- நாகரத்தினம் கிருஷ்ணா
மணி மலைப் பணைத்தோள் மாநில மடந்தை
அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போல,
செல்புனல் உழந்த சேய்வரல் கான்யாற்று.
(சிறுபாணாற்றுப்படை)
இயற்கை கூட இயங்கினால்தான் கவனம் பெறுகிறது, சீற்றம்கொண்டால்தான் மதிக்கப்படுகிறது, மனிதர், விலங்கு, பறவையென சொல்லப்படுகிற உயிரினங்களன்றி, இயற்கை உட்பட அனைத்துமே அசைதல் வேண்டும், இயங்குதல் வேண்டும், அவ்வியக்கம் எந்த வடிவிலும் இருக்கலாம் :தவழுதல், தழுவுதல் ; நடத்தல் ஓடுதல் ; பேசுதல், பாடுதல் அனைத்துமே இருப்பியல் வெளிப்பாடுகள். ஆனால் இவை அவரது சொந்த மன விருப்பத்தின் பேரில் சுதந்திரமாக நடைபெறவேண்டும்.
உறங்கிக் கொண்டிருந்த மனிதர் எழுந்திருக்கவில்லை. மனிதரின் வயதும், உடலைப் பாதித்த அல்லது பாதித்துக் கொண்டிருக்கிற நோயும் உடன் வாழ்பவர்களைச் சந்தேகிகிக்க வைக்கிறது, மருத்துவரை அழைக்கிறார்கள், வருகிறார், சோதித்துப் பார்க்கிறார், உதட்டைப் பிதுக்கி முடிந்துவிட்டதென்கிறார். இம்மனித உயிரியின் இருப்பைத் தீர்மானிக்க மருத்துவருக்கு, உடலிலுள்ள இதயத்தின் இயக்கம் ஆதாரமெனில், அம்மனிதரோடு வாழ்கிற அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு, அவர் இருப்பியல் குறித்து எழுந்த கேள்விக்கும் மருத்துவரை அழைத்தமைக்கும், « வழக்கமாக ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து வீட்டில் எதையாவது உருட்டிக்கொண்டிருக்கிற மனுசன், இன்று ஏன் ஏழுமணிவரை தூங்குகிறார் »என்கிற ஐயம் காரணமாகிறது. ஆக மனிதர் இருத்தல் என்பது இதயம் இயங்குவதை மட்டும் பொருத்தது அல்ல, அவ்வுடல் எழுந்து நடமாட வேண்டும், பேசவேண்டும், புலன்களை உபயோகிக்கவேண்டும், வயதோடு இணைந்து, தம்முடைய தேவைகளை மட்டுமின்றி சுற்றம், நட்பு, வீதி, வெளி, அலுவலகம், சமூகம் சார்ந்த பலதேவைகளை நிறைவேற்றவும் வேண்டும், இவை நடந்தால் சம்பந்தப்பட்ட மனிதர் பற்றிய இருப்பு குறித்து அவரைச் சார்ந்த, அவரை காண்கிற, பார்க்கிற அவரோடு உறவாடுகிற மனிதர்களுக்கு ஐயம் எழுவதில்லை.
« இருத்தல் » என்ற வினைச்சொல்லை தமிழில் அஃரிணையாக இருப்பின் இருக்கிறது, உயர்திணையாக இருப்பின்,இருக்கிறான், இருக்கிறாள், இருக்கிறார் என்றெழுதுகிறோம். இதையே சற்றுத் தெளிவாக விளங்கிக்கொள்ள யார் எப்படி இருக்கிறார் ? அல்லது எது இப்படி இருக்கிறது என்ற கேள்விக்குக் கிடைக்கும் பதிலில் மனிதர் அல்லது விலங்கு குறித்த கூடுதல் புரிதல் கிடைக்கிறது. அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையில் சில இருப்பியல் பண்புகள் இயற்கையாக அமைகின்றன, இவற்றை உயிர்களின் பொதுவான அம்சங்களாக காண்கிறோம் : கொம்புள்ளவை, நான்கு கால்கள், நீர்வாழ்வன, ஊர்வன, பறப்பன, இலை தழைகளை தின்று வயிறு வளர்க்கும், பிற உயிர்களைக் கொன்று பசியாறும் என விலங்குகளைப் பகுப்பதும் ; கறுப்பின மக்கள், வெள்ளையர்கள் முதலான மனிதர்க்குரிய பாகுபாடும் இயற்கை அளித்தவை, இயல்பானவை, பிறப்பில் பெற்றவை. இவற்றைத் தேர்வு செய்யும் சுதந்திரம் விலங்குக்கோ மனிதருக்கோ இல்லை. எனக்கு வால் வேண்டாம் என ஒரு குரங்கோ, எனது பெற்றோர்கள் போல இருக்கமாட்டேன் என்று ஒரு குழந்தையோ தனதிருத்தலை முன்னதாக தீர்மானிக்க இயலாது. மாறாக பிறந்த பின்னர் ஓர் உயிரி தமது இருத்தலை தமதியக்கத்தை எப்படி இருக்கவேண்டும் அல்லது கூடாது ; எதை செய்யவேண்டும் எதைச் செய்யக்கூடாது எனத் தன்னைத்தானே கேட்டுக்கொண்டு கேள்விக்குரிய பதிலின்படி நடக்கலாம்.
இயற்கைக் கூறுகளில் விலங்குகளும் மனிதர்களும் மேம்பட்ட இனம், இருந்தும் விலங்குகள்போலன்றி மனித உயிர்கள் அறிவுத் திறனால் தங்கள் இருத்தல்களை மேம்படுத்திக்கொள்ளவும் அல்லது சிறுமைப் படுத்திக்கொள்ள இயலும். இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறியதுபோல ஆறறிவு படைத்த மனிதன் எழுந்து நடமாடி இருத்தலை உறுதி செய்தபோதிலும் அதனை தனது அறிவு வழிநடத்த செய்கிறான் என்பது பொதுவான நம்பிக்கை.
« தம்பி கடைக்குப் போய் ஒரு சோடா வாங்கி வா ! எனப் பிறப்பிக்கப்படும் கட்டளைக்கு, அடுத்தகணம் கையை நீட்டி தாயோ தந்தையோஅல்லது அவனுக்கு வேண்டிய யாரோ ஒருவர் கொடுத்த சில்லறையைப் பெற்றுக்கொண்டு ஒரு சிறுவன் வீதியில் இறங்குவதில்லை, சில நொடிகள் யோசிக்கிறான், ஆணையிடுகிறவர் யார் ? இந்த ஆணையை நிறைவேற்றுவதால் கிடைக்கக்கூடிய பலன் என்ன, நிறைவேற்றாமற்போனால் ஏற்படக்கூடிய இழப்புகளென்ன என்பதை யோசித்து அதன் அடிப்படையில் அக்கட்டளைக்கு இணங்கவோ மறுக்கவோ செய்கிறான். கட்டளை வேண்டியவரிடமிருந்து என்கிறபோதும் தொடர்ந்து கீழ்ப்படிந்து நடந்தவன் சில நாட்களில் அல்லது சிற்சில சமயங்களில் « என்னால் முடியாது» என மறுக்கவும் கூடும், காரணம் அவன் விலங்கல்ல மனிதப் பிறவி. சிறு கொம்பை தூர எறிந்து, எஜமான கட்டளையிடட மறுகணம் தான் பழக்கப்பட்டிருப்பதுபோல ஓடிச் சென்று கவ்விவருவதற்கு நாயல்ல. கொம்பைத் தூர எறிந்தால், கவ்விவர பழகிய விலங்கிற்கு யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. சில நேரங்களில் எஜமான் அல்லாது, எஜமான் வீட்டைக் களவாட வந்திருக்கும் திருடன் ஒன்றை தூர எறிந்தாலும் கவ்வி வர ஓடித் தனது கடமையை மறக்கின்ற இருத்தலாகவும் அது மாறும். « காளை ஒரு விலங்கு », « காளை கொம்புடன் இருக்கிறது » என்பவை விலங்கொன்றின் இருத்தல் பற்றிய செய்திகள். அதேவேளை இந்த இருப்பியல் செயல்படும் சுதந்திரத்தின் அளவீடென்ண என்பது கேள்வி. தன்னைச் சீண்டினால் முட்டவேண்டும், அதட்டினால் அடங்கவேண்டும் . புண்ணாக்கும், தவிடும், புல்லும் கொடுத்தவர் இவ்விலங்குக்கு வேண்டியவர், பிற மனிதர்கள் அந்நியர்கள் என்கிற புலன்கள் தரும் இச்சிறு புரிதலே அதன் வாழ்க்கைக்குப் போதும்
மனிதர் தேர்வு அல்லது மனிதர் இருப்பியல் புலன் சார்ந்தது மட்டுமல்ல, அறிவையும் சார்ந்தது. சுதந்திரமாக செயல்படவேண்டும். Libre arbitre என்றொரு சொல் பிரெஞ்சு மொழியிலுண்டு, « Liberum Arbitrum » என்ற லத்தீன் மொழிச்சொல் அதன் வேர் என்கிறார்கள். அதன் பொருள் விருப்பம்போல செயல்படுவது, தங்குதடையற்ற சுதந்திரத்தை கையாள்வது. விலங்கின் இருப்பியல் சுதந்திரம் சிந்தித்து வினையாற்றுவதல்ல, மாறாக மனிதர் இருப்பியல் சிந்தித்து வினைபுரிவது. « ஆம் அல்லது இல்லை », « முடியும் அல்லது முடியாது », « நல்லது அல்லது கெட்டது » இரண்டில் ஒன்றைமட்டுமே தேர்வு செய்யவேண்டும் என்கிற சூழலில், சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல நின்று கோடாமையுடன் செயல்பட மனிதர் இருப்பியலுக்கு உள்ள சுதந்திரமும் அடுத்து அச்சுதந்திரத்தைக் கையாளும் விருப்பத்தின் பலத்தையும் இவ்வார்த்தைகள் குறிக்கின்றன. “மனிதன் செய்யும் பாவத்திற்கு மனிதன் மட்டுமே பொறுப்பு, கடவுள் பொறுப்பல்ல” , என்று ஐந்தாம் நூற்றாண்டைச்சேர்ந்த கிறித்துவ சமய இறையியலாளர், மற்றும் தத்துவவாதியான ஹிப்போ அகஸ்ட்டீன்( Augustine of Hippo) தெரிவிக்கிறார். தமது சமயத்தில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்த அம்மனிதருக்கு, கடவுள் பல உயிர்களைப் படைத்திருந்த போதிலும், அவருடைய படைப்பில் மனிதன் மட்டுமே அவருடைய நகல், எனவே அவன் நன்மைக்கானவன், அவன் நல்லவற்றைச் செய்கிறான் எனில் அல்லது தேர்வுசெய்தால் அதற்கு கடவுள் காரணம். அவனே தீமையை தேர்வுசெய்கிறபோது கடவுள் காரணமில்லை என்கிறார், இந்து சமயம் « ஒரு மனிதனின் முன் ஜென்ம ‘கர்மா’ அல்லது ‘வினைப்பயன் அவனுடைய தற்போதைய வாழ்க்கைப் பலன் » என்று தெரிவித்து மனிதர் இருத்தலை முடக்க முனைவதும் வேடிக்கை. இவை போன்ற கருத்துகள் சமயத்தை கேள்வி கேட்காமல் பின்பற்றிய காலங்களில் எடுபட்டிருக்கும், இன்றிவை பொருளற்றவை கேலிக்குரியவை. தீமைக்குரிய தேர்வு மட்டுமல்ல நன்மைக்குரிய தேர்வுக்கும் மனிதன் மட்டுமே பொறுப்பு, அத்தேர்வின் பலனை அடைய மறுபிறவிவரை காத்திராதே, உன்னுடைய நேற்றைய மற்றும் இன்றைய தேர்வின் பலனை நாளை அல்லது எதிர்காலத்தில் இப்பிறவியிலேயே காண்பாய் என்பதுதான் வாழ்வியல் சித்தாந்தம் தரும் விளக்கம். “தீதும் நன்றும் பிறர் தர வாரா ” என்று கணியன் பூங்குன்றனார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்த பேருண்மை.
ஒரு மனிதனின் விருப்பம்போல ஒன்றை தேர்வு செய்யும் சுதந்திரம் வேண்டும், ஆனால் அது இருக்கிறதா இருந்தால் அதன் அளவீடு என்ன ? என்பதுதான் இன்று நம்மிடமுள்ள கேள்வி. அதாவது பாரபட்சமின்றி கோடாமையோடு ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு இருக்கிறதா ?
மனிதனின் முன்னால் சரி தப்பு இரண்டும் இருக்கின்றன, இரண்டிலொன்றை தேர்வு செய்யும் சுதந்திரம் இல்லாமலில்லை, இருக்கிறது, இருந்தும் சரியை நிராகரித்து விட்டு, தப்பைத் தேர்வு செய்கிறான். ஏன் ? « எனக்கு மாத வருமானம் போதவில்லை, ஐந்து பிள்ளைகள், அவற்றைக் கரையேற்றவேண்டும் எனவே இலஞ்சம் வாங்கிறேன் » என்பதில் ஆரம்பித்து, « தேர்தலில் ஓட்டுக்கு ஐந்தாயிரம் கொடுக்கவேண்டியிருக்கிறது, அதை ஊழல் செய்யாமல் எப்படி சம்பாதிக்க முடியுமா ? » என அரசியல் தனது தெரிவை நியாயப்படுத்த, « ஓட்டொன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் என்றாலும் என்னுடைய வீட்டில் மூன்று ஓட்டுகள் சுளையாக பதினைந்தாயிரம் ரூபாய், அது எங்கிருந்து வரும் ? » திருப்பிக்கேட்கிறான், அன்றொரு நாளாவது வீட்டில் பிரியாணி விருந்துக்கு ஆசைப்படும் அப்பாவி வாக்காளன். குறை சொல்ல ஒன்றுமில்லை, எளிய வாழ்க்கைக்குறித்து பேசுகின்ற மனிதர்களே « நான் இதுபோன்ற இடங்களிலெல்லாம் தங்குவதில்லை பெரிய நட்சத்திர ஓட்டல்களில் ரூம் போடுங்கள் » எனச் சொல்வதும் « நான் பகுத்தறிவாதிதான் இருந்தும் என்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது, சக தொழிலாளர்கள் இருக்கிறார்கள் எனவே சாமி சிலை செய்யவேண்டியுள்ளது » என தெரிவித்து, கலைத்திறனை பிழைப்புக்கேற்ற வகையில் குறுக்கிக்கொள்ளும் மனிதர்களுக்கும் ; ஏன் விபச்சாரம் செய்கிறாய், ஏன் திருடினாய், ஏன் கொலைசெய்தாய் ? போன்ற கேள்விகளுக்கு கிடைக்கும் பதில்களும் ஒன்றுதான்.
தெக்கார்த் என்ற சிந்தனையாளர், « நான் சிந்திக்கிறேன் எனவே இருக்கிறேன் » என்றார், அல்பெர் கமுய் « நான் கிளர்ச்சி செய்கிறேன் அதனால் இருக்கிறேன் » என்றார். ஊடகங்களின் பொய்களும், காட்சி ஊடகங்களின் கவர்ச்சியும், அலங்கார மேடைகளின் உரத்த குரல்களும் விளம்பரங்களும் வேடிக்கைகளும் வீடு தேடி வருகிறபோது, நமக்கு யோசிக்க நேரமேது, « இதில் எனக்கென்ன இலாபம் » ? இதை மட்டுமே இன்றைய மனிதர் இருப்பியல் கேட்டு வினைபுரிகிறது. 4 ஆம் நூற்றாண்டின் பிரான்சுநாட்டைச் சேர்ந்த மற்றொரு இறையியலாளர் புரிடன்(Buridan) கழுதை ஒன்றை முன்வைத்து இப்பிரச்சனையை விளக்குவார், அதாவது பசியுடனும் தாகத்துடனும் இருக்கும் அவ்விலங்கு முன்பாக ஒருவாளி தண்ணீரும் மற்றொரு வாளியில் ஓட்ஸும் வைக்கிறார்கள்கள், இரண்டும் சமதூரத்தில் வைக்கபட்டிருக்கின்றன. எப்பொருள் முதலில் கண்ணிற்படுகிறதோ அதைத் தேர்வு செய்துபழக்கப்பட்ட விலங்கு அது. இங்கே இரண்டுமே சமதூரத்தில் இருக்கின்றன, விளைவாக எதைத் தேர்வு செய்வதென்கிற குழப்பத்தில் விலங்கு இறந்துவிடும். மனிதன் சிந்திக்கத் தெரிந்தவன் அவனுக்குப் பசி வயிற்றில் மட்டுமல்ல. அதற்குகந்தவகையில் அறிவைப் பயன்படுத்தி எதைத் தேர்வு செய்யவேண்டும் என்பதில் இன்றையமனிதன் வல்லவன்.
« படித்தவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான் போவான் ஐயோன்னு போவான் » என பிழைக்கத் தெரியாத பாரதி எதையோ எழுதினான், அது நமக்கெதற்கு ? நல்லதோர் வீணையை, சிந்திக்கும் அறிவை நலங்கெட புழுதியில் எறிந்துவிட்டு. விலங்குகள்போல அடிமைகளாக வாழப் பழகிக்கொண்டோம். இப்பிரச்சனையில் விலங்குகள் மேம்பட்டவை, எஜமானர்கள் யாரென்று தெரிந்து அவர்களுக்கு மட்டுமே அடிமைப் படத் தெரிந்தவை, மனிதர்க்கின்று ஆயிரமாயிரம் ஆண்டைகள் அவர்கள் தூணிலும் இருப்பார்கள் துரும்பிலும் இருப்பார்கள், முகம்காட்டும் எஜமானர்களைக் காட்டிலும் முகமற்ற எஜமானர்களிடம் கூடுதலாக இன்றைய மனிதம் விசுவாசத்துடனிருக்க பழகியிருக்கிறது.
நன்றி: மானுடம் ஜூன் 2023
——————————————————————————-