ஹரிணி பேசுகிறேன்….

 (சைகோன் – புதுச்சேரி நாவலில் இருந்துடிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை)

ஹரிணி

2020 ஜூன் 15…..

                                          I

            னித உறவுகள் தேவைகளை பொறுத்தவை இல்லையா ?  அலுவல் சார்ந்து, தினசரி வாழ்க்கைத் தேவைகளை முன்னிட்டு பேருந்திலோ, பொது இடங்களிலோ ஓரிரு விநாடிகளோ நிமிடங்களோ நம்மை எதிர்கொள்ளும் முகங்கள் எதிர்வீட்டுச் சுவர்போல, தெருமுனை கடைபோல, பேருந்து நிறுத்தம்போல அற்ப இருத்தல்களாக எனக்குப் படுகின்றன. விதிவிலக்காக குறுகியகாலம் புதிய ஊர், புதிய தேசம் என பயணிக்கிறபோது அந்நியச் சூழலில் எனது மொழியைப் பேசுகிறவர், நான் பிறந்து வளர்ந்து நாட்டைச் சேர்ந்தவர் என நம்பும் பட்சத்தில் நீங்கள் எப்படியோ, நான் அந்த  முகத்தைத் திரும்பத் தேடுகிறேன். கூட்டத்தில் கலந்தாலும் அம்முகத்திற்குரிய உடலைப் தேடும் நோய் என்னை பலகாலமாக பீடித்துள்ளது. என்னுடைய வாழ்க்கையில் அவர்களோ, அவர்களுடைய வாழ்க்கையில் நானோ சந்திப்புக்கு முந்தைய நாள்வரை குறுக்கிட்டிருக்க வாய்ப்பில்லை. அறிமுகமற்ற அந்த ஆண் அல்லது பெண், எனதருகில் காலியாகவுள்ள இருக்கையில் உட்காருகிறார்.  அவர் பேசாமல் அமர்ந்திருந்து தனக்குறிய நிறுத்தம் வந்த  தும் இறங்கிபோயிருந்தால் பிரச்சனையில்லை. நான் அறிந்த மொழியில் ஏதோ முனுமுனுக்கிறார் அல்லது நான் திறந்து படிக்கும் நாவலின் ஆசிரியர் தமக்கும் பிடித்த எழுத்தாளர் எனக் கூறிவிட்டு புன்னகைக்கிறார். எதோ ஒரு காரணத்தை முன்னிட்டு அறிறுமுகமாகும் இப்புதியவரை,  சில சமயங்களில் எனக்குத் திரும்பச்சந்திக்கவும் நட்புகொள்ளவும் நேரிடுகிறது. 

          பிரான்சு நாட்டில் கொரோனா தொற்று பற்றிய பதற்றம் மக்களிடையே அதிகம் பரவாமல் இருந்த நாளொன்றில் எதிர்பாராத ஒரு தொலைபேசி அழைப்பு. அழைத்த பெண்ணின் பெயர் மீரா.  புதுச்சேரிக்கு அருகிலுள்ள ஆரோவில் நகரில்  எதேச்சையாக நான் சந்தித்த ஒரு பெண். பயிற்சி முகாமொன்றில் சம்பவித்த எதிர்பாராதசந்திப்பு. எனக்கும் அவளுக்குமிடையே இருந்த  இடைவெளியை என்னைப்போலவே பிரான்சு நாட்டிலிருந்து வந்தவள் என்ற காரணம் குறைத்திருந்தது.   ஒருமணி நேரத்திற்கும் குறைவான சந்திப்பு. இதுபோன்ற சந்திப்புகளில்  இரு மனிதருக்கிடையில் என்ன நிகழுமோ, பேச்சுகளின் தன்மை என்னவாக இருக்குமோ அந்த வகையிலேயே எங்கள் சந்திப்பும் உரையாடலும் இருந்தன. தொலைபேசியில் தாய்வழி பெற்றோரின் இந்தோசீன வாழ்க்கை பற்றிய கூடுதல் தகவல்களுக்காக  என்னை அழைத்த தாகவும் கூறினாள். « என்னிடம் என்ன எதிர்பார்க்கிறாய் ? » எனக்கேட்டேன். «  ஸ்ட்ராஸ்பூர் நகரில் இந்தோ சீனா சண்டையில் பங்கெடுத்த  வியட்நாமியர் யரையேனும் சந்திக்க நேர்ந்தால் சைகோனில் சிங்காரவேலு-மரியா ஹோவாம்மீ தம்பதிகளைப் பற்றிக் கேள்விபட்ட துண்டா,  என விசாரித்துச் சொன்னால் போதும் »,  என்றாள். எனக்கு இவ்விஷயத்தில் அவளுக்குப் பெரிதாக உதவ முடியும் என்கிற நம்பிக்கை இல்லை. முயற்சித்துப் பார்க்கிறேன், எனக்கூறி அழைப்பைத் துண்டித்துவிட்டேன். 

          இது கடலில்தொலைத்த ஊசியைத் தேடும் கதை. எனக்கு இந்நகரில் சில பிரெஞ்சு நண்பர்களையும் இந்தியக் குடும்பங்களையும் தெரியும்அவர்களிடம் விசாரிக்கலாம் அல்லது என்னைப் பெற்றவள் ஒரு  பிரெஞ்சுப் பெண்மணி தவிர சமூக நலத்துறையில் பணியேற்றியவள், அகதிகளாகவும் வேறுகாரணங்களை முன்னிட்டும் பிரான்சு நாட்டில் குடியேறிய குடும்பங்களுக்கு தனது அலுவல்சார்ந்து உதவி இருக்கிறாள். அவளுக்கு ஒருக்கால் சைகோனிலிருந்து பிரான்சுநாட்டிற்கு குடிவந்த வியட்நாமிய குடும்பங்கள் தெரிந்திருக்கலாம்.  ஒரு நூற்றாண்டுகால ஆக்ரமிப்பிற்குப் பிறகு, ஆக்ரமிக்கப்பட்டவகளிடமே தோற்று பிரான்சு இந்தோசீனாவிலிருந்து வெளியேறியது. அவர்களை ஆதரித்து தங்கள் சொந்தங்களைப் பகைத்துக்கொண்ட வியட்நாமியர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவர்களுடன்  பிறந்த மண்ணைத் துறந்து பிரான்சுநாட்டில் தஞ்சம் புகவேண்டிய நிர்ப்பந்தம்.   அவர்களில் எத்தனைபேர் சைகோனில் வசித்தவர்கள். அந்த முன்னாள் சைகோன்வாசிகளில்  புதுச்சேரிமனிதர்களை அறிந்தர்கள் எத்தனைபேர்?  அப்படியே அறிந்திருப்பினும்  இன்றைய தேதியில் அவர்கள் அனைவரும் முதுமை அடைந்திருக்கவேண்டும். ஆனபோதிலும் மீராவின் தேடலுக்கு உதவத் தீர்மானித்தேன்.

          அவள் தொலைபேசியில் அழைத்தவேளையில் நான் முன்பே தெரிவித்ததுபோல  மானுடவாழ்க்கை கொரோனா தொற்றிடம் சின்னாபின்னபட்டிருந்தது.  அபத்தமும், கதவடைப்பும், மிதமான அடக்குமுறையும்  முகக் கவசத்துடன் மலிவாக விநியோகிக்கப்பட்ட காலம்.  அல்பெர் கமுய்யும், காப்ஃகாவும் னவுகளில் கைகொட்டிச் சிரித்தார்கள். அன்றைக்கும் முந்தைய நாட்களைப் போலவே சலிப்பும் சோர்வுமாய் உட்கார்ந்திருந்தேன்.  அழைப்புமணி ஒலித்தது. கொரோனா காலங்களில் தேடிவரும் மனிதர்கள் குறைவு.  பதிவுத் தபாலை நேரடியாக பட்டுவாடாசெய்ய வேண்டிய கட்டாயத்தில் அஞ்சல் ஊழியர் வந்திருருக்கலாம் அல்லது ஆன்லைனில் ஆர்டர்  செய்த பொருளை ஒப்படைக்க வந்த ஊழியராக இருக்கலாம் அல்லது மீரா ?….. கதவைத் திறந்தேன். சந்தேகித்தவர்களில் ஒருவருமில்லை. இவள் குள்ளமான ஆசியப் பெண், மகிழ்ந்து வீட்டிற்குள் வரவேற்கக்கூடிய  தோற்றம். மெலிந்த உடல். மஞ்சள் நிறம், கழுத்தின் இருபுறமும் கருகருவென்று அடர்த்தியான கேசம், தட்டையான சிரித்த முகம், கண்களைத் தேடிக் கண்டுபிடித்தபின்,

          – என்ன விஷயம் சொல்லுங்கள், என்றேன்

          – எனது காரில் காய்கறிகள் இருக்கின்றன, விலை மிகவும் மலிவு, இரசாயண உரங்களின்றி இயற்கை முறையில் விளைந்தவை, என்றாள்.

          – சந்தோஷம், ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்புதான் கடைக்குச் சென்றுவந்தேன். அடுத்தமுறை வந்தீர்களெனில் கண்டிப்பாக வாங்குவேன், என்ற   பதிலைக்கேட்டு, ஏமாற்றத்துடன் திரும்பி நடந்தவள், நான் கதவைவிட்டு அகலாமல் இருப்பதை உணர்ந்தவளாய் மீண்டும் வந்தாள். 

          – என்னை சீனப்பெண் என நினைத்தீர்களா, இல்லை. வியட்நாமிய பெண். எங்கள் சங்கத்திற்காக இந்த விற்பனை. வியட்நாமிய கைவினைப் பொருட்களெல்லாம் கூட என்னிடம் இருக்கின்றன .

          வியட்நாம் என்றவார்த்தை  எனது குடியிருப்பிற்குள் அவளை அனுமதித்தக்க விரும்பியது.  « உள்ளே வாங்க, ஒரு காப்பி குடிச்சுட்டுப்போகலாம் » எனமரியாதை நிமித்தமாக அழைத்தேன். « இல்லை, எனக்கு நேரமில்லை. அடுத்தமுறை வருகிறேன் » எனக் கூறி வெளியேறியவளைத் தொடர்ந்தேன். தக்காளி,கத்தரிக்காய், திராட்சை, இரண்டு அன்னாசிப் பழங்கள் என  வாங்கிக்கொண்டபின், « உங்கள் வியட்நாமியச் சங்கம் எங்கே இருக்கிறது ?, » எனக் கேட்டேன். தாமதமின்றி ஒரு முகவரி அட்டையைக் கொடுத்தாள்.   புத்தர் ஆலயமொன்று அங்கிருப்பதாகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேரமும் அது திறந்திருக்குமெனவும் தெரிவித்தாள்.

                                                           II

          வியட்நாம் பெண்ணைச் சந்தித்த மூன்றாவது ஞாயிற்றுகிழமை,  மீராவும் நானுமாக காலை பத்துமணிக்கு, அவள்  கொடுத்திருந்த முகவரிக்குச் சென்றோம். ஸ்ட்ராஸ்பூர் நகரின் வடபகுதியில் இருபது நிமிட காரோட்டத்திற்குப் பின் அடர்ந்த காடுபோல மரங்கள். தார்ச் சாலை மரங்களை விலக்கி உள்ளே எங்கள் வாகனத்தை அனுமதித்த சில நொடிகளில் வணிக வளாகம் தோற்றத்துடன் அம்முகவரி எங்களை வரவேற்றது. ‘Pagode Phô-Hien’ என முன்வாயிலில், படல்போன்ற கதவருகே சலவைகல்லில் எழுதி வைத்திருந்தார்கள். நாங்கள் தயக்கத்துடன் சிறுகதவை உட்பக்கம் தள்ளியபோது, எழுந்த சப்தம் அங்கு நின்றிருந்த இரண்டு நடுத்தர வயது ஆண்களின் கவனத்தைத் திருப்பியது. முகக் கவசங்களை இறக்கி மெலிதாக புன்னகைத்தார்கள். எங்களை வரவேற்கின்ற வகையில் அவர்கள் தலை தாழ்ந்து உயர்ந்தன.  நடுத்தரவயதுடைய மனிதரொருவர்  கை நாங்கள் செல்லவேண்டிய திசை நோக்கி நீண்டது. கைகாட்டிய பாதையில்  இறங்கி நடந்த சில அடிகள் தூரத்தில் நடைகூடமொன்றின் ஆரம்பம். முழுக்க முழுக்க மரங்களை உபயோகித்திருந்த கட்டிட அமைப்பு இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒரு பகுதி வாழிபாட்டுக் கூடமாகவும் மறுபகுதி, உணவு விடுதி, சமையற்கூடம், அங்கத்தினர்கள் கூடிப்பேச ஒரு சிறுகூடம் என்றிருந்தன.

          கொரோனா தொற்று சூழ்நிலைக்கொப்ப மனிதர் நடமாட்டம் வளாகத்திற்குள் அதிகமில்லை. வந்திருந்த மனிதர்களும் ஆசியர் பாதி ஐரோப்பியர் பாதி என்றிருந்தனர்.  அவர்களில்  வயதான மனிதர்களைக் காண்பதும் அரிதாக இருந்தது. எதற்காக வந்திருந்தோமா அது நிறைவேறுமென்ற நம்பிக்கை எனக்குச் சுத்தமாக இல்லை. எனது ஏமாற்றத்தை வெளிப்படையாகத் தெரிவிக்கின்ற வகையில் உதட்டை பிதுக்கியவண்ணம் மீராவைப் பார்த்தேன். அவள் அதை பிரச்சனை இல்லை வா என்பதுபோல என்னை இழுத்துக்கொண்டு முன்னேறினாள்.  காலணிகளை கழற்றவேண்டியிருந்தது. வெற்றுக் கால்களுடன் ஒரு நீரூற்று, செடிகொடிகள் எனகடந்து முழுக்கமுழுக்க மரத்தாலான விசாலாமான மண்டபத்திற்குள் காலெடுத்துவைத்தோம்.

           பால் வெள்ளையில் சலவைக் கல்லால் செய்த பிரம்மாண்ட மான புத்தர் சிலை. மனிதர்கள் தரையில் கால்பாவாமல் நடப்பதுபோலபட்டது, அவ்வளவு நிசப்தம்.  காணிக்கை செலுத்தினார்கள். ஊதுபத்தியை கொளுத்தி மிகப்பெரிய அண்டாபோன்ற பாத்திரத்தில் நிரப்பியிருந்த மணலில் சொருகிவிட்டு ஒதுங்கி மற்றவர்களுக்கு வழிவிட்டார்கள். ஒதுங்கியவர்கள் முழங்காலிட்டு குனிந்து வணங்கிய பின்னர் ஆளுக்கொரு தடுக்களவு பாயில் சம்மணமிட்டு அமர்ந்தார்கள். வெள்ளை நிறத்தில் நீண்ட பருத்தியாலான காற்சராயும், அதே நிறத்தில் முழங்கால்களை மறைத்த  சட்டையும் தலைமுடியை முற்றிலுமாக வழித்திருந்த  பெண்மணி ஒருத்தி முழங்காலிட்டு வணங்கிய பிறகு புத்தர் முன்பாக சம்மணமிட்டு அமர்ந்தார். பௌத்தம் சம்பந்தப்பட்ட புனித நூலாக இருக்கவேண்டும் அதை விரித்துவைத்துக்கொண்டார் வலது கையில் சிறு மரச்சுத்தியல், அதைக்கொண்டு அருகில் கவிழ்த்திருந்த கையளவு வெண்கல கிண்ணத்தை அடித்து ஓசை எழுப்பியபடி சுலோகத்தைச் சொல்ல அதன் ஓசையும் வெண்கல கிண்ணத்தின் மெல்லிய அதிர்வும், மண்டபம் முழுதும் ஒலிது, எழமுடியாமல் எங்களைக் கட்டிப்போட்டது. 

          பிற்பகம் ஒரு மணிக்கு மண்டபத்திலிருந்து வெளியில் வந்தோம். சுட்டெரிக்கும் வெயில். அதிர்ஷ்ட்டவசமாக சுற்றிலும் பச்சைபசேலென்று மரங்கள், வளர்ந்த கோரைபுற்கள், செடிகொடிகள் ; அரும்புகள், பூக்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக பட்டாம் பூச்சிகள், இனிய நறுமணம். ஒரு சிறு குளம், குளமுழுக்கத் தாமரையும் அல்லியும். தண்டுகளுக்கிடையே கும்பல் கும்பலாக சிறு மீன்கள்.  குளத்தையொட்டிப் போட்டிருந்த பெஞ்சில் இளஞ்சோடி ஒன்று அமர்ந்திருந்த து. அவர்களிடம் « எங்களுக்குச் சைகோனைப்பற்றியத் தகவல் வேண்டும். உங்களால் அப்படி யாரையாவது அறிமிகப்படுத்த இயலுமா ? » மீரா இளைஞனிடம் கேட்டாள். அவன் « நாங்கள் ஆம்ஸ்டர்மிலிருந்து வந்திருக்கிறோம். பிரெஞ்சு தெரியாது. எங்கள் சங்கச் செயலாளரிடம் அழைத்துப்போகிறேன், அவர் பதில் சொல்வார் » என ஆங்கிலத்தில் பதில் கூறிவிட்டு முன்னால் நடந்தான். நாங்கள் இருவரும் இளைஞனைப் பின்தொடர்ந்தோம். அவன் எங்களைக் கொண்டுபோய் நிறுத்தியது மூன்றுவாரங்களுக்கு முன்பு, «  காய்கறிகள் விற்கிறேன் வேண்டுமா ? » எனக் கேட்டு என் வீட்டிற்கு வந்த அதே பெண்ணிடம். 

          எங்களைக் கண்டு புன்னகை செய்தவள், « புத்தரை தரிசித்தீர்களா,  மண்டபத்தின் சுற்றிப் பார்க்க முடிந்ததா ? உட்காருங்கள் இன்னும் சிறிது நேரத்தில் மதிய உணவு பரிமாறும் நேரம். சைவ உணவு.  இருந்து சாப்பிட்டுவிட்டுப் போகலாம் »,  என எங்களை உபசரிக்க ஆரம்பித்தாள். நான் மீராவின் முகத்தைப் பார்த்தேன். « உங்கள் அன்பிற்கு மிகவும்நன்றி ஆனால் உங்களோடு அமர்ந்து உணவுண்ணும் அதிர்ஷ்ட்டம் இன்றைக்கு எங்களுக்கில்லை. உண்மையில் நாங்கள் வந்தது வேறுகாரணத்திற்காக» என்றேன். « சொல்லுங்கள், என்ன விஷயம் ! » என்ற பெண்ணிடம் மீரா பாரீஸிலிருந்து வந்திருப்பதையும், வந்திருக்கும் காரணத்தையும் தெரிவித்தேன்.  « இதை நீங்கள் அன்றைக்கே தெரிவித்திருக்கலாமே » என்றவள் சற்று பொறுங்கள் வருகிறேன் எனகூறி, சமையல் பாத்திரங்களை ஒழுங்கு செய்து கொண்டிருந்த நடுத்தர வயது பெண்மணியை அழைத்துவந்தாள். மைஃபோங் என்றபெயரில்  அறிமுகப்படுத்தப்பட்ட பெண்மணி, எங்களைக் கண்டதும் கையெடுத்துக் கும்பிட்டார்.  தம்முடைய வளர்ப்புத் தாயும், தந்தையும் தமிழர்களென்றும் அதனால் ஓரளவு தமக்குத் தமிழ் வருமென்றும்,  இஸாபெல்லும் தானும் நெருங்கிய தோழிகளென்றும், இசாபெல் தந்தை சிங்காரவேலுவையும் தாய் மரியா ஹோவாம்மியையும் நன்றாகத் தெரியும் கூறினாள். என்னுடைய முகவரியைக்கேட்டு வாங்கிக்கொண்ட பெண்மணி, மறுநாளே எனது குடியிருப்பைக் கண்டுபிடித்து  ‘saigon -Dimanche, l’Inde -illustré, Reveil Saïgonnais, au comptoir- Hindou, impartial, தனது தாய் வேதவல்லியின் சுயபுனைவு  என  கைகளில் திணித்தபோது, மீராவுக்கு  மட்டுமல்ல எனக்கும் இன்ப அதிர்ச்சி.  

—————————————————————————————————-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s