எழுத்தாளர் பெருமாள் முருகன் தமது பூக்குழி நாவலில் ஓரிடத்தில் கதை நாயகி சரோஜாவால் பேசாமல் இருக்கமுடியாது என்பதைச் சொல்ல :
« இருப்பதிலேயே பெரும் சிரமம் பேசாமல் இருப்பதுதான் » என எழுதுகிறார். உண்மைதான். மனிதர் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களுக்கு, பேச்சு வித்திட்டிருக்கிறது: உறவோடு நட்போடு அன்பை வெளிப்படுத்த, மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள, காதலைச் சொல்ல, துன்பத்தை இறக்கிவைக்க, கோபத்தைக் காட்ட, விருப்பத்தைத் தெரிவிக்க, வேண்டியதைப் பெற, வேணடாததை மறுக்க, பேசாமல் இருக்க முடியாதுதான். ஆனால் பேச்சின் வீச்சுக்கு எல்லையுண்டு. எதிரிலிருப்பவரை மட்டுமே பேச்சு எட்டும், அவர்கள் ஒருவராக இருக்கலாம், இருவராக இருக்கலாம், மேடைபேச்செனில் ஒரு பெருங்கூட்டத்தை நோக்கியும் அமையலாம். ஆனால் எழுத்து அப்படி அல்ல, அது பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களைக் குறிவைப்பது. கடல்கடந்து ஐரோப்பாவரை நண்பர் பெருமாள் முருகனைக் கொண்டுவந்திருப்பது பேச்சு அல்ல அவருடைய எழுத்து. அது கைதட்டலை மட்டும் நோக்கமாகக் கொண்டதல்ல. பல நூற்றாண்டுகள், தலைமுறைகள் கடந்து மனிதவாழ்க்கையோடு கைகோர்த்து வழிநடத்துவது. மனிதம், தம் குடிலாக அமைத்துக்கொண்ட சமூகம், அதன் பகலுக்கும் இரவுக்கும் அமைத்துக்கொண்ட அல்லது வகுத்துக்கொண்ட நெறிகள் இவற்றால் உற்றதை பெற்றதை, நொந்ததை நோகாததை, வெறுமனே சாட்சியாளனாக அல்லது பார்வையாளனாக சம்பவத்தைக் கடந்துவிடாமல், அதனை மனதில் நிறுத்தி வாதப் பிரதிவாதங்களை முன்வைத்து, தம் மனதிடம் விவாதிக்க தீர்ப்பு, எழுத்தாகிறது. நெஞ்சு பொறுக்காத, சகிக்காத விஷயங்கள் பல நேரங்களில் எழுத்தாக அவதாரம் எடுக்கின்றன.
பூக்குழி முன்னுரையில் நூலாசிரியர் பெருமாள் முருகன் :
« வாழ்வை ஒரு கோணத்தில் அணுகுவதை முதன்மையாக்கிப் பிற கோணங்களையும் கொண்டுவந்து முரண்களைக் கூர்மையாக்கிக் காட்டும் தன்மையில் எழுதப்பட்டது இது. பருண்மையல்லாத கருத்துக்களின் பிடிமானமும் அவற்றைக் காப்பாற்ற எதையும் செய்யத் தயாராக இருக்கும் வெறி நிலையும் என்னை வியப்படையச் செய்கின்றன ; சலிப்புறவைக்கின்றன. ஏன் நாம் வேறுபாடுகளை முன்னிலை படுத்துகிறோம் ? அவற்றை இயல்பாகக் கடந்து அன்போடும் மகிழ்ச்சியோடும் வாழ இயலாதா ? நம் சிந்தனையின் குறுகலுக்குக் காரணம் என்ன ? இந்தப் பிரபஞ்சம் தன் விரிவை ஏன் நமக்குள் நடத்தவில்லை ? » எனத் தம்மிடம் வினவுகிறார்.
பிரெஞ்சு மண்ணில் வொல்த்தேர் ரூஸ்ஸோ போன்றவர்கள் தங்கள் சமூகம் சார்ந்து எழுப்பிய கேள்விகளும் இவை போன்றவைதான், அவர்களது எழுத்துக்கள்தான் பிரெஞ்சு முடியாட்சியை முடித்துவைத்து அரசியல் சமூக மாற்றங்களுக்கு வித்திட்டன. பெரியார் போன்றவர்கள் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராடினார்கள், இருந்தும் விழித்தோமா என்றால் இல்லை. அதிலும் இந்தியாவில பிறபகுதிகளில் எப்படியோ நானறியேன், ஆனால் எழுத்தாளர் சுட்டுவது போன்று தமிழ்ச் சமூகத்தில் அடித்தட்டு மக்களிடம் உலகில் வேறெங்கும் காணாதவகையில் இன்றுங்கூட உண்பது நாழி, உடுப்பவை இரண்டு என்கிற அடிப்படைத் தேவையில் அக்கறை கொள்ளுகிறார்களோ இல்லையோ ஆனால் உள்ளம் முழுக்க சாதிய வெறியும், வன்மமும், சொத்தையான உயர்வு தாழ்வு நெறிமுறைகளுக்கு அடிமைகளாகவும் வாழ்வது தொடரவே செய்கிறது. எனவே நண்பர் பெருமாள் முருகனின் படைப்புகள் அனைத்துமே அழுக்கடைந்த தமிழ்ச்சமூகத்தை ‘வெள்ளாவி வைத்து’ வெளுக்கவேண்டும் என்கிற அக்கறையோடு ஆர்வத்தோடு எழுதப்பட்டிருக்கின்றன, அவருடைய கதையாடலும் இநோக்கத்தை முன் மொழிவதாக உள்ளது.
நண்பர்களே ! கதையாடல் என்றசொல் பல கூறுகளை உள்ளடக்கியது, தமிழ் இலக்கணம் வகுத்துள்ள முதற்பொருள், கருப்பொருள், உரிபொருளுக்குறிய பண்பாடுகளில் கதையாடலை நிகழ்த்துவது. நிலம், நிலம் எதிர்கொள்ளும் காலம், தட்பவெப்பம், அதற்குறிரிய மனிதர்கள், அவர்களின் கல்வி அறிவு, சமூகச் சூழல், சுற்றுச்சூழல், மரபு என்கிற சாரங்களை உள்ளடக்கி புனைவை கட்டமைப்பது. நேற்றைய கதையாடலில் காவியங்ளைப் படைத்தவர்கள், பெரும் இலக்கியங்களைக் கட்டமைத்தவர்கள் சராசரி மனிதர்களைக் கணக்கில் கொள்வதில்லை.இது ஏதோ கீழைத்தேச உண்மை மட்டுமல்ல மேற்கத்திய மொழிகளான ஆங்கிலம் பிரெஞ்சு,ஸ்பானிஷ் மொழிகளிலும் பின்பற்றபட்ட உண்மை. மன்னர்களையும், பிரபுக்களையும் அண்டிவாழ்ந்து, அவர்கள் தயவில் பசியாறவேண்டிய நெருக்கடியிலிருந்த படைப்பாளிகள் கோமான்களையும் சீமான்களையும் கதைமாந்தர்களாக முன்நிறுத்தி அவைக்களத்தில் பாடவேண்டிய நிர்ப்பந்தத்தில் அவர்கள் இருந்தனர், தவிர கதை நாயகனும், கதை நாயகியும் அகவாழ்க்கை, புறவாழ்க்கை இரண்டிலும் களங்கமற்றவர்களாக, ஒழுக்க சீலர்களாக சித்தரிக்கப்பட்டனர். மாறாக எதிர் மாந்தர்கள், ஒழுக்கக் கேடர்களாக சித்தரிக்கபட்டு, அதனால் அவர்கள் இறுதியில் அடையும் தீப்பயனை சொல்பவையாக இருந்தன. கடந்த சில நூற்றாண்டுகளாக நிலமை சீரடைந்துள்ளது. மனிதர் வாழ்க்கையில் பெரும் மாறங்கள் நிகழ்ந்துள்ளன. முடியாட்சியை, நில உடமையாளர் செல்வாக்கை, மரபுகளின் பெயரால் ஆட்டம்போட்ட ஆதிக்கச் சக்திகளை இன்று புரட்சி, விடுதலை, சுதந்திரம் போன்ற சொற்களும் அவற்றின் வீச்சும் குழிதோண்டி புதைத்துள்ளன.
கதைமாந்தர்கள், களம், இவற்றில் பெரும் மாற்றத்தைக்கான்கிறோம். இன்றைய புனைகதைகளில் இராமயண இராமனையோ, இராவணனையோ தனித்தனியாக சந்திக்க முடிவதில்லை, ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்களில் வரும் பிரபுவாக கூட அவர்கள் இருக்கலாம், அதுபோல சீதையை கங்காவாக கூட நாம் எதிர்கொள்ளலாம், காலம் மாறிவிட்டது.
பெருமாள் முருகனின் கதை மாந்தர்களும் நமது சமூகத்தின் இடைமாந்தர்கள், அடித்தட்டுமக்கள். நாம் அன்றாடம் எதிர்வீட்டில், வீதியில், பேருந்தில், கடைகண்ணியில் சந்திக்கின்ற மனிதர்கள். இன்று தமிழ்ச்சூழலில் பேதங்ளில் அக்கறைகொண்டவர்களாக அதிகம் இருப்பவர்கள் படித்தவர்கள் இல்லை, பாமர மக்கள். கலப்பினத் திருமணம் கலவரத்தில் முடிவது, நகரத்தில் இல்லை, கிராமங்களில். கோமணம் கட்டும் மனிதர்களிடையே குத்தும் வெட்டும். இந்த நரகத்திலிருந்து விடுதலை பெறுவது எப்போது ? சமூக அக்கறைகொண்ட ஓர் எழுத்தாளனுக்கு தன் இனத்தின் மீது அக்கறை இருப்பது இயல்பு, தமிழினம் மேன்மக்களாக மாறுவதென்பது உடலழுக்கை வெளுப்பதில் இல்லை உள்ளம் வெளுக்க வேண்டும். எழுத்தாளர் பெருமாள் முருகன் அதைத்தான் நம் எழுத்தூடாக வற்புறுத்துகிறார்.
மாதொருபாகன், ஏறுவெயில், இன்று பூக்குழி அனைத்துமே தமிழ் சமூகத்தின் பாசாங்குளை வெளிச்சத்திற்கு கொண்டுவருகின்றன. குறைகளைச் சுட்டுவதால் ஆசிரியம் மீது கோபம் வரும், யோசித்துப் பார்த்தால் அவருடைய அக்கறையில் நூற்றில் ஒருபங்கேனும் நமது சமூகத்தின் மீது நமக்குப் பற்றுதல் இருப்பின் நமது செயலுக்கு வருந்துவோம்.
பூக்குழி நாவலின் முன்னுரையில் தன் மனதில் எழுந்த கேள்விக்கு விடையாக க் கிடைத்தக் கருப்பொருளை கதையாக படைக்கும் ஆசிரியர் அவருடைய கதையாடலுக்குரிய நிலத்தையும் பொழுதையும் மனிதர்களையும் உரையாடலையும் அமைத்துக்கொள்கிறார். இவை ஒரு படைப்பின் வெற்றிக்கான காரணிகள்.
« பொழுது உச்சியிலிருந்த வெயில் வேளையில் சரோஜாவும் குமரேசனும் பேருந்திலிருந்து இறங்கினார்கள். சாலைப் புளியமரங்களைக் கடந்து விழுந்த பார்வையில் பொட்டல் காடுகள் பரந்து தெரிந்தன. எட்டிய தொலைவு வரைக்கும் வீடு எதுவும் கண்ணில் படவில்லை. கானல் அலையடிக்க அந்தரத்தில் வெள்ளைச் சேலைகளை விரித்துவிட்டது மாதிரி வெயில். ஆள் நடமாட்டத்தையே காணோம். பறவைச் சத்தங்களும் இல்லை. எங்கும் அனல் தீய்ந்த சாம்பல் தூவல்.நுழைந்து செல்ல தயங்கினாள். » இது பூக்குழி நாவலின் தொடக்கம் இது. நூலின் பாயிரம்போல அமைந்துள்ள முதல் பத்தி போதும் நாவலைப் புரித்துகொள்ள. ஒருவகையில் நாயகி சரோஜாவுக்கு நேரும் துன்ப முடிவை இப்பகுதி சூசகமாகமாகக் கோடிட்டுக் காட்டுகிறது. அதுபோல முதன்முதலாக சரோஜா குமரேசனைக் கண்டபோது, « சாம்பல் பூத்த நெருப்புக் கங்கு ஒரே ஊதலில் ஜொலிப்பது போலிருந்தது »என்கிற வரியும், தனது காதலனால் நேரவிருக்கும் அவளது முடிவை பூடகமாக தெரிவிப்பதுதான். ததவிர நாவலெங்கும் எதிர்கொள்ளும் ‘புழுதி’, ‘வெக்கை’, சுடுகாடு’, புதைகுழி, சமாதி, மொட்டக்காடு, வெயில், கொடுமழை, ஒப்பாரி, தலையெரிக்கும் வெயில், கானக்காடு போன்ற சொற்களும் நாவலின் தன்மையை வாசகருக்கு நினைவூட்டுகின்றன.
கதைமாந்தர்கள் :
பூக்குழி நாவலில் ஓரிடத்தில் ஆசிரியர் இப்படி எழுதுகிறார் :
« அப்பனும் அண்ணனும் வேலை செய்யும் கம்பெனிக்கு அவள் போனால் வலிந்து பேச ஆட்கள் நிறையபேர் வர்வார்கள். அவர்களின் முகங்கள் எல்லாம் ஒரேமாதிரி அவளுக்குள் பதிந்திருந்தன. ஒரே ஆண்முகம். யாருக்கும் வேறுபாடில்லை. அவளால் ஒருவரையும் நினைவில் இருத்திக்கொள்ள முடிந்ததில்லை. குமரேசன் வேறாகத் தெரிந்தான். »உண்மைதான், ஆசிரியர் சொல்வதைபோன்று நாம் நித்தம் நித்தம் சந்திக்கிற ஆயிரக்கணக்கான மனிதர்களிடை வேறாகத் தெரிகிறவர்களே கவனம் பெறுகிறார்கள், நமது தேடலைப் பொறுத்து விடையாகக் கிடைக்கின்ற முகங்களே நமக்கு வேண்டியவர்களாக நம்மை நெருங்கி வருகிறார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட மனிதர்களின் குணத்தை எப்படித் தீர்மானிப்பது. குமரேசன், சரோஜா, « எந்தலயில கல்லதூக்கிப் போட்ட்டுட்டியேடா » எனக் கத்திக்கொண்டே ஓடிவந்து மகன் குமரேசனையும், அவன் காதலித்துகூட்டிவந்த மருமகளையும் வரவேற்கும் குமரேசனின் அன்னையையும் பிற கதைமாந்தர்களையும் நாவலுக்கேற்ப ஆசிரியர் தேர்வு செய்திருப்பதை, அவர்களின் பேச்சுகளும் செயல்பாடுகளும் முன்னிறுத்துகின்றன.
பொதுவாக நெருக்கடி காலங்களில்தான் மக்களின் உண்மை குணம் வெளிப்படுகிறது. அவசரத்தேர்வுகளை எதிர்கொள்ளும் போதுதான், மனிதர்கள் எங்கனம் உண்மையில் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. இது வாழ்க்கையில் உண்மை, கற்பனைக் கதாபாத்திரங்களுக்கும் இது பொருந்தும்.. கதாபாத்திரங்களும் கதையும் புனைவென்கிறபோதும் உண்மை இல்லாமல் புனைவு ஏது. குமரேசனுடனான சரோஜாவின் உடன்போக்கு, குமரேசனின் தாய், முட்டை சாயபு, குமரேசனின் அப்புச்சி, அம்மாயி அனைவருமே தமிழ் நாடு கிராமங்களில் சந்தித்த சந்திக்க முடிகிற மனிதர்களே. கதாபாத்திரங்களின் இயல்பைக் காட்டுவதற்கான சிறந்த வழி, அவர்கள் மீது ஒரு தேர்வைத் திணிப்பது… அவர்கள் எந்தப் பாதையில் செல்கிறார்கள் என்பதைப் பார்ப்பதுதான். தனிப்பட்ட ஆதாயத்திற்காக மற்றவர்களைக் காயப்படுத்துகிற குமரேசன் தாய்மாமன் பாத்திரமும் நமக்குப் புதிது அல்ல. இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும் நேரத்தில்தான் மனித முகங்கள் அடையாளம் பெறுகின்றன நமது தேர்வுகள் நம்மை மட்டும் பாதிக்காது. அவை நம்மைச் சுற்றியுள்ளவர்களை பாதிக்கின்றன. அவை நம் வாழ்க்கையின் போக்கை பாதிக்கின்றன. புனைகதையிலும் அப்படித்தான். கதாபாத்திரங்கள் தேர்வு மிகமுக்கியமானது. அதை நண்பர் பெருமாள் முருகன் தேர்ந்த படைப்பாளிக்குரிய அவதானிப்புடன் நன்றாகவே செய்திருக்கிறார்.
அதுபோல ஆசிரியர் கதைமாந்தர்கள், கதைக்களம், நிகழும் கணம் இவற்றுக்கு உரிய மொழியில் சொல்லாடலையும்,உரையாடலையும் கையாண்டிருப்பது நாவலுக்குக் கூடுதல் பலத்தை அளிக்கிறது, உதாரணமாக :
« பொழுது சாயற நேரத்துல ஆட்டப் புடிச்சிக் கட்டுவா, மாட்டப்புடிச்சுக்கட்டுவா, புரசனுக்குத் தண்ணிக்குதீப்போடுவா, சோத்துக்கு ஒலவைப்பா. அவ குடியானச்சி. இது பொழுதோட நேரத்துலே சீவிச் சிங்காரிச்சுக்கிட்டு நிக்குதே. காட்டூரு தெருவுல பாரிவதான் இப்ப்டி நிப்பாளுவ. அந்தக் கூட்டத்துலருந்து ஒன்னப் புடிச்சாந்து வெச்சிட்டானே . இவனுக்கு சோத்துல மருந்த கலந்து குடுத்திட்டாளா. இந்த மருந்த எந்த வையித்தியங்கிட்ட போயி எடுப்பன் நானு. எத்தன காசு செலவு பண்ணுவன் . எம்பையன் எனக்குக் கிடைப்பானா. இல்ல, இந்த எச்சக் கலயோடதான் இருப்பானா.. »
என சரோஜாவின் மாமியார் புலம்பலைக் கண்டு நமக்குக் கோபம் வருவதில்லை, இயல்பாக எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.
. ———————————————————————————————