உண்மையில் மொப்பசான் என உச்சரிப்பதுதான் சரி. அதிலும் பிரான்சு நாட்டில் இருந்துகொண்டு மொப்பசான் என உச்சரிக்கப்படுச்வதைக் காதில் வாங்கிகொண்டு, அவருடைய மொழிபெயர்ப்புக் கதைகளின் கீழ் மாப்பசான் எனப் போடுவது, இசை அபிமானிகள் வார்த்தையில் சொல்வதெனில் அபசுரம். நண்பரும், மொழிபெயர்ப்பாளருமான வெ. சு. நாயகர், இரண்டு முறை அவருக்கே உரிய நாகரீகமான முறையில் மாப்பசான் சிறுகதைகளை நான் மொழிபெயர்க்கப் போகிறேன் எனப் பதிவிட்டிருந்த போதும், அண்மையில் மாப்பசான் கதையொன்றை முகநூலில் பதிவிட்டிருந்தபோதும் ‘மொப்பசான்’ என அவருடைய கமெண்ட்டில் அப்பெயரைத் திருத்திக் குறிப்பிட்டிருந்தார்.
நண்பர் நாயக்கருக்கும் எனக்கும் ‘மொப்பசான்’ என்று எழுதுவது சரி காரணம் ஏற்கனவே கூறியதுபோல நான் பிரெஞ்சு மொழி பேசும் ஒரு நாட்டில் இருப்பதோடு, இலக்கிய சார்ந்து புலன்களை அடகுவைத்து நாட்களைக் கழிக்கிறேன். வெ.சு. நாயக்கர், பிரெஞ்சு மொழித் துறையில் பேராசிரியராக பணிபுரிகிறவர். மாணவர்களிடம் மொப்பாசான் என்று பாடம் எடுத்துவிட்டு, வெளியில் மாப்பசான் என உச்சரிப்பதோ, எழுதுவதோ அவரைப் பொறுத்தவரை நியாயமாகாது.
« ஆங்கிலத்தை வி. எஸ். சீனிவாச சாஸ்திரியார்போல பேசமுடியுமா » எனச் சொல்வதுண்டு. அதாவது பெரும்பான்மையான இந்தியர்களுக்கு மாறாக அவர் ஆங்கிலேயர்களைப்போல ஆங்கிலத்tதில் அத்தனைச் சரளமாக சொற்பொழிவு ஆற்றுவார், உச்சரிப்பார் என்பதால் அப்படிச் சொல்வதுண்டு. என்னதான் கான்வெண்ட்டில் படித்துவிட்டு இங்கிலாந்து சென்றாலும் அல்லது அமெரிக்காவிற்குச் சென்றாலும் இந்தியாவிலிருந்து சென்ற முதல் தலைமுறை பேசும் ஆங்கிலத்திற்கும், அங்கேயே பிறந்து வளர்ந்த இன்றைய இந்திய தலைமுறைக்கும் உச்சரிப்பில் நிறைய வேறுபாடு உண்டு. காந்தி ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்தால், காந்தியாக நடிக்கும் பென் கிங்ஸ்லிக்கென ஒரு உச்சரிப்பை கொடுத்திருப்பார்கள், அதாவது இந்தியர் சாயலில் அவர் ஆங்கிலம் பேசவேண்டும் என்பதற்காக( இவ்வளவிற்கும் தமது பாரிஸ்ட்டர் பட்டத்தை இங்காந்தில் முடித்தவர்). நம்முடைய பழையத் திரைப்படங்களில் பட்டாணிக்கானாக வரும் நபருக்கென்று ஒரு தமிழிருக்கும் அதுபோல. உண்மையில் ஆங்கிலத்தை தாய்மொழியாகக்கொண்ட பிரிட்டிஷாரும் அமெரிக்கருங்கூட ஆங்கிலத்தை வெவ்வேறு ஒலியில் பேசுகிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் பெரும்பகுதி ஆங்கிலத் தாக்கத்தின் கீழ் இருப்பதால் மேற்கத்திய பெயர்களை அவை ஆங்கிலம், இத்தாலி ஸ்பெய்ன், ஜெர்மனி என எந்த நாட்டிற்கு உரியவையாக இருப்பினும், ஆங்கில வழிதான் உச்சரிக்கிறோம். ஆங்கிலவழியில் அறியவந்த கொலம்பஸ் (Christobher Columbus) நமக்கு இன்று « சொலம்பசு », அவர் பிறந்த ஸ்பெய்ன் நாட்டில் Cristobal Colon, பிரான்சு நாட்டில் Christophe Colomb . அதேவேளை ஜெர்மானியரான கார்ல் மார்க்ஸை ஆங்கிலேயரும் பிறரும் கார்ல் மார்க்ஸ் என்றே எழுதுகிறார்கள், அழைக்கிறார்கள். ஆனால் உண்மையில் கார்ல் என்ற பெயர் ஆங்கிலத்தில் சார்லஸ், பிரெஞ்சுமொழியில் ‘ஷார்ல்’ ஸ்பெய்ன் மற்றும் போச்சுகீசிய மொழியில், ‘கர்லோஸ்’.
புதுச்சேரி பிரெஞ்சுக் காலனியாகவிருந்த பகுதி, பிரெஞ்சு மொழி சார்ந்து இயங்குகிறபோது அம்மொழியூடாகப் பெற்ற அச்சொற்கள் பிரெஞ்சுமொழிக்குரிய ஒலித்தன்மையுடன்(Phonetics) இருக்கவேண்டுமென்கிற எதிர்பார்ப்பு எங்களைப் போன்றவர்களுக்கு வருவது இயறகை. ஆனால் பிரெஞ்சுமொழிக்காரர்கள் வேற்று மொழி பெயர்களை அதற்கான ஒலித்தன்மையுடன் உச்சரிக்கிறார்களா என்றால் இல்லை. அவர்கள் மெத்தப்படித்தவர்கள், இலக்கியவாதிகள் என்றால் கூட கிரேக்கத்திலிருந்து வந்த சாகர்டீஸை ‘சொக்ராத்’ என்றுதான் உச்சரிக்கிறார்கள். ஸ்பைடர் மேன், பிரெஞ்சுக்காரர்களுக்கு ஸ்பிடர்மான், இதுபோல நூற்றுக் கணகில் உதாரணங்கள் இருக்கின்றன. பல தமிழர்களின் பெயர்கள் சிதைந்திருப்பதை (புதுச்சேரி மக்கள், மொரீசியஸ் மக்கள் பெயரைகளை) பிரெஞ்சு சூழலில் கேட்டால் வேறுபாடு புரியும். கிருஷ்ணாசாமி. ஏழுமலை போன்ற நூற்றுகணக்கான பெயர்கள் பிரெஞ்சில் அல்லது ஆங்கிலத்தில் எப்படி எழுத்தப்படுகிறதென்பதை, எப்படி ஒலிக்கின்றன என்பதை நாம் அறிவோம். தூத்துக்குடியை, திருச்சியை, தரங்கம்பாடியை சிதைத்த ஆங்கிலேயர்கள் வழியில் இன்றைக்கும் அவர்கள் தமிழர்களாக இருந்தாலுங்கூட ஆங்கிலத்தில் கட்டுரையாக, நூலாக எழுதிறபோது வரலாற்றாசிரியர்கள் ஆய்வாளர்கள் பழைய வழக்கிலிருந்து மீள்வதில்லை. டொரண்டோ, ஆஸ்திரேலியா, ஜன்னலென்று நாம் எழுதிக்கொண்டிருக்க நம்முடைய இலங்கைச் சகோதரர்கள் ரொறன்ரோ, அவுஸ்திரேலியா, யன்னல் என எழுதுகிறார்கள். நம்முடையா முன்னாள் முதலமைச்சர் தொடங்கி பலர் Jayalalitha, Jayaraman, என்றுதான் எழுழுதுகிறார்கள். இவற்றை மேற்குலக மக்கள் உச்சரிக்க கேட்கவேண்டும்.
நவீன இலக்கிய அன்பர்கள் அண்மைக்காலமாகத்தான் கூடுதலாக பிரெஞ்சு எழுத்தாளர்களை, தத்துவ வாதிகளை அறிய வந்திருக்கிறார்கள். பலரும் ஆங்கிலம் வழி அறிய நேர்வதால் ஆங்கில ஒலியில் எழுதுகிறார்கள். குறிப்பாக அல்பெர் கமுய் , ஆல்பர்ட் காம்யூ என்றும் மொப்பசான் மாப்பசான் எனவும் சில பெயர்கள் கிட்டடத் தட்ட 30 ஆண்டுகாலமாக வழக்கில் இருக்கின்றன. இந்நிலையில் பரவலாக ஓரளவு அறியப்பட்ட இப்பெயர்களை நவீன தமிழிலக்கிய பொதுவெளியில் வைக்கிறபோது சற்று குழப்பம். எனக்கும் அல்பெர் கமுய், மொப்பசான் என்று எழுதுவது சரி. ஆனால் பிரெஞ்சுக்காரர்களே முரண்பட்டு, கிரீஸ் நாட்டு சாக்ரடீஸை – Sōkrátēs – தங்கள் மொழியில் சொக்ராத் – Socrate என்றும், ஸ்பென் நாட்டு கொலம்பஸை – Cristobal Colon, கிறீஸ்த்தோஃப் கொலோன் – Christophe Colomb- எனவும் ; கிருஷ்ணாசாமியை கிஷ்ணசாமி என எழுதுவதும் சொல்வதும் சரி என்கிற விதியைப் பின்பற்றுகிறபோது ஏற்கனவே தமிழில் மாப்பசான் என்று அறிமுகமாகியுள்ள வழக்கிலுள்ள பெயரை மாற்றி மொப்பசான் என எழுத் தயக்கம்.
எனவே இந்த நிலையில் ஓரளவு தெளிந்த கண்ணோட்டத்துடன் இருக்கிற உங்களிடம் வைக்கும் அன்புவேண்டுகோள். மொப்பசான் அல்லது மாப்பசான் இவ்விரண்டில் எதைச் தேர்வு செய்யலாம் என்பதைத் தெரிவித்தால், பெரும்பான்மை நண்பர்கள் விருப்பத்திற்கு உடன்படுகிறேன்.
————————————————————————————————————————–
தொல்காப்பியர்
வேற்றுமொழிச்சொற்களைத் தமிழ் ஒலிக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம் என்று சொல்லுகிறார். கம்பரும் தன்மொழிபெயர்ப்புக்காப்பியத்தில் அதையே பின்பற்றியுள்ளார்.
நன்றி சார் தங்கள் கருத்த காலம்தாழ்ந்து படித்தேன், மன்னியுங்கள்.