மொழிவது சுகம்- நவம்பர் 15, 2021

அ. கொன்க்கூர் இலக்கிய பரிசு 2021

பிரான்சு அன்றி,தமது காலனி அரசியல், பிரெஞ்சு மக்களின் குடியேற்றம்,  பதினெட்டாம் நூற்றாண்டில் பல நாடுகளில் சட்டத்துறை மொழி, ஐக்கிய நாடுகள் அவையில் உத்தியோகபூர்வ ஆறு மொழிகளில் ஒன்று (பிறமொழிகள் அராபிக், ஆங்கிலம், சீனம், ரஷ்ய, ஸ்பானிஷ்), உலகில்  28 நாடுகளின்  அரசாங்க மொழி போன்ற பல காரணங்களால்  பிரெஞ்சு மொழி இன்று முக்கிய மொழி. இன்றைய தேதியில் 74 மில்லியன் மக்கள் முதல் மொழியாகவும், 274 மில்லியன் மக்கள் துணை மொழியாகவும் இம்மொழியை உபயோகிக்கிறார்களென சொல்லப்படுகிறது. இருந்தும் இங்கு வழங்கப்படும் இலக்கிய பரிசுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவற்றில் ஒன்று என்பதைக்காட்டிலும் முதன்மையான இலக்கிய பரிசு கொன்க்கூர் பரிசு(le prix Goncourt). பணமாக வழங்கப்படும் தொகை 10 யூரோ,  அதாவது ஆயிரம் ரூபாய்.  பணத்தைக்காட்டிலும் மேலே குறிபிட்ட எல்லைப் பரப்பில் கொன்க்கூர் பரிசு, அதை வெல்லும் எழுத்தாளருக்கு தரும் விலாசம்  மிகப்பெரியது. பரிசு அறிவித்த இரண்டு மூன்று தினங்களில் இவ்வருட கொன்க்கூர் பரிசு எழுத்தாளரின் நாவல் புத்தக கடைகளில் மெடிசி, நோபெல் பரிசு புத்தக  வரிசையில் முதலிடம் பெற்றிருந்தது, இலக்கியத்திற்கான நோபெல் பரிசை நாடுகள் வரிசையில் அதிகம் பெற்றிருப்பது பிரான்சு தேசம், இருந்தும் தங்கள் நாட்டினர் அன்றி பிறநாட்டினர் நோபெல் பரிசு பெறுகிறபோது, உள்ளூர் பரிசுகளை வென்ற நூல்களுக்கே பிரெஞ்சு இலக்கிய அபிமானிகள் முதலிடம் கொடுக்கின்றனர். ஆசியனான நான் இவ்வருட கொன்க்கூர் பரிசுபெற்ற ஆப்ரிக்க இளைஞரின் la plus secrète mémoire des hommes (மனிதர்களின் மிகவும் மர்மமான நினைவுகள்) என்ற நூலை நேற்று பாரீஸ் புத்தக கடையொன்றில் எடுத்துக்கொண்டு பணம்செலுத்த வைசையில் நின்றபோது எனக்கு முன்பாக இரண்டு ஐரோப்பியர்கள்.

நூலசிரியர் முகம்மது புகார் சார் (Mohamed Mbougar Sarr)செனெகல் நாட்டைச் சேர்ந்தவர். நோபெல், புக்கர், தற்போது கொன்க்கூர் பரிசு என ஐரோப்பிய இலக்கிய பார்வை ஆபிரிக்க கண்டத்தின்மீது தற்போது விழுந்திருப்பது ஏன் எதற்கு என்கிற கேள்விகள் ஒரு புறமிருக்க,  90 விழுக்காடு நேர்மைக்கு உத்தரவாதம். நூலாசிரியர் இளைஞர், 31 வயது. இதற்கு முன்பு மூன்று நாவல்கள் வந்திருக்கின்றன. பரிசு அறிவித்து அனேகமாக பத்து பன்னிரண்டு நாட்கள் இருக்கலாம். இதற்குள் சில லட்சம் பிரதிகள் விற்பனை என்கிறபோது, பிரெஞ்சு இலக்கிய பரிசுக்குழுவினர் மீது அபிமானிகள் வைத்துள்ள நம்பிக்கை புரியும்.  

நாவலை நேற்றுதான வாசிக்கத் தொடங்கினேன். தனது அபிமான எழுத்தாளரை, அவர் எழுத்தை, அப்படைப்புக்கான இரகசியத்தைத்  தேடி அலையும் இளம் எழுத்தாளரின் அனுபவமாக நாவல் விரிகிறது.  எனக்கு இணைய தள அகராதிகளில் அடிக்கடி பொருள் தேடவேண்டியிருக்கிறது, நேற்று பிற்பகல் வாங்கிய நூலில் பத்துபக்கங்கள் பக்கங்கள் தான் வாசித்தேன். நான்கு மணிக்கு பாரீசில் காரில் புறப்பட்டு போக்குவரத்து நெர்க்கடி காரணமாக எட்டு மணிக்குப் பதிலாகஇரவு ஒன்பதரை மணிக்குதான் வீடு திரும்ப முடிந்தது.

          நாவல் இப்படி தொடங்குகிறது :

« D’un écrivain de son œuvre, on peut au moins savoir ceci : l’un et l’autre marchent ensemble dans le lambyrinthe le plus parfait qu’on puisse imaginer, une longue route circulaire, où leur destination se confond avec leur originje : la sollitiude. »

“ஒரு படைப்பு, அதன் படைப்பாளி இருவரிடமிருந்தும் குறைந்தபட்சம் ஒன்றை நாம் புரிந்துகொள்ளமுடியும்: கற்பனைக்குச் சாத்தியமுள்ள தேர்ந்த திருகலான பாதையொன்றை தேர்வு செய்து இருவரும் ஒன்றாக பயணிக்கிறார்கள், வட்டவடிவ நெடிய  அப்பாதையின் முடிவு  புறப்பட்ட இடத்திற்கே திரும்ப வந்ததைப் போன்ற  குழ்ப்பத்தைத் தரும்: காரணம் இரண்டுமே ஒன்றுதான், ‘ஏகாந்தம் அல்லது தனிமை’ என்று அதற்குப் பெயர்.

இனிதான் மேலே தொடரவேண்டும் முழுவதும் படித்தபின் நாவல் குறித்து எழுதுகிறேன்.

ஆ மொழிபெயர்ப்பு

புதிய தலைமுறையின் படைப்புகளை பிரெஞ்சுக்கு கொண்டுபோகும் முயற்சி நீங்கள் அறிந்ததுதான்.  படைப்புகளை (ஐந்து பக்கத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும்) நேரடியாக அனுப்பிவைத்தால், எனக்கும் பிடித்திருந்தால் மொழிபெயர்ப்பேன். எனக்கென்று ஓர் இரசனை இருக்கிறது, அதனை அப் படைப்பு நிவர்த்திசெய்யவேண்டும். இதுநாள்வரை பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதாக இருந்தாலும், தமிழிலிருந்து பிரெஞ்சு மொழிக்கு கொண்டுபோவதாக இருந்தாலும் எனக்குப் பிடித்ததையே செய்துவருகிறேன். என்னுடைய படைப்புகளெல்லாம் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்பதை எப்படி உறுதி செய்ய முடியாதோ அதுபோலவே நான் முரண்படவும் வாய்ப்புண்டு. நான் எடுக்கும் முடிவுக்குச் சம்மதமெனில் படைப்பை அனுப்பலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s