கி தெ மாப்பசான்
தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா
சூரியன் உதிக்கும் போது, பனி பெய்த பூமியில், ஒருபக்கம் வயல்கள், மறுபக்கம் கடலென்றிருக்க, இரண்டிற்கும் நடுவே நெடுக காலாற நடப்பதில்தான் எவ்வளவு சுகம்!
எவ்வளவு சுகம் ! கண்கள் ஊடாக ஒளியாகவும், மூக்குத் துவாரங்கள் வழியாக சுவாசக் காற்றாகவும், உடலூடாக வீசும் காற்றாகவும் நம்முள் அது பிரவேசிக்கிற போது !
பூமி என்றதும் மிகவும் தெளிவான, அசாதரண, துல்லியமான, நினைவுகள் நம்மிடம், அந்நினைவு இனிமையான, கணநேர மனக்கிளர்ச்சிக்குரியது: ஒரு சாலையின் வளைவில், பள்ளத்தாக்கொன்றின் நுழைவாயிலில், ஆற்றங்கரையோரம், கண்ட காட்சிகளால், உணரப்படுபவை, மனதிற்கிசைந்த அழகான ஒருத்தியை சந்தித்ததுபோல, பூமி விஷயத்தில் மட்டும் இத்தனை பிரியமிக்க தருணங்களை நாம் நினைவில் வைத்திருப்பது ஏன் ?
நான் திக்குதிசையின்றி நடந்த நாட்கள் எத்தனையோ, அதில் ஒருநாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அன்றைய தினம் ஃபினிஸ்த்தேர்(Finistère) முனையைக் குறிவைத்து பிரெத்தாஜ்ன்(Bretagne) பிரதேச கடற்கரையையொட்டி, எவ்விதச் சிந்தனைகளுமின்றி வேகமாக நடந்து கொண்டிருந்தேன். பிரெத்தாஞ்ன் பிராந்தியத்தின் கண்ணுக்கினிய அழகான பகுதி, காம்ப்பெர்லே (Quimperlé) அதிக தூரத்தில் இல்லை, பக்கம்.

இளவேனிற்காலத்தின் காலைநேரம். நம்முடைய இருபதுவயது இளமையை மீட்டெடுக்கக்கூடிய, நம்பிக்கைகளை மறுகட்டமைப்புச் செய்து, பதின் வயது கனவுகளைத் திருப்பித்தரவல்ல காலைகளில் ஒன்று.
திசைகள் பிடிபடாத நிலையில், கோதுமை வயல்களுக்கும், அலைகடலுக்குமிடையில் நடக்கவேண்டியிருந்தது. அலைகளாவது அவ்வப்போது அசைந்தன, கோதுமைக் கதிர்களில் அசைவென்பதே இல்லை. முற்றிய கோதுமைக் கதிர்களின் மணத்தையும்,கடற்பாசியின் மணத்தையும் நுகர்ந்தவண்ணம், எவ்வித சிந்தனையுமின்றி. முன்னோக்கி, பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த பயணத்தின் தொடர்ச்சியாக அன்று பிரெத்தாஞ் கடற்கரைப் பகுதிகளில் திரிந்து கொண்டிருந்தேன். சோர்வென்று எதுவுமில்லை, மாறாக சுறுசுறுப்பும், மகிழ்ச்சியும்,உற்சாகமும் என்னிடமிருக்க நடந்துகொண்டிருந்தேன்.
எதைக் குறித்தும் யோசனைகளில்லை. தன்னை மறந்து, ஆழமாக, சரீரத்திற்கு சுகமளிக்கும் இயற்கை இன்பத்தில் திளைக்கிறபோதும், சந்தோஷ மிருகம் புற்களிடையே ஓடும் போதும் அல்லது அதுவே ஒரு இராட்சஸ பறவைபோல நீல ஆகாயத்தில் பகலவன் முன்பாக பறக்கிறபோதும் வாய்ப்பதெல்லாம் மகிழ்ச்சிக் கணங்கள், இந்நிலையில் எதைப் பற்றிச் சிந்திக்கபோகிறேன்? தூரத்தில் பக்திப் பாடல்களின் ஓசை. அன்று ஞாயிற்றுக்கிழமை, எனவே கிறித்துவ சமய ஊர்வலமாக இருக்கலாம். இரண்டொரு அடியெடுத்துவைத்து திருப்பமொன்றில் அசையாமல் நின்றேன், மனதில் ஒருவித சிலிர்ப்பு. ஐந்து பெரிய மீன்பிடி பாய்மரப்படகுகள், அவற்றில் ஆண்கள், பெண்கள், குழந்தைகளென்று மனிதர்கூட்டம், அவர்கள் ப்ளூனெவென் (Plouneven) புனிதயாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்களென விளங்கிக்கொண்டேன்.
சொற்பநேரமே நீடித்த மென்காற்று, பழுப்பு நிற பாய்மரக் கித்தான்களை ஊதித் தள்ள சிரமப்பட, படகுகளும் மெதுவாகச் சென்றன, அடுத்து, வீசிய மறுகணமே காற்று களைத்துப்போனதும், கித்தான்கள் பாய்மரங்களைத் தழுவிக்கொண்டு விழுந்திருந்ததும் காரணம்.
மனிதச் சுமைகாரணமாக படகுகள் தள்ளாடி நகர்ந்தன. படகிலிருந்த அனைவரும் பாடிக்கொண்டிருந்தனர். பெரிய தொப்பியை அணிந்திருந்த ஆடவர் கூட்டம் படகின் விளிம்பைஒட்டி நின்றவண்ணம் சத்தமிட்டுப் பாட, பெண்கள் கீச்சொலியில் கத்துகிறார்கள், இந்நிலையில் கரகரகரப்புடன் பாடும் பிள்ளைகளின் கம்மியக் குரல், பொதுவாகத் தோத்திரப்பாடல்களின் பெருங்கூச்சலில் அடங்கிப்போகும் போலி குழலோசைகள் கதிக்கு ஆளாயின.
ஐந்து படகுகளின் பயணிகளும் பாடியது ஒரே தோத்திரப் பாடலை,அதைச் சத்தமாகவும் பாடினார்கள், அப்பாடலின் சலிப்பூட்டுகிற ஒலி வானத்தை முட்டியது. ஐந்து படகுகளும் ஒன்றன் பின் ஒன்றாக, உரசிக்கொண்டு சென்றன.
அவர்கள் என்னை முந்திக்கொண்டதோடு, என்னைக்கடந்தும் சென்றார்கள். அவர்களுக்கும் எனக்குமான இடைவெளி தூரம் மெள்ள மெள்ள அதிகரிக்க பாடல் ஒசை பலவீனமடைந்து. இறுதியில் அடங்கியும் போனது.
இனிமையான விஷயங்களைக் கனவுகான ஆரம்பித்தேன், அதாவது இளம்வயது பையன்களைப்போலச் சிறுபிள்ளைத்தனமான, சொகுசான கனவுகளை.
கனவுக்குறிய வயதை எத்தனைச் சீக்கிரம் நாம் தொலைத்து விடுகிறோம். உயிர்வாழ்க்கையில், மகிழ்ச்சியான கணங்களே கனவுகாணும் வயதொன்றுதான்! தனிதிருக்கிற கணத்திலெல்லாம், நம்ம்பிக்கைகளில் கவனத்தைச் செலுத்தவல்ல தெய்வீகமான மனோசக்தியை நெஞ்சில் சுமக்கிறொம், எனவே ஒருபோதும் நாம் துணையின்றியோ, சோகத்துடனோ, முகவாட்டத்துடனோ இருப்பதில்லை, அது எத்தனை விசித்திரமான பூமி ! அங்கு காடுமேடென்று அலைந்து திரியும் சிந்தனையின் அமானுஷ்ய கற்பனையில் எதுவும் நடக்கலாம். கனவுகளின் பொன்னுலகில், வாழ்க்கை எவ்வளவு ரம்மியமானது!
ம்! என் துரதிர்ஷ்டம், எல்லாம் முடிந்தது!
திரும்பவும் கனவு காணத் ஆரம்பித்தேன்.இளம்வயது கனவுகள் அல்ல, பின் எதைக் குறித்து? எவற்றையெல்லாம் தொடர்ந்து எதிர்பார்ப்போமோ, எவற்றுக்கெல்லாம் ஆசைப்படுவோமோ அவற்றுக்காக : செல்வம்,புகழ் பெண்கள் என்று அனைத்திற்கும் கனவு கண்டேன்.
நடந்துகொண்டிருந்தேன், முற்றிய கோதுமைக் கதிர்கள், என்விரல்களுக்கு வளைந்துகொடுத்து எனக்குக் கிளுகிளுபூட்ட தலைமுடியைக் கோதுவதுபோல, கோதுமையின் பொன்னிற தலையை வருடியபடி வேகமாக நடந்துகொண்டிருந்தேன்.
சிறிய மேடுபாங்கான நிலப்பகுதியை சுற்றிக்கொண்டு நடக்க, ஒரு குறுகிய, வட்டமான கடற்கரையின் முடிவில், அதைத் தொட்டதுபோல அமைந்திருந்த மூன்றடுக்கான நிலப்பாங்கில் வெள்ளைவெளேரென்று ஒரு வீடு.
இவ்வீட்டின் தோற்றம், எதற்காக என்னிடம் சந்தோஷ சிலிர்ப்பை ஏற்படுத்தவேண்டும், இதற்கான காரணம் என்ன, எனது மனம் அறிந்திருக்குமா? சிற்சில சந்தர்ப்பங்களில் இதுபோன்று சுற்றித் திரிகிறபோது, அப்பகுதிகளில் சிலவற்றை வெகுகாலமாக அறிந்திருப்பதுபோலவும், மிகவும் பரிச்சயமானவை போலவும், மனதிற்குப் பரவசமூட்டுவதுபோலவும் உணர்கிறோம். இவற்றை நாம் அதற்கு முன்பாக கண்டிருக்க சாத்தியமில்லையா? இதற்கு முன்பு அப்பகுதியில் ஒருவேளை வாழ்ந்திருக்க முடியாதா? நம்மை அனைத்தும் ஈர்க்கின்றன, இன்பத்தில் மூழ்கடிக்கின்றன, அடிவானத்தின் மென்மையான கோடு, மரங்களின் அமைப்பு, மணலின் நிறம்!
ஓ! உயரமான படிகள் போலமைந்த நில அடுக்குகளில் நிற்கும் அந்த வீடுதான் எவ்வளவு அழகு! பிரம்மாண்டமான படிகளாக நீருள்ள திசைநோக்கி இறங்கியுள்ள அடுக்குகளின் நிலப்பரப்பில் உயரமான பழ மரங்கள். அவ்வடுக்குகளின் விளிம்புகளில், நெடுக மஞ்சள் வண்ண பூக்களுடன் ஸ்பெயின் தேச ழெனெ (genêts) வகைப் பூச்செடிகள் புதர்போல மண்டிக்கிடக்க, ஒவ்வொரு அடுக்கும் தலையில் தங்கக் கிரீடத்தை அணிந்திருக்கும் தோற்றத்தை அளித்தது.
குடியிருப்பினால் காதல் வயப்பட்டிருக்க, நடப்பதை நிறுத்திக் கொண்டேன், அவ்வீட்டை எனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளவேண்டும், அங்கே வாழவேண்டும், அதுவும் கொஞ்ச காலத்திற்கல்ல நிரந்தரமாக என்பதுபோல, அதன்மீது காதலாகியிருந்தேன்.
வாயிலை நெருங்கினேன், இதயம் மட்டுமீறிய உந்துதலில் படபடவென அடித்துக்கொண்டது, தடுப்புச்சுவரின் சிறுதூண்களில் ஒன்றில், ஒரு பெரிய விளம்பர அட்டை, அதில் “விற்பனைக்கு”, என்றொரு வாசகம். மறுகணம் யாரோ அவ்வீட்டை எனக்குத் தானமாக கொடுத்ததுபோல ஒரு இன்ப அதிர்ச்சி! ஏன் ? எதற்காக? எனக்குத் தெரியாது !
அவ்வீடு” விற்பனைக்கு”. எனவே, தற்போதைய நிலையில் கிட்டத்தட்ட ஒருவருக்கும் சொந்தமானதல்ல, நாளை யாருக்கு வேண்டுமானாலும் சொந்தமாகலாம், நான் உட்பட, ஆம் எனக்கே கூட சொந்தமாகலாம்.! எனக்கு! ஏன் இந்த விஷயத்தில் இப்படியொரு ஆழமான, விவரிக்கப் போதாத உணர்வு? இந்த வீட்டை வாங்க என்னால் ஆகாதென்பது நன்றாகத் தெரியும்! வாங்குவதற்கு என்னிடம் ஏது பணம்? அதனாலென்ன, அவ்வீடு விற்பனைக்குரியது என்ற சொல் முக்கியம். கூண்டில் அடைபட்டிருக்கும் ஒரு பறவை அதன் எஜமானருக்கு மட்டுமே சொந்தம், மாறாக வானில் பறக்கும் பறவை பொதுவானது என்கிறபோது, நான் சொந்தமாக்கிக்கொள்ள முடியும்.
வளமான நிலப்பரப்பிற்குள் சென்றேன். ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிய அரங்குகளைப் போல நில அமைப்பு, சிலுவையில் அறையப்பட்டத் தோற்றத்துடன் எஸ்ப்பலியெக்கள் (espaliers)(1), கொத்து கொத்தாக பூத்திருந்த மஞ்சள் வண்ண ழெனெ பூக்கள், ஒவ்வொரு அடுக்கின் முடிவிலும் வயதான இரண்டு அத்தி மரங்கள், மொத்தத்தில் அத்தோட்டம்தான் எவ்வளவு அழகு!
ஒவ்வொரு அடுக்காக கடந்து நில அமைப்பின் கடைசி அடுக்கான மூன்றாவது அடுக்கில் நின்று, அடிவானத்தைப் பார்த்தேன். கீழே வளைந்தும், எங்கும் மணலாகவும் பரந்து கிடந்த சின்னஞ்சிறு கடற்கரையை நிலப்பகுதியிலிருந்து கனத்த மூன்று பழுப்பு நிற பாறைகள் பிரித்திருந்தன. இங்கிருந்து காண, கடல்வாயிலை அடைத்த பெருங்கதவுகள் போலவும் இருந்தன, தவிர கடற் கொந்தளிப்பு நாட்களில், அப்பாறைகளில் அலைகள் மோதிச் சிதறுமென்பது நிச்சயம்.
எதிர் முனையில் இரண்டு பாறைகள் அவற்றில் ஒன்று நிற்பது போலவும் மற்றது புற்களின் மீது படுத்திருப்பதுபோலவும் இருந்தன, நிற்பது மெனிர்(menhir) மற்றது தொல்மென்(dolmen)(2) என்றும் புரிந்தது. இரண்டும் பார்ப்பதற்கு கணவன் மனைவிபோலவும், ஏதோஒரு சாபத்தால் கற்களாக மாறியவை போலவும், முன்பொரு காலத்தில் தனித்திருந்த கடலை பல நூற்றாண்டு காலமாக தெரிந்துவைத்திருப்பவை போலவும், சிறிய வீடு முழுமையாக கட்டிமுடிக்கபடும்வரை தொடர்ந்து அவதானித்து வந்ததுபோலவும் எனக்குப் பட்டது, விற்பனைக்கென்று உள்ள அச்சிறிய வீடு ஒருநாள் இடிந்து நொறுங்க, காற்றில் கலக்க, பின்னர் அவ்விடத்தில் புல்பூண்டுமுளைக்க அவற்றையுங்கூட இந்த ஜோடி காண நேரலாமென எனக்குத் தோன்றியது.
பல நூற்றாண்டுகளைக் கண்ட ‘மெனிர் தொல்மென்’ தம்பதிகளே, நீங்கள் இருவரும் என் அன்புக்குரியவர்கள் ! என அக்கற்களிடம் தெரிவித்தேன்.
வீட்டின் வாயிற்கதவில் நின்று, சொந்தவீட்டின் அழைப்பு மணியை உபயோகிப்பதுபோல அடித்துவிட்டுக் காத்திருந்தேன். ஒரு பெண் கதவைத் திறந்தாள், பணிப்பெண் தோற்றம், சற்று வயதானவள், கருப்பு உடை, தலையில் மடத்துப்பெண்களின் வெண்ணிற தொப்பி. இப் பெண்மணியைக்கூட இதற்குமுன் பார்த்திருக்கவேண்டும் என்பதுபோல எனக்குப்,பட்டது.
-நீங்கள் பிரெத்தோன் பெண்மணியாக இருக்கவேண்டும், சரிதானே? – என அவளிடம் கேட்டேன்.
– இல்லை ஐயா, நான் லொர்ரேன்(Lorraine) பிராந்தியத்தைச் சேர்ந்தவள்” என பதிலிறுத்தவள் தொடர்ந்து:
-நீங்கள் வீட்டைப் பார்க்க வந்தவரா?” » எனக்கேட்க,
அவளிடம்:
« நீங்கள் நினைத்தது சரி! » எனக்கூறிவிட்டு, அப்பெண்மணியைத் தொடர்ந்தேன். அங்கிருந்த சுவர்கள், தளவாடங்களென ஒவ்வொன்றையும் என்னால் நினைவு கூர முடிந்தது. முன்கூடத்தில் என்வீட்டில் வழக்கமாக எனது கைத்தடியை சாத்தி வைப்பது வழக்கம், அன்று அதைக்கூட அங்கு தேடினேன். வீட்டின் வரவேற்புக் கூடத்திற்குள் சென்றேன், சுவர்கள் கோரையில்முடைந்த விரிப்புகொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்க, கடல் நீரைப் பார்க்கும் வகையில் மூன்று மிகப்பெரிய சன்னல்கள். தீக்காயும் அடுப்பின் மீது அலங்காரமாக சீனத்துப் பீங்கானில் பொருட்கள், அவற்றோடு ஒரு பெண்ணின் பெரிய அளவு புகைப்படம். தாமதிக்காது, அதை நோக்கிச் சென்றேன். நிச்சயம் என்னால் அவளை அடையாளம் காணமுடியும் என்ற நம்பிக்கை காரணமாக. நினைத்ததுபோலவே, அவள் யாரென்று விளங்கியது, அதேவேளை அவளை ஒருபோதும் இதற்கு முன்பு சந்தித்ததில்லை என்பதும் நிச்சயம். அவளா அது? எனக்கு வியப்பு. எவளுக்காக காத்திருந்தேனோ, எவளை அடையவேண்டுமென விரும்பினேனோ அதேபெண்! என்னுடைய கனவுகளில் ஒயாமல் துரத்தும் அம்முகத்தை நினைவு கூர்ந்தேன். இரவுபகலாக செல்லும் இடமெல்லாம் என்னால் தேடப்படும் பெண் ; இன்னும் சற்று நேரத்தில் வீதியில், அல்லது கிராமப்புறம் பக்கம் போகிறபோது கோதுமைக் கதிர்களில் சிவப்புக் குடையோடு ; பயணம் முடித்து, ஓர் விடுதியில் தங்கலாம் எனப் போகிறபோது, என்னை முந்திக்கொண்டிருப்பவளாக அல்லது நான் பயணிக்கிற இரயில்பெட்டியில் சக பயணியாகவோ அல்லது எனக்கென திறக்கும் வரவேற்பு கூடத்தில் எனக்கு முன்பாகவோ காண நேரும், அதே பெண்.
நிழற்படப் பெண் அவள் தான், நிச்சயமாக, சந்தேகத்திற்கு இடமின்றி அவள்தான்! என்னை அவதானிக்கும் அவளுடைய கண்கள் ; தலைமுடியை ஆங்கிலப் பெண்களைப்போல முடிந்திருக்கும் பாங்கு ; குறிப்பாக அவளுடைய வாய் ; வெகுகாலமாக அவளை யாரென்று யூகிக்க உதவும் அவள் புன்னகை, அனைத்தும் அப்பெண்ணை அடையாளப் படுத்தின.
– யார் இந்தப் பெண்?- எனப் பணிப்பெண்ணிடம் கேட்டேன்.
சுரத்தின்றி அவரிடமிருந்து பதில் வெளிப்பட்டது: « இதுவா … மேடம் » .
நான் விடவில்லை, “அந்த அம்மாள் உங்கள் எஜமானியா?”
« ஓ! இல்லை, ‘அப்பெண் என் எஜமானி இல்லை, ஐயா !» இம்முறை அவளுடைய பதிலில் தன் பணி நிமித்தமான கடமையோடு, சிறிது எரிச்சலும் கலந்திருந்தன.
இருக்கையைத் தேடி அமர்ந்த பின்னர், பணிப்பெண்ணிடம், ” – கொஞ்சம் விவரமாக அதைச் சொல்லமுடியுமா ? எனக் கேட்டேன்.
அவள் திகைத்து, அசையாமல், அமைதியாக நின்றாள்.
நான் விடுவதாக இல்லை: “படத்தில் இருப்பவர் இந்த வீட்டின் எஜமானி அம்மாள், சரியா?
– இல்லை, அதுவுமில்லை,
– இந்த வீடு யாருக்குத்தான் சொந்தம் ?
– என்னுடைய எஜமான் தூர்னெல் என்பவருடையது.
புகைப்படத்தை நோக்கி விரலைச் சுட்டி:
– அப்போது இந்தப் பெண்?
– அது வந்து மேடம் ….
– அப்படியெனில், உங்கள் எஜமானின் மனைவி என்று சொல்?
– இல்லை, ஐயா.
– மனைவி இல்லையென்றால் வேறு யார், உங்க எஜமானுடைய வைப்பாட்டியா?
மடத்துப் பெண் சாயலைக்கொண்ட பணிப்பெண்ணிடம் பதிலில்லை. மாறாகப் புகைப்படப் பெண்ணோடு சம்பந்தப்பட்ட மனிதருக்கு எதிராகத் தெளிவில்லா பொறாமையும், குழப்பமான கோபமும் என்னை பீடித்திருந்த நிலையில் பிடிவாதமாக என் கேள்வியைத் தொடர்ந்தேன்.
– சரி, இருவரும் இப்போது எங்கே?
பணிப்பெண் தாழ்ந்த குரலில்:
– எங்கள் ஐயா பாரீசில் இருக்கிறார், ஆனால் மேடம் பற்றிய தகவல் எதுவும் தெரியாது.
ஒரு விதச் சிலிர்ப்புடன்
– அப்படியென்றால், அவர்கள் இப்போது ஒன்றாக இல்லை.
– இல்லை ஐயா.
சற்று தந்திரத்துடன், வருத்தம் தோய்ந்த குரலில் :
– என்னதான் நடந்தது சொல்லுங்களேன், உங்கள் முதலாளிக்கு என்னால் ஏதாவது உதவ முடியுமா என்று பார்க்கிறேன். எனக்கு இந்தப் பெண்ணைத் தெரியும், மோசமானவள், என்றேன்.
பணிப்பெண், பார்வையை விலக்கிக்கொள்ளவில்லை. நான் சற்று வெளிப்படையாக பேசுவது, அப்பெண்மணிக்கு நம்பிக்கை அளித்திருக்க வேண்டும்.
« ஓ! அதை என்னன்னு சொல்வது. எங்க வீட்டு ஐயாவுக்கு அத்தனைத் துன்பத்தையும் கொடுத்தாள். இத்தாலிக்குப் போயிருந்தபோது அங்கு இருவருக்கும் பழக்கம், மணம் செய்துகொண்டதுபோல தன்னுடன் அழைத்தும் வந்தார். அவள் நன்றாகப் பாடுவாள். அவள் மீது எங்க ஐயா உயிரையே வைத்திருந்தார். அவர் நிலைமையைப் காண பரிதாபமாக இருக்கும். கழிந்த ஆண்டு, இந்தப்பக்கம் சுற்றுப் பயணமாக வந்தவர்கள், யாரோ ஒரு பைத்தியக்காரன் கட்டியிருந்த இந்தவீட்டைக் கண்டிருக்கிறார்கள். அவனை உண்மையில் ஒரு பைத்தியக்காரன் என்று தான் சொல்லவேண்டும், இல்லையெனில், கிராமத்திலிருந்து இத்த்னை கல் தூரத்தில் இப்படியொரு வீட்டைக் கட்டுவானா? வீட்டைப் பார்த்த மறுகணமே அதைவிலைக்கு வாங்கி, எங்க எஜமானுடன் இந்தவீட்டில் குடியிருக்க அவளுக்கு ஆசை. அவளைச் சந்தோஷப்படுத்த எங்க ஐயாவும் வீட்டை வாங்கினார்.
கடந்த வருடம் பனிக்காலம் முழுக்க இங்கே அவர்கள் இருந்ததாகச் சொல்லமுடியாது, ஆனால் கோடைக்காலத்தை இந்த வீட்டில்தான் கழித்தார்கள்.
“ஒரு நாள் மதிய உணவு நேரம், “செசரின்!” என்றென்னைக் கூப்பிட்ட முதலாளி : « வெளியில் சென்றிருந்த, மேடம் வீடு திரும்பிட்டார்களா? » எனக்கேட்டார். « இல்லை ஐயா » – என்றேன்.“ அன்றைய தினம் நாள் முழுக்க காத்திருந்தோம். கோபத்தின் உச்சத்தில் முதலாளி இருந்தார். எங்கெங்கோ தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. போனவள் போனவளே, ஏன் எதற்காக என்ற கேள்விகளுக்கு இன்றுவரை பதில் கிடையாது, பணிப்பெண் பதிலைக் கேட்டதும், எனக்குத் தலைகால் புரியவில்லை. மகிழ்ச்சியியை வெளிப்படுத்த பணிப்பெண்ணை முத்தமிடவும், அவள் இடுப்பைப் பிடித்தபடி நடனம் ஆடவும் விரும்பினேன்.
ஆகத் தற்போது புகைப்படக்காரி வீட்டு உரிமையாளரோடு இல்லை ! அவள் வீட்டை விட்டு போய்விட்டாள், நல்லவேளை தப்பித்தாள். இந்த மனிதரின் உறவு அவளுக்கு அலுப்பைத் தந்திருக்கவேண்டும், வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு அவளிடம் அம்மனிதர் நடந்துகொண்டிருக்கிறார். ஆக மொத்தத்தில் கிடைத்த செய்தியால் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
வயதான பணிப்பெண் இன்னும் தான் சொல்லவேண்டியது இருக்கிறது என்பதுபோல தொடர்ந்தார்: « என் முதலாளி கவலையில் வாடினார், என் கனவரிடமும் என்னிடமும் வீட்டை விற்கப் பணித்துவிட்டு, பாரிஸுக்குத் திரும்பிட்டார், வீட்டின் விலை இருபதாயிரம் பிராங்குகள்», எனகூறிவிட்டு நிறுத்தினாள்.
வேலைக்கரப்பெண் கூறியவைகளை காதில் வாங்கும் நிலையில் நானில்லை! எனது நினைவெல்லாம் புகைப்பட பெண்ணிடம் இருந்தது. மறுகணம், எப்படியேனும் அவளை கண்டுபிடித்து இங்கே அழைத்து வரவேண்டும். இளவேனிற்காலத்தில் இப்பிரதேசத்திற்குத் திரும்பவும் கூட்டிவந்து, அவள் மிகவும் விரும்பிய அழகான இவ்வீட்டை, உடையவர் தற்போது இங்கில்லை என்பதையும் கூறி , திரும்பக் காணச் செய்யவேண்டும். செய்யவேண்டியது அதொன்றுதான்.
வயதான பணிப்பெண்ணின் கைகளில் பத்து பிராங்குகளைப் போட்டேன். தற்போது புகைப்படம் என்கையில். வேகமாகச் சென்று அட்டையிலிருந்த இனிமையான அம்முகத்தை வெறித்தனமாக முத்தமிட்டேன்.
வீட்டைலிருந்து வெளியேறியவன், வந்த சாலையைப் பிடித்து புகைப்படப் பெண்ணை பார்த்தவண்ணம் நடந்தேன். தற்போது அவளுக்கு விடுதலை, விடுதலைக்கு பின் அவள் எவ்வளவு அழகு! அவள் காப்பாற்றப்பட்டிருந்தாள்! வீட்டு மனிதரைப் பிரிந்தாயிற்று. இன்றோ நாளையோ, இந்த வாரமோ, அடுத்த வாரமோ அவளை நான் சந்திக்கப் போவது நிச்சயம்! அம்மனிதரைப் பெண் பிரிய என்னுடைய அதிர்ஷ்டமே காரணமென்றும் நினைத்தேன்.
நான் அறிந்த அப்பெண் தற்போது இவ்வுலகில் ஏதோவொரு மூலையில் சுதந்திரமாக இருக்கிறாள், நான் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான், எப்படியாவது அவளை தேடி கண்டுபிடிக்கவேண்டும்.
விளைந்த கோதுமையின் வளைந்த கதிர்கள் மீன்டும் என் கை தடவலில் இருக்க, கடற்காற்றை உள்வாங்கி என் மார்பு புடைத்தது, முகத்தில் சூரியன் முத்தமிட்டது. விரைவில் அவளைச் சந்திப்பதும், “விற்பனைக்கு” என்றுள்ள அந்த அழகான வீட்டில், இம்முறை நாங்கள் வசிப்பதும் நிச்சயம். இனி தான் விரும்பும் வீட்டைப் பிரிய அவளுக்கு மனம்வராது!
எல்லையில்லா மகிழ்ச்சியுடனும், நம்பிக்கை அளிந்த போதையுடனும் நடந்துகொண்டிருந்தேன்.
_______________________________________________________________
- எஸ்ப்பலியெ (espaliers) : ஒரு வகையான தோட்டக் கலை, பழமரங்களையும், பூச்செடிகளையும் சுவரில் பதியம். செய்வதுபோல வளர்க்கும் முறை
2;மெனிர்(menhir) தொல்மென் (dolmen) இவற்றுள் முதலாவது, ஒரு வகை குத்துக்கல், இரண்டாவது படுக்கைநிலையில் உள்ள ஒரு கல், இரண்டும் இறந்தவர்கள் நினைவுச் சின்ங்கள், கற்காலங்களில் புழக்கத்தில் இருந்