சைகோன் – புதுச்சேரி (நாவல்) – லெயோன் புருஷாந்தி
தமிழர் வழக்கில் சொல்வதெனில் ஆசிரியர் செத்த பின் கொண்டாடப் பட உள்ள நாவல்.

நாவலில் வரும் புருஷாந்தி மறக்கபட்ட த் தமிழர் . இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தென் கிழக்கு ஆசியாவில் கப்பலோட்டிய முதலும் கடைசியுமான செல்வந்தர், தமிழர்.
வழக்கம்போல இந்நாவலிலும் உண்மையும் புனைவுமான கதைமாந்தர்கள் இடம்பெறுகிறார்கள். புருஷாந்தி ஓர் உத்தம தமிழரென சான்றிதழ் வழங்கலாம். ஏன் எனில் ஆய்வாளர் ஜே.பி. மோர் என்பவரைத் தவிர ஒரு தமிழரும் இதுநாள் வரை அவரை அறிந்தவர்களில்லை. சிலை வைக்க கோரிக்கை எழவில்லை.
சைகோன் – புதுச்சேரி நாவல் லெயோன் புருஷாந்தியைப் பற்றி பேச எழுதபட்ட நாவல் எனில் மிகையில்லை. 1901ல் பிறந்த புருஷாந்தி பெயர் விநோதத்தைக் கண்டு மலைக்கவேண்டாம். பல இந்தியப் பெயர்கள் பிரெஞ்சுக்காரர்கள் அவர்கள் காதில் வாங்கிய ஒலியைகொண்டு எழுதமுற்பட்டதின் விபரீதம் இது. அவருடைய உண்மையான பெயர் பிரசாந்த் ஆக இருக்கவேண்டும். முன்னோர்கள் வெகுகாலத்திற்கு முன்பு ஆந்திராவிலிருந்து புதுச்சேரிக்கு குடிவந்தவர்கள், தமிழரென தாராளமாகச் சொல்லலாம். பல புதுச்சேரிவாசிகளைப் போலவே புருஷாந்தியின் தந்தையும் சைகோன் சென்றார். லெயோன் புருஷாந்தி கல்வியை முடித்து வங்கியில் உத்தியோகம் பார்த்தார். இடையில் திருமணம் நடந்தது. முதல் மனைவியின் அகாலமரணம், புருஷாந்தியை மறுமணம் செய்துகொள்ள காரணமாயிற்று. பெரியார் விசுவாசி ஆனதால் இரண்டாவது மனைவி ஒரு விதவை, உறவினர். அந்த அம்மாளுக்கு முதற்கணவர் மூலமாக வந்த சொத்துக்கள் அனைத்திற்கும் இவர் அதிபதி ஆனார். ஏராளமான இரப்பர் தோட்டங்கள், நெல்வயல்கள் அனைத்திற்கும் தற்போது லெயோன் புருஷாந்தி ஏக வாரிசு. காந்தி, பெரியார் இருவரிடமும் தீவிர ஈடுபாடு. காந்தியிமீது கொண்ட விசுவாசத்தினால் வங்கி வேலையை உதறிவிட்டு பொதுத் தொண்டில் இறங்கினார். இந்திய தேச விடுதலைக்குத் தாம் எப்படி உதவ முடியுமென யோசித்தார். இதற்கிடையில் பெரியாரிடத்திலும் பற்றுதல். ஆனால் சைகோன் தமிழர்களிடை இவர் வற்புறுத்தியது உடை சீர்திருத்தம். இத்துடன் நிறுத்திக்கொண்டிருக்கலாம். நேதாஜி இந்திய தேசிய லீக் என ஆர்வம்கொண்டு அதன் காரணமாக ஜப்பானியருடன் காட்டிய நெருக்கம் இவருடைய விதியை மாற்றியது. ஜப்பானியர் இரண்டாம் உலகப்போரில் தோற்றவுடன், நேதாஜியும் விமான விபத்தில் மரணிக்க பிரெஞ்சு அரசாங்கம் ஜப்பானியர் நண்பர்களை தம்முடைய விரோதிகளாப் பார்க்கிறது. புருஷாந்தியை கைதுசெய்கிறார்கள், விசாரணை என்ற பெயரில் அரங்கேற்றிய காட்டு மிராண்டித்தனமான வதைகளால் மனநிலை பிறழ்ந்த மனிதராகச் சிறையிலிருந்து வெளியில் வருகிறார். வியட்நாம், கம்போடியா, பின்னர் சென்னை கீழ்பாக்கமென அளிக்கப்பட்ட சிகிச்சைகளுக்குப் பலனின்றி, 1968 ஆண்டு இறக்கவும் செய்தார். இந்த உண்மையை இந்நாவலும் எடுத்துக் கையாண்டுள்ளது. புருஷாந்திக்கு இன்றைய தேதியில் இதைத் தவிர எனக்குச் செய்யஒன்றுமில்லை.

சைகோன் – புதுச்சேரி(நாவல்)
விலை 420 Rs.
வெளியீடு
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை.