
« உப்பரிகையின் மேல் நின்று வானத்தைப் பார்த்தாள் கோகிலாம்பாள். வானம் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதாகப் பட்ட து அவளுக்கு. அப்படியே கையை உயர்த்தினாள். வானம் கைக்கு வசப்ப்டவில்லை. வானத்தை யார்தான் தொடமுடியும் ? அது என்ன விரித்த ஜமுக்காளமா அல்லது பாயா, எக்கித்தொட ? »
– மானுடம் வெல்லும் நாவைல் தொடக்கம், ஆசிரியர் பிரபஞ்சன்
« அதொரு ஞாயிறு காலை. வருடம் 1920. அமெரிக்காவின் கிழக்கு பெனிசில்வேனியாவைச்சேர்ந்த மிடில் ஹோப் பகுதி. ஜோன் ரிச்சர்ட்ஸ் எழுந்திருக்க மனமின்றி மெத்தனமாகப் படுக்கையில் கிடந்தவள், நிதானமாக இமைகளை உயர்த்தி கண்களை முழுமையாகத் திறந்திருருந்தாள். பார்வை ஜன்னலில் சுள்ளென்று காய்ந்துகொண்டிருந்த ஜூன் மாத கதிரவனிடத்தில் இருந்தது.குப்பென்று ஒரு பரவசம் உடலுக்குள் பாய்ந்தது. கல்லூரியில் இறுதியாண்டு முழுக்க இனியும் தானொரு இளம்பெண்ணல்ல என்ற எண்ணத்துடனும் ஒரு முதிர்ந்த பெண்ணுக்குரிய வாழ்க்கையை எதிர்பார்த்தும் பதற்றமுடன் காத்திருந்தவள் அவள், திரும்ப தான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு, வாழ்க்கையைத் தொடர வந்திருக்கிறாள்.»
இது பெர்ல் – எஸ் – பக், என்ற படைப்பாளியின் the Time is Noon அல்லது நண்பகல் நேரம் என்கிற நாவலின் தொடக்கம் .
இரண்டு எழுத்தாளர்கள் இரு வேறு பண்புக்குச் சொந்தக்காரர்கள். இரு நிலம் சார்ந்த சமூகத்தின் பெண்களை அறிமுகபடுத்துகிறார்கள். இரு பெண்களும் நிலம் காலம்,சமூகம் சமயம் ஆகியவற்றால் வேறுபாடுகளைக் கொண்டவர்கள். ஆனாலும் அடிப்படை மனித உணர்வில் வேறுபட்டவர்களல்ல. இருவருக்கும் தங்கள் வாழ்க்கைசார்ந்து சில உண்மைகளும் நம்பிக்கைகைகளும் இருக்கின்றன. இரு பெண்கள் ஊடாகவும் அவர்கள் சார்ந்த சமூகங்கள் ஊடாகவும் விதிக்கப்பட்ட வாழ்க்கைமுறையை சொல்வதும் விமர்சனம் செய்வதும் நூலாசிரியர்களின் நோக்கம். இலக்கியங்களின் குறிக்கோளும் இவைதான்.
நண்பர்களே ! உலகில் மிகவும் சிக்கலான நூல்கண்டு , எது என்று என்னைக் கேட்டால் அது மனிதன் என்பேன். இப்பிரபஞ்சத்தில் மிகவும் மர்மமான பூமி அல்லது மர்மதேசம் என்று ஒன்றிருக்குமானால், அது மனிதர் வாழ்க்கையாகத்தான் இருக்க முடியும். உடல் கண்ணாடியாக, தெளிவாகத் தன்னை விளங்கவைக்கும் பொருளாக இருக்குமெனில் எக்ஸ்ரேவோ பிற பரிசோதனைகளுக்கோ எந்த அவசியமும் இல்லை. மனிதரும் மனிதர் வாழ்க்கையும் அப்படிப்பட்டது. அதற்கும்` எக்ஸ்ரே தேவைப்படுகிறது பரிசோதனைகள் தேவைப்படுகின்றன. இப்பரிசோதனை முடிவுகளே இலக்கியம். மனிதர் வாழ்க்கையை, மனிதரை எளிதாக புரிந்துகொள்ள முடியுமானால் இலக்கியத்திற்கான அவசியமே இல்லை. « அதுதான் தெரியுமே ! » எனக் கடந்து போயிருப்போம்.
கலையும் இலக்கியமும் மனிதரை மகிழ்விக்கப் பிறந்தவை என்பதும் உண்மைதான். புலன்களைக் கடந்த இன்பத்திற்கு உரியவை. அவை எழுத்துப் பேச்சென என எந்த வடிவத்திலும் இருக்கலாம். எழுத்தோ பேச்சோ இலக்கியம் ஆவது, காற்று தென்றலாவதுபோல நடபெறும் வினை. வீட்டில் அடைந்து கிடகும் மனதிற்கு வெளி உலகையும் புதிய மனிதர்களையும் அறிமுகப்படுத்தும் கலை. பல ஆயிரம் மைல்கள் பயணித்து பல நாடுகளுக்குச் சென்று, பல காலம் பழகியும் புரிந்துகொள்ள இயலாத மனிதர்களை, அவர்களின் பண்பை, குணாதிசயங்கள் சில மணிநேர வாசிப்பில் புரிய வைப்பது. அனைத்திற்கும் மேலாக நம்மை நாமே உரசிப்பார்த்து தெளிவுற உதவும் கட்டளைக்கல்.
இந்த இலக்கியத்திற்குப் பல முகங்கள் இருக்கின்றன. எல்லாமனிதர்களும் அடிப்படைபண்பில் ஒன்றுபோல தோற்றம் தரினும் பூகோள இருத்தல், காலம் அரசியல், பொருளாதாரக் காரணங்களுக்கேற்ப, சமூகச் சூழலுக்கொப்ப சிலபண்புகளைக் கொண்டிருக்கின்றனர். மனிதரையும் மனிதர் வாழ்க்கையைப் பேசுகிற இலக்கியத்திலும் இந்த ஒன்றும் பலவும் உண்டு. நிறத்தால், சமயத்தால், இனத்தால், பிறந்த மண்ணால், எந்த பெயரில் வாழ்ந்தாலும், எந்த நாட்டில் வாழ்ந்தாலும் மனிதருக்குப் பசியுண்டு. காதலுண்டு. மனிதர்கள் அனைவரிடமும் காணக்கூடிய அடிப்படை பண்பு இது. இதுவரை பிரச்சனைகளில்லை. ஆக மனிதரின் அடிப்படைத் தேவைகளில் ஒற்றுமை இருக்கிறது. தேவை தீர்வுக்கான பொருள்களிலும், அதனைத் தேடும் வழிமுறைகளில் மனிதர்கள் வேறுபடுகிறார்கள். இலக்கியத்தேடுதலிலும் அடிப்படைத் தேவைகளில் ஒற்றுமை இருப்பினும் அதைத் தேடுகின்ற வகையில் வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த வேறுபாடுகளால்தான் சொந்தமொழியில் வாசித்தது போக மொழி பெயர்ப்புகளையும் தேடி வாசிக்கிறோம். பிறமனிதர்களிடம் கை குலுக்குகிறோம், அவர்களை புரிந்துகொள்ள முயற்சி செய்கிறோம்.
ஒருபடித்தான உருவங்கள், காட்சிகள் அலுத்துவிடும், குழப்பம் தரும். மனிதர்கள் அனைவரும் நகல் எடுத்ததுபோன்று நூறுகோடிபேரும் சின்னசாமி ஆகவோ பெரியசாமி ஆகவோ இருந்தால் என்ன நடக்கும், யோசித்துபாருங்கள். ஆக அகத்திணையில் ஒற்றுமையும் புறத்திணையில் வேற்றுமையும் இருக்கிறது. காலம், அரசியல், சமூகம், இயற்கை, தட்பவெப்பநிலைக்கேற்ப உயி வாழ்க்கை அமைவது போல மனிதனையும் மனிதர் வாழ்க்கையையும் பேசும் கலை இலக்கியமும் காலம், அரசியல், சமூகம் சூழலுக்கொப்பத் தன்னை எழுதிக்கொள்கிறது.
இலக்கியம் படைத்தல் என்பது ஓர் அறிவு சார் தொழில். பாரதி சுடர் மிகு அறிவு என்கிறான். இப்படித்தான் எழுதவேண்டுமென மொழி நதிக்கு இலக்கணம் கரையிடுகிறது, அம்மொழி நதியை சுதந்திர வெள்ளமாகப் பாய்ந்தோடச்செய்வது இலக்கியம். புனைவிலக்கியம் அதிலொன்று. படைப்பாளி கோவலனுக்கு வாய்த்தமாதவி அவள், ஊடலுமுண்டு, கூடலுமுண்டு. சிறுகதையாக முடிந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள அனுமதியும் தரலாம். பெருங்கதையாக நீண்டு வேர்வையும் சிந்தலாம்.
புனைவு என்பது இட்டுகட்டுவது ஆயினும், இட்டுக்கட்டியதை உண்மையென நம்பும்படிச் செய்வது புனைவிலக்கியத்திற்கான அறம். எழுத்தின் தொனி, இலை மறை காயாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள், கதைசொல்லி, கதைமாந்தர்கள், கற்பனை என்ற பெயரில் முன்வைக்கப் படும் உண்மைகள் அல்லது பொய்கள் அனைத்தும் நாம் அறிந்த அல்லது அறியாத மனிதர்களை நாமாகவும், அவர்களின் வாழ்க்கையை நம்முடையதாகவும் நம்பவைக்கும் தந்திரத்தில் புனைவெழுத்தின் வெற்றி அடங்கியுள்ளது. கண்ணகியையும் கோவலனையும், ரோமியோவையும், ஜூலியட்டையும் இன்றுவரை நினைவுகூற முடிகிறதெனில், நம்பகத்தன்மையை வாசிப்புதோறும் ஏற்படுத்துவதால்தான். இந்த நம்பகத் தன்மையே புனைவிலக்கியத்தின் பிற பண்புகளை கூடுதலாக சிலாகிக்க உதவுகிறது. சிலப்பதிகாரம் மணிமேகலை போன்றவைகளெல்லாம் அந்தந்த நில மக்களின் தனித்தன்மையான பண்பாட்டைக் கூடுதலாகப் பேசின. இன்றைய புனைவிலக்கியங்களில் ஒரு பன்முகபண்பாடு கலந்திருக்கிறதென்பது வெளிப்படை.
இன்றைய புனைவுலகப்போக்கு குறிப்பாக நாவல்கள் பற்றி எனது கருத்தை பகிர்ந்துகொள்வதுதான் எனது நோக்கம். கிழக்கென்று எடுத்துக்கொண்டாலும் தமிழ் நாவல்களையே கூடுதலாக வாசித்துள்ளேன். ஒன்றிரண்டு ஜப்பானிய படைப்புகளை அவை பெரும்பாலும் எழுத்தாளர் முராகாமியின் படைப்புகள். பிரெஞ்சு மொழியில் வெளிவந்த வியட்நாமிய பெண் எழுத்தாளர் டு யோங் த்யூ யோங் பெண்மணி படைப்பொன்றையும் வாசித்துள்ளேன். மேற்கெனில் ஆங்கிலம் பிரெஞ்சு இரண்டு மொழி நாவல்களையும் பல காலமாக வாசித்துவருகிறேன். எனினும் கிழகிலும் மேகிலும் பல ஆயிரம் நூல்கள் வந்துள்ளன. கம்பன் வார்த்தையில் சொல்வதெனில் இத்தமிழ்ப்பூனை சுண்டெலியைப் பிடிக்க நேரத்தை செலவிட்டு, இலக்கிய பாத்திரத்தை உருட்ட தவறியது அதிகம்.
கீழை நாடுகள் தொடக்கத்தில அவைகளுக்கென தனி பண்புகளைக்கொண்டே இருந்திருக்கின்றன. சீன இலக்கியம் ஆறாம் நூற்றாண்டிலும் ஜப்பானியர் இலக்கியம் 11 ஆம் நூற்றாண்டிலும் தொடங்கியதாக இலக்கிய வரலாறுகள் தெரிவிக்கின்றன. நம்முடைய ஐம்பெரும் காப்பியங்களைப்போல இவை சமயம், புத்த பிட்சுகள், துறவிகள், அறம் என்று பேசின. உரைநடை இலக்கியத்தை அவை நமக்கு முன்னதாக கண்டிருக்கின்றன எனத் தெரிய வருகிறது. புனைவிலக்கிய அணுகுமுறைகளில் புதிய புதிய கலை நுட்பங்களை புகுத்தி வியப்பில் நம்மை ஆழ்ந்துவது மேற்குலகம் என்கிறபோதும் முதல் உரைநடை புதினத்தை ஜப்பானியர்கள் படைத்தார்கள் என்கிற தகவல் கீழைதேயத்தவர்களுக்குப் பெருமைதரும் செய்தி. நூலின் பெயர் கெஞ்சியின் கதை. நூலாசிரியர் ஒரு பெண், பெயர் முராசாகி ஷிக்கிபு. இன்றைய நவீன படைப்பில் காணக்கூடிய பல்வேறு அம்சங்களை ஆசிரியர் கையாண்டிருப்பதும், மேட்டுகுடியினர் பின்புலத்தைக் கொண்ட ஆசிரியரே பிரபுக்களின் இழிவான நடவடிக்கைகளை விமர்சிப்பதும் நாவலின் சிறப்பு. காரணம் படைக்கப் பட்ட காலம் பதினோறாம் நூற்றாண்டு
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரதாப முதலியார் சரித்திரம் தொடங்கிவைத்த தமிழ் புனைவிலக்கியபோக்கு ஆரோக்கியமாகவே இருக்கிறது. தமிழ் புனைவுகளில் இன்று எதார்த்த நாவல்கள், சமுக நாவல்கள், வரலாற்றுப்புதினங்கள், சுற்றுச்சூழல் நாவல்கள், பின் காலனித்துவ புனைவுகள், எனப் பல்வகையான புதினங்களக் காண்கிறோம். ஒடுக்கப்பட்டமக்களின் கலக குரலாக ஒலிக்கும் எழுத்துக்களும் அதற்குரிய நியாயமும் தமிழ்ப் புதினங்களின் போக்கை உயர்த்தி இருக்கிறதென்கிற உண்மை பெருமைக்குரிய விடயம்.
ஓநாயொன்று ஆட்டைக் கடித்து மாட்டைகடித்து ஊருக்குள் நுழைந்து மனிதரையும் கடித்ததுபோல, இன்று உலகமயமாதல் என்ற ஓநாய், புறவுலகைக் கடித்த காலம்போய் மனித இனம், தமது நிலம், தட்பவெப்பம் சார்ந்து வகுத்துக்கொண்ட அறத்தை,பண்பாட்டை, ஒழுக்கத்தை கடிக்கின்ற காலம். மனித குலம் அவரவர் மண்சார்ந்து, பின்பற்றிய பண்பாடுகளில்கூட ஒருவகையான மரபணு மாற்றத்திற்குட்பட்ட அக்கறை சீமை வாழ்க்கைமுறை. இம்மாற்றம் நம்முடைய எழுத்துக்களிலும் இன்றில்லாவிடினும் நாளை எதிரொலிக்கவே செய்யும்.
படைப்பிலக்கியத்தில் அதிகம் ஆராதிக்கபடுகிற அல்லது புதியவகை படைப்பு முறையை அதிகம் அறிமுகப்படுத்தியவர்களென நம்பப்படுகிறவர்கள் பிரெஞ்சு படைப்பிலக்கியவாதிகள். எனவை பிரெஞ்சு இலக்கிய உலகின் தற்போதையை படைப்புகள் எதுபற்றி பேசுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வது, ஒருவகையில் மேற்குலக இலக்கியவெளியை புரிந்துகொள்ளும் முயற்சி.
பிரெஞ்சு, ஆங்கிலம், ஸ்பானிஷ் மொழிகள் தொன்மையில் தமிழுக்குப் பிந்தியவை. சங்கத் தமிழ் கோலோச்சிய காலத்தில், மேற்குலக மக்கள் தங்களுக்கான மொழியைச் செம்மைபடுத்தப் போராடிக்கொண்டிருந்தார்கள். எனினும் நாம் யாப்பிலக்கணத்தைக்கொண்டு கவிதைகள், நாடகங்கள், காப்பியங்களை எழுதிக்கொண்டிருக்க, மேற்குல வாசிகள் செக்குமாடுகள் வாழ்க்கையில் அலுத்து அறிவியல் தேடலுடன் தங்கள் தினசரிகளைப் புதுப்பித்துக் கொண்டது போல இலக்கியத்திலும் தேடலில் இறங்கினார்கள். பானை,சட்டியிலிருந்து குக்கருக்கும், கட்டுமரத்திலிருந்து கப்பலுக்கும் இலக்கியத்திலும் அவர்களால் தாவ முடிந்தது. மானுடவியல், பிளேயாது(Pléade), பரோக், செம்மொழி இயல், அறிவொளி இயக்கம், அபத்தவியல், இருத்தலியல், கட்டமைப்பு இயல், புனைவியல், புது புனைவியல், எதார்த்தம், மீ எதார்த்தம், நவீனத்துவம், பின் நவீனத்துவம், பின்காலனியத்துவம், பின்-பின் நவீனத்துவம் எனப் பல மைல்கற்களைக், கடந்து இன்று வேறு தேடலில் மேற்குலகு இறங்கியுள்ளது. இதுபோன்ற முயற்சிகள் தமிழிலும் நிகழ்ந்திருக்கலாம், அது முளையிலேயே கிள்ளப்பட்டிருக்க அதிகம் வாய்ப்புண்டு. நம்முடைய அறிவுப்புலம் குரு சிஷ்யர்கள் உறவு சார்ந்தது இல்லையா ? பாரதிக்கு முன்பாக, ஒரு பாரதி ‘சொல் புதிது பொருள் புதிது’ என நினைத்து, எழுதியதை தனது குருவிடம் காட்டி, அவருடைய அசீர்வாதத்தைப் பெற நினைத்திருக்கலாம். குரு என்ன சொல்லியிருப்பார்( ஒரு கற்பனைதான்) « போடா அதிகபிரசங்கி, இப்படியெல்லாம் எழுதப்படாது » என எச்சரித்து அவனது ஓலை நறுக்கை அக்கினிக்குத் தானம் செய்திருக்கலாம்.
ஔவை சொல்லாததை, காக்கைப் பாடினியார் எழுத த் தயங்கியதை இந்த நூற்றாண்டு தமிழ்ப் பெண்படைப்பாளிகள் துணிச்சலாகப் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். இருந்தும், இன்றுங்கூட மாற்றங்களுக்குப் பல நேரங்களில் கதவுகள் அடைக்கப்படுகின்றன. கதவடைத்தலுக்குப் பின்னே ஒளிந்துள்ள மனமாச்சரிய குணம் நியாயமானதா ? எந்த ஒரு படைப்பும் அனைவரையும் திருப்திபடுத்த சாத்தியமில்லை. கசப்பதும் ருசிப்பதும் அவரவர் சுவை நரம்புகள் சார்ந்த விடயம்.
இன்று பிரெஞ்சு படைப்புலகில் நடப்பதென்ன ? முதலாவதாக பாலுறவை அப்பட்டமாக பேசும் படைப்புகள். இது போன்ற படைப்புகள் பிரெஞ்சு மொழிக்குப் புதிதல்ல என்கிறபோதும் இன்று அது வேறொரு பரிமாணத்தைத் தொட்டுள்ளது. மனிதர்களும் விலங்கென்ற உண்மையை உறுதிபடுத்த முனைந்ததைப்போல தகாத பாலுறவுகளை, ஓரினச் சேர்க்கையை மையப்படுத்திய அப்பட்டமாக பேசுகிற, சில நேரங்களில் அருவருப்பும் ஊட்டுகிற வகையில் ஒருசில புனைவுகள் இருக்கின்றன. சந்தை அரசியலை அடிப்படையாக க் கொண்ட உலகில், மனித மனங்கள் காட்சி ஊடகம், சமூக ஊடகமென அடிமைப்பட்டுக் கிடக்க அவர்களை விடுவிக்கும் தந்திரமாக நெருப்போடு விளையாடுகிறார்களோ என்கிற வினாவும் அடிமனதில் எழுகிறது. வேறு சிலரோ இனவாதம் நிறபேதமென அலைகிறார்கள். மிஷெல் ஹூல்பெக் (Michel Houellebecq) ஆற்றல்மிக்க படைப்பாளிகளில் ஒருவர், அவருடைய மொழி ஆளுமையும், இலக்கிய திறனும் நாடறிந்தது, ஆனால் அண்மைக்காலமாக அவருடைய படைப்புகள், பிரெஞ்சு மக்களின் எதிர்காலம் இசுலாமியத்தால் பாழ்பட்டுவிடும் என்பதுபோன்ற கருத்துக்களை முன்னெடுக்கும் விதமாக இருக்கின்றன. ரெனார் கமுய் (Renard Camus) தொடக்க காலத்தில் தீவிர இடதுசாரி, இன்று தீவிர வலது சாரி. ஒருபாலின சேர்க்கையில் ஆர்வம் கொண்ட ஆசாமி, அருவருக்கத் தக்க தம்முடைய பாலுறவு நாட்குறிப்புகளை இலக்கியம் என்ற பெயரில் பகிர்ந்துகொள்கிறார். அண்மைக்கால வாலது சாரி கொள்கைகளுக்கு ஏற்ப அந்நியர்களால் பிரான்சு தமது அடையாளத்தை இழந்துவிட்டதென்கிற புலம்பலும் அவரிடமுண்டு.
இத்தகைய இலக்கிய சூழலில் கற்பனைவளம், மருட்சிப்புனைவு, ஆச்சரியங்கள் போன்றவற்றைத் தேடி மீண்டும் தொன்மம், தூரதேசம், எனப் பயணிக்கிற ஒன்றிரண்டுபேர் இல்லாமலில்லை. அவர்களில் ஒருவர், பிரெஞ்சு இலக்கிய உலகின் மிகப்பெரிய பரிசு எனக் கூறப்படும் 2021 கொன்கூர் பரிசை வென்ற முகம்மது புகார் சார்(Mohammed Mbougar Sarr). இவர் ஒரு ஆப்ரிக்கர், செனெகல் நாடு பூர்வீகம்.
—————————————