, மகிழ்ச்சி, உறவு முதலான காரணிகளிலிருந்து அந்நியப்படுத்தப்படுகிறான். “காம்ரேட், உண்மையான Bolcheviqueற்கு குடும்பம் எதற்கென” கேட்ட ஸ்டாலினை இங்கே நினைவுகூர்தல் வேண்டும். ஸ்டாலின் மனைவி தற்கொலை செய்துகொண்டதும், அதை இயல்பான மரணமென்று வெளி உலகிற்கு அறிவித்ததும், மகன் போதைப்பொருளுக்கு அடிமையானதும், இரண்டாம் உலகபோரின்போதும் அவனுக்கேற்பட்ட சோகமான முடிவும் மறக்கக்கூடியதல்ல. ‘பெரிய அண்ணன்கள்’ அநேகரின் வாழ்க்கை வரலாறுகள், நமக்கு வாசிப்பு அலுப்பினை ஏற்படுத்துவதற்கு அவற்றின் ஊடுபாவாக ஒளிந்துள்ள இதுமாதிரியான ஒற்றுமை நிகழ்வுகளே காரணம். உலக வரலாற்றில் மாவீரர்களாக சித்தரிக்கபட்ட சர்வாதிகாரிகள் அனைவருக்குமே சொந்தவாழ்க்கை ஒளிமயமானதல்ல, அது இருண்ட குகைக்குச் சொந்தமானது. உடலும் மனமும் சோர தங்கள் இறுதி நாட்களை கடந்தகாலமாக உருமாற்றம் செய்து வேதனைகளோடு அவர்கள் மடிந்திருக்கிறார்கள்.

பொதுவுடமை சித்தாந்தம்- காலங்காலமாய் போற்றப்படும் மரபுகள் என்ற இரு கைகளுக்குள்ளும் சிக்குண்டு எவ்வாறு ஒரு தனிமனிதன் வாழ்க்கை அலைகழிக்கபடுகிறது என்பதே புனைவு மையப்படுத்தும் பொருள். டுயோங்குடைய முந்தைய நாவல்களும் தனிமனிதனை தேசாந்திரம் செய்யும் சோஷலிசஸ அரசியலை விமர்சித்திருக்கின்றன என்றாலும் இந்நாவலில் வரம்பற்ற அதிகாரத்தின் முடிவாக இருக்கும் ஒருவனே, தனிமனித தீண்டாமை கோட்பாட்டின் விளைவாக எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பது நாவல் தரும் விளக்கம். தங்கள் வாழ்நாளில் அதிகாரத்தில் உச்சியிலிருந்துகொண்டு ஆடிய மூர்க்க தாண்டவமனைத்தும், பதவி மோகத்தில் காயப்படுத்தப்பட்ட தனிமனித உணர்வுகளுக்காகத் தேடிக்கொண்ட களிம்பென்று விளங்கிக்கொள்ள வேண்டும். டுயோங் நமக்கு அறிமுகப்படுத்துகிற ஹோசி
மினைக் கண்டு பரிதாபப்படவேண்டியிருக்கிறது. தேசத்தந்தையென கோடானகோடி வியட்நாமியர்கள் புகழ்பாடிய நேற்றைய ஹோசிமின்
அல்ல இவர், விரக்தியின் உச்சத்தில், இறையின்றி மெலிந்துபோன நோஞ்சான் கழுகு. வாழ்க்கையின் கடைசிக்கட்டத்தில்
அனைத்துவகையிலும் தனிமைப்படுத்தப்பட்டுக் கிடக்கும் முதியவர்.

ஆசிரியர் நாவலின் தொடக்கத்திலேயே வாசகர்களைக் கனிவாய் எச்சரிக்கிறார். கற்பனையை மட்டுமே முழுமையாக நம்பி ஒரு நாவலைப் படைப்பதற்கான ஆற்றல் “வருக்கில்லையாம். ‘நான் எழுதுகிற புனைவுகள் அனைத்தும் உண்மைகள் அடிப்படையில் எழுதப்பட்டவை என்பது ஆசிரியர் தரும் வாக்கு மூலம். நாவலின் தொடக்கத்தில் அப்பா!.. அப்பா!.. என்றொரு அலறல். மலை அடிவாரத்திலிருந்து புறப்பட்ட இளஞ்சிறுவனின் அபயக்குரல் மலைகளெங்கும் எதிரொலிக்கிறது; மரங்கள் அதிர்ச்சியில் அசைந்துகொடுக்கின்றன, நிசப்தமான வெளியில் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டு அடங்குகின்றன. ஒருகணம் தம்மை மறந்த அதிபர் சுய நினைவுக்குத் திரும்புகிறார். ‘இல்லை, அவன் குரலில்லை’ இக்குரலுக்குடையவன் வேறு யாரோ’, தம்மைத்தாமே சமாதானம் செய்துகொள்கிறார்.. எனினும் அக்குரல் வெகுநாட்களாய் நெஞ்சுக்குள் கனிந்துகொண்டிருந்த சோகத்தை விசிறிவிட பற்றிக்கொள்கிறது- அவர் மீள்வாசிப்பு செய்யும் கடந்தகாலத்திற்குள் பிரவேசிக்கிறோம். தொடர்ந்து பையனின் அழுகுரல். ‘பையனின் தகப்பன் ஒருவேளை இறந்திருக்கக்கூடும், பாவம், இனி அவனொரு அனாதைச் சிறுவன். சட்டென்று அதிபர் மனதில் ஒரு கேள்வி, நான் இறப்பதாய் வைத்துக்கொள்வோம், என் மகனும் இந்தப்பையனை போலத்தான் அழுவானோ?(பக்கம் -23)

இளமைக்கால பாரீஸ் வாழ்க்கை, கடந்த கால காதல் ஆகியவற்றை எண்ணி எண்ணி ஆற்றொணாத துயரத்தில் மூழ்கும் அதிபரின் கதைக்கு இணைகதைகளாக மூன்றுகதைகள் வாசிக்கக் கிடைக்கின்றன. முதலாவதுகதை ‘வூ’ என்பவர் குறித்தது. வூ, அதிபரின் நம்பிக்கைக்கு உரியவர்மட்டுமல்ல அவருக்கு நெருக்கமான நண்பருங்கூட, ஹோசிமின் மகனை ரகசியமாக வளர்க்கின்ற பொறுப்பை ஏற்றிருப்பவர். பிறகு அவரது மனைவியாக ‘வான்’ என்பவளைப் பார்க்கிறோம்.   கடந்த காலத்தில் உழைக்கும் வர்க்கத்தில் ஒருத்தி, தீவிரமாக பொதுவுடமைக் கொள்கைக்கு வக்காலத்து வாங்கியவள்.  செம்படையில் சேர்ந்து எதிரிகளை விரட்டியவள். காலம் மாறுகிறது. இன்றைக்கு பொறுப்பான அதிகாரி. அதிகாரமும்  பதவிதரும் சுகமும் அவள் குணத்தை முற்றாக மாற்றி அமைக்கிறது. நாட்டின் விடுதலைக்குப் பிறகு சுகவாசியான அதிகாரவர்க்கத்துள் அவளும் ஒருத்தி என்று சுருக்கமாக முத்திரைகுத்திவிட்டு நாம் மேலே நகரலாம். ஊழலும் தன்னலமும் கொண்ட ஆட்சியாளர்களுக்கு அவள் உதாரணம். இரண்டாவது கதைக்குச் சொந்தக்காரன் செல்வாக்கான ஒரு கிராமத்துவாசி. ஹோசிமின் போல அல்லாது உறவும், கிராமமக்களும் விமர்சித்தபோதும், மகன்களும் முதல் மனைவியின் சகோதரர்களும் எதிர்த்தபோதும் தமது இருப்பிற்கும், சொந்த உணர்ச்சிகளுக்கு செவிசாய்த்து, முதல் மனைவியின் இறப்பிறகுப் பிறகு எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்த கூலிப்பெண்ணை மணக்கும் துணிச்சல்மிக்க கிழவன். மூன்றாவது கதை, சுவானுடைய சகோதரி கணவனுடைய கதை. சுவான் கொலைக்குப் பின்புலத்திலிருப்பவர்களைப் பழிவாங்கத்துடிக்கும் இளைஞனை ஆளும் வர்க்கத்தின் ஏவலர்கள் துரத்துகிறார்கள். நாவலில் சொல்லப்பட்டிருக்கிற அத்தனை கதைமாந்தர்களின் பண்பும், செயலும், விதியும் ஏதோ ஒருவகையில் ஹோசிமின் வரலாற்றோடு, வாழ்க்கையோடு முடையப்பட்டிருக்கிறது. “ம்மனிதர்களின் நிகழ்காலமும், கடந்தகாலமும், மனித வாழ்க்கையின் அகம் புறம், பொதுவாழ்க்கையில் அவர்களுக்கான பங்களிப்பென கதை பின்னல் நிகழ்கிறது.

நாவல் களம், சொல்லப்படும் அரசியல், கதைமாந்தர்கள், கொள்கை முழக்கங்கள் என்றபேரில் மக்களை ஏமாற்றும் ஆளும் வர்க்கம், அப்பாவி மக்கள், வெள்ளந்தியாய் வாழப்பழகிய கிராமங்கள், கவலை பூத்த முகங்கள், நம்பிக்கை வறட்சிகள், நிலைப்பாடு மோதல்கள்,அலைக்கும் காற்று, மொத்தத்தில் இந்திய நாவலொன்றை படிப்பதுபோன்ற உணர்வு, எனவே இவரது நாவலை அக்கறையுடன் வாசிக்க முடிகிறது. உயிர்ப்புள்ள படைப்புக்குரிய கலாநேர்த்தியும், கூர்மையும் ஆழமும் இப்படைப்டப்பிற்கான தனித்துவம். எழுத்தென்பது சம்பவமொன்றின் சாட்சிமட்டுமல்ல, எழுத்தாளனின் மனசாட்சியாக இருக்கவேண்டும், அது சத்திய வார்த்தைகளால் நிரப்பப்படவேண்டும். சகமனிதர்கள், சமூகமென்ற என்ற கடப்பாட்டுடன் ஒலிக்கும் படைப்பாளுமைகள் போற்றுதலுக்குரியவை. இலக்கியங்கள் இதைத்தான் சொல்லவேண்டுமென்றில்லை ஆனால் ஏதோவொன்றை சொல்லவே படைக்கப்படுவை. ட்யோங் த்யோங்கிற்கும் அந்த நோக்கம் நிறையவே இருந்திருக்கவேண்டும்: ஏராளமாக ஆளும் வர்க்கத்திடம் அவருக்குக் கோபம் இருக்கிறது, அது கடுங்கோபம். பிரான்சையும், அமெரிக்காவையும் அத்தனை திடத்தோடு எதிர்த்த மக்கள், எப்படி சர்வாதிகாரத்திற்கு அடிபணியும் கோழைகளாய் மாறிப்போனார்கள் என்றகோபம்; தேச நலன் என்பது தனிமனிதச் சுதந்திரத்தினால் மட்டுமே கட்டமைக்கப்படவேண்டும் என்ற சிந்தனைப்பள்ளிக்கு ஆசிரியர் சொந்தங்கொண்டாடுகிறார். இந்நாவலை நடத்திச்செல்வது கதைமாந்தர்களின்  மேதைமைக்கொத்த உரையாடல்கள், சல்லிவேர்கள்போல பரவி ஆனால் நாவலை நிறுத்த அவை முதற்பக்கத்திலிருந்து இறுதிவரை உதவுகின்றன. மனிதர் குரலுக்கான அதிகார
அளவையும், வீச்சையும் வயதே தீர்மானிக்கிறதென்பதும் நாவல் தரும் செய்தி. அதிபர் தனக்குத்தானே நடத்தும் உரையாடல்; அவரது காவலர்களுடனும், நம்பிக்கைக்குரிய ‘வூ’ வுடனும் நடத்தும் உரையாடல்;  ‘வூ’தம்பதிகளுக்கிடையேயான உரையாடல்; விவசாயியான கிழவன் குவாங் மகன்களுடன் நடத்தும் உரையாடல் என்ற பெரிய பட்டியலை அடுத்து வேறு சில பட்டியல்களும் உள்ளன. உரையாடல்களில் ஒன்றைப் புரிந்துகொள்கிறோம். குறைந்தபட்சம் இருவரின் பங்களிப்பு தேவையெனச்சொல்லபடுகிற உரையாடலில் ஒன்று மற்றொன்றை நிராகரிக்கும் போக்கே பெரிதும் காணகிடைக்கிறது. நவீனத்தால் அல்லது யுகமாற்றங்களால் புறக்கணிக்கமுடியாதவற்றுள் மரபான உரையாடலையும் சேர்க்கவேண்டும். உ.ம்.:  “தாய் சோன் மலையை மதிப்பதுபோல உனது தகப்பனையும் நினை’, ‘ஊற்று நீரை நேசிப்பதுபோல பெற்ற தாயையும் நேசிக்க வேண்டும்’.” ஓவியததையோ, சிற்பத்தையோ அவதானிக்கிறபோது சில புள்ளிகள், சில தடயங்கள், சில பகுதிகள் படைப்பாளியின் ஆளுமையை வெளிப்படுத்தக்கூடும், ஓர் ஆசிரியனின் இருப்பை, சுவாசத்தை, அசைவை உணர்த்தும் கணங்கள் அவை. சங்கீதத்தில் கமகங்கள் போன்றவை.டுயோங் த்யூயோங் நாலிலும் அத்தகையை கமகங்களை இடைக்கிடை நிறைய உண்டு. அறைக்குத் திரும்பியவர், கட்டிலில் இயல்பாய் எப்போதும்போல படுக்கிறார். குண்டு காவலாளி, கதவினைச் சாத்திவிட்டு  புறப்படுகிறான். படிகளில் அவனது கனத்த பாதங்கள் எழுப்பும் ஓசை, புத்தவிகாரங்களெழுப்பும் சீரான மணியோசையில் கரைந்துபோகின்றன”, ஓர் நல்ல உதாரணம்.

புரட்சிகள் தரும் மாற்றங்கள் வரலாற்றை மாற்றி எழுத உதவியதேயன்றி மானுட நெருக்கடிக்களுக்குத் தீர்வினைத் தந்ததில்லை. “வாழ்க்கைதரும் இன்னல்களுக்கு ஆறுதலாக இருந்த புத்த விகாரங்களின் பிரார்த்தனையும்- சேகண்டி ஓசையும் எங்கே போயின?” என்ற கேள்வியைக் கேட்டு குற்ற உணர்வில் வருந்தும் அதிபருடைய மனப்போராட்டத்தினூடாகவே புனைவுக்குண்டான விவரணபாணியை உருவாக்கமுடியுமென்பது இந்நாவலின் சாதனை.
—————————————————————————————————————————–
1. Au Zenith – Duong Thu Huong translated from Vietnamese Phuong Dang Tran-Sabine Wespieser Editeur, Paris

உலக எழுத்தாளர் வரிசை 5 : ஜார்ஜ் சேம்ப்ர்

ஜார்ஜ் சேம்ப்ர் (Jorge Semprun)AVT_Jorge-Semprun_3796

ஜார்ஜ் சேம்ப்ர் மாட்ரிட்டில் (ஸ்பெயின்) பிறந்து  பாரீஸில் (பிரான்சு) மறைந்தவர்.  மேட்டுக்குடியில் பிறந்த பொதுவுடமைவாதி, ஸ்பெயின் மார்க்கோ முதல் ஜெர்மன் இட்லர்வரை இவரை பிடித்து சிறையிலடைக்க அல்லது கொல்ல காத்திருந்தார்கள். அரசியலோடு எழுத்திலும் தீவிர பங்களிப்பு. பிரெஞ்சு -ஸ்பானிஷ் இரண்டிலும் எழுதுவார். எழுத்தோடு தத்துவம் பேசியவர்.

சூழலைக் காட்டிலும் அக புறவய அனுபவங்களை தமது எழுத்தில் கொண்டுவரவும் அதனூடாக வாசிப்பை புதிய தளத்தில் நிறுத்தி அவ்வனுபவத்தை வாசகரையும் உணரச்செய்வதில் தேர்ந்தவர் ஜார்ஜ் சேம்ப்ர் (Jorge Semprun). ஒரு ஞாயிற்றுக்கிழமை, பூஷன்வால்ட் (‘Quel beau dimanche!) என ஆரம்பித்து வாசகரை வழிமறித்து தேடிக்கொள்ளும் சாமர்த்தியம் அவர் எழுத்துக்கு நிறையவே உண்டு. நளனுக்கு வாய்த்ததுபோல ‘தீவினைக் கொடுமை’யைக் காலமும், சரித்திரமும் அவருக்கு சோதனையாக அறிமுகப்படுத்துகிறது, புலிவாலைப்பிடித்த போதை அனுபவம். அதனை மயக்கத்தின்வழிநின்றே ஒரு போர்வீரனின் தீரத்துடன் எதிர்கொள்ளவும், ஒரு கலைஞனின் திறத்துடன் பகிர்ந்துகொள்ளவும் அவருக்கு முடிந்தது. நாஜிகளின் வதைமுகாமில் உள்ளத்தாலும் உடலாலும் தேய்ந்துகொண்டிருந்தபோது கண்ணெதிரே நிகழ்ந்த, சக மனிதகூட்டத்தின் தினசரிகள் மீதான தாக்குதலைத்  (கடுங்குளிர், பசிக்கு உணவின்மை, கொடுமைகள், ஈவிரக்கமற்ற கொலைகள், முகவாட்டங்கள், சோர்வுகள், கடுந்துன்பத்தின் முக்கல்கள் முனகல்கள் இன்னும் இதுபோன்றவற்றையெல்லாம் புறச் சம்பவங்களக் கணக்கில் கொள்ளாது) தவிர்த்து  – முகாமில் தமமக்குள் நிகழ்ந்த இரசாயன மாற்றங்களை சொல்லவேண்டியது அவசியம் என்கிறார். நாஜிகளுடைய வதை முகாம்களைப் பற்றிய கட்டுரைகள், வரலாறுகள், புனைவுகள்  ஏராளமாக வந்துள்ளனவென்றாலும், அதனை இலக்கியமாக்க இவர் ஒருவரால்தான் முடிந்திருக்கிறது. முகாம் வாழ்வை ஓர் யோகிபோல கடந்து வந்திருக்கிறார். அதற்கு ஒருவேளை அவரது தத்துவ அறிவு காரணமாக இருக்கலாம்.

ஜார்ஜ் சேம்பர் ஒரு ரிபப்ளிகன், எதேச்சதிகாரத்தின் எந்தவடிவமும் மக்களுக்கு எதிரானது என்கிற உண்ர்வுபூர்வமான குரல்களுக்கிடையில் அவர் குரலும் இடம்பெற்றது. ஸ்பெயின் நாட்டில் பிராங்க்கோ என்கிற கொடுங்கோலனின் ஆட்சி காலத்தில் தொடங்கிய தலைமறைவு வாழ்க்கை பிரான்சு நாட்டை நாஜிகள் ஆக்ரமித்திருந்தபோதும் நீடித்தது. பொதுவுடமைக் கொள்கையில் தீவிர ஆர்வலர், கட்சியில் அக்கறையுடன் வினையாற்றியவர் எனினும் ஸ்டாலினிஸத்துடன் உடன்பட மறுத்து விலகிக்கொண்டார். தீவிரமான அரசியல் நிலைப்பாடுகளுக்காக எழுத்தை ஒருபோதும் மறந்ததோ, தியாகம் செய்யவோ இல்லை, அவ்வெழுத்தை அவர் சார்ந்த அரசியலுக்காகப் பயன்படுத்திக்கொண்டவரும் அல்ல.

ஜார்ஜ் சேம்ப்ர் அரசியல் எழுத்து என்ற இரு குதிரை சாரட்டில் பயணித்தவர் என்பதால், அவர் அரசியல் வழித்தடத்தையும் நாம் இங்கே பேசியாகவேண்டும். உண்மையைச் சொல்வதெனில் இளம்வயதில் நானும் ஒரு பொதுவுடமைக் கட்சியின் அனுதாபியாக, திராவிட கொள்கைகளில் பிடிப்புள்ளவனாக இருந்திருக்கிறேன், அதுகூட சரியான வார்த்தை அல்ல. ஏனெனில் எனது அந்த வயதில் அரசியல் சார்பென்பது எனது தகப்பனாருக்கு எதிரான மன நிலையில் உருவானது, பெரியார் அல்லது கார்ல் மார்க்ஸ் மீதுள்ள பிடிப்பினால் உருவானதல்ல. எனது தகப்பனாருக்கு எதெல்லாம் பிடித்ததோ அதெல்லாம் எனக்கு பிடிக்காதது, உணவு உட்பட. அப்படியொரு மனநிலையில் இருந்தேன். கிராமத்தில் நாடகம் எழுதி நடிப்பது, பாலம் என்ற இயக்கம்,  இதே மன நிலையில்தான் இளங்கலைப் படிப்பை சென்னையில் இராயபுரத்தில் தங்கித் தொடர்ந்தேன் ( துறைமுகத் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்திருந்த பகுதி) சர் தியாகராயக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபொழுது பீடி சுற்றும் தொழிலாளர்கள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டு, தீக்கதிர் பத்திரிகையை விரும்பி வாசித்ததுண்டு, ஆனாலும் என்னை உறுப்பினராக வேண்டுமென்று படிவத்தை நீட்டிய பொழுது மறுத்தேன். அதே நேரத்தில் பழைய காங்கிரசு நடத்தும் கூட்டங்களிலும் கலந்துகொண்டதுண்டு. சோ நடத்திய துக்ளக் இதழை விரும்பிப் படிப்பேன். கட்சிபேதமின்றி அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுக்கிறவர்கள் பக்கம் இருப்பதை இப்போதும் உணர்கிறேன். ஆட்சியில் இருக்கும் கட்சிகள் பிடிக்காமல் போய்விடுகின்றன. இதற்கு உளவியல் ரீதியில் ஏதேனும் காரணம் இருக்குமா எனத் தேடவேண்டும். பொதுவுடமைக் கட்சியில் என்  அனுபவத்தில் உணர்ந்தது, அக்கட்சியின் தொண்டர்கள் பிறரை நம்புவதில்லை, தலைவர்களை தங்கள் நிழலைக்கூட நம்புவதில்லை. பொதுவில் இருதரப்பும் எதார்த்த உலகோடு சம்பந்தப்பட்டவர்களல்ல. ஆனாலும் ஒன்றை உறுதியாக நம்பலாம். அரசியலில் பிறகட்சிகளைக் காட்டிலும் ஒன்றிரண்டு யோக்கியவான்களைப் பெற்றிருக்கிற கட்சியும் அதுவாகத்தான் இருக்க முடியும்.

ஜார்ஜ் சேம்ப்ரின் ‘Quel beau dimanche!’  (ஞாயிற்றுக்கிழமைக்குதான் என்ன அழகு!) என்ற அவரது சுய வரலாறு அல்லது புனைவு தற்செயலாக போலந்து நாட்டில் ‘Solidarnose’ பிறந்த அன்று வெளிவந்தது. அதாவது 1980ம் ஆண்டு ஜனவரிமாதம். ஜார்ஜ் சேம்பரின் வாழ்க்கையை அறிந்தவர்கள் வியப்படைவார்கள். நாஜிகளின் கொலை முகாமில் அடைபட்டிருந்த காலத்தில் நெஞ்சில் ஊறிய துன்ப உணர்வுகளை ஐந்து நாவல்களில் எழுதியிருந்தார். அவை 1963க்கும் 2001க் கும் இடைப்பட்டகாலத்தில் அவை வெளிவந்தன. அவற்றுள் இப்படைப்பை நடுவில் வைக்கலாம். இந்நூலுக்கு முன்பு வந்த le Grand voyage, l’Evanouissement என்ற இரண்டு நாவல்களிலும் தந்து கடந்த காலத்தை எட்டநின்று  அதனுடன் எவ்வித சமரசமுமின்றி விமர்சனம் செய்திருக்கிறார் எனில் பின்னர் எழுதிய இரண்டிலும் ( L’Ecriture ou la Vie, Le mort qu’il fait) தமது எதிர்காலத்தைப் பற்றிய  தீர்க்க தரிசனத்தை எடுத்துரைக்கிறார். ஸ்பெயின் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டதின் விளைவாக இருபதாண்டுகாலம் ஸ்பெயினுக்கும் பிரான்சுக்குமாக தலைமறைவு வாழ்க்கை நடத்தவேண்டியிருந்தது. அவர் வாழ்க்கையை மாற்றியது சொலிஜெட்சினா ( Solijenitsyne) நூலொன்று எனச் சொல்கிறார்கள் “எனது நினைவுகளை பரிசீலிக்கவும், விமர்சன உணர்வுக்குறிய எல்லா உரிமைகளும் மடை திறந்து, என்னைத் தனகெதிராகத் மாற்றும் திறனை தன்னிடம் வளர்த்தெடுத்ததென அவரே பின் நாளில் எழுதுகிறார்.

அவரது முக்கிய படைப்புகள்:

1. Le grand voyage (The Long Voyage) Gallimard, 1963
2. L’Ecriture ou la Vie (Writing or Life) Gallimard, 1994
3. Quel beau dimanche! ( What a beautiful sunday)

————————————————–

உலக எழுத்தாளர் வரிசை -3

 மிலேனா அகுஸ் (Milena Agus)Milena Agus

ஆறாண்டுகளுக்கு முன்புவரை அதிகம் அறியப்படாத எழுத்தாளர். 2005ல் இத்தாலியில் அவருடைய முதல் நாவல் வந்தபோது பதிப்பித்து வருகிற எல்லா நாவல்களையுமே வாசிப்பது என்றிருக்கிற வாசகர்கள் மட்டுமே மிலேனாவை அறிந்து வைத்திருந்தார்கள். நன்கு புகழ்பெற, தமது இரண்டாவது நாவல்வரை அவர் காத்திருக்க வேண்டியிருந்தது, அந்த இரண்டாவது நாவல் Mal de Pierres(பிரெஞ்சு மொழி பெயர்ப்பில்). இநாவல் வெளிவந்ததும் மடமடவென்று அவரது புகழ் இத்தாலிக்குள்ளும் வெளியிலும் உயர்ந்தது, இன்றது தொடர்கதை ஆகியிருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக இத்தாலிய இலக்கிய உலகில் மந்திரம்போல உச்சரிக்கப்படுகிற ஒரு பெயர். நடுநிலைப்பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றும் 52 வயதான இப்பெண்மணி இதுவரை ஐந்து நாவல்களை மட்டுமே எழுதி யிருக்கிறார். சர்தீனியா மத்தியதரை கடலிலுள்ள சிறு தீவு, இத்தாலியின் ஆட்சிக்குட்பட்ட பகுதி. பூகோள அமைப்பில் மட்டுமல்ல இலக்கிய வரைபடத்திலும் சர்தீனியா தனக்கென எல்லைகளை வடிவமைத்துக்கொண்டு சமூக அமைப்பு, மொழி, பண்பாடு,  உணர்வுகளை வெளிப்படுத்துவது இன்றுவரை தொடர்கிறது என்பதற்கு, இப்பெண் எழுத்தாளர் ஓர் உதாரணம். இத்தாலிய படைப்பிலக்கியத்தில் சர்தீனிய எழுத்தாளர்களின் பங்களிப்பும் தாக்கமும் நிறையவே உண்டு என்கிறார்கள். 1926ம் ஆண்டு நோபெல் பரிசுபெற்ற Grazia Deledda, Salvatore satta ( இவருடைய  The day of Judgment  முக்கியமானதொரு நாவல்) என பலர் இப்பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

எண்பதுகளில் சர்தீனியத் தீவை சேர்ந்த பல எழுத்தாளர்கள் இத்தாலிய மொழியில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தினார்கள்.  Sergio Atzeni, Mercello Fois, Salavatore Mannuzu  என நீளும் தன்மையது அப்பட்டியல். மிலேனாவும் இப் பலமான இனவரலாறு, நிலக்கோட்பாடென வகுத்துக்கொண்டு செயல்பட்ட படைப்புலகைச் சேர்ந்தவர்தான். இத்தாலிய ஆதிக்கத்தின்கீழ் கட்டுண்டு கிடப்பதாக உணர்ந்த இவ்வெழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளில் அச்சுதந்திரத்தின் தேவையை உணர்ந்திருக்கவேண்டும், அவர்கள் எழுத்துகளில் அது முழுவதுமாக வெளிப்பட்டது. முழுக்க முழுக்க சர்தீனிய அடையாளம் சார்ந்து செயல்பட்ட இவ்வெழுத்தாளர்கள் தங்கள் சொந்த மொழியான சார்துமொழியை உரையாடலில் கலந்து எழுதுவதை வழக்கமாகக் கொண்டவர்கள். மிலேனா எழுத்துக்களிலும் சர்தீனிய தேசியம் சுட்டெரிக்கிறது(அந்நியர்களுக்கு?). ஆனால் அதே வேளை பிற சர்தீனிய எழுத்தாளர்களைப்போல  (தங்களை அடையாளப்படுத்த படைப்பில்  அவர்கள் அடிக்கடித் திகட்டும் அளவிற்கு வட்டார சொற்களையும், உரையாடலையும் கலப்பதுண்டாம்)  வட்டார மொழியை அதிகம் கையாளுவதில்லையாம், குறைவென்கிறார்கள்.

ஸ்பானீஷ் எழுத்தாளர்களின் படைப்புலகம் வேறு, ஒருவித மயக்கத்தில் கதை சொல்லல் நிகழும், கதைமாந்தர்கள் பனிமூட்டத்திற்கிடையில் ஊர்ந்துகொண்டிருப்பார்கள், ஒரு வித பைத்தியக்கார உலகம். இத்தாலியர்கள் எதார்த்தத்தை விறுவிறுப்பாகச் சொல்ல தெரிந்தவர்கள்.  மிலேனாவின் கதை சொல்லலும் அதற்கு விதிவிலக்கல்ல. 2005 இவர் முதல் நாவல் Quand le requin dort ( சுராமீன் உறங்கும் வேளை) வெளிவந்ததைத் தொடர்ந்து விமர்சனங்களும் வந்தன. விமர்சகர்கள் ஒருமுகமாகப் பாராட்டி இருந்தனர். இருந்தபோதும் பெரிய வெற்றியென்று இல்லாதது அப்போதைய குறை. முதல் நூலைப் பதிப்பித்தவர்களும் இத்தாலியில் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் இல்லையாம். அந்தக் குறையை அடுத்துவந்த Mal de Pierres தீர்த்திருக்கிறது.  இதற்குங்கூட ஆரம்பத்தில் சிவப்புக் கம்பளம் ஏதுமில்லை. குலம் கோத்திரம் பார்க்காமல் எழுதப்படுகிற விமர்சனங்களால் பின்னர் அடையாளம் கிடைத்திருக்கிறது, பிறகு அடுத்தடுத்து மூன்று நாவல்கள், ” Battement d’ailes, la Comtesse de Ricotta இறுதியாக Sttospra. இம்மூன்று நாவல்களுமே ‘Best sellers’  வகைமைச் சார்ந்தவை.

Mal de Pierres நாவலில், பேர்த்தி தனது பாட்டியின் கதையை சொல்கிறாள். இரண்டாம் உலகப் போர் சூழலில், காதலின்றி, திருமணம் சம்பிரதாயமாக நிறைவேறுகிறது. கடனேயென்று மணம் செய்துகொள்கிறாள். திருமண பந்தம்,  வாழும் சமூகத்திற்காக உருவாகிறது. சர்தீனிய சமூகத்தின் சராசரி ஆண்வர்கத்தின் பிரதிநிதி கணவன். புகைபிடிக்கிறான், பெண்களைத் தேடிபோகிறான். மனைவியும் பரத்தைபோல நடந்துகொள்ளவேண்டுமென எதிர்பார்ககிறான், அவள் மறுப்பதில்லை. தினசரி வாழ்வாதாரங்கள் நெருக்கடியைச் சந்திக்கிறபோது, அவனுடைய விட்டேத்தியான வாழ்க்கையில் ஒழுங்கை வற்புறுத்துகிறாள். எல்லாம் இருந்தும் பல ஆண்டுகளாக அவள் மனம் தேடிஅலையும் காதல் மாத்திரம் அவளுக்கு வாய்க்காமல் கண் பொத்தி விளையாடுகிறது. மூத்திரப்பையிலுள்ள கற்களுக்காக நிவாரணம் தேடிபோன இடத்தில் அக்கற்களே அவள் வாழ்க்கையின் ஔவடதமாக உருமாற்றிகொண்டு அவளுக்கு உதவ வருகின்றன. அவள் தொட்டதெல்லாம், அவள் வேண்டியதெல்லாம் கிடைக்கிறது.  மாத்தா ஹரி நாவலை இதனுடைய தாக்கத்தில்தான் எழுதினேன்.

—————————————–

உலக எழுத்தாளர் வரிசை -2

:லிடியா ஜோர்ஜ் (Lidia Jorge)

téléchargementஇவர் போர்த்துகல் நாட்டின் முக்கிய படைப்பாளி. உலகின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், சிறுவர் இலக்கியம், நாடகம் எனதொடர்ந்து நவீன இலக்கியத்தின் கீழ் இயங்கி வருபவர். பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள், நான்கு சிறுகதை தொகுப்புகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் இலக்கியம் என அவர் படைப்புகளை வகைப்படுத்தலாம். போர்த்துகல் நாட்டின் தென்பகுதியில் 1946ம் ஆண்டு பொலிக்கிமெ (Boliquime) என்ற இடத்தில் பிறந்தவர். லிஸ்பன் பல்கலை கழகத்தில் நவீன இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். ஆரம்ப நாட்களில் போர்த்துகல் நாட்டின் காலனி நாடுகளில் வசிக்க நேர்ந்திருக்கிறது. காலனி நாடுகள் இல்லையென்றான பிறகு லிஸ்பன் திரும்பியவர், பல்கலைக் கழகத்தில் சிலகாலம் ஆசிரியப் பணியில் இருந்திருக்கிறார், பின்னர் அதிலிருந்து விடுபட்டு தற்போது தமது நேரம் முழுவதையும் எழுத்துப் பணிக்கென ஒதுக்கிக் கொண்டு செயல்படுகிறார். விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற போதிலும், வீட்டில் ஒரு பெட்டி நிறைய நல்ல புத்தகங்கள் இருந்ததாம், அவற்றைப் பால்ய வயதில் வாசித்துப் பழகியாதாலேயே தமக்கு இலக்கியத்தில் ஆர்வம் பிறந்ததென பின்னாளில் செவ்வி ஒன்றில் தெரிவித்திருந்தார். அவருடைய எழுத்தார்வத்திற்கு தங்கள் நாட்டின் பிரபல எழுத்தாளரான Fernando Antonio Nogueira Pessoa காரணம் என்கிறார். எனினும் லிடியா ஜோர்ஜுவின் படைப்புகளை முழுவதுமாக வாசித்தவர்கள், ஆழமாக அவரது படைப்பு வெளியை உள்வாங்கிக்கொண்டவர்கள் பெஸ்ஸொவிடமிருந்து வெகுதூரம் விலகிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். லிடியா ஜோர்ஜ் படைப்புகள், தன்னை சுற்றியுள்ள சமூக பிர்ச்சினைகளில் பெரிதும் அக்கறை கொண்டிருப்பதை சுட்டுகிறார்கள். நவீன உலகின் கட்டுப்பாடற்ற சுதந்திரம், அதன் பலவீனங்கள், வன்முறை தீர்வுகள், அவ நம்பிக்கைகள், ஊழல்கள் என்று அவருக்கு எழுத நிறையவே உள்ளன என்பது வெளிப்படை. மேற்கத்திய நாடுகளில் பல பரிசுகளை வென்றுள்ள லிடியா தம்மைச்சுற்றியுள்ள உலகமே தமக்கான எழுதுபொருள் என்பதை மறுப்பதில்லை. சமூக பிரச்சினைகளைக் கையாளுவதில் தேர்ந்தவர் என்ற போதிலும் அவரது கதை சொல்லல் தனித்தது என்கிறார் பிரெஞ்சு இலக்கிய இதழ் ஒன்றில் அந்நாட்டின் சக எழுத்தாளர் Maria Gracieta Besse.

அவரது படைப்புகள் குறித்து: (தகவல் உபயம் பிரெஞ்சு இலக்கிய இதழ்)*

1. The Day of Prodigies (1980)
பல நூற்றாண்டுகளாக தனது புறம் அகம் இரண்டிலும் எவ்வித மாற்றாத்திற்கும் உள்ளாத போர்த்துகல் நாட்டின் தென் பகுதி கிராமம் ஒன்றுதான் கதை நாயகன். முன்முடிவுகளும், அவ நம்பிக்கைகளும், சச்சரவும், குருட்டு சடங்களுமாக உறைந்துகிடக்கும் கரம்பு நிலத்திற்குச் சொந்தக்காரர்கள். லிடியா தமது முதல் நூலிலேயே தமது பெண் இனத்திற்கு வக்காலத்து வாங்குகிறார். அவர்களுடைய கவலைகள், சுதந்திரமாக இயங்குவதில் அவர்களுக்குள்ள சங்கடங்கள், ஆண்களின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கவேண்டியக் கட்டாயம், தான் கதை சொல்கிற இந்த நூற்றாண்டிலும் பெண்கள் ஓர் ஆணுடமைச் சமூகத்தின் வாழநேரும் அவலம் குறித்த எழுத்தாளரின் துயரம் இப்படைப்பில் சொல்லப்படுகிறது.

2. The Wind Whistling in the Cranes

பெற்றோர்களுக்கு என்ன நடந்ததென அறியமுடியாத மிலென் என்ற பெண், தனது பாட்டியிடம் வளர்ந்து வருகிறாள். உடனிருந்த பிற உறவினர்கள் விடுமுறையை கழிக்க வெளிநாடொன்றிர்க்கு சென்றிருந்த வேளை பாட்டி திடீரென இறந்துவிடுகிறாள். இளம்பெண்ணான மிலென் அவளை அடக்கம் செய்யவேண்டும். இந்நிலையில் பாட்டியால் ஏற்கனவே னே அவர்களுக்கு சொந்தமான இடத்தில் தங்க அனுமதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த குடும்பமொன்றுதன் பழக்கம் ஏற்படுகிரது. மெல்ல மெல்ல போதைப்பொருளுக்கும் அடிமையாகிப்போகும் பெண்ணின் வாழ்க்கை மேட்டுக் குடியினரின் வாழ்கைப்போக்கில் எவ்வாறு சீரழிகிறது என்பதைத் தெரிவிக்கும் புனைவு.

3. The Night of the Singing Women – 2011

ழிசெலா லிஸ்பன் நகரைச் சேர்ந்த பணக்கார பெண்மணி. கலை நிகழ்ச்சிகள் தயாரிப்பதி ஆர்வம் காட்டுபவள், ஆனால் கண்டிப்பான பேர்வழி. அவளிடம் பயிற்சிபெற்று மேடையேற ஆசைப்படும் பெண்கள் குழுவினருக்கு ஏற்படும் அனுபங்களைக் கொண்டு ஆசிரியர் கதையை நகர்த்துகிறார். குழுவில் இருக்கும் ஒவ்வொருத்திக்கும் என்றாவது ஒரு நாள் தன்னுடைய பாடல் குறைந்தபட்சம் ஒன்றாவது பதிவு செய்யப்படும், விற்பனையாகும், பணமும் புகழும் வந்து சேரும் என்ற கனவு இருக்கிறது. எனவே ழிசெலாவினால் மிக மோசமாக நடத்தப்பட்டாலும் முணுமுணுப்பின்றி பணிந்து போகிறார்கள். முதல் அத்தியாயம், கடுமையான பல மாதப் பயிற்சிக்குப்பிறகு பயிற்சிபெண்களின் கனவு நனவாவதைப்போல பொதுமேடையில் அவர்களின் பாட்டு அரங்கேறுவதற்கான சந்தர்ப்பத்துடன் நாவல் தொடங்குகிறது, கதை சொல்பவள் அப்பெண்களில் ஒருத்தியான சொலான் என்பவள். சொலானுடைய தினசரிகள், அவள் உரையாடல், அவள் பாலுறவு, பயிற்சிபெண்களுக்கும் ழிசெலாவிற்குமான உறவின் ஏற்ற இறக்கங்கள், விரிசல்கள், ஒட்டுதல்கள் என அத்தியாயங்கள் வருகின்றன. இந்நூலுக்கு எழுதிய முன்னுரையில் லிடியா, பாட்டு பாடுகிற பெண்களைப்பற்றிய நாவல் என்றாலும், மக்களைப்பற்றிய நாவல் என்கிறார்.

நன்றி – * Le Magazine Littளூraire ஆகஸ்டு 2013

பி.கு. ஆசிரியரின் விருது மற்றும் பிற நூல்களைப்பற்றிய தகவல்களை ‘விக்கிபீடியாவிலிருந்து’ நீங்கள் பெறலாம்.

____________________________________

உலக எழுத்தாளர் வரிசை -1

மாரியோ வார்கஸ் லோஸா ((Mario vargas Llosa)

mario-vargas-llosa1                                                                                                        உலகின் தற்போதைய முன்னணி எழுத்தாளர்களென ஓர் இருபதுபெயரை குறிப்பிட்டால் அதில் முதல் வரிசையில் நினைவுக்கு வருபவர் பத்திரிகையாளர், கட்டுரையாளர். இலக்கியத்திற்கான நோபெல் பரிசை 2010ம் ஆண்டு பெற்றவர், அவருடைய ஒவ்வொரு நாவலும் வித்தியாசமான கதை சொல்லலுக்கும், உண்மைப் பாத்திரங்களை புனைவுடன் கலந்து எது நிஜம் எது நிழல் என பிரித்துணர முடியாத கதையாடலுக்கும் பெயர் பெற்றவை.

91 இறுதியில் சொந்தமாக ஏதேனும் தொழில்  செய்வதென ஆரம்பித்து வாடகைக்கு ஓர் இடத்தைப் பிடித்து ஓர் சிறிய இந்திய அங்காடியை ஆரம்பித்தேன். எங்கள் கடைக்குப் பின்புறம் Association ‘Amérique Latine என்ற ஓர் அமைப்பு ஒன்றிருந்தது. 95ல் கடையை விரிவாக்க நினைத்து,  அருகிலேயே சொந்தமாக ஓர் இடத்தை வாங்கி மளிகைக் கடையை புதிய இடத்திலும், பழைய இடத்தில் இந்தியக் கைவினைப்பொருட்கள், படக்கொப்பிகள், அகர்பத்திகள் என விற்பனையை நடத்தினோம். ஆனால் அக்கடை இலாபகரமாக இயங்காததால் மூட நினைத்து வெளியேற நினைத்தபோது. அமெரிக்க லத்தீனியர் சங்கம் தங்களுக்கு வேண்டுமெனக் கேட்டது. அவர்கள் அங்கே ஓர் நூலகமொன்றைத் திறக்கபோவதாகக் கேட்டதும், இடத்துக்குச் சொந்தக்காரர் எனது நெருங்கிய நண்பர் என்பதால் அவரிடம் அதைக்கூறி ஏற்பாடு செய்தேன். ஒரு முறை நூலகத்தில் நுழைந்து பார்த்தேன். நூல்கள் மொத்தமும் ஸ்பானிய மொழியில் இருந்தன. நூலகப்பொறுப்பாளரிடம் கேட்டேன். எங்கள் சங்க உறுப்பினர்களுக்கான நூலகம், வேறு எந்த மொழியில் இருக்குமென எதிர்பார்த்தீர்கள்? என்று அதற்கான நியாயத்தை விளக்கினார். பிரேசில் நீங்கலாக தென் அமெரிக்க நாடுகள் அனைத்தும் ஸ்பானிய மொழியை அரசாங்க மொழியாக ஏற்றுக்கொண்டவை. அதனால்தானோ என்னவோ பிரெஞ்சு மொழிக்கு அடுத்து ஐரோப்பிய மொழிகளில் ஸ்பானிய மொழி இலக்கியங்கள் கவனம் பெற்றவையாக இருக்கின்றன. முழுத்தேங்காயைப் புரட்டுவதுபோல ஸ்பானிய மொழியில் இருந்த அப்புத்தகங்களை தடவி பார்த்துவிட்டு வந்துவிட்டேன்.

நூலகத்திற்குள் 2002ல் ஒரு காப்பி பார் திறந்தார்கள், போகும் சந்தர்ப்பம் வாய்த்தது, போனேன். என்னை வியப்பில் ஆழ்த்துவதுபோல பிரெஞ்சில் சில புத்தகங்கள் இருந்தன. சங்கத்தின் உறுப்பினர்களைத் தவிர மற்றவர்களுக்குப் புத்தகங்கள் தருவதில்லையென நூலகப் பொறுப்பாளர், பொறுப்பாக பதிலளித்தார். ஆனால் இம்முறை அங்கிருந்த சங்கத்தின் தலைவர் தமது பொறுப்பில், இதை வாசித்துப்பாருங்கள் நன்றாக இருக்குமெனக் கூறி “La ville et les Chiens” (The Time of the Hero) நூலை இரவலாகத் தந்தார். அப்போதெல்லாம் நான் அறிந்த ஒரே ஸ்பானிஷ் எழுத்தாளர், கப்ரியெல் கார்சியா மட்டுமே. ஆனால் கார்சியாவைக்காட்டிலும் மரியோ வார்கஸை,  இந்நூலை வாசித்த நாள் முதல் நேசிக்க ஆரம்பித்தேன். அவரது கதைசொல்லும் பாணி எனக்குப் பிடித்திருந்தது. அதுவும் தவிர தொடக்கத்தில் பிடெல் கஸ்ட்ரோவை ஆதரித்து பின்னர் அலுப்புற்ற ஆசாமி. கம்யூனிஸம் ஏட்டு சுரக்காய் என புரிந்துகொண்ட புத்தி ஜீவி என்பதும் ஒரு காரணம்.

மாரியோ வார்கஸ் லோஸா நூல்களில் தவறாமல் வாசிக்க வேண்டியவை: Captain Pantoja and the Special Service, Aunt Julia and the Scriptwriter, The Way to Paradise. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் வாசிக்க நேர்ந்த Le Rêve du Celteம் ஓர் முக்கிய மான நாவல். தமிழில் மொழிபெயர்க்கப் படவேண்டிய நாவலுங்கூட. இந்நாவலில் ஐரோப்பாவெங்கும் பரவிக்கிடக்கும் கெல்ட்டியர் இனப்பிரிவைச்சேர்ந்த புகழ்பெற்ற ரோஜெர் காஸ்மெண்ட்தான் (Roger Cassement – 1864-1916) கதை நாயகன். முரண்பாடான ஆசாமி. அயர்லாந்து பூர்வீகம். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் பணியாற்றியபோதிலும் ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்கள் காங்கோவின் வளத்தை உறிஞ்சியதோடல்லாமல் அங்கே உள்ளூர் மக்களுக்கு இழைத்தக் கொடுமையை   வெளிப்படையாக விமரிசிக்கிறார், ஓர் அறிக்கையாகத் தயாரித்து, பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு அதனை அனுப்பியும் வைக்கிறார். அதுவே பின்னர்அவரை அயர்லாந்தில் பிரிட்டிஷ் நிர்வாகத்தை எதிர்த்து போராடவும் காரணமாக அமைந்தது. அடிப்படையில் அவரொரு பிராட்டஸ்டண்ட், எனினும் பிராட்டஸ்டண்ட்கள் கையில் அயர்லாந்து போவதை விரும்பவில்லை. உள்ளூர் மக்களை ஆளும் நிர்வாகத்திற்கு எதிராகத் திரட்டினார், முதல் உலகப்போரின்போது ஜெர்மானியருடன் இணைந்துகொள்ளவும் தயங்கவில்லை. கடைசியில் பிரிட்டிஷ் அரசு தேசத்துரோகி எனக் குற்றம் சாட்டி அவரைக் கொலை செய்தது. முரண்பாடுகளையே கையாளுவதில் தேர்ந்த மாரியோ வார்கஸ் லோஸாவுக்கு, ரேஜெர் காஸ்மெண்ட் போன்ற முரண்பாடான ஆசாமிகள் தமது கதையாடலுக்குப் பொருத்தமான ஆசாமியாகத் தெரிந்திருக்கவேண்டும்.

அவரது சுயகதை எனச்சொல்லப்படும் Aunt Julia and the Scriptwriter அவருடைய நாவல்களிலேயே மிகசிறந்ததென்கிறார்கள். எனக்கென்னவோ இங்கே குறிப்பிட்ட எந்தப்படைப்பும் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. சிறிது கவனத்துடன் வாசிக்கவேண்டும், ஒவ்வொரு சொல்லும் வாக்கியமும் முக்கியம். ஒரு வகையில் இரட்டைப் பிறவிகளான குழந்தைகள் ஒன்றையொன்று துரத்திவிவிளையாடுவதைப்போல உண்மையும் புனைவும் ஒன்றை மற்றொன்று துரத்திசெல்கின்றன. சந்தோஷத் தவிப்புடன் அவர்களை மடக்கிப் பிடித்து கட்டி அணைத்து கிளர்ச்சியுறும் தாயின் நிலையில் நாம் – வாசகர்கள். பதினெட்டு வயது, முதிராத இளைஞன், விதவை ஒருத்தியிடம் காதல் கொள்கிறான். இதிலென்ன தப்பு என்பீர்கள், பிரச்சினை அதுவல்ல, அவள் வயது. அவள் பெண்ணல்ல பெண்மணி. 32 வயது. 14 வருடங்கள் மூத்தவள். அதுவும் தவிர அவனுக்கு சித்தி முறை. நெருக்கடியான பதின் பருவத்தைக் கடக்க மட்டுமல்ல, சுற்றியுள்ள சமுதாயத்தை எதிர்கொள்ளவும் அவனைத் தயார்படுத்துவதும் ஜூலியாதான். புனைவை மையமாகக்கொண்ட அத்தியாயங்களில் (‘வானொலித் தொடராக ஒலிப்பரப்பப்படுகின்றன) ஒவ்வொரு பாத்திரமும் விக்கிரமாதித்தன் சிம்மாசனப் பொம்மைகள்போல,  தனித்தனியாக கதை சொல்கின்றன, போஜராஜன்போல நமக்கும் விடைதேடவேண்டிய கேள்விகள், ஐயுறு வினாக்கள் அதிலிருக்கின்றன.

பொதுவாகவே மரியோ வார்கஸ் கதைசொல்லலில் ஒரு வேகமுண்டு, ஒரு வாக்கியத்தை முடிக்கும் முன்பாக, வரும் வாக்கியத்தின் முதற் சொல் உங்கள் மனதிற்குள் சரிந்திருக்கும். இறுதிப்பக்கம்வரை பிரமை பிடித்தவர்கள்போல ஓடுகிறோம். சமுதாயப் பெருவெளியின் மேடு பள்ளங்கள் கால்களில் அல்ல நம் கண்களில் இடறுகின்றன. சமகால வாழ்வியல் அவரது வார்த்தை எள்ளலில் கூனிக்குறுகுகிறது, வார்த்தை விளையாட்டில் அவர் நிகழ்த்தும் சித்து, வியப்பூட்டுகிறது. இன்றைய உலக இலக்கியப்போக்கை அறியாதவர்கள் கூச்சல் இரைச்சலென பேர்சூட்டலாம். ஆனால் ஏற்கனவே கூறியதுபோல அவர் எழுத்தில் உள்ள எள்ளலும், நீர்ப்பரவல்போன்ற நடையும், வார்த்தைச் சித்தும் சாதாரண மனிதர்களையும் நிகழ்வுகளையும் அசாதாரண மனிதர்களாக, அபூர்வ நிகழ்வாக மாற்றிக்காட்டும் ரஸவாதக் கலை வேறு படைப்புகளில் வாசிக்கக் கிடைக்காதது.

ரோஜெர் காஸ்மெண்ட் பட்டுமல்ல, Pantaléon et les visiteuses (Captain Pantoja and the Special Service) நாவலில் கதை நாயகனான  பாந்தலெயோன் பாந்த்தொஜா ஆகட்டும்,  La tente Julia et le scribouillard (Aunt Julia and the Scriptwriter)ல் வருகிற லெ பேடரோ  கமாச்சோ ஆகட்டும் மாரியோ வார்கஸ் லோஸாவின் கதைநாயகர்கள் முக்காலே மூணுவீசம்  முரண்பாடுடைய மனிதர்கள்தான். இங்கே முரண்பாடு எவரிடமில்லை. எல்லோரும் ஏதோஒருவிதத்தில் முரண்பாடுகளுக்குச் சொந்தக்காரர்கள்தான். கொந்தளிக்கும் கடலும், வெடித்து சிதறும் எரிமலையும் நேற்றுவரை அமைதியாக இருந்தவைதான். கொரில்லா யுத்தமும் பயங்கரவாதமும் எவரிடம் பிறந்தது, ஏன் பிறந்தது? சந்தர்ப்பமும் சூழலும் வேறாகிறபோது காந்திமகன் கூட சந்தியில் நிற்க வேண்டியிருக்கிறது. எத்தனைதான் கற்றாலும், ஒழுக்கத்திற்கு உதாரணமாக இருக்கப்போகிறேன் என்றாலும் பல நேரங்களில் உணர்ச்சி அறிவை சுலபமாய் வென்றுவிடுகிறது, அன்பாய் இருக்கிற மனவியிடம் கையோங்கிவிட்டு அவள் கைவருடலில் கலங்கவேண்டியிருக்கிறது. மனிதர்கள் அனைவருமே மகாத்மாக்கள் இல்லை. நாம் பெரிதும் நம்பிக்கொண்டிருக்கிற மகாதமாக்களிடமும் ஓர் பத்துசதவீதம் முரண்கள் இருக்கலாம்.  இதுதான் எதார்த்தம், இதுதான் இயற்கை.

————————————-