அலைகடலுக்கு அப்பால் தமிழ் :

அண்மையில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் வாசித்த கட்டுரை

அனைவருக்கும் வணக்கம்,

பிஷப் ஹீபர் கல்லூர் முதல்வர்  தா. பால் தயாபரன், பேராசிரியர்கள்  டென்னிசன், இராஜசேகரன், மூ. முனீஸ்மூர்த்தி, விஜயராணி, சாம் கிதியோன் மற்றும் எனதுரையைக் கேட்க வந்துள்ள அனைத்து பெருமக்களுக்கும் வணக்கமும் நன்றியும். 

அலைகடலுக்கு அப்பால் தமிழ் என்கிறபோது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டைத் தமிழர்களின் பூர்வீக நிலமாகவும் இலங்கை, மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளைக் குடியேற்ற நாடுகளாகவும் ஏற்றுக்கொண்டு கருத்தைச் சொல்கிற பார்வை இருந்தது. இன்று நிலமை வேறு. அலைகடலுக்கு அப்பால் தமிழர்கள் எனில் அவர்கள் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் கடல்கடந்து சென்று உலகின் பலபாகங்களிலும் அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களை முன்னிட்டு வாழ்கிற தமிழர்கள். காலனிய ஆட்சி காலத்தில் வறுமையும், சமூக அமைப்பில் இருந்த சாதிய ஒடுக்குமுறையும் புலம்பெயர காரணமாயிற்று, இன்று பேரினவாத அரசியல் பிரச்சினைகளும், வளமான வாழ்க்கைத் தேடலும் மக்கள் இடம்பெயரக் காரணமாகின்றன.  

                  இதுதான் நாம் பிறந்த மண், இப்படித்தான் என் வாழ்க்கை, இங்குதான் என் கட்டை வேக வேண்டும் எனத் தீர்மானமாக ஓரிடத்தில் வாழ்க்கையை நடத்துகிற ஒரு சிலரின் வாழ்க்கையில் காட்டாறுபோல சம்பவங்கள் திடீர்ப்பெருக்கெடுத்து இவர்கள் திசையில் பாய தட்டுமுட்டு சாமான்களுடனும், குஞ்சு குளுவான்களுடனும் தம்மையும் பெண்டு பிள்ளைகளையும் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு, விதியை நொந்து, திக்கு திசையின்றி, மயக்கமானதொரு வெளியை நோக்கி ஒரு நாள் ஒரு கணம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வரும் மரணத்தைப் போல புலம்பெயரும் மனிதனின் பயணம் தொடங்குகிறது. இடையில் எதுவும் நேரலாம், என்ற கையறு நிலையில் வேதனை, விரக்தி, சோர்வு, கொசுறாக சிறிது நம்பிக்கை என்ற பிரித்துணர முடியாத சகதியில் காலூன்றி, வாழ்க்கை முழுவதும் தவிக்கச் சபிக்கபட்ட மக்களின் இடப்பெயர்வு ஒருவகை. .  அரசியல்  நெருக்கடிகளின்றி முன்னதாகத் திட்டமிட்டு, சுகமான வாழ்க்கையை எதிர்பார்ந்து  புலம்பெயருகின்ற மனிதர்கள் பிறிதொரு வகை.  

நடந்துதான் போகவேண்டும் என்றிருந்த காலங்களில் கால்களும் மனங்களும் அனுமதித்த தூரத்தை, இன்றைய தினம் புலம்பெயரும் மனிதர்களின் பொருளாதாரமும், பயண ஊர்திகளும் தீர்மானிக்கின்றன. புலப்பெயர்வின் துணைக் கூறுகள் இவை.. கற்கால மனிதன் உயிர்வாழ்க்கையின் ‘அடிப்படைத் தேவை’க்குப் புலம் பெயர்ந்தான். நிகழ்கால மனிதர்களுக்கு அடிப்படைதேவையைக் காட்டிலும் ‘பாதுகாப்பான வாழ்க்கை’ முக்கியம். பருவம் பொய்த்து, பஞ்சம் பிழைக்க ஊரைவிட்டு ஊர்போதல் வெகு காலம்தொட்டு நடைமுறையில் உள்ளது. கிராமங்களில் விவசாயக்கூலிகளாக, அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடியது போதும், “பட்டணம் போகலாம், பணம் காசு சேர்க்கலாம்” எனப் பட்டணம் சென்று, கொத்தவால் சாவடியில் மூட்டைத்தூக்கி பொங்கலுக்கு கிராமத்திற்குத் திரும்பி, கிராமத்தில் கம்பத்தம் எனக்கொண்டாடப்படுக்கிற பெருந்தனக்காரர்களுக்கு புரோ நோட்டின்பேரில் கடன் கொடுக்கிற மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். அதுபோலவே படிப்பதற்கும், படித்தபின் உரிய வேலைதேடி நகரங்களுக்கும் மனிதர்கள் பயணிப்பதை இன்றும் காண்கிறோம். இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குப் போகிறவர்கள், மேற்குலகில் குடியேறுகிறவர்கள் பிறநாடுகளுக்குப் புலபெயர்கிறவர்களில் அநேகர் ‘பணம் காசு சேர்க்கலாம்’ எனப் புலம் பெயரும் இனம். பணத்தோடுகூடிய பாதுகாப்பான வாழ்க்கையைத் தேடிப் போகிறவர்கள்.

இந்தியத் தமிழர்கள் இந்தியாவிலேயே பிறபகுதிகளுக்கும், வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, மேற்கு நாடுகள், வட அமெரிக்கா எனப் புலம் பெயர்வது வாழ்க்கையில் சுபிட்சத்தைத் தேடி. எண்பதுகளில் இலங்கையில்  தமிழருக்கெதிராக சிங்கள அரசு மற்றும் சிங்கள மக்களின் ஒரு பகுதியினரின் இனவாதம் தமிழினத்தைப் பாதிக்க, அதன் அடிப்படையில் உருவான பிரச்சனைகள், சம்பவங்கள், விளைவுகள் பொருட்டு முடிந்தவர்கள் மேற்கத்திய நாடுகள் கனடா எனக் குடி பெயர இயலாதவர்கள் இந்தியாவில் குடியேறினார்கள். இந்தியாவிலிருந்தும் சந்தர்ப்பம் அமைகிறபோது அவர்கள் மேற்கு நாடுகள், கனடா எனப் புலம்பெயர்ந்தார்கள். கண்டங்கள் எதுவாயினும், நாடுகள் எதுவாயினும் மனிதர்கள் இடம் பெயர அடிப்படையில் இரண்டு நோக்கங்கள் : அமைதியும், வளமான வாழ்வும் வேண்டும். தமக்கு மட்டுமல்ல தம்முடைய வருங்கால சந்ததியினருக்கும் வேண்டும்.  

அண்மைக்காலங்களில் குறிப்பாக அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு ஆணையம் ஏற்பட்ட பிறகு புலம் பெயர்தல் என்ற சொல் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்திலிலிருந்து ரஷ்ய படையெடுப்பு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் நாட்டிலிருந்து பல இலட்சகணக்காண் மக்களை போலந்து, மறும் பிற ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக நிறுத்தியிருப்பதை நாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.. பன்னாட்டு அரசியலில், பொருளியல் நோக்கில், உள்ளூர் அரசியலில், ஊடகங்களில் புலம் பெயருதல் இன்று விவாதத்திற்குரிய பொருள். என்றைக்கு விலங்கினங்களும், மனிதரினமும் தோன்றியதோ அன்றையிலிருந்து புலம்பெயர்தல் நடந்துகொண்டிருக்கிறது. கால்கள் இருக்கிறபோது நடந்துதானே ஆக வேண்டும், ஓரிடத்தில் மரம்போல வேருன்றி நீரையும், உயிர்ச்சத்தையும் பெற முடியாதபோது இடம்பெயரத்தானே வேண்டும். ஆக இயல்பிலேயே மனிதன் புலம் பெயரும் உயிரினம். குகையில் – வெட்டவெளியைக் காட்டிலும் குகை பாதுகாப்பானது – உயிர்வாழ்க்கையைத் தொடங்கிய மனிதன் இடம் பெயராதிருந்தால் இன்றைக்குக் “கோபல்ல கிராமங்கள்” ஏது, , நகரங்கள் ஏது. உலகமெங்கும் விவாதிக்கப்படுகிற பன்முக கலாச்சாரம்தான் ஏது. நீலக்கடலையோ, மாத்தாஹரியையோ, அண்மையில் வெளிவந்த சைகோன் – புதுச்சேரி நாவலையோ நான் எழுதியிருக்க முடியாது;

நீண்டகாலப் புலம்பெயருதலில், கலாச்சாரம், மொழி இவற்றில் அடிப்படை ஒற்றுமைகள் கொண்ட அரசியல் எல்லைக்குள் பொருளாதாரத் தேவையைமட்டும் கருத்திற் கொண்டு நடப்பது ஒருவகை உ.ம். தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கோ, இங்கிலாந்திலிருந்து பிரான்சுக்கோ இடம்பெயருவது. மொழி கலாச்சாரத்தையொதுக்கிவிட்டு, அரசியல் நிர்பந்தங்களுக்காகவும், பொருளாதாரக் காரணங்களுக்காகவும் முற்றிலும் புதிய மண்ணிற்குப் புலம்பெயருதல் மற்றொருவகை, உ.ம் மூன்றாவது உலக நாடுகளிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்கோ அல்லது அமெரிகாவிற்கோ இடம்பெயருவது. புலம் பெயருதல் என்ற சொல், குறிப்பாக இவ்விரண்டாம் நிலை மக்களையே அடையாளப்படுத்துகிறது. .

புலம்பெயர்ந்த மக்களின் மொழியும் பண்பாடும்

மொழி மற்றும் பண்பாட்டுத்தேவை, புலபெயர்ந்த மக்களின் எண்ணிக்கைச் சார்ந்த சூழலைபொறுத்தது. அலைகடலுக்கு அப்பால் புலம்பெயர்வது என்பது காலனி ஆதிக்கத்தின் முக்கியமான விளைவுகளில் ஒன்று. பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் புதிய நாடுகளைத் தேடி அடைந்த வெற்றி,  அந்நாடுகளில் அதிக எதிர்ப்பின்றி ஆதிக்க அரசியலை வணிகத் தந்திரத்தால் அடைய மேற்கு நாடுகளுக்கு உதவிற்று.  கைப்பற்றிய காலனிகளுக்கு முதலாளிகளாக அவர்கள் இடம்பெயர்ந்தார்கள் எனில், அவர்கள் பண்ணைகளில், தொழிற்கூடங்களில் அடிமைகளாக ஊழியம் செய்ய காலனி குடிமக்கள் கப்பல்களில் கொண்டுவரபட்டார்கள். பண்ணை முதலாளிகளான மேற்கத்தியர்களுக்கு அதிகாரம் அரசியல் என்பதால், அவர்கள் வெகு சுலபமாக தங்கள் மொழியையும், மரபையும் உறுதிபடுத்தகொள்ள முடிந்தது, மாறாக கூலிகளாக அழைத்துவரபட்ட காலனி மக்களோ குடியேறிய நிலங்களின் அதிகார மொழியை பொதுவிடங்களிலும் எஜமானர்களிடமும் உபயோகிக்கவேண்டிய  நெருக்கடியில் தள்ளப்பட்டனர். வீட்டில், தமிழர்கள் ஒன்று கூடும்போது, தமிழ்நாட்டிலிருந்து அவர்கள் உடலோடு கொண்டுவந்தை தமிழை உபயோகித்தபோதும், அவர்கள் வயிற்றுப் பசியை ஆற்றும் மொழியாக தமிழ் இல்லை. விளைவாக மொரீஷியஸ தீவு தமிழர்களிடத்தில். இருபத்தொன்றாம் நூற்றாண்டில் தமிழில்லை. இது ஏதோ தமிழுக்குமட்டும் ஏற்பட்ட நெருக்கடி அல்ல இது.

போர்ச்சுகல் நாட்டிலிருந்து, ஸ்பெயின் நாட்டிலிருந்து, இத்தாலி நாட்டிலிருந்து பிரான்சுக்கு கடந்த நூற்றாடுகளில் குடியேறியவர்களின் வீட்டில் கூட இன்று அவர்களின் தாய்மொழி உபயோகத்தில் இல்லை. பதினெட்டாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் லூசியானா (Louisiana) விற்கு பிரான்சு மக்கள் குடியேறினார்கள் ஆனால் இன்று அவர்கள் பிரெஞ்சு பேசுவதில்லை. தங்கள் மூதாதையர்கள் பிரெஞ்சு பேசினார்கள் என்று மட்டும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சில பிரெஞ்சு பண்டிகைகளை மட்டும் கொண்டாடுகிறார்கள்.காரணம் குடியேறிய பகுதியில் அவர்களின் அவர்களின் வாழ்க்கை மொழி அதாவது சம்பாத்திய மொழி வேறு.  இன்று தமிழில் அலைகடலுக்கு அப்பாலிருந்து எழுதுகின்ற அனேகர் தங்கள் உயிர்வாழ்க்கையில் பாதி ஆண்டுகளை இலங்கையிலோ இந்தியாவிலோ கழித்துவிட்டு மறுபாதியை புலம்பெயர்ந்த மண்ணில் தொடர்கிறவர்கள். எங்களைப் போன்றவர்களின் மொழி ஆர்வமும் பண்பாட்டின் மீதான அக்கறையும் எதிர்காலத்தில் எங்கள் சந்ததியினரிடமும் தொடருமா என்பது கேள்விக்குறி. பாண்டியன் கண்ணகி,  பெயர்களோ, தீ மிதித்து காவடி எடுப்பதோ, ஓ சாமி பாட்டோ, ரஜனி, கமல் படங்களோ தமிழை வளர்க்காது. இலங்கையிலும், இந்தியாவிலும் வாழ்கிற தமிழர்களையே தமிழ் அதிகம் நம்பியிருக்கிறது.

அயலக படைப்புகளும் தமிழும் 

குடியேற்ற நாடுகளுடைய பூர்வீக மக்களின் அடையாளங்களை முற்றிலுமாக எரித்துவிட்டு வந்த நாட்டை சொந்த நாடாக வரித்துக்கொண்டு வாழுகின்ற அமெரிக்கர்கள் மற்றும் ஆஸ்திரேலியர்கள் போன்றவர்கள் ஒருபுறமிருக்க, புதிய மண்ணுக்கு வாழ்க்கைப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கள் இனம், கலாச்சாரம், மொழி இவைகள் தன்னிடமிருந்து விலகிச் செல்வதைத் தெரிந்தோ தெரியாமலோ ஏற்க பழகிய மக்களே இன்றைக்குப் பரவலாக புலம்பெயர்ந்தவர்கள் அடையாளத்துடன் வாழுகின்றார்கள். இவர்களின் உணர்வுகள், அனுபவங்கள், துயர்கள், சங்கடங்கள், சந்தோஷங்கள் முற்றிலும் புதிய கண்ணோட்டத்தில் படைப்புகளாக வலம் வருகின்றன.

பொதுவாகவே இன்றைக்கு, தெற்காசிய எழுத்தாளர்களின் படைப்புகள் முன் எப்போதுமில்லாத அளவிற்கு மேற்கத்திய புத்தக விற்பனைக் கூடங்களிற் காணக் கிடைக்கின்றன. மேற்கத்திய மொழிகளில் குறிப்பாக ஆங்கிலத்தில் ஏன் பிரெஞ்சில்கூட இந்தியம் பேசுகின்ற படைப்புகள் நிறைய வருகின்றன. இவைகளுக்கு மேற்கத்திய நாடுகளில் அமோக வரவேற்பு.  இந்தியாவைக் களனாகக் கொண்ட படைப்புகள் சுலபமாய் விற்றுத் தீருகின்றன. ஆங்கிலத்தில் எழுதிய, எழுதும் இந்தியப் படைப்பாளர்களுள் ஆர்.கே நாராயணன், குஷ்வந்த் சிங், எம்.ஆர். ஆனந்த் இவர்களோடு சமீபகாலமாக அருந்ததிராய், விக்ரம் சேத், யு. ஆர் அனந்தமூர்த்தி, உபமன்யு சட்டர்ஜீ, ஆகியோரது படைப்புகளும் இங்கே நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. மேற்கத்தியர்களும் இந்தியமண்ணின் வரலாறுகள், நிகழ்வுகள், வாழ்வியல் நேர்மைகளைக் களனாகக்கொண்டு படைப்புகளை எழுதி வெற்றிபெறுகின்றார்கள் என்பதற்கு, போல் ஸ்காட், ஷரோன் மாஸ், பெத்தி கிறிஸ்டியன், வில்லியம் டால்ரிம்பிள், எரிக் தெஷொ- ழான் குளோது லாத்தே போன்றவர்களைக் குறிப்பிடமுடியும்.

ஆனால் மேற்கண்ட இரு கூட்டத்திலும் சாராமல், இந்தியாவிற் பிறந்து அமெரிக்காவிலும், மேற்கத்திய நாடுகளிலும் வாழ்ந்தபோதிலும் இரு நாடுகளையும் கருவாகவும் களனாகவும் கொண்டு ஆங்கிலத்தில் எழுதுகின்றவர்கள் அதிகரித்து வருகின்றார்கள். இவர்களுடைய எழுத்தில் தங்கள் மூதாதையர் மண்ணின் ஈரப்பதம் உலறாமல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதன் நிறைகளும் குறைகளும், இரத்தமும், தசையும் நரம்புமாக எழுத்தில் வந்துவிழுகின்றன. அதே குணத்தோடு குடியேறிய நாட்டுப் பிரச்சினைகளையும் துணிவோடு தெளிவாகச் சொல்ல முடிகிறது. தன் வாழ்நாளில் கணிசமாகவொரு பகுதியைப் பிறந்த நாட்டில் அல்லது சொந்த மண்ணில் கழித்துவிட்டு, எஞ்சிய ஆயுளை இன்னொரு மண்ணில் அல்லது இன்னொரு நாட்டில் கழிக்க நேரும்போது, அவனுடல் மாற்றத்தை ஏற்றுகொண்ட அளவிற்கு, அவனுள்ளம்  மாற்றத்தை ஏற்பதில்லை. உணர்ச்சிகள் மாற்றத்தைச் சுலபமாக ஏற்க, அறிவு விலகி நின்று போராடுகின்றது. இப்போராட்ட வாழ்க்கை முதற் தலைமுறையைச் சார்ந்த அனைத்து மக்களுக்கும் உண்டு. சுடர் மிகும் அறிவுள்ள அவன், அதன் நலங்கெடப் புழுதியில் எறிவதில்லை. மாறாகத் தனது அடையாளத்தை வெளிப்படுத்த அறிவைப் பயன்படுத்திக்கொள்கிறான். புலம்பெயர்ந்தவர்களிடம் கிடைக்கும் சொந்த நாட்டின் சிந்தனைகளும் வந்த நாட்டின் அனுபவங்களும் உலக இலக்கியங்களுக்கு ஓரு புதிய அனுபவத்தைக் கொடுத்துள்ளது.  உலகின் ஏனைய புலம்பெயர்ந்த எழுத்தாளர்களைப் போலவே சொந்த மண்ணின் உணர்வுகளை, அனுபவங்களை, பார்வைகளை எழுத்தில் வடிக்கும் படைப்புகளைக் கொண்டுவந்ததுபோக, வந்த மண்ணின் உணர்வுகளை, அனுபவங்களை, பார்வைகளை எழுத்தில் வடிக்கும் படைப்புகள் சமீபகாலங்களில் இத்தகு படைப்பாளிகளாற் பெருகிவருகின்றன.வி.எஸ் நேப்போல், சல்மான் ருஷ்டீ, கமலா மார்க்கண்டேயா, அனிதா தேசாய் போன்றவர்களும் பாங்களா தேஷைச் சேர்ந்த தலிமா நஸ்ரீன், இலங்கையைச் சேர்ந்த ஷியாம் செல்வதுரை போன்ற புலம்பெயர்ந்த படைபாளிகளைப் பார்க்கிறோம்.

தமிழிலும் இன்றைக்குப் புலம் பெயர்ந்த எழுத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.. தமிழ்நாட்டிற்கு வெளியே, சிலநூற்றாண்டுகளுக்கு முன்பு வேறு நாடுகளுக்குக்(சிங்கப்பூர், மலேயா,..) குடியேறி இன்றைக்கு அவற்றைத் தாய்நாடுகளாக வரித்துக்கொண்டு தமிழில் எழுதுபவர்கள் ஒருபக்கமெனில், சமீபத்தில் கட்டுரையின் ஆரம்பத்திற் குறிப்பிட்டதுபோன்று அரசியல் பொருளாதாரக் காரணங்களுக்காக உலகின் பலநாடுகளிலும் குடியேறி, புதிய கலாச்சாரத்தினைச் சந்தித்து அதனைத் தமிழில் சொல்பவர்கள் மறுபக்கமென இவர்களைப் பிரிக்கலாம். தாயக எழுத்தாளர்களில் சிலர் மிகச் சுலபமாக வைக்கும் குற்றச்சாட்டு, “அங்கேபோயும் அவர்கள் இதைத் தானே எழுதிக்கொண்டிருக்கிறார்கள்”, என்பது. இதற்கான பதில், “கொழும்பிலிருந்துகொண்டு மட்டக்கிளப்பு, கிளிநொச்சி என்று எழுதுவதற்கும், சென்னையிருந்துகொண்டு வடுகப்பட்டியையும், திருவரங்கத்தையும் எழுதுவதற்கும் தாயகத் தமிழர்களுக்கு என்ன உரிமையுண்டோ, நியாயங்கள் உண்டோ, அவைகள் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் உண்டு என்பதாகும். புலம்பெயர்ந்த எழுத்துக்கள் எதைச் சொல்கின்றன என்பதைவிட எப்படிச் சொல்கின்றன என்பதைப் பார்க்க வேண்டும். புலம் பெயர்ந்தவர்களின் சொற்கள் தமிழுக்குப் புதிது, எழுதும் பொருள் தமிழுக்குப் புதிது, களம் தமிழுக்குப் புதிது.

ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், கனடாவிலும், வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியாவென தமிழர்கள் பரவியுள்ள இடங்களிலிருந்து ஏற்கனவே தமிழுலகம் அறிந்த படைப்பாளிகளிடமிருந்தும், இளம் படைப்பாளிகளிடமிருந்தும் நல்ல தமிழில், அறிவியல், இலக்கியக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்பதாகப் பல தேர்ந்த படைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. தாயகத் படைப்பாளிகளுடன் இணைந்து, இணையக்குழுமங்களிலும் இணையத்தளங்களிலும் தமிழிலொரு முதிர்ச்சிபெற்ற இலக்கியச் சூழலுக்காகப் பங்காற்றிவருகின்றார்கள், உழைத்து வருகின்றார்கள்.

எனது படைப்புகள்

        அ. கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள்

கவிதை, கட்டுரைகள், மொழி பெயர்ப்புகள். சிறுகதைகள், நாவல்கள் என படைப்பிலக்கிய வடிவங்கள் எதுவாயினும் புலம் பெயர்ந்தவன் அடையாளத்தை அவற்றில் வெளிப்படுத்தியுள்ளேன். சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் எனப் பாரதியின் அன்புக் கட்டளைக்கேற்ப புலம் பெயர்ந்த வாழ்க்கையை ஓரு வாய்ப்பாக கொண்டு இயங்கி வருகிறேன், இந்தியாவில் இருந்து கொண்டு பிரெஞ்சிலிருந்தும், ஜெர்மனியிலிருந்தும், ஆங்கிலத்திலிருந்தும் ஸ்பானிஷ் மொழியிலிருந்தும் மொழி பெயர்ப்ப்வர்களைக் காட்டிலும், அம்மொழிகள் பேசும் மக்களுடனான வாழ்க்கையையும் பண்பாட்டையும் கூடுதலாக அறிந்த புலம்பெயர்ந்த மக்கள் நன்றாகவே மொழிபெயர்க்கமுடியும், தவிர நான் ஒரு எழுத்தாளனாகவும் இருப்பதால் மூல நூல் ஆசிரியர்கள் மனதை கூடுதலாக வாசிக்க முடியும்.அவ்வகையில் பிரெஞ்சு இலக்கியம் சார்ந்து தமிழில், இலக்கியத்தில் தேடுதல் வேட்கை உள்ளவர்களுக்கு தாகசாந்தியை அளிக்கின்ற வகையில் பல நூல்களை மொழிபெயர்த்துள்ளேன், அவ்வாறே கட்டுரைத் தொகுப்புகளும் வந்துள்ளன. குறிப்பாக பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன், எழுத்தின் தேடுதல் வேட்டை,  தத்துவத்தின் சித்திர வடிவம்,சிமொன் தெ பொவ்வார் ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அவ்வாறே பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு இதுவரை எட்டு மொழி பெயர்ப்புகள் வந்துள்ளன. அனைத்துமே பிரெஞ்சு இலக்கிய உலகில் தாக்கத்தை ஏற்படுத்தியவை. அவ்வாறே தமிலிருந்து பிரெஞ்சுக்கு அம்பையின் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். அவ்வப்போது தமிழ்ச் சிறுகதைகளை பிரெஞ்சு இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டி இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளை பிரெஞ்சுக்கு கொண்டுபோகிறேன்.

ஆ. சிறுகதைகள் நாவல்கள்

அரசியல் நெருக்கடியை முன்னிட்டு புலம்பெயர்ந்திருந்தாலும் சரி, வளமான வாழ்க்கையை எதிர்பார்த்து புலம்பெயர்ந்தாலும் சரி பிறந்த வளர்ந்த மண் அதன் கொடையாக கிடைத்த பண்பாடு, மரபுகள், அவற்றைப் பகிர்ந்து கொண்ட தன்னையொத்த மனிதர்கள், அவர்களின் அன்பு, அரவணைப்பு, பற்றிய ஏக்கங்கள், இறந்த கால நினைவுகள், வாழ்க்கை மொழிகள் ஓர் எழுத்தாளனிடத்தில் எதிரொலிக்கவே செய்யும், புலம்பெயர்ந்த மண்ணில் எதிர்கொள்கிற வாழ்க்கை நெருக்கடிகளையும், புலம்பெயர்ந்த மண்ணில் அவனை ஒத்திராத மனிதர்களிடம் மொக்குவிடுகிற உறவுகளையும் அவற்றின் ஈரம் மற்றும் , வறட்சிட்யையும் தனது பார்வையில் பதிவு செய்கிறான். இலக்கியம் என்பதே ஒருவன் தான் புலன்களாளல் உணர்ந்தவற்றை, மொழியின் துணைகொண்டு படைப்பிலக்கிய கலையாக வடித்தெடுத்து, அவ்வுணர்வை உள்வாங்கிக்கொள்ளும் சக மனிதருக்குக் கொண்டுசெல்லல். அதைச் சரியாகவே நான் செய்திருக்கிறேன். இதுவரை ஐந்து சிறுகதை தொகுப்புகளும், ஓர் அறிவியல் சிறுகதை தொகுப்பும் வந்துள்ளன. சிறுகதை தொகுப்புகள் நாவல்கள் அனைத்திலும் கதைக் களமாக புதுச்சேரியும், தமிழ்நாடும், பிரான்சும் இடம்பெற்றுள்ளன, அவ்வாறே கதைமாந்தர்கள், அவர்கள் இரு நாடுகளிலும் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் நாவல்களில் பேசப்படுகின்றன. ஏற்கனவே கூறியதைப்போன்று புலம் பெயர்ந்த மனிதர்களின் வேதனைகள், வலிகள் ஏக்கங்கள் படைப்பிலக்கிய கலையாக வடிக்கபட்டுள்ளது.

« முதல் நாவலான ‘நீலக்கடல்’ (2005), 16, 17ஆம் நூற்றாண்டுகளில் பிரெஞ்சுக் காலனியாக இருந்த மொரீசியஸ் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்ட புதுச்சேரிப் பிரெஞ்சு காலனிய மக்களின் வாழ்க்கைப் பாடுகளைப் பற்றிப் பேசுகிறது. மொரீசியஸ் தீவு என்ற, தமிழில் இதுவரை யாருமே தொடாத, புதிய களத்தில் காலூன்றிக் கொண்டு அந்த நாவல் நடக்கிறது. இது போலவே மாத்தாஹரி (2008), காஃப்காவின் நாய்க்குட்டி (2015), ரணகளம் (2018) ஆகிய நாவல்கள் பிரெஞ்சுக் காலனியாக இருந்த, புதுச்சேரியைக் களமாகக் கொண்டு ஐரோப்பா வரை நீளுகின்றன. கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (2012), நாயக்கர் காலச் செஞ்சியையும் புதுச்சேரியையும் களமாகக் கொண்டு இயங்குகிறது. இறந்த காலம் (2019) என்ற நாவல் புதுச்சேரிக்கு அருகில் இருக்கும் ‘ஆரோவில்’-ஐ இயங்கு களமாக அமைத்துக் கொள்ளுகிறது. இப்போது இந்த நாவல், –சைகோன் புதுச்சேரி– பிரெஞ்சு காலனியாக இருந்த இந்தோ சீனாவைத் (சைகோன்) தன்னுடைய புனைவு வெளிக்கான கதைக்களமாகக் கொண்டு ஒரு பேராறு போல நகர்கிறது.; ஒவ்வொன்றிலும் களத்தைத் தேர்ந்தெடுப்பதும், தகவல்களைத் திரட்டுவதும், தொடர்ந்து மொழிமயப்படுத்துவதுமென முப்பரிமாணங்களும் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய கிருஷ்ணாவின் இந்த எழுத்துப் பயணம் முழுவதிலும் நின்று செயல்படும் மற்றொரு முக்கியமான போக்கைக் கவனிக்க வேண்டும்; அதாவது அனைத்திலும் புதுச்சேரிப் பகுதியை ஏறத்தாழ 200 ஆண்டுகாலம் ஆண்ட பிரெஞ்சுக் காலனித்துவத்தின் கீழ் புதுச்சேரி மக்கள் பட்ட பெரும்பாட்டைத்தான் படைப்பாக்கித் தந்துள்ளார். இந்த அளவிற்குப் பிரெஞ்சுக் காலனித்துவத்தின் கோரமுகத்தையும் தமிழ் நிலப்பரப்பிலும் பண்பாட்டுக் கூறுகளிலும் அது நிகழ்த்திக் காட்டிய மாற்றங்களையும் அவற்றால் பெருவாரித் தமிழ் மக்கள் அடைந்த வலிகளையும் வேதனைகளையும் இலக்கியமாக்கித் தந்தவர்கள் நாம் போற்றும் பிரபஞ்சனும் நம் போற்றுதலுக்குரிய நாகரத்தினம் கிருஷ்ணாவும்தான்; இதிலும் பிரபஞ்சனின் களம் காலனிக்குள்ளான புதுச்சேரி நிலப்பரப்பு மட்டும்தான்; ஆனால் கிருஷ்ணாவின் களம் பிரெஞ்சுக் காலனிக்கு ஆட்பட்ட பல்வேறு வகையான நிலப்பரப்பென விரிந்தது என்பதையும் குறித்துக் கொள்ள வேண்டும். »

அண்மையில் வெளிவந்த சைகோன் புதுச்சேரி நாவலைக்குறித்து பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் கருத்து இது. 

நீலக்கடல் நாவல்(1)

பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கூலிகளாக அழைத்துச் செல்லபட்ட மொரீஷியஸ் தீவு தமிழர்களின் வாழ்க்கைச் சோகத்தை பேசுகின்ற நாவல். இந்தியாவில் பிரெஞ்சுக் காலனியாகவிருந்த புதுச்சேரியும், அதே காலத்தில் இந்துமா பெருங்கடலில் பிரெஞ்சு ஆட்சிக்கு உட்பட்டிருந்த மொரீஷியஸ் தீவும் கதைக்களம். பெர்னார் குளோதன், தேவயானி, பார்த்திபேந்திரன், காத்தமுத்து, துய்ப்ளே, ஆனந்தரங்கப்பிள்ளை என ஐரோப்பியரும், தமிழரும் கதைப் பாத்திரங்களாக இடம் பெற்றிருக்கின்றனர். 14, 17, 18, 20 நூற்றாண்டுகளில் கதை நடக்கிறது. உண்மையும், புனைவும் கை கோர்த்த படைப்பு.

« வெள்ளையர்களின் இதர ஊழியங்களுக்கு மதகாஸ்கர், கனாரித் தீவுகள் அடிமைகளைத் தவிர, தீவின் பூர்வீக மக்களும் மலிவாய் கிடைக்க, கட்டுமானப் பணிகளுக்குத் (கப்பல் கட்டும் லஸ்கர்கள், தச்சர், கொத்தனார், கொல்லர்) தனது தாய்நாடான பிரான்சிலிருந்து அழைத்துவந்து அதிக ஊதியம் கொடுப்பதைவிட ஒப்பந்தத் தொழிலாளர்களாகக் குறைந்த ஊதியத்தில் இந்தியர்களை அமர்த்திக்கொள்வது இலாபகரமானதென்று கருதினார். தவிர, செய்யும் தொழில்களில் தமிழர்களுக்குள்ள திறனும், நேர்த்தியும் அவரை ஆச்சரியப்படுத்தியது. இவர்களது திறனை வெகுவாக கம்பெனி நிருவாகம் மதிக்கத் தொடங்கியதால்,  பூர்வீக மக்களான மல்காஷ், கனாரிகள், கிறேயோல் மக்களின் வாழ்க்கை மோசமான நிலைக்குத் தள்ளப் பட்டது. பண்ணைகளில் இவர்களது வாழ்வு மிகப் பரிதாபமானதாக இருந்தது. மக்காச் சோளத்திற்கும் மரவள்ளிக்கிழங்கு மாவிற்குமாக, எஜமானர்களின் பிரம்படிகளுக்கு ஈடுகொடுத்து நாள் முழுக்க உழைக்கவேண்டியிருந்தது. தப்பிக்க நினைத்த அடிமைகளுக்குக் கறுப்பர் சட்டத்தின் (The Code Noir 1723)(4) கீழ்க் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. இதனால் பண்னையிலிருந்து தப்பிவரும் அடிமைகளுக்குப் புகலிடம் கொடுக்கும் கறுப்பர் ஒவ்வொரு நாளுக்கும் பத்து பியாஸ்தர்*** அபராதத் தொகையாகக் கட்டவேண்டும், அவ்வாறின்றி புகலிடம் கொடுப்பவர் வெள்ளையரென்றால் அவருக்கு மூன்று பியாஸ்தர் அபராதம். தவிர பண்ணையிலிருந்து தப்பிக்க முதன் முறையாக முயல்பவர்களுக்குப் பிடிபட்டவுடன் வழங்கப்படும் தண்டனை, கைதிகளின் இரு காதினையும் அறுத்தெறிவது. இரண்டாவது முறை அவர்கள் தப்பித்து பிடிபடும் பட்ஷத்தில் மரண தண்டனை விதிக்கபடும். »

« கரும்புப் பண்ணையிலே வேலையென்று அழைத்துச் சென்றார்கள். நாலுமுழவேட்டியை அவிழ்த்துவிட்டு அவர்கள் கொடுத்த நீலநிற நீண்ட காற்சராயைப் போட்டுக்கொண்டு பாதங்களில் துணியைச் சுற்றிக்கொண்டு, கரும்புகளை வெட்ட ஆரம்பித்தபோது, சுலபமாகத்தானிருந்தது. ஆனால் சுணங்காமல் தொடர்ந்து வெட்டவேணுமென்று ஒருவன் காட்டுக் கூச்சலிட்டபோது இடுப்பிலும், தோளிலும் விண் விண்ணென்ற வலி. நிமிர்ந்தான். முதுகில் சுளீரெனச் சாட்டையடி. விழுந்தது. வலி பொறுக்கமுடியாமல் கீழேவிழுந்தவனை, எழுந்திருக்க வைத்து, கறுப்புக் கங்காணி மீண்டும் சாட்டையைச் சொடுக்கினான். பக்கத்திலிருந்தவர்கள் எதுவுமே நடாவாததுபோல் கரும்பு வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். தூரத்திலிருந்த பறங்கியன் சிரிக்கிறான். கருப்பங்கழிகளை பிடித்து ஓய்ந்திருந்த இடதுகை எரிந்தது. உள்ளங்கையைப் பார்க்கிறான். கரும்பின் அடிக்கட்டைச் சோலைகளும், கணுக்களும் கிழித்ததில் தசைப் பிசிறுகளுடன் இரத்த வரிகளை இட்டிருக்கின்றன. மீண்டும் முதுகில் சுளீரென்று விழுகிறது.. இம்முறை சில்லென்று ஆரம்பித்து, பிறகு உஷ்ணத்துடன் திரவம் பரவுகிறது. முதுகிலும் இரத்தமாக இருக்கலாம். ….. சொந்த மண்ணுல, கிராமத்துல, உடையார் ஆண்டை எப்போதும் இப்படி அடிச்சதில்லை. அப்படியே அடிச்சிருந்தால்கூட. மஞ்சளை இழைச்சு வீரம்மா பத்துப் போட்டா, மறுநாள் வீக்கங்கள் காணாமப் போயிடும்….கண்காணாத தேசத்துல இருந்த, அவனது பெண்ஜாதி வீரம்மா ஞாபகத்திற்குவந்தாள். புதுச்சேரி வெள்ளைக்காரன்கிட்ட பஞ்சத்திற்கு விற்றிருந்த, பிள்ளைகள் ஞாபகத்திற்கு வந்தார்கள். தான் ‘படியாளாக’விருந்த, கம்பத்துக்காரர் உடையார் ஞாபகத்திற்கு வந்தார். அவர் சகதர்மிணி மனோரஞ்சிதம் அம்மாள் ஞாபகத்திற்குவந்தாள். கடைசியாக சேரியின் பச்சைவாழியம்மன் ஞாபகத்திற்கு வந்தாள். திரும்பவும் அவர்களையெல்லாம் பார்ப்போமா? என்று நினைத்து அழுதான்…. இவ்விடத்தில் வந்ததினத்திலிருந்து முப்பொழுதும் நின்றால், உட்கார்ந்தால், வேலையில் சுணக்கமென்றால் முதுகில் சுளீர் சுளீரென சாட்டையினால் விளாசுகிறார்கள். அவற்றைத் தாங்குவதற்கு இனியும் அவன் சரீரத்திற்குத் தெம்பில்லை. இவனருகில் கரும்பு வெட்டிக்கொண்டிருந்த மற்ற கூலிகளுக்கு அடிகள் பழகியிருந்தன. அவர்கள் வேக வேகமாகக் கரும்பினை வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவனுக்கு இடுப்பில் முள் குத்துவதுபோல வலியெடுக்கத் தொடங்கி, முதுகுத்தண்டில் சிவ்வென்று மேல் நோக்கி நகர்ந்து இருபுரமும் சமனாய் இறங்குகிறது. முதுகு முழுக்க கன்றிப்போய், திகுதிகுவென்று எரிகிறது, இரண்டொரு ஈக்கள் எப்படியோ மோப்பம்பிடித்து, முதுகை வட்டமிடுகின்றன. உட்கார்ந்து விட்டான். பார்த்துவிட்ட கறுப்பன் – கங்காணி ஓடிவந்தான். சாட்டையை மறுபடியும் சொடுக்கினான். அவன் கைகளைப் பாம்பு பிடுங்க. கயிற்றில் நுணியில் இறுக்கியிருந்த தோற் பின்னல் இவனது முதுகுப்பரப்பின் புண்ணை ருசிபார்த்தவண்ணம் முடிந்தவரை ஓடி மீண்டது. சுருண்டுவிழுந்தான் ».

மாத்தாஹரி(1)

இருபதாம் நூற்றாண்டில் புதுசேரியிலிருந்து பிரான்சுக்குத் தனது காதல் கணவனுடன் குடியேறிய பவானி என்ற பெண்ணின் வாழ்க்கை, முதல் உலகப்போரின்,பெண் உளவாளியென பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு கொலைசெய்யபட்ட மாத்தா ஹரி என்ற பெண்ணின் வாழ்க்கை இரண்டும் ஒரு பொது இழையால் நெய்யப்பட்டது என்பதைத் தெரிவிக்கும் புனைவு.  

«  தேவா, என்ன பழையபடி ஆரம்பிச்சுட்ட..மாத்தா ஹரியைப் பத்தி உனக்கு என்ன தெரியும், கொஞ்ச நாட்களுக்கு முன்னால, நேரு பூங்காவில இரவு பத்துமணிக்குமேலே நீ இருந்த நிலைமையை வைத்து, தேவா என்பவன் இப்படித்தான் என்று ஒரு தீர்மானத்துக்கு நாங்க வந்திட முடியுமா? வேறொரு நாடா இருந்தா அதற்கேகூட உன் தலையை வாங்கிவிடமுடியும். பவானியை நெருங்கமுடியாதுண்ணு சொன்ன.  இப்போது வேறுவிதமாகச் சொல்ற. மாத்தா-ஹரி நிறைய கனவுகளுடன் வளர்ந்தவள். வயது வித்தியாசம் பாராமல் ராணுவ அதிகாரியை மணந்துகொண்டது எதற்காகவென்று நினைக்கிற. கப்பல் ஏறிப் பயணம் செய்யவும், இந்தோ சீனாவை சுற்றிப்பார்க்கவுமா? ருடோல்ஃப்·பென்ற ஆண்வர்க்கத்தை எதிர்த்து அவள் வழியில் நியாயம் தேடி இருக்கிறாள். ஐந்துபேருக்கு மனைவியாக இருக்கிறவள் உத்தமப் பெண்மணியாகவும் இருக்க முடியுமென்பதை உங்க மகாபாரதம் நியாயப்படுத்துமெனில், எனக்கு மாத்தா-ஹரியும் உத்தமி. நீ மெச்சுகிற பவானியை நாளைக்கே பிரான்சுக்கு அழைத்துப்போய், மாத்தா ஹரிக்கான நெருக்கடியைக் கொடுத்துப்பார், என்ன நடக்கிறதென்று தெரியும். »

 கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி(2)

        புதுச்சேரி பிரெஞ்சுகாலனியாக இருந்தபோது செஞ்சியை ஆண்ட கிருஷ்ணப்ப நாயக்கர் என்ற மன்னர்கால சம்பவங்களை அடிப்படையாக கொண்டு பின்னப்பட்ட புனைவு. இந்நாவலும் இந்தற்கு முந்தைய நாவல்களைப் போன்றே பதினெட்டாம் நூற்றாண்டு இருபதாம் நூற்றாண்டு என இருகாலத்தையும் இணைக்கின்ற நாவல், வழக்கம்போல உண்மை புனைவு என இரு கூறுகளையும் உள்ளடக்கிய புதினம்.

« படுக்கையிலிருந்து பிமெண்ட்டா எழுந்து உட்கார்ந்தார். கண்களைத் துடைத்தார். காலையில் முடிந்த அளவு வேளையாய்க் கோவிலுக்குப் போகவேண்டுமென வேங்கடவன் கூறியிருந்தான். பயண அலுப்பும்  வெப்பமும் வழக்கத்தைக்காட்டிலும் கூடுதலாக கண்ணயர செய்துவிட்டன. முழங்காலில் நின்று: « அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காண்பியும்;உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். உம்மை புகழிடமாகக் கொள்ளுகிறேன். உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக. ஆமேன் », என சிலுவைப்போட்டுக்கொண்டு எழுந்தார்.

காலைக் கடனை எங்கேயாவது வெளியிற்சென்று முடிக்கவேண்டும், நிர்ப்பந்தமில்லை காத்திருக்கமுடியும். திரையை விலக்கி கூடாரத்தின் மறுபக்கம் நுழைந்தார். முழங்கால் தோய தரையில் அமர்ந்திருந்த நடுத்தரவயது பெண்மணி எழுந்து  பவ்யமாக கும்பிடுபோட்டாள். பெரிய பாத்திரமொன்றில் வெந்நீர் வைத்திருந்தது. “நீ போகலாம்” என்று கையை அசைத்ததும் அவள் மீண்டும் இடுப்பை மடித்து மார்புகள் தொங்க வணங்கி கால்களைப் பின்வாங்குவதுப்போல நடந்து சென்று மறைந்தாள். ஒரு துவாலையைச்  சுடுநீரில் நனைத்து சரீரத்தைக் கைகளைத் துவளவிட்டு அழுத்தத் துடைத்து திருப்தியுற்றவராய் தமது சேசுசபையினருக்குரிய அங்கியை அணிந்து இடுப்பில் சுற்றியிருந்த நூல் கயிற்றை இறுக்கி முடிச்சுபோட்டார். மேசையிலிருந்த தொப்பியை ஒருமுறைக்கு இருமுறை தலையில் பொருத்தி தமக்குத்தானே நிறைவு கண்டவராய் புன்னகைத்துக்கொண்டார். பாடம் செய்த தோலில் குறிப்புகளை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்துக்கள் ராச்சியத்தில் குறிப்பாக தென்பகுதிகளில் எழுத உபயோகிக்கும் ஓலைசுவடிகளும், எழுத்தாணியும் அவருக்கு வசதியாக இருந்ததோடு எளிதில் கிடைக்கக்கூடியவைகளாக இருந்தன. நான்கைந்து ஓலை நறுக்குகளையும், எழுத்தாணியைம் மறக்காமல் அங்கியிலிருந்த பையில் போட்டுக்கொண்டார். ஒவ்வொரு நாளும் தமது அலுவல் பற்றிய முழுவிபரத்தையும் எழுதிவைத்து பின்னர் சேசு சபையினரின் பொதுச்சபைக்கு அதை அனுப்பவேண்டிய கடமைகள் இருந்தன. அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார். அருகிலிருந்த மேசையில் ஒரு தட்டில் கிழங்கும், அடையும் இருந்தன. அதனை வேண்டாமென்று தவிர்த்துவிட்டு கூடாரத்தின் வாசலில் மனிதர் மனிதர் நடமாட்டம் தெரிவதுபோலிருக்க; யாரங்கே! என குரல் கொடுத்தார். »

காஃப்காவின் நாய்க்குட்டி(3)

இலங்கை, இந்தியா (புதுச்சேரி), பிரான்சு, முன்னாளில் செகோஸ்லோவோகியா என அழைக்கபட்ட இன்றைய ‘செக்’ ஆகிய நாடுகளைக் களமாகக்கொண்டு எழுதபட்ட நாவல். ஈழத்தைச்  சேர்ந்த நித்திலா வாகீசன்; இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட ஹரிணி, பாலா, சாமி; பிரான்சு  நாட்டைச்சேர்ந்த அத்ரியானா, ஆக பிறந்த தேசத்தாலும் பண்பாட்டாலும் எதிரெதிர் துருவத்தைச் சேர்ந்த மனிதர்களைக் கொண்டு பின்னப்பட்ட புனைவு.

« காவல் அதிகாரியின் மேசைக்கெதிரே இரண்டு நாற்காலிகள். முதல் நாற்காலியில் அவர்கள் அழைத்துவந்த பெண் உட்கார்ந்ததும், ஹரிணி இரண்டாவது நாற்காலியில் அமர்ந்தாள். பெண் வலது கையில் தலையைத் தாங்கியவளாக இருந்தாள். உருண்டைமுகம், அலட்சியமாக ஊன்றியிருந்த கைக்கிடையில் ஒற்றைப்பின்னல் ஊசலாடியது. கருஞ்சிவப்பாக இருந்த உதடுகள் வெடித்தும் மென்தோல் உரிந்தும் இருந்தன. நெற்றியில் மிளகு அளவில் சாந்துப்பொட்டு. அவள் விழிகளைக் குறுக்கிப் பார்க்கிறபோதெல்லாம் சாந்துபொட்டு இருபுருவங்களுக்கும் இடையிலிருந்த குழியில் உட்காருகிறது. காவல்துறை அதிகாரிகள் கவனத்திற்குப் போகாது என்பதுபோல தனது வலதுகைகொண்டு அப்பெண்ணின் இடதுகையை பற்றினாள். அப்பெண் ஹரிணியை ஏறிட்டுப் பார்த்தாள். முதன் முறையாக அப்பெண்ணின் முகத்தில் இறுக்கம் குறைந்திருந்தது. அவள் கண்களில் ஸ்விட்சைபோட்டதுபோல பிரகாசம்.

“இதற்கு முன் வந்திருக்கிறீர்களா?” – காவலதிகாரியின் கேள்வி சூழலை உணர்த்திற்று. அவசரமாக தலையைத் திருப்பி, அவர் கேட்டதைப் புரிதுகொண்டவளாய்:

“இல்லை! இதுதான் முதல் முறை.” – என்றாள்.

” மிஸியெ கிருஷ்ணாவுக்குப் போன் செய்தேன். அவரால் வரமுடியாதென்றார். வேறு யாரேனும் உதவுவார்களா என்றுஅவரிடம் கேட்டிருந்தேன். அவர் உங்களைத் தொடர்பு கொண்டிருக்கிறார்” – காவல் அதிகாரி.

“ஆம் கிருஷ்ணதான் எனக்குத் தகவலைத் தெரிவித்தார்” – ஹரிணி.

” பெண்ணின் பெயர் நித்திலா? சரிதானா எனக்கேளுங்கள்?”

” நான் மொழிபெயர்ப்பதற்கு முன்பாகவே, நித்திலா என அழைக்கபட்ட அப்பெண் “ஓம்” என்றாள்.

” இதுபோன்ற முதற்கட்ட விசாரணையின்போது, குற்றம் சாட்டப்ட்டிருப்பவருக்கென்று சில உரிமைகள் இருக்கின்றன. அவை இந்தத் தாள்களில் இருக்கின்றன. அவற்றை பெண்ணிடம் விளக்கிசொல்லுங்கள். “

காவலதிகாரி நீட்டியதாள் கைக்கு வந்ததும், “நான் படித்துப் பார்க்கட்டுமா” என அவளிடம் ஹரிணி கேட்டாள். பெண்ணிடம் முதன் முறையாக பூ பூப்பதுபோல ஒரு சிரிப்பு. அதைச் சம்மதெமென்று எடுத்துக்கொண்டு இவள் கடகடவென்று வாசித்து முடித்தாள். பிரெஞ்சு குற்றவியல் சட்டம் “Art. L. 611-1-1. – I –விசாரணக்குட்படுத்தப்படும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சில உரிமைகளை வழங்கியிருந்தது: “மொழி பிரச்சினையெனில், மொழி பெயர்ப்பாளரை வைத்துக்கொள்ளலாம், விசாரணக்கு உட்படுத்தபட்ட நபர் ஒருவழக்கறிஞர் உதவியை தமது விருப்படி சொந்தச் செலவிலோ அல்லது வழக்கறிஞர்கள் சங்கத்திலிருந்து அரசுச்செலவிலோ கேட்டுப் பெறலாம். விசாரணைக்கு முன் மருத்துவர் உதவியும் கேட்கலாம். நண்பர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு அவள் தடுப்புக் காவலில் இருக்கிற செய்தியை தெரிவிக்கலாம், காவல்துறை அதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்” என்றிருந்தவற்றைத் தெரிவிக்க இரண்டொரு நிமிடங்கள் ஹரிணிக்குத் தேவையாய் இருந்தன.

காவலதிகாரி தடுப்புக்காவல் பற்றிய நேரத்தைத் தெரிவித்திருந்த பதிவேட்டில் பெண்ணைக் கையெழுத்திடக் கூறினார். ஹரிணியை ஒருமுறை கையெழுத்திடலாமா? என்பதுபோலப் பார்த்துவிட்டு, தயக்கத்துடன் கைஎழுத்திட்டாள். ஹரிணி கையொப்பத்தையும் அதில் வாங்கிக்கொண்டு, விசாரணையை ஆரம்பிப்பதுபோல விசைப்பலகையில் அவர் விரல்கள் சென்றன ».

இது தவிர ரணகளம், இறந்தகாலம்(3) நாவலிலும் இந்தியா, பிரான்சு, புலந்த மக்களின் வாழ்க்கை, அவர்களின் வலிகள் என்று பேசுபவை.

« எங்கள் கப்பலில் பெரும்பாலும் வெள்ளாழ கிறிஸ்துவர்கள்தான். அவர்களும் புதுச்சேரிகாரர்களாக இருந்தார்கள்.  ரெட்டியார் பாளையம் நெல்லித்தோப்பிலிருந்து வந்தவர்களில் நம்ம சாதி சனங்களைப் பார்த்தேன். கடல் கடந்து போகிறோம் என்பதால் எல்லோரும் பிற பயணிகளிடம் சகஜமாக பேசிப்பழகினார்கள்.  கப்பலில் இருந்து இறங்கியபோது, அரசாங்க மனிதர் ஒருவர் எங்களை அழைத்துச் சென்று விடுதியொன்றில் தங்க வைத்தார். அதன் பின்னர், மாமாவுக்குச் சிப்பாய் வேலை குதிர்ந்ததும், வாடகைக்கு வீடு பார்த்து குடியேறியதும் மளமளவென்று நடந்துமுடிந்தன. முதல் நாள் எங்களுக்கு வழங்கப்பட்ட உணவு என்ன தெரியுமா, பன்றிக்கறியுடன் கூடிய சேமியா சூப். இங்கு அதை நூடில்ஸ் என்கிறார்கள். மாமா சாப்பிடத் தயங்கினார். சுப்புராயன் ஃபெலிஃஸ் சுப்புராயனாக அவதாரம் எடுத்து நாமும் பரங்கியரும் ஒன்றென ஆனபிறகு பின்வாங்கலாமா எனக் கேட்ட தும், மனிதர் வீம்பாக உட்கார்ந்து அதைச் சாப்பிட்டார். அன்றையதினம் அவற்றையெல்லாம் தொடவில்லையே தவிர அதன் பிறகு எல்லாவற்றையும் முகம் சுளிக்காமல் உண்ண நானும் பழகிக்கொண்டேன்.

எங்களுக்கு கிடைத்த வாழ்க்கை. கூடப்பிறந்த உங்களுக்கோ, நெல்லித் தோப்பில் வாழ்ந்த எங்கள் அண்டைவீட்டாருக்கோ, பள்ளியில் என்னுடன் படித்த சினேகிதிகளுக்கோ எளிதில் கிடைக்காத வாழ்க்கையென்று, எவ்வளவு கர்வம் மனதில் இருந்தது தெரியுமா?   இதுபோன்றதொரு வாழ்க்கை அமைந்ததற்கு நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று உன் மாமாவுக்கும் மகிழ்ச்சி. இட்ட உறவு எட்டு நாளைக்கு என்பதுபோல, எல்லாமே கொஞ்ச நாட்கள்தான்.

சரி இப்போது எப்படி? சொல்லவேண்டுமில்லையா. எங்களுக்கு வயிற்றுக்குத் தீனி கிடைக்கிறது, ஆனால் மனதைப் பட்டினிப் போட்டுக்கொண்டிருக்கிறோம்.  பசிக்கு உணவுகிடைக்கிறது, ருசிக்கு ஏங்குகிறோம். புதிய உறவுகளை நெருங்கி, பழைய உறவுகளிடமிருந்து விலகியிருக்கிறோம்.காடுகளும், மலைகளும், நதியும் கடலுமான பூமி என்கிறார்கள். ஆனால் வறட்சியும் வெப்பமும் என் மனதைத் தகிக்கிறது. உறியடி வாழ்க்கை. கைகளில் கம்பும், கண்களில் மறைப்பும், கால்களில் தடுமாற்றமுமாக இலக்கின்றி வீசும் கம்பு காற்றில் அலைகிறது. உன் மாமன் எடுத்த முடிவை காலில் விழுந்தேனும் தடுத்திருக்கலாமோ என தற்போது நினைக்கிறேன். ‘வுங் டோ’ கடற்கரைக்குச் சென்றிருந்தேன். தென் சீனக் கடலின் அலைகள் என்னைகண்டதும் வா வா புதுச்சேரிக்கு அழைத்துபோகிறேன் என்பது காதில் விழுந்தது. நீரில் இறங்கினேன். விவரம் புரியாமல்கணவர் உட்பட அங்கிருந்த பலரும் தற்கொலை முயற்சி என்றார்கள். இறப்பு தவிர்க்கமுடியாதது என்கிறபோது எப்போது இறந்தாலென்ன.  சொந்தமண்ணைப் பிரிந்து வாழும் வாழ்க்கையும் தற்கொலையும் ஒன்றுதான். நினைவுகளும் ஏக்கமும் நெஞ்சை இறுக்க, அவற்றின் கைகளை விலக்க விருப்பமின்றி, காலவிரயத்துடன் கூடிய புதியவகைத் தற்கொலையை நடைமுறைபடுத்திக்கொண்டிருக்கிறேன்.    

பிள்ளைகள் பிரெஞ்சு பேசுகிறார்கள், வியட்நாம் மொழி பேசுகிறார்கள். என் கணவருக்குத் அவர்கள் தமிழ் கற்க வாய்ப்பில்லை என்பது குறை. சுப்பராயன் ‘ஃபெலிஃஸ்’ என்றும் வேதவல்லி, ‘ஆன்’ என்றும், வேட்டி காற்சட்டை என்றும், சேலை கவுனென்றும் ஆனபிறகு; மாமன் என்றும் அத்தை யென்றும், தாத்தா வென்றும் பாட்டியென்றும் கூப்பிட உறவுகள் இல்லை என்கிறபோது அவர்கள் பேசினாலும் அத் தமிழ் இனிக்குமா என்ற சஞ்சலமும் எங்களுக்கு இருக்கிறது.  மேலும் மேலும் ஏதாவது எழுதி, எனது கவலையை உங்களிடம் இறக்கிவைப்பதில் எவ்வித நியாயமுமில்லை. இது நாங்களாகத் தேடிக்கொண்டவாழ்க்கை.  சன்னலை மூடிவிட்டு வாழப் பழகிக் கொள்ளவேண்டும். பழகிக்கொண்டிருக்கிறேன். » (இறந்த காலம் நாவலில் இருந்து)

நாவலின் தன்மையையையும் அவற்றின் போக்கையும் நாவல்களிலிருந்து சாட்சியமாக கொடுக்கப்பட்டுள்ள இப்பகுதிகள் புலப்படுத்தும், இலக்கியத்தில் அழகியல் என்பது வர்ணைனைகள்  மடுமல்ல வலிகளும் துயரங்களும்கூடத்தான், அவை அகம் புறம் இரண்டையும் பேசவேண்டும். புலம்பெயர்ந்த மனித உள்ளங்களின் உணர்வுகளை முடிந்த அளவு மொழிபடுத்தியுள்ளேன்.

        எதிர்காலத்தில் எப்படியோ, எங்கள் சந்ததியினரில் எத்தனை விழுக்காட்டினர் தமிழில் எழுதவும், மொழிபெயர்க்கவும் செய்கிறார்களோ என்னவோ தமிழிலக்கியவரலாறு, இந்த நூற்றாண்டில் புலம்பெயர்ந்த தமிழர்களால் முக்கியத்துவம் பெறும். தாயக ஏக்கமும், குடியேற்ற நாடுகளில் அவன் சந்திக்கின்ற பிரச்சினைகளும் படைப்புகளின் தரத்தைக் கூட்ட உதவும்.

அவ்வாறே மொழி பெயர்ப்பிலும் புலம்பெயர்ந்தவர்கள் கணிசமானப் பங்கினை ஆற்றமுடியுமென நம்புகிறேன்.  எந்த எழுத்தையும் மொழிபெயர்க்கும்பொழுது, மூலமொழியை வாங்கிக்கொள்ளும் திறனும் சொந்தமொழியில்  அதை வெளிபடுத்தும் ஆளுமையும் அவசியம். மொழி அறிவோடு, மூல ஆசிரியனின் காலம், சமூகம், கலாச்சாரம் பற்றிய அடிப்படை அறிவில் தெளிவாக இருக்கவேண்டும். இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மன், நோர்வே, கனடா என வாழும் தமிழர்கள் முயன்றார்களெனில் பல நல்ல படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வரமுடியும்.

————————————————–

  1. நீலக்கடல், மாத்தஹரி நாவல் இரண்டும் பரிசில் வெளியீடு, சென்னை.
  2. கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, ரணகளம், இறந்த காலம் மூன்று நாவல்களும் சந்தியா பதிப்பகம், சென்னை.
  3. காஃப்காவின் நாய்க்குட்டி, காலச்சுவடு பதிப்பகம்
  4. சைகோன் – புதுச்சேரி டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

———————————————————————————————————————

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s