சைகோன் – புதுச்சேரி நாவலில் இருந்து
சைகோன் – புதுச்சேரி (நாவல்), டிஸ்கவரி பளிகேஷன்ஸ், சென்னை
அத்தியாயம் – 18
சைகோன் – வேதவல்லி (6)
1934 ஜனவரி 14
தைப் பொங்கல். காலையில் எழுந்து, கரிஅடுப்பில் புதுப் பானையில் பொங்கலிட்டு இறக்கி எளிமையாகப் படைத்துவிட்டு விழாவுக்குத் தயாரானேன். சுப்புவும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் யோசனையில் இருந்தார். மளமளவென வேலைகளை முடித்தோம். இருவரும் உடுத்திக்கொண்டு வெளியில் வந்து சிறிது தூரம் நடந்திருப்போம். எங்கள் அருகே ரெனோ நோவா மோட்டார் வாகனம் ஒன்று நின்றது. வாகனகத்தைக் கண்டதும் அது இஸ்மாயில் அண்ணனுடையது என்பதைப் புரிந்துகொண்டேன். கண்ணாடியை இறக்கி, « விழா மண்டபத்துக்குத்தானே, காரில் ஏறுங்க » என்றார். கணவர் முகத்தைப் பார்த்தேன். அவர் இஸ்மாயில் அண்ணனுக்கு நன்றி தெரிவித்துவிட்டு முன் இருக்கையில் அமர்ந்தார். நான் பின் இருக்கையில் உட்கார்ந்து கதைவை இழுத்துச் சாத்தினேன். « எங்கே அண்ணியும் பிள்ளைகளும் ? » என விசாரித்தேன். « அவர்களை மண்டபத்தில் விட்டு ஒரு மணி நேரம் ஆச்சு. அவசரமாக ஒருத்தரைப் பார்க்கவேண்டி இருந்தது. சந்திச்சுட்டு மண்டபத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தேன், உங்களைப் பார்த்தேன் », எனப் பதில் கிடைத்தது.

சைகோன் தமிழர்களிட த்தில் பண்டிகைகளுக்குக் குறைவில்லை. டிசம்பர் இறுதியில் கிருஸ்துமஸ் பண்டிகை, அதைத் தொடர்ந்து ஆங்கில வருடப்பிறப்பு. தை மாதப் பொங்கல் திருவிழா ,மே மாதத்தில் ரம்ஜான் பண்டிகை. தீபாவளி, பிறகு மாரி அம்மன் கோவிலில் நவராத்திரி, ஆயுத பூஜை, முருகனுக்கு வெள்ளித் தேர் என வருடம் முழுக்க எங்களைச் சந்தோஷப்படுத்த விழாக்கள் இருந்தன. இது தவிர காதணி விழா, மஞ்சள் நீர், திருமணம் போன்ற சுப சடங்குகளும் உண்டு. வேண்டியவர்கள் எனில் சமயபேதமின்றித் தகவல் வரும். தம்பதி சமேதரராக வந்திருந்து நேரிலும் அழைப்பார்கள். டிசம்பர், ஜனவரி மாதங்கள் கூடுதலாக அமர்க்களப்படும்: கிறிஸ்துமஸ், ஆங்கில வருடப்பிறப்பு, தைப்பொங்கல், சீனர் மற்றும் வியட்நாமியர்களின் வருடப்பிறப்பென்று நிறைய பண்டிகைகள். கிறித்துவப் பெண்கள் பட்டுடுத்தி வீட்டிலிருக்கிற அவ்வளவு நகைகளையும் பூட்டிக்கொண்டு தேவாலயத்துக்குப் போவார்கள்., கர்த்தரிடம் மன்றாடுவார்கள். உறவினர்கள் நண்பர்கள் வீட்டுக்குப் போவார்கள். மாலை ஆறுமணிக்கே கொண்டாட்டம் ஆரம்பித்துவிடும். அலங்காரத்துடன் வந்திருக்கிற பெண்களை நோட்டமிட்டபடி ஆண்கள் பிராந்தியைக் குடிப்பார்கள். ஆரஞ்சு ஜூஸ் குவளையைக் கட்டுப்பெட்டியான இந்தியப் பெண்மணி ஒருவர் கையில் எடுப்பார். அதேவேளை பிராந்திக் கோப்பையைக் கையில் எடுத்த மற்ற பெண்மணி, தன்னுடைய ஐரோப்பிய நாகரீகத்திற்குத் துணை வேண்டி, சிவப்புச் சாய உதடுகளைத் திறந்து, « பிராந்தி ஒண்ணும் பண்ணாது, கொஞ்சம் எடுங்க மதாம் » என்பார். ஆரஞ்சு ஜூஸை கையில் எடுத்த பெண்மணி அப்போதும் மதுகுடிக்கத் தயங்கினால், «உங்களுக்கு கங்க்கோனா ஒயின் சரிவரும், பிராந்திவேண்டாம் » எனச் சாமார்த்தியமாக சமாதானம் செய்வார். சைகோனில் மதுகுடிக்கும் இந்தியப் பெண்மணிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். என் கணவர்போன்ற ஆண்கள், விழாக்களிலும் பிற கொண்டாட்டங்களிலும் கலந்துகொள்வதற்கு மது முக்கியமானதொரு காரணம்.
விழாக்கள், தமிழரில்ல சுப காரியங்கள் ஆகியவற்றில் தற்போது அதிகமாகக் கலந்துகொள்கிறேன். மஞ்சள் நீர்ச் சடங்குக்கு அழைத்தார்கள், மகளுக்குப் பூ முடிக்க அழைத்தார்களெனக் கணவரிடம், நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூசாமல் பொய்யும் சொல்கிறேன். எனக்கெதுவும் வேண்டாம் வீட்டில் அடைந்து கிடக்கிறேன். நீங்கள் போங்கள், குடியுங்கள், கும்மாளமடியுங்கள் என்று கணவர் அ அழைப்பை மறுத்துச் சத்தப்போட்ட நான், இன்று விரும்பிப் போகிறேன். என்னை யாரும் அழைக்க வேண்டும் என்பதில்லை. நிகழ்ச்சிபற்றிய செய்தியை எங்காவது காதில் வாங்கியிருப்பேன்; போ..போ… கலந்துகொள் என என் தலைக்குள் ஒரு குரல் உத்தரவு இடும். கலந்துகொள்வேன்.
அங்குப் போனதும், ஓர் அரைமணி நேரம் தெரிந்தவர்கள் கண்ணில் பட்டால் அவர்களிடம் பேசுவேன். அப்படி ஒருவரும் இல்லையெனில் ஓர் ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பேன். தேவையெனில் ‘ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்து திடங் கொள்’ என பைபிள் சொல்வதுபோல, உண்மையான இறைநம்பிக்கை என்பது நற்கருமங்களுக்கு உதவி, ஒத்தாசை புரிவதென இசுலாமியர் மார்க்கம் கூறுவதுபோல, விழாக்களுக்கு வந்திருக்கும் பெண்களுடன் கலந்து அவர்கள் செய்யும் காரியங்களுக்கு ஒத்தாசையும் செய்வேன். இதை நான் ஏன் செய்கிறேன் எதற்காகச் செய்கிறேன் என்பதற்குக் காரணம் சொல்ல எனக்குத் தெரியாது. மூடிய சன்னற் கதவின் இடுக்கில் பாயும் ஒளிக்கீற்றுபோல ஏதோ மூளையை உரசுகிறது. பாகூரில் சின்னையா பிள்ளையென்று ஒருவர் இருந்தார். அம்மா வழியில் சொந்தம். வித்தியாசமான மனுஷன். ஊரில் நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் அவரைக் கூப்பிடவேண்டாம், ஆஜராகிவிடுவார். இதுதான் என்பதில்லை எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வார். பந்தக்காலும் நடுவார், பந்தி இலையை எடுக்கவும் செய்வார். இவ்வளவு செய்கிறவர், கடைசிப் பந்தியிலாவது உட்கார்ந்து, ஒரு வாய் சாப்பிட்டுவிட்டுப்போகலாம் இல்லையா, தொடமாட்டார். அவர் இறக்கும் வரை அப்படித்தான் வாழ்ந்தார். இப்படி வாழ்ந்து என்ன சம்பாதித்தார் என்கிறீர்களா. நிலம் நீச்சு ஆளு அம்பென்று வாழ்ந்த பெரியமனிதர்களெல்லாம், அவரைப் பார்த்தால் கையெடுத்துக் கும்பிடுவார்கள். மூலவரைச் சேவித்துக்கொண்டு ஊரின் முக்கியமான பெரிய மனிதர்களெல்லாம் நிற்பார்கள், தீபாராதனைத் தட்டுடன் அர்ச்சகர் ஓரமாய் நிற்கிற சின்னய்யாப் பிள்ளையைத் தேடுவார்.
« இதற்காகவா இந்த மனுஷன் இவ்வளவையும் செய்யனும் ? » என்று ஒருமுறை அப்பாவிடம் கேட்டேன். « நீ கேட்ட இந்தக்கேள்வியைப் பலரும் அவரிடம் ஏற்கனவே கேட்டாச்சு;மழுப்பலான சிரிப்பைத் தவிர வேறெதையும் அந்தப் பைத்தியக்காரன் சொன்னதில்லை » என்றார். பாகூரில் கேட்ட கேள்விக்கு, எனக்கு விடை கிடைத்த இடம்,சைகோன். பொழுது : முன்னிரவு. வேளை : என்றும்போல சன்னல் வழியாக நட்சத்திர ஆகாயத்தைக் கண்களால் துலக்கிக்கொண்டிருந்த நேரம். அதுமுதல் எனக்கும் பைத்தியக்காரிப் பட்டம் வாங்கும் ஆசைகள் அடிக்கடி வந்தன.
சைகோன் தமிழர்களுக்குப் பொங்கல் பண்டிகை முக்கியமான பண்டிகை. பொங்கல் பண்டிகைக்கு விழா எடுக்கப் பஞ்சாங்கத்தைப் பார்த்து நாள் குறிக்கிறபோது, பொங்கல் நாளை ஒட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று விழாவை வைத்துக்கொள்வார்கள். தமிழ்ச் சங்கம் நடத்தும் பொங்கல் விழாவில் இரண்டு வருடங்களாகக் கலந்துகொள்கிறேன். என்னுடன் பொங்கல் விழாவிற்குக் கணவர் முதல் முறையாக வருகிறார். மண்டபத்தை அடைந்தபோது, விழா ஏற்பாடுகள் களைகட்டி இருந்தன. சிலர் மேடையை ஒழுங்கு செய்துகொண்டிருக்கிறார்கள். மேடைக்குக் கீழே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் பூக்காடுபோல மனிதர்கள் : மல்லிகை, முல்லை, தாமரை, தாழம்பூ, பவளமல்லி, நந்தியாவட்டை, செவ்வந்தியென அத்தனையும் தமிழ்ப்பூக்கள். உதிர்வதற்குத் தயாரானவை, உதிர்வதற்கு முந்துபவை , ஒரு வாரத்திற்கு முன்பாகப் பூத்தவை, அண்மையில் பூத்தவை, சற்றுமுன்பு மலர்ந்தவை, மொக்குகள், அரும்புகள். பூஜைக்கு, அலங்காரத்திற்கு, தலையில் சூட, கழுத்தில் மாலையாய் விழ என விதிக்கப் பட்ட உயிர்ப்பூக்கள். தமிழ்ப்பேச்சு போதாதென்று வாசனைத் தைலத்தின் மணம் மண்டபமெங்கும் நிறைந்திருந்தது. வந்திருந்தவர்களில் பெரும்பானமையோரைக் கடைகளில், வீதிகளில், கோவில்களில் கண்டிருக்கிறேன். அவர்களுடனான உறவென்பது பரஸ்பரப் புன்னகையைத் தாண்டியதில்லை.
எனது கவனம் மொட்டுகளிடத்தில் சென்றது. பட்டுப்பாவாடை, பட்டுச்சட்டை, நெற்றிச்சுட்டி, காதில் தொங்கட்டான், சடைக்குக் குஞ்சமென அலங்காரமும் ஆனந்தமுமாகச் சிறுமியர்கள் ஐந்தாறு பேர் வட்டமாக நின்று ஒருவரையொருவர் தொட்டும், தலையை ஆட்டியும், தேர்ச் சிலைகள் குலுங்குவதுபோல ஆர்வத்துடன் பேசிக்கொண்டிருப்பதைச் சில கணங்கள் ருசித்தேன். அவர்களின் அந்த வயதில் நானும் பல விழாக்களில் பட்டுப்பாவாடை சலசலக்கக் குறுக்கும் நெடுக்கும் காரணமின்றி அலைந்தது ஞாபகம் வந்தது. சற்றுத் தூரத்தில் பையன்கள். சிறுமியரைக் கைகாட்டிக் கலகலவென்று சிரிக்கிறார்கள்; சத்தமாகப் பேசுகிறார்கள். « டேய் கத்தாதீங்க, பொம்பிளைப் புள்ளைங்க எவ்வளவு அடக்கம் ஒடுக்கமா இருக்குதுங்க, நீங்க மட்டும் ஏண்டா இப்படி ! » எனத் தோளில் போட்டிருந்த துண்டைத் தலையில் உருமாலாகக் கட்டியபடி ஒரு நடுத்தர வயது மனிதர் சத்தம்போட்டார். « ஆம்பிளைப் பசங்கன்னா அப்படித்தான் இருப்பாங்கய்யா, அவங்க போடற சத்தத்தை விட நீ போடற கூச்சல்தான் இங்கே பெருசா கேட்குது. இன்னும் வரவேண்டியவங்க இருக்கிறாங்க; நாற்காலிகள் பத்தாது; இன்னும் பத்துக்குக் குறையாம தேவைப்படும்,; கொண்டுவந்துபோடு ! » எனக்கூறிக்கொண்டே இஸ்மாயில் அண்ணன் எங்கள் பின்னால் வந்து நின்றார். தொடர்ந்து என்னிடம், « ஏம்மா இங்கேயே நின்னூட்டீங்க, அமீனா உள்ளே, சிலபெண்களோடு சேர்ந்து பொங்கலிடறாங்க, உள்ளே போங்க. சீக்கிரம் ஆகனும்னு சொல்லுங்க; முக்கியமானவங்க எல்லாம் வர்ற நேரம் », என்றார்.
கணவர் முகத்தைப் பார்த்தேன். « நீ போ போ… நான் மிஸியே வேலாயுதம் வந்திருக்கிறதைச் சித்த முன்ன பார்த்தேன். அவர் இங்கதான் எங்கனாச்சும் இருக்கனும். அவர்கிட்ட பேசிக்கொண்டிருக்கிறேன் » என்றார். பேச்சு உண்மையாக இருந்தது, « போ.. போ, வீட்டுக்குத் திரும்பினதும் வச்சுக்கறேன் கச்சேரி ! » என்கிற மிரட்டல் தொனி இல்லை. இஸ்மாயில் அண்ணன் கைகாட்டிய பக்கம் போனேன், இரண்டு மூன்று பெண்கள் இறக்கி வைத்த பொங்கல் பானையை மூடி வைப்பதில் கவனமாக இருந்தார்கள். சர்க்கரைப்பொங்கல், கரும்பு, உளுந்துவடை, பாயாசம் கலந்த மணம். « ஏதாவது ஒத்தாசை பண்ணனுமா ? » எனக்கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தேன்.
குரலைக் கேட்டு அமீனா பேகம் திரும்பிப்பார்த்தார். புர்க்காவைக் கழுத்துக்குப் பின்னே தள்ளியிருந்தார். « வாங்க வேதா அண்ணி, எல்லாத்தையும் முடிச்சிட்டோம். பாயாசத்துல ஏலக்காயும், குங்குமப்பூவும் போட்டு இறக்க வேண்டியதுதான். அதை இவளுவ செஞ்சிடுவாங்க. » என்று அவர் முகம் திரும்பிய பக்கம் என்பார்வை சென்றது. இரண்டு குமரிப்பெண்கள். ஒருத்தி, தமிழ்ப் பெண் ஆகவும் மற்றொருத்தி வியட்நாமிய பெண்போலவும் இருந்தார்கள். « நம்ம பெரியசாமி அண்ணன் பொண்ணுங்க. படிப்பு, சமையல் ரெண்டும் நல்லா வரும் » என்கிற அறிமுகத்திற்குப் பிறகு இரு பெண்களும் சிறிய முறுவலுடன் கைகூப்பினார்கள். ஒரு தலையாட்டலில் அதை ஏற்றுக்கொண்டு திரும்பினேன்.
அங்கிருந்த மற்றவர்களை அமீனா பேகம் அறிமிகப்படுத்தினார். என் கண்கள் அவர்கள் சேலைகளையும் அணிந்திருக்கும் நகைகளையும் எடைபோட்டு, புரிந்துகொள்ள முயன்றது. இவர்கள் மதாம் சுந்தரம், இந்த அம்மாள் மதாம் சாமி. இவங்க ரெண்டு பேரும் லா கிராந்தியே வீதியில இருக்காங்க, இவங்க மதாம் லெபிளாங் .,தெஸ்த்தார் வீதியில உங்க பக்கத்துலதான் இருக்காங்க. கடைசியா இவங்களைப் பத்தி சொல்லனும் .இவங்க மதாம் புருஷாந்தி, போல் பிளான்ஷி வீதியில இருக்காங்க. மதாம் புருஷாந்தியை அமீனா பேகம் அறிமுகம் செய்தபோது இளம்பெண்களைத் தவிர மற்றப் பெண்களின் முகம் போன போக்கைக் கவனித்தேன். ஓர் அரைமணி நேரத்தை வாய்க்கு வந்ததைப் பேசிக் கழித்தோம் : சைகோனுக்கு எப்போ வந்தீங்க ? புதுச்சேரியில எங்கே வீடு? ரெனோன்சான் கொடுத்து வந்தீங்களா, கொடுக்காம வந்தீங்களா ? திரும்ப ஊருக்குப் போகும் எண்ணமிருக்கா ? இப்படி. அவை அலுத்தபின்பு «அதிரசம் சுட்டேன் சரியா வரலை », « செட்டியார் கடை வெள்ளைப் பூண்டு முன்ன மாதிரி இல்லை » போன்றவைகளைச் சேர்த்துக்கொண்டோம். எல்லோரும் கும்பல் கும்பலா நின்னு பேசறதை விட்டுட்டு, உட்கார்ந்தா நிகழ்ச்சியை ஆரம்பிச்சுடலாம், என ஒருவர் மேடையில் அறிவிக்கப், பேச்சுகள் நின்று மண்டபம் அமைதியானது.