மொழிவது சுகம் டிசம்பர் 22, 2021

அதிபர் தேர்தலும் கலையும்  இலக்கியமும்

பிரான்சு நாட்டில்  அதிபர் தேர்தல் நெருங்குகிறது (ஏப்ரல் 2022) அரசியலில் மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை வலதுசாரிகள் இடதுசாரிகள் என்ற பிரிவு பொதுவில் அதிகம் பொருளாதாரக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருந்த காலம் மறைந்து தற்போது ஐரோப்பியர், ஐரோப்பியர் அல்லாதார் என மக்களைப் பிரித்து  நிறம் இனம் என்ற சொல்லடையாளங்கள் அடிப்படையில் தங்கள் கொள்கைகளை வகுத்துக்கொண்டு அரசியல்செய்கிற காலமிது.  கருத்துக் கணிப்பின்களின்படி வலது சாரிகளுக்கும் தீவிர வலதுசாரிகளுக்கும் அதிபர் தேர்தல் போட்டி(இடது சாரி கட்சிகளின் வேட்பாளர்கள் -பசுமை கட்சி, சோஷலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட், தீவிர இடதுசாரிகள் – ஒருவர்கூட தேறமாட்டார்கள் என்கிற நிலமை). தற்போதைய அதிபர், வலமா இடமா ?  போன அதிபர் தேர்தல் வரை, முன்னாள அதிபரின் அலுவலகத்தில்  நிதித் துறை ஆலோசகர். திடீரென்று கட்சிகள் பின்புலமின்றி அதிபர் தேர்தலில் குதித்தார். வங்கி அதிபர்கள், பெறு நிறுவனங்கள், தவிர தீவிர வலது தீவிர இட து சாராத  மிதவாதிகள்  ஆதரவும் கிடைக்க,  பாரம்பர்ய கட்சிப் பின்புலமற்ற ஒருவரால் அதிபராக முடிந்தது.   திரும்பவும் அவர் ஜெயிக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம். இத்தகைய சூழலில் கலை இலக்கிய உலகில் இரண்டு அதிசயங்கள் நடந்தன.

  1. Panthéon :

பாரீசில் உலகப் புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள்  உண்டு. அப்பட்டியலில் ‘Panthéon’ நினைவுக்கூடம் முக்கியமானதொன்று.  பாரீசு நகரில் Quartier Latin பகுதியில்  இந்நினைவுக்கூடம் உள்ளது. பெருநகர மொழியில் சொல்வதெனில் இலத்தீன் வட்டத்தில் இருக்கிறது. ஒருகாலத்தில் இப்பகுதியில் உள்ள உயர் கல்விக்கூடங்களிலும், பிற முக்கிய இக்கிய மன்றங்களிலும் இலத்தீன் மொழி அதிகம் ஒலித்ததால் ‘Quartier Latin’. ‘Panthéon’ ல்  என்ன விசேடமெனில் பல கலை இலக்கியவாதிகளின்  சமாதிகள் ஒரே இத்தில் – வொல்த்தேர், விக்தொர் யுகோ, எமில் ஸோலா என 80 பேர்- இலக்கியம், அரசியல், இராணுவத்தில் சாதித்த உடல்கள் . இச்சமாதிகளில் ஒன்றாக ஐரோப்பிய இனத்தவரிடையே ஆப்ரிக்க பெண்மணி உடலும் கடந்த நவம்பர் 31 முதல் இடம் பெற்றுள்ளது.  இனவெறியும் நிறவெறியும் அதிகம் சுட்டெரிக்கிற அரசியல் மற்றும் சமூகச் சூழலில் பிரான்சு தேசத்தைப் புகலிடமாக தேர்வு செய்து மறைந்த கருப்பரின பெண்மணி Joséphine Baker அமெரிக்காவில் பிறந்தவர். பிரான்சு தேசத்தில் குடியேறி, பாடல், நடனம் என முழு நேர தொழில்முறைக் கலைஞராக மாறியபின் இரண்டாம் உலகபோரின்போது ஜெர்மன் பிரான்சு நாட்டை ஆக்ரமித்திருந்த சூழலில், அதற்கு எதிரான எதிர்ப்பு இயக்கத்தில் தீவிரமாகப் பங்காற்றியவர். உலகில் பலநாடுகளிலிருந்தும் இனம், நிறம் பேதமின்றி பிள்ளைகளைத் தத்தெடுத்து அவருடைய கோட்டைபோன்ற  வீட்டில் அடைக்கலம்  அளித்து கல்வி தந்தவர். தம் சொத்து முழுவதையும் பிறர்க்கென வாரிவழங்கிய  அப்பெண்மணியின் இறுதிக்காலம் வறுமையில் முடிந்தது . இப்பெண்மணிக்கு கடந்த நவம்பர் 31 அன்று பிரெஞ்சு அரசாங்கம் Panthéon நினைவுக்கூடத்தில் இடமளித்தது தீவிர வலதுசாரிகளுக்கு மிகப்பெரிய சவுக்கடி.

2. மரியோ வர்காஸ் லோஸா

தென் அமெரிக்கா பெரு நாட்டைசேர்ந்த ஸ்பானிய மொழி எழுத்தாளர் மரியோ வர்காஸ் ஐ தமிழ் வாசகர்களும் அறிவார்கள். 2010 இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றவர். அவருக்குப் பிரெஞ்சு இலக்கிய உலகின் பீடம் எனச்சொல்லப்படுகிற பிரெஞ்சு அகாதமியில் உறுப்பினர் தகுதி அளிக்கபட்டுள்ளது. பிரான்சுதேச குடியுரிமை அல்லாதர் அதற்குள் நுழைவது அத்தனை எளிதான காரியமல்ல. மரியோ பிரெஞ்சு மொழி எழுத்தாளாரா என்றால் அதுவுமில்லை. எனினும் பிரெஞ்சுக் பண்பாட்டையும் மொழியையும் நன்கறிந்தவர் எனச்சொல்கிறார்கள். அண்மையில் ஆப்ரிக்க இளைஞருக்கு கொன்க்கூர் இலக்கிய பரிசை அளித்து கௌவுரவித்த துபோல, மரியோ வர்காஸுக்கு  பிரெஞ்சு அகாதமியில் இடமளித்திருப்பது கவனத்திற்குரியது. அகாதமி உறுப்பினர்கள் மரணமிலா பெருவாழ்வுக்கு உரியவர்கள் ( Immortels).  உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை நாற்பது, பதினெட்டாவது இருக்கைக்குரிய எழுத்தாளர் மற்றும் தத்துவவாதி மிஷெல் செர்(Michel Serres) இடத்தில் மரியோ வர்காஸ். எனினும் சிலி நாட்டுத் அதிபர் தேர்தலில் தீவிர வலது சாரி வேட்பாளருக்கு இவர் ஆதரவு அளித் திருப்பது இங்கு கடும் விமர்சனத்திற்கு காரணமாகி இருக்கிறது.

—————————————-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s