Mémoires d’Hadrien பிரெஞ்சு மொழியில் வெளிவந்த முக்கியமானன புனைவு. இன்று உலக அளவில் கொண்டாடப்படும்மிக முக்கியமான புனைவுகளில் ஒன்று. நூலாசிரியர் மார்கெரித் யூர்செனார்( Marguerite Yourcenar), நூல் வெளிவந்த ஆண்டு, 1951. ரோமானியச் சக்கரவர்த்தி அதிரியன் தமது பேரன் மார்க் ஒரேல் என்பவனுக்கு தமது கடந்த கால அனுபவங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்வதானதொரு கற்பனை புனைவு. இளமை, அரசியல், கவிதை, தத்துவம், சார்ந்த உணர்வுகளை நயத்துடன் படைத்த இலக்கிய விருந்து. அதில் சக்கரவர்த்தி அதிரியன் அந்த்தினூஸ் என்ற இளைஞன் மீது கொண்டிருந்த ஓரினக் காதலென்ற தொடு கறியும் உண்டு.
பிரெஞ்சு நவீன இலக்கியம் என்றவுடன் முக்கியமாகச் சொல்லப்படும் படைப்பாளிகள் பிரான்சுவாஸ் சகான்(Françoise Sagan), மார்கெரித் துராஸ்(Marguerite Duras), சிமொன் தெ பொவ்வார்(Simone de Beauvoir) மார்கெரித் யூர் செனார்(Marguerite Yourcenar) இவர்களுடைய படைப்புகள் முறையே ‘வணக்கம் துயரமே!(Bonjour Tristesse), காதலன் (l’Amant), இரண்டாம் பாலினம் ( Le Deuxième Sexe), மற்றும் அதிரியன் நினைவுகள்(Mémoires d’Hadrien). இவற்றில் வணக்கம் துயரமே, காதலன் இரண்டும் தமிழில் வந்துள்ளன. இரண்டாம் பாலினத்தை சிமொன் தெ பொவ்வார பற்றியநூலில் முடிந்த வரைச் சுருக்கி தெளிவாக கட்டுரைகளாக உள்ளன. நான்காவதாக எஞ்சி இருப்பது மார்கெரித் யூர்செனார் எழுதியுள்ள ‘அதிரியன் நினைவுகள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கி. அ சச்சிதானந்த த்துடன் பேசிக்கொண்டிருந்தபோது இந்த அதிரியன் நினைவுகள் பற்றி பேச்சுவந்த து. அவர் மிகவும் நல்ல நூல் இரண்டாம் பாலினம், அதிரியன் நினைவுகள் இரண்டும் தமிழில் வரவேண்டும், முயற்சி செய்யுங்கள், என்றார். பிரச்சனை 400 பக்கங்களுக்கு மேல் உள்ளது. தவிர நான் முழுநேர மொழிபெயர்பாளன் அல்ல. ஒரு முறை சாகித்ய அகாதாமி சொந்த படைப்புக்கு லாபி செய்து தோற்ற விரக்தியோ என்னவோ ஒரு கவிஞர் தமிழில் ஒரு கவிதையை வைத்துக்கொண்டு தம்மை பெரிய கவிஞரென சொல்லிக்கொண்டு வலம் வருபவர்களெல்லாம் இருக்கிறார்கள், உங்களெக்கு எதற்கு வீண்வேலை, என்றார். அந்த வீண்வேலையை அதாவது அதிரியன் நினைவுகளை மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறேன். எனக்குப் பரிசுகள் மட்டுமே ஒரு படைப்பை அதன் தகுதியைத் தீர்மானித்துவிட முடியாது. காலம் மட்டுமே தீர்மானிக்க உதவும். செந்தில் பாலாஜி பற்றிய செய்தியை அன்பழகன் வீட்டில் ரெய்டு மறக்கடிப்பதுபோல இந்த வருட பரிசை அடுத்த வருட பரிசு மறக்கடித்துவிடும்.
அதிரியன் நினைவுகள்….
(அண்மையில் நண்பர் மகேந்திரன் இரத்தினசபாபதி காற்றுவெளி மின்னிதழை மொழிபெயப்பு இதழாக கொண்டுவந்திருந்தார். அதில் இடம்பெற்ற பகுதி)
—–
அன்பினிய மார்க்,
இன்றைய தினம் என்னுடைய மருத்துவர் ஹெர்மோழேன் -ஐ காணச் சென்றேன். ஓரளவுக்கு நெடிய தம்முடைய ஆசிய பயணத்தை முடித்துக்கொண்டு அண்மையில்தான் தமது ஆடம்பரமான இல்லத்திற்குத் திரும்பியிருந்தார். சோதனைக்கு முன்பாக உணவெடுக்கக்கூடாது என்பதால் காலையில் சற்று வேளையாகச் சந்திப்பதென்பது இருவருமாக சேர்ந்தெடுத்த முடிவு. மேலங்கி மற்றும் பிற உடைகளைக் களைந்து, சோதனைக்குரிய படுக்கையில் கிடத்தப்பட்டேன். எனது உடல்குறித்த விரிவான தகவல்கள் வேண்டாம். மூப்படைந்து, நீர்கோர்ப்பினால் பாதித்த இதயத்துடன், இறக்கும் தறுவாயில் நானுள்ள நிலையில், அது பற்றிய கூடுதல் செய்திகள் எனக்கு ஒவ்வாததைப் போலவே உனக்கும் வெறுப்பை அளிக்கலாம், பதிலாக ஹெர்மோழேன் கேட்டுக்கொண்டபடி இருமிக் காட்டினேன், மூச்சை உள்வாங்கினேன், பின்னர் அதை அடக்கினேன் என்கிற தகவல்களத் தெரிவிப்பதில் பிரச்சனைகளில்லை. நோயின் தீவிரம் தானொரு மருத்துவர் என்பதையும் மீறி அவரை பதற்றமடையச் செய்தது, விளைவாக அவர் ஊரில் இல்லாத நாட்களில் எனக்குச் சிகிச்சையளித்த லொல்லா என்ற இளம்பெண்மீது பழி சுமத்தவும் தயாராக இருந்தார். மருத்துவர்களிடத்தில் ‘சக்கரவர்த்தி’ என்கிற சொல்லுக்கு எவ்விதப் பொருளுமில்லை, ஏன் ? மனிதர்களுக்கு என்றுள்ள அடிப்படை இயல்புகளுடன்கூட அவர்கள் முன்பு நாம் இருக்கவியலாது. வைத்தியர் கண்களுக்கு, பரிசோதனைக்கு வந்திருப்பவன் உணர்ச்சிகளின் குவியல், இரத்தம் நிணநீர் கலவையினாலான பரிதாபத்திற்குரிய ஓர் உயிர். இன்று காலை இத்தனை காலமாக இல்லாது முதன்முறையாக மனதில் தோன்றியது என்ன தெரியுமா ? விசுவாசம் மிக்கது, எனது நம்பிக்கைக்குப் பெரிதும் பாத்திரமானது, என்னுடைய ஆத்மாவைக் காட்டிலும் என்னை நன்கறிந்த தோழன் என்றெல்லாம் நினைத்திருந்த எனதுடல் இறுதியில் தனது எஜமானைத் தின்று சீரழிக்கும் கபடமிமிக்கதொரு மிருகம் என்கிற உண்மை. பொறு ! ……. எனதுடலை இன்றும் நேசிக்கிறேன். எனக்கென்று எல்லாவகையிலும் உழைத்துள்ளதை எப்படி இல்லையென சொல்ல முடியும், அதன் குறை நிறைகளை விவாய்திப்பதற்கான நேரம் இதுஅல்ல, தற்போதையை தேவை நல்லதொரு சிகிச்சை. அதற்கு வழிகளுண்டா, நம்பிக்கையில்லை. ஆனால் ஹெமோழேன் முடியும் என்கிறார், கீழை நாடுகள் பயணத்தில் கொண்டுவந்த அதிசய மூலிகைகளின் அபாரகுணங்களும், தாது உப்புக்களின் சரியான கலவையும் பலன் தரும் என்பது அவர் வாதம். மனிதர் தந்திரசாலி. எவரையும் எளிதாக ஏமாற்றவல்ல அடுக்கடுக்கான உத்தரவாதங்களைக் கேட்டு சலித்துபோன வார்த்தைகளில் அளிப்பதில் தேர்ந்தவர் ; ஆயினும், இது போன்ற பாசாங்குகளை எந்த அளவிற்கு நான் வெறுப்பவன் என்பதையும் அவர் அறிவார். மருத்துவ தொழிலில் முப்பது ஆண்டுகளுக்குமேலாக அனுபவம் என்கிறபோது, இதுபோன்ற குற்றம் குறைகளைத் தவிர்க்க இயலாது. எனது மரணத்தை என்னிடமிருந்து மறைக்க முயற்சிக்கிறார் என்பது தெரிந்தும், அவர் எனக்கொரு உண்மையான சேவகராக இருந்து வந்துள்ளார் என்பதற்காக மன்னிக்கிறேன். ஹெர்மோழேன் ஒரு மேதை, ஞானி ; தொழிலில் அவரிடமுள்ள நேர்மை எனது அரசவை பிற மருத்துவர்களினும் பார்க்க அதிகம். நோயாளிகளில் அதிக அக்கறையுடன் சிகிச்சை பெறும் பாக்கியசாலி அனேமாக நானாக இருக்கக் கூடும். ஆனால் நம் ஒவ்வொருவரின் எல்லைப்பரப்பும் ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ளது, அதை எங்கனம் மீற முடியும். வீக்கமடைந்த எனது கால்கள் ரோமானிய விழாக்களில் நீண்ட நேரத்தைச் செலவிட ஒத்துழைப்பதில்லை : எனக்கு வயது அறுபது, தவிர சுவாசிக்கவும் சிரமப்படுகிறேன்.
அச்சம்தரும் கற்பனைகள், நம்பிக்கை அளிக்கும் மாயத் தோற்றங்களைப்போலவே அபத்தமானவை, அவை மிகுந்த மன வேதனைகளை அளிக்கும் என்பதும் நிச்சயம். அதற்காக நீ என்னைச் சந்தேகிக்காதே ! அவற்றுக்கெல்லாம் இடம் தரும் அளவிற்கு நான் கோழை அல்ல. எனினும் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில், படும் வேதனைகளையேனும் குறைத்துக்கொள்ள வேண்டும், அதற்கான தீர்வு ஒன்றே ஒன்றுதான் : நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு, என்னை நானே ஏமாற்றிக்கொள்வது, அதைத்தான் செய்ய இருக்கிறேன். எனது ‘முடிவு நெருங்கிவிட்டது’ என நான் கூறுவதால் அது உடனடியாக நிகழுமென்று எவ்வித கட்டாயமுமில்லை. இன்றைக்கும் ஒவ்வொரு இரவும் வைகறைப்பொழுதை காணமுடியும் என்கிற நம்பிக்கையுடனேயே உறங்கச் செல்கிறேன். சற்றுமுன்பு வரையறுக்கப்பட்ட எனது எல்லையைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன், அதற்குள் இருந்தபடி எனதிருப்பின் ஒவ்வொரு அடியையும் தற்காத்துக்கொள்ள முடியும் ; ஏன், இழந்த சில அங்குல நிலத்தை மீட்கவும் கூடும். எது எப்படியோ, ஒவ்வொரு மனிதருக்கும் ‘ உயிர் வாழ்க்கையில் எங்கே தோல்விக்கான கட்டமோ அவ்வயதை நானும் எட்டிவிட்டேன். இருந்தும் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதற்கு எவ்விதப் பொருளுமில்லை, காரணம் இன்று நேற்றல்ல பலகாலமாக நம் அனைவருக்குமே நாட்கள் எண்ணப்பட்டே வந்திருக்கின்றன. ஆனால் எங்கே, எப்போது, எப்படி நேரும் என்பதிலுள்ள நிச்சயமற்றதன்மை, எந்த முடிவை நோக்கி இடைவிடாது பயணித்துக் கொண்டிருக்கிறோமோ அதனைச் சரியாக அடையாளம் காண அனுமதிப்பதில்லை, இந்த ஓயாத பயணம் காரணமாகவும் உயிக்கொல்லி நோயின் தீவிரத்தினாலும் நான் மிகவும் சோர்ந்து போகிறேன். எல்லையைத் தொட்ட முதல் நபருக்கு முடிவு உறுதி என்கிறபோதும், அது எப்போது என்பதுதான் இப்போதைய கேள்வி. எனினும்` சம்பந்தப்பட்ட நோயாளிக்கு அடுத்துவரும் பத்தாண்டுகளில் தனக்கு மரணம் நிச்சயம் என்பது நன்றாகத் தெரியும். எனது முடிவுக்கான கெடு என்பது வருடக் கணக்கிற்கு உரியதல்ல மாதக் கணக்கிற்குள் அடங்குவது. மார்பில் குத்துவாள் செருகப்பட்டோ, குதிரையிலிருந்து விழுந்தோ சாகும் வாய்ப்புகள் எனக்கு மிகவும் குறைவு; கொள்ளைநோயில் சாகவும் வாய்ப்பில்லை ; தொழுநோய் அல்லது புற்றுநோய் இரண்டும் நிரந்தரமாக என்னிடமிருந்து விலகியவை ; கலிதோனியன்(Caledonian) கோடரியால் தாக்குண்டோ அல்லது பார்த்தியன் (Parthians) அம்பு பாய்ந்தோ நாட்டின் எல்லையில் மடிவதற்கான ஆபத்தான செயல்களை எப்போதோ விட்டாயிற்று ; நீரில் மூழ்கி இறப்பதற்குச் சந்தர்ப்பம் இல்லையென்ற மந்திரவாதிப் பெண்மணியின் ஆரூடமும் பலித்திருக்கிறது, வாய்ப்புகள் கிடைத்தும் புயலும் காற்றும் என்னைக்கொல்ல தவறிவிட்டன. திபர் (Tibur), ரோம் இவ்விரண்டு நகரங்களில் ஒன்றில் நான் இறப்பது நிச்சயம், தவறினால் நேப்பிள்ஸ் நகரத்தில் அது நிகழக்கூடும், மாரடைப்பு அப்பணியை நிறைவேற்றும். பத்தாவது மாரடைப்பிலா? நூறாவது மாரடைப்பிலா? என்பதுதான் இன்றைக்குள்ள கேள்வி. தீவுகள் கூட்டத்திடைப் படகில் பயணிக்கும் ஒருவன், அந்தி சாயும் வேளையில் ஒளிரும் மூடுபனியைத் தொடர்ந்து சிறிது சிறிதாக கரைவிளிம்பை காண நேர்வதைப்போல, மரணத்தின் முகச் சாயல் எனக்கும் தெரிகிறது. இதற்குள்ளாகவே, வறுமையில் வீழ்ந்த ஒருவன் தமது மிகப்பெரிய மாளிகையை முழுமையாக பராமரிக்க முடியாதென்ற கட்டத்தில் சில பகுதிகளின் தளவாடங்களை அகற்றி, காலியாக போட்டிருப்பதைப்போல, எனது வாழ்க்கையையும் உணருகிறேன். வேட்டையாடும் உத்தேசமும் இல்லை, எத்ரூரியன்(Etrurian) மலைவாழ் மான்களின் விளையாட்டிற்கும், சாவகாசமாக நின்று அவை அசைபோடுவதற்கும் மட்டுமே இடையூறாக இருப்பேன் என்பதால் அவற்றுக்கும் இனி நிம்மதி. தமது நேசத்திற்குரிய உறவில் ஒருவன் எங்கனம் வாஞ்சையையும், அணுகுமுறையில் புது புது உத்திகளையும் வெளிப்படுத்துவானோ அவ்வாறே நம்முடைய வன தேவதை டயானா(Diana)வுடன் நானும் கடைபிடித்து வந்தேன் : பதின் வயதில் – காட்டுபன்றி வேட்டை அனுபவம் முதன் முதலாக உத்தரவு என்றாலென்ன, ஆபத்தென்பது எத்தகையது போன்றவற்றை புரிந்துகொள்ளும் முதல் வாய்ப்பை எனக்கு அளித்தது. மிகவும் ஆக்ரோஷத்துடன் அவ்வேட்டையில் இறங்கியிருக்கிறேன். இதுபோன்றவற்றில் நிதானம் தேவையென என்னைக் கண்டித்தது எனது சுவீகாரத் தந்தை ட்ரோஜன்(Trojan). மரணம், துணிச்சல், உயிரினங்களிடத்தில் இரக்கம், அவை படும் வேதனைகண்டு அடைந்த சந்தோஷம் அனைத்தும் ஸ்பெய்ன் காடுகளில் வேட்டையாடிய விலங்குகளைக் இறைச்சிக்காக வெட்டுகிறபோது கிடைத்த ஆரம்பகால அனுபவங்கள். ஒரு மனிதனாக வளர்ந்த நிலையில், மூடர்கள்-புத்திசாலிகள் ; பலசாலிகள்-பலமற்றவர்கள் என, எதிரிகளின் தன்மைகேற்ப மோதுவதற்குரிய ரகசியங்களை வேட்டை விடுவிக்கக் கண்டேன். மனிதர்களின் அறிவுத் திறனுக்கும் விலங்குகளின் விவேகத்திற்கும் இடையிலான இச் சரிநிகர்யுத்தம், சூட்சிகள், தந்திரங்கள் அடிபடையிலான மனிதர் யுத்தத்துடன் ஒப்பிடுகிறபோது வழக்கில் இல்லாத ஓர் அப்பழுக்கற்ற யுத்தமாகும். அதைப்போல ஒரூ சக்கரவர்த்தியாக ஆட்சிபொறுப்பாளர்களின் மனோ திடத்தையும்,செயல்படும் திறனையும் தீர்மானிக்க, டஸ்க்கனி (Tuscany) வேட்டைகள் உதவின, விளைவாக அரசு நிர்வாகத்தில், ஒரு அதிகாரியை நியமனம் செய்யவோ, பதவிநீக்கம் செய்யவோ என்னால் முடிந்தது. பின்னர், ஆசிய காடுகளில் பித்தீனியாவிலும்(Bithynia), கப்படோசியாவிலும்(Cappadocia), இலையுதிர்கால கொண்டாட்டத்தைச் சாக்காகவைத்து பெரும்வேட்டைகளை நடத்தியதுண்டு. எனது இறுதிக்கால வேட்டைகளில் நெருங்கிய துணையாக இருந்தவன் மாண்டபோது மிகவும் இளம்வயது. அவன் இழப்பு வன்முறை இன்பத்தில் எனக்கிருந்த நாட்ட த்தைப் பெரிதும் பாதித்தது. இங்கு, தற்போது திபூரிலும்(Tibur) அடர்ந்த புதரொன்றில் மானொன்று திடீரெனக் கனைத்துச் செறுமினால் போதும், எனக்குள் நிகழும் நடுக்கம் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளிவிடும், அஞ்சும் மானுக்கு நான் சக்கரவர்த்தியா அல்லது சிறுத்தைப்புலியா என்கிற குழப்பம் மட்டுமே மிஞ்சும். யார் அறிவார் ? நான் மனிதர் குருதியை சிக்கனப்படுத்தியதற்கும், விலங்கினங்களை அதிகம் இரத்தம் சிந்த வைத்தற்கும், இவ்விடயத்தில் மனிதர்களினும் பார்க்க எனது மறைமுகமான தேர்வு விலங்கினமாக இருந்தது காரணமாக இருக்கலாம். எது எப்படியோ, வேட்டைக் கதைகள ஓயாமல் சொல்வதும் வழக்கமாகிவிட்டது அதை தவிர்ப்பது மிகவும் கடினமாக உள்ளது, விளைவாக இரவு விருந்துகளில் கலந்துகொள்பவர் பொறுமையை அதிகம் சோதிப்பதாக நினைக்கிறேன்.. என்னைச் சுவீகாரம் எடுத்த நாளின் நினைவு மிகவும் இனிமையானதுதான், ஆனால் மொரித்தேனியாவில் (Mauretania) சிங்கங்கள் கொல்லப்பட்ட நாட்களின் நினைவும் என்னைப் பொறுத்தவரை மோசமானைது அல்ல.
——
அதிரியன் நினைவுகள் தமிழ் புத்தகம் கிடைக்குமா ?? எந்த பதிப்பகம் தெரிவித்தால் நலம்
மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறேன். அடுத்தவருட தொடக்கத்தில் நூல் தங்கள் கைக்கு கிடைக்கும்