பெற்றோருக்குக் பிள்ளைகளைப்போல எழுத்தாளனுக்குத் தம் படைப்புகள் உயர்ந்தவை. காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சு. பிற என வருகிறபோது ஏதோ சில காரணங்களால் ஒன்றை ஏற்பதும் பிறவற்றை நிராகரிப்பதும் இயல்பாக நிகழ்கிறது. ஒருவருக்கு காரம் பிடிக்கும், இன்னொருவருக்கு இனிப்பு பிடிக்கும். காரத்தை விரும்பும் மனிதரை இரசனையற்றவர் என இனிப்பை விரும்பும் மனிதர் போகிறபோக்கில் கூற முடியாது. உண்டு வளர்ந்தது, கண்ணிற் கண்டது, காதில் கேட்ட து, தொட்டு உணர்ந்தது; நமது குடும்பம், குடிகொண்டிருக்கும் வீதி, வீதி சார்ந்த ஊர், ஊர் அடங்கிய சமூகம் அனைத்தும் நமது உணர்வைத் தீர்மானிக்கின்றன.
நண்பர் மாலன் முக நூல் பதிவு ஒன்றில் எழுத்த்தின் அடையாளம் அது சார்ந்த காரணிகளைக் காட்டிலும் பிறவற்றால் தீர்மானிக்கப்படுகிறது என்பதாக தமது முக நூல் நணபர் கருத்தைப் பதிவிட்டிருந்தார்.
இந்தியாவில் எழுத்து என்பது மாநிலம், மொழி சார்ந்து முதலிலும், பின்னஎர் வேறு கூறுகளாலும் தீர்மானிக்க்கப்படுகிறது. பலமொழிகள், பல சமயங்கள், பல பண்பாடுகளைக்கொண்ட இந்தியாவில் ஒற்றுமையைக் கட்டிக்காப்பது அவசியம் என்கிற நிர்ப்பந்தம் இருப்பதாலேலே தென் மாநில இலக்கியங்கள் அடையாளம் பெருகின்றன இல்லையெனில் இந்தியில் மட்டுமே நன்றாக எழுதப்படுகிறது எனச்சொல்லப்படும் அபாயம் அதிகம். ஐரோப்பியரிடமோ, அமெரிக்கரிடமோ, தெனமெரிக்க பிரஜைகளிடமோ விசாரித்தால், அவர்களில் பெருவாரியான மக்கள் ஆசியாவிலோ, ஆப்ரிக்காவிலோ இலக்கியம் உள்ளதா என கேள்வி எழுப்புவார்கள். ஆசிய ஆபிரிக்க எழுத்தாளர்களை அவர்கள் அங்கீகரிக்கின்ற முன்வருவதே, தங்கள் எழுத்தை மேலானது என்று சொல்ல கடைபிடிக்கும் ஒருவகை உத்தி. ஒரு தாகூருக்குக் கொடுத்து, எங்களிடத்தில் எத்தனைத் தாகூர்கள் பார்த்தீர்களா எனச் சொல்லும் நரித் தந்திரம்.
தொடக்கத்தில் சொன்னதுபோல அவரவர்க்கு அவரது பொருள் உயர்வு. தமிழிலும் எழுத்தைக் காட்டிலும் எழுதியவர் யார், அவர் குலம் கோத்திரம், நிறம், மணம், குணம் அவர் நம்ம ஆளா, எத்தனை கிலோ தேறுவார் என எடைபோடும் குணம் நம்மிடம் அதிகம்.
நான் ஒரு கடை வைத்திருக்கிறேன். ஒரு முறை பொது நிகழ்ச்சியொன்றில் சந்தி த்த தமிழர் ஒருவர், அவருக்குப் பிடிக்காத ஒரு நபரின் பெயரைக் கூறி( யாரோ எவரோ அல்ல சொந்த அண்ணன்) « அந்த ஆளை ஒரு தடவை உங்க கடையிலப் பார்த்தேன். அதனால தான உங்க கடைக்கு நான் வருவதில்லை » என திருவாய் மொழிந்தார். ஒரு மாதத்திற்குப்ப் பிறகு மறுபடி அந்நபரை உள்ளூர் பேருந்தில் எதிர்பாராமல் சந்திக்க வேண்டியிருந்தது. திருவுள்ளம் கொண்ட அந்த உதாரணத் தமிழரை நெருங்கி « பஸ்ஸைவிட்டு உடனே இறங்குங்க, உங்களுக்கு வேண்டாத ஆள இந்த பஸ்ஸுல பல முறை பார்த்திருக்கேன் » என எச்சரிக்க அவர் முகம்போன போக்கைப் பார்க்கவேண்டுமே, பாரதி கண்டிருந்தால் நெஞ்சு வெடிக்க ஒரு கவிதை எழுதியிருப்பான். தமிழில் ஒரு படைப்பை பாராட்டும் நபர், மற்றொரு இலக்கியவாதிக்கு ஏதோ காரணத்தால் வேண்டாதவராக இருப்பின் பாராட்ட ப் பட்ட படைப்பும் அந்த மற்றொரு இலக்கியவாதிக்கு எட்டிக்காய் ஆக கசக்கும், குமட்டல் வரும்.