மொழிவது சுகம்,   ஜனவரி 19 2022

மொழிபெயர்ப்பு நூல்கள்

மொழிபெயர்ப்பாளர் நண்பர்கள் அனைவரையும் வணங்குகிறேன். மொழிபெயர்ப்பு மிக க் கடுமையானப் பணி. படைப்பதைக் காட்டிலும் மொழி பெயர்ப்பு எனக்கு மிகப்பெரியதொரு சவால். ஒரு படைப்பை எளிதாக விரும்பிய காலத்தில் எழுதி முடித்திருக்கிறேன். ஆனால் மொழிபெயர்ப்புக்கு கூடுதலான காலத்தைச் செலவிட்டிருக்கிறேன்.  அப்படி செலவிடும்போதும் நூல் வெளிவந்தபின்  மனம் நிறைவைப் பெற்றதில்லை.

‘மனிதம்’  என்ற உயிரியின் இயல்பான குணங்கள், பண்புகள்  என்பவை ஒரு பக்கம், அந்த மனித உயிரி அங்கம் வகிக்கும் சமூகத்தின் குணங்கள், பண்புகள் என்பது இன்னொரு பக்கம். ஒரு மொழியின் படைப்பு என்பது இவை இரண்டையும் உள்வாங்கியது. இவை இரண்டையும் மூல நூலிலிருந்து வழி நூலுக்குக் கொண்டுவரவேண்டும். ஒரு சென்னை அல்லது மதுரைத் தமிழனுக்கு  பாரீஸ் அல்லது இலண்டனிலிருந்து தருவிக்கபட்ட உடையை அணிவித்து அழகு பார்க்கும் உடல் சார்ந்த விஷயமல்ல ஒரு மொழிபெயர்ப்பு. ஒரு பாரீஸ்வாசி அல்லது இலண்டன் வாசியின் உள்ளத்தை தமிழ் உள்ளத்திற்கு கூடு பாயவைக்கும் வித்தை. அவர்தம் புரிதலை தமது சமூகக்கண்ணாடி முன் நிறுத்தி பாரீஸ் உயிரிடம் அல்லது இலண்டன் உயிரியிடம் “எனக்கும் உனக்கும் இடையே உள்ள பள்ளம் மேடுகள் எத்தனை?” என எட்டிப்பார்க்க உதவும் பண்பாட்டுப் பரிசோதனைக்கூடம் ஒரு நல்ல மொழிபெயர்ப்பு.

நான் விரும்பி வாசிக்கும் பிரெஞ்சு எழுத்தாளர்களில் ஒருவர்  மிலன் குந்தெரா(Milan Kundera). செக் நாடு பூர்வீகம், செக் மொழி எழுத்தாளரும் கூட, இருந்தும் பிரான்சுக்கு குடியேறி பிரெஞ்சு மொழியில் எழுதத் தொடங்கி பிரெஞ்சு எழுத்தாளராக ஏற்ற்க்கொள்ளபட்டவர். அவர்ம் தன்னை பிரெஞ்சு எழுத்தாளராகவே கருதுகிறார். பலமுறை நோபல் பரிசு பட்டியலில் இடம் பெற்றவர்.  அவர் தம்முடைய ‘le livre du rire et de l’oubli ‘  என்ற நூலில் கீழ்க்கண்ட்வாறு எழுதுகிறார் :

“Litost”  est un mot tchèque intraduisible en d’autres langues. Il designe un sentiment infini comme un accordéon grand ouvert, un sentiment qui est la synthèse de beaucoup d’autres : la tristesse, la compassion, le remords et la nostalgie.”

(‘Litost’  என்பது பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட சாத்தியமற்ற செக் மொழி சொல். அது வரையறுக்கவியலாத உணச்சிக்கு,  அதாவது அக்கார்டியன வாசிப்பில் அதன் காற்றூதியை விரியத் திற்பதற்கு ஈடானது. அதில் துயரம், பரிவு, மனவுறுத்தல், கடந்தகால ஏக்கம்  என எல்லாமுண்டாம். ) அதனாலோ என்னவோ பிரெஞ்சு நூல் முழுவதும் litost சொல்லுக்கு விளக்கம் கொடுத்துவிட்டு அச் செக் மொழி சொல்லையே பிரெஞ்சு நூலிலும் உபயோகிக்கிறார்.

நம்மிடத்தில் ஒரு பக்கம் ஆப்பிள், ஆரஞ்சைக்கூட தமிழில் மொழிபெயர்க்கத் துடிக்கும் 5 விழுக்காடு தூயதமிழ் ஆசாமிகள். இன்னொரு பக்கம் “எங்க மேரேஜ் ஜனவரியில் ஆச்சுங்க, ஹஸ்பெண்டுக்கு விவசாயம், நான் ஹவுஸ் ஒய்ஃப், பசங்க ஸ்கூல் விட்டு வரநேரம், கரெக்டா வந்திடுவாரு, குந்துங்க காப்பி கொண்டுவாரென்” என தமிழ் பேசும் 90 விழுக்காடு மக்கள். எஞ்சியிருக்கிற 5 விழுக்காட்டினர் வாசிப்பு எதிர்பார்பார்ப்பிற்கு மொழிபெயர்ப்பது அத்தனை சுலபமல்ல.

இப்பிரச்சைனை செக்மொழிக்கு மட்டுமல்ல, எல்லா மொழிகளுக்கும் உண்டு. சிலசொற்களை அவற்றிற்கு நூறுவிழுக்காடு நேர் செய்யக்கூடிய பிற மொழிசொற்களுக்குக் கொண்டுபோவது கடினம். தமிழிலும் அதனை உணர்ந்திருக்கிறேன். தவிர இங்கு அகராதிகள் பல கலை சொற்கள், அல்லது அருஞ்சொற்கள் துறை சார்ந்த வல்லுனர்களின் கருத்தைக்கேட்காது தங்கள் புரிதலுக்கு ஏற்ப மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன, அல்லது கூலிக்கு மாரடிக்கப்பட்டிருக்கின்றன என்பது தமிழ் அகராதிகளைப் புரட்டுகிறபோது எனக்கேற்படும் அனுபவம்.  

மொழிபெயர்ப்பு என்னும் ஓட்டப்பந்தயத்தில் மூல ஆசிரியன், மொழிபெயர்ப்பாளன் இருவரும் பங்கேற்கிறார்கள், பந்தய முடிவில் எல்லைக்கோட்டை அடையும்போது இருவருமே ஜெயித்தவர்களாக இருக்கவேண்டும். அதுவே சிறந்த மொழிபெயர்ப்பு,

———–

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s