மொழிவது சுகம் செப் 16 2022: காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை

த்து நாட்களுக்கு முன்பு எண்பது வயதைநெருங்கிய பெண்மணி ஒருவர் தன் மகளுடன் இனி நாட்களைக் கழிக்க இருப்பதாக கூறி விடைபெற விரும்ப, ஒரு சிறு பிரிவு உபசார நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. பிரெஞ்சு பண்பாட்டின்படி ஏற்பாடு செய்யப்பட்ட அந்நிகழ்வில், கலந்து கொண்டேன்.  அந்நிகழ்வில் கலந்துகொள்வாரென நான் எதிர்பார்த்த  ஒருவர் வரவில்லை. ஒருவரை விசாரித்தபோது, அந்நபரின்  துணைவியார் மருத்துவ மனையில் சேர்க்கபட்டுள்ள தகவல் கிடைத்தது. கல்லீரல் புற்றுநோய் என்றார்கள். தகவல் உண்மை என்பதுபோல நான்காவது நாள் அப்பெண்மணியின் இறந்த செய்தி . இறந்த குடும்பம் இத்தாலியக் குடும்பம். பிரான்சு நாட்டில் வெகுகாலமாக இருக்கிறார்கள். கணவர் கூடுதலாக நின்று  உரையாடுகிறவர். அவர் வாழ்க்கைத் துணை இரண்டொரு நிமிட நலன்விசாரிப்புகளோடு உரையாடலை முடித்துக்கொள்கிறவர். 

கடந்த 13ந்தேதி காலை 10 மணிக்கு பெண்மணியின் இறுதிச் சடங்கு. இதற்கு முந்தைய வரிகளில் குறிப்பிட்டிருந்த நண்பர்கள் பலரையும் திரும்பவும் சந்த்க்க நேர்ந்தது. முதல் நிகழ்வில் இறந்த பெண்மணியின் உடல் நலன்குறித்து தகவல் தெரிவித்த நண்பரை இறுதிச்சடங்கு நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக மண்டப வாயிலில் மறுபடியும்  சந்திக்கிறேன். « நாம் இவ்வளவு சீக்கிரம் திரும்பச் சந்திக்க நேரும் என நினைத்த்தில்லை » என்று தெரிவித்தவர், இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் அதிக வித்தியாசமில்லை என்று குறிபிட்டார்.

இறுதிச் சடங்கு மண்டபத்திற்குள் நுழைந்தோம். அமைதி அமைதி.. அப்படியொரு நிசப்தமான சூழல். பெண்மணியின் உடலுடன்  சவப்பெட்டி. அனைவரும் இருக்கையில் அமர்ந்த மறுகணம்  பிரெஞ்சு மொழியில் ‘Mélopée’ என சொல்லப்படுகிற ஒப்பேரா சாயலில் உருக்கமானதொரு பாடல் அச்சிறிய மண்டபத்தை நிறைத்தது, சோகத்தை இசைக்கருவிகள் துணையோடு பாடலாக மொழிப்படுத்த இயலுமா என என்னை நானே கேட்டுக்கொண்டு, பாரத்துடன் பார்வையை ஓட்டினேன். வந்திருந்த மனிதர்களில் பெரும் விழுக்காட்டினர் முதிர்ந்த வயதினர், இறப்பின் வாயிலில் காத்திருப்பவர்கள்(நான் உட்பட).

இத்தனை சோகத்திற்கிடையிலும் எனக்கு சிலிர்ப்பினை ஏற்படுத்திய ஒரு சம்பவம்,  இறுதிச் சடங்கை நடத்திய மதப் பிரதிநிதிகள் இருவரும் ஆப்ரிக்க நாட்டவராக இருந்தது. பிரான்சு தேசத்தின் காலனிய சாட்சியம். சம்பிரதாய சடங்கின்போது வந்திருந்த ஐரோப்பிய இனத்தவரை உட்காருங்கள் அல்லது எழுந்திருங்கள் எனத் தங்கள் கைகளால் அவர்கள் கட்டளையிட, அக்கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஒவ்வொரு முறையும் இருக்கையிலிருந்து எழுந்து நின்றார்கள், உட்கார்ந்தார்கள். இப்படியொரு விந்தையான காலமாற்றம்.

          கிறித்துவ முறைப்படி இறுதிச்சடங்கு நடந்தேறியபின் மீண்டும் சோகத்தை இசைத்துக்கொண்டு ‘Mélopée’,  இரண்டு மூன்று நிமிடங்கள் ஒலித்தன. அதன்பின் இறந்தவரை நினைவு கூறும் வகையில் பேச்சு. இறந்த பெண்மணியின் கணவர், மனைவியோடு உடல்கடந்து தான் பழகிய முதிர்வயது பதிவின் ரகசியக்கோப்பை பகிர்ந்துகொள்வதுபோல, ஒலித்த இசைக்கு கனம் சேர்த்தார். தன் மனைவி குறித்த அவருடைய பேச்சு  கைத்தட்டல் போன்ற புற உலக குறியீட்டிற்குரியவை அல்ல, அசாதரணமானது.  அங்கொலித்த இசையின் மறுவடிவாகத்தான் அப்பேச்சினை உணர்ந்தேன்.

மனிதர் வாழ்வில் ஆணு பெண்ணுமாக இரு உடல்கள் இரு உள்ளங்கள்  உயிர் வாழ்க்கையின் பெரும் பகுதியை இன்பம் துன்பம் இரண்டிலும் கைகோர்த்து, வலிகளைப் பகிர்ந்து, சுகங்களைத் தியாகம் செய்து, உனக்காக நான் என்பதை ஒவ்வொன்றிலும் உறுதி செய்து, ஒருநாள் «  இருந்ததும், நடந்த தும், சுவைத்ததும் சுகித்ததும் பொய்யாய் பழங்கதையாய் முடிகிறபோது, ஏன் இந்த மனித வாழ்க்கை என கேள்வி எழுகிறது.

        இறுதிச் சடங்கில் ஒலித்த உருக்கமான இசையும், அதற்கு இணையான  இறந்த பெண்மணியின் கணவருடைய பேச்சும் இத்தனை நாள் கிடப்பில் போட்டிருந்த இலண்டன் இளைஞர், எழுத்தாளர் கிரிதரனின் « காலத்தின் முடிவுக்காக ஒலிக்கும் இசை என்ற சிறுகதையை, பிரெஞ்சில் மொழி பெயர்க்கவும், இறந்த மனைவியின் நினைவில் வாழ்கிற ஓர் எழுத்தாளனைப் பற்றிய சிறு கதையை ‘ அவள்’ என்ற பெயரில் நான் எழுதவும் காரணமானது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s