தன் வலியும் மாற்றான் வலியும்

                          உலகமக்களில் குறிப்பாக இந்தியர்களை அண்மைக் காலத்தில் வியப்பில் ஆழ்த்திய செய்திகள் இரண்டு: முதலாவது கமலா ஹாரீஸ் என்ற பெண்மணி ஐக்கிய அமெரிக்க நாட்டின் துணை அதிபராக  இரண்டாண்டுகளுக்கு முன்பு பொறுப்பேற்ற வரலாற்று நிகழ்வு, அடுத்தது, அண்மையில் ரிஷி சுனக் என்பவர் இங்கிலாந்து பிரதமராக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட சம்பவம்.  இருவரும் இந்தியர்கள் என்கிற அடையாளத்தைக்காட்டிலும் இந்நிகழ்வின் பின்புலத்தில் ஒளிந்துள்ள பொதுவான ஒற்றுமைகள் கூடுதல் கவனத்தைப் பெற்று அரசியல் விற்பன்னர்களின் புருவத்தை உயர்த்தியிருக்கின்றன. காரணம் இருவருடைய மூதாதையர்களுமே இந்தியர்கள், தங்கள் சந்ததிகளுக்கு மகுடம் சூட்டிய மண்ணுக்கு, தேசியம் பேசுகிறவர்களின் மொழியில் சொல்வதெனில் அந்நியர்கள்; இனத்தால், நிறத்தால் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இருந்தபோதிலும் இவ்விருவரும் இப்படியொரு உயரத்தை எட்டமுடிந்tதது எப்படி?  ஐக்கிய அமெரிக்காவிலாவது அதிபராக ஒர் ஒபாமாவை காணமுடிந்தது, ஆனால் ஐரோப்பா என்றதும், வரலாற்றாசிரியர்கள் முதன்மைபடுத்துகிற, காலனி ஆதிக்கவரிசையில் முன் நிறுத்தப்படுகிற பிரிட்டிஷ் ராச்சியத்தின் பிரதமராக  சர்ச்சில், கல்லகன், தாட்சர், அமர்ந்த அரியாசனத்தில் இன்று அக்காலனிநாட்டிலிருந்து பிழைக்கவந்த குடிமகனின் வாரிசு பிரதமரானது எப்படி ?

       கமலாஹாரீஸ் : தந்தை ஜெமைக்கா நாட்டவர், தாய் இந்தியர். இருவருமே மேற்கல்விக்காக அறுபதுகளில் அமெரிக்காவில் குடியேறியவர்கள். பெற்றோர் இருவரும் பிரிந்துவாழத் தொடங்கியதும் இளமைக்காலத்தைக் கனடாவில் கழித்தபின்னர் உயர்கல்விக்கு மீண்டு ஐக்கிய அமெரிக்காவுக்குத் திரும்பினார். சட்டம் பயின்று வழக்கறிஞர் தொழில் செய்தார். பின்னர் மாவட்ட அரசு வழக்கறிஞர், மாநில அரசு வழக்கறிஞர் எனப் படிப்படியாக உயர்ந்தார்.  பின்னர் அரசியலுக்குள் நுழைந்து, அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஆனார், அமெரிக்க மக்கள் மன்றத்தின் மேலவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 2021 ஜனவரி மாதத்திலிருந்து ஐக்கிய அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபர், மற்றும் மேலவைத் தலைவர்.

ரிஷி சுணக் : இவருடைய பெற்றோர்களும் கமலா ஹாரீஸ் பெற்றோர்களைப்போலவே அறுபதுகளில் இங்கிலாந்தில் குடியேறியவர்கள். தத்துவம், அரசியலில் பட்டம்பெற்றவர். பின்னர் வணிக மேலாண்மையில் முதுகலை பட்டம், அப்போது தமது வருங்கால மனைவியைச் சந்திக்கும் வாய்ப்பு அமைகிறது. மனைவி கணிணித் துறையில் நன்கறியபட்ட இன்போசிஸ் நிறுவனரின் வாரிசு. அரசியல் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர், மக்களவை உறுப்பினர், உள்துறை அமைச்சர், நிதித்துறை செயலர், நிதித்துறை அமைச்சர் எனப் படிப்படியாக உயர்ந்து இன்று இங்கிலாந்தின் பிரதம அமைச்சர்.

       இவர்கள் என்றில்லை, மனிதர்களில் ஒருசிலர் மட்டும் அரசியல் அல்லாத பிறதுறைளிலுங்கூட ஆயிரமாயிரம் நட்சத்திர கூட்டத்திடையில் நிலவாக ஒளிர்வதற்குக் காரணங்களென்ன ?

       முயலோ, மானோ அதனதன் இனத்திடையே தனது பலத்தை நிரூபிப்பது, திறனை முன்நிறுத்துவது அதிசயமோ, அபூர்வமோ அல்ல மாறாக ஓர் ஆமை முயலை வெல்வதும், முயல் சிங்கத்தைக் கிணற்றில் குதிக்கச்செய்து வீழ்ழ்த்துவதும் அதிசயமாகிறது, காலங்காலமாக நினைவுகூரப்படும் கதையாகிறது. வரலாறு என்பது சராசரி நிகழ்வல்ல, அரிய செயல். « செயற்கரிய செய்வார் பெரியர் » . கமலா ஹாரீஸும், ரிஷி சுணக்கும் அதைத்தான் செய்திருக்கிறார்கள் தன் வலியையும் மாற்றான் வலியையும் புரிந்து செயற்கரிய செயலைச் செய்து அரியாசனத்தில் அமர்ந்தவர்கள். இவர்களுடையது  ஊமையாக எதிர் தரப்பில் அமர்ந்திருக்கும் பாமர பார்வையாளர்களுடன், தனிமனிதனாக உரையாடலை நடத்த உபயோகிக்கும் அலங்கார அரியாசனமல்ல, பெரும் எண்ணிக்கையிலான மக்களின் பிரதிநிதிகளாக தங்களை முன்னிலைப்படுத்தி, காணவரும் உலகத் தலைவர்களுடன் சரிசமமாக அமர்ந்து உரையாடக் கிடைத்த அரியாசனம்.

       இதுபோன்ற வெற்றிக்கு இருபடிநிலைகள் தேவைப்படுகின்றன. முதலாவது தன்பலத்தை உணருதல், அடுத்தது தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களின் பலத்தை அறிதல்.

« வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும், துணைவலியும் தூக்கிச் செயல் »  என்கிறது குறள்.  இதனைத்தான் சுருக்கமாக ‘தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை’ என்கிறது தமிழின் திருமந்திரம். இதனையே சாக்ரடீஸ் ” உன்னையே நீ அறிவாய்” என்கிறார்.

       தன்வலியை உணருதலோ, தன்னை அறிதலோ, உன்னையே நீ அறிவாய் என சாக்ரடீஸ் போதிப்பதோ அனைத்துமே தனிமனிதனின் சுயமுன்னேற்றத்திற்குச்  சொல்லப்பட்டவை, பொருள் அளவில் வேறுபாடுகளற்றவை.

        சாக்ரடீஸ் மேற்குலகின் முதமைத் தத்துவவாதி, ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவருக்கு முன்னும் பின்னும் மேற்குலகு பல தத்துவவாதிகளைக் கண்டிருக்கிறது என்கிறபோதும் சாக்ரடீஸ் முக்கியமானவர். «  பல கடவுள்கொள்கைக்கு(Polytheism) மாறாக ஒரு கடவுள்(Monotheism) கொள்கையை முன் வைtக்கிறார், இளைஞர்களைத் தவறாக வழிநடத்துகிறார் » என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி மரண தண்டனை பெற்றவர். தமது சிந்தனைக்காக அதிகாரத்தைப் பகைத்துக்கொண்டு பலியான மனிதர், சொந்த உயிர்வாழ்க்கையின் முடிவைக்கூட தமது மெய்ஞானத்தின் வழிமுறையில் தேடிக்கொண்டவர். சாக்ரடீஸ் தமது கருத்துக்களை, எண்ணங்களை எழுதிவைத்தவர் அல்லர். வாய் வார்த்தைகளில் பகிர்ந்துகொண்டவர், தானறிந்த உண்மைகளை பிறர் கருத்துக்கு உட்படுத்தி தமது சிந்தனையை தெளிவுப் படுத்திக்கொண்ட சிந்தனாவாதி. வள்ளுவன் கூறுகிற « தன்வலியும் மாற்றான்வலியும் » அறிந்து தெளிதலை சாக்ரடீஸ் மெய்ப்பொருள் கூடுதலாக நமக்கு விளக்குகிறது. சாக்ரடீஸ் கண்ட தத்துவம் அல்லது மெய்ப் பொருளுக்கு கிரேக்க மொழியில் மையேத்திக் (Maieutic) என்று பெயர். கிரேக்க தொன்மவியலின்படி மாய்ய(Maïa) என்ற சொல்லுக்கு மருத்துவ தாதியர் என்று பொருள். மகப்பேறின்போது உடனிருந்து உதவிசெய்பவர்கள். சாக்ரடீஸ் தத்துவத்தின்படி கேள்விகள் என்ற மருத்துவச்சி ஞானமென்ற குழந்தையைச் சுகமாகப் பிரசவிக்க-வெளிக் கொணர மனிதனுக்கு உதவுகிறாள். Maieutics என்பது  உள்ளத்திலிருந்து ஞானத்தை பிரசவிக்க உதவும் முயற்சி. ஒருவன் அல்லது ஒருத்தி தனக்குள் ஒளிந்துள்ள அறிவை அல்லது ஞானத்தைக் கண்டெடுக்கும் நோக்கத்தை அடிடிப்படையாகக் கொண்டது. மனிதன் தனக்குள் கேள்விகளை எழுப்பி அவற்றுக்கு உரியபதிலைத் தேடுதல். தன்னை அறியாமையிலிருந்து விடுவிக்கிற ஒரு படி நிலை. « தன்னை அறிந்தால் தனக்கொரு கேடில்லை » என்கிற திருமூலர் வாக்கு அது: தன் பலத்தை, தனக்குள் புதைந்துள்ள அறிவைத் தோண்டி எடுத்தல்.

       சிந்தனையும் உண்மையும்

        சாக்ரடீஸை பொறுத்தவரைசிந்தனையின்(Thought) நோக்கு, உண்மையை அடைதல். சிந்தித்தல், அவருக்கு ஓய்ந்திருப்பதல்ல,தொழிற்படுதல்; எண்ணத்தை வினையாக்கும் வழிமுறை. அவர் கருத்தின்படி அஞ்ஞானத்திலிருந்து மெய்ஞானத்திற்கு நேரடிப் பேருந்து இல்லை, பல நிறுத்தங்களில் இறங்கி ஏறவேண்டும், அதற்கு நேரமும் காலமும் பிடிக்கும். சிந்தனையென்பது சரியான விடையைத் தேடிப் போடும் கணக்கு ; படிப்படியாக ஏறி மேற் தளத்தை அடையும் செயல். சிந்தனைக்கு உரையாடலைச் சிபாரிசு செய்கிறார் சாக்ரடீஸ். அதாவது சிந்தனையின் ஆரோக்கியம் உரையாடலைச் சார்ந்தது. சாகரடீஸுக்கு உரையாடல் முதன்மையானது, உரையாடலே உண்மைக்கு வித்திடுகிறது. அவ்வுண்மை கண்மூடித்தனமான நம்பிக்கையை விலக்கி அறிவுடைநிலையை இட்டு நிரப்ப நமக்கு உதவுகிறது.  உண்மை என்பது என்ன ? ஒவ்வொரு மனிதனிடமும் அவரவர் வளர்ப்பு, கற்றகல்வி, உற்ற அனுபவம், சமூகச்சூழல், அதன் மரபு, பண்பாடு இவற்றின் அடிப்படையில் ஓர் உண்மை இருக்கக்கூடும். அவ்வுண்மை அவரவர் பார்வை சார்ந்த உண்மை. பார்வைக்குத் தெரிந்தது தெரியாதது என இரு பக்கங்கள் உண்டு, எங்கிருந்து பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது அது. அவரவர் கண்பார்வை சக்தியைப் பொறுத்தும் அதுவேறுபடும். பார்வைகுறைபாடு உடைவருக்கு எதிரிலுள்ள பொருள் தெரியவில்லை என்பதால் அப்பொருள் அங்கில்லை என்று பொருளல்ல. கண்ணாடி அணிந்தோ, தொட்டுணர்ந்தோ அப்பொருளை அவரால் அறியமுடியும். உண்மைக்கும் இத்த்கைய எத்தனங்கள் அவசியமாகின்றன. தவிர தனிமனிதர் உண்மை,  ஒட்டுமொத்த பிரபஞ்சத்திற்கான உண்மை அல்ல. பிரபஞ்ச உண்மை என்பது, எண்ணற்ற மனிதரிகளிடம் பெறப்பட்ட உண்மைகளின் ஒன்றிணைப்பு. ஒவ்வொரு மனிதனிடமும் அடிமனதில் சரியான உண்மை ஒளிந்துள்ளது, காலம்காலமாக மானுடத்தோடு பயணிக்கும் உண்மை அது, உள்ளத்திலிருந்து ஆய்ந்து அதனை அறிதல் வேண்டும், அப்படி அறிந்த உண்மையை உறுதிப்படுத்த உரையாடலும், விவாதமும் அவசியமாகிறது. நமக்குள் உணரும் உண்மையை மேம்படுத்த பிறருடன் விவாதிக்க வேண்டியிருக்கிறது. பூமி உருண்டை, கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை, எல்லாவற்றிர்க்கும் பதிலைத் தேடவேண்டியது நம்மிடம், ஆனால் அப்பதிலை  அவ்வுண்மையைப் பேருண்மையாக்க அல்லது பிரபஞ்ச உண்மையாக புணரமைக்க பிறர் கருத்துக்கு உடபடுத்தவேண்டும். ஒரு பிரச்சனைக்கு பிறர் யோசனையை நாடுவதோ அல்லது பிறர் கருத்தைக் கேட்பதோ நமது இடத்தில் அல்லது நமக்குப் பதிலாக அவரைச் செயல்பட அனுமதிக்கிறோம் என்று பொருளல்ல.  ஒரு பிரச்சனையில் நாம் கண்ட தீர்வு சரியா தவறா  அதில் உண்மையின் விழுக்காடு எவ்வளவு என்பதை அறிய பிறர்  கருத்து உதவக்கூடும். நாம் தெளிந்தறிந்த உண்மையத் திருத்தி எழுதவும் வலுவூட்டவும் பிறமனிதருடனான உரையாடல்கள் உதவலாம். நாம் எடுக்கின்ற எந்த முடிவும் அதுசார்ந்த உண்மைக்கூறுகளும் எதிர்வினை இல்லாதபோது, நூறு விழுக்காடு சரியானதென்று சொல்வதற்கில்லை. நம் சிந்தனையில் உருவான கலையோ, படைப்போ பூரணம் பெறுவது மறுபக்கம் அதனைக் கையிலெடுத்துக் கொண்டாடும் பிற மனிதர்களின் ஆதரவால், ரசனையால்.                                     

« உன்னையே நீ அறிவாய் ! உன்னிடத்திலுள்ள உண்மையை அறிந்து அவ்வுண்மையை உறுதிசெய்துகொள்ள அண்டையிலுள்ள மனிதர்களிடம் உரையாடலையும் நிகழ்த்து ! » என்பது சாக்ரடீஸ் எழுதிய மனிதர் வெற்றிக்கான சூத்திரம். கிட்டத் தட்ட பூமிப்பந்தின் வேறொரு திசையில் வாழ்ந்து மறைந்த நமது வள்ளுவரும் « தன்வலி, மாற்றான் வலி » என உரைப்பதை இப்படித்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். இந்தியக் காலனி ஆட்சியின்போது ஆயிரமாயிரம் காந்திகள் இந்தியாவில் இருந்தார்கள், மோகன்தாஸ் கரம்சந்த் மட்டுமே காலனி ஆதிக்கத்திற்கு எதிராகத் தலமை ஏறக முடிந்தது, தன் வலியை, தமது பலத்தை உணர்ந்ததோடு தென்னாப்ரிக்காவில் தன்னிடம் தேடிய உண்மையை அது சார்ந்த உரையாடலை சொல் செயல் இரண்டு வடிவிலும் இந்திய தேசத்திலும், பிட்டிஷ் முடியாட்சியோடும் தொடர்ந்ததன் பயனை பின்னர் நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங், பராக் ஒபாமா என உலகறிந்த மனிதர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஐக்கிய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ், இங்கிலாந்து பிரதமர்  ரிஷி சுணக் இருவரும் இனத்தால் நிறந்த்தால் சிறுபான்மையிராக இருந்தும் பிழைக்கச் சென்ற தேசத்தின் பெருமகனாகத் தங்களை அடையாளப் படுத்த முடிந்ததற்கு தன்பலத்தையும்    பிறர் பலத்தையும் அவர்கள் அறியமுடிந்ததே காரணம்.  பெரும்பானமையினரிடமிருந்து அந்நியபட்ட ஒருவரை தமது அரசியல் சட்டம் வகுத்துக்கொண்ட நெறிமுறையின் அடிப்படையில், தலமைக்கு அழைத்துச்சென்ற  பிரிட்டன் மற்றும் அமெரிக்க மக்களின் அரசியல் நாகரீகத்தை பாராட்டவேண்டும். அமெரிக்க  நாட்டின்  துணை அதிபர், இங்கிலாந்து பிரதமர் இருவரும் இப்பதவியைச் சம்பந்தப் பட்ட நாட்டின் குடிமக்கள், கட்சிகள், அக்கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்களின் தயவினால், கருணையினால் பெற்றவர்களில்லை கடுமையானப் போட்டியில் தங்கள் திறனை, வல்லமையை எண்பித்து வெற்றிபெற்றவர்கள் என்பதையும் மறந்துவிடமுடியாது.                                                                                                                                                                       

       உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடென்று பெருமைப் பட்டுக்கொகிற இந்தியாவிலும் நாளை இப்படியொரு அதிசயம் சாத்தியமா ? இங்கே காலங்கலமாய் ஆதிக்க சக்திகளிடம் அடிமைப் பட்டுக்கிடக்கிற மக்களை விடுவிக்க, அந்நய நாட்டை பூர்வீகமாகக் கொண்ட  ஓர் இந்தியப் பிரஜை அல்லது  சிறுபான்மை சமயத்தைச் சேர்ந்த அல்லது சமூகத்தைச் சேர்ந்த ஓர் இந்தியர் அல்லது மக்கள் எண்ணிக்கையில் பெரும்பானமையினராக இருந்தும்  ஒடுக்கப்பட்ட மனிதர்களாகவே செத்துமடிகிற கூட்டத்திலிருந்து ஒருவர் அதிகார பலத்துடன்  இந்திய நாட்டின் பிரதமராகவோ, ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவோ, குறைந்தபட்சம் குக்கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக ;  தேர்வு செய்யும் கண்ணியம்  அல்லது பெருந்தன்மை ( ஒதுக்கீடுகளின் தயவின்றி ) நமக்குண்டா என்கிற கேள்வி ஒருபக்கம் இருக்கட்டும் ; இங்குள்ள சிறுபான்மை மக்களிடை அல்லது ஒடுக்கபட்ட சமுதாயத்தின் தலைவர்களிடையில் தங்கள் பலத்தை அறியும் ஆர்வமும், அறிந்த பின் பிறர்வலியறிந்து தங்கள் திறனைப் பயன்படுத்திக்கொள்ளும் முனைப்பும் இருக்கிறதா என்பதுங்கூட இங்கு கேள்விக்குறி.  « எனக்கு ஒரு எம்.பி சீட் போதும், மத்திய அரசில் ஓர் அமைச்சர், கட்சிக்கு  பத்து எம். எல். ஏ. சீட்டுகள், சிறுபானமை வாரியத்துக்கு ஒரு தலைவர்பதவியென வாய்க்கரிசி போட்டால் போதும் தங்கள் சன்னதிக்குவந்து மொட்டைபோட்டுக்கொள்ள தயார் » என்கிற கொள்கைப் பிடிப்பாளர்களுக்கு, அதிகார வர்க்கம் கருணைவைத்தால் கவர்னர் ஆகலாம், ஜனாதிபதியாக கூட ஆகலாம் என்கிற கனவுடன் அரசியல் செய்பவர்களுக்கு « தன்வலியும் மாற்றான் வலியும் » நூறுவருடம் ஆனாலும் தெரியவர வாய்ப்பில்லை.

நன்றி : காற்றுவெளி மார்கழி 2022


Advertisement

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s