
அல்பெர் கமுய்யுடைய(Albert Camus) ‘புரட்சியாளன்’ (‘l’homme révolté’ ) என்ற கட்டுரை நூலை பிரெஞ்சிலிருந்து மொழி பெயர்த்தபோது இந்த ‘எஜமானடிமை’ என்ற சொல், மனதில் உதித்தது. ‘எஜமான் – அடிமை தொழில் நுட்பம்’ (Master – slave technology) கணினி சார்ந்த சொல்லும் கூட. ஒரு நுண்பொருளின் பயன்பாடு எஜமான் (நுண்பொருள்)-அடிமை(செயலிகள்) உறவின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அல்பெர் கமுய் மனிதர்கூட்டத்தை எஜமான் அடிமையெனப்பிரித்து புரட்சிக்கான காரணங்களை அடுக்குகிறார். என்னுடைய கருத்தில் ‘எஜமானடிமைகள்’ எஜமானுமல்ல அடிமையுமல்ல. எஜமானாகப் புறத்திலும் அடிமையாக நிஜத்திலும் வாழ்பவர்கள். எஜமான்போல வேடம் தரித்திருப்பவர்கள். இவர்கள் அலுவலங்களில் தலைமைக் கணக்காளராக இருக்கலாம், மேனேஜராக இருக்கலாம், வட்டாசியரில் ஆரம்பித்து மாவட்ட ஆட்சியராவும் இருக்கலாம், கட்சிகளில் மாவட்ட செயலாளரில் ஆரம்பித்து ஏன் கட்சித் தலைமை ஆகவும் இருக்கலாம். ஆனாலும் இவர்களுக்கு ஏதோ சிலகாரணங்களை முன்வைத்து எஜமான்கள் என்ற ஹோதாவுடன் தங்கள் தங்கள் அரியாசனத்தில் இருந்தவாறே வேறு சிலருக்கு அடிமைகளாக இருக்கவேண்டிய நெருக்கடி. உரிமைகள் குறித்த உணர்வைக்காட்டிலும் தேவைகள், ஆசைககள் மீதான பற்றுதல் இவர்களுக்கு அதிகம். உரிமைவிழிக்கிறபோது ஆறுதல் தாலாட்டுப்பாடி அவ்வுரிமையை உறங்கவைப்பவர்கள். இதுபற்றிய ஒரு நீண்ட கட்டுரை எழுதி மலைகள் இணைய இதழில் வந்திருக்கிறது. இவர்களின் உள்மன வேட்கையை உணர்ந்து மேடையில் செங்கோலைக் கொடுத்து தலையில் மலர்க்கிரீடம் சூட்டுகின்ற தந்திரக்கார ர்களுக்கு அல்லது வெகுசனவழக்கில் ‘அல்லக் கைகளுக்கு’ உண்மையில் இந்த எஜமானர்கள் அடிமைகள். இக்கருத்தை மையப்படுத்தி எழுதப்பட்டது தான் 2017ல் வெளிவந்த ரணகளம் நாவல். நாவலில் வரும் அக்காள் மகாராணியாக தம்மை வெளிப்படுத்திக்கொண்டபோதும், அண்டங்காக்கைகள் ஆட்டுவித்த கைப்பாவையாகத்தான் வாழ்ந்தார், மறைந்தார். உண்மையில் தலமை வாழ்க்கை பரிதாபத்திற்குரியது.
எஜமானடிமைகள் கட்டுரை விரைவில் ஒரு நூலில் இடம்பெற உள்ளது.
ரணகளம் நாவலில் இருந்து….
எமன் தன் வயிறு சுருங்கிய, எலும்புகள் புடைத்த எருமை வாகனத்தில் வாயிலில் திரண்டிருந்த பெருங்கூட்டத்தையும், ஈக்கள் கூட தங்களை மீறி நுழைந்துவிடக்கூடாது என்பதைப்போல பொறுப்புடன் பணிசெய்த காவலர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பணி நேர செவிலியர்கள், தனக்கு வேண்டியவர்களைத் தவிர அந்நியர் எவரும் அக்காளைச் சந்தித்துவிடக்கூடாது என்பதற்காக கனகம் ஏற்பாடு செய்திருந்த மனிதர்களென அனைவரின் கண்களிலும் மண்ணைத்தூவிச் சாமர்த்தியமாக அக்காள் படுக்கையிற்கிடந்த மருத்துவமனைக்குள் நுழைந்திருந்தான். இனி அக்காளின் கட்டிலைக் கண்டுபிடித்து அக்காள் ‘உயிரை’ விடுவிக்கவேண்டும்.
நேற்று இரவு, சோமபானத் தூண்டுதலில், அந்தப்புரத்தில் நுழைந்து பாரியாளை மஞ்சத்தில் சாய்த்து அந்தரங்கத்தைத்தேடிச் சுகிக்கும் வேளையில் சித்திரகுப்தன் கணிப்பின்படி அக்காள் உயிரை எடுக்கவேண்டிய ‘நேரம்’ ஞாபகத்திற்குவந்து தொலைத்தது. விலகிச் ‘சுத்தி’ செய்து கொண்டு புறப்பட்டாயிற்று. தொழுவத்தில் சாணம், கோமியம், கோரைப் புற்கள் கலவையிற் படுத்திருந்த எருமைக்கிடாவைக் குளத்தில் இறக்கித் தேய்த்து கழுவி மறுகரைக்கு நீந்தவைத்து கரையேற்றி அழுந்தத் துடைத்தபோதும் மிஞ்சியிருந்த நீர்த்திவலைகளை ஒற்றியெடுக்கமறந்து அவசரமாகப் புறப்பட்ட பயணம்.. தொண்டைச் சவ்வுகள் உறிஞ்சிய சோமபான வாடையையும், ஆடைகளிற் படிந்திருக்கும் அத்தர் ஜவ்வாது மணத்தினையும், எருமையின் அடிவயிற்றில் கெட்டியாய் ஒட்டிக்கிடந்த சாணிப் பொருக்குகள் முடக்கியிருந்தன. கடந்த சில வருடங்களாகவே எமனுக்கு தனதுவேலை குறித்து அதிருப்தி இருக்கிறது. எத்தனைகாலம் மனைவியுடன் சல்லாபம் செய்வதற்குக்கூட நேரமின்றி மானுட உயிரை எடுப்பது, அலுத்துவிட்ட து. திரும்பவும் பூமியிற் பிறக்க விண்ணப்பிக்கலாமென்று தோன்றியது. விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில், தொழிலையும், தன்னையும் நவீனப்படுத்தும் யோசனை இருக்கிறது. சியாமளாதேவி இடத்தில் வேறொரு தேவி; தண்டம், பாசக்கயிறுக்குப் பதிலாக புதியவகைஆயுதம். ஒருநாள் போல அணிகிற பட்டு வஸ்திரம், பதக்கங்கள், கிரீடம் முதலானவற்றைத் தூர எறிந்துவிட்டு, இன்றைய நாகரீகத்திற்கேற்ப கோட்டு சூட்டு, எருமைக்குப் பதிலாக நவீன மோஸ்தரில் ஒரு வாகனமென்று ஆசைகள் நிறையவே இருக்கின்றன.
கடந்த சில வருடங்களாக அவனுடைய வேலை பளு குறைந்து வருவதையும் மறுக்கமுடியாது. ‘காமா சோமா’ உயிர்களுக்கு பூலோகத்தில் தற்போது உத்திகளும், வழிமுறைகளும் ஏராளம். எமனுடைய சேவைக்காக மனிதர்கள் எவரும் காத்திருப்பதில்லை. மானுடர்களில் அநேகர் தம்முடைய உத்தியோகத்தின்மீது கண் வைத்திருப்பது அவனுக்கு நன்றாகத்தெரியும். தீவிர சுதந்திர அபிமானிகளில் சிலர், பிறர் உயிரைப் பறிக்கிற சுதந்திரமும் வேண்டுமென்று போராட இருப்பதாகக் கேள்வி. இருந்தும் இவர்களையெல்லாம் ஏமாற்றும் வகையில், அத்தனை சுலபத்தில் போவேனா என்று அக்காளின் ஜீவனையொத்தவையும் இருக்கவே செய்கின்றன. உறக்கத்திலிருந்த கும்பகர்ணனை யுத்தத்திற்கு எழுப்பியதும், பாதி சம்போகத்தின்போது உத்தியோகத்திற்குத் திரும்ப தமக்குள்ள நிர்ப்பந்தமும் எமனுக்கு ஒன்றுதான். காரியம் முடிந்த உடனே காலவிரையமின்றி எமலோகம் திரும்பவேண்டும் சியாமளாதேவியை மஞ்சத்தில் சாய்த்து.. பாதியில் விட்டு வந்த சம்போகத்தைத் தொடரவேண்டும். எமன் கௌபீனத்தை இறுக்க மறந்திருந்தான், வழியனுப்ப கையை அசைப்பதுபோல எருமை இருமுறைக் கொம்புகளை அசைத்து, நாசி, மலதுவாரங்கள் ஊடாக தனது ஒவ்வாமையை வாயுவாக வெளியேற்றியதும், ஒருமுறை உடலைச் சிலிர்த்து மீண்டும் நடக்க ஆரம்பித்தது.
பகலில் தற்போதெல்லாம் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்கள். சாலை மறியல்கள்.இரவுகளில் அம்மாதிரியான பிரச்சினைகள் எழுவதில்லை, குறித்த நேரத்தில் உயிரைப் பறித்து திரும்ப சௌகரியம். இவன் வரவை எதிர்பார்த்து இரவில், அகால வேளைகளில் தெருநாய்களின் ஓலம், நரிகளின் ஊளை; ஆந்தை, கோட்டான்களின் அலறல் போன்றவை வெகுகாலந்தொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகள், அவைகள் இன்றில்லை என்பது ஒரு குறை. எங்கோ ஒரு கழுதை மட்டும் ஆரோகணத்தில் தொடங்கி அவரோகணத்தில் முடித்துக்கொண்டது. சில நாட்களுக்கு முன்பு, கால அட்டவணைப்படி அக்காளின் உயிரைப் பறிக்கச் சாத்தியமா என்ற சந்தேகம் திடீரென எமனுக்கு வந்தது. அக்காள் நலம் பெறவேண்டும் என்பதற்காக அக்காள் கணவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தீவிரப் பிரார்த்தனையில் இறங்கியிருந்தனர் அப்பிரார்த்தனைகளுக்கு இறங்கி, இக் கடவுள்கள் ஏடாகூடமாக ஏதாவது செய்துவிடுவார்களோ, எமதர்மராஜா என்ற தம் பெயருக்குச் சிக்கல் வருமோ என்ற கவலையளித்த சந்தேகம். தன் கவலையைச் சித்திரகுப்தனிடம் தெரிரிவிக்க அவன் சிரித்தான் « பிரார்த்தனையின் நோக்கமே அக்காள் உயிர் சீக்கிரம் போகவேண்டும், என்பதுதான் அதனாலே கவலைப்படாம பூமிக்குப் போங்க. என் கணக்கு ஒருபோதும் தப்பாது. » எனக்கூறி சமாதானமும் செய்தான்.
அடர்த்தியாய் வானை உரசும்வகையிற் தளும்பிக்கொண்டிருந்த இரவில் மூழ்கி பூமிப்பந்தைச் சில மணிநேர தேடலுக்குப் பிறகு கண்டுபிடித்தாயிற்று. சுரப்பெட்டிபோல ஒலித்த சுவர்க் கோழிகளின் சப்தமும், குண்டியைச் சொறித்தபடி வெளியில் வந்த நபர் தெருவைக் குறுக்காகக் கடந்து, ஒருமுறைக்கு இருமுறை எதிர்வீட்டுக்காரன் சுற்றுசுவர்தாணா என்பதைத் திடப்படுத்திக்கொண்டு மூத்திரம் போனதும் வந்திருப்பது பூமி என்பது உறுதியாயிற்று. இனி எடுக்கவேண்டிய உயிர் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிற மருத்துவமனையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அது அவ்வளவு சிக்காலானதல்லவென்று கூறி எமனுடைய காரியதரிசி தெரிவித்த குறிப்புகள் மனதிலிருக்கின்றன. இந்திரலோகம்வரை மருத்துவமனையின் புகழ் எட்டி இருந்தது. ஓரளவு சமாளிக்கக் கூடிய செலவில் உயிரை எடுப்பதற்குப் பூலோகத்தில் எவ்வளவோ வசதிகள் இருக்கிறபோது எதற்காக லட்சமாக லட்சமாக கொட்டிக்கொடுத்து, உயிரைக் போக்கிக் கொள்கிறார்கள் என்பது குறித்து ஒரு பெரிய பட்டிமன்றமே தேவர் சபையில்நடந்தது. இரம்பையையும் ஊர்வசியையும் அணிக்கொருவராகப் போட்டிருக்க அப்படியொரு கூட்டம். முதன்முறையாகப் பலகோடி உயிர்களைப் பறித்து எமன் செய்திருக்கும் சாதனையைப் பாராட்டி நடத்தப்பட்ட விழா. விழாவில் நமது எமனுக்கு பூ, பழம், தேங்காய், பாக்குவெத்திலை, பட்டு வஸ்திரம் பத்தாயிரம் வராகன் பொற்காசுகள் தட்டில் வைத்து அளித்தார்கள். தமிழ்நாட்டுப் பிரதிநிதி ‘அண்டம் காத்த தொண்டன்’ , எமனுக்கு ‘உயிர்ப்பறிக்கும் உத்தமன்’ விருதை அளித்துப் பொன்னாடைப் போர்த்தினார். போர்த்திய கையோடு, ‘அப்படியே எனக்குமொரு விருதை ஏற்பாடு செய்திடுங்க, ஆகிற செலவை நான் பார்த்துக்கிறேன்’ என்று எமன் காதில் போடவும் செய்தார்.
«யாருய்யா அது, எருமை மாடு ! படுத்திருப்பது தெரியலை » என்ற குரல் கேட்டு எமன் சுய நினைவுக்குத் திரும்பினான். அவனுடைய வாகனம் சாலையிற் படுத்திருந்த ஒருவரை மிதித்திருந்தது. சற்றுத்தள்ளி ஜெகஜொதியாக மருத்துவமனை. வாகனத்தை நிறுத்தி இறங்கிக் கொண்டதும், மூக்கனாங்கயிறைப் பிடித்து இழுத்துக்கொண்டுபோய், விளக்குக் கம்பமொன்றில் கட்டினான்.
சிறுகுடலின் முற்பகுதி தொண்டைக்குழியிற் கபத்தோடு கலந்து சுவாசகுழாயை நெறித்தது. இரு நாசி துவாரங்களும் காத்திருந்தவைபோல அடைத்துக்கொண்டு மூச்சை நிறுத்தப் பிரயத்தனப் பட்டன. நெஞ்சில் கபம் கட்டியிருந்தது, இருமல் நிற்க மறுத்தது, எழுந்து உட்கார்ந்தாள். கனத்த சாரீரத்தைவைத்துக்கொண்டு இப்படி அடிக்கடி எழுந்து உட்காருவது சிரமமாக இருந்தது. இருமல், சளி மூச்சுத் திணறல், நெஞ்சுவலி என்று அனைத்தும் கைகோர்த்திருந்தன. இருமும்போது கண்களில் நீர் கோர்த்து ஒன்றிரண்டு சொட்டுகள் கன்னக்கதுப்புகளில் விழுந்து உடைவதுண்டு. இருமல் சளியுடன் கடந்த சில நாட்களாக இரத்தத் துளிகளும் கலந்திருக்கின்றன. இருமி முடித்த மறுகணம், தொண்டைவறட்சியை உணர்ந்தாள். தண்ணீர் குடிக்கவேண்டும். கட்டிலைத் தள்ளியிருந்த மேசைமேல், பிளாஸ்க்கில் வெந்நீர் இருக்கவேண்டும். எவரேனும் கொஞ்சம்’ ஊற்றிக் கொடுத்தால் தேவலாம். கனகம் எங்கே போய்த் தொலைந்தாள்? இரண்டு நாட்களாக மருத்துவமனைக்கு அவள் வருவதில்லை. கறீம் கூறிய வார்த்தைகள் உண்மையாக இருக்குமோ என நினைத்தாள். « கடைகள் நிர்வாகத்திற்குப் புதிதாக ஒரு குழுவினரை நியமித்து அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கும்படி நீங்கள் கையொப்பம் இட்டிருந்ததாக ஒரு பேப்பரை கனகம் உங்கள் குடும்பத்தாரிடம் காட்டினார். அந்த அம்மாள் பேச்சை நம்புகிறார்களேயொழிய, உங்களைப் பார்த்து உண்மையைத் தெரிந்துகொள்ளவேண்டுமென்ற அக்கறை அவர்களுக்குமில்லை. நான் பயந்ததுபோலவே எல்லாம் நடக்கிறது. உங்க தெய்வத்துக் கிட்ட நீங்க வேண்டிக்குங்க, நமாஸ் பண்ணும்போது, உங்களைக் காப்பாத்தும் படி நானும் அல்லாகிட்ட வேண்டிக்கிடறேன், அதைத் தவிர வேறு வழிகள் இருப்பதாக எனக்குத் தெரியலை. » என்றான்.
மெள்ள எழுந்திருக்க முயன்றாள், இருமல் திரும்பவந்தது, ஓக்காளித்தாள், ஓக்காளித்ததைக் இரண்டுகைகளிலும் வாங்கினாள், சகதிபோல இரத்தமும் கோழையும். மயங்கி விழுந்தாள். கிராமத்தில் அம்மாவையும், சகோதரர்களையும், படியாட்களையும் கூட அதிகாரம் செய்தவள்தான். இயல்பான அவ்வதிகாரத்தைச் செலுத்திய இவளும் சரி, செலுத்தப் பட்ட மனிதர்களும் சரி மெல்லிய அன்பினால் பிணைக்கப்பட்டிருந்தார்கள். புதுச்சேரியில் செலுத்திய அதிகாரம் உபரிமதிப்பைக் குறிவைத்து, அவர்கள் வேலை நேரத்திற்கு விலைகொடுத்திருக்கிறேன் என்ற எண்ணத்தில் சிப்பந்திகளை அடிமைகளாகப் பார்த்த எஜமான் அதிகாரம். காலம் விசித்திரமானது. இன்றைக்கு அவள் உயிர்கூட அவள் பொறுப்பிலில்லை. இனி அவளுக்கு உரிமையான கடையில், ஓட்டலில், ஜவுளிக்டையில் மல்லிகைச்சரம் ஊதுபத்தி மணக்க நிழற்படத்தில் சிரிப்பாள். அவளுக்கென்றுள்ள வாடிக்கையாளர்களைப் பிடிக்கவேண்டுமில்லையா ?
இவள் மரணத்திற்காக, எதிரிகள் மேளம் கொட்டும் நேரம். வரிசையாகப் பறையடித்து மகிழ்கிறார்கள். முதலில், ஊரில் சொக்கப்பன் குடும்பம். அக்காள் குடும்பத்தின் முதற் தலைமுறைத் தாயாதிகள். அய்யானாரப்பன் கோவிலுக்கு ஒதுக்குப் புறமாகவிருந்த பனையடியொன்றில் கிடாவெட்டிப் பொங்கல் வைத்ததாகக் காதில் விழுந்தது. பிறகு புதுச்சேரியில் மூத்தார் குடும்பத்தில் ஆரம்பித்து வரிசையாகப் பழைய புதிய முகங்களுடன் எதிரிகள். அவளுக்கு எதிரிகளுக்கா பஞ்சம். ‘கணக்கன்வீட்டு கம்பத்தத்தில்’ பல தலைமுறையாக அடிமைபட்டுக்கிடந்த கறுப்பன்கூடக் கோர முகத்துடன் எதிரிகள் வரிசையில் நிற்கிறான், இறுதியாகக் கனகம். அவ்வரிசையில் காதுகள் புடைக்க, தலைதாழ்த்தி, நேரான பார்வையைத் தவிர்த்து, கறுத்த அடிமுகத்தில் இரு நுங்குவடிவ மூக்குத் துவாரங்களுடன், கடைவாய் பற்கள் தெரிய, நுரையொழுகச் சிரித்தபடி கடைசியாக நிற்கின்ற சலவைத் தொழிலாளி முருகேசனின் கழுதையும் அடக்கம்.
அக்காளுக்கும் கழுதைக்கும் பகைக்கான முகாந்திர வெள்ளை அறிக்கையை எவரும் அறிந்ததில்லை. இத்தனைக்கும் அக்காள் பிறந்தபோது, ஊற்றப்பட்ட முதற் பாலாடைப் பால் முருகேசன் கழுதைக்குச் சொந்தமானது. கொழுகொழுவென்ற அக்காளின் குழந்தைப் பருவத்தின் ஆதாரம் முருகேசன் கழுதையின் பாலென, குடும்பத்தினர்பேசிக்கொண்டனர். எப்போது கழுதைக்கும், அக்காளுக்கும் பகையேற்பட்டது? ஒருவேளை சிறுவயதில் நடந்த சம்பவமாகக் கூடவிருக்கலாம். கிராமத்துக் குளத்திற்குத் தோழிகளுடன் அக்காள் வந்திருந்தாள். முருகேசன், துணிமூட்டைகளை இறக்கிப் போட்டுவிட்டு, வெள்ளாவி வைக்க உழைமண் தேடப் போயிருந்தான். தோழிகளுடன் ஆரம்பித்த வம்பில் முறுகேசன் கழுதையின் ‘வாலை இழுத்துக் காட்டுவது. என ஒப்புக்கொண்டு அக்காள் செய்த காரியத்திற்கு, கழுதை மன்னித்திருக்கலாம். அன்றைக்கு காலொடிந்து, வீட்டிலிருந்த மற்றக் கழுதையின் துணிமூட்டையையும் சுமந்துவந்த கோபத்தில், விட்ட உதையில் முன்னிரண்டு பற்களும், கொஞ்சம் மூக்கும் உடைந்து இரத்தம் கொட்ட, அக்காள் சூர்ப்பனகையானாள். பிறகொரு கோடைநாளில் முருகேசன் குடிசையின் எதிரே பூவரசமரத்தடியில் அசைபோட்டுக்கிடந்த கழுதையின் வாலில் பனையோலையைப் பிணைத்து, எரித்து துரத்தியதும், சலவைத் தொழிலாளி முருகேசன், அக்காளின் மூத்த அண்ணனிடம் முறையிட்டதும், பத்து ருபாயை விட்டெறிஞ்சி “போடா போய் வேலையைப்பாரு. இதையொரு பஞ்சாயத்துண்ணு இங்க எடுத்துவந்துட்ட ” என்று,துரத்தியதில் தப்பில்லை, ஆனால் அவனைத் துரத்திய வேகத்தில் அக்காளைப் பார்த்து “பொட்டை கழுதைக்கு கொஞ்சம் அடக்கம்வேணும்” எனச் சொல்லாமல் இருந்திருக்கலாம்.
பூப்டைந்த அக்காளுக்கு வரன்கள் தேடும் காலத்தில். பொருத்தமானவனைத் தேடிக் களைத்துப்போக, பின்வாசல்வழி வரும் படியாள் கோவிந்தன், மூத்த சகோதரருக்கு உடல் பிடித்துவிடும் வேட்டைக்காரன் சின்னான் ஆகியோரின் வியர்வை உடல்களை லஜ்ஜையோடு பார்க்கத் தொடங்கி அக்காள் சோர்ந்திருந்த நாட்கள் அவை. முருகேசன் கீழ்வீதி வழியாக, நாயக்கர் வீட்டுப்பக்கம் ஒருப் புதுக்கழுதையை ஓட்டிப்போவதை வாசற் திண்ணையின் தூணைப் பிடித்தவாறுப் பார்த்தாள். முருகேசன் தனது பழைய கழுதையை மாற்றியிருப்பானோ, என்று மனதிற் சந்தேகம்.
“என்ன முருகேசா, கழுதையை மாத்தியாச்சா? இது புதுசா இருக்கு!”
“ஆமாம்மா.. புதுசுதான். வீட்டில இருக்குற கழுதைக்கு ஜோடி சேக்கணும். ‘நல்லாவூர்’ல இருந்து வாங்கி வறேன். இது கிடாக் கழுதைம்மா.”
அவன் கிடாக் கழுதை என்று சொன்னவுடன், அவளது பார்வை திடுமென்று பயணித்து, கழுதையின் அடிவயிற்றில் முடிந்தது. காட்சி மனத்திரையில் விழுவதற்குமுன் வீட்டினுள்ளே ஓடிக் கதவடைத்துக் கொண்டாள். அன்றுவெகு நேரம் இரவு உணவினைக் கூடத் தவிர்த்துவிட்டுப் படுத்துக்கிடந்தாள். காரணமின்றிக் குமட்டிக்கொண்டு வந்தது. மீண்டும் மீண்டும் அக்காட்சி மனதில் விரிவதைத் தவிர்க்கமுடியவில்லை. அதற்குப்பிறகு எந்த விலங்கினைப் பார்த்தாலும் அடிவயிற்றினைத் தேடிச் செல்லும் அவளது செக்குமாடுகள் பார்வையைத் விலக்க முடிவதில்லை.
ஏசியின் அளவு குறைக்கப்பட்டிருந்தது. சிறுவயதில் பனைஓலையில் செய்த காற்றாடியை குச்சியில் ஏந்தியபடி சகவயது பையன்களோடு ஒடுவாள். அப்போதொரு சத்தம் வரும், அதுபோலத்தான் குளிரூட்டி ஓடிக்கொண்டிருந்தது. அளவைக் கூட்டிவைத்தால் உடல் வெட வெடவென்று உதறுகிறது. ஒன்றுக்கு இரண்டுபேராக தமக்கென்று நியமிக்கப்பட்டுள்ள செவிலியர் ஒருத்தியிடம் குறைக்கும்படி சொல்லியிருக்கலாம், பார்வையாளர் நேரத்தின்போது அங்கிருருந்த ஜவுளிக்கடை கணக்கப்பிள்ளை செல்வமணியிடம் கூறினாள். அவர் வேண்டுமென்றே ஐந்தில் உயர்த்திவைத்து, இரண்டொரு நிமிடங்கள் இவள் படும் வேதனையைப்பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தவர் பிறகு இரக்கப்பட்டவர்போல ஏசி அளவைக் குறைத்துவிட்டுத் திரும்பிப்பார்க்காமல் நடந்தார். இவள் திரும்பமாட்டாளென்பது, அவருக்கு முடிவாகிவிட்து. அக்காளின் கணவர் இறந்த பின்பு கனகத்தின் சிபாரிசில் நியமிக்கப் பட்ட ஆள். முதுகில் துணிமூட்டை சுமக்கும் சலவைத் தொழிலாளிபோல இவள் எதிரே பவ்யமாக நின்றவர். அக்காள் விட்டத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டாள். முடிச்சு முடிச்சாகக் குழப்பமான நினைவுகள், ஜொராஷ்ட்ரியர் பிணம்போல இவள் கிடக்க உடலுக்கு மேலே சுற்றிவரும் கழுகுகள். தரையில், சிறுகூட்டமாய் உருமும் நரிகள், அவற்றை முந்திக்கொண்டு, நடக்கவிருப்பதை காணச் சகியாததுபோல தலையைத் தொங்கப்போட்டபடி நிற்கும் முருகேசன் கழுதை.
கதவினைத் திறந்துகொண்டு நெடிய உருவம். அளவான அலங்காரங்களுடன், தலையில் கிரீடமும், இடது கரத்தில் ‘கதையும்’ வலது கரத்தில் ‘சுருக்கு’மாக நமது எமன்.
“வந்தாச்சா? உங்களுக்காகத்தான் கத்திருந்தேன்”.. அக்காளின் பார்வை எருமையின் அடிவயிற்றில் வந்து நின்றது. “பக்கத்திலென்ன கழுதையா? உங்கள் எருமைக்கு என்ன நேர்ந்தது? வாகனத்தை மாற்றிக் கொண்டீர்களா?”
“இல்லை. இது எருமைதான். கொஞ்சம் இளைத்திருக்கிறது. இருட்டில் கொம்புகளிருப்பது உனக்குத் தெரியவில்லை. வேறு நல்லதாக வாங்கவேண்டும். தவிர வேறு யோசனைகளும் இருக்கின்றன. இந்திரனிடத்தில் பிரச்சினையை கொண்டுபோகவேண்டும் நேரமில்லை. “
” பொய் சொல்லாதீங்க. எருமை இல்லை இது.. கழுதை.”
« உன்னிடத்தில் வாதிட நேரமில்லை. வந்த வேலையை முடிச்சாகனும். எமலோகத்துலே வேலைகள் நிறைய இருக்கின்றன. கிளம்பு நீ !
” இல்லை.. எனக்கு கழுதைமேல் ஏற விருப்பமில்லை, விட்டுடுங்க.”
” இது கழுதை இல்லை எருமை. உன் பார்வையிலே கோளாறு. எந்தக் கழுதையும் என்னுடன் இல்லை. இதற்காகவெல்லாம் என் ‘தண்டத்தில்’ அடித்து நான் சத்தியம் செய்துகொண்டிருக்கமுடியாது.
—–