கதைமாந்தர்கள்: பெண்
« பெண் இயற்கையின் சீதனப் பரிசல்லவோ » என்றொரு வரி, பழையத் தமிழ்ப்பாடலில் வரும். எனது முதற் புனைவான நீலக்கடல் நாவலை மறுபதிப்பு செய்யவிரும்பி, அதன் பிடிஎஃப் கோப்பை திரு பரிசில் சிவசெந்தில்நாதன் அனுப்பி இருந்தார். அந்நாவலின் முன்னுரை இப்படித் தொடங்குகிறது.
« வாழ்க்கையும் ஓரு கடல். நம்பிக்கைக்கும் எச்சரிக்கைக்கும் இடையிலேயே, நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். கடல் அழகானது, ஆழமானது, அமைதியானது, கொந்தளித்தால் அடங்காதது பெண்மையைப்போல. இருவருமே பார்வைக்குள் அடங்காதவர்கள். கண்ணைக்கொண்டு கணக்கிடமுடியாதவர்கள். அவர்களிடம் நமக்குள்ள ஈர்ப்பினை, குறிப்பாக அவர்களின் ‘மறுகரைகளு’க்குள்ள ஈர்ப்பினை, இவ்வுலகம் தோன்றிய நாட்தொட்டு புராணங்கள் காவியங்களோடு, சரித்திரச் சான்றுகளும் தெளிவாய் முன்வைக்கின்றன. »

காவியங்கள் பெண்களை மையப்படுத்தியே எழுதப்பட்டன. இன்று வெவ்வேறு பிரச்சனைகளைப் மையப்படுத்தி நாவல்கள் வெளிவந்தாலும் ஏதோவொருவகையில் பெண்கதைமாந்தர்கள் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறார்கள். மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், நாவல்கள் எனது ஆக்கங்களில் பெண்கள் கூடுதலாக இடம்பெற்றிருக்கிறார்கள். நீலக்கடல் தெய்வானை ; மாத்தாஹரி பவானி ; கிருஷ்ணப்ப நாயக்கர்கௌமுதி செண்பகம், சித்ராங்கி ; காஃப்காவின் நாய்க்குட்டி நித்திலா, ரணகளம் அக்காள் ; இறந்த காலம் மீரா ; வெளிவரவுள்ள சைகோன்- புதுச்சேரி வேதவல்லி ; இவர்கள் தவிர மாத்தாஹரி தொடங்கி ‘சைகோன் -புதுச்சேரி’ நாவல்கள் வரை அனைத்திலும் ஹரிணி என்ற பெண் இடம்பெறுகிறார். இவர்கள் எங்கிருந்து வந்தார்கள். இவற்றுக்கான காரணம் என்ன ? இவர்களெல்லாம் உண்மையா பொய்யா ? சில நேரங்களில் கற்பனையை காட்டிலும் உண்மைகள் சுவாரஸ்யமாக இருப்பதுண்டு.
பிரான்சு வந்த புதிதில் எண்பதுகளின் பிற்பகுதியில் சந்திக்க நேர்ந்த ஒரு ஐரோப்பியபெண், எங்கள் குடும்பநண்பர். எங்கள் மூன்றாவது பெண் பிரசவத்திற்காக மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லவும், தனது தாயை மருத்துவமனையில் எனது மனைவிக்குத் துணையாக விட்டுச் சென்றதும், அங்கிருந்து அழைத்துவந்தபோது உடன் வந்த தும் மறக்க முடியாதவை. தொடர்ந்த நட்பு காலஓட்டத்தில் தடைபட்டு, புதுவருட வாழ்த்து அட்டை பரிமாற்றம் என முடிந்த அந்த நட்பு ஒரு கட்டத்தில் அதுவும் இல்லையென்றானது. அவரைச் சுத்தமாக நாங்கள் மறந்து விடுகிறோம். காலங்கள் உருண்டோடுகின்றன. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தொலகாட்சி நிகழ்ச்சியொன்றில் அந்த அதிசயம் நிகழ்கிறது. இந்தியாவைக் காட்டுகிறார்கள். அதில் முப்பது முப்பத்தைந்து வயது பெண்ணொருத்தி தலித் இளைஞர் ஒருவரை மணந்துகொண்டு, பத்துக்கும் மேற்பட்ட ஏழை சிறார்களைத் தன் பிள்ளைகளாக ஏற்று ராஜஸ்தானில் வசிக்கிறார். அவர்களுக்கு நல்ல கல்வித் தருகிறார். தம்பதியரின் மண்சுவருடன் கூடிய விழல் வேய்ந்த வெறும் தரையில் பாய் விரித்து படுக்கிறார். காலையில் பிள்ளைகளுக்கு யூனிஃபார்ம் அணிவித்து ஷூக்களைபோட்டு, தனது இந்தியக் கணவருக்கு அவர் வாங்கிகொடுத்துள்ள வாகனத்தில் பிள்ளைகளை முத்தமிட்டு அனுப்பிவைக்கும் காட்சி நெஞ்சை நெகிழவைத்தது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் குடும்பத்திற்கு வந்து அவர்தானா இவர் என்பதில் ஐயமும் இருக்கிறது. பெண்ணின் பெற்றோர்கள் இறந்துவிட்டதால் என்னிடம் தற்போதைக்கு உறுதிபடுத்த தகவல்கள் இல்லை. அவர் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், மீண்டும் ஒரு பெண்ணை மையப்படுத்தி, அந்த உயர்ந்த உள்ளத்தை புரிந்துகொள்ளும் தேடலாக நாவலை எழுதுகிறேன், இம்முறை பிரெஞ்சிலும் எழுதி அதனை தமிழ்ப் படுத்த நினைத்து ஆரம்பித்திதுள்ளேன்.
பொதுவில் கதை மாந்தர்கள் எங்கோ நாம் கண்டவர்கள், நம்முடைய வாழ்க்கை என்கிற பெருங்கதையில் ஒரு சிலர் ஒன்றிரண்டு பக்கங்களிலும், வேறு சிலர் கூடுதலான பக்கங்களிலும், மற்றும் சிலர் தொடக்கம் முதல் முடிவுவரை வியாதிருப்பவர்கள். குறுக்கிடும் சக ஜீவன்களுடன் சில மணி நேரங்கள் பழக நேர்ந்தாலும், அவர்களை நன்கு புரிந்துகொண்டதுபோல நமது படைப்பில் பாசாங்கு செய்து பாத்திரங்களப் படைத்து நமது கற்பனைகளை அவர்களுக்கு அணிவித்து மகிழ்கிறோம் என்பது கசப்பான உண்மை. எத்தனை ஆண்டுகள் பழகினாலும் மனிதர்களை நன்கு விளங்கிகொள்ள சாத்தியமில்லை. இந்த விளங்காத பக்கங்களை விளங்கிகொள்ளும் தேடலாக கதை மாந்தர்களை படைத்து அவர்களின் குணத்தையும் பிற்வற்றையும் நமது ஊகங்களால் நிரப்புகிறோம்.
எனது தாயுடன் அருபது ஆண்டுகளுக்குச் சற்று கூடுதலாகவும், எனது மனைவியுடன் நாற்பத்தைந்து ஆண்டுகளாகவும் வாழ்ந்து வருகிறேன்.அம்மாவும் சரி, மனைவியும் சரி சராசரி இந்தியப் பெண்கள், என்னென்ன இலக்கணத்தை இவர்களுக்கென கீழைதேய பொதுபுத்தி விதிதிருக்கிறதோ அதை மீறாதவர்கள். எனது வாழ்க்கையில் பெருபகுதி அவர்களுக்குரியது. இன்றைய கிருஷ்ணாவின் பலம் அவர்கள் ஊட்டியது, எனது வாழ்க்கைப் பாதையை, இளம் வயதில் தாயும், திருமணத்திற்குப்பிறகு துணைவியும் செப்பனிட்டிருக்கிறார்கள். எனினும் அவர்களுடை பல நேர மௌனத்திற்கும், சிரிப்பிற்கும், முக சமிக்கைகளுக்கும் விடைகாண முடியாமற் திணறியிருக்கிறேன், திணறுகிறேன். பல நேரங்களில் அவற்றுக்கான தேடலாக கூட எனது நாவல்களின் பெண் கதை மாந்தர்கள் இடம்பெற்றுவிடுகிறார்கள்.
——————————————————