கடந்த மூன்று தினங்களாக இலக்கிய உலகம் நன்கறிந்த பெயர். இலக்கியத்திற்கான நோபெல் பரிசை பெற்ற பதினாறாவது (ழான்போல் சார்த்ரு, பரிசைமறுத்துவிட்டார் ) பிரெஞ்சு எழுத்தாளர், மாறாக உலகறிந்த பிற பிரெஞ்சு பெண் படைப்பாளிகளுக்கு கிடைக்காத நோபெல் விருது இவருக்குக் கிடைத்துள்ளது. அந்த வகையில் முத பிரெஞ்சு பெண் எழுத்தாளர். இலக்கியத்திற்கான நோபெல் பரிசுபற்றிய தகவல் வானொலிச் செய்தியாக அறியவந்ததற்கு முன்பாக கூடுதலாக எதுவும் அவரைப் பற்றி (அதாவது அவருடைய படைப்புகள் சார்ந்து) எனக்குத் தெரியாது. அவரது படைப்புகள் எதையும் நான் வாசித்தவனில்லை.
இந்திய தேசத்தை காந்தியின் இந்தியா என மேலை நாட்டினர் சொல்ல அல்லது பத்திகளில் எழுத கேட்டிருக்கிறேன். அதுபோல பிரான்சு தேசத்தை ‘மோலியேர் தேசம்’ என பெருமிதத்துடன் சொல்லிக்கொள்வதில் பிரெஞ்சுக்காரர்களுக்கு ஆர்வம் இருந்திருக்கிறது. மோலியேர் நாடகப்ப் படைபாளி, மற்றும் , மற்றும் கலைஞர். பிரெஞ்சு படைப்பாளிகள் இலக்கியத்தில் பல புதிய பரிமாணங்களைக் கண்டவர்கள், அவ்வலையில் இலக்கியத்திற்குரிய நோபெல் பரிசுகள் அவர்களைத் தேடிவருவதில் நியாயமுண்டு. உலகில் இலக்கியத்திற்குரிய நோபெல் பரிசை வென்ற நாடுகளில் பிரான்சு முதலாவது இடத்தை வகிக்கின்றது.
பிரெஞ்சு மொழி ஆண் படைப்பாளிகளைப் போலவே பெண் படைப்பாளிகள் உலகெங்கும் அறியபட்டவர்கள் நாவலாசிரியை எனச் சொல்லப்படாவிட்டாலும், பெணியல்வாதியான சிமொன் தெ பொவாரும் அவருடைய ‘இரண்டாம் பாலினம்’ என்ற நூலும் உலகில் இன்றளவும் கொண்டாட டப்படுபவை. இந்த வரிசையில் கொலெத், ழார்ழ் சாந், மரி ஒலம்ப் தெ கூர்ழ், பிரான்சுவாஸ் சகான், மார்கெரித் துராஸ், மார்கெரித் யூர்செனார் என கடந்தகால பிரெஞ்சு பெண் எழுத்தாளர் தொடங்கி வாழும் எழுத்தாளர்களிலும் ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது.
இவற்றில் சிமொன் தெ பொவ்வார் அவருடைய இரண்டாம் பாலினம் பற்றிய கட்டுரை பரிசில் பதிப்பகத்தில் கிடைக்கும். பிரான்சுவாஸ் சகானுடைய வணக்கம் துயரமே காலச்சுவடு பதிப்பகத்தில் கிடைக்கும். மார்கெரித் துராஸ் ஒரு முக்கிய பெண்படைப்பாளி, அவருடைய காதலன் என்கிற நாவலை என்னுடைய மொழிபெயர்ப்பில் தென் திசை பதிப்பகம் வெளியிட்டது. இப்போது கிடைக்குமா எனத் தெரியவில்லை. மாறாக அவருடைய சிறுகதையான உயிர்க்கொல்லி அதே பெயரில் வேறு சில எழுத்தாளர்களின் சிறுகதைகளோடு ஒரு தொகுப்பாக காலச்சுவடு வெளியிட்டுள்ளது. மார்கெரித் யூர்செனாருடைய புகழ்பெற்ற படைப்பான அதிரியன் நினைவுகள் என்ற நூலும் தமிழில் வரவேண்டிய நூல்.
அன்னி எர்னோ
நோபெல் பரிசுபெற்ற இவரைப் பற்றி நான் முதன் முதலில் அறியவந்தது, பத்து வருடங்களுக்கு முன்பாக அன்னி சொமோன் என்கிற எழுத்தாளரின் சிறுகதையை மொழி பெயார்த்தபோது.
இவருடைய(அன்னி சொமோன்)சிறுகதையையும் வேற்சுசில முக்கிய பிரெஞ்சு எழுத்தாளர்களின் கதை யையும் போர் அறிவித்தாகிவிட்டது என்ற பெயரில் எனனுடைய மொழிபெயர்ப்பில் சந்தியா பதிப்பகம் கொண்டுவந்தது. இரண்டாவது முறையாக நான் அன்னி எர்னோவை அறிய வந்த து, நான் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும் மார்கெரித் யூர்செனார் பெயரில், அவருக்குக்கு பிரெஞ்சு இலக்கிய அமைப்பு ஒன்று பரிசில் வழங்கியபோது.
இதைத் தவிர 82 வயதான நோபெல் பரிசுபெற்ற இவருடைய எழுத்தைக் குறித்து எனக்குச் சொல்ல தற்போதைக்கு எதுவுமில்லை. காலையில்தான் இரண்டு நூல்களை வாங்கினேன். இனிதான் அவற்றை வாசிக்க வேண்டும். ஏன் இதுநாள்வரை அவருடைய படைப்பு என்னை ஈர்க்கவில்லை என்றேனக்குத் தெரியவில்லை. அவர் எழுத்து கூடுதலாக சுய புனைவு வகைமையைச் சார்ந்திருப்பது காரணமாக இருக்கலாம். நூலின் பெயர் எனக்கு நினைவில்லை. பத்து வருடங்களுக்கு முன்பு இவருடைய நாவலொன்றின் ஏதோ ஒரு பக்கத்தை புரட்ட அப்பக்கம் என்னை ஈர்க்கவில்லை. தவறு என்னுடையதாகவும் இருக்கலாம், ஒரு நூலின் எல்லாபக்கங்களுமே நம்மை ஈர்க்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. புதுச்சேரியில் 70 களில் பாரதி வீதியிலிருந்த ஓட்டலில் பூரிக்கு வைத்த கிழங்கு வேகாலிருக்க, அந்த ஓட்டலுக்குச் செல்வதை நிறுத்திக்கொண்டேன்.
அன்னி எர்னோவின் அரசியலுக்காக கிடைத்தவிருதே அன்றி இலக்கியத்திற்காக அல்ல என்கிற விமர்சனங்கள் பிரான்சில் உண்டு. பெண்ணியம், பெண்விடுதலை என்கிற கடப்பாடுடன், இடது சாரி கொள்கைகளில் தீவிர பிடிமானத்துடன் எழுதுபவர் என செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஈரானில் மாசா அமினி என்ற இளம்பெண்ணின் அகால மரணத்திற்குக் ஆதரவாக நடக்கிற போராட்டத்தை மனதில்வைத்து கொடுக்கபட்ட விருது என்கிறார்கள். அமைதிக்காக கொடுக்கபட்ட இந்த ஆண்டு விருதுகளும் அரசியல் சார்ந்தவை என்கிற குற்றச்சாட்டு உண்டு.
அன்னி ஏர்னோ இரண்டு நூல்கள் கைவசம் இருக்கின்றன.வாசித்தபின்னர் எனது கருத்தை எழுதுகிறேன். அப்படியே எழுதினாலும் எனது வாசிப்பு ருசி சார்ந்த முடிவென்பதை மனதில் வையுங்கள்.