சிறுகதைகள்
ஒற்றைச் சம்பவம் அல்லது நிகழ்வு இரண்டொரு கதைமாந்தர்களைக் கொண்டு சிறுகதைகள் எனப்படும் கதைசொல்லல் முறை இடைக்காலத்தில் ஆரம்பித்துவைக்கப் கபட்டது. இம்முறையில் மேற்குலகில் நாவல்களைபோலவே குற்றம், அறிவியல், நகைச்சுவை எனவகைமைகள் இருக்கின்றன. இன்றும் சிறுகதைகள் எழுதப்படினும் இருபதாம் நூற்றாண்டில் அவற்றுக்கிருந்த செல்வாக்கு இன்றில்லை. கவிதையைப்போலவே பரந்த ஆதரவு இவற்றுக்கும் இன்றில்லையென்றுதான் கூறவேண்டும். சிறுகதைகளில் நானறிந்த பெயர்கள் பல்சாக், எமில் ஸோலா, மொப்பசான், ஆர் எல் ஸ்டீவன்சன், அண்டன் செக்கோவ், டோயில்,சோமெர்செட் மௌஹாம்,காஃப்கா, கல்வினோ, அன்னிசொமோன், எரிக் ஒர்சேனா, பத்ரிக் மொதியானோ, பிட்ஸ்ஸெரால்டு எனப் பெரியதொரு பட்டியல் இருக்கிறது ஏன் எனக்கு வர்ஜீனியா வுல்ஃப் The Searchlight, , இ.எம். ஃபாஸ்ட்டரின் The otherside of the hedge மறக்க கூடியவையா என்ன. தமிழில் புதுமைபித்தன், ஜெயகாந்தன் எனத் இன்றுள்ள பல முக்கிய படைப்பாளரகளை வாசித்துள்ளேன்.
கவிதைகளில் தொடங்கி சிறுகதைகளை முதலில் குமுதம், விகடன், கல்கி, குங்குமம் என்று எழுதிடிருக்கிறேன். ஆறு சிற்கதை தொகுப்புகள் வந்துள்ளன
அன்புள்ள அப்பாவுக்கு
( 2001 ல் குங்குமம் இதழில் வெளிவந்த சிறுகதை)
அவள் கடிதம் எழுதும் அப்பாவின் தேவை வேறு, அக்கரையில் வாழும் அவள் வலியும் தேவையும் வேறு கனவு மெய்ப்படவேண்டும் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதை
பாரீஸ் 10-12-2000
அன்புள்ள அப்பாவுக்கு,
இங்கு நான், உங்கள் மருமகப்பிள்ளை இருவரும் நலம். அதுபோல உங்கள் நலனையும் அம்மா, அண்ணன், அண்ணி, குழந்தை சௌம்யா அனைவரின் நலனையும் அறிய ஆவல். உங்களிடமிருந்து கடிதத்தை எதிர்பார்த்தேன். கடந்த இரண்டுமாதங்களாக பதிலில்லை. இப்போதெல்லாம் முன்புபோல நீங்கள் அடிக்கடி கடிதம் போடுவதில்லை. என்ன கோபம்?
உங்களுக்கு சர்க்கரை குறைந்திருக்கிறதா? இங்கிருந்து அனுப்பிய கருவியில் உங்கள் சர்க்கரை அளவைப் பார்ப்பதுண்டா? அடிக்கடிப் பார்த்து கண்ட்ரோலில் வைத்திருக்கவும். மாத்திரைகளை வேளாவேளைக்குத் தவறாமல் எடுத்துக்கொள்ளவும்.
அவ்வப்போது தலைசுற்றல் வருகிறதென அம்மா சொன்னார்கள், இப்போது பரவாயில்லையா? அவர்களுக்கும் ஒருவேளை சர்க்கரை இருக்குமோ? நான் போன முறை சொன்னது ஞாபகமிருக்கட்டும் அவரையும் குழந்தைவேல் டாக்டரிடம் காண்பித்து கம்ப்ளீட்டாக செக்-அப் செய்யவேண்டும். அண்ணி மறுபடி உண்டாகி இருப்பதாக எழுதியிருந்தீர்கள். சந்தோஷமாக இருந்தது. அதுபற்றியும் விசாரித்ததாகச்சொல்லவும். முன்புபோல ஏமாற்றக்கூடாதென்றும் ஒரு குட்டிப்பையனை பெற்றுத்தரனுமென்றும் அழுத்தம் திருத்தமா அவங்கக்கிட்டே சொல்லுங்கள்.
அண்னன் ஆபீஸ் பிரச்சினைகள் முடிந்ததா? ரூபாய் ஐம்பதினாயிரம் பணம் கட்டினால் கேஷியர் பிரமோஷன் கிடைக்குமென்று எழுதியிருந்தீர்கள். நானும் எனது பக்கத்து அப்பார்ட்மெண்ட்டில் இருக்கிற ஆப்ரிக்க பெண்ணொருத்தியிடம் நாலாயிரம் பிராங்க் கடன் வாங்கி அனுப்பினேன். பிரச்சினை தீர்ந்ததா?
எனக்கு என்ன எழுதறதுன்னு தெரியலை. திரும்பத் திரும்ப இப்படி எழுதறேனேன்னு நினைக்கவேண்டாம். எழுதாமலிருக்கவும் முடியலை. இவரது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. முந்தைய கடிதங்களில் எழுதியிருந்ததுபோலவே இப்போதும் பிரெஞ்சு பெண்ணோடுதான் இருக்கிறார். வீட்டிற்கு ஒழுங்காக வருவதில்லை. திடீரென்று வீட்டு நினைப்பு வந்தவர்போல வருவார், தனியாக அல்ல அவருடைய வெள்ளைக் வெள்ளைக் குதிரையோடு. வீட்டில் நுழைந்தவுடன் ஹாய்யாக சோபாவில் உட்கார்ந்துகொண்டு,”கொமான் சவா? (எப்படி இருக்கிறாய்)”, என அக்குதிரை கனைக்கும். “ஷெரி, எஸ்கெத்தா உய்ன் சிகாரெத் (டியர், சிகரெட் உன்னிடமிருக்குமா?) எனக்கேட்கவும், அவரும் அவள் வாயில் சிகரெட்டை வைத்து பற்ற வைப்பார். மூக்கிலும் வாயிலும் அவள் விடும் புகை! சகிக்காது. அடுத்து கையோடு கொண்டுவரும் பீர் பாட்டிலை ஆளுக்கொன்று திறந்து கொண்டு, விடிய விடிய கும்மாளம் அடிப்பார்கள். எதுவும் கேட்டுவிடக்கூடாது. கேட்டால் தீர்ந்தது. குடித்து முடிக்காத பாட்டில் எனது தலையிலோ தப்பிக்க முடிந்தால் சுவரிலோ மோதிச் சிதறும்.
எப்போதாவது ஒருமுறை வீட்டிற்கு வந்தாலும் சந்தோஷம் இருக்கிறதா? ச சு·பி ! ·பே பா லெ சினேமா! (போதும் ·பில்ம் காட்டாதே) என மாடியில் குடியிருக்கிறவர்கள் எழுந்துவரட்டும் என்பதுபோல கத்துவார். பிறகு விஸ்கி பாட்டிலைத் திறந்துகொண்டு சோபாவில் தொபீரென உட்காருவார். அவள் சிரிப்பாள். என்னை வைத்துக்கொண்டே அவர்கள் நடந்துகொள்ளும் விதம்…. எழுதவே கூசுகிறது.
எனக்கு பயமாக இருக்கிறது. பயம் அவர்கிட்ட இல்லை என்கிட்டதான். நான் படித்த படிப்பு, கற்றுகொண்ட தைரியமெல்லாம் என்னை அநாதை ஆக்கிட்டதென்கிற பயம். ‘எல்லாம் விதிப்படின்னு’ அம்மா சொல்வாங்களே, அந்தக்குரல் கூட அழுது தொண்டை கட்டிட்டதுன்னா சரியா வரமாட்டேங்குது.
எதிர்வீட்டுக்கொரட்டில ரிக்ஷாக்கார குடும்பமொன்று இருந்தது ஞாபகமிருக்கா? அவன் பேருகூட ‘வரதன்’ன்னு ஞாபகம். குடித்துவிட்டு மனைவியை அடிக்கிற மறுநாள் ‘எம்.ஜி.ஆர். படத்துக்கு ஜோடியா போவாங்க. அம்மா அவளை கேலிசெய்வாங்க. அந்த மாதிரி ‘மறு நாள்’ அமைஞ்சாகூட போதும்னு மனசு சொல்லுது. நானும் அம்மாவின் கேலியை ஏற்று வரதன் மனைவியைப்போலவே சிரித்து மழுப்ப தயார்.
பக்கத்திலிருக்கும் ஆப்ரிக்க பெண்தான் எல்லா உதவிகளையும் செய்கிறாள். சோஷியல் மேடத்திடம் அவ்வப்போது அழைத்துச்சென்று எனக்குச் சாப்பாட்டிற்கு வழி செய்கிறாள். பிரான்சுக்கு வருவதற்கு முதல் நாள் அம்மா,” உனக்குப் பிடிச்சதுண்ணு வத்த குழம்பும், சுட்ட அப்பளமும் செய்தேன், வயிற்றுக்கு ஒழுங்கா சாப்பிடு!” என்றார்கள். ரொம்ப பசிச்சா? அம்மாவின் இரவல் குரலால் என்னை நானே கேட்டுக்கிட்டு, சாப்பிட உட்காருகிறேன்.
பிரெஞ்சு பாஷை எனக்கு இன்னும் பிடிபடவில்லை. நான் படித்த படிப்பிற்கு அங்கீகாரமில்லை. இரண்டுவாரங்களாக ஒரு வயதான தம்பதிகளிடம் வீட்டு வேலை பார்க்கிறேன். மற்ற நேரங்களில் எதையாவது நினைத்துக்கொண்டு அழுகிறேன். அழும்போதுகூட யாராவது பக்கத்தில் இருந்தால்தானே ஆறுதல். சேர்ந்தாற்போல தொடர்ந்து சில நாட்கள் ஓய்வின்றி அழணும், அதுவும் உங்களையெல்லாம பக்கத்தில் வைத்துக்கொண்டு. அது முடியுமா அப்பா? இந்தியாவுக்கு வந்து விடட்டுமா? எனக்கு உடனே கடிதம் போடவும்.
இப்படிக்கு
கலா
—————————————
புதுவை, 05-02-2001
சௌபாக்கியவதி கலாவுக்கு,
அப்பா அம்மா இருவரும் ஆசீர்வதித்து எழுதிக்கொண்டது. இங்கு நாங்கள் இருவரும் நலம். அதுபோல உன் அண்ணன், அண்ணி, குழந்தை சௌம்யா ஆகியோரும் நலம்.
சௌம்யாவுக்கு எப்போதும் உன் ஞாபகம் தான். அண்ணனுக்கு கேஷியர் உத்தியோகம் கிடைத்து ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறான். எனக்கு சர்க்கரை அளவு கட்டுபாட்டில் இருக்கிறது, நீ பயப்பட வேண்டியதில்லை. அம்மாவின் தலைச்சுற்றல் குறைந்திருக்கிறது. போனவாரங்கூட டாக்டரிடம் காட்டினோம். புதிதாக சோனி கலர் டி.வி. ஒன்று சமீபத்தில் வாங்கினோம். அவளுக்கு மிகவும் சந்தோஷம். மெகாசீரியல்களைப் பார்க்க காலை பதினோருமணிக்கே உட்கார்ந்துவிடுகிறாள்.
நீ எங்களைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டிராதே. நீ சந்தோஷமாக இருந்தால்தான் எங்களுக்கு நிம்மதி. உன் கடிதத்தைப் பார்த்ததிலிருந்து அம்மா ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை. அவளும் புலம்ப ஆரம்பித்துவிட்டாள். எல்லோரும் உனது நினைவாகவே இருக்கிறோம். தைரியமாக இரு. அவசரப்படவேண்டாம். எல்லாவற்றிர்க்கும் மேலே வேதபுரீஸ்வரர் இருக்கிறார்; நம்முடைய வேண்டுதல் வீண்போகாது; அந்த ஊரிலும் கோவில்கள் இருப்பதாக அறிந்தேன்; நேரம் கிடைக்கும்போது போய்வா; பிரார்த்தனைக்குப் பலன் கிடைக்கும். திரிபுரசுந்தரி கடாட்சத்தால் ஒரு குழந்தை பிறந்தால், குறைகளெல்லாம் தீர்ந்துவிடும். பேரனோ பேர்த்தியோ எதுவென்றாலும் பரவாயில்லையென அம்மா சொல்லச்சொன்னாள்.
ஆண்களென்றால் அப்படி இப்படித்தான் இருப்பார்கள். நீதான் அட்ஜெஸ்ட் பண்ணிப்போகவேண்டும். உன் ஜாதகத்தை நமது ஜோஸியரிடம் காட்டினேன். சனிதிசை நடப்பதாகச் சொன்னார். இன்னும் இரண்டு ஆண்டுகள் நீ சிரமப்படவேண்டியிருக்குமென்று கூறினார். பிறகு யோகதிசையாம். நான் திருநள்ளார் சனிபகவானுக்கு அர்ச்சனை செய்துவிட்டு வருகிறேன். சற்று பொறுமையுடன் இருந்து நீதான் அவரைத் திருத்தவேண்டும். கடவுள் கிருபையால் எல்லாம் நல்லபடிமுடியும்.
உன் தோழி கல்பனா ஸ்டேட்ஸ்லிருந்து வந்திருந்தாள். போன வருடம் வாங்கிய மனையில் வீடு கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். முப்பது லட்சத்துக்கு எஸ்டிமேட் போட்டிருக்கிறார்கள். இருபது இலட்சத்திலேயே நாம் பிரமாதமாகக் கட்டிவிடலாம். நம் வீட்டு எதிரிலேயே 1400 சதுர அடிகள் கொண்ட மனை விற்பனைக்கு வருகிறது. ஏதாவது ஏற்பாடு செய்து பணம் அனுப்பு. அங்கெல்லாம் சவரன் என்னவிலை போகிறது? வரும்போது கொண்டுவந்தால் உங்கள் ஊர் பணத்தைக் காட்டிலும் கூடுதலாக இலாபம் தரும். அண்ணனுக்கு ‘ரேமெண்ட்வெல்’ வாட்ச் ஒன்று வேண்டுமாம். யாரிடமாவது மறக்காமல் கொடுத்தனுப்பவும். சௌம்யாவுக்கு கிண்டர் சாக்லேட் ஒரு பாக்கெட்டும் எனக்கு ஒரு கெல்லெட் ஷேவிங் செட்டும் ஏற்பாடு செய்யவும்.
இப்படிக்கு
அப்பா
நன்றி
————————–
குங்குமம் 10-02-2001
_____________________________________________________